73 ஆண்டுகளுக்கு முன்னர் சப்மரீனில் சாகசம் …. (நேதாஜி – பகுதி-4 )

bose-hitler

1942, மே மாதம் 29ந்தேதி, இந்திய சரித்திரத்தில் ஒர் முக்கியமான நாள். நேதாஜி சுபாஸ் சந்திர போஸ், ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரை நேரில் சந்தித்து பேசிய நாள் அது.

அந்த சந்திப்பைப் பற்றி பல கதைகள் உண்டு.
எது உண்மை – எது கற்பனை என்று தெரியாததால் அவற்றை
நான் இங்கு தவிர்க்கிறேன்.

இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தவுடன் இந்தியாவை
முழு சுதந்திரம் பெற்ற நாடாக அறிவிக்க, இத்தாலி, ஜப்பான்,
ஜெர்மன் ஆகிய நாடுகள் அடங்கிய கூட்டணி உறுதியளிக்க
வேண்டும் என்பது சுபாஸ் சந்திர போஸின் விருப்பம்.
அதை வலியுறுத்தவே நேதாஜியின் ஹிட்லருடனான
அந்த சந்திப்பு நிகழ்ந்தது.

இத்தாலியும், ஜப்பானும், நேதாஜியின் கோரிக்கைக்கு
உடன்பட்டபோதும், ஹிட்லர் அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்தார்.
எனவே பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாத நேதாஜி – இனி தன் நடவடிக்கைகளை, ஜப்பானின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த
சிங்கப்பூரிலிருந்து மேற்கொள்ள தீர்மானித்தார்.

எனவே, ஜெர்மனியிலிருந்து – ஜப்பான் செல்லும் தன் பயணத்தை
துவங்கினார். இரண்டாம் உலகப்போர் உச்சகட்டத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது. வெளிப்படையாக பயணம் செய்வது
கடினம். எனவே கடலுக்கடியிலான ஒரு சாகசப் பயணமாக
அமைந்தது அது.

german submarine-2

german submarine -

இங்கு ஒரு விஷயத்தை அவசியம் யோசித்துப் பார்க்க வேண்டி
இருக்கிறது. இந்தியாவில் பிறந்த நேதாஜியின் தாய்மொழி
வங்காளம். ஆங்கில வழிக்கல்வியில் அவர் மேற்படிப்பு
படித்தார். இந்தி மொழியையும் அறிந்திருந்தார்.

ஆனால், தமக்கு எந்தவகையிலும் சம்பந்தப்பட்டிராத –
ஜெர்மன், இத்தாலி மற்றும் ஜப்பானிய மொழி பேசும்
அந்தந்த நாட்டின் உயர்மட்டஆட்சியாளர்களுடன் நெருங்கிய
நட்பை ஏற்படுத்திக் கொண்டதோடு,
அவர்களுக்கு தன் மீது அளவுகடந்த நம்பிக்கை ஏற்படும்
அளவிற்கு செயல்பட்டு, பல காரியங்களை நடத்திக் கொண்டார்.
போரின் உச்ச கட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது –
அவரை நம்பிக்கையோடு, தங்கள் சப்மரீனில் பயணிக்க
அனுமதித்தது ஜெர்மன் அரசு.

german submarine crew

bose with german submarine captain Mausenberg

nethaji

1942, பிப்ரவரி 8 ஆம் தேதி – ஜெர்மன் நீர்மூழ்க்கிக் கப்பல் ஒன்றில் புறப்பட்ட நேதாஜி, மடகாஸ்கர் வரை அதிலேயே பயணித்து, பின்னர் அந்த பிராந்தியத்தில் பயணித்துக்கொண்டிருந்த
ஜப்பானின் கப்பலுக்கு மாறி,
மூன்று மாத பயணத்திற்கு பிறகு – ஒருவழியாக –
மே 16 ஆம் தேதி டோக்கியோ வந்து சேர்ந்தார்.

