மஹாத்மாவை கொன்றவரையே விட்டு விட்டார்களே – பிறகு இவர்களை விடுவதில் என்ன தவறு … ?! சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வழக்கறிஞர் வாதம்….!!!

.

.

ராஜீவ் காந்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டனை குறைப்பு செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதாக தமிழக அரசு
பிறப்பித்த உத்திரவு செல்லாது
என்று சொல்லி மத்திய அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதி மன்றத்தின் அரசியல் சாசன பிரிவு முன் விசாரணையில் இருப்பது தெரிந்த விஷயம்….

7 பேரையும் விடுதலை செய்ய மாநில அரசு பிறப்பித்த உத்திரவிற்கு எதிராக முந்தைய காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்து இடைக்கால தடையுத்தரவையும் பெற்றது.

தற்போது மத்தியில் ஆட்சி மாறிவிட்ட நிலையில், அந்த வழக்கை
பாஜக அரசு நடத்தி வருகிறது. இந்த ஆட்சி காங்கிரஸை விடவும் தீவிரமாக – விடுதலைக்கு எதிராக – வாதாடி வருகிறது.

மிக முக்கியமான அரசியல் சாசன நுணுக்கங்களைப் பற்றி
விவாதங்கள் நடந்து வரும் நிலையில், நீதிமன்றத்தில் அன்றாடம்
நடக்கும் வாதங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக
இருக்கின்றன.

துரதிருஷ்டவசமாக, எந்த நாளிதழுக்கும், தொலைக்காட்சிக்கும் –
இதில் எந்தவித ஈடுபாடும் இல்லை. வழக்கு விசாரணை
டெல்லியில் நடைபெறுவதால், நமக்கு அன்றாட வாதங்களை
விவரமாகத் தெரிந்து கொள்ள வேறு வாய்ப்புகளும் இல்லை.

முன்பெல்லாம் முக்கியமான வழக்குகள் நீதிமன்றங்களுக்கு
வரும்போது, குறுக்கு விசாரணைகள், இரு தரப்பிலும் வக்கீல்கள்
எடுத்து வைக்கும் விவரமான வாதங்கள் – ஆகிய அனைத்தும்
செய்தித்தாள்களில் விவரமாக வரும்.

இப்போதோ – செய்தித்தாள்களும் சரி, தொலைக்காட்சிகளும் சரி –
பரபரப்பு செய்திகளுக்காக அலைகின்றன. மக்களுக்கு போய்ச்சேர
வேண்டிய செய்திகளின் முக்கியத்துவம் பற்றி இவற்றிற்கு
கவலையே இல்லை.

யாரையாவது தூக்கில் போட்டால் தான்
இவர்களுக்கு நியூஸ்….!
இல்லையென்றால், போகிற போக்கில் சில வரிச்செய்திகளாகச் சொல்லி விட்டு போய்க்கொண்டே இருக்கும்.
பரபரப்பு – பரபரப்பு – அவர்களுக்குத் தேவை
பரபரப்பான செய்திகள் மட்டுமே…

மீடியாக்களின் லட்சணம் இப்படி இருப்பதால் – தேடித்தேடி தான் நமக்கு தேவையான தகவல்களை தொகுத்துப் பார்க்க வேண்டி
இருக்கிறது.

தமிழக அரசின் சார்பாக இந்த வழக்கில் ஆஜராகி,
வாதாடி வரும் மூத்த வழக்குரைஞர் ராகேஷ் த்விவேதி
மிக அற்புதமாக வாதங்களை முன்னெடுத்து வைத்திருக்கிறார்.

rakesh dwiwedi

கடந்த சில வருடங்களில், அரசு தரப்பு வக்கீல் ஒருவர் இவ்வளவு
ஆணித்தரமான, மிகப் பொருத்தமான வாதங்களை முன்வைத்து
விவாதித்து பார்த்ததாக என் நினைவுக்கு வரவில்லை….!

“இவர்கள் மிக மோசமான, குற்றங்களில் ஈடுபட்டவர்கள்.
இந்த நாட்டின் முன்னாள் பிரதமரை கொலை செய்ததற்காக
தண்டிக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு கருணையே காட்டக்கூடாது”

– என்று மத்திய அரசு வாதாடுகிற நிலையில்,
மிக அருமையான வாதம் ஒன்றை முன்வைத்தார் த்விவேதி –

மஹாத்மா காந்தியை கொன்றவர்களையே விடுதலை
செய்த அரசுக்கு இதைக்கூற தகுதியே இல்லை

என்று ஒரே போடாக போட்டார்….!!!

