இதற்குத்தான் ஆசைப்பட்டீர்களா திரு.பழ.கருப்பையா ….?

dinakaran poster on pazha.k

இன்று காலையில் வெளிவந்துள்ள “தினகரன்” நாளிதழின்
போஸ்டர் -மேலே –

நேற்று காலையில், செய்தியாளர்களை தன் வீட்டிற்கு
அழைத்து, சிரித்த முகத்தோடு சந்தித்துப் பேசிய
திரு.பழ.கருப்பையா அவர்களின் பேட்டியை பார்த்தபோது
எனக்கு அவர்மீது ஒரு வித அனுதாபம் இருந்தது.
பாவம் .. நடைமுறை அரசியலுக்கு
ஒத்துவராத ஆசாமி … இவர் எல்லாம் இலக்கியத்தோடு
நின்றுவிட வேண்டியது தானே – இவருக்கெதற்கு கட்சி
அரசியலும், மனச்சங்கடங்களும் என்று நினைத்தேன்….

காலை டிவி பேட்டியின்போது, ஒரு தியாகி போன்றும்,
ஹீரோ போன்றும் தோற்றமளித்த கருப்பையா இரவில்
நடந்த இருவேறு (தந்தி+புதிய தலைமுறை) நேரடி
விவாதங்களின்போது, அவரது ஒப்பனைகள் அழிந்து,
அருவருக்கத்தக்க உண்மை உருவம் தெரிந்தது.

அந்த பேட்டி நடந்து கொண்டிருக்கும்போதும்,
முடிவடைகிற சமயத்திலும் அவரது தோற்றம்
(body-face language ) ஒரு அப்பட்டமான
சுயநலவாதியையும், தெலுங்கு பட வில்லன்களின்
தோற்றத்தையும் நினைவூட்டியது.

( அபூர்வமாக சில தொலைக்காட்சி பேட்டிகள் அற்புதமாக
அமைகின்றன… பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர்
அர்னாப் கோஸ்வாமி, ராகுல் காந்தியை முதல் முதலாக
பேட்டி கண்டது போன்றவை. அந்த வரிசையில் இதையும்
சேர்க்கலாம்…உண்மையான பழ.கருப்பையாவை உலகுக்கு
உரித்துக் காட்டிய பெருமை திரு.ரங்கராஜ் பாண்டே
அவர்களையே சேரும்….! )

அடுக்கடுக்கான கேள்விகளுக்கு –
அடுக்கான சமாளிப்புகள், சால்ஜாப்புகள், திசைமாறல்கள்
(diversions …!)

ரங்கராஜ் பாண்டே கேட்ட ஒரே ஒரு கேள்வி –
திரு.கருப்பையாவின் அஸ்திவாரத்தையே உலுக்கி
அவரது தரப்பு வாதத்தை அடியோடு வீழ்த்தி விட்டது….

“சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் ஒரு வேட்பாளர்
அதிகபட்சம் 16 லட்சம் ரூபாய் வரை செலவழிக்கலாம்
என்கிற விதிமுறை இருக்கும்போது, நீங்களே எழுதி,
கையொப்பம் போட்டு தேர்தல் கமிஷனில் கொடுத்திருக்கும்
விவரத்தில், தேர்தலில் மொத்தம் நான்கு லட்சத்து
ஐம்பதாயிரம் ரூபாய் மட்டுமே செலவழித்ததாகச் சொல்லி
இருக்கிறீர்களே –

அறம் சார்ந்த அரசியல் நடத்த விரும்பும் திரு.கருப்பையா –
உங்கள் நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள் -நிஜமாகவே
எம்.எல்.ஏ. தேர்தலில் நீங்கள் வெறும் நாலரை லட்சம் ரூபாய்
மட்டும் தான் செலவழித்தீர்களா ….? ”

என்ற கேள்விக்கு –

“இதை நீங்கள் ஒவ்வொரு தலைவரையும் போய் கேட்க
வேண்டும். என்னிடம் கேட்பது வெட்டிப்பேச்சு….”

