அது என்ன “சீல்” இட்ட கவரில் கொடுப்பது …?

rbi logo

நீங்கள் வங்கிகளில், அரசுத்துறை வங்கிகளில் கடன்
வாங்கி இருக்கிறீர்களா ? தவணைகளை ஒழுங்காக செலுத்த
முடியாமல் திணறி – தவறி இருக்கிறீர்களா …?

இரு சக்கர வாகனக்கடன் வாங்கியவர்கள் நிலை
எவ்வளவோ தேவலை… கடன் தவணைகளை ஒழுங்காக
செலுத்தா விட்டால் – just – வாகனத்தை
தள்ளிக் கொண்டு போய் விடுவார்கள்…அவ்வளவே…!

வீட்டுக்கடன் வாங்கி, தவணைகளை செலுத்த முடியாமல்
திணறி இருப்பவர்களை பார்த்திருக்கிறீர்களா …? நான்
அப்படிப்பட்டவர்கள் சிலரை பார்த்திருக்கிறேன். எங்கே …?

கொஞ்சம் கூர்ந்து கவனித்திருந்தால் –
நீங்கள் கூட -பார்த்திருப்பீர்கள் …
செய்தித்தாள்களில், ஏல விளம்பரங்களில் –
திருமதி விமலா குப்புசாமி, ராஜமாணிக்கம், சௌந்திரராஜன்
இப்படி இப்படி …பல பெயர்கள் அடிக்கடி போட்டோ, வயது
மற்றும் முழு விலாசங்களுடன் வரும்.
வீட்டுக்கடன் வாங்கி, தவணைகளை ஒழுங்காக செலுத்தாததால்,
அவர்கள் கடனுக்கு அடமானமாக வைத்துள்ள உள்ள வீடு ஏல
விற்பனைக்கு வருகிறது – என்கிற மாதிரியான விளம்பரங்கள்…
பொதுத்துறை வங்கிகளால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை
வரும் ஏல விற்பனை விளம்பரங்கள்…!

6 லட்சம், 8 லட்சம் என்று வீடு கட்டுவதற்காக கடன் வாங்கும்
ஏழை, நடுத்தர வர்க்கத்தினர், அந்த கடனுக்கு ஈடாக
தாங்கள் கட்டும் அல்லது வாங்கும் வீட்டையே வங்கிக்கு
அடமானமாக எழுதிக்கொடுக்க வேண்டி இருக்கிறது.
ஆறு தவணைகளுக்கு மேல் திரும்ப கொடுப்பதில் தாமதம்
நேர்ந்தால் – மேற்கூறியவாறு புகைப்படத்துடன் கூடிய
“பப்ளிசிடி” கொடுத்து, அவர்கள் “மானமும்” பறிபோன பிறகு,
ஏலத்தில் “வீட்டை”யும் பறிகொடுக்க நேரிடுகிறது.

6 லட்சம் 8 லட்சம் கடன் வாங்கியவர்களின் விஷயத்தில்
இவ்வளவு கறாராக, ஜரூராக இருந்து வசூல் பண்ணும்
பொதுத்துறை வங்கிகள், நூற்றுக் கணக்கான கோடிகளை
கடன் வாங்கி விட்டு, திரும்பக் கொடுக்காமல் ஏப்பம் விடும்
“பெரும் தொழில் அதிபர்கள் ” விஷயத்தில் என்ன செய்கின்றன ..??

ஆறு மாதம் என்ன, ஒரு வருடம் ஆனாலும் கூட, அவர்களாக
திரும்பக் கொடுப்பார்கள் என்று பொறுமையாக காத்திருக்கின்றன.

அதற்கப்புறமும், தவணைத்தொகைகள்
செலுத்தப்படா விட்டால் – ஒரு பிரச்சினையும் இல்லை …

தொழில் அதிபர்கள் ஆயிற்றே…
இந்த நாட்டிற்கு அவர்கள் தானே இன்று மிக அவசியமானவர்கள்…
( நாட்டிற்கா, அவர்களை நம்பி பிழைப்பு நடத்தும்
அரசியல்வாதிகளுக்கா…? ) அவர்கள் விஷயத்தில் வங்கிகள்
மிகவும் மரியாதையுடன் நடந்து கொள்ளும்.
காரணம்…..? அரசு நிர்வாகம், (அரசியல்வாதிகள், அமைச்சர்கள் )
அவர்களுக்கு கொடுத்திருக்கும் guidelines அப்படி…!
அங்கு மட்டும் flexibility காட்டப்படும்… எப்படி …?

