கேப்டன் விஜய்காந்துக்கு வலை வீசும் விகடன்…..!!!

vijaykanth-1

அண்மையில் கேப்டன் விஜய்காந்த் அவர்கள் ஆனந்த விகடன் வார இதழுக்காக, விரிவாக பேட்டி காணப்பட்டார்.
பேட்டி எடுத்தவர் விஜய்காந்த்துக்கு எப்படி எல்லாம்
வலை வீசிப் பார்க்கிறார் ( யாருக்காக ….!!! ) என்பதையும்,
அதிலிருந்து கேப்டன் எப்படி வழுக்கி, நழுவி, விடுபட்டு,
வெளியே வந்து விடுகிறார் என்பதையும் நண்பர்கள் பார்த்து
ரசிக்க – பேட்டியிலிருந்து சில சுவையான பகுதிகள் கீழே –

கேள்வி – என்ன முடிவு செய்திருக்கிறீர்கள் …
யாரோடு கூட்டணி ..?

பதில் – கூட்டணியைப் பற்றி முடிவு செய்ய இப்ப என்ன
அவசரம் ..? அதுக்கு நாலு மாசம் இருக்கிறதே…?

கேள்வி – நீங்கள் திமுக வுடன் தான் கூட்டணி வைப்பீர்கள்
என்று பரவலாகப் பேச்சு இருக்கிறதே …?

பதில் – அப்படி எதுவும் இல்லை ….!!!

கேள்வி – உங்களோடூ பேச்சுவார்த்தையை திமுக தொடங்கி விட்டதாகச் சொல்கிறார்களே…?

பதில் – என்னோடு யாரும் பேசவில்லை…
யாரோ சும்மா கிளப்பறாங்க….!!! 🙂

கேள்வி – 90 தொகுதிகள் நீங்கள் கேட்பதாகச் சொல்கிறார்களே..?

பதில் – 90-ம் கேட்கலை… 100-ம் கேட்கலை….!!! 🙂

கேள்வி – கேட்கவே இல்லையா …?

பதில் – ஒரே ஒரு தொகுதி கூட கேட்கல்லை…!!!

கேள்வி – திமுக வினரே அப்படிச் சொல்லி வருகின்றனரே…?

பதில் – அப்படிக் கேளுங்க…திமுக காரங்க அப்படிச் சொல்லி இருக்கலாம்…. நாங்க சொல்லல்லையே…? 🙂 🙂

அதிமுக, திமுக ரெண்டு கட்சிகளுக்கும் இங்க எந்த
வித்தியாசமும் இல்லை. இன்னைக்கு சென்னையும் மற்ற
நகரங்களும் மழை வெள்ளத்துல மிதக்குதுன்னா, அதுக்கு இந்த
ரெண்டு கட்சிகளும் தான் காரணம். மணல் வியாபாரம் பார்க்க
ஆறுகளை அழிச்சு, ரியல் எஸ்டேட் தொழில் செழிக்க ஏரிகளை
காலி பண்ணி, கிரானைட்ல சம்பாதிக்க மதுரையின் சுற்று
வட்டாரத்தையே சிதைச்சு… இந்த அழிவுகள் எல்லாத்துக்குமே
திமுகவும் அதிமுகவும் பாதி பாதிக் காரணம். இந்த ரெண்டு
கட்சிகளுக்கும் வித்தியாசம் இல்லை. ரெண்டு கட்சிகளுமே
வரக்கூடாதுங்கிறது தான் என்னோட கொள்கை….!!!

கேள்வி – இப்படித்தான் முதலில் சொன்னீர்கள். ஆனால்,
அதிமுக வுடன் கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி
வைத்துக் கொண்டீர்களே …?

பதில் – அன்றைய திமுக ஆட்சியை வீழ்த்துவதற்கு
ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தால் சரிய இருக்கும்னு
ஆலோசனை சொன்னாங்க. எனக்கும் அதுதான் “சரி”ன்னு
பட்டது. கூட்டணி வைக்கும்போதே, ஆறு மாசம் பார்ப்பேன்.
ஆட்சி ஒழுங்கா இல்லைன்னா, எதிர்த்துக் குரல் கொடுப்பேன்னு
சொன்னேன். ஆட்சி அமைச்ச கொஞ்ச நாள்லயே பஸ் கட்டணத்தை ஜெயலலிதா கூட்டினார். அது எனக்குப் பிடிக்கலை. அதனால ஆட்சியின் 100வது நாள் விழாவுக்கு நான் போகலை. பொக்கே மட்டும் கட்சி சார்பில் கொடுத்து விட்டேன். அது ஜெயலலிதாவுக்கு கோபம். சட்டமன்றம் கூடினதும், எங்க கட்சி உறுப்பினர் சந்திரகுமார் பால் விலை உயர்வை கண்டிச்சு பேசினார். அதுக்கு மந்திரி சப்பைக்கட்டு கட்டினார். எங்க கட்சி உறுப்பினர்கள் பதில் கொடுத்தாங்க.. அதுக்குப் பிறகு நடந்தது எல்லாம் எல்லாருக்கும் தெரியும்…. கூட்டு சேர்ந்து கொள்ளை அடிக்கறதுக்காக கூட்டணி சேர்றவன் இல்ல நான். கூட்டு சேர்ந்தா மக்களுக்கு நல்லது பண்ண முடியுமாங்கிறதுக்காக சேர்பவன். அது சாத்தியம் இல்லைன்னதும் உடனே வெளியேறினேன். அதிமுகவோடு கூட்டு சேர்ந்த காலத்துல இருந்து இன்னைக்கு வரைக்கும் அதுக்காக வருத்தப்பட்டு இருக்கேன்…!

கேள்வி – இதே மாதிரியே, அதிமுகவை வீழ்த்த
திமுக வுடன் சேர்வீர்கள் என்கிறார்களே …?

பதில் – ரெண்டு பேரையும் வீழ்த்துவதற்காக எந்த தியாகத்தையும்
செய்வேன். அதை மட்டும் தான் இப்ப சொல்ல முடியும்…!

கேள்வி -திமுகவுக்கும், அதிமுகவுக்கும் வேறுபாடு இல்லையா..?

பதில் – அது மணி, மணி, மணி – இது நிதி, நிதி, நிதி.
அவ்வளவு தான். தங்கமணி, வேலுமணி,வீரமணி, புதுக்கோட்டை சுப்பிரமணியன், முக்கூர் சுப்பிரமணியன்
இது தான் அதிமுக….

கருணாநிதி, தயாநிதி, உதயநிதி, துரை.தயாநிதி –
இது தான் திமுக…..! என்ன வித்தியாசம் இருக்கு ….?
இது தான் இந்த இரண்டு கட்சிகளோட சாதனையும்…!
🙂 🙂

கேள்வி – ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளை நீங்கள்
உடைத்தால், மீண்டும் அதிமுக வருவதற்கு வாய்ப்பு உண்டு
என்பது தானே கூட்டணிக்கணக்கு….?

