மாறி மாறி சேற்றை வாரிப் பூசிக்கொண்ட – சுஷ்மா, ராகுல், சோனியா – ஜி க்கள்…. நாறியது பாராளுமன்றம் மட்டுமா…?

lalit with sushmaaji

rahul with soniaji

நேற்று முன் தினம் –
பாராளுமன்றம் குழாயடிச் சண்டை போடும் இடமா,
சேற்றை அள்ளி எரியும் சாக்கடையா,
அல்லது நாட்டு மக்களுக்கு சேவை புரியும் நல்லவர் கூடும் இடமா – ? என்றே தெரியாதபடிக்கு நாறியது. என் அனுபவத்தில் இவ்வளவு மட்டமான ஒரு பாராளுமன்ற நிகழ்வை நான் பார்த்ததில்லை. வேறு யாருமே பார்த்திருக்க முடியாது….

14 நாட்கள் – திருமதி சுஷ்மா ராஜினாமா செய்தால் தான்
விவாதம் நடக்க விடுவோம் என்று அடம் பிடித்த காங்கிரஸ் கட்சி,
அன்று மட்டும், எப்படி ராஜினாமா செய்யாத நிலையிலேயே, ஒத்தி வைப்பு தீர்மானத்தில் விவாதம் நடத்த ஒப்புக்கொண்டது…?

அனுபவமே இல்லாத கத்துக் குட்டிகளும், அரைவேக்காடுகளும் தான் அன்றைய தினம் காங்கிரஸ் கட்சியில் சார்பில் பேசினர்.
நன்றாக வாதம் செய்யக்கூடிய – திருவாளர்கள் ப.சிதம்பரம்,
கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி போன்ஏற யாரும் – இந்த
தடவை லோக் சபாவில் இல்லை. ஆனந்த் சர்மா, குலாம் நபி ஆசாத் போன்றவர்களோ – ராஜ்ய சபாவில் இருந்தார்கள்.

விளைவு –

சுஷ்மா அவர்களைப் பார்த்து கேட்க வேண்டிய எந்த சரியான கேள்விகளும் கேட்கப்படவில்லை …

கத்துக்குட்டித்தனமாக ராகுல் காந்தி லலித் மோடிக்கு சர்வீஸ்
செய்ததற்கு உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைத்தது என்பது
போன்ற சில கேள்விகளை அபத்தமான முறையில் நாடகத்தனமாக
கேட்டார்.

பதிலுக்கு சுஷ்மாவோ – முதலில் நீ போய் உங்கள் அப்பா ராஜீவ் காந்தி, போபோர்ஸ் விவகாரத்தில் கொட்டராச்சியிடம் எவ்வளவு பணம் வாங்கினார் என்று உங்கள் அம்மாவிடம் கேள் – என்று பதிலுக்கு சகதியை அள்ளி வீசினார்.

கடந்த பத்து ஆண்டுகளாக, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது
இருந்த அதே திருமதி சோனியா தானா இது என்று அதிசயப்படும்
அளவிற்கு, படு கேவலமாக நடந்து கொண்டார் அன்னை…! கையை நீட்டி, அசிங்கமான பாவனைகளுடன் அவர் உரக்கப் பேசியது பார்க்க சகிக்கவில்லை.

பாஜக தரப்பிலோ – அத்தனை தவறுகளையும் செய்த
திருமதி சுஷ்மாவை , கட்சி நலன் கருதி காப்பாற்ற -எந்த அளவிற்கு வேண்டுமானாலும் போகத்துணிந்து விட்டது வெளிப்படையாகவே தெரிந்தது.

திருமதி சுஷ்மாவிடம் கேட்க வேண்டியதும் –
அவர் ஒழுங்காக பதில் சொல்ல வேண்டியதுமான
பல கேள்விகள் – கேட்கப்படவும் இல்லை –
அவர் பதில் சொல்லவும் இல்லை….

பாராளுமன்றத்திற்கு வெளியே செய்தித்தாள்களிலும்,
தொலைக்காட்சிகளிலும் – கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக –
சுஷ்மாவுக்கு எதிராக பல கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன..
.

