” அனார்கலி ” – நீங்காத நினைவுகள்….!!!

.

நான் சொல்வது ஒரு மிகப்பழைய கதை….
55-60 வருடப் பழசு.

அப்போதெல்லாம் தொலைக்காட்சிகள் கிடையாது.
வானொலிப்பெட்டியே அநேக வீடுகளில் கிடையாது.
சிடி கிடையாது.
டிவிடி கிடையாது.
வீடியோ கிடையாது.
ஆடியோ டேப் கிடையாது – டேப் ரிக்கார்டர்கள் கிடையாது….

பிறகு என்ன தான் கிடையும் …..?

அதிகம் பயன்பாட்டில் இருந்தது கிராமபோன் பெட்டியும்,
இசைத்தட்டுகளும், ஒலிபெருக்கிகளும் தான்.

ஒரு திரைப்படத்தில் பாடல்கள் நன்றாக இருந்தால்,
இசைத்தட்டுகள் வெளியிடப்பட்டிருந்தால்,
கிராமபோன் மூலம் கேட்கலாம்.
வானொலியில் ஒலிபரப்பப்படும்போதும் கேட்கலாம்.

வசனங்கள் சிறப்பாக இருந்தால் – தியேட்டருக்கு சென்று
திரைப்படத்தை தான் பார்க்க வேண்டும்… வேறு வழியே இல்லை.

பராசக்தி, மனோகரா – காலங்களில் வசனத்திற்காகவே படங்கள் ஓடின.
அப்போதெல்லாம், பெரும்பாலான படங்களுக்குள் சிறிய நாடகங்களும்
இடம் பெற்றன.
(ராஜா ராணியில் -“சாக்ரடீஸ், சேரன் செங்குட்டுவன்,”
அன்னையின் ஆணையில் “சத்ரபதி சிவாஜி ” போன்றவை )

அந்த கால கட்டத்தில் வெளிவந்த படம் தான் ” இல்லறஜோதி ”
( மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு – 1954-ல் வெளிவந்தது )

இந்த இல்லறஜோதி திரைப்படத்தில் “அனார்கலி” என்றொரு
சிறிய நாடகம் இடம்பெற்றது. சிவாஜி, பத்மினி நடித்தது.
இப்போது நீங்கள் அதைக்கேட்டால் / பார்த்தால் எப்படி உணர்வீர்களோ
தெரியாது. ஆனால் அந்த காலத்தில் மக்கள் அனார்கலி
உரையாடல்களைக் கேட்க அப்படி அலைந்தார்கள்.

டிமாண்ட் மிகவும் அதிகமாக இருந்ததால், அனார்கலி நாடகம் மட்டும்,
பாடல்கள் வெளியிடப்படுவது போல – இசைத்தட்டு வடிவத்தில்
வெளியிடப்பட்டது. ( பிற்பாடு மனோகரா திரைப்படம் முழுவதுமே
இசைத்தட்டாக ( ஒலிச்சித்திரம் ) வெளிவந்தது )

அப்போதெல்லாம் திருமண வீடுகளில் – பலத்த சத்ததத்துடன்
ஒலிபெருக்கிகளில் திரைப்பட பாடல்களை ஒலிபரப்புவார்கள்.
குறைந்தது அரை கிலோமீட்டர் தொலைவு வரையுள்ள வீடுகளில்
சர்வ சகஜமாக கேட்கும். நானும் என் நண்பர்களும், முகூர்த்த நாட்கள்
எப்போது வரும் என்று காத்திருப்போம் – பாடல்கள் கேட்க….
அனார்கலி வசனம் கேட்க….

( இப்போதோ சப்தம் என்றாலே அலர்ஜி – சப்தம் கேட்டாலே ,
தூர அமைதியான இடம் தேடி ஓடிக் கொண்டிருக்கிறேன்.)

