மறக்க முடியாத வீரத்தலைவன் ஒருவனும் – அவனை வஞ்சித்த பலரும் –

nethaji in life photo

Subhas_Chandra_Bose_signature

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முன்னணி வகித்த
தலைவர்களில், கூட இருந்தவர்களாலேயே வஞ்சிக்கப்பட்டவர்கள்
-ஏமாற்றப்பட்டவர்கள் என்று ஒரு பட்டியல் எடுத்தால் –

அதில் முதலில் வருவது நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்
அவர்களின் பெயராகத்தான் இருக்கும்.
அவர் வாழ்ந்த காலத்தில் தான் அவரது காங்கிரஸ் கட்சியில் கூடவே இருந்தவர்கள் வஞ்சித்தார்கள் என்றால் –

அவர் மறைந்த பிறகும் ( 23 January 1897-அன்று பிறந்தவர்
என்பதால் -118 வருடங்களுக்குப் பிறகு இன்று உயிருடன் இருப்பார்
என்று எடுத்துக் கொள்ள முடியவில்லையே …!)
அவர் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்களின் எண்ணிக்கையில்
கொஞ்சமும் குறைவில்லை.

இந்திய அரசு இதுவரை அதிகாரபூர்வமாக
சொல்லி வருவது – நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்,
ஆகஸ்ட் 18, 1945 அன்று, ஜப்பானியர் வசமிருந்த தைவானில்
நிகழ்ந்த ஒரு விமான விபத்தில் இறந்து போனார் – என்றும்
அவரது அஸ்தி, ஜப்பானில்,டோக்கியோவில், ரெங்கோஜி கோவிலில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதுமே…!

nethaji statue at renkoji temple -tokyo

பொதுவாக எதிர்க்கட்சிகளும், குறிப்பாக பார்வர்டு ப்ளாக் கட்சியும்
பல வருடங்களாக தொடர்ந்து இந்திய அரசுடன் போராடி வருவது-
நேதாஜி மறைவு குறித்த உண்மையான பின்னணியை கண்டறிய
வேண்டும் என்பதே.

பல விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டாலும் –
உண்மை நிலவரங்கள் இதுவரை வெளிவந்த பாடில்லை.
அதற்கு முக்கிய காரணம், இந்திய அரசு தன்னிடம் உள்ள
39 ரகசிய கோப்புகளை( Classified files )
வெளியிட மறுத்து வருவதே.

கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர், பாஜகவும், குறிப்பாக மோடிஜியும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று –
தாங்கள் ஆட்சிக்கு வந்தால், நேதாஜி தொடர்புள்ள அனைத்து
ஆவணங்களும் பகிரங்கப்படுத்தப்பட்டு, அவர் மறைவின்
உண்மைப்பின்னணி கண்டு பிடிக்கப்படும் என்பது.

ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு ……..
மோடிஜி சர்க்காருக்கு வேறு எத்தனையோ முன்னுரிமைகள்….!!!

டாக்டர் சுப்ரமணியன் சுவாமி ட்விட்டரிலும்,
செய்தியாளர்களிடமும் தொடர்ந்து
கதைத்துக் கொண்டிருக்கிறார்….

– நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை……
உண்மையில் ஆகஸ்ட் 18, 1945 அன்று தைவானில் விமான விபத்து எதுவும் நிகழ்ந்ததாகவே ஆவணங்களில் இல்லை ….

இரண்டாம் உலகப்போர் முடிந்த நிலையில் –
நேச நாடுகளிடம் போர்க்கைதியாக பிடிபடுவதை தவிர்க்க –
நேதாஜி ரஷ்யாவிற்கு தப்பித்துச் சென்றார்.
ஆனால் அங்கு ரஷ்ய சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினால் –
சிறைபிடிக்கப்பட்டார்..,
டிசம்பர் 1945-ல்
ஸ்டாலின் நேருஜிக்கு கடிதம் எழுதிக் கேட்கிறார்..
நேதாஜியை என்ன செய்யட்டுமென்று.
நேதாஜி இந்தியா திரும்புவதை நேருஜி விரும்பவில்லை.
திரும்பினால், அவர் தனக்கு போட்டியாளராகவே இருப்பார்.