அவற்றில் சில –

– லலித் மோடியின் பாஸ்போர்ட் வழக்கில் அரசுக்கு எதிராக
டெல்லி நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தபோது, அதை எதிர்த்து
அரசு தரப்பில் ஏன் அப்பீல் செய்யவில்லை….?

– அப்பீல் செய்ய வேண்டாம் என்கிற முடிவை எடுத்தது யார்…?

– சுஷ்மாவின் கணவர் ஸ்வராஜ், கடந்த 22 ஆண்டுகளாக
லலித் மோடியிடம் பணி புரிகிறார். அவர் ஒரு வக்கீல்.
லலித் மோடி பாஸ்போர்ட் வழக்கில் என் கணவர் வாதாடவில்லை
என்பதை சௌகரியமாக கூறிய சுஷ்மா –

அவரது கணவர் லலித் மோடியிடம் எந்த வகையிலான பணியில்
ஈடுபட்டிருக்கிறார். அதற்கு ஈடாக அவருக்கு கிடைக்கும் ஊதியம்
எவ்வளவு ? – என்கிற விஷயங்களை எல்லாம் தொடவே இல்லை.

– சுஷ்மாவின் மகள் லலித் மோடி பாஸ்போர்ட் வழக்கில்
எட்டாவது துணை வழக்கறிஞராக இருந்தார் என்று சொன்னார் சுஷ்மா –
எட்டாவதோ, பத்தாவதோ – அந்த குழுவில் சுஷ்மாவின் மகளும் இருந்தார் என்பதே – அவருக்கு எதிரான விஷயம் தானே…?

– லலித் மோடிக்கு அல்ல – அவரது மனைவிக்கு தான் நான்
மனிதாபிமான நோக்கோடு உதவினேன் என்று சொல்லிய சுஷ்மா –

– மனிதாபிமான உதவியை, யாருக்கும் தெரியாமல் அவ்வளவு ரகசியமாகச் செய்தது ஏன்…? வெளியுறவுத்துறை அதிகாரிகள் யாருக்கும் தெரியாமல், நிதியமைச்சகத்தையும் கலந்து ஆலோசிக்காமல், அவ்வளவு ரகசியமாக அதைச் செய்ததே – அது தவறான விஷயம் என்று அவர் உணர்ந்திருந்ததால் தானே …?

– விஷயம் 8 மாதங்கள் கழித்து மீடியாவில் வெளி வரும் வரை இந்த விஷயம் யாருக்கும் தெரியாமலிருக்க அவர் முயற்சி
எடுத்துக் கொண்டதேன் ….?

– இதற்கு முன்னர் பதவியில் இருந்த அரசின் நிதியமைச்சர்
பிரிட்டிஷ் அரசுக்கு எழுதிய கடிதத்தின் நகல் சுஷ்மாவுக்கு
பிரிட்டிஷ் அரசாலேயே அனுப்பப்பட்டிருக்கிறது. முன்பு உங்கள் அரசு இப்படி சொல்லி இருக்கையில் நாங்கள் எப்படி
பயண ஆவணங்கள் கொடுக்க முடியும் என்று பிரிட்டிஷ் அரசு
கேட்டபோது, பரவாயில்லை நாங்கள் தவறாக எடுத்துக் கொள்ள
மாட்டோம் என்று இவர் கூறியது எப்படி சரியாகும் ?

– லலித் மோடியை இந்தியாவிற்கு திரும்ப கொண்டு வர
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் அரசு எந்தவித
நடவடிக்கையும் எடுக்கவில்லை
என்று சுஷ்மா சொன்னதற்கு –

நான் – நிதியமைச்சராக – பிரிட்டிஷ் அரசுக்கு எழுதிய
கடிதங்களை வெளியிடுங்கள்….. மக்கள் பார்க்கட்டும்…
முடிவு செய்யட்டும்… நாங்கள் எத்தகைய நடவடிக்கை எடுத்தோம்
என்று – என்று திரு. ப.சிதம்பரம் சொல்லியதற்கு –
ஏன் இதுவரை சுஷ்மாவிடமிருந்தோ, ஜெட்லியிடமிருந்தோ
பதில் இல்லை….?

– இதற்கு முன்னதாக திருமதி சுஷ்மா தன் நெருங்கிய உறவினர்
ஒருவரின் மகனுக்கு லண்டனில் மருத்துவ சீட்டு கேட்டு,
லலித் மோடியை அணுகி உதவி பெற்றது குறித்து சுஷ்மா
ஏன் வாயே திறக்கவில்லை….?

