“சன்” லைசென்ஸ் – பதட்டம் யாருக்கு….?

sun-tv-twitter

சன் குழுமத்திற்கு எஃப்.எம். வானொலி ஏலத்தில் பங்கு பெற தகுதி இல்லையென்று அறிவிக்கப்பட்டிருப்பதையொட்டி –
எழுதப்பட்ட இடுகைகளுக்கு ஆதரவாக ஏகப்பட்ட
பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன.

எதிர்மறையாக – ஒரே ஒரு நண்பர் மட்டும் “கருத்து” என்கிற
புனைபெயரில் இந்த தளத்திற்கு ஒரு பின்னூட்டம் அனுப்பி
சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

அந்த பின்னூட்டத்திற்கு நான் எழுதும் விளக்கங்கள்
மற்ற நண்பர்களின் பார்வைக்கும் அவசியம் போக வேண்டும்
என்று நினைப்பதால் –

அந்த பின்னூட்டத்தையும் –
அதற்கு நான் அளித்திருக்கும் விளக்கங்களையும் –
இங்கேயே பதிப்பிக்கிறேன் –

————————————

karutthu@gmail.com
9:41 முப இல் ஜூலை 21, 2015 (மேம்படுத்து) –

சன் டி.வியின் பழைய நடத்தை பற்றிய விமர்சனத்திற்க்குள்
போக விரும்பவில்லை. அவர்கள் செய்த பிரச்சினைகள் என்று
நீங்கள் குறிப்பிட்ட கருத்தில் மாற்று கருத்து இல்லை.

இப்போதைய‌ பிரச்சினை பாதுகாப்பு சான்றிதழ் பற்றியது.
வழக்கு நிலுவையில் உள்ளது.
அவர்கள் செய்தது குற்றம் என்றால் அதற்குரிய தண்டனை
அவர்களுக்கு சேர வேண்டியது நியாயம்.
இந்தியா முழுவதும் உள்ள சேனல்களின் மேல் பல வகையான குற்றசாட்டுகள் உள்ளன. ஆனால் பாதுகாப்பு சான்றிதழ்
மறுக்கப்பட்டது சன் குழுமத்திற்க்கு மட்டும் எனும்போது
அதில் உள் நோக்கம் உள்ளது போல தெரியவில்லையா.

யாரையோ திருப்தி படுத்த எடுத்த நடவடிக்கை என அனைவரும் சொல்வது உண்மை போல தெரியவில்லையா.
சென்னையில் நடந்த ஒரு திருமணத்திற்க்கு பிறகே இந்த
நடவடிக்கைகள் தொடங்கியது என சொல்லப்படுகிறது.
இது போன்ற நடவடிக்கைகள் வருங்கால அரசுகளால் தங்களுக்கு
பிடிக்காத சேனல்கள் மேல் இனி வரும் காலத்தில்
எடுக்கப்படுவதற்க்கு முன் உதாரணம் ஆகி விடும்
என்ற பதட்டம் எல்லோருக்கும் இருக்கிறது.

——————————–

இதற்கான எனது விளக்கம் –

நண்பர் கருத்து அவர்களே,

சட்டபூர்வமாகப் பேச வேண்டுமானால் –

– இந்த நிறுவனம் உண்மையில் “தடை” செய்யப்படவில்லை. ஏலத்தில் “போட்டியிடும் தகுதி” இதற்கு இல்லை என்பது தான் சட்டப்படியான நிலை.

– போட்டியிடும் தகுதி ஏன் இல்லாமல் போனது….? ஏலத்தில் கலந்து கொள்ள விரும்பும் நிறுவனங்கள்
உள்துறை அமைச்சகத்திலிருந்து “தடையில்லா சான்றிதழ்”
பெற வேண்டும்.

– கிரிமினல், மற்றும் அந்நியச் செலாவணி ஊழல்
வழக்கு சிபிஐ யால் விசாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது,
உள்துறை அமைச்சகம் எப்படி சான்றிதழ் கொடுக்கும்…?