ஒரு வருடம் வரை தவணைகள் செலுத்தப்படவில்லை
என்றால், அந்த ஒரு வருடத்திற்கான மொத்த தொகையையும்
கூட்டி, அசல் கடனோடு சேர்த்து மொத்த கடன் தொகையை
ஏற்றி விடுவார்கள்… இதற்கு அவர்கள் வைத்திருக்கும்
பெயர் debt re-structuring scheme…!!!

அடுத்த வருடமும் இதே மாதிரி வரவில்லையா ?
கவலையே இல்லை… இருக்கவே இருக்கிறது
debt re-structuring scheme…!!!

இப்படி கூட்டிக் கொண்டே போய், அவர்கள் அடமானமாக
காட்டும் கம்பெனி சொத்தின் மொத்த மதிப்பை விடவும்,
கடன் தொகையின் மதிப்பு ஏறி விடுகிறது. இந்த சமயத்தில்,
கம்பெனியை மூடி விட்டு, அந்த பெருந்தொழில் அதிபர்
வேறு புதிய கம்பெனியை கவனிக்கச் சென்று விடுவார்.
( அண்மையில் புகழ்பெற்ற தொழிலதிபர் kingfisher
விஜய் மால்யா கதை நினைவிற்கு வருகிறதா…? )

அடமான சொத்தை விற்றாலும் கூட வங்கிக்கு
கொடுத்த கடனில் பாதி கூட தேறாது.

இந்த மாதிரி கடன்களும் சரி, கம்பெனிகளும் சரி –
ஒன்றா இரண்டா ?ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.
இவற்றிலிருந்து வசூலிக்க முடியாமல் கிடக்கும் கடன்களுக்கு
பெயர் – தமிழில் அழகாக “வாராக் கடன்” என்று சொன்னாலும்,
வங்கி மொழியில் அவர்கள் அழைப்பது செல்லமாக –
Non Performing Assets…!!!

இப்படி திரும்ப வராமல் கிடக்கும் பொதுத்துறை வங்கிகளின்
மொத்த கடன்தொகை ஏழு லட்சம் கோடியைத் தாண்டும் என்று
சொல்கிறார்கள். உண்மைத் தொகையை யாரும் சொல்ல
மாட்டார்கள்.
ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு தொகை
சொல்லப்படும்…

இப்படி பொதுத்துறை வங்கிகளின் பணம் முடங்கும்போது,
மத்திய அரசு அவ்வப்போது நிதி கொடுத்து (infuse…)
அத்தகைய வங்கிகளை நிலைத்து நிற்கச் செய்கிறது.

கடந்த 2015-ஆம் ஆண்டில் மட்டும் – மத்திய அரசு
write off செய்த கடன்களின் மொத்த தொகை 45,000 கோடி.
இது யாருடைய பணம் என்று நினைக்கிறீர்கள்…?
உங்கள் பணம் – என் பணம்…

சரி இப்படி நாசமாய்ப்போன கடன்காரர்கள் ( அதான் தொழில்
அதிபர்கள்…!) யார் யார் என்றாவது தெரிந்து கொள்ள
நமக்கு உரிமை உண்டா…?

உம்…ஹூம் … 6 லட்சம் வீட்டுக்கடன் வாங்கி விட்டு,
தவணை கட்ட முடியாமல் திணறிய திருமதி விமலா குப்புசாமி
முகம், விலாசம் எல்லாம் விலாவாரியாக விளம்பரம்
செய்யப்படும். ஆனால், ஆயிரக்கணக்கான கோடிகளை
ஏப்பம் விட்ட கோடீஸ்வர தொழில் அதிபர்களின் பெயரைக் கூட
நமக்கு சொல்ல மாட்டார்கள்…

