திரு.இல.கணேசனைத் தெரியும்…. ” ராமானுஜம் ” தெரியுமா ? சுவாரஸ்யமான – எமெர்ஜென்சி அனுபவங்கள் ….!!!

ila ganesan

தமிழக பாஜக தலைவர்களில் மூத்தவர் திரு.இல.கணேசன். நல்ல இலக்கியவாதி.
தமிழில் அருமையாக உரையாற்றக்கூடியவர்.
மிக எளிமையானவர்… ஒழுக்கமானவர்..பண்பாகப் பழகக்கூடியவர்…

கட்சி சார்பாக அவர் பேசுவதை விட்டு விட்டுப் பார்த்தால் –
தமிழக அரசியல்வாதிகளிடையே வித்தியாசமான ஒரு மனிதர்.

“பொற்றாமரை” என்கிற ஒரு இலக்கிய அமைப்பை
சிறப்பாக நடத்தி வருகிறார். அவரை நான் நன்கு அறிவேன். பல பொது நிகழ்ச்சிகளில் அவருக்கு மிக நெருக்கத்தில்
இருந்திருக்கிறேன்… ( ஆனால் – அவருக்கு என்னை
சுத்தமாகத் தெரியாது …..! )

பாஜக வில் இருக்கும் சில நல்ல மனிதர்களில் அவரும் ஒருவர்.
கட்சி சார்பாக தவறுகளையும் நியாயப்படுத்திப் பேச வேண்டியிருப்பது அவருக்கு உள்ள ஒரு கட்டாயம் என்பது எனக்குப் புரிகிறது…
எனவே, அவரது அரசியல் பேச்சுக்களை மறந்து விட்டு,
இந்த இடுகையை எழுதுகிறேன்.

அண்மையில் ஒரு பேட்டியில், எமெர்ஜென்சி நாட்களில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி விரிவாகக் கூறி இருக்கிறார்.
அந்த பேட்டி சுவையாக இருந்ததால், நண்பர்களுடன் அதில் சில
பகுதிகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இனி திரு.இல.கணேசன் அவர்களின் வார்த்தைகளில் –

——-

நெருக்கடி நிலை அறிவிப்பின்போது, நான் கன்னியாகுமரியில்
இருந்தேன். அங்குள்ள விவேகானந்தா கேந்திரத்தில், 1975, ஜூன்
25,26,27 ஆகிய மூன்று தினங்களும் ஆர்.எஸ்.எஸ். மாநில அளவில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்று, பிரிக்கப்படாத மதுரை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு நான் பொறுப்பாளர்.

நெருக்கடி நிலை அறிவிப்பு பற்றிய தகவல் கிடைத்ததும், அன்றைய நிகழ்ச்சிகளை ரத்து செய்தோம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்ய வாய்ப்பு இருப்பது குறித்து முக்கிய தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டோம். ஆனாலும், உடனடியாக அப்படி எந்த அறிவிப்பும் வரவில்லை.

1975, ஜூலை 4-ந்தேதி சென்னை தி.நகரில் பிரபல வழக்கறிஞர்
ஒருவரின் இல்லத்தில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சுமார்
இருபது பேர் ரகசியமாக கூடி விவாதித்தோம். சூரிய நாராயண ராவ், ராமகோபாலன் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் அதில் அடக்கம்.
“இயக்கத்திற்கு தடை வந்தால் எப்படி செயல்படுவது..?
தடை வராவிட்டால் எப்படி இயங்குவது ”
-என்பது தான் விவாதத்தின் மையப்பொருள்…!

காலையில் தொடங்கிய விவாதம் நண்பகலைத் தாண்டி போய்க்
கொண்டிருந்தது. அப்போது தான் அந்த வழக்கறிஞர் வந்து,
“தெரியுமோல்லியோ, ஒரு சந்தோஷமான செய்தி – நம்ம
ஆர்.எஸ்.எஸ்.ஸை தடை பண்ணிட்டா !” என்றார். அடுத்த கணம்
அங்கு கூடி இருந்த அனைவரும் வாய்விட்டு சிரித்தோம். எப்படியோ, ஒரு குழப்பம் தீர்ந்ததால் வந்த சிரிப்பு அது…!