பதில் – சார், இந்த மாதிரி கணக்கு பார்த்து, பார்த்து தான்
இரண்டு பேரையும் மாறிமாறி உட்கார வெச்சுக்கிட்டு இருக்கோம்.
இவர் வரக்கூடாதுன்னு அவங்க; அவங்க வரக்கூடாதுன்னு இவர்; ரெண்டு பேரும் வரக்கூடாதுன்னு நினைக்கிற மக்கள் இப்போ
அதிகம் ஆகிட்டாங்க. அதுனால இந்த கணக்கு இந்த தேர்தல்ல
செல்லுபடி ஆகாது….!!!

கேள்வி – நீங்கள் நிச்சயம் திமுக கூட்டணிக்கு தான் வருவீர்கள்
என அந்த கட்சி நம்புகிறதே…?

பதில் – இது எப்படி இருக்குன்னா, “புலிக்கு பயந்தவங்க
என் மேல வந்து படுத்துக்கோங்க”
ன்னு சொல்ற மதிரி இருக்கு…! 😀 😀

கேள்வி – ஒருவேளை நீங்கள் இறங்கி வருவீர்கள் என
எதிர்பார்க்கிறார்களோ …?

பதில் – ஏன்…நான் தான் இறங்கி வரவேண்டுமா…?
அவங்க இறங்க மாட்டாங்களோ …? லாலு இறங்கியதால் தான்
பீகார்ல வெற்றி கிடைச்சுது…!

கேள்வி – ஸ்டாலினின் “நமக்கு நாமே” பயணத்தைப்
பார்க்கிறீர்களா ?

பதில் – அது ஷூட்டிங். ஒரு நாளைக்கு ரெண்டு கடையில
டீ குடிக்கறார். ரெண்டு கடையில வடை சாப்பிடறார்.
ரெண்டு இடத்துல பேசறார்…
அவ்வளவு தான் ..ஓவர்.. ஓவர்.. ஓவர்..! 🙂 🙂

—————————–

பின்குறிப்பு –

கேப்டனை மாட்டிவிட, எதிலேயாவது commit பண்ண வைக்க
அவரால் ஆன மட்டும் முயன்று பார்க்கிறார் பேட்டி கண்ட
திரு.ப.திருமாவேலன்….
ஆனால், அத்தனைக்கும் தப்பி – எப்படி சேதாரம் இல்லாமல்
வெளியே வந்து நிற்கிறார் விஜய்காந்த் பார்த்தீர்களா…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to கேப்டன் விஜய்காந்துக்கு வலை வீசும் விகடன்…..!!!

 1. KuMaR.S சொல்கிறார்:

  கருப்பு MGR சிக்குவாரா என்ன?

  தங்கள் ரசித்ததை பகிர்ந்தமைக்கு நன்றி கே.எம் சார். . .

 2. thiruvengadam சொல்கிறார்:

  விகடன் திமுக ஆதரவு நிலை என்ற தங்களின் ஆதாரமாக இந்த பேட்டி எடுத்துக்கொள்ளும் நேரத்தில் விஜய்காந்த் பற்றி அவ்வப்பொழுது ஊடக பதிவுகளில் சுட்டிக்காட்டப்படும் எதிரான விமர்சனங்கள் இனி தொடராத அளவு அவரும் ஒரு சரியான அரசியல்வாதிதான் என்று இப்பேட்டியின் மறுபக்கம் என கருதுகிறேன்.

 3. ssk சொல்கிறார்:

  நிச்சயம் அதிமுக செல்ல நல்ல வாய்ப்பு உண்டு கடைசி நேரத்தில்.
  எல்லாம் அரசியல் பேரம் தானே இங்கு நடக்கிறது.

  நம் அரசியல் அமைப்பே பல நாட்டின் அரசியல் அமைப்பை படித்து அதன் சிறப்பை உள்வாங்கி கொடுக்கபட்டது. அது காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும்.
  இந்தியா தேர்தல் முறைகளை மறு பரிசீலனை செய்து மாறி வரும் உலகத்திற்கு தக்கவாறு மக்களுக்கு நன்மை செய்யும் ஆட்சியை அமைக்க செய்ய வேண்டும். அப்படி தேர்ந்தெடுத்த அரசு செயல் படாவிட்டால் எப்படி மாற்றுவது என்பதையும் யோசிக்க வேண்டும். சிறந்த அறிவாளிகளை கொண்ட நம் நாட்டில் இதை செய்தால் அனைத்து மக்களின் வாழ்வும் நலம் பெரும்.

 4. gopalasamy சொல்கிறார்:

  pokkiri becomes a broker

 5. ஆவி சொல்கிறார்:

  போட்டு வங்க நினைத்த விகடன்-தப்பித்துக் கொண்ட காப்டன்.

  இதைப் படிக்கும் போது இணைய சமநிலைக்கு எதிரான முகநூலின் சமீபத்தைய -Free Basics – இதன் ஆபத்தைப் புரிந்து கொள்ளாத இந்தியர்கள் முகநூலின் தந்திரத்தையும்(zero-rating) புரிந்து கொள்ளாது அதன் வலையில் விழுந்து கொண்டிருப்பது, நினைவுக்கு வருகிறது.

  காப்டன் தப்பித்துக் கொண்டார். இந்தியர்கள் முகநூலிடம் மாட்டிக் கொண்டார்கள்.
  ஆனாலும் தமிழக தேர்தல் அரசியலில் எதுவும் நடக்கலாம்.

 6. ஆவி சொல்கிறார்:

  ஆனால்…காப்டன் அப்படிச் சொல்ல,இவர் ஏன் இப்படிச் சொல்கிறார்?

  என்ன மாற்றத்தை இவர் விரும்புகிறார்?

  ஒருவேளை சண்முகசுந்தரம் கேட்டதுபோல்(அதாவது விகடன் போல்)……இருக்குமா?