– உங்கள் கவனத்திற்காக அடிப்படையான ஒரு
சட்ட விதியைச் சொல்கிறேன்…..

வழக்கு விசாரணையில் இருக்கும் ஒருவருக்கு –

மற்ற எல்லா தகுதிகளும் இருந்தாலும் –
பாஸ்போர்ட் வழங்கப்பட மாட்டாது.

அரசுப்பணிக்கான தேர்வுகளில் வெற்றிகரமாக
தேர்வாகி இருந்தாலும் கூட –
அரசு வேலை கொடுக்கப்பட மாட்டாது.

ஏற்கெனவே அரசு வேலையில் இருந்தால் –
மற்ற தகுதிகளும், சீனியாரிடியும் இருந்தாலும் கூட –
பதவி உயர்வு கொடுக்கப்பட மாட்டாது.

” வெறும் விசாரணை அளவில் தானே இருக்கிறது –
என் மீது தான் எந்த தண்டனையும் விதிக்கப்படவில்லையே
எனக்குரிய சலுகைகள் ஏன் மறுக்கபடுகின்றன..?”
என்று – அந்த மனிதர் கேட்க முடியாது.. !
\

அவர் மீது நடந்து கொண்டிருக்கும் விசாரணை முடிந்து
சட்டப்படி அவர்மீது தவறேதும் இல்லை என்று முடிவாகும் வரை
அவர் காத்திருந்தேயாக வேண்டும்….!
சட்ட விதிகள் அப்படி.

மற்ற தொலைக்காட்சிகளில் மீதுள்ள குற்றச்சாட்டுகள் பற்றி
கூறி இருக்கிறீர்கள்… அவை எந்தெந்த தொலைக்காட்சிகள்…?
அவற்றின் மீது என்ன வகையான குற்றச்சாட்டுகள் …
விவரங்கள் எதாவது உங்களுக்கு தெரியுமா …?

யாராவது சொன்னார்களா…?
அல்லது அவர்களாவது வெளியிட்டார்களா…?
இவர்கள் மீதுள்ளது போல் – அவையும் தேச பாதுகாப்பு விதிகள்
சம்பந்தப்பட்டவை தானா …?

அப்படி இருந்தால், இந்த விவரங்களை வெளியிட்டு –
எங்களை மட்டும் ஏன் வித்தியாசமாக நடத்துகிறீர்கள் என்று
கேட்கலாமே ...நீதிமன்றத்திலும் அவற்றை முன் வைக்கலாமே…! அதைச்செய்யாமல், ஏன் பொத்தாம் பொதுவாக பேசுகிறார்கள்…?

– முன்னாள் அமைச்சர் தனது சொந்த பயன்பாட்டிற்கு
என்று சொல்லி வாங்கிய தொலைதொடர்பு வசதியிலிருந்து –
சட்டவிரோதமாக, கள்ளத்தனமாக 764 கனெக்ஷன்கள்
கொடுக்கப்பட்டு, 3 வருடங்கள் தொடர்ச்சியாக
சன் தொலைக்காட்சிக்கு பயன்படுத்தப்பட்டது என்பது
அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளில் ஒன்று.
அதற்கான அத்தாட்சி – இப்போதும்
அடையாறு போட் ரோடிலிருந்து – அண்ணாசாலை வரை
4 அடி ஆழத்தில் புதைந்து -எப்போது வேண்டுமானாலும்
சாட்சி சொல்ல தயாராக காத்துக்கொண்டிருக்கிறது.

அவர்கள் மீது இருக்கும் குற்றச்சாட்டு – சட்டவிரோதமாக
கேபிள் தொடர்புகள் பயன்படுத்தப்பட்டு அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியது, அந்நியச்செலாவணி மீறல்கள் ….etc.

இன்று அவர்களுக்காக வக்காலத்து வாங்கும் தலைவர்கள் –
அந்த வழக்கு, விசாரணை, சாட்சியங்கள் எல்லாம் பொய்
என்று சொல்கிறார்களா …?

