கே.டி.பிரதர்ஸ் விவகாரம் – 323 அல்ல – 764 அதிவேக இணைப்புகள் – 6 மாதங்கள் அல்ல 36 மாதங்கள் – புதிய தகவல்கள் …!!!

????????????????????????????????????

????????????????????????????????????

திரு தயாநிதி மாறன் அவர்களை கடந்த வாரம் சிபிஐ நேரில்
டெல்லிக்கு வரவழைத்து விசாரணை நடத்திய விவரங்கள்
செய்தித்தாள்களில் வந்தன.,

ஐக்கிய முன்னணி அரசில் திமுகவும் அங்கம் வகித்த காரணத்தால்,
அமுக்கிப் போடப்பட்டிருந்த இந்த விஷயத்தை
சுப்ரீம் கோர்ட் வரை எடுத்துச் சென்று, மீண்டும் உயிர் கொடுத்து
நடவடிக்கை எடுக்க வைத்த ஆடிட்டர் குருமூர்த்தி அவர்கள்
கடந்த வாரம் இந்த விஷயம் குறித்து மேலும் சில புதிய
தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.

திரு. குருமூர்த்தி அவர்களின் எழுத்துக்களில் —

இந்த மோசடி 2011-இல் வெளிப்படுத்தப்பட்டபோது தரப்பட்ட
விவரங்களில் இரண்டு தவறுகள் இருப்பது தெரிய வந்திருக்கிறது.
சென்னை போட் கிளப்பில் உள்ள மாறன் சகோதரர்களின்
இல்லத்தில் பி.எஸ்.என்.எல். இணைப்புகள் மூலம் இயங்கிய
சட்ட விரோத தொலைபேசி இணைப்பகத்தில் 323 அதிவேக
தொலைபேசி இணைப்புகள் இருந்ததாக அப்போது குறிப்பிடப்பட்டது.

ஆனால், அந்த எண்ணிக்கை அதைப்போல இரு மடங்கு –
764 என்பது பின்னர் தெரியவந்தது. செயல்பாட்டில் இருந்த
இணைப்புகளின் எண்ணிக்கை 323 அல்ல, 764!

அடுத்ததாக, இந்த சட்ட விரோதத் தொலைபேசி இணைப்பகம்
6 மாதங்கள் இயங்கியதாக 2011-இல் தொடங்கிய விசாரணையின் போது குறிப்பிடப்பட்டது. ஆனால், அந்த சட்ட விரோதத் தொலைபேசி இணைப்பகம் இயங்கிய காலம் ஜூலை 2004 முதல் ஜூலை 2007 வரையிலான 36 மாதங்கள் என்பது இப்போது தெரியவந்துள்ளது.

அப்போது கிடைத்த இந்த இரு தகவல்களின் அடிப்படையில்
2011-இல் விசாரணை நடந்ததால் மோசடியின் அளவு குறைவாக
மதிப்பிடப்பட்டுவிட்டது. அப்படிக் குறைத்து மதிப்பிட்டபோதிலும்,
அதுவே மாபெரும் அளவில் இருந்தது. தற்போது அது மேலும்
பூதாகாரமாகியுள்ளது.

இந்த மோசடியின் மதிப்பைக் குறைத்துக் காட்ட முயன்று,
இதனால் ஏற்பட்ட இழப்பு ரூ.1.8 கோடி மட்டுமே என்ற செய்தியைச் சிலர், குறிப்பாக, மாறன் சகோதரர்களுக்கு நெருக்கமான ஊடக நண்பர்களும், அரசியல் தொடர்புகளும்
பரப்ப முற்பட்டிருக்கிறார்கள்.

இந்த இணைப்புகள் அனைத்தும் “அலுவலகப் பயன்பாட்டுக்காகவே’
உபயோகிக்கப்பட்டன என்ற தயாநிதி மாறனின் வாதம்தான் அதற்கு
அடிப்படையாகக் கூறப்படுகிறது.

