ஆமீர்கான் என்கிற ஒரு சுயநலவாதி …..

aamir khan ....

——————————-

முன் குறிப்பு –

இதற்கு முந்தைய –

“ஆமீர் கான் – சினிமாவில் ஹீரோ….
ஆனால் நிஜ வாழ்வில் ??? !!! ”

-என்கிற தலைப்பில் தமிழ்மணத்தில் பதிவு செய்கையில்
ஏற்பட்ட ஒரு தொழில்நுட்ப கோளாறு காரணமாக
அதே இடுகையை வேறு தலைப்பில் மறுபதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.
எனவே, இதை கேலரி’க்கு கொண்டு போய் விட்டேன்.
பின்னூட்டம் எழுதுகிற நண்பர்கள் தயவுசெய்து அங்கேயே
எழுதவும். அனைத்து பின்னூட்டங்களும் ஒரே இடத்தில்
இருக்கும்.

————————————————————-

ராம்நாத் கோயங்கா நினைவு விழாவில் இந்தி திரைப்பட
நடிகர் ஆமீர்கான் பேசியது நாடெங்கும்
விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது.
அப்படி என்ன கூறினார் திருவாளர் ஆமீர் கான்..?

இந்தியாவில் சகிப்புத்தன்மை மிகவும் குறைந்து விட்டது
என்று கூறும்போது தன் வீட்டில் நடந்ததை விளக்குகிறார்.

வீட்டில் தன் மனைவியுடன் (திருமதி கிரண் )
பேசிக்கொண்டிருந்தபோது –

முதல் தடவையாக அவர் –

” நாம் இந்தியாவை விட்டு வெளியேறி விடலாமா ”

என்று கேட்டாராம். அவர் தனது குழந்தைக்காக பயப்படுகிறார்.
அவர் தினமும் செய்தித்தாளை பிரிப்பதற்கே பயப்படுகிறார்.
அது பெருகி வரும் அமைதியின்மையை காட்டுகிறது.
மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. இதெல்லாம் ஏன்
நடக்கிறது …?

அந்த எண்ணம் (அச்ச உணர்வு..? ) என்னிடமும் இருக்கிறது….

கடந்த 7-8 மாதங்களாக நாட்டில் ஒரு நிம்மதியின்மை,
பாதுகாப்பு இன்மை, அச்ச உணர்வு நிலவுகிறது….
என்று மேற்கொண்டு விவரிக்கிறார் ஆமீர் கான்.

ஆமீர் கான் யார்….?
ஒரு நல்ல திரைப்பட நடிகர்,
இந்தி திரைப்படங்களில் – கதாநாயகன்,
தயாரிப்பாளர், டைரக்டர்…
ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதி.
இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை
மணந்து கொண்டிருக்கிறார்.

இதைத்தவிர….?

அவ்வப்போது சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்.
சென்ற வருடம் “சத்யமேவ ஜெயதே” நிகழ்ச்சியை
தொலைக்காட்சிகளில் தயாரித்து அளித்தபோது –
அது பல சமூக அவலங்களைச் சொல்வதாக இருந்தது.

துவக்கத்தில் நான் கூட நினைத்தேன்….
பரவாயில்லையே – நடிகராக இருந்தாலும் கூட
இவருக்கு சமுதாயத்தின் மீது
இந்த அளவிற்கு அக்கரை இருக்கிறதே என்று….

ஆனால் – அம்பானியிடம், ஒவ்வொரு எபிசோடுக்கும்
மூன்று கோடி ரூபாய் சம்பளம் பெற்றுக் கொண்டு அதில்
அவர் “நடிக்கிறார்” என்பது தெரிய வந்ததும் –
அந்த எண்ணம் அற்பாயுளில் போய் விட்டது…!!!

ஆமீர்கானைப் போல் இந்த நாட்டில் இன்னும் கிட்டத்தட்ட
பதினேழரை கோடி இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள்.
இந்த நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட
15 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள்.

பிரச்சினை ஆமீர்கானுக்கு மட்டுமல்ல.
இந்த நாட்டில் வாழும் இஸ்லாமியர்களுக்கு மட்டும் கூட அல்ல…

பிரச்சினை – இந்தியாவில் அனைவரும்
நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழவேண்டும்
என்று விரும்பும் அத்தனை இந்தியக் குடிமக்களுக்கும்
சேர்த்தே தான்.. என் பக்கத்து வீட்டுக்காரர் அமைதியை இழந்து
தவிக்கும்போது – என்னால் நிம்மதியாக இருக்க முடியாது…

சமுதாயத்தில் அமைதியின்மையோ, பாதுகாப்பின்மையோ
உணரப்பட்டால் – ஒரு உண்மையான குடிமகன்
என்ன செய்ய வேண்டும்….? அந்த அவலத்தைப் போக்க,
நிலைமையை மாற்ற தன்னால் இயன்ற அனைத்தையும்
செய்ய வேண்டும்.

