யார் தேசத்துரோகி ? நம் கண்களுக்கு இருவர் புலப்படுகிறார்கள்…..!!!

.

.

அண்மையில் சென்னை விஷக்காற்றால் மாசுற்றது ….
அது ஒரு திறந்த வெளி அரங்கமல்ல ….
ஆயிரக்கணக்கானவர்கள் கூடவில்லை தான்..
ஒரு உள் அரங்க கூட்டம்… கலந்து கொண்டவர்கள் –
100-லிருந்து 150 பேர் வரை இருக்கக்கூடும்.
இந்து மதத்தை காப்பதற்காக என்று கூட்டப்பட்ட கூட்டம் –

s.s. meeting

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக,
கிரேக்க அலெக்சாண்டருக்குப் பிறகும்,
ஆப்கனிலிருந்து வந்த மொகலாயருக்குப் பின்னரும்,
டச்சு, போர்ச்சுக்கீஸ், பிரென்ச்சு, ஆங்கிலேயர்களின்
ஆட்சி அடக்குமுறைகளுக்குப் பின்னரும் –
பத்திரமாகத் தான் இருக்கிறது – இந்து மதம்.
இவர்கள் கிளம்பித்தான் அதை காக்க வேண்டும்
என்கிற அவசியமில்லை.
மதவெறியைத் தூண்டி விட்டு, அதிகாரத்தைப் பிடிக்க
கிளம்பி இருக்கும் ஒரு கும்பல் இது.

இவர்களின் எண்ணிக்கை குறைவு தான்
இருந்தாலும் – இதில் அளவு முக்கியமல்ல…
குடம் பாலில் துளி விஷம் கலந்தாலும் –
ஆபத்து ஆபத்து தானே….?

தமிழகத்தில் ஜாதி சச்சரவுகள் உண்டு.
தென் மாவட்டங்களில்,
மேற்கு மாவட்டங்களில் –
அடிக்கடி அடித்துக் கொள்வது உண்டு… உண்மை தான்..
அதற்கே நாம் வெட்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
இதைக் களையும் வழி என்ன –
நிறுத்தும் வழி என்ன என்று கவலை கொண்டிருக்கிறோம்.

இதுவரை மதக்கலவரங்களுக்கு தமிழகம்
இடம் கொடுத்ததில்லை. வடக்கே எத்தனையோ கலவரங்கள்
வந்தாலும் கூட – தமிழகம் இந்த விஷயத்தில் சற்றும்
அசைந்து கொடுத்ததில்லை.

எப்போதாவது, எதாவது ஒரு மூலையில் சிறிதாக
சலசலப்பு ஏற்படுவதுண்டு. ஆனால், ஊர்ப்பெரியவர்கள் கூடி
உடனடியாக சூட்டைத் தவிர்த்து விடுவது வழக்கம்.

ஆனால், தற்போது – தூண்டுவதற்கென்றே
சிலர் புறப்பட்டிருக்கிறார்கள்.
” மதம் ” – மனிதரை எளிதில் உணர்ச்சி வசப்பட வைப்பது.
விரைவில் கொந்தளிக்க வைப்பது…
விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் – செயல்பட வைப்பது.
பல விபரீதங்களுக்கு வழி கோலுவது…

தமிழகம் அமைதிப் பூங்காவாகவே இருக்கட்டும்.
இந்துக்களும், இஸ்லாமியரும், கிறிஸ்தவரும் இணைந்து
ஒற்றுமையாக வாழும் ஒரு இலக்கணப் பிரதேசமாகவே
இருக்கட்டும்.

வெவ்வேறு மொழிகள்,
வெவ்வேறு பழக்க வழக்கங்கள்,
வெவ்வேறு இனங்கள்,
வெவ்வெறு உடையலங்காரங்கள்,
அத்தனைக்கும் இடம் உண்டு –
இந்த நாட்டிலும், நம் இதயத்திலும்.

வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பது தான் நம் மரபு.

கலகத்தை தூண்டுபவர்களுக்கு
ஆயிரம் உள்நோக்கங்கள் …
அவர்கள் பலனை எதிர்பார்த்து செயல்படுபவர்கள்.

பலன் – தேர்தல் வெற்றிகளாக இருக்கலாம்..
அதிகாரத்தை கைப்பற்றுவதாக இருக்கலாம்.
எரியும் வீட்டில் பிடுங்கிய வரை ஆதாயம் பார்ப்பது
அவர்கள் நோக்கமாக இருக்கலாம்.

