காவிரி நீர் – தினமணி தலையங்கம் சொல்லாமல் விட்டது….

krs

கர்நாடகா அரசு தமிழகத்திற்குரிய காவிரி நீர் பங்கை
தரத்தவறியது குறித்து இன்றைய தினம்
தினமணி நாளிதழ் ஒரு தலையங்கம்
தீட்டியுள்ளது. அதிலிருந்து சில பகுதிகள் ( மட்டும் ) –

————-

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டுக்கு ஆகஸ்ட் 31 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட வேண்டிய 27.5 டி.எம்.சி. தண்ணீரை வழங்க இயலாது என்று கர்நாடக அரசு கூறியிருப்பது அப்பட்டமான, நியாயமற்ற செயல்.


இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று
கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம்
எழுதியுள்ளது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம்
நிருபர்கள் கேட்டபோது, தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் விடுவது
சாத்தியமல்ல என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

இது தமிழ்நாட்டில் காவிரி நீரை நம்பி, தஞ்சை டெல்டா பகுதியில்
நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

“நாங்களே குடிநீருக்குத் திண்டாடுகிறோம். இதில் எங்கே
தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தருவது’ என்ற சொல்லாடல்,
ஏதோ பிச்சை கேட்பவரிடம், எனக்கே சாப்பாடு இல்லை
என்று சொல்லும் தொனியில் இருக்கிறது.

ஒரு முதல்வருக்கு இது அழகல்ல.
கர்நாடகத்துக்கு மட்டுமே காவிரி சொந்தமல்ல.
இரு மாநிலங்களுக்கும் பொதுவானது.
பற்றாக்குறைக் காலத்தில் காவிரி நீரை எவ்வாறு இரு மாநிலங்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை நடுவர் மன்றம் ஏற்கெனவே
அறிவித்துள்ளது.

அதன்படி, இருக்கின்ற நீரை எவ்வாறு இரு
மாநிலங்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்கான
ஒரு பொது முடிவை எடுக்க வேண்டிய கர்நாடக அரசு,
இவ்வாறு விட்டேற்றியாகப் பேசுவது, தமிழக விவசாயிகள்
மனதில் கொதிப்பு நிலையை உருவாக்கும்.

பருவ மழைக் குறைவு இரு மாநிலங்களிலும் நேரிட்டுள்ளது.
இந்தியா முழுவதிலும், வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை
ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு, அந்த மாவட்டங்களில் நிலத்தடி
நீரைப் பெருக்கவும், மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கவும்,
சிறிய தடுப்பணைகள் அமைக்கவும் மத்திய வேளாண் துறை
சார்பில் ரூ.410 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் அதிகபட்சமாக
ரூ.69 கோடி ராஜஸ்தானுக்கும், ரூ.64.5 கோடி தமிழ்நாட்டுக்கும்,
ரூ.41 கோடி கர்நாடகத்துக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகத்தைவிட தமிழகத்தில்தான் வறட்சியால்
பாதிப்பு அதிகம் என்பதற்கு இந்த அளவீடே போதுமானது.

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் கூற்றுப்படி கிருஷ்ணராஜ சாகர் அணையில் தற்போது 25.38 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. கபினி அணையில் 19 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. ஆக மொத்தம் 44.38 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடக அணைகளில் உள்ளது.
கர்நாடகத்தின் சாகுபடி பரப்பளவு, குடிநீர்த் தேவை ஆகியவற்றைக்
கருத்தில் கொண்டாலும், மூன்றில் ஒரு பங்கு நீரை, அதாவது
15 டி.எம்.சி.யை செம்டம்பரில் தமிழ்நாட்டின் விவசாயத் தேவைக்காக வழங்குவது அவசியம். இது பல ஆயிரம் விவசாயிகளின் வாழ்வாதாரம் என்பதைக் கர்நாடகம் புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய நிலைமைக்குக் காரணம், இன்னமும் காவிரி ஆணையம் அமைக்கப்படாமல் காலம் கடத்தப்படுவதுதான். காவிரி ஆணையம் அமைக்கப்பட்டு, காவிரியில் உள்ள அனைத்து அணைகளும் அதன் கட்டுப்பாட்டில் வரும்போதுதான், நியாயமான நீர்ப் பங்கீடு சாத்தியமாகும். அத்தகைய பொதுவான அமைப்பு இல்லாததால்தான் கர்நாடக அரசு இத்தகைய இரக்கமற்ற,
விவசாயிகளுக்கு எதிரான முடிவுகளை எடுக்கிறது.

————–

தினமணி சொல்ல மறந்ததும், நாம் சொல்ல விரும்புவதும் –

மத்திய அரசு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து –
உடனடியாக காவிரி ஆணையம் அமைக்க
ஆவன செய்ய வேண்டும்.

அதற்கு முன்னர் – தமிழகத்தின் உடனடி தேவைகளை கருதி –
நடுவர் நீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா அரசு மதித்து நடக்கும்படி
செய்வது மத்திய அரசாங்கத்தின் பொறுப்பு.

