பொருந்தாத இரக்கமா…? ” தினமணி ” அளிக்கும் விளக்கம் ….!

.

.

“அற்புதம் அம்மாளின் கண்ணீரைத் துடைக்க முடியாதா ..?
என்கிற தலைப்பில் நான் எழுதிய இடுகைக்கு சில
நண்பர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

arputham ammaal

அவர்களின் எதிர்ப்பை. “தினமணி” நாளிதழ் தனது நாளிதழில்
” பொருந்தா இரக்கம் அல்ல – ராஜீவ் வழக்கு -”

என்கிற தலைப்பில் மார்ச் 5-ந்தேதி வெளியிட்டுள்ள இந்த
கட்டுரையாவது போக்குகிறதா பார்ப்போம்….!!!

கீழே “தினமணி” நாளிதழின் தலையங்கம் –

——————————————————–

பொருந்தா இரக்கம் அல்ல!
By ஆசிரியர்
First Published : 05 March 2016 12:59 AM IST-

———-

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் விடுதலை
தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய
தீர்ப்பின் அம்சங்களை, அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள
பொறுப்புடன் தமிழக அரசின் கோரிக்கையைப் பரிசீலிக்கிறோம்
என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
குறிப்பிட்டிருப்பது இந்த 7 பேரும் விடுதலை செய்யப்படும்
வாய்ப்புகள் மீது அவநம்பிக்கை கொள்ளச் செய்கிறது.

ஏனென்றால், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில்,
“….நம்பிக்கையின் ஒளிக்கீற்று அவர்களுக்கு ஆதரவாக
(விடுதலை செய்வது) அமைந்தால், சமூக நலன் கருதாமல்
பொருந்தா இரக்கமாக முடியும்’ என்று தெரிவித்திருக்கிறது.

ஆகவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் கருத்துகளுக்கு
அப்பாற்பட்டு, மத்திய அரசு இந்த விவகாரத்தை அணுகினால்
மட்டுமே 7 பேருக்கும் விடுதலை கிடைக்கக்கூடும்.
அப்படி மத்திய அரசு செயல்படுமா என்பதுதான் இன்று
தமிழகத்தில் பலருக்கும் எழும் கேள்வி..

1993-ஆம் ஆண்டில் நடைபெற்ற மும்பை குண்டு வெடிப்பு
வழக்கில், பயங்கரவாத சக்திகளுக்கு உதவி செய்ததாக
நடிகர் சஞ்சய் தத் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையை
முடித்து, நூறு நாள்களுக்கு முன்னதாகவே நன்னடத்தைக்காக
தண்டனைக் குறைப்புடன் விடுதலையாகியுள்ள நிலையில்,
ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளின் மீதான
குற்றச் செயல், தண்டனை ஆகியவற்றையும் மறுபரிசீலனை
செய்ய வேண்டிய காலக்கட்டம் இது.

சஞ்சய் தத் பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவிகள் செய்ய
நேரிட்டதற்குத் திரைப்படத் துறையைச் சார்ந்த நட்பு
வட்டாரம்தான் காரணமே தவிர, பயங்கரவாதிகளின் கொள்கை,
தாக்குதல் திட்டம் எல்லாவற்றுக்கும் அவர் அப்பாற்பட்டவராக,
தொடர்பு இல்லாதவராக இருந்தார் என்பதால்தான் அவருக்கு
5 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும்கூட,
இதேபோன்று, ராஜீவ் காந்தி கொலையில் நேரடியாகத்
தொடர்புடையவர்கள், தொடர்பு இல்லாமல் உதவி செய்தவர்கள்
என்று வகைப்படுத்தி மீள்ஆய்வு செய்ய வேண்டிய தருணம் இது.

இந்த நேரத்தில் இந்த விவகாரத்தை, தமிழக முதல்வர்
தனது தேர்தல் உத்தியாக பயன்படுத்துகிறார் என்று
விமர்சனம் செய்து, அரசியலாக்குவதால் எந்தப் பயனும்
கிடைக்கப் போவதில்லை. ஒருவேளை, மத்திய அரசுக்கு
நெருக்கடி கொடுக்கக்கூடிய தருணம் இதுவே என்று முதல்வர்
ஜெயலலிதா கருதினால் அதைக் குறை காண
வேண்டியதும் இல்லை.

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்யக்கூடாது என்று
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு
தெரிவித்துள்ளனர். அதுவே மத்திய அரசின் செயல்பாட்டுக்கு
பெருந்தடையாக இருந்துவரும். காங்கிரஸ் கட்சிக்கு
பதிலடியாக, 7 பேரையும் விடுவிக்கும் முடிவை மோடி அரசு
எடுக்கக்கூடிய ஆதரவான சூழ்நிலையாக மாறவும் வாய்ப்பு
உள்ளது. அதனால், இதனைத் தேர்தல் உத்தியாகப் பார்க்க
வேண்டியதில்லை.

ஈழத்தமிழர் பிரச்னை அரசியல் மேடையில் மட்டுமே
சலனங்களை ஏற்படுத்தின என்பதும் வாக்கு வங்கிகளில்
எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தியதே இல்லை என்பதும்
தமிழகத் தேர்தல்களைக் கடந்த கால் நூற்றாண்டாகப்
பார்த்துவரும் நோக்கர்கள் அறிவார்கள். ஈழத்தமிழர் பிரச்னை

தமிழ்நாட்டின் அடிநாதமாக, உயிர்ப்புள்ளதாக இருந்திருந்தால்,
மதிமுக பொதுச் செயலர் வைகோ என்றைக்கோ தமிழக
முதல்வராகியிருப்பார். ஆகவே, இதைத் தேர்தல் உத்தி என்று
மலினப்படுத்துவது அர்த்தமற்றது.