இதுவே மிக மிக தாமதம்….
எத்தனை வருடங்கள் விசாரணை இழுத்தடிக்கப்பட்டு
இருக்கின்றன … ?
இந்த மூடிமறைப்பிற்கு, இழுத்தடிப்பிற்கு –
யார் காரணம்..? எது காரணம்….?
கூட்டணி அரசியலா…? பணபலமா…?
அமைச்சரவை செல்வாக்கா…?

கிட்டத்தட்ட ஆழக்குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்ட
ஒரு குற்றத்தை வெளிப்படுத்தியமைக்காக –
உண்மையில் ஜனநாயகத்திலும்,
சட்டத்தின் மாண்பிலும் நம்பிக்கையுள்ளவர்கள்
எல்லாரும் அந்த ஆடிட்டருக்கு நன்றி சொல்ல
கடமைப்பட்டிருக்கிறார்கள்….!

நீங்கள் சொல்லும் பதட்டம் – பொதுமக்கள் யாருக்கும் இல்லை…
“ஜால்ரா” தலைவர்களுக்கும்
“வேண்டப்பட்ட” வர்களுக்கும் மட்டுமே..!

உண்மையில் நீங்கள் கவலைப்படவேண்டியது –
இவ்வளவு பெரிய மோசடி விவகாரம்
இத்தனை வருடங்கள் அரசியல் செல்வாக்காலும்,பணபலத்தாலும்,
இப்படி மூடி மறைக்கப்பட்டு விட்டதே என்பதற்காகத் தான்.

இப்போதும் ஒன்றும் குடிமூழ்கி விடவில்லை.
நீங்கள் பதட்டப்பட வேண்டியதே இல்லை –
அவர்களிடம் – செலவழிக்க – கோடி கோடியாக பணம் இருக்கிறது…. மணலைக் கயிறாகத் திரிக்கக்கூடிய வக்கீல்கள் இருக்கிறார்கள்…
சட்டத்தில் நிறைய ஓட்டைகள் இருக்கின்றன.
அந்த ஓட்டைகள் நன்கு பயன்படுத்தப்பட்டு –
விரைவிலேயே அவர்கள் வெற்றிகரமாக வெளியே வலம்
வருவதைப் பார்க்கலாம்…!!!

—————

பின் குறிப்பு – ஆமாம் – இத்தனை நாட்களாக
இந்த வலைத்தள பின்னூட்டங்களில் உங்களைப் பார்த்ததாகத்
தெரியவில்லையே. இங்கு எழுதப்படும் வேறு எந்த இடுகைகளும்
இதுவரை உங்கள் கவனத்தை ஈர்த்ததில்லையா …!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to “சன்” லைசென்ஸ் – பதட்டம் யாருக்கு….?

 1. Paramasivam சொல்கிறார்:

  உங்கள் விளக்கம் அருமை. பாலிமர் டிவி என ஒன்று உள்ளது. அதனை ஒரு வருட காலம் சன் டிவி முடக்கியது. ஜெயா பிளஸ் க்கு இரு வருடங்கள் லைசென்ஸ் மறுக்கப்பட்டது.கேபிள் ஆபரேட்டர்கள் பட்ட துயரங்கள் நாம் அறிந்ததே. இத்தனைக்கும் பின் வைகோ அவர்கள் சன் டிவி யை ஆதரித்து பேசுகிறார் எனில், என்ன சொல்வது? எனது மதிப்பில் (பலரது மதிப்பில்) வெகு கீழே சென்று விட்டார். உங்கள் பின் குறிப்பு ரசிக்க வைத்தது.