 7. Thiru Vengadam சொல்கிறார்:

  This is not related to this subject. Wish to pass on to you the anxiety of a Citizen, like me. After reading you may remove this . நடிகர் சங்கம் தேர்தல் நடைபெற்ற பள்ளிக்கு அடுத்ததாக இருக்கும் எனது விட்டு மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் St.ebbas பள்ளி வளாகம் முழுவதும் தெரியும் .. election coverage செய்ய Thanthi TV Sun TV ிருபர்கள் கேமரா மற்றும் மைக்குடன் மேல வந்து வீட்டு மொட்டை மடியில் கேமரா வைத்து கொள்ள அனுமதி கேட்டார்கள் .. வேண்டாம் என்று மறுத்தவுடன் அமைதியாக சென்று விட்டர்கள் ..
  News7Tamil டிவி இரு இளைஞர்கள் அனுமதி இல்லாமல் மொட்டை மாடி சென்று கேமரா வைத்து position பார்த்து கொண்டு இருப்பதாக செக்யூரிட்டி சொல்ல ., அழைத்து வர சொன்னேன் ., வந்தவுடன் அனுமதி இல்லாமல் ஏன் மேல சென்றேர்கள் என்றவுடன் கொஞ்சம் கூட வருத்தம் தெரிவிக்காமல் உறுத்தலே இல்லாமல் நடிகர் சங்கம் தேர்தல் சேனல் கவர் பண்ண வேண்டும் என்று பெருமையுடன் பிரஸ் ID காட்டினார்கள் .
  டிவி சேனல் என்றால் எங்கு வேண்டும் என்றாலும் அனுமதி இல்லாமல் செல்விர்களா என்றவுடன் ..அதில் ஒருவர் துடுக்குடன் மக்களுக்கு செய்தி சொல்வது எங்கள் வேலை என்றார் ..பொறுமை இழந்து this is private property will book you under tresspasing act ..செருப்பு பிஞ்சிரும் … வெளியே போயிடுங்க என்றேன் கடுப்பாகி .. முறைத்த படியே சென்று விட்டார்கள் ..
  நிற்க …..
  மனைவியின் மரணம் ., மகனின் திருமண பிரச்சனை ., ராயல்டி விஷயத்தில் ஏமாறப்பட்டு தனிப்பட்ட வாழ்வில் பல துக்கங்களை சுமந்தவர் இளையராஜா .
  பாரம்பரியம் கொண்ட மவுண்ட் ரோடு பத்திரிகை கூட தமிழக அரசு தருவித்த செயற்கை பேரிடர் வெள்ளத்தால் முழ்கி இரண்டு நாட்கள் மூடி விட்டார்கள் ..அந்த வெள்ள பெருக்கில் இரவில் படகில் நாலடி தண்ணீர் உள்ள புகுந்த Little flower deaf and dumb chennai பள்ளிக்கு அவர் செய்த உதவி மகத்தானது ..
  இளையராஜா விஷயத்தில் அவர் செய்தியாளரிடம் உனக்கு அறிவு இருக்கா என்று கேட்டதை அப்பிடியே வழி மொழிகிறேன் .. எந்த தகுதியில் இந்த இடத்தில இதை கேக்குறிங்க என்பதற்கு பதிலாக உணர்ச்சி வசப்பட்டு (at that time he was very nervous and his hands were found shaking.. ) உனக்கு தகுதி இருக்கா என்று கேட்டு விட்டார் என்றே அவதானிக்கிறேன் ..
  அவன் அவன் காலம் காலமா சம்பாத்தியத்தை தொலைத்து நொந்து நூடல்ஸ் ஆகி உக்காந்து இருக்கான் .. இப்போ போயி ஆஸ்கார் அவார்ட் வாங்கின பீப் பாடலுக்கு கேக்குறிங்க விளக்கம்..
  அவரிடம் போய் அந்த சமயத்தில் இந்த முட்டதனமான கேள்வியை கேட்ட நிருபரை செருப்பால் அடித்து விட்டு உங்கள் உரிமைக்கு குரல் எனும் மைக்கை நீட்டுங்கள் பத்திரிகை நண்பர்களே ..
  இப்போ உங்க soruce of news is from social media தானே வருகிறது.. காலையில் பத்திரிகை எடுத்தா எல்லா விஷயமும் சுண்டி போன ஆறின கஞ்சி விஷயமா தானே இருக்கு .. மனசுல கையை வச்சு சொல்லுங்க…
  நாலரை வருஷமா முதல்வரை விடுங்கள் ஒரு மந்திரியை கூட உங்கள் மைக் நெருங்க முடியவில்லை ..மந்திரியை விடுங்கள் ஒரு ஆளும் கட்சி MP/MLA/Cousilor என்று ஒருவரையாது உங்கள் மைக் பார்த்து இருக்குதா ?
  பின்னே என்ன கழட்டி கிழிச்சிங்க அப்பிடின்னு பொங்கசோறு படையல் இப்போ போடுறிங்கன்னு உங்க மனச்சாட்சி உங்களை தட்டி கேக்கலையா Mr./ Mrs./ Ms மீடியா ..
  போங்க சார் போங்க …. போய் ஜெயலலிதா கிட்டே ஏன் கொஞ்சம் கூட அடிப்படை அறிவு இல்லாம ஏரியை ஒரேடியா திறந்து விட்டிங்க மேடம்ன்னு கேளுங்க .,
  கேக்க முடியலன்னா உங்களை நீங்களே செல்பி மைக் வச்சு அட்லீஸ்ட் உங்க டூத்பேஸ்ட் ல உப்பு இருக்கான்னு உங்களையாவது நீங்களே கேட்டுகோங்க ..
  நியாபம் வச்சுகோங்க. நீங்கள் போற்றி பாடி புகழும் ., முட்டி போட்டு வணங்கும் ஜெயலலிதா கூட உங்களை நம்பாம whatapp இல் தான்பேசுகிறார் ..
  Wake up media please .. உங்களை நீங்களே சுய பரி சோதனை செய்து கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டது.
  பெரியார், அண்ணா இவர்களும் பத்திரிக்கையாளர்கள் தான் மறந்து விடாதீர்கள்.

  • ஆவி சொல்கிறார்:

   ஐயா! உங்கள் கோபமும் ஆதங்கமும் நியாயமாகப்படுகிறது. ஆனால் இன்று ஊடகங்கள்,அரசியல்வாதிகள்,சினிமாக்காரர்கள்,சாமியார்கள் எல்லாம் கார்பரேட் நிறுவனங்கள் ஆகிவிட்ட நிலையில்,மக்களும் அதன் பின்னே செல்ல ஆரம்பித்து விட்ட நிலையில் எதையும் திருத்தவோ மாற்றவோ முடியாது.
   //Wake up media please .. உங்களை நீங்களே சுய பரி சோதனை செய்து கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டது.//

   திருந்த வேண்டியது நீங்கள்-அதாவது மக்கள்- மக்கள் திருந்தாதவரை திருத்தப்படாதவரை எதையும் மாற்ற முடியாது.மாறவும் மாட்டாது.
   காந்தியும்,வினோபாவும் ஏன் ரஷ்யப் புரட்சியும் மக்களிடம் இருந்தே ஆரம்பித்தன.

