காஷ்மீரை தவிர்த்து விட்டு பதான்கோட்டை ஏன் …….?

Pathankot.8

 

பிரச்சினைக்கு உரிய இடம் காஷ்மீர் தான்.
ஆனால் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் காஷ்மீரை,
ஸ்ரீநகரை விட்டு விட்டு, பதான்கோட்டை தாக்குதலுக்கு
தேர்ந்தெடுத்தது ஏன்….?

பதான்கோட் வழியே ஏற்கெனவே நாலைந்து முறை
சென்றிருக்கிறேன். ஒரு முறை இறங்கி, சில மணி நேரங்கள்
சுற்றியும் இருக்கிறேன். பழமையான, பஞ்சாப் மாநிலத்தின்
முக்கியமான, அடர்த்தியான, சுமார் 1.5 லட்சம் பேர் வசிக்கும்
சிறு நகரங்களில் ஒன்று.

இங்கிருந்து பாகிஸ்தானுடனான எல்லைக்கோடு வெகு அருகே – சுமார் முப்பதே கிலோமீட்டரில் இருக்கிறது.
எல்லைக்கு அப்பாலும் கிட்டத்தட்ட இதே மாதிரி தான்
பஞ்சாபி மொழி பேசப்படுகிறது. அங்கிருந்து ஒருவர் எல்லை
தாண்டி உள்ளே வந்து விட்டால் – இரண்டு பக்கமும்
தாடி முகம் தான். எனவே, தலைப்பாகை கட்டி விட்டால்
உள்ளூர் ஆள் போலவே தெரிவார்கள். எனவே, பாகிஸ்தானியரை
இங்கு தனியே அடையாளம் காண்பது சிரமமான காரியம்.
அது ஒரு முக்கியமான காரணம்.

வர்த்தக ரீதியாகவும், போக்குவரத்திலும் – பதான்கோட்
முக்கிய இடம் வகிக்கிறது. ஜம்மு செல்லும் அனைத்து
வாகனங்களும், ரெயில்களும் பதான்கோட்டை கடந்து தான்
செல்ல வேண்டும்.
ஒரு பக்கம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துடனும், இன்னொரு பக்கம்
ஹிமாசல் பிரதேசத்துடனும் இணைக்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்து
நாட்டின் எந்த பகுதிக்கும் செல்வது மிக சுலபம்.
90 சதவீதம் பேர் சீக்கியர். டென்ஷன் எதுவும் இல்லை என்பதால்,
உள்ளூர் மக்கள் மீது காவல்துறை, ராணுவம் ஆகியவற்றின்
கண்காணிப்பு அதிகமாக கிடையாது.
இது இன்னொரு முக்கியமான காரணம்.

இங்கு விமானப்படையின் மிக முக்கியமான தளம் ஒன்று
இருக்கிறது என்பது வெளி நபர்களுக்கு சாதாரணமாக தெரியாது.
இந்த விஷயங்களில்ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமே
அறிந்திருப்பார்கள்…. உள்ளூர் மக்களுக்கு கூட,
விமானப்படைக்கு இது இவ்வளவு முக்கியமான இடம் என்பது
இப்போது தான் தெரிந்திருக்கும். இங்கு இந்திய விமானப்படையின்
மிக மிக மதிப்பு வாய்ந்த மிக் போர் விமானங்கள், பைட்டர்கள்,
அட்டாக் ஹெலிகாப்டர்கள், மற்றும் ஏவுகணைகள் ஆகியவை
நிலத்தடியே ஹேங்கரில், மறைவாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேற்கு பிராந்தியத்தில் போர் முனை உருவானால், இவை
உடனடியாக பயன்பாட்டிற்கு தேவை என்பதால் …!!!
இது இன்னுமொரு மிக மிக முக்கியமான காரணம்….!

ஆனால் காஷ்மீர் …?

நான் சென்ற இடங்கள் – முக்கியமாக ஸ்ரீநகர், பஹல்காம்,
சந்தன்வாடி (அமர்நாத் யாத்திரை துவங்கும் இடம் ), பேதாப்
பள்ளத்தாக்கு, ஆரு பள்ளத்தாக்கு, குல்மார்க் ஆகியவை.

