பாரதியையும், காசியையும் மறக்கலாமா ..? திரு.இல.கணேசன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்….!

 

Kasi_Bharathi -siva madam-5

தமிழ்நாட்டிலிருந்து காசி வரை போய் விட்டு, கங்கையில் குளிக்காமல் திரும்பிய ஆசாமி என்னைத்தவிர வேறு யாருமே இருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.. காசியைப் பற்றி சொல்ல எனக்கு நிறைய செய்திகள் இருக்கின்றன. ஆனால், அவற்றை எல்லாம் பின்னால் வேறோரு சந்தர்ப்பத்தில் வைத்துக் கொள்வோம். இன்று நான் சொல்ல வரும் விஷயம் மிகவும் முக்கியமானது….

மனிதனின் வாழ்வில் 16 முதல் 21 வயது வரை என்கிற காலம்
மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. சிறுவன் என்கிற நிலையிலிருந்து, இளைஞன் என்கிற பருவத்தை அடைகிற தருணம். வாழ்க்கை என்றால் என்ன என்று புரிந்து கொள்கிற நேரம்… பக்குவப்பட வேண்டிய நேரம்….

அதிலும் 5 வயதில் தாயை இழந்து, 15 வயதில் தந்தையையும் இழந்து உறவினர் ஒருவரின் பராமரிப்பில் கண்காணாத தேசத்தில் வளரும் அந்த இளைஞனின் மனப்போக்கு எப்படி எப்படி எல்லாம் இருந்திருக்கும். இந்த பருவம் தான், இந்த சூழ்நிலை தான், இந்தியாவின் மகோன்னத கவி ஒருவன் பிறக்கக் காரணமாக இருந்திருக்கிறது…..

முதலில் இதை கொஞ்சம் படியுங்களேன்….
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியது –
————–

இரண்டு வாரங்களுக்கு முன்னர் காசிக்குச் சென்றிருந்த ஒரு
நண்பர் தொலைபேசியில் அழைத்து, “பாரதியார் வசித்த வீடு
எங்கே இருக்கிறது ? அதைப்பார்க்க விரும்புகிறேன். ஊரில்
யாரைக் கேட்டாலும் தெரியவில்லை என்கிறார்கள். அரை நாளாகச்
சுற்றிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

“ஹனுமான் காட்” என்று கேளுங்கள். காஞ்சி மடத்துக்கு நேர் எதிராக, ‘ சிவ மடம் ” என தமிழிலும் இந்தியிலும் எழுதப்பட்ட பழைய வீடு ஒன்று இருக்கும். அது தான் காசியில் பாரதி வசித்த இடம் என்றேன். அன்று இரவு அவர் மறுபடியும் போன் செய்து, பாரதி வசித்த இடம் இப்படி பராமரிப்பே இல்லாமல் கிடக்கிறதே என்று வருந்தினார்.

1898, ஜூன் மாதம் பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயர் காலமானார். பாரதிக்கு போக்கிடமில்லை. அப்போது அத்தை குப்பம்மாளும், அவரது கணவர் கிருஷ்ண சிவனும் காசியில் இருந்தார்கள். பாரதியை தன்னுடன் காசிக்கு வருமாறு அத்தை அழைக்கவே, அவரும் புறப்பட்டுச் சென்றிருக்கிறார். தனது 16-வது வயதிலிருந்து, 21-வது வயது வரை பாரதி காசியில் வசித்து வந்திருக்கிறார். இங்குள்ள இந்து கலாசாலையில்
தான் அவர் இந்தியும், சம்ஸ்கிருதமும் கற்றிருக்கிறார்.
பாரதியின் – சிந்தனையிலும், உடையிலும், உருவத்திலும் மாற்றத்தை உண்டு பண்ணியது காசி(வாரணாசி) தான்.

நெரிசலான சந்துக்குள்தான் சிவமடம் என்ற பாரதி வசித்த வீடு
அமைந்திருக்கிறது. அதில் தற்போது, பாரதியின் பேரன் முறையாகும் உறவினர் கே.வி.கிருஷ்ணன் வசிக்கிறார்.

Kasi_Bharathi silai -1

Kasi_Bharathi silai -2

kasi-bharathi silaiyin nilai-3

இங்கு வீட்டின் ஒரு பக்கமாக
ஒரு பீடத்தின் மீது பாரதியின் மார்பளவு சிலை ஒன்று
அமைக்கப்பட்டிருக்கிறது. பாரதி அமர்ந்து படித்த மேஜை, அவர்
பயன்படுத்திய ஹார்மோனியம் பெட்டி போன்றவை இன்னமும்
நினைவுச்சின்னங்களாக வைக்கப்பட்டுள்ளன. சிலையும்,
அதைச்சுற்றியுள்ள இடமும், வீடும், போதிய பராமரிப்பு இன்றி,
மோசமான நிலையில் இருக்கின்றன.