” நடைமுறையில் கடைப்பிடிக்க முடியாத
சட்டங்களை எல்லாம் உடைத்து தூரப்போட வேண்டும்….
யாரால் இந்த தொகைக்குள் முடியும் …?
நேருவின் காலைத்திலும், மொரார்ஜி தேசாய் காலத்திலும்
கூட இது தான் நடந்து கொண்டிருந்தது …”

“அதிகமாக வரிகளை போட்டால், சட்டத்தை ஏமாற்றுபவர்கள்
தான் அதிகரிப்பார்கள். ஹாங்காங்கில் 15 % தான்
வருமான வரி…. நடைமுறைப்படுத்த முடியாத சட்டங்களை
எல்லாம் ஒழிக்க வேண்டும் ….”

“இல்லையேல் ஒரு நாள் இந்த நாடு மாவோயிஸ்டுகளிடம்
தான் போய்ச்சேரும். அவர்கள் தான் இதற்கெல்லாம் சரி…”

“பாண்டே மருத்து கடைக்கு போனால், வரி கட்டுவதை
தவிர்க்க, பில் இல்லாமல் மருந்து வாங்குவதில்லையா …? “

“பாண்டே நீங்கள் என்னை பொய்யன் என்று நிரூபிப்பதிலேயே
குறியாக இருக்கிறீர்கள். எல்லாரையும் அயோக்கியனாக
நிரூபிப்பதால் பாண்டே அடையப்போகும் லாபம் என்ன…?

இத்தனையையும் சொல்லி, திரும்ப திரும்ப விஷயத்தை
திசைதிருப்பிக் (diversion ) கொண்டிருந்தாரே தவிர
எவ்வளவு தடவை கேட்டும் -அந்த கேள்விக்கு,
கடைசி வரை பதில் சொல்லவே இல்லை.

கடைசியாக பாண்டே-க்கு அவர் கொடுத்த சர்டிபிகேட் –
“பாண்டே நீங்கள் ஒரு மனோவியாதி பிடித்த மனிதர்.. !!! “

திரு.கருப்பையா அவர்கள் பதில் சொல்லாத,
பதில் சொல்ல முடியாத பல கேள்விகள் அப்படியே
தொக்கி நிற்கின்றன.

– 40 ஆண்டுக்கால தமிழக அரசியலை நன்கு உணர்ந்த
திரு.கருப்பையா – அதிமுக தலைமை, தான் சொல்கிற
ஆலோசனைகளை ஏற்று நடக்கும் என்று எப்படி
நம்பினார்…? அவர் அப்படிச் சொல்வது ஏற்பதற்குரியதா ?

– எம்.எல்.ஏ. ஆன அடுத்த மாதமே சட்டமன்றத்தில்,
தான் மார்க்சிஸம் குறித்து தெரிவித்த கருத்தை எதிர்த்து
முதலமைச்சர் அரை மணி நேரம் பேசினார். அன்றிலிருந்தே
அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு வந்து விட்டது
என்று சொல்பவர் –

– அன்றே கட்சியை விட்டு வெளியேறி இருக்க வேண்டியது
தானே …? நாலரை ஆண்டுக்காலம் எதை எதிர்பார்த்து
கட்சியில் காத்திருந்தார்…? மியூசிகல் சேர் மாதிரி
மந்திரி சேர் காலியாகும்போது, தனக்கும் எப்போதாவது
வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தா …?

– அதிமுகவில் தொண்டர்களின் கருத்துக்களை தலைமை
கேட்பதில்லை என்பது அய்யாவுக்கு இப்போது தான்
தெரிய வந்ததா ?