அரசியல் சட்ட விதிகளின் கீழ் –
நடுவர் நீதிமன்ற தீர்ப்பின்படி
நடக்க வேண்டிய கடமை கர்நாடகா அரசிற்கு இருக்கிறது.

இதனை உரிய விதத்தில் எடுத்துக்கூறி –
நீதிமன்ற விதிகளின்படி கர்நாடகா அரசு காவிரி நீரை
பகிர்ந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு
மத்திய அரசுக்கு இருக்கிறது.

மத்திய அரசு தன் பொறுப்பினை தட்டிக்கழித்து
இரு மாநிலங்களும் தங்களுக்குள்ளேயே முட்டிக் கொள்ளட்டும்
என்று வேடிக்கை பார்ப்பது – முழுக்க முழுக்க அரசியல்.

இதை மக்கள் உணர்ந்து கொள்ள பெரிய வியாக்கியானங்கள்
தேவைப்படாது.

மத்திய அரசு உடனடியாக தலையிட்டு கர்நாடக அரசுக்கு
தேவையான உத்திரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to காவிரி நீர் – தினமணி தலையங்கம் சொல்லாமல் விட்டது….

 1. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  என்ன சார்… “சொல்வது யார்க்கும் எளியவாம்’ங்கறமாதிரி சொல்லிட்டீங்களே.. இது எப்படி சாத்தியம்? என்னைக்கேட்டா.. மானிலங்களுக்குள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு, ஏதாகிலும் ஒரு நாட்டை, நாட்டாமையாக மாற்றிவிடலாம். ‘நியாயத்தைப் பார்த்தால்’, கர்னாடக மானிலத்தில் பி.ஜெபி இருக்க முடியாது (காங்கிரஸுக்கும் இது பொருந்தும்). ‘நியாயம் செய்தாலும்’, தமிழக மக்களுக்கு அதில் அக்கறை கிடையாது. நியாயம் செய்தார்கள் என்று காங்கிரசுக்கோ, பி.ஜெ.பிக்கோ வாக்கு கிடைக்காது. பின்பு என்னதான் செய்யும்?

 2. thiruvengadam சொல்கிறார்:

  அகாரியம் ஆக காலப்புடி என்ற நியதியில் , ஆர்ப்பாட்ட அரசியல் தவிர்த்து எம்ஜுஆர் ஹெக்டேவுடன் நேரடி தொடர்பில் முயலலாம். வலுவே இல்லாத தமிழகத்தை விட ஆட்சிக்கு வாய்ப்புள்ள கர்னாடக சார்பாகவே பிஜெபி நடந்துகொள்ளும்.

 3. kalakarthik சொல்கிறார்:

  உண்மை.உண்மை.நடக்க வேண்டுமே?
  இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு மழைதான்.நிறைய மழை பெய்து எல்லோரும் நலமாக வாழ வேண்டும் என்று விரும்பும்
  kalakarthik
  KARTHIK AMMA

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஆமாம் கார்த்திக் அம்மா,

   அந்த நிறைய மழையும் கர்நாடகாவில் பெய்ய வேண்டும்….
   எதிரிக்கும் நாம் நன்மையே நினைப்போம்…!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. Pingback: காவிரி நீர் – தினமணி தலையங்கம் சொல்லாமல் விட்டது…. | Classic Tamil

 5. paamaran சொல்கிறார்:

  பா.ஜ.க.அரசு ஒன்றும் செய்யபோவதில்லை என்பதுதான் நிதர்சனம் …. ஏனென்றால் மத்திய அரசில் இருக்கும் கர்நாடகாவை சேர்ந்த அமைச்சர்களே ” ஏகத்தாளமாக அறிக்கைகள் ” விடும்போது — சித்தராமைய்யாவுக்கு அலட்சியம் ஏற்படுவதில் ஆச்சர்யமில்லை …!!! சதானந்த கவுடா இந்தியா முழுவதற்கும் மந்திரியில்லை —- கர்நாடகாவுக்கு மட்டுமே அவர் மந்திரி என்று நினைத்துக்கொண்டு { அடுத்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அரசு அமைய வோட்டு பொறுக்கும் எண்ணத்தில் } செயல்படுவதைகூட கண்டுக்கொள்ளாமல் இருக்கும் — தமிழில் வணக்கம் கூறிவிட்டு — இந்தியில் உரையாடும் ” நமது பிரதமர் ” மக்கள் சேவகன் தானே ….. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பாமரன்,

   அதிசயமாக, திரு.பொன்.ரா. அவர்கள் கர்நாடகாவை
   தண்ணீர் கொடுக்க வைப்போம் என்று சொல்லி
   இருக்கிறார்….
   அடுத்து தேர்தல் நடக்கவிருப்பது தமிழகத்தில் தானே …
   பார்ப்போம்…..!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • paamaran சொல்கிறார்:

