வழக்கறிஞர்கள் போராட்டம் – நீதிபதி சந்துரு அவர்கள் கூறுவது சரியா …?

justice k.chandru

வழக்கறிஞர்கள் போராட்டம் குறித்து, ஒரு வார இதழுக்கு பதில்
அளிக்கையில், ஓய்வுபெற்ற நீதிபதி திரு கே.சந்துரு அவர்கள்
கொடுத்திருக்கும் விளக்கத்தை முதலில் கீழே தந்திருக்கிறேன் –

கேள்வி – வழக்கறிஞர்கள் அரசியல், ஜாதி, மத அமைப்பு ரீதியாக
நீதிமன்ற வளாகத்திலேயே போராட்டம் நடத்தவும், புறக்கணிப்பு
செய்யவும் சட்டத்தில் அனுமதியுண்டா …?

பதில் – கடந்த வாரம் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது
ஒரு மூத்த வழக்கறிஞர் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே பந்தல் போட்டு
சாதி அமைப்புகள் போராடுவதைப்பற்றி குறிப்பிட்டார்.

அப்போது பெண் வழக்கறிஞர் ஒருவர் அவர் அவ்வாறு கூறியதற்கு
உரத்த குரலில் கண்டனம் எழுப்பியதோடு, தன் மீது கோர்ட் அவமதிப்பு
வழக்கு தொடர்ந்தாலும் அதை சந்திப்பேன் என்று கூறியதாக நாளிதழ்கள்
குறிப்பிட்டுள்ளன.

ஆனால், நீதிமன்ற வளாகத்திற்குள் கூட்டங்கள் நடத்துவது, கண்டன
முழக்கமிட்டு நீதிமன்ற வராந்தாக்களில் ஊர்வலம் செல்வது கூடாதென்று
மூன்று வழக்குகளில் தீர்ப்புகூறப்பட்டுள்ளன.
மீறியவர்கள் மீது பதிவாளர்
நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்திரவிடப்பட்டுள்ளது. அதையும் மீறி,
அப்படிப்பட்ட நிகழ்வுகள் நடத்தப்படுகின்றனவென்றால், வழக்கறிஞர்களுக்கு
நீதிமன்றத்தின் மீதும், அது அளிக்கும் தீர்ப்புகள் மீதும் நம்பிக்கையில்லை
என்பதைத்தான் காட்டுகின்றன. வக்கீல்களுக்கே நீதிமன்ற உத்திரவுகள்
மீது நம்பிக்கை இல்லையென்றால் – மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுமா ?

ஒருவேளை ஆயுதம் தாங்கிய மத்திய காவலர்கள் படையை
வைத்துக்கொண்டு நீதிமன்றங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க
வேண்டுமென்று தலைமை நீதிபதி கூறுவதை வழக்கறிஞர்கள்
சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதன் பின்னணியின் காரணம் அப்படிப்பட்ட
ஊர்வலங்கள், கூட்டங்கள் நடத்த முடியாது என்பதாகவும் இருக்கலாம்.

—————————————-
நான் கூற விரும்புவது –

பொதுவாக -நீதிபதிகளின் விளக்கங்கள் சந்தேகங்களுக்கு அப்பாற்
பட்டவையாக, தெளிவாக – இருக்கும் …….இருக்க வேண்டும்.
ஆனால், நீதிபதி சந்துரு அவர்களின் விளக்கம் அப்படி இருக்கிறதா …?

கேள்வியின் முக்கிய அம்சம் – வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்துக்குள்
போராட்டம் நடத்த சட்டம் அனுமதி அளிக்கிறதா – இல்லையா …?

இதற்கான பதில் –
சட்டம் அனுமதிக்கவில்லை என்பதாகத்தான் இருக்க முடியும்.,,
ஆனால் திரு.சந்துரு அவர்கள் சுற்றி வளைத்து –

“அதையும் மீறி, அப்படிப்பட்ட நிகழ்வுகள் நடத்தப்படுகின்றனவென்றால்,
வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றத்தின் மீதும், அது அளிக்கும் தீர்ப்புகள்
மீதும் நம்பிக்கையில்லை என்பதைத்தான் காட்டுகின்றன.
வக்கீல்களுக்கே நீதிமன்ற உத்திரவுகள் மீது நம்பிக்கை இல்லையென்றால் –
மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுமா ?”

-என்று கேட்கிறார்.

கேட்கப்படும் கேள்வி வழக்கறிஞர்களின் கட்டுப்பாடற்ற
நடத்தையை பற்றியது…. இது நேரடியாக நீதிபதிகள், நீதிமன்றங்கள்
மற்றும் வழக்கறிஞர்களுக்கு இடையேயான பிரச்சினை பற்றியது.
பொது மக்களுக்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
எனவே பொதுமக்களை இங்கே இழுப்பது தேவையற்றது –
சுய சௌகரியத்திற்கானது.