 2. நவீன் சொல்கிறார்:

  அருமையான விளக்கம். சன் டிவி நிறுவனம் கருணாநிதி ஆட்சியில் இருந்த போது போட்ட ஆட்டம் இருக்கிறதே… அப்பப்பப்பா… அனைத்து நடிகர்களையும் மிரட்டி அவர்களின் படத்தை வாங்கி. 2 நிமிடத்திற்கு ஒரு முறை தன் அனைத்து சேனல்களிலும் ஓயாமல் விளம்பரம் செய்து மக்களை வாட்டி வதைத்து இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி அராஜகம் செய்த நிறுவனத்தை தான் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகள் ஆதரிக்கிறார்கள்..

 3. today.and.me சொல்கிறார்:

  கா.மை.ஜி
  //இப்போதும் ஒன்றும் குடிமூழ்கி விடவில்லை.
  நீங்கள் பதட்டப்பட வேண்டியதே இல்லை –
  அவர்களிடம் – செலவழிக்க – கோடி கோடியாக பணம் இருக்கிறது…. மணலைக் கயிறாகத் திரிக்கக்கூடிய வக்கீல்கள் இருக்கிறார்கள்…
  சட்டத்தில் நிறைய ஓட்டைகள் இருக்கின்றன.
  அந்த ஓட்டைகள் நன்கு பயன்படுத்தப்பட்டு –// ஏலத்தில் கலந்துகொள்ளலாம் என்று அறிவிப்பு வந்தாகிவிட்டது.

  மிஸ்டர் karutthu கந்தசாமி மனம் மகிழலாம்.

  ஸ்வீட்டை வாங்கித்தந்தவர்: இ்ந்துத்துவ சக்தி என்று சென்றவாரம் தன்னாலேயே வசைபாடப்பட்ட இன்றைய பிரதமரை இன்றுநேரில் சென்று சந்தித்த கிரேக்க வரலாற்றை எழுதிய மகா….. சட்டமேதை…..கட்சியை எதற்காகவும் அடகு வைக்காத மானமிகு….திரு….

  ச்சை… இந்தப் பொழப்புக்கு…..
  (நீங்களா எதையும் கற்பனை பண்ணிக்காதீங்க)
  அவர் திரும்பவும் திமுகவுக்கே போயிடலாம்ன்னு சொல்லவந்தேன்….
  ஆனா பாஜவுககும் தமிழ்நாட்டுக்கும் தரகு வேலை பார்க்கமுடியாது.

 4. paamaran சொல்கிறார்:

  இதற்கு மேல் விளக்கம் தேவை படாது நண்பர் கருத்து அவர்களுக்கு ! அய்யா — ஒரு சந்தேகம் :—- தமிழக அரசு எடுக்கும் முடிவுகள் குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன், தி.மு.க., தலைமைக்கு தெரிவது, அ.தி.மு.க., தலைமைக்கு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை தடுக்க, தி.மு.க.,விற்கு தகவல் தெரிவிப்பது யார் என, ரகசிய விசாரணையை துவக்கி உள்ளது.—- இது தினமலர் செய்தி !! —- மோடிஜிக்கு வேலை பார்த்த ” யூத் மீடியா டீம் ” குழு இப்போது கலைஞர் அவர்களுக்கு வேலை பார்க்கிறார்களோ ? — அவர்களின் வழிகாட்டுதல் படி புதிய பொலிவுடன் இணையதளம் — போன்ற ” ஹைடெக் ” சமாச்சாரங்கள் மற்றும் சமிபத்திய தேர்தலை முன்னிறுத்தி வந்த இந்த ” மதுவிலக்கு ” அறிவிப்பு போன்றவை ?—– தினமலர் செய்தி மற்றும் தற்போதைய தி.மு.க. நடவடிக்கைகள் [ ஸ்டாலினின் பொது கூட்டங்கள் ] பற்றி தங்களின் கருத்து ?

 5. Rajeshmugilan சொல்கிறார்:

  ரொம்ப அருமையான விளக்கம்! மாறன் சகோதரர்கள் மத்திய மாநில அரசில் செல்வாக்கு பெற்றிருந்த போது செய்த அராஜகங்கள் கணக்கில் அடங்காது! பண்பலை மட்டும் அல்ல சன் தொலைக்காட்சி உரிமங்களும் முடக்கப்பட வேண்டும்!

