சரித்திரத்தையே மாற்றக்கூடிய தீர்ப்பு ….!!! வாழ்த்துக்களும், பாராட்டுகளும்….!

madras-high-court-2

 

 

 வக்கீல்கள் என்கிற போர்வையில் உலவும் சில படித்த,
ரவுடி கும்பல்களின் கையில் சிக்கி சின்னாபின்னமாகிக்
கொண்டிருந்த தமிழ்நாட்டின் கௌரவம் –
இன்று மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நாடு முழுவதுமே,
நீதிமன்றங்களின் செயல்பாட்டை முற்றிலுமாக மாற்றி
அமைக்கக்கூடிய அளவிற்கு ஒரு அற்புதமான தீர்ப்பு –
சென்னை உயர்நீதிமன்றத்தால் இன்று வழங்கப்பட்டிருக்கிறது.

தீர்ப்பை வழங்கிய நீதிபதிக்கும், உயர்நீதிமன்றத்திற்கும்
நமது வலைத்தளத்து நண்பர்களின் சார்பாக வாழ்த்துக்களையும்,
பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வோம்.

தீர்ப்பு விவரம் கீழே –

——————————————-

வழக்கறிஞர் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர
உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை: பார் கவுன்சில் தேர்தலுக்கு தடை விதிக்கப்படுவதாகவும்,
நீதித்துறையில் கிரிமினல்கள் நுழைவதை தடுக்கும் விதமாக
வழக்கறிஞர் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற
நீதிபதி கிருபாகரன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், எஸ்.எம்.
ஆனந்தமுருகன் என்பவர் ஒரு மனுவை கடந்த ஆண்டு தாக்கல்
செய்தார். அதில், ”குற்றப்பின்னணி உள்ளவர்கள், வெளிமாநிலத்தில் சட்டப்படிப்பை முடித்துவிட்டு, புனிதமான வழக்கறிஞர் தொழிலுக்குள் வருவதை தடை செய்யவேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை, சிறப்பு வழக்காக எடுத்து நீதிபதி கிருபாகரன்
விசாரித்து வருகிறார். இந்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில்
நீதிபதி கிருபாகரன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, ” அநீதி நடைபெறும் போது இந்த
நீதிமன்றம் தன்னுடைய சட்டப்படியான அதிகாரத்தை கொண்டு,
அதை தடுக்கவேண்டும். அந்த அதிகாரத்தை பயன்படுத்தாமல்,
இந்த உயர் நீதிமன்றம் அமைதியாக இருந்து விடமுடியாது.
எனவே, வேகமாக மாறிவரும் சமுதாய மாற்றத்துக்கு ஏற்ப
நீதிமன்றங்கள் புதிய கோட்பாடுகளையும், புதிய விதிமுறைகளையும் உருவாக்க வேண்டும். அதேபோல, புதிய விதிமுறைகளை உருவாக்க

நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கு உத்தரவிட இந்த நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்றாலும், ஆனால் அப்படி ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டிய சூழ்நிலை இந்த உயர் நீதிமன்றத்திற்கு ஏற்பட்டுள்ளது.

வழக்கறிஞராக வருபவர்கள் எதிர்காலத்தில் நீதிபதி பதவியில்
அமரக்கூடியவர்கள் என்பதால், சட்டப்படிப்பில் சேர்பவர்கள்
நேர்மையானவர்களாக இருக்கவேண்டும். இந்த தொழிலில்
குற்றப்பின்னணி உள்ளவர்கள் நுழைந்துவிட்டதால், நீதி பரிபாலனத்தை அவர்கள் கடத்திச்சென்றுவிடுவார்கள்.
எனவே, கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கின்றேன்.

கிரிமினல் மற்றும் தீவிரவாத பின்னணி கொண்டவர்கள்,
வழக்கறிஞர் தொழிலுக்குள் வருவதை தடுக்கும் விதமாக
வழக்கறிஞர் சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்களை கொண்டுவர
வேண்டும். வழக்கறிஞறாக பதிவு செய்பவர்கள் சொந்த ஊர் மற்றும் சட்டம் படித்த கல்லூரி உள்ள பகுதியில் உள்ள போலீஸ்
நிலையங்களில் இருந்து தங்கள் மீது குற்ற வழக்குகள் எதுவும்
இல்லை என்ற சான்றிதழை கண்டிப்பாக வாங்கி வரவேண்டும்
என்று உத்தரவிடும்படி அனைத்து மாநில பார் கவுன்சில்களுக்கும்,
அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிடவேண்டும்.