” இந்த நாட்டின் தந்தையாக கருதப்பட்ட தேசப்பிதா மஹாத்மா காந்தியை கொன்றவரையே – 16 ஆண்டு சிறை வாசத்திற்குப்பிறகு இந்த அரசு விடுதலை செய்ததே….

( நேரடியாக சுட்ட நாதுராம் கோட்சே தூக்கில் போடப்பட்டாலும்,
அவரது சகோதரர் – கோபால் கோட்சே, கொலைச்சதியில் ஈடுபட்ட
குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் 16 வருட
சிறைவாசத்திற்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார்….)

——————————————————

இந்த 3 பத்திகள் கோர்ட் வாதத்தின் பகுதி அல்ல –
என் கருத்து –

1965-ல் கோபால் கோட்சேயை விடுதலை செய்தது
அப்போதைய காங்கிரஸ் அரசு.
காந்திஜியை கொலை செய்த நாதுராம் கோட்சேவுக்கு சிலை
வைத்து கொண்டாட துடிக்கிறது இன்றைய பாஜக அரசு.

ஆனால், நேரடியாக ராஜீவ் கொலை வழக்கில் ஈடுபடாத
இந்த 7 பேரையும் விடுதலை செய்யக்கூடாது என்பதில் மட்டும்
துடியாய் துடிக்கின்றன இரண்டு கட்சிகளுமே…!!!

16 ஆண்டுக்கால சிறைத்தண்டனைக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட
கோபால் கோட்சே, ஜூலை, 2004-ம் ஆண்டில் கொடுத்த ஒரு வீடியோ பேட்டியை கீழே இணைத்திருக்கிறேன். கொலையில்
ஈடுபட்டதற்கான குற்ற உணர்ச்சியோ, வருத்தமோ கொஞ்சம் கூட
அவரிடம் இல்லை என்பதை அதில் காணலாம்.

மிகவும் உல்லாசமாக, சிரித்து மகிழ்ந்து கொண்டே – தாங்கள் எவ்வாறு காந்திஜியை சுட்டுக் கொன்றோம் என்பதை விவரிக்கிறார் கோபால் கோட்சே.
இவரை விடுதலை செய்யலாமாம் –
ஆனால், தாங்கள் என்ன செய்கிறோம் என்பதையே உணராமல்
சில தவறுகளுக்கு காரணமாக இருந்து விட்டவர்களை –
24 ஆண்டுக்கால தனிமைச்சிறைக்கு பின்னரும் விடுவிக்கக்கூடாது-
என்பது காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு ஆட்சிகளும்
சேர்ந்து வாதிக்கும் ஒரு விஷயம் என்பது கவனிக்கத்தக்கது…
..

கோபால் கோட்சே வீடியோ –

———————————————————-
வாதம் தொடர்கிறது –

காந்திஜியை விட பெரிய மனிதர் இந்த நாட்டில்
இருக்கிறாரா …? காந்திஜியை கொன்றவரின் மீதே இரக்கம்
காட்டலாம் என்றால் – இவர்கள் மட்டும்
அப்படி என்ன பாவம் செய்து விட்டார்கள்….?

இவர்கள் ( 7பேர் ) யாருமே, நேரடியாக குற்றச்செயலில் ஈடுபடவில்லை.
ஏற்கெனவே 24 ஆண்டுகளை தனிமைச் சிறையில் கழித்து
விட்டனர். 14 ஆண்டுகள் முடிந்த பிறகு எப்போது வேண்டுமானாலும்,
அவர்களது தண்டனைக்காலம் மறுபரிசீலனை செய்யப்படலாம்…

தண்டனை பெற்று நீண்ட காலமாக சிறையில் இருப்பவர்களின் –
வயது, உடல்நிலை, அவர்களின் விடுதலை பற்றிய பொதுமக்களின்
எதிர்பார்ப்பு – இவற்றையும் அவசியம் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு மாநில சட்டமன்றத்தில் –
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து,
ஒருமனதாக எடுக்கும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற
வேண்டியது அந்த மாநில அரசின் தலையாய கடமை.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளின் படி –
விடுவிக்கும் முன்னர், மத்திய அரசுடன் கலந்தாலோசனை
செய்ய வேண்டும் என்று தான் சட்டவிதிகள் கூறுகின்றன.
ஆலோசனை செய்வது வேறு –
அனுமதி பெற வேண்டும் என்பது வேறு.
மத்திய அரசை கலந்தாலோசித்தால் போதுமானது –
மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்
என்பது அவசியமில்லை…!!!

concerned provions in the CrPC had been
knowingly framed using the term “consultation”
and not “concurrence” –

அவர்கள் நிலையை மறுபரிசீலனையே செய்யக்கூடாது என்பது –
( article 21 of constitution of India – right to live )
அரசியல் சட்டம் 21-ஐ -அப்பட்டமாக மீறும் விஷயம்.
அதைச்செய்ய நீதிமன்றத்திற்கோ, மத்திய அரசுக்கோ –
அதிகாரமோ, உரிமையோ இல்லை.