தமிழக மக்கள் இத்தகைய சக்திகளுக்கு
இதுவரை இடம் கொடுத்ததில்லை.
இனியும் இடம் கொடுக்க மாட்டார்கள்.
இந்த சமூகத்தில் கரையான் புற்று படர்வதற்கு
இடம் கொடுக்க கூடாது.
நமக்கு அமைதி முக்கியம். ஒற்றுமை முக்கியம்.
மத நல்லிணக்கம் முக்கியம்.
உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு, வேடிக்கை பார்ப்பவர்களுக்கு
தமிழகத்தில் இடம் இல்லை என்பதை தெளிவாக்க வேண்டும்.

———–

இன்னொரு பக்கம் அகில இந்திய அளவில் சில முயற்சிகள்….
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி
என்று ஒரு சொல் பழக்கத்தில் உண்டு.
இங்கு ஆண்டியாக மாட்டிக் கொண்டிருப்பவர்கள்
பல்கலைக்கழக மாணவர்கள்.

தேர்தலில் நின்று, மக்கள் மத்தியில் நம்பிக்கையைப் பெற
வக்கில்லாதவர்கள், குறுக்கு வழியில் கலவரத்தை
தூண்ட முயற்சி செய்கிறார்கள். இவர்கள் வலையில்
சிக்கிஇருப்பது முதிர்ச்சி பெறாத, எளிதில் உணர்ச்சி
வசப்படும் பல்கலை மாணவர்கள். இந்த மாபாவிகளின்
தந்திரங்களையும், வேடங்களையும் புரிந்து கொள்ள
நேரம் இல்லாமல் உணர்ச்சி வசப்பட்டு செயலில்
இறங்கி விடும் இளம் ரத்தங்கள்….!

இந்திய நாட்டிற்கு எதிராக செயல்பட்டார் –
தேசத்துரோகி என்று குற்றம் சாட்டப்படுகிறார் ஒருவர்.
பல ஆண்டுகள் விசாரணை நீடிக்கிறது. கீழ் கோர்ட்,
மேல் கோர்ட், உச்சநீதிமன்றம் என்று பல கட்ட விசாரணைகள்.
இறுதியில் இந்த நாட்டின் மிகப்பெரிய நீதிமன்றம்
அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கிறது.

அதற்கு அப்புறமும் அவருக்கு அப்பீல் செய்ய,
கருணை மனு போட ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கின்றன.
இந்த கருணை மனுக்களை எல்லாம் பரிசீலனை செய்தது
அப்போது ஆட்சியில், அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ்
கூட்டணி தான். அந்த அரசு, அந்த அமைச்சரவை –
ஒவ்வொரு முறையும் கருணை மனுக்களை நிராகரித்து,
ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்புகிறது.

நமது மரபுப்படி, அரசியல் சட்ட விதிகளின்படி,
அமைச்சரவை பரிந்துரைகளின்படியே செயல்பட்டு,
கருணை மனுக்கள் ஜனாதிபதியால் நிராகரிக்கப்படுகின்றன.

இறுதியில் ஒரு நாள் அவர் தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

காலம் மாறுகிறது. காட்சி மாறுகிறது.
ஆளும் கட்சியாக இருந்தவர்கள் எதிர்க்கட்சியாக மாறுகிறார்கள்.
முன்னதாக நிறைவேற்றப்பட்ட தூக்கு தண்டனையை
கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் கோஷம் இடுகிறார்கள்.
இன்று இவர்கள் பின்னால் நின்று,
இவர்களை தூண்டி விடுபவர்கள் யார்….?

p.c.

இறுதி வரை நீதிமன்றத்தில் அவர் குற்றவாளி தான் என்று
உறுதியாகக் கூறி வாதம் செய்த அதே அரசின் பிரதிநிதிகள்,
தூக்கில் போடப்பட்டவரின் அத்தனை கருணை மனுக்களும்

நிராகரிக்கப்பட காரணமாக இருந்த அதே கட்சி,
அதன் அமைச்சர்கள்,
அதன் தலைவர், துணைத்தலைவர்…!!!

இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த கால கட்டத்திலும்,
அதன் பின்னர் கருணை மனு பரிசீலிக்கப்பட்டு,
நிராகரிக்கப்பட்ட காலங்களிலும் – உள்துறை அமைச்சராகவும்,
நிதியமைச்சராகவும் – அந்த முடிவினை எடுத்த

அதே மத்திய கேபினட்டில் அங்கம் வகித்தவர் –

இன்று சொல்கிறார்…. தூக்கில் தொங்கியவர் உண்மையில்
குற்றத்தில் இந்த அளவிற்கு சம்பந்தப்பட்டவர் தானா
என்பதில் எனக்கு சந்தேகம் தான்…..
அவருக்கு தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டதற்கு பதிலாக,
பரோலில் வெளிவர முடியாத ஆயுள் தண்டனையை
கொடுத்திருக்கலாம்…..!