அடுத்து – ” வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றத்தின் மீதும், அது அளிக்கும்
தீர்ப்புகள் மீதும் நம்பிக்கையில்லை “
என்கிறார்.
கூறுபவர் ஓய்வுபெற்ற நீதிபதியாக இருக்கலாம். ஆனால் இந்த
வார்த்தை பிரயோகமே தவறு என்பது என் கருத்து.

“தீர்ப்புகளின் மீது நம்பிக்கையில்லை” என்பதற்கு பதிலாக,
“தீர்ப்புகள் ஏற்புடையதாக இல்லை” என்பதாக கூறப்பட்டிருக்க வேண்டும்.

நம்பிக்கை இல்லை என்றால் – அதன் அர்த்தமே வேறு.

சரி – வழக்கறிஞர்களுக்கு தீர்ப்புகள் ஏற்புடையதாக இல்லையென்றால் –
என்ன செய்ய வேண்டும்…… ?

கோர்ட் வளாகத்திற்குள் ஊர்வலம் போனால் சரியாகி விடுமா…?
நீதிபதிகளுக்கு, நீதிமன்றங்களுக்கு எதிராக “கோஷம்” போட்டால்
சரியாகி விடுமா …?
இது வெறும் மிரட்டல் போக்கன்றி வேறென்ன ….?

தீர்ப்புகள் ஏற்புடையனவாக இல்லை என்றால் –
சட்ட அறிஞர்கள் சட்ட ரீதியான அடுத்த மேல் முறையீட்டை
தானே நாட வேண்டும்…?
அதை விடுத்து, நீதிபதிகளை மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம் …?

தமிழகத்தில், வழக்கறிஞர்களின் போக்கு – நாளுக்கு நாள்
கேவலமாகிக் கொண்டே போகிறது… சிலர் செய்யும் ரவுடித்தனங்களால்,
நேர் வழியில் நடக்கும், நடக்க விரும்பும் வழக்கறிஞர்களும்
பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த கட்டுப்பாடற்ற தன்மையை கண்டிக்க முற்படுவதை விட்டு விட்டு,
அதை ஆதரிப்பது போல் திரு.சந்துரு அவர்களும் கருத்து கூறுவது
மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to வழக்கறிஞர்கள் போராட்டம் – நீதிபதி சந்துரு அவர்கள் கூறுவது சரியா …?

 1. Pingback: வழக்கறிஞர்கள் போராட்டம் – நீதிபதி சந்துரு அவர்கள் கூறுவது சரியா …? | Classic Tamil

 2. paamaran சொல்கிறார்:

  ஜஸ்டிஸ் சந்துரு -“ஆமையை திருப்பிப்போட்டுத்தான் அடிக்கணும்”என்கிற தலைப்பில் 18– மார்ச் — 2014 ஒரு இடுக்கை பதிவிட்டு உள்ளீர்கள் …! அதில் ” மது கடைகளை சட்டபடி ஒழிப்பது எப்படி ” என்கிற கையேடும் வெளியிடபட்டிருக்கும் போல தெரிகிறது … மதுவுக்கு எதிராக அணி திரண்டு “விழி தமிழ் நாடு” என்கிற பெயரில்
  அமைப்பு துவக்கிய ” சமூக சிந்தனையுள்ளதாக ” நினைக்கப்பட்ட —– திரு நீதிபதி அவர்கள் தற்போது வழக்கறிஞர்கள் போராட்டத்திற்கு வக்காலத்து வாங்குவது போல ” வழக்கறிஞர்களுக்கு
  நீதிமன்றத்தின் மீதும், அது அளிக்கும் தீர்ப்புகள் மீதும் நம்பிக்கையில்லை
  என்பதைத்தான் காட்டுகின்றன. வக்கீல்களுக்கே நீதிமன்ற உத்திரவுகள்
  மீது நம்பிக்கை இல்லையென்றால் – மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுமா ?” என்று கேள்வியை கேட்டுள்ளது — காலத்தின் மாறுபாடா ….. ? ஹெல்மெட்டுக்காக ஆரம்பிக்க பட்டதையும் — வழக்காடு மொழியாக தமிழ் வேண்டும் என்பதையும் ” லிங்க் ” செய்த வக்கீல்களின் செயலுக்கு — எந்த ஆமையை திருப்பி போட்டு அடிப்பது ….?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே, அந்த வயிற்றெரிச்சலின் விளைவு தான்
   இந்த இடுகை….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. வழக்கறிஞர்களின் செய்கையை எந்த வித்த்திலும் நியாயப்படுத்த முடியாது.
  //தீர்ப்புகள் ஏற்புடையனவாக இல்லை என்றால் –
  சட்ட அறிஞர்கள் சட்ட ரீதியான அடுத்த மேல் முறையீட்டை
  தானே நாட வேண்டும்…?// மிகச்சரியான கூற்று.
  நீதிபதிகள் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கையிலெடுத்த பின்னர், அந்த நீதிபதிகள் மீது ஊழல் மற்றும் இதர பிற குற்றச்சாட்டுகள் கூறுவது ஏன் ? இதற்கு முன்பு அந்த நீதிபதிகள் குறித்து தெரியாதா ? தனக்கு ஆபத்து என்று தெரிந்தவுடன் தான் அவர்கள் அந்த ஆயுதத்தை எடுத்துள்ளார்களே தவிர உண்மையான நீதியின் மீது கொண்ட பற்றாலல்ல.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   உண்மை தான் நண்பரே.

