திரு.தயாநிதி வழக்கு குறித்த – திரு.குருமூர்த்தி அவர்களின் கட்டுரை – கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும்….!!!

.

.

திரு.எஸ்.குருமூர்த்தி அவர்கள் திருவாளர் தயாநிதி மாறன்
வழக்கு குறித்த விவரங்களை விவரமாக விளக்கி எழுதி –
தினமணி நாளிதழில் வெளிவந்த ஒரு தொகுப்பு கீழே –

” கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும்…”
By எஸ். குருமூர்த்தி

மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர்
தயாநிதி மாறனின் சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம்
தொடர்பாக மத்தியப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.)
அதிதீவிரமாக விசாரித்து வருவதாக ஊடகச் செய்திகள்
கூறுகின்றன. அதேசமயம், மாறனைக் காவலில் வைத்து
விசாரிக்க சி.பி.ஐ.க்கு அனுமதி வழங்க உச்சநீதிமன்றம் சில
காரணங்களுக்காக மறுத்துவிட்டது.

காவல் விசாரணைக்கு அனுமதி வழங்க எதிர்ப்புத் தெரிவித்து,
மாறன் தரப்பினர் முன்வைத்த காரணங்கள் இவை:

1. மாறன் ஒரே ஒரு தொலைபேசி இணைப்பை மட்டுமே
பயன்படுத்தினார்; சி.பி.ஐ. கூறுவதுபோல 323 அல்லது 764
இணைப்புகளை அவர் பயன்படுத்தவில்லை.

2. இந்த வசதி இதற்கு முன்பு தொலைத்தொடர்புத் துறை
அமைச்சர்களாக இருந்த அனைவருக்கும் அளிக்கப்பட்டது தான்.
எனவே, மாறன் 300-க்கு மேற்பட்ட இணைப்புகளை
வைத்திருந்ததாகக் கூறுவது பொய்.

3. பல ஆண்டுகளுக்குப் பிறகு காவல் விசாரணைக்கு
சி.பி.ஐ. அனுமதி கேட்பது உள்நோக்கமுடையதாகும்.

4. இவ்விவகாரத்தில் சி.பி.ஐ.யால் கூறப்படும் வருவாய் இழப்பு
என்பது வெறும் ரூ. 1.78 கோடி மட்டுமே. அதை வேண்டுமானால்,
மாறன் செலுத்திவிடத் தயாராக இருக்கிறார். இந்தக்
காரணங்களால், அவர் மீது வழக்குத் தொடுப்பதே உள்நோக்கம்
கொண்டது என்கிறபோது, அவரைக் காவல் விசாரணைக்கு
உள்படுத்துவது அனாவசியம் என்பதுதான் மாறன் தரப்பு வாதம்.

இந்த நான்குமே வடிகட்டிய பொய்களாகும். பொதுத் துறை தொலைபேசி நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லின் ஜூன் 2007 தேதியிட்ட ஒரேயொரு ஆவணத்தை உச்ச நீதிமன்றத்தில்
சி.பி.ஐ. காட்டியிருந்தால் போதும், இந்த வாதங்கள் அனைத்துமே
தகர்த்தெறியப்பட்டு, மாறன் இப்போது சி.பி.ஐ.யின் விசாரணைக்
காவலில் இருந்திருப்பார். அந்த ஆவணத்தை ஏன் சி.பி.ஐ.
தாக்கல் செய்யவில்லை என்பது ஆண்டவனுக்குத்தான்
வெளிச்சம்.

dayanithi - bsnl notings

இந்த ஆவணத்துக்கு, மாறனுக்குப் பிடித்த அதிர்ஷ்ட
எண்ணுக்கான வேண்டுகோள்தான் காரணம்.
அமைச்சராக
இருந்தபோது தான் பயன்படுத்திய மோசடியான 323 தொலைபேசி
இணைப்புகளில் இரண்டு எண்களை மட்டும்,

பதவி பறிபோன பிறகு எம்.பி. என்ற முறையில்
தனக்கு வழக்கமான இணைப்பாக
மாற்றித் தருமாறு தயாநிதி மாறன் கோரியது தான் இந்த
ஆவணத்தின் அடிப்படை. அவர் கோரிய எண்கள்: 2437 1515
மற்றும் 2437 1616.

