ஒரு பித்தனின் மனைவியாக …..

bharathi with his wife chellammal

நண்பர் செந்தில் நாதன் உதவியால் கிடைத்தது ஒரு அரிய
பொக்கிஷம்…. இன்று மகாகவி என்று நம்மால் போற்றப்படும்
ஒப்புயர்வற்ற ஒரு சுதந்திரப் போராட்ட வீரனின்
வாழ்க்கைத்துணைவி –

“பைத்தியக்காரனின் மனைவி” என்றழைக்கப்பட்டு வாழ்நாள்
முழுவதும் தான் பட்ட அனுபவங்களை, தன் உணர்வுகளை
மனம் திறந்து வெளியுலகினருடன் பகிர்ந்து கொண்ட ஒரு உரை….

இதைப் படிக்கும்போது நெஞ்சம் அழுகிறது இப்போது…
ஆனால், அப்போது அவர் கண்ணீரைத் துடைக்க
முன்வரவில்லையே நம் சமூகம்….

நம் விமரிசன வலைத்தள நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள
விரும்பி கீழே பதிகிறேன். நன்றி நண்ப செந்தில் நாதன்.

—————————-

என் கணவர் – திருமதி. செல்லம்மாள் பாரதி

(1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் “என் கணவர்” என்ற
தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.)

வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த
மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால்
வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான்
கண்டுபிடிக்க வேண்டி வருகிறது.

காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன்
அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக்
காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?.

ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட
வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ
உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச்
செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும்
நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும்
ஏசப்பட்டேன்… விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்.

உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன்
அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச்
சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும்
வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.

கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும்
கூட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை.
கற்பனைச் சிறகு விரித்துக் கவிதை வானில் வட்டமிடும் பறவை,

பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும்

சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?

வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த
மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை ஆனால் வயிற்றுக்குணவு
தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க
வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும்
கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற
நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால்,
என்ன செய்ய முடியும்?

கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்;
அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த
வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான்
நினைக்க முடியும்?

சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு
பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே?
சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும்
என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது.

அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிலிருந்து
இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான்
அமைந்திருக்கிறது.

ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம்
பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய
நான் அவ்வாறு நிஷ்டையிலிருக்க முடியுமா?

கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப்
பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன்,
இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை.
எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல்
தேசியக் கவியாகவும் விளங்கியவர்.
அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன்.

கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது
அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது.
ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும்
புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு
பாய்ந்து செல்லும் அவர் கவிதை.

காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல்,
மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம்
ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும்.

ஸூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது.
வெளியிலே நின்று நிமிர்ந்து ஸூரியனைப் பார்ப்பதுதான்
வெய்யற் குளியல். ஸூரியகிரணம் கண்களிலேயுள்ள
மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி,
தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய்,
புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.

அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால்,
அவரது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால்
பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும்
பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம்
உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும்
அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால்
சகிக்கவே முடிந்ததில்லை.

சிஷ்யருக்குக் குறைவு இராது. செய்திகளுக்கும் குறைச்சல்
இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும்

நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க
முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!

இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே
பேச வேண்டும் என்பது அவரது கட்டளை.
எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது.
இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும்
தெரிந்த விஷயம்தான்.

புதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை
என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான்.
எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு.

ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு,
இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை
லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான
துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.

புதுவையில் தான் புதுமைகள் அதிகம் தோன்றின.
புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி,
புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும்
எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன்.
பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா
என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை
அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத்

துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள்
நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.

புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும்
இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு
செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார்.
நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது
கவிதைகள் எல்லாம் அங்கு தான் தோன்றின.

மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர்,
எத்தனை இடையூறுகளுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும்,

அவற்றையெல்லாம் மோதிமிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில்
முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.

மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார்.
தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை
முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது
ஓர் அதிசயமன்று.

தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று;
ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும்
தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து
நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது.
“விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!” என்று அவரது
கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத்
தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

1) “தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில்
இந்த ஜகத்தினை அழித்திடுவோம்”

2)பிச்சை எடுக்கும் நிலை :

பகல் முழுவதும் சுதேசி பிரச்சாரம் செய்தார்.
தங்க இடம் இல்லை.
உணவு கொடுக்க யாருமில்லை.
பசி, பட்டினியால் உடல் தளர்ந்தது.
இரவு நேரத்தில் ஒரு போர்வையால் முகத்தை எல்லாம்
மூடிக் கொண்டு சில வீட்டு வாசலில் நின்றுகொண்டு – ” அம்மா

ராப்பிச்சைக்காரன் வந்துள்ளேன், பழைய சோறு
இருந்தால போடுங்களம்மா” என்று பிச்சை எடுக்க ஆரம்பித்தார்.

3) இன்று உலகம் போற்றும் கவிச் சக்கரவர்த்தியுடன்
அன்று கடைசி நாளான திருவல்லிக்கேணி மயானத்திற்குச்
சென்றவர்கள் சுமார் இருபது பேர் இருக்கலாம்.
பிராமணர்களுக்குகென்று குறிக்கப்பட்டிருந்த பகுதியில்
அவர் உடல் தகனம் செய்யப்பட்டது.

4)தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி
வாடித் துன்ப மிக வுழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?”