இந்த இணைப்புகள் அனைத்தும் திட்டமிட்டு பி.எஸ்.என்.எல்.
நிறுவனத்திடமிருந்து திருட்டுத்தனமாக சன் டி.வி.யின் வர்த்தகப்
பயன்பாட்டுக்கு உபயோகிக்கப்பட்டன என்பதற்கு அமைச்சர் மாறனின் இல்லத்திலிருந்து சன் டி.வி. அலுவலகம் வரை பூமிக்கடியில் ரகசியமாகப் புதைக்கப்பட்டு, யாருக்கும் தெரியாமல் கொண்டு செல்லப்பட்ட 764 பி.எஸ்.என்.எல். இணைப்புகளே போதுமான சாட்சி!

இந்த இணைப்புகள் அலுவலகப் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டவை
என்பது உண்மையென்றால், குற்றம் எதுவும் நிகழவே இல்லை.
அமைச்சரின் அலுவலகப் பயன்பாட்டுக்கு மட்டுமே
இந்த இணைப்புகள் உபயோகிக்கப்பட்டன என்பது
உண்மையென்றால், பிரச்னையே இல்லை.

அப்படியானால், அமைச்சரின் அலுவலகப் பயன்பாட்டுக்கென
அமைத்த 764 அதிவேகத் தொலைபேசி இணைப்புகளுடன் கூடிய
இணைப்பகம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சென்னை டெலிபோன்ஸ் தலைமைப் பொது மேலாளர் (சி.ஜி.எம்.) பெயரில் நடத்தப்பட்டது ஏன் என்பதுதான் கேள்வி.

இதில் ரகசியம் பேணப்பட்டதும், “அலுவல் பயன்பாட்டுக்கு’
அதிகாரப்பூர்வமற்ற வகையில் தொலைபேசி இணைப்பகம் இயங்க
அனுமதிக்கப்பட்டதும் ஏன்?

உண்மை என்னவென்றால், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின்
சி.ஜி.எம். பெயரில் 764 இணைப்புகளை சேவை இணைப்புகளாகக்
கொண்டு மாறன் சகோதரர்கள் இவற்றைத் தங்களது வர்த்தகப்
பயன்பாட்டுக்கு முறைகேடாக உபயோகித்திருக்கிறார்கள்.
அதற்காகவே, சென்னை போட் கிளப் பகுதியிலுள்ள மாறனின்
இல்லத்தில் இந்த இணைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

“அலுவலகப் பயன்பாட்டுக்கானதாகக் கூறப்படும்’ இந்த 764 சேவை
இணைப்புகளைப் பதிக்க ஆன செலவுதான் ரூ.1.8 கோடி.
இந்தத் தொகையைத்தான் மோசடியின் சிறு இழப்பாகக்
குறைத்துக் காட்ட முயல்வோர் தெரிவித்துள்ளனர். 764 அதிவேக இணைப்புகளும் அமைச்சரின் அலுவலகப் பயன்பாட்டுக்காகவே பயன்படுத்தப்பட்டன என்று சொன்னால் அதை முட்டாள்கள் கூட நம்ப மாட்டார்கள்.

இந்த 764 பி.எஸ்.என்.எல். இணைப்புகளும் வர்த்தகப்
பயன்பாட்டிற்காகவே உபயோகப்படுத்தப்பட்டன என்பதற்கு
உறுதியான ஆதாரங்கள் உள்ளன. இதற்கு இயல்பான ஆதாரமாக இருப்பது, சென்னை – ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள தயாநிதி மாறனின் போட் கிளப் இல்ல சந்திப்பிலிருந்து
அண்ணா சாலையிலுள்ள சன் டி.வி. அலுவலகத்துக்கு
பூமிக்கடியில் பதிக்கப்பட்டுள்ள கேபிள் ஆகும்.