 6. Pingback: “சன்” லைசென்ஸ் – பதட்டம் யாருக்கு….? | Classic Tamil

 7. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியை பிரதமர் ஆக்க செய்யப்பட்ட புரோமோஷன்களைப்போல அப்படியே ஸ்டாலினுக்குச் செய்யப்படுகின்றன. முன்பு மோடிக்கு லண்டனின் உள்ள பிரபல பி.ஆர் ஏஜென்ஸியை அமர்த்தினார்கள். அதே ஏஜென்ஸியைச் சேர்ந்த சிலர் உதவியுடன் தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலினை ஆக்கும் அசைன்மென்டை செய்வதாகச் சொல்கிறார்கள் இந்த ‘டிஜிட்டல் ட்வின்ஸ் டெர்மினல்கள்’ என்று கூறப்படும் மகேஷ் பொய்யா மொழி மற்றும் சபரீசன்ஆகிய இருவரும்…
  ஜூனியர் விகடன் ..

 8. KuMaR சொல்கிறார்:

  தக்க பதிலடி கொடுத்துவிட்டீர்கள் அய்யா…

 9. தங்க.ராஜேந்திரன் சொல்கிறார்:

  சரியான பதிவு அய்யா!

 10. karuththu சொல்கிறார்:

  தங்கள் விளக்கத்திற்க்கு நன்றி. என் விளக்கம்.

  1. நான் தடை என்று குறிப்பிடவில்லை. தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்ததுதான் விவகாரம்.
  2. திரு கலாநிதி மாறன் அவர்கள், உள்துறை அமைச்சர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் மற்ற தொலைக்காட்சிகளின் மீதுள்ள குற்றச்சாட்டுகள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
  3. நீங்கள் எழுதியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் இன்னும் நிரூபிக்கபடவில்லை. வழக்கு நிலுவையில் உள்ளது. நான் ஏற்கனவே சொன்னபடி அவர்கள் குற்றம் செய்திருப்பின் தண்டனை பெற வேண்டியது நியாயமே.
  4. ஆடிட்டர், நன்றி செலுத்தபட வேண்டியவர் என நீங்கள் கருதினால் தாராளமாக செலுத்துங்கள்.
  5. அவர்கள் அவர்களின் செல்வாக்கு மூலமாக வெளியில் வந்தால் எனக்கென்ன வராவிட்டால் எனக்கென்ன. நான் எழுதியதை நீங்கள் சன் டிவியும் ஆளும் கட்சியும் என்ற கோணத்தில் பார்ப்பதால் இந்த பிரச்சினை வருகிறது என நினைக்கின்றேன். இங்கு சன் டிவி அல்ல பிரச்சினை. சான்றிதழ் தர மறுப்பதுதான் பிரச்சினை.இது முன்பே நடந்திருக்கிறது எனச்சொன்னால் அதுவும் தவறுதான். இன்று ஆடிட்டர் செய்ததை அன்று சன் டி.வி செய்தது என சொன்னால் அதுவும் தவறுதான். சன் டி.வி இன்று இதை வெளியில் சொன்னதால் வெளியே தெரிந்தது. இம்மாதிரியான அதிகார துஷ்பிரயோகங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதே என்னுடைய கருத்தின் நோக்கம் என்பதை புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன்.
  பேஸ்புக்கில் உங்கள் பதிவின் லிங்க் ஒருவர் கொடுத்திருந்தார். அதன் மூலம் உங்கள் தளத்திற்க்கு வந்தேன் கருத்தை பதிவு செய்தேன். சுற்றுபயணத்தில் இருந்ததால் உங்களுடைய பதில் பதிவை பார்க்க முடியவில்லை. இனி உங்கள் மற்ற‌ பதிவுகளையும் படித்து என் கருத்தை (தேவைப்பட்டால்)‌பதிகின்றேன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.