   ஆனால்….. ஜெயலலிதா வாட்ஸ் அப்பில் தெரிவித்ததை தப்புக் கூற
   முடியாது.தலைபோகும் பல விசயங்களுக்கு மோடிஜி சமூகத்தளத்தில் அல்லது வெளி நாட்டில் வைத்தே பதில் சொல்கிறார்.இல்லையேல் மௌனம் காக்கிறார். கருணாநிதியோ சமூகத் தளத்தை எதிர்கொள்ள முடியாமல் ஓடிவிடுகிறார்.அதற்காக ஜே க்கு வக்காலத்து வாங்குவதாக எண்ண வேண்டாம்.அவர் செய்வது சரி என என்றும் வாதிட மாட்டேன்.

   //இப்போ உங்க soruce of news is from social media தானே வருகிறது.. காலையில் பத்திரிகை எடுத்தா எல்லா விஷயமும் சுண்டி போன ஆறின கஞ்சி விஷயமா தானே இருக்கு .. மனசுல கையை வச்சு சொல்லுங்க…//

   நீங்களே இணையத்தை நாடி ஓடும் போது உங்கள் கருத்தை வைக்கும் போது,ஊடகங்களில் தகவல்களை மாற்றித் தரும்போது,தலைப்பில் ஒன்றையும் முடிவில் வேறொன்றையும் போட்டு மக்களை திசைதிருப்பும் போது , சமூகத் தளங்களில் பேசுவது இன்றைய மாற்றாகப் போய் விட்டது.
   தவிர்க்க முடியாது,ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப திருவேங்கடம்,

   //After reading you may remove this .//

   எனக்குப் பிடிக்காததை எல்லாம் தூக்கி எரியும் ஆசாமி
   நானல்ல என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்றே
   நம்புகிறேன்.

   மாற்றுக் கருத்துக்களை தாங்கியதாக இருந்தாலும் கூட
   நாகரிகமான முறையில் கருத்துக்களை எடுத்துச் சொல்லும்
   எந்த பின்னூட்டமானாலும், அவற்றிற்கு இந்த தளத்தில்
   நிச்சயம் இடம் உண்டு.

   இது விஷயத்தில் நான் – நண்பர் ஆவி-யின் கருத்தை
   ஏற்கிறேன் ……

   // திருந்த வேண்டியது நீங்கள்- அதாவது மக்கள் –
   மக்கள் திருந்தாதவரை திருத்தப்படாதவரை எதையும்
   மாற்ற முடியாது. மாறவும் மாட்டாது.
   காந்தியும்,வினோபாவும் ஏன் ரஷ்யப் புரட்சியும் மக்களிடம்
   இருந்தே ஆரம்பித்தன. //

   உங்கள் வீட்டு மொட்டை மாடியை ஆக்கிரமிக்க முயன்றதால்,
   நீங்கள் மீடியாவைப் பற்றிய உங்கள் குறைகளை
   வேகமாக வெளிப்படுத்துகிறீர்கள்…. நீங்கள் கூறியது
   சரி என்றே வைத்துக் கொள்வோம்….

   ஆனால், எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாத, வெறும்
   காழ்ப்புணர்ச்சியை மட்டுமே அடிப்படையாக வைத்துக் கொண்டு,
   மக்களிடையே திகிலையும், கலவரத்தையும்,
   வெறுப்புணர்ச்சியையும், தூண்டி விடக்கூடிய மோசமான
   வதந்”தீ”க்களை, திமுக சார்பில் விகடன் பரப்பியதே, பரப்புகிறதே –
   அதைப்பற்றி நீங்கள் ஏன் எந்தவித கருத்தையும்
   சொல்லவில்லை….?

   விகடன் செய்யும் “பொறுக்கி”த்தனத்தையும்,
   “போக்கிரி”த்தனத்தையும் – அத்தனை ஆதாரங்களுடன் விளக்கி
   expose செய்து இங்கு இடுகைகள் போடப்பட்டனவே…

   அதனைத் தொடர்ந்து எத்தனையோ நண்பர்களிடமிருந்து
   வந்த பின்னூட்டங்களும் இதனை மேலும் உறுதிப்படுத்தினவே…

   // Wish to pass on to you the anxiety of a Citizen//

   – என்று இப்போது கூறும் நீங்கள் அந்த இடுகைகளை எல்லாம்
   படித்தீர்களா – இல்லையா …? அவற்றின் மீது
   as a responsible Citizen – உங்களது anxiety-ஐ
   ஏன் பதிவு செய்யவில்லை என்று நான் தெரிந்து கொள்ளலாமா…?

   “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
   அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு ”

   -என்பது வள்ளுவரால் நம்மைப் போன்றவர்களுக்காகத் தானே
   சொல்லப்பட்டது. விகடனின் பொய்ப்பிரச்சாரங்களையும்
   இப்போது போலவே, ஒரு பொறுப்புள்ள குடிமகனான நீங்கள்
   கண்டித்திருக்க வேண்டியது அவசியம் தானே …?

   -விடுங்கள்….
   நானும், பொறுப்புள்ள citizens எல்லாம் கூட –
   பொறுப்பற்ற, வதந்திகளை எல்லாம் நம்பி விடுகிறார்களே –
   என்கிற ஆதங்கத்தில் எழுதி விட்டேன்….
   நாகரிகமான முறையில் எழுதப்படும் உங்கள் கருத்துக்களுக்கு
   நிச்சயம் இங்கு இடம் உண்டு என்பதை நீங்களே இப்போது
   உணர்ந்திருப்பீர்கள்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 8. paamaranselvarajan சொல்கிறார்:

  // கேள்வி – ஸ்டாலினின் “நமக்கு நாமே” பயணத்தைப்
  பார்க்கிறீர்களா ?
  பதில் – அது ஷூட்டிங். ஒரு நாளைக்கு ரெண்டு கடையில
  டீ குடிக்கறார். ரெண்டு கடையில வடை சாப்பிடறார்.
  ரெண்டு இடத்துல பேசறார்….! // —- இந்த ” போடு ” எவ்வளவு … நாளைக்கு ….? அடுத்து தினமலர் முதல் பக்கம் // அரசியல்
  குவியும் கடிதங்கள்: குழப்பத்தில் விஜயகாந்த் // என்கிற செய்தியில் கடைசியாக // , தமிழகத்தில் தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., கூட்டணி ஏற்படுத்தலாம். இப்படிப்பட்ட கருத்துக்களுடன், கட்சியினர் விஜயகாந்துக்கு கடிதம் அனுப்பி வருகின்றனர்.இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின. – என்று தினமலர் நிருபர் பதிவு செய்து உள்ளது … விகடன் போல அடுத்த தி.மு.க.விற்கு தினமலர் ” வால் ” பிடிக்கும் வேலையா …?

 9. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  காவிரிமைந்தன் அவர்களுக்கு வணக்கம்!