இந்த வேண்டுகோளை அடுத்து பி.எஸ்.என்.எல்.லில் உருவான கோப்பு, மறைக்கப்பட்ட சட்டவிரோதமான தொலைபேசி
இணைப்புகள் தொடர்பான திருட்டுத்தனத்தை
அம்பலப்படுத்துகிறது.

தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் மாறனின்
இரு இணைப்புகளை அவரது எம்.பி. ஒதுக்கீட்டில் மாற்றித்
தருமாறு, அப்போதைய தொலைத்தொடர்புத் துறை
அமைச்சரான ஆ. ராசாவின் கூடுதல் தனிச் செயலாளர்
அனுப்பிய தொலைநகல் (ஃபேக்ஸ்) பெறப்பட்டது தொடர்பான
2007, மே 28-ஆம் தேதியிட்ட கோப்பு அது.

அது இன்றும் பி.எஸ்.என்.எல்.லின் கோப்புகளில் உள்ளது.
இந்தக் கோரிக்கையை, பி.எஸ்.என்.எல்.லின் பொது மேலாளர்
(இயக்கம்), பொதுமக்கள் குறைதீர் பிரிவுக்கு (பி.ஜி.செல்)
தக்க நடவடிக்கை எடுக்குமாறு அனுப்பி வைக்கிறார்.
ஆனால், மாறன் கோரிய இரு தொலைபேசி எண்களுமே
பதிவேட்டில் இல்லாததை பி.ஜி.செல் கண்டறிகிறது.
அந்தக் கோப்பில் மேற்குறிப்பிட்ட இரு எண்களும் தொலைபேசிப்
பதிவேட்டிலோ, கணினிப் பிரிவிலோ இல்லை என்று கோப்பில்
குறிப்பிடப்பட்டது.

அப்படியானால், எங்கே போனது அந்த எண்? பயன்பாட்டில்
இருந்த தொலைபேசி எண் மாயமாய் மறையுமா என்ன?

மாறனின் விருப்பத்துக்குரிய எண்களை அவருக்குப் பெற்றுத் தருவதற்காக யாரோ சிலர், சென்னை மாம்பலத்திலுள்ள
இ.டபிள்யூ.எஸ்.டி. பிரிவை அணுகியுள்ளனர். இ.டபிள்யூ.எஸ்.டி.
என்பது மின்னணுமயமாக்கப்பட்ட டிஜிட்டல் சேவை
கட்டுப்பாட்டகம் என்கிற பி.எஸ்.என்.எல்.லின் பிரிவு.
அங்கு தான் ஒருங்கிணைந்த டிஜிட்டல் சேவை நெட்வொர்க்கில்
பெரிய நிறுவனங்களுக்கு முதன்மை இணைப்பு
(ஐ.எஸ்.டி.என். பீ.ஆர்.ஏ.) அளிக்கப்பட்டிருப்பதை அறிய முடியும்.

இதில் சாதாரண உபயோக தொலைபேசி எண்கள் இடம்
பெறாது. இது வாய்ஸ் கால்கள், இணைய இணைப்புகள்,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான சிறப்பு தொலைபேசி
இணைப்பாகும்.