   இது, ரவுடித்தனத்தை பொது நலனுக்கானதாக
   திசை திருப்பிக் காட்டும் முயற்சி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. srinivasanmurugesan சொல்கிறார்:

  “தீர்ப்புகள் ஏற்புடையதாக இல்லை” – என்றால் தீர்ப்பு தவறு என்றல்லவாகின்றது.அப்படியானால் நீதமன்ற வளாகத்தில் ஊர்வலங்கள் ஆர்பாட்டங்கள் அனுதிக்கப்படலாமா அய்யா?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் ஸ்ரீநிவாசன் முருகேசன்,

   அது தான் இந்த இடுகைக்கான விஷயமே.
   சட்டத்தை மற்றவர்களுக்கு விளக்க வேண்டிய வழக்கறிஞர்கள் –
   அந்த சட்டத்தை தாமே மதிக்காமல் செயல்படும் நிலை….

   நீதிமன்றங்கள், அரசியல் சட்டப்படி அமைக்கப்பட்டவை.
   அவற்றிற்கான பொறுப்புகளும், அதிகாரங்களும் வரையறுக்கப்பட்டுள்ளன.
   கீழ் கோர்ட்டில் சொல்லப்பட்ட தீர்ப்பு ஏற்புடையதாக இல்லை என்றால் –
   அதற்கு அடுத்த மேல் கோர்ட் போவது தான் முறை..

   அதை விடுத்து, நீதிமன்ற வளாகங்களில் போராட்டங்கள் நடத்துவது
   நிச்சயம் கண்டிக்கத்தக்கதே. இதை ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும்,
   அவர்கள் செய்வது தவறே.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்த ன்

 5. வெ.க.சந்திரசேகரன் சொல்கிறார்:

  இன்று வழக்கறிஞர்கள் என்போரில் பெரும்பான்மையோர் (நேர்மையுடன் தொழில் தர்மத்துடன் நடப்போர்களை தவிர்த்து)கட்டப்பஞ்சாயத்து மற்றும் சட்டத்துக்கு புறம்பான வழிகளில் தான் நீதியை நிலைநாட்டுகின்றனர் சிறு உதாரணம் சாலை விபத்துகளில் மரணமடைவோர் தொடர்பான இழப்பீடு.காவல் நிலைய முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் தொடர்பே இல்லாத நபர்களிடமிருந்து அழைப்புகள் வருவதும் ஒரு தொகை வாங்கிக்கொண்டு ஒதுங்கிவிடுங்கள் வழக்கை நாங்கள் நடத்திக்கொள்கிறோம் என்று கூறுவதும் இன்று சாதரணமாக நடைபெறுகிறது. எனக்கும் ஒரு அழைப்பு இவ்வாறு வந்ததும் சம்பந்தப்பட்ட நண்பரின் குடும்பத்தார் சூழ்நிலை கருதி ஒரு தொகையை பெற்றுக்கொண்டு வழக்கிலிருந்து ஒதுங்கிக்கொண்டதும் உண்மை. இ்து விபத்து இழப்பீட்டில் மட்டுமல்ல நில தகறாறு மற்றும் சட்டத்தால் கடுமையான வழக்குகளாக கருதப்படும் குற்ற நடவடிக்கைகளுக்கும் பொருந்தும்.தொடர்புடையவர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் உண்மை நிலை இதுதான் வழக்கறிஞர்கள் சமூகத்தின் பார்வையில் தரகர்களாகத்தான் பார்க்கப்படுகிறார்கள் என்பது முன்னாள் நீ்தியரசருக்கு வேண்டுமானல் தெரியாமலிருக்கலாம் ஆனால் மக்கள் தெரிந்து வைத்துள்ளார்கள். எனவே முதலில் நீதியை நிலைநாட்டும் நிலையிலிருப்போர் சட்டத்தை மதித்து நடப்பததை உறுதி செய்யட்டும் பிறகு தங்களுக்கான உரிமைகளை சட்டவழியில் போரடிபெறட்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.