அண்மையில் ஒரு பயணம் மேற்கொண்டிருந்தபோது, இதைப்பற்றி
எல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன்.
வீடு திரும்பிய பிறகு
யூ ட்யூபில் தேடினேன். ஆச்சரியப்படும் விதத்தில் யாரோ ஒரு
ரசிகர் “அனார்கலி” நாடகத்தை தரவேற்றி இருந்தார்.

நாங்கள் வாழ்ந்த அந்த காலச் சூழ்நிலையில்,
எங்களுக்கு கிடைத்தவை இவை தான் –
இவற்றை ஒட்டியே அமைந்தன எங்கள் ரசனையும் …..!!!
இந்தக் கால இளைஞர்களும் அவற்றை கொஞ்சம்
அனுபவித்துப் பார்க்க
வேண்டுமென்று விரும்புகிறேன்.

நீங்களும் அதைக்கேட்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.
(ஆமாம் – முதல் தடவை கேட்க மட்டும் தான்….
“ஆன்” பண்ணி விட்டு கண்களை மூடிக்கொண்டு கேளுங்கள்.
அப்போது தான் அதே அனுபவம் கிடைக்கும்…..

பின்னர் அடுத்த தடவையாக –
வேண்டுமானால் காட்சியைப் பாருங்கள்….)

இது 1954 என்றும், நான் மேலே கூறியுள்ள (காலகட்டத்தில்)
பின்னணியில் – நீங்கள் இருக்கிறீர்கள் என்றும்
நினைத்துக் கொண்டு கேளுங்கள்.

( இது குறித்து அந்த காலத்தில் ஒரு பெரிய சர்ச்சை எழுந்தது.
இதை எழுதியவர் கவிஞர் கண்ணதாசனா
அல்லது கலைஞர் கருணாநிதியா
என்கிற சர்ச்சை தான் அது. இருவருமே அப்போது
மாடர்ன் தியேட்டர்சில் – மாத சம்பளத்திற்கு
பணி புரிந்துகொண்டிருந்தார்கள்…..!!! )

(பின் குறிப்பு – உங்கள் உணர்வுகளை அவசியம் பின்னூட்டத்தில்
பதிவு செய்யுங்கள்….நான் அவற்றை அறிய விரும்புகிறேன்….)

– இனி அனார்கலி –

part -1 (அனார்கலி பாடல் மட்டும் )

part-2 ( நாடக வசனம் )

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to ” அனார்கலி ” – நீங்காத நினைவுகள்….!!!

 1. ltinvestment சொல்கிறார்:

  Old is gold always.
  Technology is destructive in nature on many things. people has to move on…..but our roots are not designed to adopt quickly.
  it is good to hear.

 2. paamaran சொல்கிறார்:

  அனார்கலி மட்டுமா … ஏதன்ஸ் நாட்டு இளைஞர்களே … என்று சாக்ரட்டீஸ் பேசுவதும் — அடடா … அதெல்லாம் “மகா அனுபவம் ” டிரம்ஸ் ஒலியை கேட்டால் சினிமா போஸ்டர் ஒட்டிய முக்கோண வண்டியை தள்ளி கொண்டு வருகிறார்கள் என்றால் டூரிங்க் டாக்கீஸில் வேறு படம் வந்துள்ளது என்றும் — மாட்டு வண்டியில் ஒலி பெருக்கியை கட்டிக்கொண்டு பாடல்களை போட்டு வந்தால் புது படம் நகரத்தில் வெளியாகி இருக்கிறது என்றும் — அவர்கள் விசிறி வீசும் நோட்டிஸ்களை போட்டி போட்டுக்கொண்டு பொருக்கி எடுத்ததும் —- பின்பு அதை வீட்டின் கதவில் ஒட்டி பெருமிதம் கொண்டதும் — மனோகரா — வீரபாண்டிய கட்ட பொம்மன் வசனங்களையும் — கல்யாண பரிசு படத்தின் டணால் தங்கவேலு காமெடியையும் — டீ கடைகளில் ஒலி பரப்பும்போது கூட்டமாக நின்று பரவசபட்டு ரசித்ததும் — பள்ளி பேச்சு போட்டிகளில் கட்டபொம்மன் வசனம் பேசி பரிசு பெற்றதும் — பாட்டு போட்டியில் தூங்காதே தம்பி தூங்காதே — கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும் போன்ற பாடல்களை மாணவர்கள் பாடியதையும் — பிரபலமான படம் பக்கத்து தியேட்டரில் வந்துள்ளது என்றவுடன் மாட்டுவண்டியில் தெரு ஜனங்களோடு சென்று பார்த்ததும் — என்னும் எவ்வளவோ அனுபவங்களை எப்படி மறக்க முடியும் … பொதுகூட்டம் என்றால் பதிவு செய்த தலைவர்களின் பேச்சுகளை கேட்டு அடுக்கு மொழி பேச முயன்றதும் . …… அடடா … அந்த காலம் போல் இன்று உள்ள இளைஞர்களுக்கு ஒரு துளியாவது —- அனுபவிக்க முடிகிறதா என்பது சந்தேகமே …. கால மாற்றங்களினால் ரசனையும் மாறி விட்டது …. அன்று வந்த படங்கள் சரித்திரங்களை படிக்காமலேயே உணர்த்தியவை என்பது மட்டும் நிஜம் … !!