குடும்ப பிரச்சினை, சிவில் வழக்குகள், ஜாமீனில் வெளிவரக்கூடிய வழக்குகளை தவிர, பிற குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை
வழக்கறிஞராக பதிவு செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் மாநில பார் கவுன்சிலுக்கு உத்தரவிடவேண்டும்.

அதேபோல, ஜாமீனில் வெளிவரக்கூடிய சாதாரண வழக்கில்
குற்றம் சுமத்தப்பட்டவர்களை தற்காலிக வழக்கறிஞராகத்தான்
பதிவு செய்யவேண்டும் என்றும், அதுசம்பந்தமாக தனி பதிவேட்டை
பராமரிக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட நபரின் வழக்குகளின்
விவரங்கள், எந்த போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில்
உள்ள என்ற விவரத்தை அந்த பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும்
என்றும் மாநில பார் கவுன்சிலுக்கு, அகில இந்திய பார் கவுன்சில்
உத்தரவிடவேண்டும்.

ஒருவேளை கிரிமினல் வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் தண்டனை
பெற்றுவிட்டால், அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி,
அந்த நபரின் பெயரை வழக்கறிஞர் பதிவேட்டில் இருந்து
நீக்கவேண்டும். மேலும், கிரிமினல் வழக்குகளில்
தொடர்புடையவர்களை சட்டப்படிப்பில் சேர்க்கக்கூடாது என்றும்
கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இல்லை என்று சம்பந்தப்பட்ட
போலீஸ் நிலையத்தில் இருந்து மாணவர்கள் சான்றிதழ் வாங்கி
வந்தால் மட்டுமே சட்டப்படிப்பில் சேர்க்கவேண்டும்
என்றும் நாட்டில் உள்ள அனைத்து சட்டக்கல்லூரிகளுக்கும் அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

மேலும், கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இல்லை என்ற
சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு 3 வாரத்துக்குள்
சம்பந்தப்பட்ட போலீசார் சான்றிதழை வழங்கவேண்டும்
என்று அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உத்தரவு
பிறப்பிக்கவேண்டும். இதுதவிர கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்ற எந்த ஒரு நபரையும், வழக்கறிஞராக பதிவு செய்ய அனுமதிக்கக்கூடாது என்றும்

வேறு துறையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள்
அல்லது பணியை ராஜினாமா செய்தவர்கள், துறை ரீதியான
நடவடிக்கையில் சிக்கியவர்கள் வழக்கறிஞராக பதிவு செய்ய
அனுமதிக்கக்கூடாது என்றும் இந்திய பார் கவுன்சில்
உத்தரவிடவேண்டும். வழக்கறிஞராக பதிவு செய்வதற்கு முன்பு,
அந்த மாணவர்களுக்கு சட்டப்பயிற்சி வகுப்புக்களை நடத்தவேண்டும் என்று கடந்த 1999 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், 16 ஆண்டுகள் ஆகியும் உச்ச நீதிமன்றத்தின் இந்த
பரிந்துரையை இந்திய பார் கவுன்சில் அமல்படுத்தாமல் உள்ளது.
எனவே, இந்த பரிந்துரையை மத்திய அரசு அமல்படுத்த தகுந்த
சட்டத்திருத்தத்தை கொண்டு வரவேண்டும்.

தற்போதுள்ள வழக்கறிஞர் சட்டத்தில் மேற்கண்ட திருத்தங்களை
மேற்கொள்ளும் வரை, அகில இந்திய பார் கவுன்சிலை நிர்வகிக்க
உச்ச நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதிகளை நியமிக்கவேண்டும்.
இந்த நடவடிக்கையை 6 மாதத்துக்குள் மத்திய அரசு
மேற்கொள்ளவேண்டும்.

வழக்கறிஞர் சட்டத்தில் திருத்தம்
கொண்டுவர சட்டநிபுணர்கள், சமூக சேகவர்கள், ஓய்வுப்பெற்ற
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், டாக்டர்கள்
ஆகியோர் உறுப்பினர்களாக கொண்ட குழுவை மத்திய அரசு
உருவாக்கவேண்டும்.