——————————————————

இல்லை பாரதி – சத்தியமாக இல்லை….
உன் வாழ்வு ஒரு அமர வாழ்வு…
நீ என்றைக்கும் வீழ மாட்டாய்…
தமிழ் உள்ளவரை நீ இருப்பாய்…

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

19 Responses to ஒரு பித்தனின் மனைவியாக …..

 1. கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

  படித்தவுடன் மிகுந்த மன வேதனையில் எனது எண்ணவோநம்மாலட்டம் வெறுமையாகிவிட்டது.இனி எதை எழுதி யாரைக் குறை சொல்லி என்ன ஆகப்போகிறது?நம்மால் செயல்பட முடியாத நிலையில் இறைவனைக் குறைசொல்லி மாய்வோமே அதுதான் என் நிலை.

 2. ராஜ நடராஜன் சொல்கிறார்:

  பாரதியார் பற்றி வ.ராமசாமி எழுதிய மின் நூல் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றது.பாரதி பற்றி புரிந்து கொள்ள உதவும்.

  • Ganesan சொல்கிறார்:

   எங்கே படிக்கலாம் என்பதை சொல்லவும் ப்ளீஸ் .

   • ஆவி சொல்கிறார்:

    பாரதி பற்றி அவருடன் சமகாலத்தில் வாழ்ந்து பழகிய செல்லம்மாள் பாரதி, யதுகிரி அம்மாள், பரசி சு நெல்லையப்பர், கனகலிங்கம் ஆகியோர் எழுதியிருந்தாலும்,வ.ரா எழுதியது பலரின் வரவேற்பைப் பெற்றது எனச் சொல்லலாம்.
    இங்கே பதிவிறக்கலாம். வைரசிற்காக சோதனை செய்யப்பட்டது.பயமின்றி பதிவிறக்கலாம்.
    http://freetamilebooks.com/ebooks/bharathiyar-history/

    • Ganesan சொல்கிறார்:

     மிக்க நன்றி . download செய்து விட்டேன்

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்ப ஆவி,

     சரியான தகவலை, சரியான நேரத்தில் இங்கு தந்தமைக்கு
     மிக்க நன்றி.

     நான் ஏற்கெனவே பல சமயங்களில் சொன்னது போல்,
     நல்ல ஞானமும், presence of mind -உம் உள்ள நண்பர்கள்
     இந்த வலைத்தளத்தின் மூலம் எனக்கு கிடைத்திருப்பது, மற்றும்
     அவர்கள் தரும் மிகவும் பயனுள்ள, அறிவுசார்ந்த பின்னூட்டங்கள்
     இந்த வலைத்தளத்திற்கு கிடைப்பது இந்த தளத்தின் மிகப்பெரிய பலம்.
     அத்தகைய நண்பர்கள் அனைவருக்கும் சேர்த்து இந்த இடத்தில்
     என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர்களே,

      கிட்டத்தட்ட 5 மணி நேர அவகாசத்துக்குள்ளாக,
      இந்த வலைத்தளத்தின் மூலமாகவே சுட்டியை
      பயன்படுத்தி ( http://freetamilebooks.com/ebooks/bharathiyar-history/ )
      -23 நண்பர்கள் பாரதி வரலாற்றை பதிவிறக்கம்
      செய்திருக்கிறார்கள். பாரதியின் மீது அவ்வளவு ஆர்வம்
      இருப்பதைக் காண
      மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

      தமிழ் உள்ளவரை பாரதி இருப்பான்.
      என்பதற்கு இது உடனடியான உத்தரவாதம்….
      நண்பர்களுக்கு மீண்டும் நன்றி.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

    • today.and.me சொல்கிறார்:

     இணைப்பிற்கு நன்றி நண்ப ஆவி.

    • ltinvestment சொல்கிறார்:

     Very Thank you.

 3. ராஜ நடராஜன் சொல்கிறார்:

  சேட்டா தேவதாஸ்! எவட போயி?

 4. nparamasivam1951 சொல்கிறார்:

  ஆம். தமிழ் உள்ள வரை பாரதி இருப்பார்.

 5. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  Great,can we think of the present generation kavignarkal—v.muthu, Pa.Ve etc?

 6. KuMaR சொல்கிறார்:

  அரிய கட்டுரை…

  பகிர்வுக்கு நன்றி KM Sir..

 7. ravi சொல்கிறார்:

  A Gem..

 8. Ramanathan சொல்கிறார்:

  Arumai KM sir

  Nenju porukkuthillaiye….

 9. Ganesan சொல்கிறார்:

  பாரதியை அங்கீகரிக்க அல்லது அவனுக்கு தேவையான அடிப்படை வசதியை தர அவன் காலத்து சமூகம் தவறி விட்டது . அவனை பிச்சை எடுக்க வைத்துள்ளது . மனம் வலிக்கிறது . இனி மேலாவது நாம் இப்பொழுது வாழும் நல்லவர்களை , உண்மையான சமூக அக்கறை உள்ளவர்களை சமூகத்துக்கு அடையாளம் காட்டி அவர்களை அங்கிகரிக்க முயற்சி செய்ய வேண்டும் . அதற்கு ஒரு அமைப்பு அல்லது குழு போன்றது அமைய வேண்டும் . நம்மில் யாராவது ஒருவர் initiative எடுக்க வேண்டும் . பதிவுக்கு நன்றி திரு காவிரி மைந்தன் .

 10. ksdkemp சொல்கிறார்:

  வேதனையில் நெஞ்சு கனக்கிறது….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.