“நேஷனல் ஹெரால்டு” கிரிமினல் வழக்கும் – திருமதி சோனியா, ராகுல் காந்தி நிலையும் …..!!!

national_herald_

“நேஷனல் ஹெரால்டு” சம்பந்தப்பட்ட கிரிமினல் வழக்கில்
திருமதி சோனியா காந்தி, திரு.ராகுல் காந்தி ஆகியோருக்கு
நேரில் ஆஜராகுமாறு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியதும்,
அதைத்தொடர்ந்து, காங்கிரஸ்காரர்கள் பொங்கி எழுந்து –
மோடிஜி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறி –
டெல்லியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதும் சென்ற வார
விசேஷ நிகழ்வுகள்…

இந்த வழக்கு – குறைந்த பட்சம் அடுத்த பத்தாண்டுகளுக்காவது
பல்வேறு நிலைகளில் நடந்து கொண்டிருக்கும்… எனவே
இது குறித்து சரியாகவும், சுருக்கமாகவும், புரிந்து வைத்திருப்பது
எதிர்காலங்களில் இந்த வழக்கின் போக்கை கவனிக்க உதவும்.

பல்வேறு செய்தித்தளங்களிலும் வெவ்வேறு விதங்களில்
வெளியான செய்திகளிலிருந்து, நமக்கு சுலபமாக (ஓரளவு…! )
புரியும் விதத்திலும், சுருக்கமாகவும் – கீழே தொகுத்திருக்கிறேன்.

———–

“நேஷனல் ஹெரால்டு” என்கிற ஆங்கில செய்தித்தாள்,
1930-ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவால் துவக்கப்பட்டது.
இந்த செய்தித்தாளை நடத்துவதற்காக அவர் Associated
Journal Limited ( AJL ) என்ற பெயரில் ஒரு கம்பெனியை
துவக்கினார். அப்போதைய, ஓரளவு வசதியான காங்கிரஸ்காரர்களை
பங்குதாரர்களாகச் சேர்த்து, அவர்களின் நிதியுதவி மூலம்
இந்த கம்பெனி துவக்கி நடத்தப்பட்டது. சுதந்திரம் கிடைக்கும்
வரையில், அதாவது 1947 வரை டெல்லியிலிருந்து மட்டும்
வெளியிடப்பட்டு வந்த இந்த செய்தித்தாள் பின்னர் மும்பை,
லக்னோ போன்ற ஊர்களிலிருந்தும் வெளியிடத்துவங்கலாயிற்று.

கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் அப்போது காங்கிரஸ்
ஆட்சியே இருந்ததால், மாநில அரசுகள் இந்த செய்தித்தாளை
நடத்த, குறைந்த விலைக்கும் – சில இடங்களில் விலையே
இல்லாமலும் நிலங்களை கொடுத்தும் – வேறு பல சலுகைகளை
கொடுத்தும் உதவின. இப்படியாக AJL கம்பெனிக்கு பல
மாநிலங்களில் -எக்கச்சக்கமாக அசையா சொத்துக்கள்
நில, கட்டிட வகையில் உருவாகின.
(அவற்றின் இன்றைய மதிப்பு சுமார் 3000 முதல் 5000 கோடி வரை
இருக்கலாமென்று தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது…!!! )

இந்த AJL கம்பெனியை – பொதுவாக நேரு குடும்பம் தான்
நிர்வகித்து வந்தது.
நேருஜிக்கு பிறகு திருமதி இந்திராவும், அதன் பிறகு ராஜீவ் காந்தியும், அதன் பிறகு சோனியாஜியும் – ராகுல்ஜியும்…..!!!

பத்திரிகைத் துறையில் நிலவும் கடும் போட்டியை சமாளிக்க
முடியாத இந்த காங்கிரஸ் சார்ந்த பத்திரிகை நீண்ட நாட்களாக
தொடர்ந்து நஷ்டத்திலேயே நடந்து வந்தது. நஷ்டத்தை மீறி, பத்திரிகையை தொடர்ந்து நடத்த காங்கிரஸ் கட்சி அவ்வப்போது வட்டி இல்லாமல் கடன் கொடுத்து உதவி வந்தது. 2008-ல் இந்த கடன் தொகை சுமார் 90.5 கோடி என்ற அளவிற்கு இருந்தது.

இனிமேலும் கடனுக்கு பத்திரிகையை தொடர்ந்து நடத்துவதில்
அர்த்தமில்லை என்பதால் பத்திரிகையை மூடி விடலாமென்ற
முடிவிற்கு நிர்வாகம் (அதாவது சோனியாஜியும்,
ராகுல்ஜியும் ) வந்தது…
காங்கிரஸ் கட்சியிலிருந்து பெற்ற கடன்களை வைத்துக்கொண்டு,
தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடுகளை கொடுத்து விட்டு,
பத்திரிகைக்கு மூடு விழா நடத்தப்பட்டது.