அகில இந்திய பார் கவுன்சில், மாநில பார் கவுன்சில்களின்
உறுப்பினர்கள் பதவி 2016 ஆம் ஆண்டு முடிவடைகிறது. எனவே,
நடைபெற உள்ள உறுப்பினர்கள் தேர்தலில், குற்ற வழக்கில்
சம்பந்தப்படாத, 20 ஆண்டுகளுக்கு மேல் வழக்கறிஞர்
தொழில் செய்யும் மூத்த வழக்கறிஞர்கள்தான் போட்டியிட
முடியும் என்று அகில இந்திய பார் கவுன்சில் சட்டத்தில்
திருத்தம் கொண்டு வரவேண்டும். அதுவரை 2016 ஆம்
ஆண்டுக்கான உறுப்பினர் தேர்தலை நடத்தக்கூடாது.

ஆண்டுக்கு ஆண்டு வழக்கறிஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து
வருவதால், நாடு முழுவதுமுள்ள சட்டக்கல்லூரிகளின்
எண்ணிக்கையையும், சட்டப்படிப்புக்கான இடங்களையும்
வெகுவாக குறைக்க அகில இந்திய பார் கவுன்சில் நடவடிக்கை
எடுக்கவேண்டும். அதுமட்டுமல்லாமல், 3 ஆண்டு சட்டப்படிப்பை
ரத்து செய்துவிட்டு, மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட
படிப்புகளை போல, 5 ஆண்டு சட்டப்படிப்பை மட்டும்
நடத்தவேண்டும் என்று அகில இந்திய பார் கவுன்சில்
விதிமுறைகளை கொண்டுவரவேண்டும்.

ஒரு நீதிமன்றத்துக்கு ஒரு வழக்கறிஞர் சங்கம் என்ற முறையை அமல்படுத்த வேண்டும்.

இதற்காக தற்போது செயல்பட்டு வரும்
வழக்கறிஞர்கள் சங்கங்களின் அங்கீகாரத்தை திரும்பபெற
வேண்டும் என்று மாநில பார் கவுன்சில்களுக்கு, அகில
இந்திய பார் கவுன்சில் உத்தரவிடவேண்டும்.

தற்போது வழக்கறிஞர் தொழிலில் குற்ற பின்னணி மற்றும்
தீவிரவாத பின்னணி கொண்டவர்கள் காட்டு தீ போல பரவிவிட்டனர்.

இவர்களை போன்ற நபர்களால், இந்த நீதித்துறையின் மாண்பு
அதல பாதாளத்தில் விழுந்துகிடக்கிறது. இதுபோன்ற சமூக
விரோதிகளுடன், வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள்,
பார் கவுன்சில் உறுப்பினர்கள் கூட்டுச்சேர்ந்து செயல்படுகின்றனர்.
இந்த செயலை உடனடியாக தடுத்து நிறுத்தவில்லை என்றால்,
கண்டிப்பாக ஒரு நாள், குற்றப்பின்னணி கொண்ட வழக்கறிஞர்கள்,
சாதித்தலைவர்கள் ஆகியோரின் விருப்பத்துக்கு ஏற்ப நீதிமன்றங்கள்
செயல்படவேண்டியது வரும்.

எனவே, இந்த பிரச்னையின் தீவிரத்தை அறிந்து, உச்ச நீதிமன்றம்
மற்றும் மத்திய அரசு, தகுந்த நடவடிக்கையை மேற்கொண்டு,
குற்றவாளிகள், ஆள் பலம் கொண்டு செயல்படும் சாதி,
இனத் தலைவர்கள், தீவிரவாத எண்ணங்கள் கொண்டவர்கள்
ஆகியோரிடம் இருந்து இந்த புனிதமான வழக்கறிஞர் தொழிலை
மீட்டெடுக்க வேண்டும்.

அப்படி செய்யவில்லை என்றால், நீதிபதிகள், அமைச்சர்கள்
உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும், நீதிதேவதை
மன்னிக்கமாட்டாள். இந்த மனு மீதான விசாரணையை
வருகின்ற 28 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்” என்று நீதிபதி
உத்தரவிட்டுள்ளார்.

————–

பின் குறிப்பு –

சம்பந்தப்பட்டவர்கள் இதை லேசில் ஏற்றுக் கொள்ள
மாட்டார்கள். நிறைய எதிர்ப்புகள் கிளம்பும்…..
இதை எதிர்த்து பல வழக்கறிஞர்களும், அமைப்புகளும்
அப்பீல் செய்யக்கூடும்…..

