கலவரத்தை தூண்டி விட்ட கயவர்கள் …. (கலவர பூமி – 4 )

.

மொழி, இனம், மதம் – ஆகியவற்றின் மீது பற்றுதல் இருப்பது
எந்த விதத்திலும் தவறு இல்லை.

ஆனால், இதே பற்று “வெறி” ஆனால் ….?
“பற்று” – “வெறி” யாக உருவெடுக்கும் பட்சத்தில் –
அங்கு முதலில் விடைபெற்றுக் கொள்வது “சகிப்புத்தன்மை” தான்.
அந்த இடத்தில் பதிலுக்கு உள்ளே புகுவது “மற்றவரின் மீது ஆதிக்கம் ”
-என்கிற வெறி.

அனைத்து மதங்களும் –
இறைவனை நோக்கித்தான் பயணிக்கின்றன. எந்தப் பெயரைச்
சொல்லி அழைத்தாலும் – அந்த இறைவனுக்கு கேட்கும்…..

நான் இந்து மதத்தை சேர்ந்தவன் தான். இருந்தாலும் எனக்கு
எந்தவித வித்தியாசமும் கிடையாது.
நான் நெற்றியில் விபூதியுடனேயே –
சர்ச்சுக்கும் போவதுண்டு. தர்க்காவுக்கும் போவதுண்டு.

(இதைக்குறித்து நான் ஏற்கெனவே எழுதி இருக்கிறேன் )

——————–
– இஸ்லாமியப் பெரியவர் ஒருவர் சொன்னது இது –

” இஸ்லாத்தை பின்பற்றுபவர்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயர்.
முஸ்லிம் என்ற அரபிச் சொல்லுக்கு “கீழ்ப்படிந்தவன்” –
“அமைதியடைந்தவன்” என்று பொருள்.
அமைதி பெறுவதும், அமைதி தருவதும் அவனது கடமைகள்.

– தனது கரத்தாலும், நாவாலும் – பிறருக்கு தீங்கிழைக்காதவனே
உண்மையான முஸ்லிம் ஆவான்.

எவரிடம் மனிதர்களின் உயிர்களும், உடைமைகளும் –
பாதுகாப்பு பெறுகின்றனவோ,
அவரே இறை நம்பிக்கையாளர் ஆவார்.

– ஒருவரையொருவர் சந்திக்கும்போது கூட
“அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கூறுமாறு இஸ்லாம்
அறிவுருத்துகிறது. அதன் பொருள் –
“உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்” என்பதே…

—————————-

மறைந்த காஞ்சி முனிவர் சொன்ன வார்த்தைகள் இவை –

– “எல்லா சமயங்களும் கடவுளை வழிபட ஏற்பட்டவையே.
எல்லா சமயங்களும் ” கடவுள் ஒன்றே ” என்றே சொல்கின்றன.
“ஒருவரேயான அந்தக் கடவுள்” எந்த சமயத்தின் மூலம்
வழிபட்டாலும் அதை ஏற்றுக் கொள்ளத்தான் செய்வார்.
எனவே –

எவருமே தாங்கள் பிறந்த சமயத்தை விட்டு வேறோரு
சமயத்தை தழுவ வேண்டியது இல்லை.

கோயில், சர்ச், மசூதி, விஹாரம் முதலிய கட்டிடங்கள்
ஒன்றுக்கொன்று வித்தியாசப்படலாம். உள்ளே இருக்கிற
மூர்த்தி அல்லது சின்னம் மாறுபடலாம். ஆனால் –

அநுக்ரஹம் செய்கிற பரமாத்மா மாறவில்லை. ஒவ்வொரு
தேச ஆச்சாரத்தையும், ஒவ்வொரு ஜனக்கூட்டத்தின்
மனப்பான்மையையும் பொறுத்துப் பல்வேறு சமயங்கள்
ஏற்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் ஒரே பரமாத்மாவை
அவரவர் மனோபாவத்தின்படி பக்தி செய்து, அவரோடு
சேர்வதற்கு வழி செய்பவையே ஆகும்.