இந்த கேபிளின் மூலமாகத்தான் 764 அதிவேகத் தொலைபேசி
இணைப்புகள் செயல்பட்டுள்ளன. எனவே, இந்த இணைப்புகள்
அனைத்தும் அமைச்சரின் அலுவலகப் பயன்பாட்டுக்கானவை
என்றும், இதன் இழப்பு ரூ.1.8 கோடி என்றும் கூறுவது முழுப்
பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சியாகத்தான்
இருக்கும்.

சன் டி.வி. லாபம் பெறுவதற்காக, பொதுமக்களை
பல நூறு கோடி ரூபாய் இழப்புக்கு உள்ளாக்கிய குற்றம் இது.
இந்த 764 இணைப்புகளும் வர்த்தக நோக்கில் மோசடியாக
உபயோகிக்கப்பட்டுள்ளன.

இந்த 764 அதிவேக இணைப்புகளையும் சன் டி.வி.க்கு
பி.எஸ்.என்.எல். வர்த்தகரீதியாக வழங்கியிருந்தால், அதனால்
எவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கும்?

சன் டி.வி. உபயோகித்துவரும் ஒவ்வோர் அதிவேகத் தொலைபேசி இணைப்புக்கும் ஆண்டுக் கட்டணமாக ரூ.10 லட்சம் செலுத்துகிறது. இது குறிப்பிட்ட இலவச அழைப்புகளுக்கு மட்டுமே. அதற்கு மேல் வரும் அழைப்புகளுக்கு தனிக் கட்டணம் உண்டு.

அந்த அடிப்படையில் கணக்கிட்டால் 764 அதிவேக இணைப்புகளுக்கு சன் டி.வி. ஆண்டுக்கு ரூ.76.4 கோடி செலுத்தியிருக்க வேண்டும்.
2004 முதல் 2007 வரையிலான மூன்றாண்டு காலகட்டத்தில் இந்த
இணைப்புகளுக்கு மும்மடங்காக ரூ.229.2 கோடி செலுத்தியிருக்க
வேண்டும். இந்த இணைப்புகளுக்கு உரிய கட்டணம் மட்டும்தான்
இந்தத்தொகை.

இந்த இணைப்புகள் அனைத்தும் கணக்கீட்டு வளையத்துக்குள்
வராத வகையில் அமைக்கப்பட்டதால் இதன் உண்மையான
உபயோகக் கட்டணத்தை கணக்கிட முடியாது.
உபயோகக் கட்டணத்தைக் கணக்கிட முடியாத வகையில்
தந்திரமாக இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது. எனினும், 30 இணைப்புகள் கொண்ட ஒரு தொகுப்புக்கு மாதம் 45 நிமிடங்கள் என்று உபயோகத்தைக் கணக்கிட்டாலும் அவற்றின் மதிப்பு மூன்று ஆண்டுகளுக்கு பல நூறு கோடி ரூபாயாக இருக்கும்.

இதெல்லாம் போதாதென்று, இந்தப் பிரத்யேகத் தொலைபேசி
இணைப்பகத்தின் இலவசத் தொலைபேசி சேவையைத் தனக்கு
நெருக்கமான பலருக்கும் மாறன் சகோதரர்கள் அளித்துள்ளனர்.
இது ஒருவகையில் உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக
நடத்தப்பட்ட தொலைபேசி சேவையாகும்.

“தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமம் நடத்திய புலனாய்வில்,
சன் டி.வி.யின் அலுவலர்கள் பலருக்கு மாறன் சகோதரர்களின்
இந்த இலவசத் தொலைபேசி அமைப்பில் தொடர்பிருப்பது
தெரியவந்தது.

இந்தச் சட்ட விரோதமான, திருட்டுத்தனமான தொலைபேசி
இணைப்புகள், அரசுக் கருவூலத்துக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்திய சட்டரீதியான மோசடி மட்டுமல்ல. கண்காணிப்பில்லாத தனியொரு தொலைபேசி இணைப்பே தேசியப் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும்
என்பதால் விசாரணைக்கு உரியதுமாகும்.

