( பகுதி- 2 ) MSV- இளையராஜா நிகழ்ச்சி….

raja-1

உடுமலை நாராயண கவி கையால் எம்.எஸ்.வி. அவர்கள்
அறை வாங்கியது ஏன்…?

உடுமலை நாராயண கவி அந்த காலத்திய டாப் திரைக்கவிஞர்.
“உலகே மாயம்” பாடலை எம்.எஸ்.வி போட்டுக்
காட்டியதும் அவர் கோபம் அடைந்ததன் காரணம்….

பாடலைப் பாடியவர் தெலுங்கரான “கண்டசாலா”.
மிகவும் நுணுக்கமாக எழுதப்பட்ட அந்த தத்துவ பாடல்
உச்சரிப்பில் பயங்கரமாக சிதைக்கப்பட்டதனால்
ஏற்பட்ட கோபம் கவிக்கு …!

கண்டசாலா பாடல் முழுவதையும் பல இடங்களில்
சிதைத்திருந்ததோடு,
துவக்கத்தையே –
” உல்கே மாயம் ” “வால்வே மாயம் “
என்று தான் துவங்கி இருந்தார்.

மீண்டும் பாடலை முழுவதும் ரிக்கார்டிங் செய்த விஸ்வநாதன்
அவர்கள் அன்று முதலே பாடல் உச்சரிப்பில் அதிக கவனம்
செலுத்தலானார்….!!!

“மாலைப் பொழுதின் மயக்கத்திலே” பாடல் முடிந்த பின்
அந்தப்பாடலின் வரி வரியாக அந்த அனுபவத்தை விவரித்த
இளையராஜா –
தனது 14-வது வயதில் மனதில் புகுந்துகொண்ட அந்த பாடலின்
ராக நுணுக்கங்களும், இசைக்கருவிகளைப் பற்றிய விவரங்களும் –
தெரிய வந்தது தனது 27வது வயதில் தான் என்றார்.

தன்னுடைய இசை ஈர்ப்பு / வளர்ச்சிக்கு இன்னொரு முக்கிய
காரணமாக தன் அண்ணன் பாவலர் வரதராசனை நினைவு கூர்ந்து
நெகிழ்ந்தார் ராஜா.

pavalar varadarajan

அவர்களின் சிறு வயதில், ” பாவலர் பிரதர்ஸ் ” என்கிற பெயரில், சகோதரர்கள் இணைந்து – தெற்கே ஊர் ஊராக சென்று கம்யூனிஸ்ட் இயக்க பாடல்களை பாடினராம்.

எம்.எஸ்.வி.யின் ‘ஹிட்” பாடல்களின் ட்யூன்களை எல்லாம்
பாவலர் வரதராஜன் கம்யூனிஸ்ட் கட்சிக்கான பிரச்சாரப்
பாடல்களாக நொடியில் மாற்றி இயற்றி – இவர்கள் மேடைதோறும்
பாடுவார்களாம்.

அத்தகைய ஒரு பாடலை மேடை அதிர, அரங்கம் முழுவதும் பலத்த கரவொலி எழுப்ப ராஜா ஆர்கெஸ்டிராவுடன்
முழுவதுமாக பாடிக்காட்டினார்.

MSV-யின் “விஸ்வநாதன் – வேலை வேண்டும்” பாடலை மாற்றி –

” சுப்ரமணியம் – சோறு வேண்டும் “
(அப்போதைய தமிழக உணவு அமைச்சர்
திரு சி.சுப்ரமணியம் அவர்கள்…! )

என்று முழங்கினார்கள். கேரளாவின் முதலமைச்சராக
கம்யூனிஸ்ட் கட்சியின் நம்பூதிரிபாடு அவர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டபோது –
தன் வெற்றிக்கு முக்கிய காரணம் கேரள சட்டசபை
தேர்தலில் “பாவலர் வரதராஜன் குழுவினர் பாட்டுப்பாடி
பிரச்சாரம் செய்ததே” என்றாராம்.

இளம் வயதில், இந்த மாதிரி – வருடத்திற்கு குறைந்தபட்சம்
300 நாட்கள் ஊர் ஊராகச் சென்று கம்யூனிச இயக்கப் பாடல்களை
பாடினோம் என்றார் இளையராஜா…!

அடுத்து ராஜா அவர்களின் தேர்வில் –

வான் மீதிலே இன்பத்தேன் மாரி –

தென்றல் உறங்கிய போதும் –

இந்த மாதிரி பாடல்களை, நிகழ்ச்சிகளை கேட்பதெல்லாம்
இதோடு சரி – இனிமேல் இத்தகைய பாடல்களை இசையமைக்க
யாருமில்லை என்று வருந்திச் சொன்னார் ராஜா.

பாடல்கள் என்றால் ஒன்று – எதாவதொரு கருத்தைச்
சொல்ல வேண்டும் அல்லது உணர்வுகளை வெளிப்படுத்துவதாக
இருக்க வேண்டும். இன்றைய இளம் இசையமைப்பாளர்கள் –
யந்திரங்களைக் கொண்டு ( கம்ப்யூட்டர் இசை ) இசையமைப்பதை
நிறுத்தி விட்டு, இசைக்கருவிகளை பயன்படுத்த வேண்டும்.
உயிர்ப்புடனான பாடல்களை உருவாக்க வேண்டும் என்று
தன் விருப்பத்தை ஆதங்கத்துடன் தெரிவித்தார்….