டோக்கியோவிலிருந்து தெற்காசியாவில் வாழும் 30 லட்சம்
இந்திய மக்களுக்கு வானொலி மூலமாக நேதாஜி
தொடர்ந்து உரையாற்றிக் கொண்டிருந்தார்.

1942, ஜூலை மாதம் 2 ஆம் தேதி சிங்கப்பூருக்கு வருகிறார்
நேதாஜி. ஒரே மாதத்தில்…..உலகப் போரில், ஜப்பான்
வசப்பட்டிருந்த இந்திய சிப்பாய்களையும், தெற்காசியாவில்
நேதாஜியின் அழைப்பினை ஏற்று ஆர்வத்துடன் சேர வந்த
இந்திய வம்சாவளியினரையும் சேர்த்துக்கொண்டு
துவங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவம் – புத்துணர்வுடன்,
மிகுந்த எழுச்சியுடன் உருவாக்கப்பட்டது.

1943 ஆம் ஆண்டு அக்டோபர் 21 -ந்தேதி –
இந்திய விடுதலைப்போரில் இன்னுமொரு முக்கிய நாள் –
சிங்கப்பூரில் ” சுதந்திர இந்திய அரசு” நேதாஜியால் நிறுவப்பட்டது.

சிங்கப்பூர் ‘தைதோவா கெகிஜோ’ வில்
நடைபெற்ற மகாநாட்டில் தற்காலிக சுதந்திர இந்திய அரசை
பிரகடனப்படுத்தினார் நேதாஜி –

“நமக்கென்று ஓர் இராணுவம் அமைக்கப்பட்டு விட்டதால்,
நமக்கென்று ஒரு சுதந்திர அரசை அமைப்பது சாத்தியமும்,
அவசியமும் ஆகிறது… இந்தியாவின் முழு விடுதலைக்கான
இறுதிப்போரை நடத்துவதற்காகவே இந்தத் தற்காலிக அரசு
பிறந்திருக்கின்றது”-
என்று அறிவித்தார்.

வரிசையாக, ஜப்பான், பர்மா, குரோஷியா பிலிப்பைன்ஸ்,
ஜெர்மனி, சீனா, இத்தாலி, தாய்லாந்து ஆகிய அரசுகள் தற்காலிக
“சுதந்திர இந்திய அரசை” அங்கீகரிப்பதாக அதிகாரபூர்வமாக
அறிவித்தன.

ஜப்பான் அரசு, தான் 2ம் உலகபோரில் கைப்பற்றிய அந்தமான்,
நிக்கோபர் தீவுகளை நேதாஜியின் பொறுப்பில் ஒப்படைத்தது.
1943ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி இந்தியாவின்
மூவர்ணக் கொடியை அந்தமான் தீவில் பறக்க விட்டார் நேதாஜி.

1944 ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ந்தேதி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின்
பிடியிலிருந்து இந்தியாவை விடுவிக்க புறப்பட்ட
இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கிடையே நேதாஜி ஒரு
வீர எழுச்சியுரை ஆற்றினார்.

சுபாஸ் சந்திர போஸ் ஆற்றிய உரையின் சாரம் –

“அதோ அந்த நதியின் கரைக்கு அப்பால்,
அந்த அடர்ந்த காடுகளுக்கும் பின்னால்,
நம் கண்களில்படும் அந்த மலைகளுக்கும் பின்னால்
நமக்காக உறுதியளிக்கப்பட்ட அந்த பூமி உள்ளது –
எந்த மண்ணில் இருந்து நாம் உயிர்பெற்றோமோ –
அந்த பூமியை நோக்கி நாம் திரும்புகிறோம்.
புறப்படுங்கள், இந்தியா அழைக்கிறது…
ரத்தம் ரத்தத்தை அழைக்கிறது. கிளர்ந்தெழுங்கள்,
உங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
நம்மை அடிமையாக்கிய எதிரிகளின் படைகளை
கிழித்துக் கொண்டு நமது பூமிக்கு பாதை அமைப்போம்
அல்லது இறைவனின் சித்தம் வேறானால்
வீரர்களுக்குரிய தியாக மரணத்தை தழுவுங்கள்.
நமது கடைசி மூச்சில் டெல்லிக்கு செல்லும் நமது பாதைக்கு
முத்தமிட்டுவிட்டுச் சாவோம்.
டெல்லிக்கு செல்லும் பாதை,
விடுதலை நோக்கிய பாதை…. சலோ டெல்லி – “

மாபெரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் பிடியிலிருந்து–
தாய் நாட்டை நிச்சயம் விடுதலை பெறச்செய்வோம் –
படை திரட்டி, போர்புரிந்து, வெற்றி காண்போம் என்று
உறுதியாக நம்பி அவர் பின் ஒரு பெரும் வீரர் கூட்டம்
சென்றது. இதில் பெருமைப்படத்தக்க விஷயம் பெரும் அளவில்
தமிழர்கள் இந்தப்படையில் இருந்தனர்.

இப்படி உறுதி கொண்ட நெஞ்சுடைய ஒரு பெரும் படையை
உருவாக்கும் வல்லமை அந்த நேதாஜியை போன்ற
மாபெரும் தலைவனை இந்த மண்
மீண்டும் காணும் நாளும் எப்போதாவது வருமா …?

படைநடத்திச்செல்ல வசதியாக, தனது தலைமையகத்தை
பர்மாவின் தலைநகரமான ரங்கூனுக்கு
மாற்றிக் கொள்கிறார் நேதாஜி.

இந்திய தேசிய ராணுவத்திற்கு நிதியுதவியும்,
பொருளுதவியும் தாராளமாக வழங்குமாறு நேதாஜி விடுத்த
வேண்டுகோளை ஏற்று பர்மா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய
நாடுகளில் வாழ்ந்த இந்தியர்கள் மிகுந்த பரவசத்துடன்,
மனமுவந்து பெரிய அளவில் பணமாகவும், தங்க நகைகளாகவும்
அள்ளிக் கொடுத்தனர்.

1944 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி இந்திய – பர்மா
எல்லையில் உள்ள அராக்கன் என்னுமிடத்திலிருந்து
இந்திய தேசிய ராணுவம் இந்திய எல்லையை நோக்கி
நகரத் தொடங்கியது.

இந்திய எல்லையில் பிரிட்டிஷ் படைகளின் பெரும் எதிர்ப்புகளை முறியடித்து முன்னேறிய இந்திய தேசிய ராணுவம் சுமார் ஒன்றரை மாத காலத்துக்குள் -மார்ச் 18 ஆம் தேதி
இந்திய எல்லைக்குள் கால்பதித்தது.

இந்திய தேசிய ராணுவத்திற்கும், பிரிட்டிஷ் படைகளுக்கும்
இடையே இந்திய – பர்மா எல்லைப் பகுதியில் 8 இடங்களில்
கடும் போர் துவங்கியது.

ஏப்ரல் 14 ஆம் தேதி கர்னல் எஸ்.ஏ. மாலிக்
தலைமையிலான படை, மணிப்பூரில் உள்ள மொய்ராங்
என்னுமிடத்தை கைப்பற்றி, அங்கு இந்திய தேசியக் கொடியை
முதல் முதலாக பறக்கவிட்டது.

பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து, ராணுவ நடவடிக்கை மூலம்
இந்திய தேசிய ராணுவம் கைப்பற்றிய முதல் பகுதி என்ற
பெருமையை “மொய்ராங்” பெற்றது.

இதற்கிடையே ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி ஜப்பானிய அரசின்
உதவியுடன் ரங்கூனில் இந்திய தேசிய வங்கியை துவக்கி
வைத்தார் நேதாஜி.