மவுலிவாக்கத்திலிருந்து, மணல் கொள்ளையிலிருந்து,
கவுன்சிலர், அமைச்சர்கள், கட்சி பிரமுகர்கள் அடிக்கும்
கொள்ளைகள், செய்யும் ஊழல்கள் பற்றி எல்லாம்
எப்போதோ – பொது ஊடகங்களில் வந்தாகி விட்டதே …?
நீங்களும் நானும் – எல்லாரும் அறிந்த விஷயங்கள்
தானே அவையெல்லாம்…?

அத்தகைய சந்தர்ப்பங்களில் அதைக் கண்டித்து இவர்
கட்சியை விட்டு வெளியே வந்திருந்தால் இவர் நிச்சயம்
ஹீரோ ஆகி இருப்பார்….

இவரை கட்சியிலிருந்து வெளியேற்றிய பிறகு –
இப்போது தான் இந்த தகவல்கள் எல்லாம் வெளிப்படுவது
போல் கூறிக்கொண்டு -இதையெல்லாம் எதிர்த்து தான்,
தான் வெளிவருவது போல் இவர் கூறுவது ….

எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து பார்த்தால்
நமக்கு தோன்றுவது –

“தன்னை மதிக்காத –
தனக்கு, தான் கேட்ட அமைச்சர் அல்லது
சபாநாயகர் பதவியை கொடுக்காத கட்சியை,
கட்சித்தலைமையை
சரியான நேரம் பார்த்து –
போட்டுக் கொடுக்கிறார் – காட்டிக் கொடுக்கிறார்…!!!

மேலேயுள்ள புகைப்படத்தில் காணப்படும்
நாளிதழின் போஸ்டர்
தான் அவரது தற்போதைய குறியோ
என்று தான் தோன்றுகிறது..!

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

இதற்குத்தான் ஆசைப்பட்டீர்களா திரு.பழ.கருப்பையா ….? க்கு 19 பதில்கள்

 1. Ganpat சொல்கிறார்:

  கா.மை.ஜி ,
  பழ.கருப்பையா நடந்து கொண்டது எனக்கு சிறிதும் வியப்பை தரவில்லை.ஆனால் நீங்கள் அவரை தூயவர் என நம்பியதுதான் மிகுந்த வியப்பை தந்தது.இரு கழகங்களிலும் உச்சி முதல் பாதம் வரை ஊழல் தானே?இதில் தூய்மைக்கு ஏது இடம்?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக கண்பத்.

   மூத்த கழகத்தை பொருத்தவரை நீங்கள் சொல்வது சரி தான்.
   ஆனால், இளையதில் – சிலர் என் கண்ணுக்குத் தென்படுகிறார்கள்.
   பெயர்களைச் சொன்னால் – என் மனதில் உள்ள அவர்களது
   பிம்பமும் பாதிக்கப்படும்…! எனவே வேண்டாம்…!

   பொதுவாகவே சில exempted persons எல்லா இடங்களுமே
   இருக்கத்தானே செய்வார்கள்… அப்படி நினைத்தேன் என்று
   வைத்துக் கொள்வோமே. கடந்த -7-8 ஆண்டுகளாகத்தான்
   நான் இவரை கவனித்து வருகிறேன். நண்பர் ஜோதி கூறிய
   “முன் சரித்திரம்” எனக்கு தெரிந்திருக்கவில்லை.

   ஒரு விஷயம் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
   உண்மையில் இந்த இடுகைக்கு நிறைய எதிர்ப்புகள் வருமென்று
   நான் கருதினேன். ஆனால், almost எல்லாருமே ஆதரிப்பது போலவே
   தெரிகிறது. அந்த அளவிற்கு “பாண்டே” effect தெரிகிறது… 🙂

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • ஜோதி சொல்கிறார்:

    காமைசார்,
    இதுவும் ஒரு சரித்திரம் தான். ஆனால் அவ்வளவு முன் இல்லை. தற்போதைய அதிமுக ஆட்சியிலேயே பழ கருப்பையா அவர்களின் behind the camera சீன்.