அடுத்ததாக பாடல்களை காப்பி அடிப்பது குறித்து பேச்சு வந்தது. inspiration மற்றும் imitation -க்கு இடையேயுள்ள
வேறுபாடுகளை மிக அழகாக விளக்கினார் ராஜா.
அவர் உதாரணத்திற்கு எடுத்துக் கொண்ட பாடல்கள் –

சலீல் சவுத்திரி அவர்களின் இந்தி மொழிப்பாடல் –
ஆஜாரே – ( மதுமதி – முதலில் படத்திலிருந்து –
பிறகு லதா – என் விருப்பமாக …. )

இதை பாலிருக்கும், பழமிருக்கும் பாடலின் துவக்கத்துடன்
ஒப்பிட்டு திரும்ப திரும்ப பாடிக்காட்டினார்.

ஆ ஜா ரே – பா லி ரு க் கு ம் ……
தே ரே – பழமிருக்கும் ….
பின்னர் முற்றிலும் மாறி விடும்….

இது தான் inspiration மற்றும் imitation -க்கான
வித்தியாசம் என்றார்.

பாலிருக்கும் – பழமிருக்கும் …. பசி இருக்காது…

மீதியை அடுத்த தவணையில் தொடர்கிறேன் ….
என்று சொல்லும் அதே நேரத்தில் –
நண்பர் “சந்திரமௌலி” அவர்கள் –
முதல் பகுதி – பின்னூட்டத்தில் –
இசையமைப்பாளர் ஜி.ராமனாதன் அவர்களைப் பற்றி
கூறினார். ஜி.ராமனாதன் அவர்களின் இசைக்கு
நானும் அடிமை.

அவருடைய மற்றும் என்னுடைய விருப்பமாக –
மறைந்த இசைமேதை ஜி.ராமனாதன் அவர்களின்
ஒரு பாடல் கீழே –

நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே –

(தொடரும் – பகுதி 3-ல் )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ( பகுதி- 2 ) MSV- இளையராஜா நிகழ்ச்சி….

 1. Pingback: ( பகுதி- 2 ) MSV- இளையராஜா நிகழ்ச்சி…. | Classic Tamil

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  பழைய பாடல்களுடன் கூடிய இந்த இடுகைத் தொடுப்பு
  வித்தியாசமான ஒன்று.
  அரசியல் இடுகைகளைப் போல் விருவிருப்பானது அல்ல.

  எனவே இதை தொடராக எழுதினால் எவ்வளவு பேர்
  ரசிப்பார்கள்…. நமக்கு பிடித்தது எல்லாருக்கும்
  பிடிக்குமா…விரிவாக எழுதுவதா அல்லது சுருக்கமாக
  எழுதி விட்டு போய் விடலாமா என்றெல்லாம்
  யோசித்தேன்.

  ஆனால், பின்னூட்டங்கள் அதிகம் இல்லையே தவிர,
  இதற்கு வந்திருக்கும் “ஹிட்ஸ்” எனக்கு பிரமிப்பைக்
  கொடுக்கிறது. என்னைப் போன்ற ரசனை உள்ள நண்பர்கள்
  நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.

  நன்றி நண்பர்களே…!

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • மணிச்சிரல் சொல்கிறார்:

   பின் தொடரும் மனிதர்கள் இருக்கும் போது பின்னூட்டத்தை எதற்கு எண்ணிக்(சிந்தித்துக்) கொண்டிருக்க வேண்டும் ஐய்யா!. உணர்ந்தவரையில், படைப்பவர்களுக்கு லைக்கும் ஷேரும் வேகத்தடைகள் தான்.

   இந்த வகையிலான பதிவுகள் இளைப்பாறுவதற்கு சமம் என்று நினைக்கிறேன். நன்றாக இருக்கிறது. இளையராசா பகிர்ந்த தகவல்கள் முழுமையாக அறிய முடியவில்லை என்ற ஏக்கமும் இருக்கிறது. ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் (ஒருவேளை) ஒளிபரப்பினாலும், கத்தரிப்பூ பூத்து, அதை வைத்து அவர்கள் வசதிக்குத் தான் தோரணமாக்குவார்கள்.
   சிறு வேண்டுகோள், அப்பப்ப கொஞ்சம் இளைப்பாறுங்கள், இளைப்பாற்றுங்கள்.
   நன்றி.

 3. gopalasamy சொல்கிறார்:

  I hope, like me, so many people follow this with interest. so , pl continue.

 4. Ganpat சொல்கிறார்:

  மிக மிக மிக மிக சுவாரசியமாக போகிறது.உங்களால் முடிந்தவரை விவரியுங்கள்.மீண்டும் சொல்கிறேன்.உங்கள் உழைப்பு ஆர்வம் சுறுசுறுப்பு வியக்கவைக்கும் ஒன்று! வணக்கம் நன்றிகள் கோடி

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  ஒரே மாதிரி ரசனை உடைய நண்பர்கள்
  நிறைய பேர் இருப்பதைக் காண மகிழ்ச்சியாக
  இருக்கிறது.

  நன்றி –
  நண்பர்கள் -மணிச்சிரல், கோபால்சாமி மற்றும் கண்பத்.

  – வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 6. p.ramasandran சொல்கிறார்:

  பழைய பாடல்களைப் போல் அவை பற்றிய கருத்துகளையும் கேட்பதே சுகமோ, சுகம்தான். உங்களுக்கு நன்றி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.