வங்கிகள் தான் மறைக்கின்றன….
அரசு தான் மறைக்கிறது…
நீதிமன்றங்களாவது இதற்கு ஒரு வழி சொல்லும் என்று
பார்த்தால் – இது சம்பந்தமாக தொடரப்பட்ட
ஒரு பொது நல வழக்கு விசாரணக்கு வந்த போது,

மூன்று நாட்களுக்கு முன்னர் இந்த நாட்டின் அதிக பட்ச
அதிகாரம் உடைய நீதிமன்றம் ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு
போடுகிறது – “500 கோடிக்கு மேல் கடன் வாங்கி விட்டு
திரும்பக் கொடுக்காமல் டபாய்த்துக் கொண்டிருக்கும்
பெரும் தொழில் அதிபர்களின் பெயர்களை பட்டியலிட்டு,
ஒரு கவரில் வைத்து ” சீல் ” இட்டு கொடுங்கள்….!!! ”

open court-ல் தகவலை கொடுத்தால் என்ன –
கவரும், “சீல்”-ம் ஏனென்று கேட்கிறீர்களா …?
அவர்கள் இந்த நாட்டின் பெரும் தொழில் அதிபர்களாயிற்றே – அவர்கள் ” மானம் ” காக்கப்பட வேண்டும் என்பதில்
நீதிமன்றங்களுக்கு மட்டும் பொறுப்பில்லையா என்ன ..?

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

அது என்ன “சீல்” இட்ட கவரில் கொடுப்பது …? க்கு 4 பதில்கள்

  1. V.G.Chandrasekaran சொல்கிறார்:

    வீட்டு கடன் விசயத்தில் கடன் வாங்கியவர் மட்டுமா ஒரு நல்ல விசயத்திற்காக என்றோ பழகிய பழக்கத்திற்காக என்றோ நெருங்கிய உறவினர் என்றோ எதோ ஒரு காரணத்திற்காக பினையாளராக கையெழுத்து இடுபவரின் நிலமையும் மிகவும் கேள்விக்குறிய ஒன்று தான் வாங்கிய கடன் தொகைக்கு பினையாளர் சட்டபூர்வமான பொறுப்பாளர் ஆனால் பெறு நிறுவனங்களின் விசயத்தில் இவை ஏதுமே இல்லை அவர்கள் பெயர் டிபால்ட்டர் பட்டியலில் வருவதில்லை நீங்கள் கூறியது போல் செய்திதாள்களில் படத்துடன் வருவதில்லை அதனால் தான் விஜய் மல்லையா இன்னமும் அந்தஸ்துடன் வலம் வர முடிகின்றது. வீட்டு கடனுக்கு பினை கையெழுத்து இட்டு பாழாகியவனாக இருந்தும் வாரா கடன் விசயத்தில் சட்டமும் நீதியும் தன் கடமையை செய்யும் என்று காத்திருக்கிறேன்.

  2. Mahesh Thevesh சொல்கிறார்:

    80/20 விகிதாசாரத்தில்தான் இந்த உலகு சுளல்கிறது.80 வீத மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்தாலும் 20 வீதமாக இருக்கும் பணக்கார
    வர்கம்தான் அரசாட்சி செய்கிறது.தேர்தலைச் சந்திக்கும் கட்சிகள்
    அல்ல என்பதே நிதர்சன உண்மை.

  3. ravi சொல்கிறார்:

    when u take a loan for 1 lakh, you are in trouble.
    when u take a loan for 100000 lakh, bank is in trouble !!!

  4. selvarajan சொல்கிறார்:

    // அவர்கள் இந்த நாட்டின் பெரும் தொழில் அதிபர்களாயிற்றே – அவர்கள் ” மானம் ” காக்கப்பட வேண்டும் என்பதில்
    நீதிமன்றங்களுக்கு மட்டும் பொறுப்பில்லையா என்ன ..? // அதனால் அவர்களுக்கு பத்ம விருதுகளை போல ” வங்கி ஏயப்பாளர்கள் { ஏமாற்றாளர்கள் } ” என்கிற விருது கொடுத்து கௌரவிக்க ஆணையிட்டாலும் — ஆச்சர்யமில்லை தானே — இந்த நாட்டில் …. ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.