    நன்றி : விஜய் ஆனந்த், புதியதலைமுறை (முகநூலில்)

    கருப்பையா மீதுள்ள காதலால் சொல்கிறேன்…!

    ‘ அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா நீக்கி வைக்கப்படுவதாக’ பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். காரணம். ஆட்சிக்கு எதிராக கருப்பையாவின் கூர்மையான விமர்சனம். துக்ளக் விழாவில் கருப்பையா பேசிய பேச்சு, அ.தி.மு.க தலைமையை அதிர வைத்துவிட்டது என புரிந்து கொள்ளலாம்.

    இதே கருப்பையாவோடு நான் முரண்பட்டுப் போன சம்பவம் ஒன்றும் நடந்தது. இன்று இவ்வளவு பேசும் கருப்பையா, அன்று நடந்து கொண்ட விதத்தை அவ்வளவு எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் புதிய தலைமுறையின் அக்னிப் பரீட்சை நிகழ்ச்சிக்காக அவரை அழைத்தேன். பத்துநாள் தொடர் முயற்சிக்குப் பிறகே, நிகழ்ச்சியில் பங்கேற்க சம்மதித்தார். அப்போது, ‘ அ.தி.மு.க குறித்த கேள்விகள் எதுவும் வேண்டாம். எனது அரசியல் வாழ்வு, நேர்மை அரசியல் ஆகியவை குறித்த கேள்விகள்தான் இருக்க வேண்டும்’ என நிபந்தனையும் விதித்தார். குறிப்பிட்ட நாளும் வந்தது. பெரும் படைவாரத்தோடு வந்தார். அக்னிப் பரீட்சை அரங்கிற்குள் சென்றவர், நெறியாளர் ஜென்ராமோடு பேசிக் கொண்டிருந்தார். நான் ரெக்கார்டிங் அறைக்குள் அமர்ந்து ‘ரோலிங்’ சொல்வதற்கான நேரத்திற்காக காத்திருந்தேன். திடீரென்று அரங்கிற்குள்
    அமைதி.

    ஒளிப்பதிவாளர் ஒருவர் ஓடிவந்து, ” எம்.எல்.ஏ உங்களைக் கூப்பிடுகிறார். சீக்கிரம் வாருங்கள்” எனச் சொல்ல, வெளியே ஓடிவந்தேன். லிப்ட் அருகே நின்று கொண்டிருந்த கருப்பையா, “வாய்யா…நீ சொல்லித்தான் வந்தேன். என்னய்யா நினைச்சிட்டு இருக்கீங்க” என சத்தம் போட, நான் புரியாமல், “சார்… என்ன நடந்தது?” என்றேன்..எதையும் சொல்லாமல் சத்தம் போட்டுக் கொண்டே லிப்ட் கதவைத் திறந்தார். உள்ளே போனதும், ” இந்த நெறியாளருக்கு என்ன சம்பளம் கொடுக்கறாங்க? நான் யார் தெரியுமா?” என கண்டபடி பேச ஆரம்பித்துவிட்டார். அந்த மூன்று மாடி லிப்ட் கீழே எப்போது இறங்கும்? என பதைபதைத்துக் கொண்டே இருந்தேன். கீழே வந்தவர், ” நான் கட்சிக்கு கட்சி மாறிட்டு இருக்கேன். இது சரியான்னு முதல் கேள்வியை வச்சிருக்கார் அந்த நெறியாளர். அ.தி.மு.கவுக்கு எதிராக நிறைய கேள்விகள் இருக்கு? இதுக்குத்தான் சம்பளம் கொடுக்கறாங்களா? இனி அந்த ஆபீஸ் பக்கம் வந்தன்னா கேளு” என்றபடியே காரைக் கிளப்பிக் கொண்டு போனார் கருப்பையா.