ஒரு பரமாத்மாவை அடைவதற்கான
பல மார்க்கங்களே – பல சமயங்களும் –
என்று
நம் முன்னோர்கள் உணர்ந்திருக்கின்றனர்.

ஒரே சத்தியத்தை தான் ஞானிகள்
பல பெயர்களில் சொல்கிறார்கள்
என்கிறது வேதம் – .

———————

மதங்களின் உண்மையான நோக்கம் இவ்வாறிருக்க –

மத வெறியர்கள் ( எல்லா மதங்களிலும் உண்டு ),
மக்களிடையே மத வெறியைத் தூண்டி விட்டு –
தங்கள் நோக்கங்களை சாதித்துக் கொள்கிறார்கள்.

மதம் என்பது மிகவும், நுண்ணியமான – உணர்வுபூர்வமான விஷயம்.
மத உணர்வைத்தூண்டி விடுவது மிக மிக எளிது.
அதனால் விளையும் விளைவுகள் தான் மிக மிக மோசமானவை.

சுயநலவாதிகள் மத உணரவைத் தூண்டி விட்டு வன்முறை, கொலை,
கொள்ளை, கற்பழிப்பு என்று அடாத செயல்களில் ஈடுபட வைக்கிறார்கள்.

எப்போதுமே, இதனால் உண்மையில் பாதிக்கப்படுவது –
எந்த பாவமும் அறியாத அப்பாவிகள் தான் –
அவர்கள் எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆனாலும் சரி…..

இஸ்லாமியரோ, இந்துவோ – தாங்கள் மைனாரிடியாக வாழும்
இடங்களில் அவர்கள் எதிர்கொள்ளும் – சூழ்நிலைகளையும்,
அவர்களது அச்ச உணர்வுகளையும் என்னால் நன்றாகவே
உணர முடிகிறது.
எனவே, எந்த காலத்திலும் – எந்த சூழ்நிலையிலும் –
மத விரோதங்களைத் தூண்டும் விதமாக நான் எழுதவும் மாட்டேன் –
பேசவும் மாட்டேன். அத்தகையோரை ஆதரிக்கவும் மாட்டேன்.

இதையெல்லாம் இங்கு ஏன் சொல்கிறேன் என்று உங்களுக்கு
தோன்றக்கூடும் – ஹைதராபாத் அனுபவங்கள் குறித்து
எழுத வேண்டுமென்று நான் நினைத்ததே –
மதக்கலவரங்களால் மக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறார்கள்
என்பதை எனக்குத் தெரிந்த விதத்தில் எடுத்துச் சொல்லவே.

நாடு சுதந்திரம் பெற்றபோது – இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை
காரணமாக ஏற்பட்ட துயரங்களை, மதக்கலவரங்களின் விளைவுகளை
வட இந்தியா தான் – குறிப்பாக பஞ்சாபும், வங்காளமும் தான்
அனுபவித்தன.

ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது
ஏற்பட்ட கலவரங்களின் பாதிப்பு பற்றியெல்லாம், தமிழக
மக்களுக்கு,
குறிப்பாக இன்றைய சமுதாயத்திற்கு
சுத்தமாகத் தெரியவில்லை.

தமிழகத்தில் மதக் கலவரங்களால் பாதிப்பு இல்லை என்றாலும் –
ஜாதிக் கலவரங்கள் என்னும் கொடிய வியாதி தமிழகத்தை
மிக பலமாக பீடித்திருக்கிறது. இதிலிருந்து தமிழ் மக்கள்
வெளிவர வேண்டும். தமிழர்கள் ஜாதிகளின் பிடிப்பிலிருந்து
வெளிவந்து ஒருவரையொருவர் நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த இடுகைத் தொடரை நான் எழுத முற்பட இவையெல்லாம்
தான் முக்கிய காரணங்கள்….