  உங்கள் மீது எந்த அளவுக்கு நான் மதிப்பும் அன்பும் வைத்திருந்தேன் என்பது உங்களுக்கே தெரியும். நீங்களே இதே தளத்தின் கருத்துரைகளில் அதைக் கூறியும் இருக்கிறீர்கள். ஆனால், விகடன் பற்றி அண்மைக்காலமாக நீங்கள் எழுதி வரும் பதிவுகள் உங்களைப் பற்றிய என் மனக் கோட்டையின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்கின்றன!

  நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் தமிழ் இதழ் ஒன்றைப் பற்றிப் ‘பொறுக்கி விகடன்’ என வரிக்கு வரி எழுதுகிறீர்களே, உங்களுக்கே கூசவில்லை? “இதை விட இவர்கள் ‘வேறு வேலை’ பார்க்கப் போயிருக்கலாம்” என்றும் ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறீர்கள்! எழுபது வயதுள்ள பெரிய மனிதர் ஒருவர் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளா இவை?

  ‘கருநாடக அரசு தமிழ்நாடு அரசுக்கு அளித்த உதவி’ பற்றி விகடன் முன்னுக்குப் பின் முரணாக ஒரு செய்தி வெளியிட்டிருப்பதை மட்டும் வைத்துக் கொண்டு, அந்த ஒரே ஒரு விதயத்தை வைத்துக் கொண்டு இலட்சக்கணக்கான உலகத் தமிழர்களின் நம்பிக்கைக்குரிய ஓர் ஊடகத்தை வாய்க்கு வந்தபடியெல்லாம் தூற்றுகிறீர்களே, தெரியாமல்தான் கேட்கிறேன், நீங்களே ஒரு கட்டுரையைத் தெரியாத்தனமாகத் தவறாக – தவறான தகவல் கொண்டதாக – எழுதி விட்டீர்கள் என வைத்துக் கொள்வோம். தவற்றை நாங்கள் சான்றுடன் சுட்டிக் காட்டி விட்டால் என்ன செய்வீர்கள்? உடனே அந்தக் கட்டுரையின் தலைப்பை மாற்றி விடுவீர்களா? அது தவறு இல்லையா? அப்படி ஒரு கட்டுரையை நீங்கள் எழுதவே இல்லை என மூடி மறைக்கப் பார்க்கும் முயற்சியில்லையா அது? அப்படி ஒரு வழக்கம் இணைய உலகில் உண்டா?

  எனக்குத் தெரிந்த வரை, அப்படி ஒரு நிகழ்வு நேரிட்டால், உடனே அது தொடர்பாக வருத்தம் தெரிவித்தோ, மறுப்புத் தெரிவித்தோ அதே பதிவின் இறுதியில், உட்தலைப்புடன் உண்மையை வெளியிடுவதுதான் முறைமை! அதுதான் வழக்கம்! விகடனும் அதைத்தான் செய்திருக்கிறது. ஆனால், ஒரே ஒரு தவறு, வருத்தம் தெரிவிக்கவில்லை. அது தவறுதான், நான் மறுக்கவில்லை. ஆனால், அதை மட்டுமே வைத்து அவர்களின் மொத்த நடுநிலைமையையும் இகழ்ந்துரைப்பதா?

  கேட்டால், ‘விகடன்’ நிறுவனத்தை மாறன்கள் வாங்கி விட்டார்கள்; அதனால் விகடன் அ.தி.மு.க-வைத் தேவையில்லாமல் குறை சொல்கிறது என்பீர்கள். அதற்குச் சான்றாகச் ‘சவுக்கு’ தளத்தின் கட்டுரையையும் காட்டுவீர்கள்.

  மனச்சான்றைத் தொட்டுச் சொல்லுங்கள், ‘சவுக்கு’ தளத்தின் அந்தக் கட்டுரையில் அந்த 46.15% பங்குகளை மாறன்கள்தான் வாங்கியிருக்கிறார்கள் என நம்புவதற்குப் போதுமான அளவு சான்று உண்மையிலேயே காட்டப்பட்டிருக்கிறதா?…

  பாடீஸ் கார்ப்பரேட் எனும் பொதுவான அடையாளத்தின் கீழ் பெயர் குறிப்பிடப்படாத ஒருவரோ அல்லது சிலரோ அந்தப் பங்குகளை வாங்கியிருப்பதாகத்தான் அந்தச் சான்றில் காட்டப்பட்டுள்ளது. அதை மட்டுமே வைத்து, அந்த பாடீஸ் கார்ப்பரேட் என்ற பெயரில் இருப்பவர்கள் மாறன்கள்தான் என்கிறது சவுக்கு. அவர்கள் மாறன்கள்தான் என்பதற்கு என்ன அத்தாட்சி? அதைப் பற்றியெல்லாம் கவலையே படவில்லை அந்தத் தளம். விகடனின் பங்கை விகடன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தவிர வேறு யாரோ வாங்கியிருக்கிறார்கள் என்றாலே அது மாறன் குடும்பமாகத்தான் இருக்க வேண்டும் எனத் தானாகவே ஒரு முடிவுக்கு வந்து கற்பூரம் அடிக்கிறது சவுக்கு! எந்தச் சவுக்கு? நீங்கள் எந்த ராஜீவ் காந்தி கொலை பற்றி மாய்ந்து மாய்ந்து எழுதி உண்மைக் குற்றவாளிகள் பிடிபடப் பாடுபடுகிறீர்களோ, அதே ராஜீவ் கொலைப் பழியை மீண்டும் மீண்டும் விடுதலைப்புலிகள் மீதே சுமத்தி, அந்தக் குற்றச்சாட்டு உண்மைக் குற்றவாளிகள் பக்கம் திரும்பிவிடக்கூடாது என்பதற்காக ‘விடுதலைப் புலிகளுக்கு அப்பால் -‍ ராஜீவ் கொலைப் பின்னணி’ என்று நூல் வெளியிட்ட சவுக்கு! விகடனில் செம்பரம்பாக்க ஏரித் திறப்புப் பற்றி எழுதியதும் எழுதியவர் யார், என்ன என்றெல்லாம் தோண்டித் துருவி எழுதினீர்களே, விகடன் மீது பழி சுமத்தும் இந்தக் கட்டுரையை நம்பும் முன் அப்படிச் சவுக்கு யார் என்ன என்று ஆராய்ந்தீர்களா?