    அதிர்ந்து போய் நெறியாளர் ஜென்ராமிடம், ” சார்… என்னதான் நடந்தது?” என்றேன். அவர் எப்போதும் போல் அமைதியாக, ” ஒன்றுமில்லை. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு என் அனுமதியில்லாமல் என்னிடம் இருந்த கேள்வித்தாளை பிடுங்கி படித்துவிட்டார். அந்தக் கோபத்தில் செல்கிறார். பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்றார்.

    கருப்பையா, அங்கிருந்த அகன்ற பின்னரும் என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. அ.தி.மு.கவுக்கு எதிரான சிறு விமர்சனத்திற்குக்கூட பதில் கூறாமல் அவமானப்படுத்துகிறார். என்ன காரணம்? என அதிமுக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ” இன்னும் ஓரிரு நாளில் மந்திரி சபை மாற்றம் இருக்கப் போகிறது. பதவி கிடைக்கும் என உறுதியாக நம்புகிறார். அதனால்தான் அவர் பேச மறுத்திருப்பார்” என விளக்கம் கொடுத்தார். அடுத்த இரண்டு நாளில் மந்திரி சபை மாற்றமும் நடந்தது. கருப்பையாவுக்கு சிறு நாற்காலியைக்கூட அ.தி.மு.க தலைமை ஒதுக்கவில்லை. இன்றைக்கு, ‘ கமிஷன் வாங்கலாம். ஊரை அடித்து உலையில் போடலாம்’ என பேசும் அவர், அன்றைக்கும் இதே மனநிலையில் பேசியிருந்தால், அவருடைய நேர்மை அரசியலுக்கு சல்யூட் அடித்திருக்கலாம். துணை சபாநாயகர், ஏதேனும் ஒரு துறைக்கு அமைச்சர் என ஆட்சி தொடங்கிய நாளில் இருந்தே கருப்பையா எதிர்பார்த்தார் என்பதை அவரது மனசாட்சி அறியும்.

    அதற்கேற்பவே, ஜெயலலிதாவை உயர்த்திப் பிடிக்கும் கட்டுரைகளையும் அவர் தினமணியில் எழுதினார். ஒருகட்டுரையில், ‘ சீர்காழி பிராமண குடும்பத்தில் பிறந்த திருஞானசம்பந்தரின் திராவிடப் பற்றை சகிக்க முடியாமல், அவரை ‘திராவிட சிசு’ என ஆதி சங்கரர் வர்ணித்தார். இது ஆரிய முரணே அன்றி திராவிட முரண் அல்ல. அதேபோல, பிராமணக் குடும்பத்தில் பிறந்த முதலமைச்சர் செயலலிதா திராவிடக் கட்சி ஒன்றிற்கு தலைமையேற்று நடத்துவதும் ஆரிய முரண்தான் என முதல்வரை ரொம்பவே தூக்கி வைத்துக் கொண்டாடியவர்தான் பழ.கருப்பையா. கருணாநிதி மீதான விமர்சனத்தை கூர்மையாக்கி, அ.தி.மு.க தலைமையிடம் பாராட்டுப் பெறவும் ரொம்பவே முனைந்தார்.
    எல்லாம் எதிர்மறையாகிப் போனது.

    திராவிடம், சமயம், பண்பாடு குறித்த அவரது கட்டுரையாகட்டும். வள்ளலார், காந்தி குறித்து அவரது பேச்சுக்களாகட்டும். எவ்வளவு மணி நேரம் வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அனைத்தும் நடைமுறையில் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். இதையும்கூட, கருப்பையாவின் மீதுள்ள காதலால்தான் சொல்கிறேன்…

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     ஜோதி,

     அற்புதமான தகவலை தந்திருக்கிறீர்கள்.
     இதைப் போன்ற பின்னூட்டங்கள்
     இந்த இடுகைக்கும்,
     இந்த வலைத்தளத்துக்கும்,
     எனக்கும் மிகுந்த வலுவை
     சேர்க்கின்றன. நன்றி.

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

 2. ரிஷி சொல்கிறார்:

  ஐயா, எனக்கு எதிர்க்கருத்து உண்டு இப்பதிவிற்கு. ஆனால் நான் விவாதிக்கப் போவதில்லை.

