JNU குறித்து திரு.மோகன்லால் கருத்து – தொடர்ச்சி….

jnu

JNU குறித்து திரு.மோகன்லால் கருத்து – தொடர்ச்சி….

இன்று காலையில் பதிவிட்ட இடுகையில்
திரு.மோகன்லால் அவர்களின் சிந்தனைகளை
வெளியிட்டிருந்தேன்.

இது குறித்து எனக்கு தோன்றும் சில யோசனைகளை
பின்னூட்டமாக தயாரித்தேன். ஆனல், அதை இன்னும்
முக்கியமான இடத்தில் பதிந்து, அது குறித்து
மற்ற நண்பர்களின் கருத்துக்களையும் பெற வேண்டும்
என்று தோன்றியது.

எனவே இது குறித்து எனக்கு தோன்றும்
கருத்துக்களை இங்கு முன்வைக்கிறேன். இது எந்த கட்சிக்கும்
சார்பானதோ, எதிரானதோ அல்ல. நாட்டு நலன்,
மாணவ சமுதாயத்தின் நலன் ஆகியவற்றை மட்டுமே
கருத்தில் கொண்டது.

இதையொட்டி, நண்பர்களின் கருத்துக்களை
பின்னூட்டங்களில் வரவேற்கிறேன்…

———-

இந்த விஷயத்தில் நான் சொல்ல வருவது –

1) பல்கலைக்கழகங்களிலும், கல்விக்கூடங்களிலும் –
அரசியல்வாதிகள் நுழைவது முதலில் நிறுத்தப்பட
வேண்டும்.

2) பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் நிகழ்த்தும்
எந்த நிகழ்ச்சிக்கும், அரசியல்வாதிகளை அழைக்கக்கூடாது
(அவர் எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும்….. )

3) மாணவர்கள் வித்தியாசமாக யோசிப்பவர்கள்.
அதிலும் முக்கியமாக எதிர்மறையாக சிந்திப்பதில்
ஆர்வம் கொள்கிறார்கள்.

4) அரசாங்கத்திற்கு விரோதமாக பேசுவதில் அவர்களுக்கு
ஒரு “த்ரில்” கிடைக்கிறது. ஜனநாயகத்தில், அரசாங்கத்துக்கு

விரோதமாகவோ, அரசின் கொள்கைகளுக்கு விரோதமாகவோ
பேசுவதில் எந்தவித தவறும் இல்லை.

5) ஆனால் அரசுக்கு விரோதமாக பேசுவது வேறு…
தேசத்திற்கு விரோதமாக பேசுவது வேறு.

பல சமயங்களில் இந்த மாணவர்கள் இதை
உணர்வதில்லை. அரசுக்கு விரோதமாக பேசுவதாக
நினைத்துக் கொண்டு –
இந்த தேசத்திற்கு துரோகம் இழைத்தவர்களை
போற்றிப் பாராட்டுகிறார்கள். இது தவறு என்று
பெரிய அளவில் சுட்டிக்காட்டப்படும்போது, அவர்களின்
பிடிவாதமும், ஈகோவும் அதிகமாகி, தங்கள் நிலையில்
இன்னும் பிடிவாதமாக நிற்கிறார்கள்.

இவர்களை ஆதரிக்க என்றே ஒரு
அரசியல்வாதிகளின் கூட்டமும், அதை எதிர்க்கவென்றே
இன்னொரு அரசியல்வாதிகளின் கூட்டமும் கிளம்புகின்றன.

6) இது மாணவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுடன்,
கல்லூரி வளாகங்களுக்குள் நிகழும் விவாதங்களுடன்
நின்றால் எந்த பிரச்சினையும் இருக்காது. ஆனால்,
பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சிகளும் இதை
தேசிய அளவில் பரபரப்பாக கொண்டு வருவதில் தான்
பிரச்சினை பெரிதாகிறது.

7) ஒரு பல்கலை வளாகத்தில், மாணவர்கள் நடத்தும்
கூட்டங்களில் மிஞ்சிப்போனால் எவ்வளவு பேர்
இருப்பார்கள் ? ஆயிரம் – இரண்டாயிரம்….?

8) 125 கோடி பேர் வாழும் இந்த நாட்டில் இதை ஒரு
பெரிய அளவில் பத்திரிகை / தொலைக்காட்சி ஊடகங்களும்,
அரசியல்வாதிகளும் எடுத்துச் செல்வது –
pure business / politics… பக்கா சுயநலம்…

9) இதை முதலில் தடுக்க வேண்டும்…
பல்கலை கழக விவாதங்களில் நடப்பதை தேசிய அளவில்
ஊடகங்கள் பெரிதுபடுத்தி விவாதிக்கக்கூடாது என்பதை
ஒரு நடைமுறையாக கொண்டு வரவேண்டும்.