மாநில அரசு – மத்திய அரசின் அடிமை அல்ல –
மத்திய அரசு – மாநில அரசுகளின் எஜமானும் அல்ல.
இரண்டுமே அதனதன் அதிகார எல்லைக்குள்
சுதந்திரமாக இயங்கக்கூடியவை.

இரண்டுக்குமான அதிகாரங்களையும், உறவுமுறைகளையும்
அரசியல் சட்டம் தெளிவாகவே பிரித்தளிக்கிறது….!!!

தண்டனையை விதித்தவுடன் நீதிமன்றத்தின் அதிகார எல்லை
முடிவடைந்து விடுகிறது.

உரிய நேரத்தில், அவர்களை தொடர்ந்து
சிறையில் வைப்பது – அல்லது விடுதலை செய்வது –
என்பது சிறைகளை நிர்வாகம் செய்யும் மாநில அரசுகளின் உரிமை.
அரசியல் சட்டம் கொடுத்திருக்கும் இந்த உரிமையை
மத்திய அரசோ,
நீதிமன்றங்களோ –
பறித்துவிட முனையக்கூடாது.

இடுகை நீண்டு விட்டது – நாளை தொடர்வோம்…

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to மஹாத்மாவை கொன்றவரையே விட்டு விட்டார்களே – பிறகு இவர்களை விடுவதில் என்ன தவறு … ?! சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வழக்கறிஞர் வாதம்….!!!

 1. Surya சொல்கிறார்:

  வாதம் சரியே.

  ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இதுவரை முக்கிய குற்றவாலிஆகா தண்டனைக்கு யாரும் உட்படுத்தவில்லை. நேரடியாக ராஜீவ் கொலை வழக்கில் ஈடுபடாத குற்றவாலி மட்டுமே மாட்டி விட பட்டு இருக்கீறார்கள். யாரும் பெரிய தலை மாட்டாத பொழுது, இருக்கிறவர்களுக்கு (பெரிய) தண்டனை குடுக்க பட்டு இருக்கிறது.

  இன்னொரு வாதம் – ராஜீவ் காந்தி வழக்கில் மாட்டியவர்கள் தீவிரவாதிகள். கோபால் கோட்சே-வை அப்படி காட்டபடவில்லை.

  மொத்தத்தில் பிஜேபி-யோ காங்கிரஸ்-ஒ விடுதலை-க்கு உதவ மாட்டார்கள்!

 2. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  நீங்கள் சொல்வது சரியே. கோட்சேக்கள் அந்தச் செயலை justify பண்ணுகிறார்கள். அதனால் அவர்கள் வருந்தவில்லை. ‘நள்ளிரவில் சுதந்திரம்’ என்ற புத்தகத்தைப் படித்தால், அப்போது நடந்தது என்ன என்பது தெளிவாகத் தெரியும். ஒரு காயினுக்கு இரு பக்கங்கள் இருக்குமல்லவா?

  ராஜீவ் படுகொலையிலும் கொலையைச் செய்தவர்களுக்குக் காரணம் இருக்கலாம். (which they may justify).

  மக்களாகிய நாம் எதை எடுத்துக்கொள்வது? நம் ‘நீதிமன்றங்களின் தீர்ப்பைத்தான். எதனால் பா.ஜ.க எதிர்க்கிறது என்பதற்கும், அதிமுக எதனால் விடுதலை செய்தது என்பதற்கும் காரணம் தெரியாதவர்களல்லர் ;நம் மக்கள். இன்றைக்கு நமக்கு அதற்கான காரணம் தெரியவில்லை (பா.ஜ.கா). காத்திருப்போம்.