————————–

தமிழுக்கும், தமிழருக்கும் ஒரு புது உலகை சிருஷ்டித்துக் காட்டிய ஒரு புரட்சிக் கவிஞன், அவனது வாழ்வில், மிக முக்கியமான காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு இடத்தை நாம் போற்றிப் பராமரிக்க வேண்டாமா…?

கங்கைக் கரையிலுள்ள “ஹனுமான் காட்” இந்த வீட்டிலிருந்து ஐந்து நிமிட தூரத்திற்குள் இருக்கிறது.

இந்த வீட்டை, “பாரதி நினைவு இல்ல” மாக மாற்றி –
அங்கே அவரது பாடல்கள், புகைப்படங்கள், அவர் சம்பந்தப்பட்ட
முக்கியமான செய்திகள், நிகழ்வுகள் ஆகியவற்றை விளக்கும்
வகையில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
பாரதி வசித்த வீடு இருக்கும் இடம் பற்றிய தகவல்கள்
வாரணாசி ரெயில் நிலையத்திலும், டூரிஸ்டுகள் செல்லக்கூடிய
முக்கிய இடங்களிலும், ஹனுமான் காட்’டிலும் வைக்கப்பட வேண்டும்…

இதெல்லாம் –
நமது ஆசை மட்டுமல்ல, அவசியமான கடமையும் கூட…!

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்னர் நான் இங்கு போயிருந்தேன். அன்றும் எனக்கு இதே உணர்வு இருந்தாலும், அதை தெரியப்படுத்த, என் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள ஊடகங்களை பயன்படுத்தும் வசதிகள் வரவில்லை….
இன்று திரு ராமகிருஷ்ணன் அவர்களது கட்டுரையை வாசித்தவுடன்
பழைய நினைவுகள் மீண்டும் வருகின்றன.

என்னால் முடிந்தது – குறைந்த பட்சம் என் தொடர்பில் உள்ளவர்களுடன் இதை உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவாவது வேண்டும்…
அப்படி இப்படி என்று அது யார் காதிலாவது போய்ச்சேர்ந்து,
யாரையாவது, எதாவது செய்யத்தூண்டும்.

கொஞ்சம் யோசித்தால் – இந்த பொறுப்பினை ஏற்று நிறைவேற்றிட பாஜக தலைவர் திரு.இல.கணேசன் அவர்களை விட பொருத்தமான நபர் வேறு யாரும் இருக்க முடியாது என்று தோன்றுகிறது.

பாரதியின் மீது பேரன்பும், பெருமரியாதையும் கொண்டவர் அவர். ஆண்டுதோறும் திருவல்லிக்கேணியில் பாரதி வசித்த இல்லத்தில்,
பாரதியின் பிறந்த நாளை வெகு விமரிசையாக அவர் தனது
இலக்கிய அமைப்பான பொற்றாமரை மூலம் கொண்டாடுவதை
நான் பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன்.

மத்தியில் ஆளும் கட்சியிலும் செல்வாக்குடன் உள்ள அவர், இதில் ஈடுபட்டால் – அவரது ஆர்வமும், செல்வாக்கும் இணைந்து இந்த காரியம் எளிதாகவும், விமரிசையாகவும் செய்யப்பட உதவும் என்று உறுதியாக நம்புகிறேன்.

இந்த செய்தி, நமது ஆசை, வேண்டுகோளை – திரு இல.கணேசன்
அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல நான் முயல்கிறேன்.

நிறைய பாஜக நண்பர்கள் இந்த வலைத்தளத்திற்கு ஆர்வத்துடனும், சில சமயம் அபிமானத்துடனும், சில சமயம் கோபத்துடனும் – விஜயம் செய்வதை நானறிவேன்.

என் மீதுள்ள கோபத்தை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்களும் இந்த விஷயத்தில் தங்களால் இயன்றதை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஊர் கூடினால் தானே தேர் இழுக்க முடியும் …?

 

Advertisements
Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

பாரதியையும், காசியையும் மறக்கலாமா ..? திரு.இல.கணேசன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்….! க்கு 3 பதில்கள்

  1. புது வசந்தம் சொல்கிறார்:

    மிக நல்ல முயற்சி.. சோழ அரசாண்ட மாமன்னன் நினைவிடத்திலும் இம்மாதிரியான முயற்சி செய்தால் நன்றாக அமையும்.

  2. karan சொல்கிறார்:

    கண்டிப்பாக அனைவரும் இதற்கு வேண்டிய முன்முயற்சிகள் எடுக்க வேண்டும் ,இந்த நல்ல தகவலுக்கு நன்றி

  3. D. Chandramouli சொல்கிறார்:

    I fully second your suggestion.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.