அன்று உடனே கூட்டத்தை கலைத்து விட்டோம். அடுத்த
20 மாதங்கள் தலைமறைவாக இருந்து, இயக்கத்தின் கட்டளைகளை நிறைவேற்றுவதே எங்கள் வேலையாக இருந்தது. குறிப்பாக, நெருக்கடி நிலைக்கு எதிராக துண்டு பிரசுரங்களை அச்சடித்து விநியோகம் செய்வது, முக்கிய பிரமுகர்கள் பலரையும் சந்தித்து இதற்கு ஆதரவு திரட்டுவது, வாராந்திர இயக்கக் கூட்டங்களை நடத்துவது ஆகியன எங்கள் பணிகள்…!

ஆர்.எஸ்.எஸ். முக்கிய நிர்வாகிகள் அனைவருமே
அந்த காலகட்டத்தில் தோற்றத்தை மாற்றிக்கொண்டு,
புனைபெயர்களில் சுற்றினோம். அப்படி எனக்கு நானே வைத்துக்
கொண்ட பெயர் ” ராமானுஜம் “! வழக்கமாக திருநீறு அணிகிற
நான் ஒரு வைஷ்ணவரைப் போலவே நெற்றியில் நாமம்
அணிந்துகொண்டேன்.

தவிர, தலைமுடியை குட்டையாக வெட்டிக்கொண்டு, வழக்கமான
கண்ணாடியை அணியாமல் நான் செல்வதுண்டு. அப்போது எதிரே
வருகிற உளவுப்பிரிவினர் கூட கண்டுகொள்ள முடியாது.
ராமகோபாலனுக்கு வைக்கப்பட்ட பெயர் ” கிருஷ்ணன் “! ஆனால், அவரது தோற்றத்தை வைத்து, “குன்னக்குடி வைத்தியநாதன்” என்றே அழைத்தார் பத்திரிகையாளர் சோ.

கார்த்திகை முதல் ஜனவரி மாதம் வரை ஐயப்ப பக்தர் வேடத்தை
நாங்கள் போட்டதுண்டு. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை
எதாவது ஒரு ஊரில் நான்கு ரோடுகள் சந்திக்கும் இடத்தில்
5 பேர் கூடி சத்தியாக்கிரகம் நடத்துவோம். அப்போது “இந்திரா
காந்தி ஒழிக” என ஒருவர் கோஷம் எழுப்ப, அதை நான்
“இந்திராவின் சர்வாதிகாரம் ஒழிக” என்று திருத்தியது ஞாபகத்தில்
இருக்கிறது.

என்னை இரண்டு முறை ஆங்கில பத்திரிகைகளில் விளம்பரம்
செய்து போலீஸ் தேடியது. பெரும்பாலும் ஓட்டல்களில் நாங்கள்
தங்குவதில்லை. சாதாரண மக்களின் வீடுகளில் தங்கியிருந்து, அவர்கள் வீட்டுக்குழந்தைகளிடம் மாமா, சித்தப்பா என உறவுமுறையுடன் பேசியதால், யாராலும் கண்டு பிடிக்க
முடியவில்லை.

தலைமறைவாக இருந்து கொண்டே காரைக்குடியில் ஒரு பெரிய
வீட்டின் மாடியில் ஆர்.எஸ்.எஸ்-ந் அகில இந்திய அளவிலான
கூட்டத்தை ரகசியமாக நடத்தினோம். யாரோ சில வட இந்திய
வைர வியாபாரிகள் அந்த வீட்டுக்கு வந்து சென்றதாகத்தான்
அந்த பகுதியினர் நினைத்துக் கொண்டனர்.

ஒரு முறை ராகவேந்திரன், முருகன் ல்என இரு தொழிலாளர்களை
போலீஸ் பிடித்து என்னைப்பற்றி கேட்டிருக்கிறார்கள். அவர்களில்
ராகவேந்திரனுக்கு எனது இருப்பிடம் தெரியும். ஆனால், போலீஸ் எவ்வளவோ அடித்து சித்திரவதை செய்தபிறகும், “வந்தேமாதரம்” என்பதைத்தாண்டி, அவரது வாயில் இருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை.