  ஆனால் ஒன்று சொல்லலாம்.

  பூவை பூவுன்னும் சொல்லலாம்; புய்ப்பம்னும் சொல்லலாம்; நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்.🙂🙂

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ரிஷி,

   நீங்கள் எப்படிச் சொன்னாலும்
   எனக்கு மகிழ்ச்சி தான். ஏனென்றால் –
   சொல்வது ரிஷி ஆயிற்றே …!!! 🙂 🙂 😀

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. K Jayadev Das சொல்கிறார்:

  arumai. 100% true.

 4. bandhu சொல்கிறார்:

  நான்கு வருடம் கழித்து உண்மைகளை சொல்வதில் அவர் மீது நம்பகத் தன்மை போய்விட்டது.

  சென்னை வெள்ளத்தின் போது அரசு மொத்தமாக செயல் இழந்த நிலையில் இருந்ததை எல்லோருமே பார்த்தோம். அதுவரை அதிமுக மீது பெரிய அதிருப்தி இல்லை. ஆனால் இப்போது அப்படி இல்லை.

  தேர்தலில் முடிவு எப்படியிருக்குமோ என்ற சந்தேகம் தோன்றும் போது இப்படி ‘திடீர்’ மனசாட்சி விழிப்பு நிகழ்வுகள் நடப்பது இயற்கையே!

  பார்க்கலாம். எப்படிப் போகிறது என்று!

  • ஜோதி சொல்கிறார்:

   சும்மா தெரிந்துகொள்ளத்தான் கேட்கிறேன்,
   சென்னை வெள்ளத்தின்போது நீங்கள் எங்கே இருந்தீர்கள் நண்பர் பந்து அவர்களே?

   • bandhu சொல்கிறார்:

    இதற்கு பதில் சொல்வது பதிவின் போக்கை திசை திருப்பும் என்பதால் தவிர்க்கிறேன். இப்போதும் அதிமுக அரசின் மேல் எந்த அதிருப்தியும் இல்லை என்கிறீர்களா?

    • ஜோதி சொல்கிறார்:

     என்னைப் பொறுத்தவரை பொதுவான மக்கள் பிரச்சினைகளில் எந்த அதிருப்தியும் இல்லை.

     நீங்கள் சொன்ன மக்கள் பிரச்சினைகளில் ஒன்றா வெள்ளத்தின்போது அரசும் அரசு இயந்திரமும் பொதுமக்களும் சிறப்பாகத்தான் செயல்பட்டார்கள் என்பதை விமரிசனத்தில் சிலபல பதிவுகளுக்கு முன்பு படித்திருந்தீர்களானால் புரிந்திருக்கும். என்ன செய்வது? வெள்ளத்தில் பாதிக்கப்பட்டீர்களா? தெரியவில்லை. வெள்ள நிவாரணப்பணிகளிலும் பங்குபெற்றீர்களா இல்லையா தெரியவில்லை? எனவே இதைக் குறித்து நான் கருத்துச்சொல்வது உங்கள் பின்னூட்டத்தின் நிலையை கேள்விக்குறியாக்கிவிடும் என்பதால் மேற்கொண்டு இதுகுறித்து தவிர்க்கிறேன்.

     உட்கடசி விவகாரங்களில் அதிருப்தி இருந்தால் அதில் கட்சிநிர்வாகிகள் தவிர வேறு யாரும் தலையிடமுடியாது.

     பழ கருப்பையா இப்போது கூறியுள்ள குற்றச்சாட்டுகள் எல்லாமே அவர் அங்கே போவதற்கு முன்னமே இருந்தவைதான். ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு எந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டவையோ அவை துறைரீதியாகவோ நீதிமன்றம் மூலமாகவோ நடவடிக்கைக்காக காத்துக்கொண்டிருக்கின்றன.