வரலாற்றுப் பெருமைமிக்க இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு,
இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவான
ராணி ஜான்சி ரெஜிமண்டுடன் இந்திய எல்லையை நோக்கி
புறப்பட்டார் நேதாஜி.

ina-1

ina-2

ஏப்ரல் 8 ஆம் தேதி நாகாலாந்து மாநிலத்தின் இன்றைய
தலைநகராக உள்ள கொஹிமா நகரத்தை இந்திய தேசிய ராணுவம்
கைப்பற்றியது. அடுத்த சில நாட்களில் திம்மாப்பூர் – கொஹிமா
முக்கிய சாலையை கைப்பற்றிய இந்திய தேசிய ராணுவம்,
இம்பால் நகரை சுற்றி வளைத்து முற்றுகையிட்டது.
ஒரு மாத காலம் சுற்றி வளைத்து தாக்கிய இந்திய தேசிய
ராணுவத்தை எதிர்கொள்ள முடியாத பிரிட்டிஷ் ராணுவம்,
மெல்ல பின் வாங்கத் துவங்கியது.

ஆனால் – தென் மேற்கு பருவமழை நிலையை தலைகீழாக
மாற்றியது. வானத்தையே கிழித்துக் கொண்டு தொடர்ந்து கொட்டிய
மழையும், அதனால் ஏற்பட்ட வெள்ளமும்,
அதன் காரணமாக சேறும், சகதியுமாகிவிட்ட பூமியும்,
துண்டிக்கப்பட்ட தகவல் தொடர்புகளும் – இந்திய தேசிய
ராணுவத்திற்கு பாதமாக முடிந்தன. பிரிட்டிஷ் ராணுவத்தால்
ஏற்படுத்த முடியாத சேதத்தை, பருவ மழை ஏற்படுத்தி விட்டது.

இந்திய தேசிய ராணுவத்தின் வெற்றிகரமாகத் துவங்கிய
முதல் தாக்குதல் சில வெற்றிகளுக்குப் பின், தோல்வியில் முடிந்தது.
மழையின் விளைவாக பரவிய காலரா, வயிற்றுப்போக்கு
வியாதிகளுக்கு உரிய மருத்துவ வசதி கிட்டதாததால் வீரர்கள்
நூற்றுக்கணக்கில் மடிந்தனர்.

நேதாஜியோ படை வீரர்களோ மனம் தளரவில்லை
என்றாலும், உலகப் போரின் போக்கு இந்த சமயத்தில்
வெகு வேகமாக மாறத் தொடங்கியது.
பிரிட்டிஷ் தலைமையில் நேச நாட்டுப் படைகள் பர்மா – சிங்கப்பூர்
நோக்கி வேகமாக நெருக்கத் தொடங்கின.

1945 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய பர்மா வரை
பிரிட்டிஷ் படைகள் முன்னேறிவிடுகின்றனர். வேறு வழியின்றி,
ஏப்ரல் 24-ஆம் தேதி, ராணி ஜான்சி ரெஜிமண்ட்
வீராங்கனைகளுடனும், தனது முக்கிய அமைச்சர்களுடனும்
ரங்கூனில் இருந்து பாங்காக் நோக்கி நேதாஜி புறப்பட்டார்.

கிட்டத்தட்ட 20 நாட்கள் – எதிரிகளின் விமானத் தாக்குதல்களுக்கு
இடையே தாக்குப் பிடித்து, கடும் இன்னல்களை அனுபவித்த
பின்னர் நேதாஜி குழுவினர் மே 14 ஆம் தேதி பாங்காக்
வந்து சேர்ந்தனர்

ஆனால் தனது நம்பிக்கையை தளரவிடவில்லை நேதாஜி.
ஜூலையில் மீண்டும் சிங்கப்பூர் வந்தார். ராணுவத்தை
சீரமைக்கும் முயற்சியைத் துவங்கினார்….
” தாக்குதல் தொடரும்…இம்பாலை மீண்டும் தாக்குவோம்.
ஒரு முறை, இரண்டுமுறையல்ல பத்து முறை…
ஆனாலும் சரி – தொடர்ந்து தாக்குவோம்” என்று அறிவித்தார்.

ஆனால் அதை மேற்கொள்ள முடியாமல் ரங்கூனையும்,
சிங்கப்பூரையும் – பிரிட்டிஷ் படைகள் நெருங்கின.