  போகட்டும், விதயத்துக்கு வருகிறேன். பாடீசு கார்ப்பரேட் என்கிற பொது அடையாளத்தில்தான் விகடனின் மேற்படி பங்குகள் வாங்கப்பட்டுள்ளன எனும்பொழுது, அதை வாங்கியிருப்பவர்கள் மாறன்கள்தான் எனச் சவுக்கு சொல்வது தவறு என்றால், அவர்கள் யார் என்று தெரியாமலே அவர்கள் மாறன்கள் இல்லை எனச் சொல்வதும் தவறுதான் இல்லையா? எனவே, நான் அப்படிச் சொல்லப் போவதில்லை. ஒரு கட்டுரையில் நீங்களும், அதன் கருத்துரைப் பகுதியில் உங்கள் நண்பர் டுடே அண்டு மீயும் ஒரு சவால் விடுத்திருந்தீர்கள் இல்லையா? அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்! விகடனின் இன்றைய மெய்யான உரிமையாளர்கள் யார் என்கிற உண்மையைச் சான்றுடன் வெளியிட நான் ஆயத்தமாக இருக்கிறேன். ஆனால், அத்தாட்சியே இல்லாமல் சவுக்கு போட்ட பழியை மனமுவந்து ஏற்றுக் கொண்ட நீங்கள் அத்தாட்சியுடன் நான் தரும் இந்தத் தகவலை ஏற்றுக்கொள்வீர்களா?… எனக்கென்னவோ நம்பிக்கையில்லை. இதையும் ஏதாவது உப்புச்சப்பில்லாத காரணத்தைக் கூறிப் புறந்தள்ளவே முயல்வீர்கள். இருந்தாலும், உங்களுக்காக இல்லாவிட்டாலும், இத்தளத்தைப் படிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் நலன் கருதி இதை வெளியிடுகிறேன். (இதில் என்ன மக்கள் நலன் வாழ்கிறது எனவெல்லாம் யாரும் வாய்விட்டு மாட்டிக் கொள்ள வேண்டா! அதற்கும் பதிலளிக்க எனக்குத் தெரியும்!).

  விகடன் நிறுவனத்தில் மொத்தம் நான்கு இயக்குநர்கள் (directors). இவர்களில் இருவர் மேலாண் இயக்குநர்கள் (managing directors). அவர்கள் வேறு யாருமில்லை; விகடன் நிறுவனத்தை நிறுவிய வாசன் அவர்கள் பேரன் சீனிவாசனும், அவர் உறவினரான ராதிகா சீனிவாசனும்தான் அந்த மேலாண் இயக்குநர்கள். மூன்றாமவர் குமார் மண்ணூர் வெங்கடேசுவரா என ஒருவர். இவரது இயக்குநர் குறியீட்டு எண் (Director Identification Number) 766877. முகவரி: மனை எண்: 41, ரமேஷ் நகர், வளசரவாக்கம், சென்னை – 600087. நான்காமவர், முயாசிஸ் உனிசா ரசியா என்பவர். இவரது இயக்குநர் குறியீட்டு எண்: 2649929. முகவரி: அடுக்கக (flat) எண்: 6, முதல் தளம், சுபிக்ஷா அடுக்குமாடிக் குடியிருப்பு, கதவு எண்: 4, இரண்டாவது குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், சென்னை – 600024.

  அத்தாட்சி-1: http://www.allcompanydata.com/in/director/muazziz-unissa-razia/2649929 மற்றும் http://www.allcompanydata.com/in/director/kumar-mannore-venkateswara/766877.

  அத்தாட்சி-2: https://business.indiafilings.com/ananda-vikatan-productions-private-limited#large

  நான் இங்கு குறிப்பிட்டிருப்பவை இந்த இரண்டு தளங்கள்தான். ஆனால், இன்னும் இன்னும் பல தளங்களில் இந்தத் தகவல்கள் இருக்கின்றன. ஆனால், இங்கு குறிப்பிடப்பட வேண்டியது அதுவன்று. இந்த நான்கு பெயர்களைத் தவிர இணையத்தில் விகடனின் இயக்குநர்களாக, விகடன் நிறுவனப் பங்குதாரர்களாக வேறு யார் பெயரும் இல்லை என்பதே விதயம். இணையத்தில் Directors of Vikatan எனத் தேடினாலே இந்த விவரங்கள் மீண்டும் மீண்டும் பற்பல இணையத்தளங்களில் காட்டப்படுகின்றன. இவர்கள் எந்த ஆண்டிலிருந்து விகடனின் இயக்குநர்களாகப் பதவி வகிக்கிறார்கள், விகடனில் எந்தெந்தக் குழுமங்களில் இவர்களுக்குப் பங்குகள் இருக்கின்றன ஆகிய பல விவரங்களும் உள்ளன! ஆனால், விகடனுடைய பங்குதாரர்களின் பட்டியலில் எந்த இடத்திலும் மாறன்களின் பெயரோ அவர்களின் நிறுவனங்களுடைய பெயரோ இல்லை. இந்த இரண்டு பேரும் எந்தெந்த நிறுவனங்களை நடத்துகிறார்கள், இன்னும் வேறு எந்தெந்த நிறுவனங்களில் இவர்களுக்குப் பங்குகள் இருக்கின்றன எனத் தேடிப் பார்த்தாலும் விகடன் பெயரும் விகடன் தொடர்புடைய நிறுவனங்களின் பெயரும்தான் இவர்களிடைய பங்குகளின் பட்டியலில் வருகின்றனவே தவிர, மாறன்களின் நிறுவனங்கள் எதிலும் இவர்களுக்குப் பங்கு இருப்பதாக வரவில்லை. இதிலிருந்தே இவர்கள் மாறன்களின் பதிலிகள் (Benami) இல்லை என்பதும் உறுதியாகிறது. காரணம், பதிலிகளை யாரும் ஒரே ஒரு சொத்துக்கு மட்டும் பதிலிகளாகப் பயன்படுத்த மாட்டார்கள். அதுவும் மாறன்களுக்கு இருக்கும் கடலளவுச் சொத்துக்களுக்கும் அவற்றில் இருக்கும் எக்கச்சக்கமான சிக்கல்களுக்கும் இரண்டு ஆட்களை ஒரே ஒரு நிறுவனத்துக்கு மட்டும் பதிலிகளாக அவர்கள் பயன்படுத்த வாய்ப்பில்லை. அவர்களுக்கு இருக்கும் சொத்துச் சிக்கல்களுக்கு இருக்கிற பதிலிகள் ஒவ்வொருவர் தலையிலும் ஏகப்பட்ட சொத்துக்களைக் கட்டினால்தான் முடியும். ஒருவேளை நிறுவனங்கள் தவிர, வேறு ஏதேனும் அசையாச் சொத்துக்களுக்கு இவர்களைப் பதிலிகளாக மாறன்கள் பயன்படுத்தி இருந்தாலும், இந்நேரத்துக்கு இவர்களின் பெயர்கள் ஏதாவது ஒரு வழக்கில் அடிபட்டிருக்கும். இந்தப் பெயர்கள் வெளிவந்திருக்கும். ஆனால், இணையத்தில் இவர்கள் பெயரைப் போட்டுத் தேடினால், விகடனில் இவர்கள் இயக்குநர்களாக இருக்கிறார்கள் என்பது தவிர, இவர்கள் பற்றி வேறு எந்த விவரமும் இல்லை.