எந்தக் கண்காணிப்பிலும் இல்லாத 764 அதிவேகத் தொலைபேசி
இணைப்புகள் – அதாவது கட்டுப்பாட்டிலேயே இல்லாத முழுமையான தொலைபேசி இணைப்பகத்தின் நிலையை என்னென்பது?

அதுவும் தனியார் ஒருவரின் இல்லத்தில் அதிகாரியின்
பெயரில் திருட்டுத்தனமாக செயல்பட்டு வந்திருக்கிறது இந்த
இணைப்பகம். அதன் பயன்பாட்டை மறைத்து அப்படி இயக்க
வேண்டிய அவசியம் என்ன வந்தது?

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முறைகேடு கடந்த
10 ஆண்டுகளாக, பத்திரிகைகளில் வெளிவந்து 4 ஆண்டுகளாக
விசாரணை நடத்தப்பட்டு, வழக்குத் தொடரப்படாமல் இருப்பதற்கு
மாறன் சகோதரர்களின் அரசியல் தொடர்புகள்தான் காரணம்.

அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்களது தொலைக்காட்சி
நிறுவனத்துக்குத் தொலைபேசி இணைப்புகளைப் பயன்படுத்தி
இருக்கிறார்கள். அரசுக்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி
இருக்கிறார்கள். தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும்
இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

இத்தனைக்குப் பிறகும் இன்னும் விசாரணை தான் நடந்து
கொண்டிருக்கிறது. “கே’ (கலாநிதி), “டி’ (தயாநிதி) சகோதரர்களின் சாமர்த்தியம் காரணமா, அரசு இயந்திரத்தின் மெத்தனம் காரணமா?

———-

மக்கள் எவ்வளவு தான் பேசினாலும்,
மத்தியில் ஆளும் கட்சியில் நல்ல செல்வாக்கு உடையவரே –
தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தாலும் கூட –
கே.டி.சகோதரர்கள் இன்னமும் தொடர்ந்து
சுதந்திரமாக வெளியில் இருப்பது
இந்த நாட்டின் சட்ட விதிமுறைகளில் மக்களுக்கு உள்ள
நம்பிக்கையை வெகுவாக குறைக்கவே செய்கிறது.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to கே.டி.பிரதர்ஸ் விவகாரம் – 323 அல்ல – 764 அதிவேக இணைப்புகள் – 6 மாதங்கள் அல்ல 36 மாதங்கள் – புதிய தகவல்கள் …!!!

 1. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  எத்தனை எத்தனை அரசியல் அராஜகங்கள் தயானிதி அமைச்சராக இருந்தபோது நடந்தது. டாட்டாவே தாங்கமுடியாமல்தான், கனிமொழியை நாடவேண்டிவந்தது. அதற்கு ஏற்றார்ப்போல் கருணானிதிக்கும், மாறன் சகோதரர்களுக்கும் பகை வந்தது. இன்றைக்கு சன் தொலைக்காட்சிதான் முதன்மை என்றால் அதன் காரணம், யாரையும் வரவிடாமல் பார்த்துக்கொண்டதுதான். உடன்பிறந்தே கொல்லும் வியாதியைப்போல், ராசாவைத் தாக்க நினைத்தது, திமுகாவையே பலமாகத் தாக்கிவிட்டது.

  அரசியல்வாதிகள், திருடும்போது, கூட உள்ள எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சம் கொடுத்து, எல்லோரையும் திருட்டுக்கு உடந்தை ஆக்கிவிடுவார்கள். அதனால்தான், திருடனுக்குத் தேள் கொட்டியதுபோல், உரத்த குரலில் யாரும் நேர்மையாகச் செயல்பட முடிவதில்லை. இது இரண்டு கட்சிகளுக்கும் (தமிழ்னாட்டிலும், இந்தியாவிலும்) பொருந்தும். எப்படி ஒரு சிறு ‘லலித்மோடி’ விவகாரம், பெரிய பெரிய தொடர்புகளை அம்பலப்படுத்துகிறதோ அதே மாதிரி.

