முதல் கலவர பூமி ……

burning houses-2

 

இந்திய தேசத்தின் சரித்திரத்தில்
ஒரு மிக மிகச்சிறிய துளி இந்த நிஜக்கதை.

1948 ஆம் ஆண்டு – இந்தியத் திருநாடு, 200 ஆண்டுக்கால அடிமை
ஆட்சியிலிருந்து விடுபட்டு, சுதந்திரக் காற்றை ஆனந்தமாக
சுவைத்துக்கொண்டிருந்த வேளை. ஆனால் அதற்கு நேர் மாறான ஒரு
சூழ்நிலை இங்கு. ஆம். இது ஒரு கலவர பூமி ….

செகந்திராபாத் நகரம். ஹைதராபாத் நகரின் துணை நகரம் என்று சொல்லப்பட்டாலும் அப்போதெல்லாம் ஒரு கிராமம் போலத்தான்
இருந்தது – அதை ஒட்டிய சபில்குடா என்கிற பகுதி.

இரவு மணி பன்னிரெண்டு இருக்கலாம். இருந்தும் அந்த பகுதியில் ஒரே பரபரப்பு. மின் வசதி சரிவர கிடைக்கப்பெறாத
கிராமாந்திர சூழ்நிலை. மின் தொடர்பு கிடைத்த சில இடங்களிலும்
மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது.

கிட்டத்தட்ட அந்த வீதியே காலி செய்யப்பட்டு விட்டது.
தொடர்ச்சியாக இல்லாமல் விட்டு விட்டு சிறிதும் பெரிதுமாய்
வீடுகள். அனைவரும் அவரவர் வீடுகளைப் பூட்டி விட்டு ஊரை விட்டு
ஓடிச்சென்று விட்டனர். தூரத்தேயிருந்து ஆரவாரமும்,
பயங்கர ஓலங்களும், எக்காள ஒலிகளும்
காதில் விழுந்துக் கொண்டே இருந்தன.

அந்தக் குடும்பத்தில் –
கோபாலன்,
கோபாலனின் தாயார், (வயதான பாட்டி )
கோபாலனின் மனைவி மீனாட்சி,
திருமணமாகிய அவர்களது மூத்த பெண் ராதா,
அவள் கணவர் கிருஷ்ணன்,
க-16, பா-11, ந-9, வெ-6, கி-4 என்கிற
கோபாலன் தம்பதிகளின் 4 வயது முதல் 16 வயது
வரையிலான 5 பிள்ளைகள் – ஆக மொத்தம் 10 பேர்.

தூரத்தே வெறிக்கும்பல் ஒன்று தீப்பந்தங்களுடன் கண்ணில் படும்
வீடுகளை எல்லாம் கொளுத்திக்கொணடே வந்து கொண்டிருந்தது.

குடும்பம் முழுவதும் செய்வதறியாமல் திகைத்திருந்தது.
கடைசியாக ஒரு முடிவிற்கு வந்தனர் கோபாலனும்
அவரது மாப்பிள்ளை கிருஷ்ணனும.
வீட்டிலிருந்து 100 அடி தள்ளி எதிர்ப்புரத்தே
சற்று ஒதுங்கி இருந்த ஒரு மரத்தில்- கொஞ்ச உயரத்தில் –
குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரையும் ஏற்றி விட்டனர்.
தாங்களும் ஏறிக்கொண்டனர். எங்கும் இருட்டாக இருந்ததால்,
அவர்கள் மரத்தின் மீது இருப்பது அருகில் வந்து வெளிச்சத்தைச்
செலுத்திப் பார்த்தால் தான் தெரியும்.

வெறிக்கும்பல் கூச்சலிட்டுக்கொண்டே அருகில் வந்தது.
பூட்டிக்கிடந்த வீடுகளின் கதவுகள் எல்லாம் உடைக்கப்பட்டன.
ஒவ்வொரு வீட்டின் உள்ளேயும் ஒரு கும்பல் புகுந்தது.
கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு
வீடுகளுக்குத் தீ வைத்தது.

பாவம் கோபாலன் குடும்பத்தினர் !
அவர்கள் கண் எதிரேயே அவர்கள் வீடு கொள்ளை அடிக்கப்பட்டது.
தங்க நகைகள், வெள்ளி பாத்திரங்கள்,
2 பீரோ நிறைய துணிமணிகள், பட்டுப்புடவைகள்,
நல்ல கிராமபோன் ஒன்று, 400 கிராமபோன் ரெகார்டுகள் –
அத்தனையும் கொள்ளை அடிக்கப்பட்டு
கடைசியாக வீட்டிற்கும் நெருப்பு வைக்கப்பட்டது.