  ஆக, எப்படிப் பார்த்தாலும் விகடன் நிறுவனத்துக்கும் மாறன்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்பது இதன் மூலம் நூற்றுக்கு நூறு விழுக்காடு தெள்ளத் தெளிவாக உறுதியாகிறது!!!

  காவிரிமைந்தன் அவர்களே! டுடே அண்டு மீ அவர்களே! உங்கள் சவால்களுக்கு நான் விடை அளித்து விட்டேன். இதற்கு உங்கள் பதில் என்ன?…

  • இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

   குறிப்பு: மேற்படி கருத்துரைக்கும் இந்தக் கட்டுரைக்கும் நேரடித் தொடர்பு இல்லை. ‘விமரிசனம்’ வலைப்பூவுக்கு அன்றாடம் வர முடியாததால் அவ்வப்பொழுது எல்லா இடுகைகளையும் சேர்த்து வைத்துப் படிப்பவன் நான். அவ்வகையில், அண்மையில் வந்தபொழுது விகடன் பற்றி மிகவும் தரக்குறைவாக இங்கு பல பதிவுகளும் கருத்துரைகளும் எழுதப்பட்டிருந்தது கண்டு திகைத்தேன். இக்குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்ததில் எனக்கு மேற்படி தகவல்கள் கிடைத்தன. இவற்றை, இத்தகைய இடுகைகளில் தலையாயதான ‘பொறுக்கி விகடனா… போக்கிரி விகடனா?’ பதிவின் கருத்துரையில் வெளியிட்டேன். ஆனால், அது கொஞ்சம் பழைய இடுகை என்பதால், எங்கே அது காவிரிமைந்தன் அவர்களின் கண்ணில் படாமல் போய்விடுமோ என்கிற அச்சத்தால் அண்மைய பதிவுகளுள் விகடன் தொடர்புடைய இடுகையான இதில் மேற்படி கருத்தை மறுபதிந்துள்ளேன், வேறொன்றுமில்லை.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் இ.பு.ஞானப்பிரகாசன் அவர்கட்கு,

    நான், விகடன் தன் தளங்களில்,
    செய்திகளை தீய நோக்குடன் வெளியிடும்
    போக்கினைப் பற்றியும், அதில் தொடர்ச்சியாக
    உள்நோக்கத்துடன் வெளியிடப்படும், அடிப்படை ஆதாரமே
    இல்லாத வதந்திகளைப் பற்றியும் அவ்வளவு விவரமாக
    எழுதியும் உங்களுக்கு அவற்றில் நம்பிக்கை வரவில்லை…!

    அதில் வெளியிடப்பட்ட மோசடியான டான் கட்டுரையை
    பற்றியும், வயர்டு மொழி பெயர்ப்பு பற்றியும் நான் எழுதியதைப்
    பற்றி யோசிக்கவோ, கருத்து தெரிவிக்கவோ நீங்கள்
    தயாராக இல்லை.

    வேலை மெனக்கெட்டு, “பதிலிகள்” பற்றிய ஆராய்ச்சியை
    முடித்து விட்டு, நான் தரந்தாழ்ந்து எழுதுகிறேன் என்கிற
    முடிவுக்கும் வந்து விட்டீர்கள்…

    நீங்கள் குறிப்பிடும் அந்த மூன்றாவது மற்றும் நான்காவது
    பங்குதாரர்கள் திருவாளர்/திருமதி “குமார் மண்ணூர்
    வெங்கடேசுவரா”, “முயாசிஸ் உனிசா ரசியா” ஆகியோர்
    கே.டி.பிரதர்சின் “பதிலிகள்’ அல்ல என்கிற தீர்க்கமான
    முடிவுக்கும் வந்து விட்டீர்கள்.

    இந்த இரண்டு “பிரபல” தொழிலதிபர்களைப்பற்றி
    தமிழகமே இப்போது தான் முதல் தடவையாக உங்கள்
    மூலம் கேள்விப்படுகிறது ….!!! மகிழ்ச்சி….

    மூடப்பட்ட மனதுடன் (closed mind ) இருக்கும்
    உங்களுக்கு நான் எந்த விளக்கம் எழுதினாலும்
    ஏற்புடையதாக இருக்கப் போவதில்லை….

    மேலும் நானும் ஒரு வார பயணமாக –
    வெளியூர் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன்

    எனவே – நான் அந்த முயற்சியில் ஈடுபடுவதாக இல்லை.
    நீங்கள் உங்கள் விருப்பம் போல் –
    விமரிசனம் வலைத்தளம் ஒரு கேடு கெட்ட தளம் என்றும்,

    “விகடன்” உலகத்தரம் வாய்ந்த, உயர்ந்த உண்மைகளை
    ஊருக்கு உரைக்கும் இலக்கிய அற்புதம் என்று
    ஆனந்தமாக தீர்மானித்துக் கொள்ளலாம்.
    அதில் எனக்கு எந்தவித வருத்தமும் இருக்காது…!!!

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

     காவிரிமைந்தன் அவர்களுக்கு வணக்கம்!

     முதலில் உங்கள் பதிலுக்கு நன்றி! விகடன் பற்றிய உங்கள் கருத்துக்களை நீங்கள் விவரமாக எழுதியதில் நான் எந்தக் குறைபாடும் சொல்லவில்லை. ஆனால், அவை எல்லாமே சவுக்கு தளத்தின் குறிப்பிட்ட அந்தக் கட்டுரையைப் படித்த பின், விகடன் விலை போய்விட்டது என்ற நம்பிகை உங்களுக்கு ஏற்பட்ட பின் அதே கண்ணோட்டத்தில் நீங்கள் பார்த்து எழுதியவை போல இருக்கின்றன. அதற்கு முன் விகடன் செயல்பாடுகள் பற்றி நீங்கள் எழுதிய மற்ற கட்டுரைகள் அப்படி இல்லை. அதனால்தான் என்னால் அக்கட்டுரைகளை ஏற்க இயலவில்லை.