இத்தனை இடங்களிலும், இந்திய ராணுவத்தினரை
தயார் நிலையில் காண முடிந்தது. முக்கியமான தெருக்களில்,
50 அடிக்கு ஒரு ஜவான் துப்பாக்கியுடன் நின்றிருப்பது
நமக்கு வித்தியாசமான காட்சியாகத் தோன்றும். ஆனால்,
காஷ்மீரிகளுக்கு இது சர்வ சாதாரணமாக பழகிப்போன
ஒரு விஷயம்.
சில முக்கியமான சந்திப்புகளில், இயந்திரத் துப்பாக்கி
வெளியே தெரியும்படி பொருத்தப்பட்டுள்ள ராணுவ கவச
வாகனங்களையும் – அதனை இயக்க, தயார் நிலையில்,
ராணுவ ஜவானையும் சகஜமாகக் காணலாம்.

மலை முகடுகளில், சிகரங்களின் நடுவே கூட,
சிறிய ஷீட் கொட்டகை அமைக்கப்பட்டு, இயந்திர துப்பாக்கி
சகிதமாக ஜவான்கள் இரவும் பகலும் காவல் புரிகிறார்கள்.
கொட்டும் பனியில், sub-zero temperature –
உறைநிலைக்கும் கீழே மைனஸ் 6 முதல் 8 டிகிரி வரையிலான
இரவு நேரங்களில் காவல் புரியும் இந்த ராணுவ வீரர்களை
பார்க்கும்போது – நாட்டைக் காக்கும் பணி எத்தனை சிரமமானது
என்பதும், நாம் அமைதியாகத் தூங்க வேண்டி,
இந்த ஜவான்கள் எத்தகைய இன்னல்களை எல்லாம் சந்திக்க
வேண்டி இருக்கிறது என்பது சுள்ளென்று உரைக்கிறது.

காஷ்மீரில் ராணுவத்தில் பொறுப்பும், பணியும் பஞ்சாபிலிருந்து
மிகவும் வித்தியாசமானது. காவல் காக்கும் பொறுப்பு ஒரு பக்கம்
என்றால், உளவுத்தகவல்கள் சேகரிப்பும் மற்றொரு பக்கம் மிக
முக்கியமான பொறுப்பு. எல்லைப்புறத்தில் எந்த நகரிலும்,
எந்த கிராமத்திலும் புதிதாக யார் வந்தாலும், ராணுவம்
உடனடியாக அதில் கவனம் செலுத்துகிறது.

காஷ்மீரிலிருந்து – பாகிஸ்தான் வசமிருக்கும் ஆக்கிரமிப்பு
பகுதியான ஆஜாத் காஷ்மீர் பக்கம் உறவினர்களை சந்திக்கும்
பொருட்டு போய் வர விரும்பும் மக்கள் தாராளமாக
அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் தவறு எதுவும் நேர்ந்து
விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு
ஊரிலும் உள்ளூர் மக்களுக்கும், புதிதாக வருபவர்களுக்கும்,
டூரிஸ்டுகளுக்கும் உள்ள வித்தியாசங்களை ராணுவம்
தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறது.
மிகப்பொறுப்பான
முறையில் தொடர்ந்து முறையான தகவல் சேகரிப்பு மூலம்,
இந்த நிகழ்வுகள் எந்தவித கோளாறுமின்றி நடைபெறுவதை
ராணுவம் உறுதி செய்கிறது. எனவே, ராணுவத்தின் உன்னிப்பான பார்வையைத் தாண்டி – தீவிரவாதிகள் உள்ளே ஊடுருவுவது மிகவும் கடினமான காரியம். தப்பித்தவறி எல்லையை தாண்டி நுழைந்து விட்டாலும், உள்ளே சில கிலோமீட்டர் தூரம் கூட தாண்ட முடியாது -பிடிபட்டு விடுவார்கள்….!