இதை நீங்கள் அப்போதே ஏன் சொல்லவில்லை என்கிற
கேள்விக்கு, அரசாங்கத்தின் ஒரு அங்கமான கேபினட்
அமைச்சர் பதவி வகித்த நான் மாறான கருத்துக்களை
எப்படி சொல்வது என்கிறார்….?
அதாவது – குற்றம் ஊர்ஜிதம் ஆகாத நிலையில் ஒருவருக்கு
தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது என்று இவர்
நினைத்தாராம்… ஆனால் அமைச்சராக இருந்தபடியால்
அதை வெளிப்படையாக சொல்ல முடியவில்லையாம்..

சரி நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட முடியாது –
ஆனால் கருணை மனு, அமைச்சரவையின் பரிசீலனைக்கு
வந்தபோது, மூடிய அறைக்குள் தன் கருத்தை சொல்லி,
சகாக்களை சம்மதிக்க வைத்திருக்கலாம் அல்லவா…?
அதை அவர்கள் ஏற்க மறுத்தால் – அமைச்சர் பதவியை
உதறியெறிந்து விட்டு வெளியே வந்திருக்கலாம் அல்லவா…?

அதைச் செய்யாத ஒருவர் – இன்று பல்கலைக்கழக
மாணவர்களை தூண்டி விட்டு, அவர்களின் பின்னால்
ஒளிந்து கொள்வதற்கு என்ன பெயர் …?

தேசத்துரோகிகள் என்று யாரெல்லாம் குற்றம்
சாட்டப்படுகின்றார்களோ – அவர்கள் ஒருவேளை
வயது காரணமாகவும்,
அறியாமை காரணமாகவும்,
பக்குவமின்மை காரணமாகவும் செயல்பட்டிருக்கலாம்.

மதத்தின் அடிப்படையில் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு,
அரசியல் அதிகாரத்தை கைப்பற்றத் துடிக்கும்
உண்மையான தேசத்துரோகிகள் யார் என்பதை –

யோசிக்கும் மக்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள்…!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to யார் தேசத்துரோகி ? நம் கண்களுக்கு இருவர் புலப்படுகிறார்கள்…..!!!

 1. B.Venkatasubramanian சொல்கிறார்:

  K.M.ji,

  An entirely different view.
  You are perfectly right.
  Both these fellows are extremists in real sense.
  Students do it out of ignorance and immaturity.
  The Politicians are the real culprits.
  Many of us feel same way.

 2. thiruvengadam சொல்கிறார்:

  போதைகளில் இப்பொழுது முன்னிருப்பது அதிகாரப்போதை. வாய்ப்பேயில்லாத நிலையில் ஊடகவெளிச்சம் தேடி , பின் விளைவு கணிக்காமல் இதுபோல் நடப்பதாக கருதுகிறேன்.

 3. செல்வக்குமார் சொல்கிறார்:

  அருமையான சாட்டை அடி….எப்போது திருந்துவார்களோ?

 4. இளங்கோ சொல்கிறார்:

  இதில் சு.சு. நேரடியாகவே கலவரங்களை
  தூண்டி விட முயற்சிப்பவர்.
  ப.சி. மறைமுகமாக காரியங்கள் செய்து,
  எப்படியாவது எதாவது நடந்து விடாதா
  என்று ஏங்கி காத்துக் கிடப்பவர்.
  மொத்தத்தில் இரண்டு பேருமே very dangerous persons.
  மாணவ சமுதாயம் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

 5. gopalasamy சொல்கிறார்:

  “பத்திரமாகத் தான் இருக்கிறது – இந்து மதம்.
  இவர்கள் கிளம்பித்தான் அதை காக்க வேண்டும்
  என்கிற அவசியமில்லை”. I did not read history as you did. But from Afganisthan to Kashmir, almost hindu population may be less than 3% . I think, so many people sacrificed their lives to preserve culture and religion and without those people’s sacrifice we will not be in this condition. If my opinion is wrong, please correct it.