அதற்குள்ளாக, 1945, ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜப்பானின் மீது
போர் தொடுப்பதாக ரஷ்யா அறிவித்தது. ஜப்பானின் கைவசம்
உள்ள மன்ஞ்சூரியாவை நோக்கி ரஷ்யப் படைகள் விரைந்தன.
தனக்கு துணையாக இருந்த இரண்டு நாடுகளுக்கு இடையே போர். என்ன செய்வது என்று புரியாமல் தவித்தார் நேதாஜி.

1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய தேசிய ராணுவத்திற்கு
உறுதுணையாக இருந்த ஜப்பான் நேச நாடுகளிடம் சரணடைந்தது.

உடனடியாக, அன்று இரவே சிங்கப்பூர் திரும்பிய நேதாஜி,
தனது அமைச்சரவை சகாக்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு –

நேதாஜியை பிரிட்டிஷ் படைகள் கைது செய்து சிங்கப்பூரிலோ,
அல்லது இந்தியாவிற்கு கொண்டு சென்று, பிரிட்டிஷ் அரசுக்கு
எதிராக போர் தொடுத்த குற்றத்திற்காக தண்டித்தால்
( மரண தண்டனை விதித்தால் ) அது இந்தியாவிற்குள் பெரும்
எழுச்சியை ஏற்படுத்தும். அதன் மூலம் விடுதலையும்
விரைவில் சாத்தியமாகும்.
அவ்வாறின்றி நேதாஜியை சிறை வைத்தால், அது விடுதலை
போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவதற்கு உதவும். எனவே
இந்திய தேசிய ராணுவ வீரர்களுடன் அதன் தலைமை தளபதியான
நேதாஜியும் சிங்கப்பூரிலேயே இருப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

( தொடர்கிறது – பகுதி-5-ல் )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to 73 ஆண்டுகளுக்கு முன்னர் சப்மரீனில் சாகசம் …. (நேதாஜி – பகுதி-4 )

 1. Pingback: 73 ஆண்டுகளுக்கு முன்னர் சப்மரீனில் சாகசம் …. (நேதாஜி – பகுதி-4 ) | Classic Tamil

 2. எஸ்.இளங்கோ சொல்கிறார்:

  காவிரிமைந்தன் அய்யா,

  நீங்கள் நீண்ட நாட்களுக்கு முன்னர் சுதந்திர போராட்ட வீரன்
  பகத் சிங் பற்றி ஒரு தொடர் கட்டுரை எழுதினீர்கள்.
  அதற்குப் பிறகு இப்போது தான் ஒரு நிஜமான ஹீரோவைப் பற்றி
  எழுதுகிறீர்கள். நிஜமான ஹீரோக்கள் எல்லாம் சுதந்திர போராட்டத்தோடு
  போய் விட்டார்கள் போலிருக்கிறது.
  இப்போது எல்லாரும் வெறும் அறிக்கை வீரன்களாகவே
  இருக்கிறார்கள். பொழுது விடிந்தால் வரிசையாக
  கோபாலபுரம் அப்பா-பிள்ளை, தைலாபுரம் தந்தை-மகன்,
  கோயம்பேடு மாமன்-மச்சான், தேனாம்பேட்டை குஷ்பூதாசன்
  என்று கொசுத்தொல்லையி விட மோசமாகப் போய் விட்டது
  இவர்களின் அறிக்கை தொல்லை.
  பகத் சிங் மாதிரி, நேதாஜி மாதிரி ஒரு தலைவரை நாம் மீண்டும்
  எப்போது பார்க்கப்போகிறோம் ? இன்னொரு சுதந்திரப் போராட்டம்
  வரும்போது தானா ?

 3. Siva சொல்கிறார்:

  I think the happenings related to the first photo of this writing are good and bad for the aim/goal of Shubas C Bose!

 4. drkgp சொல்கிறார்:

  💐இது மாதிரி நெஞ்சுரம்உற்ற மாமனிதர்களை நாம் இனி காண்பதெப்போது?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.