    அய்யா … அடுத்த சட்டசபை தேர்தல் என்று குறிப்பிட்டது கர்நாடகாவில் வரும் தேர்தலை தான் …. ஏனென்றால் அங்கு தற்போதுள்ள காங்கிரஸ் அரசை அப்புறபடுத்த சதானந்த கவுடா போன்றவர்கள் இப்போதே காட்டும் அக்கறை தான் —- அவர்களது அறிக்கைகள் … ! அதே போலதான் இங்கே வரும் தேர்தலை முன்னிட்டு பொன்.ரா அவர்களின் அறிக்கையும் …. !! பொன்.ரா. வுக்கு உண்மையில் தமிழகத்தின் மீது அக்கறை இருந்து இருந்தால் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து இதுநாள் வரை ஏன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை ….!!! கொஞ்சம் அழுத்தம் கொடுத்து மத்திய அரசிடமும் —-பா.ஜ.க.வினரிடமும் கேட்டால் அவர்களது பதில் : மாநிலங்களுக்குள் பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனை என்று கூறி தப்பித்துகொள்ள பார்ப்பது தான் வழக்கமான கண்துடைப்பு என்று புரியாதா நமக்கு …?

 6. ssk சொல்கிறார்:

  காவிரியில் நூறு தடுப்பு அணை தமிழகத்தில் கட்டிவிட்டால் ஓரளவிற்கு இந்த பிரச்சினை தீரும். அதை ஏன் செய்யவில்லை. மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். நிலத்தடி நீரும் பெருகும்.
  தண்ணீர் தராத கர்நாடக அரசுக்கு ஒரு TMC இவ்வளவு என்று அபராதம் விதித்து அதை மத்திய அரசே கர்நாடகத்துக்கு சேர வேண்டிய பணத்திலிருந்து கொடுத்து விட வேண்டும். அந்த பணத்தை விவசாயிகளின் உணவு, குழந்தைகள் கல்வி, மருத்துவம் போன்றவற்றிற்கு செலவிட வேண்டும்.

 7. Ganpat சொல்கிறார்:

  காவிரி பிரச்னை தீராது
  1.மத்திய அரசு/கர்நாடக அரசு காங் அல்லது பாஜ க வசம்தான் இருக்கும்.தமிழ்நாடு அரசு இவர்கள் கைக்கு வரவே வராது.எனவே இரு கட்சிக்கும் தமிழ் நாட்டின் மீது எந்த அக்கறையுமில்லை
  2 மீண்டும் இது உச்ச நீதி மன்றத்திற்கு எடுத்து செல்லப்படும் அங்கு இன்னும் சில வருடங்கள் இழுக்கடிக்கப்படும்.
  3.இதன் நடுவே நல்ல மழை பெய்து விட்டால் அந்த ஆண்டு இந்த பிரச்னை மறக்கப்படும்

 8. Ramaswamy thamilan சொல்கிறார்:

  முட்டாள் தனமான முடிவு… மழையே பெய்யாத நாடுகளில் விவசாயம் நடைபெறவில்லையா..
  கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்..
  மழைநீரை சேமிக்கும் திட்டம்..
  சீமைகருவேல மரங்களை அண்டை மாநிலங்கள் போல வேருடன் அழிக்கும் திட்டம்
  யாரும் தம் விருப்பத்திற்கு ஆழ்குழாய் போடுதலை தடுத்தாலே போதுமானது

  நான் இப்போது இருக்கும் நாட்டில் அனல் மின் நிலையங்களில் மின்சாரத்துடன் கடல்நீரை குடிநீராக மாற்றுகிறார்கள் அத்துடன் மறு சுழற்சி செய்யப்பட நீரை நம் புழக்கத்திற்கு விடுகிறார்கள்..
  ஒரு குடிநீர் கேன் விலை 15 ரூபாய் நம் மதிப்பில்.. பாலைவனத்தில் 15 ரூபாய்க்கு நல்ல நீர் கிடைக்கிறது..
  மறுசுழற்சி செய்த நீரில் நீங்கள் சமைக்கலாம் அவ்வளவு நன்றாக இருக்கிறது..

  நம் மக்கள் சினிமா நடிகர்கள் பின்னாடி போனதன் விளைவு இது..
  கேரளாவை பார்த்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்..
  காவிரி டெல்டா மற்றுமல்ல எங்கு பார்த்தாலும் கருவேல மரம் மண்டிக்கிடக்கிறது ..
  ஆனால் எதைப்பற்றியுமே அக்கறை இல்லாமல் தமிழன் சாதியிலும் சினிமாவிலும் காயடிக்க பட்டிருக்கிறான்
  அடுத்த தலைமுறையோ பள்ளிக்கல்லூரிகளில் நல்ல மதிப்பெண் எடுப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வளர்க்க பட்டுக்கொண்டிருக்கிறது (என் பையனும் சேர்த்து தான்) broiler கோழிகளை போல

  இராமசாமி

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.