2010-ல் Young Indians Limited (YIL ) என்கிற பெயரில்
திருமதி சோனியாவையும், திரு ராகுல் காந்தியையும் கொண்டு
ஒரு தனி – லாப நோக்கம் இல்லாத – அறக்கட்டளை
துவங்கப்பட்டது. இதில் இவர்கள் இருவருக்கும் தலா 38 %
(ஆக மொத்தம் 76 % ) பங்குகளை வைத்துக் கொண்டு,

மீதியுள்ள 24 % பங்குகளுக்கு திருவாளர் மோதிலால் வோரா,
ஆஸ்கார் பெர்னாண்டஸ், சாம் பெட்ரோடா
ஆகிய காங்கிரஸ்காரர்களை உரிமையாளர்களாக்கினார்கள்.
ஆக புதிய கம்பெனியின் முழு நிர்வாகமும் இவர்களிடமே
இருந்தது.

YIL(புதிய) கம்பெனி, AJL(பழைய) கம்பெனியிடம் ஒரு
ஒப்பந்தம் போடுகிறது. AJL கம்பெனி, காங்கிரஸ் கட்சியிடம்
வாங்கியிருந்த 90.5 கோடி ரூபாய் கடனுக்கு தாங்கள்
பொறுப்பேற்றுக் கொள்வதாகவும், அதற்கு பதிலாக –
AJL கம்பெனியின் 99 % பங்குகளை YIL கம்பெனிக்கு
கொடுத்து விடுவது என்றும்… ஒப்பந்தம்…!!!
(மீதி ஒரு சதவீத பங்கு சுமார் 700 தனித்தனி நபர்களுக்கு
சிறிய அளவுகளில் சொந்தமாக இருந்தது… இந்த ஒப்பந்தம்-
deal- குறித்து அந்த 1% AJL பங்குதாரர்களுக்கு எதுவுமே
தெரிவிக்கப்படவில்லை….!!! ).

ஆக, இப்படியாக சுமார் 3000-5000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள,
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள AJL கம்பெனியின்
அசையா சொத்துக்கள் (திருமதி சோனியா, ராகுல் ஆகியோருக்கு
சொந்தமான ) YIL(புதிய) கம்பெனிக்கு வந்து சேருகிறது….!!!
இந்த சொத்துக்களிலிருந்து ஆண்டுக்கு வாடகையாக மட்டுமே
சுமார் ஒன்பது கோடி வருமானம் வருகிறதாம்….!!!

சொத்தும் நிர்வாகமும் புதிய YIL கம்பெனிக்கு வந்து சேர்ந்ததும்,
புதிய கம்பெனி ( அது காங்கிரசின் தத்துப்பிள்ளை தானே),
காங்கிரஸ் தலைமையிடம் பேசி ( ?) –
90.5 கோடி ரூபாய் கடனில் 50 லட்சத்தை மட்டும் திரும்பத்
தந்து விடுவதாகவும், மீதி 90 கோடி கடனை மட்டும் (!!!)
தள்ளுபடி செய்யும்படியும் கேட்டுக் கொள்கிறது…!!!
காங்கிரஸ் கட்சியின் தலைமை ( திருமதி சோனியா காந்தி..! )
இதனை ஏற்றுக் கொள்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு
AJL கம்பெனியிடமிருந்து வரவேண்டிய 90 கோடி ரூபாய் கடன்
தள்ளுபடி செய்யப்படுகிறது….!!!

இப்படியாக கதையும் முடிந்தது….
சொத்துக்களும் கைமாறுகின்றன…!!!

சும்மா இருக்க முடியுமா சுப்பிரமணியன் சுவாமியால்…?
சட்டவிரோதமாக, மோசடியான முறையில் –
AJL கம்பெனியின் சொத்துக்களை தம் வசப்படுத்தி கொண்டதாக –
திருமதி சோனியா, திரு ராகுல் காந்தி ஆகியோர் மீது
தனிப்பட்ட முறையில் மோசடி, கிரிமினல் குற்றம் ஆகியவற்றை
சுமத்தி டெல்லி நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்….!

அதன் பரிணாம வளர்ச்சி தான் நாம் இப்போது பார்த்துக்
கொண்டிருக்கும் அரசியல் கூத்துகள்…!!!

—————-

– திருமதி சோனியாவும், திரு ராகுல் காந்தியும்
தலா 38 % பங்குகளை வைத்துக் கொண்டு
2010-ல் Young Indians Limited (YIL ) கம்பெனியை,
துவக்கியபோது, அதில் மொத்தம் எவ்வளவு முதல் போடப்பட்டது….?