 3. drkgp சொல்கிறார்:

  பாமரன், திரையரங்கு கட்டணம் சொல்லவில்லையே – தரை நாலணா, பென்ச் ஆறணா,
  பாசமலர் பார்த்துவிட்டு அனைவரும் கண்ணீரைதுடைத்துக்கொண்டே டென்ட்
  கொட்டகையைவிட்டு வெளியேறியது இன்றும் மறக்க முடியாத அனுபவம்.

 4. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  அது மட்டுமா டாக்டர் சார்,
  ஒரே ஷோ-வில் மூன்று படங்கள் பார்த்துவிட்டு, விடிந்ததும் வீட்டுக்கு வந்த அனுபவமும் இருக்கு.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர்களே,

   இந்த மாதிரி நினைவுகளில் நான் தனிமைப்பட்டு இருக்கிறேனோ
   என்று சந்தேகப்பட்டுக்கொண்டே தான் இந்த இடுகையை
   எழுதினேன்.,

   என்னையொத்த ரசனை உடைய நண்பர்கள் இவ்வளவு பேர்
   இருப்பதைக் கண்டு மிகவும் மகிழ்கிறேன்.

   நீங்கள் கூறி இருப்பது அனைத்தும் உண்மையிலேயே
   மறக்க முடியாத அனுபவங்கள் தான்.
   டெக்னாலஜி வாழ்க்கையில் நிறைய வசதிகளைக் கொண்டு
   வந்திருப்பது உண்மையே… அதனால் standard of living
   மேம்பட்டிருப்பதும் உண்மையே….

   ஆனால், பழைய சந்தோஷம் …..
   அப்போதிருந்த நிம்மதியும், திருப்தியும், ஆனந்தமும்,
   நண்பர்களுடனும்- உறவினர்களிடமும் இருந்த நெருக்கமும் –
   இப்போது ” totally missing” …
   நான் சொல்வதை நீங்களும் அனுபவித்துக் கொண்டிருப்பீர்கள்
   என்று நம்புகிறேன்.,

   பழையவை கழிதலும், புதியன புகுதலும் – என்று
   சொல்வார்கள்… புதியன வருவதை வரவேற்போம்.
   ஆனால், பழையவற்றில் இருக்கும் பல சிறப்புகளை
   தொடர்ந்து காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல
   முயற்சிப்போம். கருத்துக்களை பரிமாறிக்கொண்ட
   நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • appu சொல்கிறார்:

    உங்கள் பதிவுக்கு நன்றி. பழைய வாழ்க்கையை அசைபோடுவதில், பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி உண்டுதான். Standard of living ஐப்போது கூடிவிட்டது சரிதான். ஆனால், Standard of Life?