  இதற்குத் துணைபோகும் அதிகாரிக்கு, ஓய்வூதியத்தை நிறுத்துவதுடன், கடந்தகால ஓய்வூதியத்தையும் திரும்பப் பெறவேண்டும். என்னைப் பொறுத்தவரையில், அவரது dependentsக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் அளவு தண்டனை இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான், இத்தகைய குறுகிய கால அரசியல்வியாதிகளால், நிர்வாகிகளையும் கொள்ளைக்காரர்களாக மாற்ற இயலாது போகும்.

 2. ரிஷி சொல்கிறார்:

  இது மாதிரி செய்திகளை, அலசல்களைப் படிச்சுப் படிச்சு ரொம்பவே களைப்பாகுது. எரிச்சலாவும் வருது. அதனால் இப்பல்லாம் எல்லாத்தையும் ரொம்ப படிச்சு மனசை வருத்திக்கறது இல்லை. சில மாசங்கள் கவனமெல்லாம் வேலை, படிப்பு, குடும்பம், புதிய திட்டங்கள் மீது மட்டும்தான்.

  • இளங்கோவன் சொல்கிறார்:

   அப்ப எதுக்கு இங்க வர்ரீங்க ?
   போங்க சார் போய் புள்ளை குட்டிகளை கவனியுங்க.
   நாட்டைப்பத்தி ஒங்களுக்கு ஏன் கவலை ?
   அக்கரை உள்ளவங்க வந்துட்டு போறாங்க.

   • ரிஷி சொல்கிறார்:

    அக்கறை உள்ளவங்க வந்துட்டுப் போங்க சார். நான் வேணாங்கலையே. நான் என்னோட தற்போதைய மனநிலையை சொன்னேன் சார். அது சில நாட்கள்ல மாறலாம். அப்போ மறுபடியும் வந்துட்டுப் போறேன். ஒருதடவை போயிட்டு மறுபடியும் வரவே கூடாதுன்னு சொல்ல மாட்டீங்கனு நம்பறேன் 🙂

   • 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    ரிஷி சார் சொல்வதும் சரிதானே. நம்ம எல்லோரும் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கறதுக்குள்ள நாக்கு தள்ளிப்போகிறது. இப்படிக் கொள்ளைக்காரர்கள் செய்திகளெல்லாம் படித்து வயிற்றெரிந்து நம் கவனம்தான் திசை திரும்பும். இனிமேல், இவன் இந்த நல்லதைச் செய்தான் என்று வந்தால் அதுதான் அதிசயச் செய்தி.

    எல்லோருக்கும் ஒரு சான்ஸ் கிடைத்தால், வடிவேலுவைச் சுற்றி எல்லோரும் சூழ்ந்துகொண்டு விளாசுவதைப்போல், இத்தகைய அரசியல்வியாதிகளுக்கும் தண்டனை கொடுக்கும் எண்ணம் உண்டு. ஆனால் reality என்று ஒன்று இருக்கிறதே!1

 3. Sharron சொல்கிறார்:

  U are right. Read Dinamani news now.

 4. Pingback: கே.டி.பிரதர்ஸ் விவகாரம் – 323 அல்ல – 764 அதிவேக இணைப்புகள் – 6 மாதங்கள் அல்ல 36 மாதங்கள் – புதிய தகவல்க

 5. drkgp சொல்கிறார்:

  நெல்லைதமிழன், நல்ல கருத்து. வாழ்த்துக்

 6. Ganpat சொல்கிறார்:

  இதை வைத்து பிஜேபி /DMK பேரம் நடந்து கொண்டிருக்கும்.சுமுகமாக முடிந்தால் கேடி சகோ. இன்னொரு 764 இணைப்புக்கள் போட்டுக்கொள்ளலாம்.மற்றபடி நண்பர் ரிஷியின் கருத்துதான் தற்போதய என் கருத்தும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.