நான் போயிருந்தபோது, டூரிஸ்ட் கார், வேன் டிரைவர்கள்,
டீக்கடைக்காரர்கள், ஓட்டல் பணியாளர்கள், நடைபாதை
வியாபாரிகள், கிராமத்தினர் என்று வித்தியாசமாக பலருடனும்
பேசிக் கொண்டிருந்தேன். அதில் சில விஷயங்கள் தெளிவாகின்றன.
காஷ்மீர் மக்கள் பொதுவாக உருது மொழி பேசுவார்கள் என்றே
நான் இதற்கு முன் நினைத்திருந்தேன். ஆனால், அவர்கள் –
பெரும்பாலும் தங்களது சொந்த மொழியான கஷ்மீரி
மொழியைத்தான் பேசுகிறார்கள். அவர்களுக்கு – அதுவும்
நகரத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் – இந்தி ஓரளவு
புரிகிறது. கிராமப் புறங்களில் இருப்பவர்கள் கஷ்மீரி மொழி
தவிர வேறு ஒன்றும் அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

சுமார் 70 சதவீதம் காஷ்மீரிகள் – நாட்டுப்பற்று அது இதுவென்று
அநாவசியமாக ( ! )அலட்டிக் கொள்வதே இல்லை.
இந்தியாவானாலும் சரி, பாகிஸ்தானாக இருந்தாலும் சரி –
அவர்களைப் பொருத்த வரை எந்த வித்தியாசமும் இல்லை.

அவர்கள் பிரிவினை கோருவதும் இல்லை;
சேர்ந்தே இருப்போம் என்று கூவுவதும் இல்லை.
அவர்களைப் பொருத்த வரை இது ஒரு பிரச்சினையே இல்லை.
தாங்கள் தொந்திரவு செய்யப்படாமல் இருப்பதையே அவர்கள்
விரும்புகிறார்கள்.

மீதியுள்ள மக்களில் பெரும்பாலோர் எதாவதொரு அரசியல்
கட்சியைச் சேர்ந்தவர்கள் / ஆதரிப்பவர்கள். காஷ்மீரில் முக்கிய
கட்சிகள் National Conference, அடுத்து Congress
அதற்கடுத்து மப்டி அவர்களின் PDF. பாஜகவின் செல்வாக்கு
ஜம்முவோடு நிற்கிறது. பிரிவினையையோ,
பாகிஸ்தானையோ ஆதரிப்பவர்கள் மிஞ்சி மிஞ்சி போனால் –
இரண்டு அல்லது மூன்று சதவீதம் பேரே இருப்பார்கள்.
அதிலும் பல்வேறு பிரிவுகள்… ஏகப்பட்ட தலைவர்கள்…..!

ஆனால், National Conference அல்லது PDF இரண்டில்
எந்த கட்சி ஆட்சியில் இல்லையோ – அப்போதெல்லாம்
அது மறைமுகமாக பிரிவினைவாதிகளைத் தூண்டி விட்டு,
மத்திய அரசுக்கும், நாட்டு மக்களுக்கும் டென்ஷனை
உண்டாக்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது.
எனவே பிரிவினைவாதிகள் பலமாக வேரூன்றி இருப்பது போல்
எப்போதும் ஒரு மாயத்தோற்றம் உருவாகி இருக்கிறது…!!!
உண்மையான நிலை அதுவல்ல.

தலைப்பிற்கு வருவோம் –

பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீரை விட்டு விட்டு,
பதான் கோட்டை தேர்ந்தெடுத்ததற்கு காரணங்கள்
இதுவாக இருக்கலாம் –

1) காஷ்மீரில் ஊடுருவினால், தீவிரவாதிகள் உடனடியாக
இந்திய ராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டு, அழிக்கப்பட
வாய்ப்புகள் அதிகம்.

2) காஷ்மீருக்குள் உள்ளூர் மக்களிடையே உயிரிழப்புகள்
ஏதேனும் நிகழ்ந்தால் – தாங்கள் மக்களின் அதிருப்திக்கும்
கோபத்திற்கும் உள்ளாவோம் என்பதை அவர்கள் அறிவார்கள்.