எனவே நேருஜி இது குறித்து பிரிட்டிஷ் அரசுக்கு கூட கடிதம்
எழுதினார். (அப்போது – 1945 … இந்தியா இன்னமும் பிரிட்டிஷ்
அதிகாரத்தில் தான் இருந்தது )
பிரிட்டிஷ் அரசு -நேருவின் விருப்பப்படியே,
நேதாஜியின் கதையை முடித்து விடும்படி ஸ்டாலினிடம் கூறியது…….
ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலினால், சைபீரியாவில்
( Yakutsk Prison in Siberia ) சில வருடங்கள்
சிறை வைக்கப்பட்டிருந்த நேதாஜி பின்னர் தூக்கிலிடப்பட்டார்.
இது அத்தனையும் நேருஜிக்கும் தெரியும்.

சு.சுவாமி இப்படி எல்லாம் கூறுவது… .ஜனவரி, 2015-ல்

சரி .. இவற்றிற்கெல்லாம் என்ன ஆதாரம் ?
எதை வைத்து அவர் இதைக் கதைக்கிறார்…?

சந்திரசேகர், நரசிம்மராவ் காலங்களில் தான் மத்திய அமைச்சராக
இருந்தபோது இது குறித்த பல அரசு ஆவணங்களை (files)
பார்த்ததாகவும்,

மேலும், தான் இந்த விஷயம் குறித்து தனிப்பட்ட முறையில் பெரிய ஆராய்ச்சியே நடத்தியதாகவும், அதில் கிடைத்த
உண்மைகள் தான் இவை என்றும் கூறுகிறார்.

1970-ல் நேதாஜி பற்றிய உண்மைகளைக் கண்டறிய
நியமிக்கப்பட்ட “கோஸ்லா” கமிஷன் முன்னிலையில்,
நேருஜியின் உதவியாளராக (ஸ்டெனோகிராபராக) இருந்த
ஷ்யாம்லால் ஜெயின், 1945 டிசம்பர் 26ந்தேதி,
நேருஜி தனக்கு டிக்டேட் செய்த கடிதத்தில்,
நேதாஜி ரஷ்யாவில் ஸ்டாலினால் சிறைப்படுத்தப்பட்டு
கைதியாக இருக்கும் விவரத்தை பிரிட்டிஷ் அரசுக்கு
தெரியப்படுத்தினார் – என்று சாட்சியம் சொன்னாராம்…

அந்தக் கடிதம் கிடைத்த பிறகு பிரிட்டன், ஸ்டாலினைத் தொடர்பு கொண்டது – நேதாஜியின் மரணத்திற்கு அதுவே காரணமானது என்கிறார் சு.சுவாமி.

பின்னர், இந்த தகவலின் அடிப்படையில் – இது குறித்து,
டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி நிறுவனம்,
நேதாஜியின் உறவினர் சந்திர குமார் போஸ் அவர்களிடம்
தொடர்பு கொண்டு விசாரித்தபோது,

ரஷ்யா, நேதாஜி சுபாஸ் சந்திர போஸை
மிகவும் மதிப்புடன் நடத்தியது. மேலும், 1943 அக்டோபர், 21ந்தேதி
நேதாஜி சிங்கப்பூரிலிருந்து சுதந்திர இந்திய அரசை பிரகடனம்
செய்தபோது, அதை ஏற்றுக்கொண்ட 11 நாடுகளில்
ரஷ்யாவும் ஒன்று. எனவே, இப்படி நடந்திருக்க
வாய்ப்பே இல்லை. என்று சொல்லி இருக்கிறார்.

எதிர்க்கட்சியாக இருந்த வரையில் –
நேதாஜி பற்றிய அனைத்து ஆவணங்களையும் அப்படியே
வெளியிட வேண்டும் என்றும், அவரது மறைவின் உண்மை
பின்னணியை கண்டுபிடிக்க வேண்டுமென்றும் வற்புறுத்தி வந்த
பாரதீய ஜனதா கட்சியும், அதன் பிரதமர் வேட்பாளரான
திருவாளர் மோடி அவர்களும், அந்த கட்சியின் மூத்த தலைவரான
திருவாளர் சுப்ரமணியன் சுவாமி அவர்களும் –

ஆட்சிக்கு வந்து 13 மாதங்கள் முடிந்த பின்னரும்,
விஷயங்களை வெளிக்கொண்டு வராதது மட்டுமல்ல –
ரகசிய ஆவணங்களை வெளியிட்டால், அது நட்பு நாடுகளுடன் உள்ள உறவை பாதிக்கும் என்பதால் அவற்றை வெளியிடவும் முடியாது என்று – ஒருதலைப்பட்சமாக தான் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் மறந்து விட்டு –

காங்கிரஸ் கட்சி கடந்த பல ஆண்டுகளாக பாடி வந்த
அதே பல்லவியை பாடுவது ஏன்….?