திருமதி சுஷ்மாவுக்கு ஆதரவாக பேச முற்பட்ட திரு அருண் ஜெட்லி தான் இந்திய அரசின் நிதியமைச்சர் – தன் நிர்வாகத்திற்கு
உட்பட்டு தான் Enforcement Directorate, Income Tax
Department – ஆகியவை செயல்படுகின்றன என்பதையும் மறந்து –

லலித் மோடியின் மீது உள்ள வழக்குகளின் நிலை குறித்து
பேசியது வடிகட்டிய முட்டாள்தனம் – ஆபத்தான விஷயம்.

மொத்தத்தில் – அன்றைய விவாதத்தை மைதானத்தில் ஆடப்படும்
கால் பந்தாட்டம் என்று வைத்துக் கொண்டால், வெறும் 40 பேர்களை கொண்ட எலிமெண்டரி ஸ்கூல் சிறுவர்களின் டீமுடன் –

400 வலுவான முரட்டு, பலம்பொருந்திய ஆண்களைக் கொண்ட கல்லூரி டீம் விளையாடிய ஒருதலைப்பட்சமான கால் பந்தாட்டம் போல் தான் இருந்தது.

கடைசி வரை பிரதமர் மோடிஜி – அவைக்கு வராமலே இருந்தது, மிக மிக மோசமான, ஆணவத்தனமான ஒரு போக்கு.

மிருகத்தனமான தனிப்பட்ட பெரும்பான்மையை, கடந்த தேர்தலில்
பாஜக வுக்கு அளித்தது தான் மக்கள் செய்த மிகப்பெரிய தவறு..

ஒரே ஒரு ஆறுதல் – ராஜ்ய சபாவிலாவது –
அது தனியே ஆட்டம் போடக்கூடிய சூழ்நிலையில்
இல்லை -என்பது தான்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to மாறி மாறி சேற்றை வாரிப் பூசிக்கொண்ட – சுஷ்மா, ராகுல், சோனியா – ஜி க்கள்…. நாறியது பாராளுமன்றம் மட்டுமா…?

 1. drkgp சொல்கிறார்:

  இது போன்ற ஆட்களை தேர்ந்தெடுக்கவா தேசம் அவ்வளவு செலவு செய்தது.

  God is saving our country but for HIM we won’t be where we are!

 2. VAANARAM. சொல்கிறார்:

  “கடைசி வரை பிரதமர் மோடிஜி – அவைக்கு வராமலே இருந்தது”

  இந்தியாவ முன்னேத்தனம்னு கஜகஸ்தான் , உஸ்பெகிஸ்தான் , பூட்டான் , ஜப்பான் எங்கயாவது டூர் போயிருப்பாரு.

  இப்ப என்ன அவசரம் ? இன்னும் வேர்ல்ட் மேப்பில இருக்குற மிச்ச சொச்ச ஊரையும் சுத்தி பாத்திட்டு டூர முடிச்சிக்கிட்டு
  2019 ல டுர்ர்ருன்னு வந்து இறங்குவாறு .

 3. புது வசந்தம் சொல்கிறார்:

  நல்ல பதிவு. பத்திரிகைகளில் இவ்வளவு தெளிவாக யாரும் எழுதுவதில்லை. உங்கள் எழுத்துக்கள் அனைவரையும் சென்று சேர வேண்டும்.

 4. paamaran சொல்கிறார்:

  ” மிருகத்தனமான ” …… தனிப்பட்ட பெரும்பான்மையை, கடந்த தேர்தலில்
  பாஜக வுக்கு அளித்தது தான் மக்கள் செய்த மிகப்பெரிய தவறு……! அப்புறம் எப்படி மனித தன்மையை எதிர்பார்க்க முடியும் …? ஒரே … உர்ர்ர்ர்ர் …. லொள் …. லொள்… . லல்…. லல்… லலித்…. தான் !!

 5. Pingback: மாறி மாறி சேற்றை வாரிப் பூசிக்கொண்ட – சுஷ்மா, ராகுல், சோனியா – ஜி க்கள்…. நாறியது பாராளுமன்றம் ம

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.