 6. gopalasamy சொல்கிறார்:

  தமிழகத்தில் இஸ்லாமிய ஆதிக்கமும், அதன் இன்றியமையாத பக்கவிளைவான ஜிகாதி பயங்கரவாதமும் எந்த அளவுக்கு அபாயகரமாக வளர்ந்து வருகின்றன என்பதை விளக்கும் ஆவணப் படத் தொகுப்புகளை அண்மையில் இந்து முன்னணி வெளியிட்டது. அதில் முதலாவதாக வருவது இது.
  This is taken from Tamil Hindu blog. Do you think they are fabricating some thing or false propaganda

 7. gopalasamy சொல்கிறார்:

  Kumara Kampanna Udaiyar defeated Madurai sultan and brought down 80 years of rule of Mabar (madarai sultanate) kingdom. I am of the opinion if Kumara Kampanna Udaiyar kept quiet, the history of Tamilnadu also would be different.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப கோபாலசாமி,

   நான் எந்த சூழ்நிலையில் இந்த இடுகையை
   எழுதி இருக்கிறேன் என்பதை நீங்கள் கருத்தில்
   கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

   பரஸ்பர துவேஷம், சந்தேகம், விரோதம், போட்டி,
   வன்முறை, பலப்பிரயோகம் –
   ஆகியவற்றை முன்வைப்பதால், சமுதாயத்தில்
   எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அமைதி
   வராது. ( உதாரணம் – ஈராக்-அமெரிக்கா …. )

   ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைப்பது,
   மற்றவரின் பயத்தையும், சந்தேகத்தையும்,
   பாதுகாப்பின்மை உணர்வையும் நீக்குவது
   நல்லெண்ணங்களை போற்றிப் பாதுகாப்பது,
   ஒருவருக்கொருவர் உதவுவது ஆகியவற்றின் மூலமே
   நீடித்த அமைதியையும், நிரந்தர சந்தோஷத்தையும்
   அனைவரும் பெற முடியும்.

   நீங்கள் நினைப்பது போல், ஆயுத பலத்தாலும், அரசியல்
   வெற்றிகளாலும் இந்து மதம் தழைக்கவில்லை.

   அன்பு, கருணை, இரக்கம், தியாகம் –
   தன்னலமற்ற தொண்டு,
   போன்றவற்றால் உயரிய பண்புகளை இந்து
   சமுதாயத்தில் விளைத்த சங்கரர் உள்ளிட்ட புராதன
   காலத்து சந்நியாசிகளும், ராமகிருஷ்ணர், விவேகாநந்தர்,
   அரவிந்தர், ரமண மகரிஷி, சின்மயானந்தர் போன்ற
   அண்மைய காலத்திய துறவிகளும் தான் நமது இன்றைய
   உன்னதத்திற்கு காரணம்.

   அவர்களால், போற்றி வளர்க்கப்பட்ட, நமது
   மேம்பட்ட பண்பாடு, சு.சுவாமி போன்ற
   போலி ஆன்மிகவாதிகளால் நாசமாகி விடக்கூடாதே என்கிற
   கவலையில் எழுதப்பட்டது தான் அந்த இடுகை.

   என்னுடைய நோக்கில் – இந்து மத வளர்ப்பு என்கிற
   விஷயத்தில் சு.சுவாமிக்கும், நித்யானந்தாவுக்கும் அதிக
   வித்தியாசமில்லை. இரண்டுமே போலிகள். ஒருவருக்கு
   அரசியல்-அதிகாரம் குறிக்கோள். இன்னொருவருக்கு
   போலி-புகழ், பணம்,வசதிகள் – குறிக்கோள்.

   சு.சு. உண்மையிலேயே இந்து மதத்தில் அவ்வளவு
   தீவிர பற்று கொண்டிருப்பவராக இருந்தால் –
   ஒரு இந்து அல்லாதவரை எப்படி
   திருமணம் செய்து கொண்டார்…?
   இந்து அல்லாத ஒருவருக்கு எப்படி தன் மகளை
   திருமணம் செய்து கொடுத்தார்…?
   அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருக்கையில் –
   அவர் ஆட்சியைக் கவிழ்த்து – அதுவரை இத்தாலிக்காரர்
   என்று கூறி வந்த திருமதி சோனியாவை எப்படி
   பிரதமர் ஆக்கத் துணிந்தார்…?

   மனசாட்சியே இல்லாத, ஒரு கடைந்தெடுத்த சுயநலவாதி…
   unfortunately, மிகச்சிறந்த மூளைக்கு சொந்தக்காரராக
   இருக்கிறார்…..
   அதன் மூலம் படித்த இளைஞர்களையும், மதப்பற்று உள்ள
   நடுத்தர மக்களையும் தன் பேச்சாற்றலால் கவர்கிறார்.