அண்மையில் வெளிவந்த சில விவரங்கள் அதிர்ச்சியூட்டுபவை.
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து – 20 ஆண்டுகள் வரை,
நேதாஜியின் நெருங்கிய உறவினர்கள் அனைவரும் இந்திய அரசால்
வேவு பார்க்கப்பட்டனராம். அதாவது கிட்டத்தட்ட நேருஜி
பிரதமராக இருந்த காலம் முழுவதும்…..!!

நேதாஜி இறந்து விட்டார் என்று நேருஜியும், இந்திய அரசும்
உறுதியாக நம்பியிருந்தால், அவரது உறவினர்களை அத்தனை
ஆண்டுக்காலங்கள் தொடர்ந்து வேவு பார்க்க வேண்டிய
அவசியம் என்ன …?

இன்னொரு மிகக்கடுமையான குற்றச்சாட்டும் அண்மையில்
சு.சுவாமியால் முன் வைக்கப்பட்டது …..

bose-storry by ss

நேதாஜி, இந்திய தேசிய ராணுவத்தின் செலவுகளுக்காக,
சேர்த்த பெரிய அளவிலான சொத்துக்களின் ஒரு பகுதியை
(இரண்டு பெட்டிகள் நிறைய தங்கம், ரொக்கம் ),
நேதாஜியின் மறைவிற்குப் பிறகு,
நேருஜி கைப்படுத்தி, தன் சொந்த உபயோகங்களுக்கு
பயன்படுத்திக் கொண்டார்….!!!

எந்த தைரியத்தில் சு.சுவாமி இந்த குற்றச்சாட்டுக்களை
கூறுகிறார் …?

(தொடர்கிறது – பகுதி-2-ல் )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to மறக்க முடியாத வீரத்தலைவன் ஒருவனும் – அவனை வஞ்சித்த பலரும் –

 1. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  சு.சுவாமிக்கு யாரையாகிலும் குற்றம் சொல்ல வேண்டும் இல்லாவிடில் சென்சேஷனல் செய்திகளைப் பரப்பவேண்டும். இவர் ஆவணங்களை அமைச்சராக இருந்தபோது பார்த்ததை இப்போது வெளியிடுவது சட்டப்படி பெரிய குற்றம். (கருணானிதி அரசு ரகசியத்தை வெளியிட்டதால் டிஸ்மிஸ் செய்யப் பட்டது நினைவுக்கு வருகிறது)

  தர்க்கரீதியாகப் பார்த்தால், நேதாஜி திரும்பி இந்தியா வந்திருந்தால், அரசியல் இரண்டுபட்டிருக்கும். (டேஞ்சன்ட்). நேதாஜியின் கொள்கைகளும், நேருவுக்கு உவப்பான காந்தீயக் கொள்கைகளும் வட தென் துருவமாகி இருப்பதால், மக்களிடையே கடுமையான பிளவு தோன்றியிருக்கும். இந்தியாவைக் கட்டமைப்பது மிகவும் சிரமமாகியிருக்கும்.

  தேச நலனில், நேருவும் நேதாஜியும் ஒருவருக்கொருவர் குறைந்தவர்கள் இல்லை.

  சு.சுவாமி, எப்போதுமே கட்டுச்சோற்றுக்குள் வைத்த பெருச்சாளிதான். பெரும்பாலும் கோபம் கொண்ட பாம்பு போலத்தான். எப்போது எந்தப் பக்கம் பாய்ந்து தாக்கும் என்று தெரியாது. கடந்த வருடத்தில், நவம்பருக்குள் (2014), சோனியா கும்பல் சிறைக்குச் செல்வது உறுதி என்று சொன்னார். அப்போது ஜெ வழக்கு (மார்ச் என்று நினைவு) கிளைமாக்ஸை நெருங்கியதால், இதுவும் நடக்குமோ என்று தோன்றிற்று. இப்போது நேதாஜி விஷயத்தில், யாரைக் குறி வைத்திருக்கிறார் என்பது தெரியவில்லை.

 2. Pingback: மறக்க முடியாத வீரத்தலைவன் ஒருவனும் – அவனை வஞ்சித்த பலரும் – | Classic Tamil

 3. Rajamanickam Murugaiyan சொல்கிறார்:

  For those who want to know about Netaji subash Chandra Bose I strongly recommend a book in Tamil in 3 volumes authored by Sivalai Ilamadhi who had researched some 105 books and given in easily readable language.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.