10) பக்குவமில்லாத வயதில் மாணவர்கள் தங்களுக்கு
திடீரென்று கிடைக்கும் விளம்பரங்களைப் பார்த்து,
ஒருவித போதையும், மயக்கமும் கொள்கிறார்கள்….
ஒருவித பிடிவாதத்துடன் மேலும் மேலும் பிரச்சினையை
வளர்க்கிறார்கள்.

11) அரசியல்வாதிகளுக்கும் / ஊடகங்களுக்கு
இது ஒரு தீனியாகிறது.

இறுதியில் பலிகடா ஆவது மாணவ சமுதாயம் தான்.
நாட்டின் பல்வேறு சமூகங்களிடையே வெறுப்பையும்,
பகைமையையும் உண்டுபண்ணவும், வளர்க்கவும் –
அரசியல்வாதிகள் இதை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

12) மொத்தத்தில் – அரசியல்வாதிகள் அத்தனை பேரையும்
பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேற்றி –
பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் நடத்தும்
நிகழ்ச்சிகளுக்கு, ஊடகங்கள் coverage கொடுப்பதை
நிறுத்தினால் –

இந்த பிரச்சினை தானாகவே முடிவிற்கு வந்து விடும்.

13) அரசியல்வாதிகளும் சரி,
ஊடகங்களும் சரி –
தாமாக இந்த முடிவிற்கு வர மாட்டார்கள்.
இந்த நாட்டின் நலனில் அக்கரையுடைய
பொது மனிதர்களும், செய்தியாளர்களும் தான்
முன்வந்து இதை வலியுறுத்த வேண்டும்.

-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

JNU குறித்து திரு.மோகன்லால் கருத்து – தொடர்ச்சி…. க்கு 9 பதில்கள்

  1. புது வசந்தம் சொல்கிறார்:

    மிக நல்ல யோசனைகள்.

  2. thiruvengadam சொல்கிறார்:

    இம்மியளவும் திருத்தம் தேவைப்படாமல் நடைமுறைக்கு வரவேண்டிய கருத்துக்கள். காலம் கனிய நம்மை மீறிய சக்தி உதவட்டும். ஒரு தகவல் மோகன்லாலின் கருத்து தங்களையும் சு சாமியையும் ஒரே நிலைப்படுத்தும் வகையில் அவர் முகநூல் ( அன் அபிசல் சு சாமி ) பதிவு காணலாம்.

  3. ராகவேந்திரன் சொல்கிறார்:

    Point 1&2: “இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா” என்று நம்பிக்கையுடன் வலைத்தளம் நடத்தி வரும் கா.மை அவர்களுக்கு:
    நாளை வருவார் எனக் காத்திருக்கும் அந்த நேர்மையான அரசியல் தலைவரும் அவரை தலைவனாக ஏற்கும் மக்களும் இன்று கல்லூரிகளில் தான் இருக்கிறார்கள். மாணவர்களை அரசியல்வாதி மற்றும் அரசியலில் இருந்து தூர வைப்பது விதையைப் பெட்டிக்குள் பூட்டிவைப்பது போலாகும். என்றேனும் ஒரு நாள் முளைக்கத்தானே வேண்டும்?

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்ப ராகவேந்திரன்,

      நாளைய நேர்மையான அரசியல் தலைவர்களும்
      இன்று கல்லூரிகளில் தான் இருக்கிறார்கள் – என்று
      நீங்கள் கூறுவதை நிச்சயம் ஏற்கிறேன்.

      ஆனால், அவர்கள் கல்லூரியில் படிக்கும் காலங்களில்
      சிந்தனையோடு நிறுத்திக் கொள்ளட்டும். படிப்பை
      வெற்றிகரமாக முடித்து விட்டு, வெளியே வந்தவுடன் –
      தாராளமாக அரசியலில் ஈடுபடட்டுமே…யார் அவர்களை
      தடுக்கப்போவது….?

      கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும், கற்கும் (அரசியல் உட்பட)
      இடங்களாகவே இருக்கட்டுமே.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  4. LVISS சொல்கிறார்:

    This blog reflects the anguish and concern of most of the people – -In their own interest students should shun taking interest in active politics –This is the age for them to build their future — If some of them want to take part in active politics later it is okay but it should never interfere with their studies – —

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்ப எல்விஸ்,

      மிகச்சரியாக சொல்கிறீர்கள். இதையே தான் நானும்
      சொல்கிறேன். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் –
      கற்கும் இடங்களாக மட்டுமே இருக்கட்டும்.