2007 செப். 10-இல் சி.பி.ஐ. தொலைத்தொடர்புத் துறை
அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தில்தான் இந்தச்
சட்டவிரோத தொலைபேசி இணைப்பக மோசடி வெளியானது.
அதில், 2437 1500 என்ற எண்ணில் தொடங்கி, 2437 1799
என்ற எண்ணில் முடியும் ஐ.எஸ்.டி.என். பீ.ஆர்.ஏ. இணைப்புகள்
செயல்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இத்தகைய இணைப்புகள் வீடுகளுக்கோ, தனிநபர்களுக்கோ
அளிக்கப்படுவதில்லை. இவை அதிக அளவில் தகவல்
தொடர்புப் பயன்பாட்டில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு
மட்டுமே பயன்படுபவை.

பொதுவாக பி.எஸ்.என்.எல்.லின் இணைப்புகள் அனைத்தும்
பொதுவான தொலைபேசி நெட்வொர்க் கட்டுப்பாட்டகத்தால்
(பி.எஸ்.டி.என்.) நிர்வகிக்கப்படும். ஆனால், மாறனுக்கு
வழங்கப்பட்ட இணைப்புகள் தனிப்பட்ட கிளைத் தொலை
பேசியகம் (பீ.பி.எக்ஸ்.) வாயிலாக அளிக்கப்பட்டன.

அதாவது, பீ.ஆர்.ஏ. இணைப்புப் பயனாளி பி.எஸ்.என்.எல்.லின் இ.டபிள்யூ.எஸ்.டி. பிரிவைப் பயன்படுத்தி, சாதாரணத் தொலைபேசி வழியிலிருந்து விலக்குப் பெற்றிருக்கிறார்.
இவ்வாறுதான் இ.டபிள்யூ.எஸ்.டி. பிரிவில் மாறன் சட்ட
விரோத தொலைபேசி இணைப்புகள் பெற்ற சாமர்த்தியம்
வெளிப்பட்டது.


மேலும், இதேபோன்ற 23 வேறு தொலைபேசி
இணைப்புகளையும் மாறன் பெற்றிருப்பதாக சி.பி.ஐ. தனது
கடிதத்தில் தெரிவித்தது. அதாவது, மாறன் பயன்படுத்திய
தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை 323 ஆனது.
இவை அனைத்தும் பி.எஸ்.என்.எல்.லின் கோப்புக்
குறிப்புகளிலிருந்து உறுதியாகின்றன.

ரகசிய இணைப்பகம்: மாறன் விரும்பிய எண்ணுக்கான
தேடுதலில் கிடைத்த அதிர்ச்சிகரமான தகவல், பி.எஸ்.என்.எல்.
கோப்பில் குறிக்கப்பட்டுள்ளது. 2437 1500 என்று தொடங்கும்
தொலைபேசி எண்களில் 300 விரிவாக்க இணைப்புகள்
(எக்ஸ்டென்ஷன்ஸ்) உள்ளன.

இவை சென்னை தொலைபேசியின் தலைமைப் பொது
மேலாளரின் பெயரில், மாறனின் இல்லத்தில் இயங்கி வந்தன
என்று அந்தக் குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாறனின் இல்லத்தில் தொலைத்தொடர்பு நிறுவன அதிகாரியின் பெயரில் இந்த இணைப்புகள் செயல்பட்டது என்பதே, இது ஒரு சட்டவிரோதமான இணைப்பகம் என்பதற்கான சான்றாகும்.

இதனை தொலைத்தொடர்புத் துறை அமைச்சகத்துக்கு
கடிதத்தில் தெரிவித்த சி.பி.ஐ., பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்
சிலருக்கு மட்டுமே தெரிந்த தனியார் தொலைபேசியகம் இது
என்று குறிப்பிட்டது. எனவேதான், பி.ஜி. செல் பிரிவினால்,
2007 ஜூனில் இந்த எண்ணைத் தேடிக் கண்டறிய
முடியவில்லை.

இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. சொல்ல மறந்த முக்கியமான ஒரு தகவல்,

பி.எஸ்.என்.எல். கோப்பில் உள்ளது. இந்த 300
இணைப்புகளிலிருந்து செல்லும் அழைப்புகளை, யாரிடமிருந்து
வருகின்றன என்பதை பிறர் அறிய முடியாது. இதற்கென
சி.எல்.ஐ.ஆர். என்ற வசதி பயன்படுத்தப்பட்டது.
இந்த வசதியை குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய – மாநில அமைச்சர்கள் மட்டுமே பெற முடியும். மத்திய உளவுத் துறையினர், அரசு உயர் பதவியில் உள்ளவர்களும் இந்த வசதியைப் பெறலாம்.

ஆனால், இந்த வசதியைப் பெறுவதற்கான தகுதி
உள்ளவர்களின் பட்டியலில் சென்னை டெலிபோன்ஸின்
தலைமைப் பொது மேலாளர் (சி.ஜி.எம்.) இல்லை. அவர்
இந்த வசதியைப் பெற வேண்டுமானால், தமிழகக் காவல்
துறை தலைமை இயக்குநரிடம் (டி.ஜி.பி.) முறைப்படி
விண்ணப்பித்து, அதற்கான பல படிநிலைகளைத் தாண்டி,
டெலிகாம் கண்காணிப்பு மற்றும் அமலாக்கப் பிரிவின்
(டி.இ.ஆர்.எம்.) ஒப்புதலைப் பெற வேண்டும்.
கண்காணிக்கப்படாத தொலைபேசி இணைப்புகள்
தேசப் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் என்பதால்
இந்தக் கட்டுப்பாடு உள்ளது.

இந்த வசதியை சி.ஜி.எம். பெறுவதாக இருந்தாலும்,
அவர் பெயரில் விண்ணப்பித்து வேறொருவரின் (மாறன்)
முகவரியில் அந்த இணைப்பை இயக்க முடியாது. அதுவும்
அமைச்சராக உள்ள ஒருவரின் இல்லத்தில் அந்த
இணைப்புகளை சி.ஜி.எம். பெயரில் இயக்குவது தேசப்
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதில் என்ன சந்தேகம்?

இந்த இணைப்புகளிலிருந்து செல்லும் அழைப்புகள்
யாரிடமிருந்து வருகின்றன என்று பிறர் அறியமுடியாது
என்பது தெரிந்தும், அந்த இணைப்புகளை இன்னொருவர்
பெயரில் பெற்றுத் தமது இல்லத்தில் அமைச்சராக இருந்து
தயாநிதி மாறன் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம்
என்ன?

அதுமட்டுமல்ல, சன் டிவி இந்த இணைப்புகளைப்
பயன்படுத்தியிருப்பதிலும் தேசப் பாதுகாப்புக்கான
அச்சுறுத்தல் இருக்கிறதே, அதை எப்படி மறுக்க முடியும்?

(தொடரும்)

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to திரு.தயாநிதி வழக்கு குறித்த – திரு.குருமூர்த்தி அவர்களின் கட்டுரை – கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும்….!!!

  1. nparamasivam1951 சொல்கிறார்:

    இவற்றை படித்தால் ஒன்றும் விளங்க வில்லை. மாற்று கட்சியான பி.ஜே.பி. ஆட்சியிலேயே திருவாளர் மாறன் அவர்கள், இவ்வளவு செல்வாக்கு சி.பி.ஐ.இடம் பெற்று இருந்தால், முந்தைய ஆன்டி அரசில், என்னன்ன செய்து இருப்பார் என எண்ணினால் பயமாக உள்ளது. நீதி வெல்லுமா? குரு மூர்த்தி வெல்ல வழி உள்ளதா? காலம் தான் பதில் சொல்லும்.

  2. seshan சொல்கிறார்:

    in India, laws are for common and poor people only.

    money and power holders are always above the law. the judgement s are always paid only….

    today one more example salman case………the un manned car running on the platform these poor people died automatically. ( in the case police witness – body guard also waste…..shameful judgement and judges and prosecution )

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.