3) இந்த தடவை, சிவிலியன்களிடையே உயிரிழப்புகளை
உண்டாக்குவதைவிட, ராணுவத்திற்கு பலத்த சேதத்தை
உண்டு பண்ணி அதிர்ச்சியூட்ட வேண்டுமென்று அவர்கள்
விரும்பி இருக்கலாம். பதான் கோட்டில் மிக அதிக அளவில்
போர் விமானங்களும், ஹெலிகாப்டர்களும், ஏவுகணைகளும்
குவித்து வைக்கப்பட்டிருப்பது அவர்களுக்கு தெரிந்த
விஷயமே…. எனவே காஷ்மீருக்கு பதிலாக –
பதான் கோட் – குறியானது…!!!
நாடு சுதந்திரம் பெறும் சமயத்தில் –
தங்கள் சுயநலம் காரணமாகவும்,
பதவி ஆசை காரணமாகவும்,
இரண்டு தரப்பிலும் சில தலைவர்கள் –
அதி தீவிரமாகவும், விரைவாகவும் செயல்பட்டு –
நாட்டை துண்டாடினர்…..

அந்த பாவத்திற்கான தண்டனையைத் தான்
இந்த நாடும், நாட்டு மக்களும்
கடந்த 68 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறோம்……!

இந்தக் கடன் என்று தீருமோ, எப்படித் தீருமோ –
கண்ணுக்கு எட்டிய வரை வழியொன்றும் தெரியவில்லை…
எல்லாருக்கும் நல்ல புத்தி வேண்டி
இறைவனை வேண்டுவதை விட வேறு வழி …?

——————————————————-

கீழேயுள்ள புகைப்படங்களும், இனி வரக்கூடிய சிலவும் –
சென்ற வாரம் நான்
காஷ்மீர் சென்றபோது எடுக்கப்பட்டவை –

IMG_20151228_123137

IMG_20151228_123548

IMG_20151228_131414

IMG_20151228_133127

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to காஷ்மீரை தவிர்த்து விட்டு பதான்கோட்டை ஏன் …….?

 1. ltinvestment சொல்கிறார்:

  Last photo is sooper sir…..
  karthik

 2. thiruvengadam சொல்கிறார்:

  Leaving all his other acts , S.Swamy’s posting a week back seems to be acceptable. Join U in praying Almighty for normalncy

 3. LVISS சொல்கிறார்:

  Usually the terrorists dont enter India during winter This time they done which shows they would have undergone extensive training – –The terrorist activity has come down in Kashmir probably because the terrorists want to earn the good will of the Kashmiris —
  The terrorists this time has chosen to target sensitive targets instead of civilians which has not brought them any gains except criticisms from their own people — This is going to be the norm and we have to guard our defence assets closely from now on –
  The Republic Day celebrations on 26th will see unprecedented security and strict screening of visitors — The French President is going to be the chief guest —

 4. anbudan Ponnivalavan சொல்கிறார்:

  …./// நாடு சுதந்திரம் பெறும் சமயத்தில் –
  தங்கள் சுயநலம் காரணமாகவும்,
  பதவி ஆசை காரணமாகவும்,
  இரண்டு தரப்பிலும் சில தலைவர்கள் –
  அதி தீவிரமாகவும், விரைவாகவும் செயல்பட்டு –
  நாட்டை துண்டாடினர்…..

  அந்த பாவத்திற்கான தண்டனையைத் தான்
  இந்த நாடும், நாட்டு மக்களும்
  கடந்த 68 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறோம்……!

  இந்தக் கடன் என்று தீருமோ, எப்படித் தீருமோ –
  கண்ணுக்கு எட்டிய வரை வழியொன்றும் தெரியவில்லை…
  எல்லாருக்கும் நல்ல புத்தி வேண்டி
  இறைவனை வேண்டுவதை விட வேறு வழி …?….///

  100% true….

 5. mdsalih1993 சொல்கிறார்:

  புகைப்படம் அனைத்தும் மிகவும் அருமை. புகைப்படம் எடுத்த ஊங்களை பாராட்டுவதா அல்லது புகைப்படத்திற்கு அழகை மேருகூட்டும் காஷ்மீரை பாராட்டுவதா.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.