இருந்தாலும், ஒரு வலுவான அடிப்படை, துவக்கம்
ஏற்பட்டு விட்டதால், அப்பீலுக்குச் சென்றாலும்,
கொஞ்சம் காலதாமதம் ஏற்பட்டாலும் கூட,
இறுதியில் ஒரு நல்ல முடிவு கிட்டும் என்று நிச்சயமாக
எதிர்பார்க்கலாம்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to சரித்திரத்தையே மாற்றக்கூடிய தீர்ப்பு ….!!! வாழ்த்துக்களும், பாராட்டுகளும்….!

 1. ssk சொல்கிறார்:

  மக்கள் ஆட்சியில் கடைசி நம்பிக்கை நீதி மன்றம். கடவுள் அல்ல.
  இந்நிலையில் நீதி மன்றம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு செயல் பட வேண்டும்.
  வழக்கறிஞர், நீதிபதி இருவரும் சட்டத்திற்கு கட்டு பட்டு நீதியின் மேன்மையை நிலை நாட்ட வேண்டும். ஒருவருக்கு மட்டும் பல விதிகள் மற்றவருக்கு ஒன்றும் இல்லை என்பது சிறப்பான நீதி பரி பாலனம் ஆகாது, தற்போது இருஅணி மீதும் நடத்தையில் சந்தேகங்கள் உண்டு. ஆக இருவர்க்கும் இன்னும் பல கட்டுபாடுகளை விதித்து அரசியல் தலையீடு முற்றிலும் தவிர்த்து நீதி பரி பாலனம் செய்தால் நாடு பல வகையிலும் முன்னேறும். எளிய மக்களும் எல்லாம் பெற சுதந்திர இந்தியாவில் வழி வரும்.

 2. manickam சொல்கிறார்:

  நேற்றே ஆரம்பித்து விட்டனர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, வேறு யார் ..? தீராவிட “கொள்கைகளில் ” ஊறித்திளைத்து அனைத்துக்கும் இட ஒதுக்கீடு கேட்கும் போராளிகள்தான். இந்த தீர்ப்பு உயர்சாதிகளின் ஆதிக்க சாதிகளின் சத்தியம். இந்த தீர்ப்பினால் கிராமத்திலிருந்து வக்கீலு தொழிலுக்கு வருபவர்கள் பாதிப்பார்கலாம். நேற்று தந்தி டி. வி. நிகழ்ச்சியில் இதைத்தான் சொன்னார்கள்.

 3. paamaran சொல்கிறார்:

  // குற்றவாளிகள், ஆள் பலம் கொண்டு செயல்படும் சாதி,
  இனத் தலைவர்கள், தீவிரவாத எண்ணங்கள் கொண்டவர்கள்
  ஆகியோரிடம் இருந்து இந்த புனிதமான வழக்கறிஞர் தொழிலை
  மீட்டெடுக்க வேண்டும். // என்றெல்லாம் கூறிய நீதிபதி ஒரு இடத்தில் கூட அரசியல் கட்சியில் தேர்ந்துள்ளவர்கள் — அரசியல் பின்னணி கொண்ட வழக்கறிஞர் கள் பற்றி எங்கேயும் குறிப்பிடாதது ஏன் …? சட்டத்துறையில் பல பிரச்சனைகளுக்கு காரணமே ஒவ்வொரு வழக்கறிஞரும் ஏதாவது ஒரு கட்சியை சார்ந்தவராக இருப்பதுதான் — நீதிபதி கூறியதுபோல் ” ஒரு சங்கம் தான் ” இருக்கவேண்டும் என்பதில் அனைத்து அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் இணைவார்களா என்பது சந்தேகமே … எப்படியிருந்தாலும் என்றாவது ஒருநாள் தீர்வு கிடைக்குமா ….?

 4. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  //வக்கீல்கள் என்கிற போர்வையில் உலவும் சில படித்த, ரவுடி கும்பல்களின் கையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த தமிழ்நாட்டின் கௌரவம் –
  இன்று மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது.// அப்படியா??

  fair cases என்பதற்கு மட்டுமே வக்கீல்கள் ஆஜரானார்களென்றால் வீட்டில் “பூவா”வுக்கு என்ன பண்ணுவது? ஸோ, வக்கீல் தொழில் என்றாலே மொள்ளமாறித்தனம் இருந்தே ஆகும்.
  இவ்வளவு பேசிய இந்த நீதிமானே, வன்னியர் கோட்டாவில் பதவிக்கு வந்தவர்தானே!
  இவர் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, வக்கீல்கள் இவரை புறக்கணித்து போராட்டம் நடத்தியதால், அரசு பின்னர் இவரை சென்னைக்கு இடமாற்றம் செய்தது என்பது கூடுதல் தகவல்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.