அலற முயன்ற பாட்டியின் வாயைப்பொத்தினார் கிருஷ்ணன்.
கோபாலனும், மீனாட்சியும், தங்கள் பிள்ளைகள் சப்தம்
எழுப்பாமல் பார்த்துக் கொண்டனர்…. பத்தே நிமிடம்,…..
நாசம் பண்ணி விட்டு அந்த கும்பல் கையில் கிடைத்ததை எல்லாம்
எடுத்துக்கொண்டு அடுத்த இலக்கை நோக்கி நகர்ந்தது.

பயம், துக்கம், சோகம், கோபம் – எல்லா உணர்ச்சிகளும்
குடும்பத்தை அலைக்கழித்தன. என்ன செய்ய முடியும் அவர்களால் ?

ரஜாக்கர் கும்பலை எதிர்கொண்டு நிற்க யாரால் முடியும் ?
தர்மம், நியாயம், இரக்கம், மனிதாபிமானம் -எதற்குமே
இடம் இல்லை அந்தப் பிரதேசத்தில்.

சுதந்திரம் கிடைத்த சந்தோஷத்தை நாட்டின் இதர பகுதியில்
இருந்த மக்கள் மகிழ்வுடன் அனுபவித்த வேளையில் –
இவர்களுக்கு மட்டும் ஏன் இந்த அவலம் ?

செய்வதென்ன என்று தெரியாமல் திகைத்து நின்றது அந்தக் குடும்பம்.
ஊரில் முக்கால்வாசி பேர் ஓடி விட்ட நிலையில், இருந்த வீடும்
கொளுத்தப்பட்ட நிலையில் இனி எப்படி இங்கு இருக்க முடியும் ?
எந்த நேரமும் அந்த கொலைகாரக் கூட்டம் திரும்பி வரலாம்.

மரத்தை விட்டு கீழே இறங்கினார்கள். முழு குடும்பமும் இருட்டை
ஒட்டியே நகர ஆரம்பித்தது – ஓட்டமும் நடையுமாக.
வெளியூர் எங்காவது போய் விடலாம் என்றாலும்
அருகில் இருந்த செகந்திராபாத் ரெயில் நிலையம்
செல்லும் வழி முழுவதும் ரஜாக்கர் கூட்டம் – அந்த வழியில்
சென்றால், நிச்சயம் அவர்களிடையே சிக்க நேரிடும்….

நேர் எதிர்ப்புறமாக, ஊரை விட்டு 6-7 கிலோ மீட்டர் வெளியே
தள்ளி இருக்கும் –
அடுத்த ஊர் ரெயில்வே நிலையத்தை
நோக்கி, இருட்டிலேயே நடக்க ஆரம்பித்தனர்
குடும்பத்தினர் அனைவரும்……

விடியற்காலை 3 மணியளவில் ஒரு வழியாக அடுத்த
ரெயில்வே ஸ்டேஷன் வந்து சேர்ந்தனர்.
எங்கு போவது என்றே புரியாத நிலை.
அடுத்த ரயில் எது வந்தாலும் அதில் ஏறி எவ்வளவு சீக்கிரம்
முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஹைதராபாத் சமஸ்தானத்தை விட்டு
வெளியேற வேண்டும்.

ஒருவழியாக ஒரு ரயில் வந்தது – அது …
நாக்பூர் நோக்கிச் செல்லும் ரயில்…!
டிக்கெட் வாங்கக்கூட கையில் காசில்லை ….
டிக்கெட் இல்லாமலேயே –
நிரம்பி வழிந்த ரயிலில் எப்படியோ அத்தனை பேரும் ஏறி விட்டனர்.
அடுத்த நாள் காலை 10 மணி அளவில் மொத்த குடும்பமும்
ஆதரவற்ற, நாதியற்ற நிலையில் நாக்பூர் ஸ்டேஷனில்
வந்து இறங்கியது….
வீடிழந்து, ஆயுள் முழுதும் உழைத்து சேர்த்த சொத்துக்களை இழந்து,
வேலையை இழந்து – நாக்பூரில் நடுத்தெருவில் நிற்கும்
10 பேர்களைக் கொண்ட இந்த குடும்பத்தின் எதிர்காலம் என்ன
ஆயிற்று ? இவர்கள் யார் …?

(நாளை தொடருகிறேன் ….)

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to முதல் கலவர பூமி ……

 1. Pingback: முதல் கலவர பூமி …… | Classic Tamil

 2. மணிச்சிரல் சொல்கிறார்:

  நாளைவரை காத்திருக்க வேண்டுமா? கஷ்டம் தான்.

 3. Ramachandran . R. சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  என்ன சார் இது ஒரேயடியாக திகிலைக் கிளப்புகிறீர்கள்.
  உங்களுக்கு தெரிந்தவர் யாராவதா ?
  ஒரு வேளை உங்கள் சொந்த அனுபவமா ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.