      வெளியே வந்த பிறகு தாராளமாக அவர்கள்
      எந்த வித அரசியலில் வேண்டுமானாலும் ஈடுபடட்டும்.

      கல்விக்கான இடங்களை பாழ்படுத்த எவருக்கும்
      உரிமை இல்லை – அது மாணவர்களாகவே இருந்தாலும் கூட….
      என்பது தான் என் கருத்து.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  5. செ. இரமேஷ் சொல்கிறார்:

    கா. மை ஐயாவிற்கு வணக்கம்.
    இந்த விடயத்தை பற்றி நானும் சிறிது நாட்களாக எழுத நினைத்ததுண்டு.
    உங்களுடைய கருத்தில் எனக்கும் 95% உடன்பாடு உள்ளது. மீதமுள்ள 5% என் எண்ணங்களை நான் இங்கே எடுத்துரைக்க விரும்புகிறேன்.

    1. கல்லூரி மாணர்வர்களுக்கு இங்கே சிறிய அளவிலான அரசியல் ஞானம் இருப்பதில்லை. ஏதோ ஒரு சிலரின் கைப்பாவையாக செயல்படவே செய்கின்றனர்.
    2. இன்றைய மாணவர்கள் புத்தகங்களோ அல்லது தினசரி பத்திரிக்கைகளோ படிப்பதில்லை. இதற்கு பெற்றோர்களும் ஒரு காரணம். பாட புத்தகத்தை மட்டும் படிக்க சொல்லி வளர்க்கிறார்கள். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளை பற்றி அவர்களுக்கு புரிதல்களும் இருப்பதில்லை.
    (உ. ம் – இணைக்கப்பட்டுள்ள இந்த காணொளி-யை பாருங்கள், இந்திய தலைநகரில் உள்ள இளைங்கர்களின் அரசியல் மற்றும் பொது அறிவும் உங்களுக்கு புரியும். இதே போன்ற நிலைதான் தமிழகத்திலும் உள்ளது)
    Delhi’s IQ (Independence Quotient) | Social Experiment with RJ Sukriti

    What Delhi knows about JNU protests?

    3. சமூக ஊடகங்களான ‘முக நூல், கட்செவி’ போன்றவைகளும் நிறைய செய்திகளை அவர்களுக்கு அளிக்கின்றன. அவற்றில் நல்ல செய்திகள் இருந்தாலும், பல தவறான புறம் பேசக்கொடிய செய்திகளே அவர்களை கவர்கின்றன. அதில் எவ்வளுவு உண்மை உள்ளதென்று யோசிக்ககூட செய்வதும் இல்லை. அடுத்த ஒரு நகைச்சுவை செய்தி வந்தவுடன் முதலில் கண்ட செய்திகளைப் பற்றி மறந்து விடுங்கின்றார்கள் அல்லது சும்மா அந்த செய்தியை அதன் பின் விளைவுகளைப் பற்றி எண்ணாமல் அப்படியே பகிர்ந்து விடுகின்றார்கள். (உ.ம் – எதாவது ஒரு கடவுள் பதத்தை போட்டு, இந்த படத்தை உடனே பகிருங்கள், உங்களுக்கு நல்ல செய்தி 10 நிமிடத்தில் வரும் என்பார்கள். இது எப்படி சாத்தியமாகும் என்று யோசிப்பதில்லை. இவ்வாறு அவர்கள் பகிரும் 10 நபர்களின் id-களை அவர்கள் திருட முடியும், இது ஒரு ஹை-டெக் மோசடி)

  6. selvarajan சொல்கிறார்:

    ÷பல்கலைக்கழகங்கள் போராட்டக் களங்களாக மாறுவதற்கு வேறு ஒரு காரணமும் இருக்கிறது. , குறிப்பாக ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இதுவரை மாணவர் சங்கப் பொறுப்புகளில் இடதுசாரிகளே இருந்தனர். பேராசிரியர்களும்கூட இடதுசாரி சிந்தனை உள்ளவர்களாகவே இருந்து வந்தனர். — இந்த மாணவர்கள் அரசின் குறைபாடுகளை விமர்சிப்பதும், ஆய்வுகள் மூலம் கிடைக்கும் புள்ளிவிவரங்களைக் காட்டி அரசின் கொள்கை முடிவுகளைத் தவறு என்று சொல்வதும்ஒரு தொடர்கதை …… இந்திய அரசியல் சூழலுக்கு ஏற்றபடி இப்போது இந்தப் பல்கலைக்கழகங்களில் இடதுசாரி சிந்தனை இல்லாத …… வலதுசாரி அறிவுஜீவிகள் அதிகரித்திருப்பதை ஏற்கமுடியாத சகிப்பின்மையின் வெளிப்பாடுதான் இந்தப் போராட்டங்கள். ÷ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர் கன்னைய குமார் இடதுசாரி சிந்தனையாளர்…… இணைச் செயலர் வலது சாரி சிந்தனையாளர்.ஆகவே, இரு மாறுபட்ட சிந்தனையாளர்களுக்கு இடையேயான பலப்பரிட்சையின் விளைவு தான் இது …. பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னைய குமார் நீதிபதியிடம் குறிப்பிடுகையில், இந்த நிகழ்ச்சியை நடத்தியவர்களுக்கும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்துக்கும் [ ABVP ] இடையே தகராறு ஏற்படும் சூழல் இருந்ததாகவும், அதைத் தடுக்கவே தான் சென்றதாகவும் கூறியதாக செய்திகள் வந்தாலும் ….. அவர் அங்கு ஆற்றிய உரையின் முழு தொகுப்பு தமிழில் ” விகடனில் ” 16 – 2 – 2016 ல் வெளி வந்துள்ளது …. ஆனால் மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் 2012-இல் காஷ்மீர் சென்று கன்னைய குமார் சிலரை சந்தித்து வந்திருக்கிறார் என்பதையும், அவருக்கு லஷ்கர்-இ-தொய்பா தொடர்பு இருப்பதாகவும் கூறியிருக்கிறார் ….: ” .எது தேச விரோதம், எது பேச்சுரிமை என்பதை பலப்பரிட்சை செய்யும் மாணவர்கள் சிந்திப்பதில்லை…. தேச விரோதம் சார்ந்த பேச்சுக்களை, பேச்சுரிமையாகக் கொள்ள முடியாது! என்பதை அவர்களுக்கு விளக்க போவது யார் — ஓட்டு பொறுக்கும் அரசியல் கட்சிகளாலும் — தங்களுக்கு பிழைப்பு நடக்க வேண்டியும் — ஆட்சியில் அமரவும் துடிக்கும் அரசியல்வா[ வியா ] திகளாலும் நடக்க போவதில்லை …. தமிழ்நாட்டில் 1965 – ல் —- ஏற்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்த்தின் விளைவால் பலன் அடைந்து இன்றளவும் கொள்ளையடித்து கொழுத்து கிடக்கும் அரசியல்கட்சிகளை கண்கூடாக கண்டுகொண்டு இருப்பவர்கள் ” நாம் ” …. அன்று மாணவனாக இருந்த என்னைபோன்ற பலர் — அன்று செய்த தவறை நினைத்தும்— மொழி ஒன்றை கற்காததினால் வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புகளையும் நினைத்து வெட்கி தலை குனிந்து வேதனை படுவது நிதர்சனமான உண்மை — வீணானது அன்றைய மாணவர்களாக இருந்த இன்றைய வயோதிகர்கள் — பலன் அடைந்தது தூண்டிய கயவர்கள் …. உணரனும் மாணவர்கள் …. நடக்கும் … நடக்கும் …. !!!

    • விவேக் காயாமொழி சொல்கிறார்:

      மாணவர்கள் அரசியலைத் தெரிந்துகொள்ளலாம், ஆனால் ஈடுபட தேவையில்லை. பிரிவினையை கல்லூரி யிலே தொடங்கத்தான் இது வழிவகுத்திருக்கிறது.ராஜா மகளுக்கும், கன்னையா வுக்கும் வேறு குறிக்கோள் இல்லாமல் அரசியல் தான் கதியாக இருக்கலாம். நாடு முழுதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் வேறு வேறு குறிக்கோள்களுடன் பெற்றோர் தியாகத்தால் படிக்க வந்துள்ளனர். அவர்களை திசை திருப்ப வேண்டாம். காங்கிரஸ் ஆட்சியில், காங்கிரசை சேர்ந்த குடியரசு தலைவர் போட்ட உத்தரவு எதிர்க்கப்படுகிறது, நாட்டுக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து துவேசத்தை வளர்ப்பதை ராகுல் ஆதரிப்பது பச்சோந்தி தனம்.. மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அந்துபோகனும்..வாழ்க திலகர், போஸ்,படேல்,சாஸ்திரி ,காந்தி வளர்த்த காங்கிரஸ்.
      கல்லூரி களில் எந்த அரசியல் ஆதரவு இயக்கங்கள் இருந்தாலும் தடை செய்யப்பட வேண்டும்…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.