குரு நானக்ஜி – ஒரு குட்டிக் கதை …

guru nanakji

நேற்று குரு நானக்ஜி பற்றிய ஒரு குட்டிக்கதையை படித்தேன். இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பல ஊர்களுக்கு யாத்திரை சென்ற குருநானக் ஒரு ஊரில்
தங்க நேர்ந்தது. அந்த ஊரின் பணக்காரர் ஒருவர் குருவை
தன் வீட்டிற்கு விருந்து சாப்பிட அழைத்தார். நானக்ஜியும்
சென்றார்.

“இந்த ஊரிலேயே பெரிய பணக்காரன் நான் தான்.
நினைத்ததை சாதிக்கும் பலம் எனக்கு உண்டு.
என்னால் முடியாத காரியமே கிடையாது.
உங்களுக்கு எதாவது உதவி தேவைப்பட்டால் கேளுங்கள்.
உடனே செய்து தருகிறேன் ” என்று தன்னை மிகப்பெருமையுடன்
அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார் அவர்.

சற்று யோசித்த குருநானக் ” ரொம்ப நல்லது. எனக்கு ஒரு
சிறு உதவி செய்ய வேண்டும் ” என்று கேட்டுக் கொண்டார்.

உடனே பணக்காரர் “என்ன செய்ய வேண்டும் தயங்காமல்
சொல்லுங்கள்… உங்களுக்காக உடனடியாக செய்து கொடுக்க
காத்திருக்கிறேன்” என்கிறார்.

தன் பையில் இருந்து சிறிய ஊசி ஒன்றை தேடியெடுத்த
நானக்ஜி, அதை பணக்காரரிடம் நீட்டினார்.

“இந்த பழைய ஊசியைக் கொண்டு நான் என்ன செய்ய
வேண்டும் குருஜி ? ” என்றார் பணக்காரர்.

“பெரிதாக ஒன்றுமில்லை. இதை பத்திரமாக வைத்திருங்கள்.
நாம் இருவரும் மேலுலகத்தில் சந்திக்கும்போது நீங்கள்
இதை என்னிடம் திருப்பிக் கொடுத்தால் போதும்” என்றார்
குருஜி.

“இறந்த பிறகு இந்த ஊசியை எப்படி கொண்டு வர முடியும்..?”
என்று கேட்கிறார் பணக்காரர்.

அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொல்கிறார் குருஜி –
“இந்த உலகை விட்டு போகும்போது ஒரு சிறு ஊசியை கூட
உங்களால் கொண்டு போக முடியாது என்று நீங்களே
ஒத்துக் கொள்கிறீர்கள். ஆனால், பணம் மட்டும் இருப்பதால் –
நினைத்ததை எல்லாம் சாதிக்கும் வலிமை உங்களுக்கு
இருப்பதாக தற்பெருமை பேசுகிறீர்களே ….
ஒருவன் செய்யும் நன்மை, தீமை மட்டுமே அவன் இறந்த
பிறகும் கூட வரும். இந்த உலகை விட்டு போகும்போது
எந்த செல்வத்தையும் கொண்டு போக முடியாது.
நல்ல வழியில் பணத்தை சம்பாதியுங்கள். இருக்கும்போதே
அதை அனைவருக்கும் பயன்படும்படி செலவழியுங்கள்”
என்றார் குரு நானக்ஜி.

தமிழிலேயே இதைப்போன்ற பல சொற்கள் இருக்கின்றன –

“காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே”
என்று பட்டினத்தாரும் –

“பாடுபட்டு தேடி பணத்தை புதைத்து
வைக்கும் கேடு கேட்ட மானிடரே கேளுங்கள்
கூடுவிட்டு ஆவி போயின பின் யாரோ
அனுபவிப்பார் பாவிகள் அந்தப் பணம் ” என்று அவ்வையாரும் –

“நீ இந்த உலகை விட்டு கடைசியாக போகும்போது,
நீ சேர்த்து வைக்கும் எந்த செல்வமும் வராது –
உன் பிள்ளை வர மாட்டான்…
உன் பெண்டாட்டி கூட உன்னுடன் வர மாட்டாள் –
பின் யாருக்காக இதை சேர்க்கிறாய் முட்டாள் மனிதனே ?”
– என்று ஆதிசங்கரரும்

சொன்னதை நடுநிலைப்பள்ளியிலேயே படித்து மனப்பாடம்
செய்தவர்கள் தான் நாம் அனைவருமே…

ஆனால், பொய் சொல்லி, ஏமாற்றி, கொள்ளையடித்து,
கோடி கோடியாக சேர்த்து வைத்திருக்கும் இன்றைய
அரசியல்வாதிகளின் மண்டைக்கு இந்த கருத்தை
எடுத்துச் செல்வது எப்படி …?

யாராவது சொல்லுங்களேன்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to குரு நானக்ஜி – ஒரு குட்டிக் கதை …

  1. மீரா செல்வக்குமார் சொல்கிறார்:

    அரசியல்வாதிகளை அப்புறம் பார்க்கலாம்…இரண்டுபேர் வாழ்வதற்கு ஆயிரக்கணக்கில் சதுர அடி வீடுகட்டும், ஆளுக்கொரு கார் வாங்கும் ஊதாரிகளை என்ன செய்யலாம்?

    • thiruvengadam சொல்கிறார்:

      கா.மை அவர்கள் சென்றபதிவில் குறிப்பிட்டது போல் திசைதிருப்பல் முயற்சியா? நியாயமான வருமானமிருந்து கிடைக்கும் வசதிகளை அனுபவிப்பது தவறா ? செய்யும் தொழில் காரணமாக ஓய்வுக்கு சில வசதிகள் தேவைப்படலாம். முடிந்த அளவு பிறருக்கு உதவக்கோருவது என்பது தனி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.