எங்கே தவறு, ஏன் தவறு என்று
ஆராய வேண்டும்… அதைக்களைய முயற்சிக்க வேண்டும்….
அவசியமானால் – தெருவில் இறங்கிப்
போராடவும் தயாராக வேண்டும்…

தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் என்றில்லாமல் –
தன்னைப்போன்ற – பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்காகவும்
போராடுவோருக்கு துணை நிற்க வேண்டும்.
அனைவருக்காகவும்
சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

அதை விட்டு விட்டு, ” என் மனைவி பயப்படுகிறார்…
நாட்டை விட்டே வெளியேறி வேறு எங்காவது குடியேறி
விடுவோமா என்று கேட்கிறார்….”
-என்று ஒரு பொது மேடையில் ஒருவர் பேசுவது –
மகா கோழைத்தனம்…. நூறு சதவீதம் சுயநலம்…

இவரிடம் ஆயிரம் கோடி ரூபாய் பணம் இருக்கிறது…
உலகில் எந்த நாட்டில் வேண்டுமானாலும் போய் குடியேறலாம்… வசதியாக வாழ்ந்து கொள்ளலாம்….

பாதிக்கப்பட்டதால் பேசவில்லை இவர்….
பாதிக்கப்பட்டு விடுவோமோ என்கிற
பயத்திலேயே பேசுகிறார்…
ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுக்காக இவர் என்ன செய்தார்…?

தாத்ரா சம்பவம் நடந்தபோது,
காஷ்மீர் சம்பவம் நடந்தபோது –
உடனடியாக இவர் ஏன் எதிர்க்குரல் கொடுக்கவில்லை ..?

தெருவில் பழவண்டியில் வியாபாரம் செய்வோர்,
செருப்பு கடை வைத்திருப்போர்,
துணிக்கடை வைத்திருப்போர், என்று
பல்வேறு வகைகளில் அன்றாடம் உழைத்துப் பிழைப்பவர் –
இந்த நாட்டில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்…!
அவர்கள் எந்த நாட்டுக்கு, எப்படி குடி போவார்கள்…?
இந்த நாட்டிலுள்ள பதினேழரை கோடி இஸ்லாமியர்களும்
இவரைப்போல் அஞ்சி ஓடி விட முடியுமா …?
அது நடைமுறை சாத்தியமா …?
மேலும் – எதற்காக போக வேண்டும் …?

உண்மையான ஹீரோக்கள் இத்தகைய தருணத்தில் என்ன
செய்வார்கள்…? தன்னை வருத்திக் கொண்டாவது
மற்றவர்களை துன்பத்திலிருந்து, துயரத்திலிருந்து –
மீட்க போராடுவார்கள்.

ஆனால் இவர் …?
தன் குடும்பத்தை பற்றி மட்டும் தானே
இவர் கவலைப்படுகிறார்…?

தான் சினிமாவில் மட்டும் தான் ஹீரோ –
நிஜ வாழ்வில் அல்ல என்பதை வெளிப்படுத்துகிறார் –
உறுதிப்படுத்துகிறார் ஆமீர்கான்.

இந்த நாடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்திருக்கிறது…
இந்த நாட்டின் மக்கள் எத்தனையோ வித
இன்னல்களை சந்தித்திருக்கிறார்கள்…

அந்நிய படையெடுப்புகளை தொடர்ந்து சந்தித்திருக்கிறார்கள்.
முதலில் மொகலாயர்,
பின்னர் போர்ச்சுக்கீசியர்,
டச்சுக்காரர்கள்,
பிரெஞ்சு நாட்டினர்,
ஆங்கிலேயர் –

பல நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்தாலும்,
படையெடுப்புகளால் பல விதங்களில் பாதிக்கப்பட்டாலும் –
பண்பாட்டில், கலாச்சாரத்தில் மாறுபட்டவர்களையும்
சகோதரர்களாக நினைத்து ஒன்றிணைந்து வாழ்பவர்கள் தான்
இந்த நாட்டின் பெரும்பாலான மக்கள்.