 3. paamaran சொல்கிறார்:

  Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran
  தயாநிதி மாறனை கைது செய்ய துடிப்பது ஏன்..? சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் கேள்வி
  CLICK HERE
  மாற்றம் செய்த நேரம்:8/12/2015 12:27:22 PM
  11:41:08Wednesday2015-08-12

  VIDEO : Indian Coast Guard pays tribute to officers of Dornier aircraft mishap

  டெல்லி: தயாநிதி மாறனை கைது செய்ய துடிப்பது ஏன் என சிபிஐக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தொலைபேசி வழக்கில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தகவல்களை கண்டறிய முடியாதா என கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், இது குறித்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ-க்கு நோட்டீஸ் அளித்துள்ளது.ஒரு கோடி ரூபாய் மோசடி என்று எந்த அடிப்படையில் கணக்கிட்டீர்கள் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

  மேலும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக கைது செய்ய முயற்சிப்பது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். உத்திரப்பிரதேசத்தில் ரூ.8 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் எத்தனை பேரை கைது செய்துள்ளீர்கள் என்றும் சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உத்திரப்பிரதேச மோசடி வழக்கில் எடுத்த கைது நடவடிக்கை என்ன என்று சரமாரியாக கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் கடந்த 2013-ல் எப்.ஐ.ஆர் பதிவு செய்த வழக்கில் 3 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் என்றும் நீதிபதிகள் வினவினர்……! அருமையான கேள்வி …. அற்புதமான சப்பைக்கட்டு …. ? அய்யா கா.மை. அவர்களே தங்களின் இந்த இடுக்கையின் ” தலைப்பு ” // மஹாத்மாவை கொன்றவரையே விட்டு விட்டார்களே – பிறகு இவர்களை விடுவதில் என்ன தவறு … ?! // அந்த நீதிபதி டி . எஸ் . தாகூர் மற்றும் மாறனின் கண்ணில் பட்டு விட போகிறது ….!! — பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் ….!!!

 4. Pingback: மஹாத்மாவை கொன்றவரையே விட்டு விட்டார்களே – பிறகு இவர்களை விடுவதில் என்ன தவறு … ?! சுப்ரீம் கோர்ட

 5. Ganpat சொல்கிறார்:

  வருமானவரி ரூ.765 பாக்கி என்று எனக்கு நோட்டீஸ் வந்தால் ரூ.7 கோடி பாக்கி வைத்திருப்பவர்களை என்ன செய்தீர்கள் என கேட்கலாமா? 🙂

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக கண்பத்,

   உங்கள் பொறுப்புணர்ச்சியை பாராட்டுகிறேன்….!!!
   அடுத்த இடுகையில் சட்ட அறிவை மேலும்
   பெருக்கிக் கொள்வதற்கான
   இன்னொரு சந்தர்ப்பம் வந்து கொண்டே இருக்கிறது.
   (இன்னும் 2 நிமிடங்களில் வந்து விடும்…)

   அதில் – யாரும் பின்னூட்டம் போட வேண்டாமென்று
   வேண்டிக் கொண்டிருந்தேன்.

   ஆனால் – தொழில் நுணுக்கம் தெரிந்தவர்கள்
   are exempted from that … !!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Ganpat சொல்கிறார்:

    நன்றி.நமது நாடு ஒரு சர்வதிகார குடியரசு எனபதை நானறிவேன் எனவே பின்னூட்டம் எதுவும் போடமாட்டேன்! 😉 🙂

 6. சந்திரசேகரன் சொல்கிறார்:

  மகாத்மாவை கொன்றவர்களையே விடுவித்து விட்டோம் என்ற வாதம் ராஜீவ் கொலையாளிகளுக்கு மட்டும் தானா இல்லை அறிந்தோ அறியாமலோ கொலை குற்றவாளிகள் ஆகிவிட்ட அரசியல் இன மொழி அடிப்படையில் ஆதாயம் இல்லாத அனாமதேயர்களுக்கும் பொருந்துமா என்று அரசும் விடுதலையை ஆதரிப்போரும் விளக்கினால் இது தொடர்பாக பேசலாம் அதுவரை இது ஒரு வாக்கு வங்கி அரசியல் நாடகம் மட்டுமே வசூல் இல்லை என்றால் வேறு நாடகம் திரையிடபடும்.

 7. Pingback: மஹாத்மாவை கொன்றவரையே விட்டு விட்டார்களே – பிறகு இவர்களை விடுவதில் என்ன தவறு … ?! சுப்ரீம் கோ

 8. Pingback: மஹாத்மாவை கொன்றவரையே விட்டு விட்டார்களே – பிறகு இவர்களை விடுவதில் என்ன தவறு … ?! சுப்ரீம் கோ

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.