   அத்தனையும் அரசியல் நாடகங்கள்….
   சந்தர்ப்பவாதங்கள்… நீங்களே பார்க்கலாம் –
   நாளை, இவருக்கு ஆதாயம் ஏற்படும் என்றால் –
   பிரதமரையும், பாஜகவையும் கூட கழட்டிவிட தயங்க
   மாட்டார்.

   உலகில் இறைவன் ஒருவரே இருக்க முடியும்
   என்பதை ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.
   ஒவ்வொரு நாட்டிற்கு
   ஒவ்வொரு பிரதமர், ஜனாதிபதி – போல
   ஒவ்வொரு மதத்திற்கென்றும் தனித்தனியே
   ஒரு இறைவன் இருக்க முடியாது.

   அந்த ஒரே இறைவன் அனைத்து சக்திகளையும் உடையவன் –
   எந்த பெயர் சொல்லி அழைத்தாலும் அவனுக்கு புரியும்….
   எந்த மொழியில் அழைத்தாலும் அவனுக்கு புரியும்….
   அவரவர் விரும்பும் பெயரில் அவரவர் அழைக்கிறார்கள்…
   அவரவருக்கு தெரிந்த மொழியில் – அழைக்கிறார்கள்.
   அவரவர் விரும்பும் விதத்தில் கொண்டாடுகிறார்கள்.
   தாராளமாகச் செய்யட்டுமே…!

   நமக்குள் இதில் ஏன் விரோதம் இருக்க வேண்டும்.
   எல்லாரும் அவரவர் வழியில் செல்லலாமே ..!
   இறுதியில் சேரப்போவது ஒரே இடத்தை தானே….?

   -புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

   ( ஒரு வேளை மீண்டும் வாதிட விரும்பினால் –
   தயவுசெய்து வேண்டாம் என்று கேட்டுக் கொள்வேன்.
   இந்த தளத்தை மத நல்லிணக்கத்திற்கு மட்டுமே
   பயன்படுத்த விரும்புகிறேன்….
   விரோதத்தை வளர்க்க அல்ல…)

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • K. Rajagopalan சொல்கிறார்:

    அன்புள்ள காவிரிமைந்தன் அவர்களுக்கு,

    இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த Blog படித்து வந்தாலும்,
    நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம் இது.
    திரு.கோபாலசாமிக்கு நீங்கள் எழுதி இருக்கும்
    விளக்கம் simply marvellous.
    Blog-களின் மூலம் எந்த அளவுக்கு சமூகத்திற்கு பிரயோஜனமாக இருக்கலாம்
    என்பதற்கு நீங்கள் நல்ல உதாரணமாக இருக்கிறீர்கள்.
    நிறைய எழுதுங்கள். அரசியல் மட்டும் இல்லாமல் எல்லா விஷயங்களைப் பற்றியும் எழுதுங்கள்.
    பகவான் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை
    கொடுக்கட்டும்.

    K. ராஜகோபாலன்.

 8. Mahes சொல்கிறார்:

  நண்பர்,

  கோபால்சாமிக்கு நீங்கள் எழுதிய பதிலை, தயை கூர்ந்து தனிப் பதிவாக இடவும்.

 9. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  கோபாலசாமிக்கான உங்களின் பதிலை, “மத நல்லிணக்க அவசியம்” என்ற தலைப்பில் ஒரு தனி இடுகையாக வெளியிடுங்கள். நியாயமான கருத்து. சில பின்னூட்டங்களைப் படிக்கும்போது, கர்ணன் படத்தில் விதுரர் சொல்லும், “வெறுப்பை வளர்க்கும் பேச்சு.. நிறுத்து” என்ற வசனம் நினைவுக்கு வருகிறது. மதத்தைக் காக்க நினைப்பவர்கள், மதம் அறிவுறுத்தும் நல்லனவற்றைக் கடைபிடிக்க முயற்சிக்கட்டும். அதிலும் அரசியல் தலைவர்கள் இவ்வாறு பேசுவது, நல்லவர்களுக்கு அவர்கள் மீது மிகுந்த வெறுப்பைத் தரும்.

  நீதி சம்பந்தப்பட்டவற்றிலோ, தேசப் பாதுகாப்பிலோ, தேச நலன் சார்ந்தவற்றிலோ அரசியல் செய்பவர்கள், கரையான் புற்றிலே புகுந்த கரு’நாகம் போன்றவர்கள். ப.சி. பிற்காலத்தில் வரப்போகும் துணை ஜனாதிபதி, ஜனாதிபதி பதவிக்காக, தேசத்துக்குத் துரோகம் செய்கிறார். அவர் செய்த வினைகள்தான், அவருக்கு மகனாகப் பிறந்துள்ளன.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.