ஏன் – இங்கேயே பிறந்து, இங்கேயே வளர்ந்து,
இங்கேயே தொழில் புரிந்து, இங்கேயே சூப்பர் ஸ்டார்
ஆனவர் தானே ஆமீர்கான். இவர் வைத்திருக்கும்
ஆயிரம் கோடி ரூபாய் சொத்தை எங்கே சம்பாதித்தார்…?
இஸ்லாமியர் என்பதற்காக இந்த நாட்டு மக்களால்
இவர் ஏற்றுக் கொள்ளப்படாமல் போனாரா …?

இவரே சொல்கிறார் அல்லவா –
கடந்த 7 – 8 மாதங்களாகத்தான் பாதுகாப்பற்ற தன்மையை
உணர்கிறேன் என்று.

அப்படியானால், அதற்கு முன்னால் – அவர் 50 ஆண்டுகள்
இங்கு சந்தோஷமாகத்தானே வாழ்ந்தார்.
இதே மக்களிடையே தானே வாழ்ந்தார்…?
நூற்றுக்கு 98 பேர் இங்கு அமைதியை விரும்புவர்கள் தான்.
சக மனிதர்களுடன் நல்லுறவை விரும்புபவர்கள் தான்.

பின் நிலைமை எப்படி மாறியது….? ஏன் மாறியது…?

துரதிருஷ்டவசமாக இங்கு அகில இந்திய அளவிலான
இரண்டு கட்சிகளுமே – மதவாதத்தை பயன்படுத்தியே
ஆட்சியைப் பிடிக்க முயல்கின்றன.

ஒரு கட்சி மெஜாரிடி மதத்தினரின் உணர்ச்சியைத்
தூண்டி விட்டு, polarisation மூலம் அவர்களது
ஆதரவை திரட்ட முயல்கிறது.
பொறுப்பற்று நடந்து கொள்ளும் மதவெறியர்களை
கண்டு கொள்ளாமல் விடுவதன் மூலம்
சிறுபான்மையிரிடையே அச்சத்தை உண்டு பண்ணுகிறது…

மற்றொரு கட்சியோ – மதச் சிறுபான்மையினரின்
அச்ச உணர்வையும், பாதுகாப்பற்ற உணர்வையும் பெரிதுபடுத்தி –
அதனைப் பயன்படுத்திக் கொண்டு –
அவர்களுக்கு தாங்கள் தான் விமோசனம் என்ற நிலையை
உண்டு பண்ணி வாக்கு வங்கி அரசியல் நடத்துகிறது.

எப்போது தான் விமோசனம் இதிலிருந்து …?
எல்லா கட்சிகளிலும் உள்ள, எல்லா மதங்களிலும் உள்ள –
அயோக்கிய அரசியல்வாதிகளையும், மதவெறியர்களையும்,
சுயநலவாதிகளையும் மக்கள் அடையாளம் காண வேண்டும்.

பொது மக்கள் எப்போது மதவேறுபாடின்றி –
இத்தகைய சக்திகளை
அடையாளம் கண்டுகொண்டு –
அடக்கி வைக்கிறார்களோ –
ஒதுக்கி வைக்கிறார்களோ –
அதுவரை இந்த துன்பம் தொடரவே செய்யும்…

———————————————————-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to ஆமீர்கான் என்கிற ஒரு சுயநலவாதி …..

 1. Sampath சொல்கிறார்:

  மிக, மிக அருமையான, நேர்மையான பதிவு. மக்களிடையே புகழ் பெற்றவர்கள் பேசும்போது மற்றவர்களை விட அதிக பொறுப்புடன் பேச வேண்டும். இத்தகைய பேச்சுக்களும், எதிர் வினைகளும் நன்றாக இல்லை.

 2. ssk சொல்கிறார்:

  உண்மைக்கு வெளிச்சம் தேவையில்லை. பல அறிவு தெளிவு கொண்டவர்கள் தங்கள் குமுறலை தெரிவித்தார்கள். ஓரிருவர் செய்தால் விட்டு விடலாம். அவர்கள் அனைவரும் அறிவற்றவர்/கட்சி தொடர்பு என்று ஒதுக்க இயலாது. பிரதமர் இது பற்றி தொடக்கத்திலேயே பேசி இருந்தால் இவ்வளவு பெரிதாக தெரிந்திருக்காது.