 5. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  காமை ஐயா
  உங்களின் திரைக்கதைக்கு இன்று சன் டிவியில் ஒளி வடிவம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். உங்களின் திரைக்கதை சூப்பர் ஐயா!
  (“என்னுள்ளில் எம் எஸ் வி”, சன் டிவியில் இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறேன் ஐயா)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி நண்ப அஜீஸ்.

   “சன்” டிவியில் நிகழ்ச்சி இருப்பது முன்னதாக தெரியாது.
   நேற்றிரவு வெளியில் சென்றிருந்தேன்.
   இரவு பதினோரு மணிக்கு தான் வந்தேன்.
   எதேச்சையாக நிகழ்ச்சி நடந்து கொண்டிருப்பதை
   பார்த்து, அதன் பிறகு நிகழ்ச்சி முடியும் வரை பார்த்தேன்.

   அருமையான நிகழ்ச்சியை மீண்டும் பார்க்க
   வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • paamaran சொல்கிறார்:

    அய்யா … நேற்று எம்.எஸ்.வி. நினைவு இளையராஜா கச்சேரியை கேட்டேன் … முதலில் கச்சேரி செய்தியை முன்பு பதிவிட்ட உங்களுக்கும் — நினைவு கூர்ந்து நிகழ்ச்சி நடத்திய ராஜாவிற்கும் நன்றி .. நன்றி … இருந்தாலும் டி.ஆர் மகாலிங்கம் — பி.பானுமதி — கண்டசாலா — ஏ .எம் .ராஜா — மற்றும் அந்தகால ஆண் — பெண் பாடகர்களின் பாடல்களை கேட்டு — கேட்டு பழக்க பட்டுவிட்ட இந்த காது — மனதும் ….. இந்த கச்சேரியில் பாடியவர்களை முழுமையா ஏற்க மறுத்தும் — தொடர்ந்து கேட்டதும் எம்.எஸ்.வி.யின் மெட்டுக்காகவும் — ராஜாவின் ஆர்க்கெஸ்ட்ராவுக்காகவுமே …. !! குரல் ஒத்து போகாதது ஒரு பக்கம் இருந்தாலும் பாடிய பெண் பாடகர்களின் உச்சரிப்பும் — சங்கதிகளும் மிஸ்ஸானது மறு பக்கம் ….! எப்படியிருந்தாலும் ராஜாவின் செயலுக்கு வாழ்த்துக்கள் …. !!! இவ்வாறு கூறுவது தவறோ … ?

 6. gopalasamy சொல்கிறார்:

  மாலை ஏழு மணிக்கு அரசியல் கூட்டம் என்றால், 5 மணிக்கே பாட்டு போடா ஆரம்பித்து விடுவார்கள். அதை கேட்க போக, அப்படியே கூடங்களுக்கும் இருந்து அரசியல் அறிவு அடைந்தது, இலவச நூலகங்களுக்கு சென்று, எல்லா நாளிதழ்களையும் படித்தது, (காங்கிரஸ் அரசாங்கம் தி மு க, தி க, communist
  நாளிதல்கையும் அனுமதித்தது.) theatre வெளியில் நின்று, பாடல்கள் கேட்டது, டி கடைகளில், தவமாய் தவமிருந்து Ceylon ரேடியோ கேட்டது, புதன் கிழமை இரவு, பினாகா கீத் மாலா கேட்டது, பாட்டு போடும் எல்லா கல்யாண வீடுகள் வாசலிலும் நின்றது, பின் பக்கத்தில் என்ன பாட்டு என்று மனப்பாடமாக இருந்தது, கே எம் சார், நிறைய பேர் இருக்கிறோம்.