     கட்சித் தொண்டர் என்ற முறையில் இவரது ஒழுங்கீனத்திற்கு கட்சித்தலைமை நடவடிக்கை எடுத்திருக்கிறது, இவர் சிட்டிங் எம்மெல்லே என்றாலும்கூட.

     இந்த மாதிரியான உடனடி நடவடிக்கைகளை வேறு எந்த கட்சிகளிலும் காணமுடியாது. திமுக உட்பட.

 5. புது வசந்தம் சொல்கிறார்:

  ஒரு காலத்தில் நல்ல அரசியல்வாதிகள் இருந்தார்கள். இப்போது அப்படியல்ல ஒரே வகைதான் – அரசியல்வாதிகள் மட்டுமே.

 6. Drkgp சொல்கிறார்:

  நண்பர் ஜொதி,

  உகந்த குறிப்புகளை வழங்குவதில் முன் நிற்கிறீர்கள். நன்றி.

  நிறைய படிக்கின்றீர்கள் . வாழ்த்துக்கள் .

 7. chandraa சொல்கிறார்:

  i request km ji to address rangaraj pandey of thanthi t.v as rangaraj only. pandey is a caste name…. a dominant caste in north india. besides mrvrangaraj has himself agreed that he was born in a pandey family but brought up in tamilnadu…. i have seen GNANI SIR addressing him as mr rangaraj….

 8. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Sh.KM do you still believe that this situation will change tomorrow? (Nalaiyavdhu marum).
  I have lost my hope long back. God bless you to live that long years to see the good change
  with good health. All the best..

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   நண்ப கோபாலகிருஷ்ணன்,

   இருப்பதோ-போவதோ நம் கையில் இல்லை…
   எப்போது அழைப்பு வந்தாலும் கிளம்ப –
   குடும்பத்தைப் பொருத்த வரையில் அத்தனை
   ஏற்பாடுகளையும் செய்து வைத்து விட்டேன்.
   எத்தகையை பிடிப்புகளும் இல்லாமல் –
   கிளம்புவதற்கு தயாரான மனப்பக்குவத்துடன் இருக்கிறேன்.
   எனவே, நாளையாவது மாறும் என்னும் என் எதிர்பார்ப்பிற்குரிய
   “நாளை ” எப்போது வந்தாலும் சரி.

   என்னைப்பொருத்த வரையில் அந்த “நாளை” வருமென்று
   நம்பிக்கையோடு இருக்கிறேன். இந்த உடம்பில் இல்லா விட்டாலும்,
   வேறு எதாவது உடம்புடன் நான் அதை அவசியம் காண்பேன்
   என்கிற நம்பிக்கை நிச்சயம் இருக்கிறது.

   நம் காலத்திலேயே மாற, மாற்ற – முயற்சிப்போம்.
   ஒருவேளை நாம் இல்லாது போனாலும் –
   நமது முயற்சியை வேறு யாராவது
   மேற்கொண்டு தான் இருப்பார்கள்.

   நம்பிக்கையோடு இருங்கள் நண்பரே.

   வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • உண்மை சொல்கிறார்:

    //என்னைப்பொருத்த வரையில் அந்த “நாளை” வருமென்று
    நம்பிக்கையோடு இருக்கிறேன்.//

    உடல்நலத்துடன் நீண்ட ஆயுளையும் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

 9. உண்மை சொல்கிறார்:

  தோல்வியடைந்த கேள்விக்கென்ன பதில் –

  இங்கே பாண்டேயை விட்டு விட்டு, திரு பழ கருப்பையா அவர்கள், விலக்கப்பட்ட போது அவர் கொடுத்த நேர்காணலையும்,இன்று அவர் பேசியதையும் பார்த்தால்………………
  ஐயா! நீங்கள் நல்லவரா இல்லை கெட்டவரா? என கேட்கத் தோன்றுகிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப உண்மை,

   இது குறித்த தனி இடுகை வந்துகொண்டே இருக்கிறது….!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.