முருகனை போலீஸ் அடித்து உதைத்தபோது.”பாரத் மாதா கீ ஜே”
என்றே திரும்பத் திரும்ப கூறி இருக்கிறார். கடைசியில் போலீசாரே
“ஏய், வந்தேமாதரம் இங்கே வா, பாரத் மாதா நீ இங்கே வா” என
அவர்கள் பெயரையே மாற்றி அழைக்கும் அளவுக்கு அவர்களின்
செயல்பாடுகள் இருந்தன.

நெருக்கடி நிலைக்கு எதிராக அச்சடிக்கும் நோட்டீஸ்களை பாதுகாத்து வைப்பது மிகவும் சிரமமான காரியம் ! காரணம் – எதாவது ஒரு வீட்டில் நோட்டீஸ் இருப்பதை போலீஸ் பார்த்துவிட்டால் அந்த குடும்பத்தின் கதி அதோகதி தான். இந்தச் சூழலை நன்கு அறிந்திருந்தும், மதுரையில் நான்கு குழந்தைகளுடன் வசித்த லோகநாதன் என்கிற மில் தொழிலாளி இதற்கு உதவினார்.

ஒருமுறை மதுரைவீரன் என்கிற தொழிலாளி போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தபோது, எதிரே போலீஸ் வந்துவிட்டது. உடனே பக்கத்தில் இருந்த குப்பைத்தொட்டிக்குள் குதித்து குப்பையை வாரி தன்மீது போட்டு மறைந்துகொண்டார். மறுநாள் இந்த சம்பவத்தை அவர் சொன்னபோது எங்களின் கண்கள் கசிந்து
விட்டன.

இன்னொரு விஷயத்தை இந்த தருணத்தில் சொல்வது தப்பில்லை
என்று நினைக்கிறேன். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு
திருமண விழாவில் மூத்த தலைவரான பழ.நெடுமாறனை
பார்த்தபோது, “என்னை உங்களுக்கு தெரிகிறதா?” என்று கேட்டேன். “உங்களைத் தெரியாதா இல.கணேசன்?” என பதிலளித்தார் அவர்
.

“நெருக்கடி காலகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். இளைஞர் ஒருவர் உங்களிடம் உதவி கேட்டுவந்தாரா ?” எனக் கேட்டேன்.

“ஆமாம். ராமானுஜம் என்கிற இளைஞர் வந்திருக்கிறார்” என்றார் அவர். “அந்த ராமானுஜம் நான் தான்” என சொன்னபோது, நெடுமாறனுக்கு ஆச்சரியம் !

கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு முதன் முதலாக நான் சென்றது நெருக்கடி நிலை காலத்தில்தான். மசூதிகளுக்கும் சென்று முஸ்லிம் பிரமுகர்களைச் சந்தித்திருக்கிறேன். ஏராளமான பிரமுகர்களுடன் பழகும் வாய்ப்பை நெருக்கடி நிலை தந்தது. அரசியலுக்கு வருவோம் என கற்பனைகூட செய்து பார்த்திராத நாட்களில் என்னை பட்டை தீட்டிக்கொள்ள அந்த அனுபவங்கள் உதவின.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to திரு.இல.கணேசனைத் தெரியும்…. ” ராமானுஜம் ” தெரியுமா ? சுவாரஸ்யமான – எமெர்ஜென்சி அனுபவங்கள் ….!!!

  1. nparamasivam1951 சொல்கிறார்:

    எமர்ஜன்சி யின் 40 ஆண்டுகளை உங்களுக்கே உரிய வழியில் அறிந்தேன். எமர்ஜன்சி உண்மையில் எதிர்கட்சிகள் ஒன்றுபட உதவியது. ஆனால் எமர்ஜன்சியால் கஷ்டப்பட்ட கட்சிகளும் இன்று அதே எமர்ஜன்சி ஆட்சி நடாத்திய காங். பின் செல்வது தான் சோகம்.

  2. Pingback: திரு.இல.கணேசனைத் தெரியும்…. ” ராமானுஜம் ” தெரியுமா ? சுவாரஸ்யமான – எமெர்ஜென்சி அனுபவங்கள் ….!!! | Class

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.