———-

ஹைதராபாத் கலவரங்களின் முதல் பாதியில், காசிம் ரஜ்வியால்
தூண்டி விடப்பட்ட “ரஜாக்கர்” களால், இந்துக்கள் வதைக்கப்பட்டார்கள்
என்றால் –

இரண்டாம் பகுதியில், ஹைதராபாத் மீது இந்திய ராணுவம்
படையெடுத்து வந்த சமயத்தில், அப்பாவி இஸ்லாமியர்கள் –
இதற்கு சற்றும் குறைவில்லாமல் வதைக்கப்பட்டார்கள்.

ஆனால் – இரண்டு பகுதிகளிலும், தூண்டி விட்டவர்களும்,
தலைவர்களும் – பத்திரமாகத் தப்பி விட்டார்கள்….!!!

—————–

சரி சரித்திரத்திற்கு மீண்டும் வருவோம் ….

இனியும் இதே நிலையை தொடர விட்டால் சமஸ்தானத்தில் உள்ள
இந்துக்கள் மிக மோசமாக பாதிக்கப்படுவர் என்கிற நிலை உருவாவதை
கவனித்த இந்திய அரசு –
ஹைதராபாத் மீது போலீஸ் ஆக் ஷன் என்கிற
ராணுவ நடவடிக்கையை எடுக்க முனைந்தது. நாலா பக்கமும் ஹைதராபாத்
சமஸ்தானம் இந்திய ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டது.

” ஆபரேஷன் போலோ ” என்று இந்திய ராணுவத்தால் பெயரிடப்பட்டு
” ஹதராபாத் போலீஸ் ஆக் ஷன் ” என்கிற பெயரில் இந்திய அரசால்
மேற்கொள்ளப்பட்டது இந்த ராணுவ நடவடிக்கை.

1948, செப்டம்பர் 13-ந்தேதி அன்று,

– கிழக்கே விஜயவாடாவிலிருந்தும்,
மேற்கே சோலாபூரிலிருந்தும் – ஆக இரண்டு போர்முனைகளைத்
துவக்கி முன்னேறத் துவங்கியது இந்திய ராணுவம். லெ.ஜெனரல்
ராஜேந்திரசிங்ஜி தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
மொத்தம் 35,000 படைவீரர்கள் இந்திய ராணுவத்திலிருந்து
களமிறங்கினர்.

( நாளையுடன் இந்த தொடர் முடிகிறது )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to கலவரத்தை தூண்டி விட்ட கயவர்கள் …. (கலவர பூமி – 4 )

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  நான் மதத்தை பிடிப்பதில் தவறில்லை.
  எனக்கு மதம் பிடித்தால்தான் பிரச்சனைகள்

 2. Ramachandran. R. சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  இந்த நாட்டில் மதக்கலவரங்கள் இல்லாதிருக்க வேண்டுமானால்
  முதலில் mim Owaisi, su.samy – போன்றவர்களின் வாய் நிரந்தரமாக
  அடைக்கப்பட வேண்டும்; அதற்கு எதாவது வழிஉண்டா சட்டத்தில் ?

 3. Pingback: கலவரத்தை தூண்டி விட்ட கயவர்கள் …. (கலவர பூமி – 4 ) | Classic Tamil

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி மாதவன்…
   ஓரளவு எதிர்பார்த்தது தான்.
   ஆனால் …. இவ்வளவா …?
   விரிவாக ஆராய /விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் தான்.
   (“ரசிகன்’ -வேண்டாமே – நாம் எல்லாரும்
   நல்ல நண்பர்களாகவே இருப்போமே… )

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. seshan சொல்கிறார்:

  Bro you are the right person for review on my suggestion.
  What is the need of keeping jammu kashmir with our country. From the say one problem follows more than 65 yrs.

  Why all other states tax payers money being wasted continously though others not benefitted single rupee from the jk state.how many army people of other state died on the unwanted useless trouble state. Just calculate value of money and lives spent last 60 yrs you and me did not return back 5%.. Except jk we limit the border let them die or live based on their action.

  Looks like cancer ….sathvik method era over….cut through the ratten place before it spread to others.

  By RIT act asked govt how much we spent so for by all means to jk and what is the state contribute to nation….and so for registered police army deaths….no reply last 2.5 years

  Seshan

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.