     வயர்டு மொழிபெயர்ப்புக் கட்டுரை பற்றிச் சிந்திக்கவோ கருத்துத் தெரிவிக்கவோ நான் ஆயத்தமாக இல்லை என்கிற முடிவுக்கு நீங்களாகவே வந்து விட்டீர்கள். அப்படி இல்லை. அந்த ஒரு கட்டுரைக்குப் பதிலளித்தால் விகடன் பற்றி நீங்கள் எழுதிய ஒவ்வொரு கட்டுரைக்கும் அதே போல் வரிக்கு வரி பதிலளித்துக் கொண்டிருக்க வேண்டும். விகடன் மாறன்கள் கைக்குப் போய்விட்டது என்கிற ஒரே நம்பிக்கையின் பேரில்தான் இவ்வளவு குற்றச்சாட்டுகளையும் கூறுகிறீர்கள் என்பதால், அந்த முதன்மைக் குற்றச்சாட்டுக்கே பதில் கிடைத்து விட்ட நிலையில், அதை உங்களிடம் தெரிவித்து விட்டாலே மற்ற குற்றச்சாட்டுகளுக்குத் தனித்தனியே பதிலளித்துக் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை என்று கருதித்தான் நான் மேற்படி கருத்துரையை உங்கள் பார்வைக்கு வைத்தேன்; மற்ற கட்டுரைகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்த்தேனே ஒழிய அவற்றுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் இல்லை.

     “இந்த இரண்டு “பிரபல” தொழிலதிபர்களைப்பற்றி
     தமிழகமே இப்போது தான் முதல் தடவையாக உங்கள்
     மூலம் கேள்விப்படுகிறது ….!!! மகிழ்ச்சி…” – என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை. வெளியில் தெரியாத பெயர்கள் என்பதால் இவர்கள் விகடனின் பங்குகளை வாங்கக்கூடிய அளவுக்குப் பணமுள்ளவர்களாக இருக்கக்கூடாதா? பல கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கிற, ஆனால் வெளியில் பெயர் சொன்னால் யாருக்குமே தெரியாத, சரிவர எழுதப் படிக்கக்கூடத் தெரியாத, வெளிப் பார்வைக்கு சராசரி மனிதர்களைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் பலர் இதே தமிழ்நாட்டில், சென்னையில் எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா?

     ஆக, நான் எதிர்பார்த்தது போலவே நேரடியாக எந்த அத்தாட்சியும் இல்லாமல், வாசன் குடும்பத்துக்குத் தொடர்பில்லாத யாரோ பெயர் குறிப்பிடாத சிலர் விகடன் பங்குகளை வாங்கியிருக்கிறார்கள் என்றவுடனே அவர்கள் யார் என்னவென்றே தெரியாமல் கண்டிப்பாக அவர்கள் மாறன்கள்தான் என்று சவுக்கு கூறியதை நம்பிய நீங்கள் இத்தனை சான்றுகளுடன் கண்ணெதிரே கிடக்கும் உண்மைகளை ஏற்க ஆயத்தமாக இல்லை. ‘என்னடா, நம் மீது அவ்வளவு அன்பும் மதிப்பும் வைத்திருந்த ஒருவன் சொல்கிறானே’ என்பதற்காகக் கூட, அவை சரிதானா எனப் பரிசீலிக்கக் கூட நீங்கள் சித்தமாக இல்லை. ஊருக்குப் போகிறீர்கள் என்பது சரி. ஆனால், ஊருக்குப் போய்விட்டு வந்தாவது, நேரம் கிடைக்கும்பொழுது இது பற்றிப் பரிசீலித்துப் பார்க்கலாமே! ஆனால், அதற்கு நீங்கள் ஆயத்தமாயில்லை.

     போகட்டும்! காலம் இப்படியே போய்விடாது. மாறன்கள் மீதான வழக்கில் கண்டிப்பாக விரைவில் ஒரு தீர்ப்பு வரத்தான் போகிறது. தீர்ப்பு எப்படிப்பட்டதாக இருந்தாலும், அது பற்றி ஏதேனும் ஒரு கட்டுரை ஆனந்த விகடனிலோ, ஜூனியர் விகடனிலோ வந்துதான் ஆக வேண்டும். அப்பொழுது விகடன் என்ன எழுதுகிறது, எப்படி எழுதுகிறது, எழுதுகிறதா தவிர்க்கிறதா என்பதைப் பார்ப்போம்! அப்பொழுது கண்டிப்பாக விகடனின் உண்மை முகம் உங்களுக்கு மட்டுமன்றி உலகுக்கே புலப்படும்!

     நன்றி! வணக்கம்!

     • இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

      காவிரிமைந்தன் ஐயா அவர்களுக்கு வணக்கம்!

      நான் செய்த தவற்றுக்காக முதலில் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்! மேற்படி ஆராய்ச்சிகள், கருத்துக்கள், பதில்கள் எல்லாவற்றையும் முடித்த பிறகுதான் இளங்கலை வணிகவியல் முடித்த நண்பர் ஒருவருடன் இது பற்றிப் பேசிக் கொண்டிருந்தபொழுது நான் செய்திருந்த மடத்தனம் எனக்குப் புரிய வந்தது.

      விகடன் நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் இயக்குநர்களின் உறவினர்கள் ஆகியோரால்தான் 53.85% பங்குகள் வாங்கப்பட்டுள்ளன எனும்பொழுது, நான் மேலே குறிப்பிட்ட குமார் மண்ணூர் வெங்கடேசுவராவும், முயாசிஸ் உனிசா ரசியாவும் கூட – இயக்குநர்கள் எனும் முறையில் – அந்த 53.85% பங்குகளுக்குள்தாம் வருவார்கள். ஆக, சர்ச்சைக்குரிய அந்த 46.15% பங்குகள் அவர்களுடையவல்ல! அவை வேறு ஏதோ நிறுவனத்தால் / நிறுவனங்களால்தாம் வாங்கப்பட்டுள்ளன.

      ஏதோ பெரிய தங்கமலை மர்மத்தைக் கண்டுபிடித்து விட்டது வாய் வீசிய என் முழு முட்டாள்தனம் எனக்கு நன்றாகவே புரிகிறது. அதற்காக மறுபடியும் உங்களிடம் வெளிப்படையாகவே மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்!

      ஆனால், இப்பொழுதும் சொல்கிறேன், அந்த 46.15% பங்கை வாங்கியவர்கள் யார் என்பதை ஆராயாமல், விகடன் குடும்பத்தைத் தவிர்த்த வேறு யாரோ வெளியாட்கள்தாம் அதை வாங்கியிருக்கிறார்கள் என்கிற ஒரே ஒற்றைக் காரணத்துக்காக அது மாறன்களின் நிறுவனமாகத்தான் இருக்கும் என்று நாமாகவே ஒரு முடிவுக்கு வருவது சிறிதும் நியாயமில்லை என்பதே என் கருத்து. இது என் தனிப்பட்ட கருத்து மட்டும்தானே தவிர வேறொன்றுமில்லை.

      செய்தது தவறு என்றவுடன் அது குறித்து மன்னிப்புக் கேட்பதுதான் முறை என்பதால்தான் இவற்றையெல்லாம் உங்களிடம் தெரிவிக்கிறேனே தவிர, மீண்டும் மீண்டும் உங்களிடம் வம்பிழுக்கும் நோக்கம் ஏதும் இல்லை.

      நன்றி! வணக்கம்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.