 7. D. Chandramouli சொல்கிறார்:

  Paamaran’s experience reflects mine too. I’ve seen Anarkali scenes but would watch again. When I was a boy, my father gave me 8 annas (1/2 rupee then) to view the movie Jupiter-in ‘Rani’ (Veena Balachander was the smashing and sword-fighting hero, if I recall) and the lowest class Bench ticket in Paragon was 7.1/2 annas!! That was the first movie when I went without any escort. Another movie strongly recommended by my father was “Moondru Pillaigal” (Gemini was one son). How can I forget watching the movie Dr Savithri (Anjali Devi on cycle-song?) sitting on the floor in a touring talkies in Kivalur, a few miles from my native village; my elder brother took me on doubles cycle for the night show and I accidentally broke the tea glass during one of the few intervals (reel change)! When growing up, I became a core fan of Sivaji. Even today while watching Sivaji’s old movies, I am astounded at his histrionic abilities. “Pasumaiyana Ninaivugal”, thanks to you, KM.

 8. today.and.me சொல்கிறார்:

  களங்கமில்லா காதலிலே
  காண்போம் இயற்கையெல்லாம்
  லாலலாலலாலா – காதலிலே
  களங்கமில்லா காதலிலே
  காண்போம் இயற்கையெல்லாம்
  லாலலாலலாலா – காதலிலே

  நினைவிலே பேதமில்லை
  பிரிவென்றால் வாழ்வுமில்லை
  நினைவிலே பேதமில்லை
  இனியென்றும் பிரிவில்லை
  இனியென்றும் பிரிவில்லை
  இதற்கேதொன்றும் ஈடில்லையே – காதலிலே

  களங்கமில்லா காதலிலே
  காண்போம் இயற்கையெல்லாம்
  லாலலாலலாலா – காதலிலே

  இதுவரை காணும் இன்பம்
  உலகிலே காதல் ஒன்றே
  இதுவரை காணும் இன்பம்
  இனியென்றும் பிரிவில்லை
  இனியென்றும் பிரிவில்லை
  இதற்கேதொன்றும் ஈடில்லையே – காதலிலே

 9. செ. இரமேஷ், சிங்கப்பூர் சொல்கிறார்:

  திரு. க.மை அவர்களுக்கு என் வணக்கம்.
  தங்களின் பதிவுகளை கடந்த சில மாதங்களாக நான் வாசித்து வருகிறேன். உங்களிடம் எனக்கு பிடித்த விடயங்களில் இதுவும் ஒன்று. எப்பொழுதும் ஒரே மாதிரி அரசியல் நிகழ்வுகளை மட்டும் எழுதும் சிலரின் பதிவுகளை படித்து படித்து வெறுப்பாகி விடும். இது போன்று பல வாழ்வியல் மற்றும் ரசனை சம்பந்தமாக படிக்கும் போது மனம் இளகி, ஒரு புதிய எண்ண ஓட்டத்தை தொடங்குகிறது. இதே போல சென்ற மாதத்தில் நீங்கள் எழுதிய இளையராஜா-வின் இசை நிகழ்ச்சியை பற்றி படித்தேன். மிகுந்த மன நிறைவு கொண்டேன். எனது அப்பா பல பழைய பாடல்களை மிக அழகாக பாடுவார். இது போன்ற பாடல்களை கேட்கும்போது எனது அப்பா நினைவில் வந்து விடுவார். தங்கள் பதிவுகள் தொடர என் வாழ்த்துக்கள். அன்புடன்
  செ. இரமேஷ்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப ரமேஷ்,

   உங்கள் மடலுக்கு மிக்க நன்றி.

   நான் அரசியலைத் தாண்டி மற்ற விஷயங்களை எழுதும்போது
   – இது எனது ரசனை சரி – ஆனால்,
   எவ்வளவு பேருக்கு இதில் ஆர்வம் இருக்குமோ என்று
   நினைத்துக் கொண்டே தான் எழுதுவேன்.

   பிற்பாடு, வரும் பின்னூட்டங்களைப் பார்க்கும்போது,
   நல்ல விஷயங்களை ரசிக்க நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்
   என்பது தெரிய வருகிறது.

   இனி அவ்வப்போது இது போன்ற விஷயங்களையும்
   அசை போடலாம். டென்ஷனும் குறையும்….!!!
   சுகமாகவும் இருக்கும்….

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.