 3. ravi சொல்கிறார்:

  அந்த அறிவு தெளிவு பெற்றவர்கள் யார்??..
  அசோக் வாஜ்பாய் .. முன்னாள் அதிகாரி, காங்கிரஸ் தலைமைக்கு நெருங்கியவர்.. தனக்கு தானே விருது கொடுத்து கொண்டவர் ..
  கேரளாவில் இப்போது ஒரு பத்திரிக்கையாளர், மதராசாவில் நடந்த தவறுகளை தட்டி கேட்டதற்கு இப்போது பிரச்சனைகளை சந்தித்து கொண்டு இருக்கிறார்.
  சில நாட்களுக்கு முன் , பொது வெளியில் முத்தம் கொடுப்பது என்று ஒரு கூட்டம் கிளம்பியது .. கிடைசியில் , அந்த அமைப்பின் தலைமை , பல்வேறு விபசார வழக்குகளில் சம்பந்தம் உடையவர்கள் என்று செய்தி இப்போது வெளியில் வந்து உள்ளது ..
  எங்கே சார் இந்த புரட்சி புலிகள் எல்லாம் ???

 4. ராஜ நடராஜன் சொல்கிறார்:

  காவிரி மைந்தன அவர்களுக்கு, உங்கள் வேர்ட்பிரஸ் எளிமையற்ற தன்மை காரணமாக பல முறை உங்கள் பின்னூட்ட விவாதத்தில் கலந்து கொள்ள முடிவதில்லை. இந்தியாவை சுற்றிய பன்னோக்கு பார்வை நீங்கள் செலுத்தினாலும் உங்கள் கண்களுக்கும் எல்லைகளுக்கும் அப்பாற்பட்ட பல விசயங்களை நீங்கள் கவனிக்க முற்படுவதில்லை. அமீர் கானில் துவங்கை மறுபாதி பி.ஜே.பி யின் ஆட்சி முறையில் முடித்து விட்டீர்கள்.
  இந்திப்படத்தின் 3 கான்களும் இந்தியனாக செக்குலரிஸத்தோடு வாழ்கிறார்கள்.இவர்களின் நடை,உடை,பாவனை,கருத்து வெளிப்பாடுகளுக்கு எதிர்க்குரல் கொடுக்கும் இந்துத்வா மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அலறல் மிரட்டல்களை நீங்கள் கேட்கிறீர்களோ என்று தெரியாது.

  நாட்டைப்புறக்கணித்ததை ஏற்கனவே ஓவியர் ஹுசேன் செய்து விட்டார்.
  கமலகாசனுக்கு ஏற்கனவே அந்த எண்ணம் வந்தது.

  You should be in Khan’s Shoes to understand his statement.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் ராஜ நடராஜன்,

   1) இந்த வலைத்தளத்தில் இத்தனை பேர் சுலபமாக
   பின்னூட்டங்கள் போடுவதைப் பார்த்த பின்னரும்,
   உங்களால் முடியவில்லையென்றால் –
   கோளாறு உங்கள் பக்கத்தில் தான் என்பது
   உங்களுக்குப் புரியவில்லையா ..?

   2) உங்கள் கருத்துக்களோடு என் இடுகைகள்
   பொருந்தவில்லையென்றால் – எனக்கு அறிவு,
   ஞானம் போதாது, நான் எல்லா திசைகளிலும்
   பார்க்கவில்லை என்பது உங்கள் முடிவா ..?

   3) மற்றவர்களின் “ஷூ”க்களில் புகுந்து கொள்ள
   வேண்டிய அவசியம் எனக்கு இதுவரை ஏற்படவில்லை.
   இறைவன் அருளாலும், என் வயதில் எனக்கு கிடைத்த
   பரந்த அனுபவத்தாலும் – எனக்கு
   ” என் எளிய செருப்பே ” போதுமானது.
   எதையுமே, “கட்சிப் பார்வை” என்கிற கண்ணோட்டத்தோடு
   பார்ப்பவர்களுக்கு இது புரியாது.

   4) ஓவியர் ஹுசேன் ஒரு “ஞானக்கிறுக்கர்”…!

   5) திருவாளர் கமல்ஹாசன் பேச்சுக்கும் இந்த இடுகைக்கும்
   எந்தவித சம்பந்தமும் இல்லை. அவர் தனது “விஸ்வரூபம்”
   படத்திற்கு இஸ்லாமிய சமூகத்திடையேயிருந்து வந்த
   எதிர்ப்பின்போது அப்படிக் கூறினார். அது முழுக்க
   முழுக்க வியாபாரம்…

   இன்னும் சொல்லப்போனால் – ஒரு விதத்தில் அதுவும்
   இங்கே பொருந்தும். அதுவும் ஒரு சினிமா ஹீரோவின்
   “சுயநலம்”….!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.