அந்த முதலை சோனியாஜியும், ராகுல்ஜியும் தனிப்பட்ட –
சொந்த பணத்திலிருந்து கொடுத்தார்களா அல்லது
அதுவும் காங்கிரஸ் கட்சி சார்பாக கொடுக்கப்பட்டதா …?

-போன்ற இன்னும் சில விவரங்களை நான் நிறைய தேடியும்
கிடைக்கப்பெறவில்லை.

ஆயிரக்கணக்கான கோடிகள் பெறுமானமுள்ள
சொத்துக்களை தனிப்பட தங்கள் கட்டுப்பாட்டிற்குள்
தாயும், மகனும் திட்டம் போட்டு கொண்டு வந்திருப்பது
கண்கூடாகத் தெரிந்தாலும் –
சட்டத்தின் கண்களுக்கு
மோசடி என்று நிரூபிக்க இவை போதாது….!!!

என்னுடைய பார்வையில் –
அந்த சொத்துக்களின் உரிமை ஒரு கம்பெனியிடமிருந்து
இன்னொரு கம்பெனிக்கு மாறினவே தவிர, எதுவும்
விற்கப்படவில்லை….
எனவே பண வடிவில் ஆதாயம் எதுவும்- யாருக்கும்
போய்ச்சேரவில்லை…! ( ஒரு வேளை அந்த சொத்துக்களில்
எதாவது விற்கப்பட்டு, அந்த பணம் சோனியாஜி அல்லது
ராகுல்ஜி யாருடைய சொந்த கணக்கிலாவது போய்ச்
சேர்ந்திருந்தால் – வழக்கின் போக்கு நிச்சயம்
மிகக்டுமையாகி விடும்..)

எனவே, இப்போதைய வடிவில் –
கிரிமினல் குற்றம் என்கிற வகையில் இதனை
நிரூபிப்பது கடினமாக இருக்கக்கூடும்.
ஆனால், சில சட்ட விதிகள் மீறப்பட்டிருப்பது கண்கூடாக
தெரிகிறது. அந்த வகையில் வழக்கு தொடர்ந்து நடக்கக்கூடும்.

ஆனால் -இதற்கு மேல், இந்த வழக்கில் இரண்டு தரப்பிலுமே
பரபரப்புக்களை உண்டு பண்ணுவது கடினமான காரியம்…
எனவே, நீண்டகாலம் இழுத்தடிக்ககூடிய ஒரு சிவில்
வழக்காகவே இது தொடரும் என்றே நினைக்கிறேன்.

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

“நேஷனல் ஹெரால்டு” கிரிமினல் வழக்கும் – திருமதி சோனியா, ராகுல் காந்தி நிலையும் …..!!! க்கு 7 பதில்கள்

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  அன்பு நண்பர்களுக்கு,

  இன்றிரவு வெளியூர் புறப்படுகிறேன்.
  ஒரு வாரம் பயணம்…
  நான் நீண்ட நாட்களாக காத்திருந்த ஒரு பயணம்…!

  சில புதிய அனுபவங்களைப் பெறவும்,
  நான் விரும்பிய சில சுவாரஸ்யமான
  சந்திப்புகளை நிகழ்த்தவும் –
  இந்த பயணம் உதவுமென்று நம்புகிறேன்.

  தொடர்ந்து இணையத் தொடர்பு கிடைப்பது
  சிறிது கடினமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
  இருந்தாலும் –
  இடையில் சில இடங்களிலாவது
  எழுத இயலும் என்றும் நம்புகிறேன்.
  எப்படியும் – இடையில் முடிந்தபோதெல்லாம்
  இந்த தளத்தில் அவசியம் எழுதுவேன்.

  ஒரு வாரம் தானே –
  திரும்ப வந்த பிறகு ( இன்ஷா அல்லா…!)
  கிடைத்த அனுபவங்களை விவரமாக உங்களுடன்
  பகிர்ந்து கொள்கிறேன்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்
  25/12/2015

 2. thiruvengadam சொல்கிறார்:

  அடைப்புக்குறிப்புக்குள் கண்ட ஒரு வார்த்தையை பத்திரிக்கை உலகின் ” ஸ்கூப் ” என்ற அடிப்படையில் இத்தகவலில் நான் காணும் ஒற்றுமை : ஒரு இந்து கிருஸ்துமஸ் நாளில் இஸ்லாமிய பிரதேச பயணம். வாழ்த்துக்கள்.

 3. drkgp சொல்கிறார்:

  KM jiக்கும் தள நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

 4. KuMaR.S சொல்கிறார்:

  Dear K M sir
  Wish you a very happy New year..
  Enjoy new year at abroad..:-):-)

 5. Ganpat சொல்கிறார்:

  Dear Sir,Wishing you and family a very happy and peaceful new year.Regards,

 6. paamaranselvarajan சொல்கிறார்:

  ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்…நல்லவை நடக்க என்றும் முயற்சிப்பாேம் ….. நண்பர்களே……!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.