சஞ்சய் தத்துக்கு அளிக்கப்பட்ட அதே விதமான குறைவான
தண்டனையும், நன்னடத்தைக்கான தண்டனைக் குறைப்பும்
பெறும் அளவுக்கு தகுதியுடையவர்கள், ராஜீவ் கொலைத்
திட்டம் பற்றிய முழுமையான அறிதல் இல்லாமல்
உடன் இருந்தவர்கள் என்ற அளவில் ஆயுள் தண்டனைக்
கைதிகளாக இருக்கும் நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ்,
ஜெயகுமார் ஆகியோர். இந்த நான்கு பேரையும் உடனடியாக
விடுதலை செய்வதில் எந்தவிதத் தடையோ,
சட்டச் சிக்கலோ இருக்க முடியாது. இந்த நான்கு பேரும்
அவர்கள் செய்த குற்றத்துக்கு மேலதிகமான தண்டனையை
கடந்த 24 ஆண்டுகளாக அனுபவித்துவிட்டனர்.
அவர்களது ஆயுள் தண்டனையைக் குறைத்து விடுதலை
செய்வதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.

ராஜீவ் கொலைத் திட்டம் பற்றி அறிந்தவர்கள் என்பதாக
நீதிமன்றத்தால் கருதப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின்
விடுதலையில் மட்டுமே காங்கிரஸ் கட்சியினர் மற்றும்
சிலருடைய எதிர்ப்புகள் இருக்கும். இதிலும்கூட, இவர்கள்
24 ஆண்டுகள் சிறையில் கழித்தவர்கள் என்பதாலும்,
தண்டனை எப்போது நிறைவேற்றப்படுமோ என்று தெரியாமல்

ஒவ்வொரு நாளும் செத்து பிழைத்துக் கிடப்பவர்கள்
என்பதையும் மத்திய அரசு கருதிப் பார்க்க வேண்டும்.

இவர்களில் யாரும், விடுதலைக்குப் பிறகு ஆப்பிரிக்காவின்
நெல்சன் மண்டேலா போல தமிழ்நாட்டில் ஒரு கட்சியை
நடத்தி, ஆட்சியைப் பிடித்துவிடப் போவதில்லை.
அல்லது இவர்கள் மீண்டும் தாக்குதலுக்காக திட்டமிடுவார்கள்

என்பதற்கும் வாய்ப்பில்லை. இவர்கள் மீதான இரக்கம்,
நீதிமன்றம் குறிப்பிடுவதைப்போல பொருந்தா இரக்கமாக
அமைந்துவிடாது.

ராஜீவ் காந்தியின் மகள்வழி பெயர்த்தி மிராயா வதேரா
தமிழ்நாட்டுக்கு வந்து கூடைப்பந்து விளையாடும்
அமைதிச் சூழலில், அனைவரும் அனைத்தையும்
மறந்துவிட்ட வேளையில், இன்னமும் 24 ஆண்டுகளாக
ரத்தக்கறையின் மிச்சத்தைத் துடைக்காமல்
வைத்திருக்க வேண்டுமா?

“இரக்கம் உள்ளவர்கள் பாக்கியவான்கள்”
என்கிறது விவிலியம்!

———————————————————-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to பொருந்தாத இரக்கமா…? ” தினமணி ” அளிக்கும் விளக்கம் ….!

 1. CHANDRAA சொல்கிறார்:

  It is a conclusive fact that judicial system could do verry little in this case
  Recently judge ibrahim kalifullah had openly vioiced his views
  against the release of rajivs killers
  Modiji or Rajnath ji i do not think would
  take extraordinary efforts to release
  these rajivs killers

 2. selvarajan சொல்கிறார்:

  அனைத்து தரப்பினரும் இவர்களின் விடுதலையை ஆதரிக்கும் போது— இங்கே உள்ள அரசியல் கட்சிகள் ஏனோ – தானோ என்று அறிக்கைகளை விட்டு முயன்ற அளவு முயற்சி செய்யும் அரசின் நடவடிக்கையை கொச்சை படுத்தும் விதமாக — தமிழக அரசின் ஏழு பேர் விடுதலை நடவடிக்கை குறித்து — வை.கோ அவர்கள் தேர்தலை முன்னிட்டு ஜெயலலிதாவின் ” நாடகம் ” என்றும் — ஸ்டாலின் அவர்கள் ” கபட நாடகம் ” என்றும் — கூறுவது அவர்களின் எந்த விதமான நிலையை காட்டுகிறது …. ? அடுத்து // கார்த்தியிடம் கணக்கில் வராத சொத்துக்கள் இருப்பதை நிரூபித்தால் ரூ.1க்கு விற்க ரெடி: ப.சிதம்பரம் //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karthi-doesn-t-have-unaccounted-assets-p-chidambaram-248411.html … என்று ப . சிதம்பரம் சவால் விட்டுள்ளது … எப்படி … ?

 3. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  கா.மை சார்… நீங்கள் இது பற்றி எழுதியிருந்ததையும், தினமணி செய்தியையும் படித்தேன். நீதிமன்றம், பலவிதமான விசாரணைகளுக்குப் பிறகு, அப்பீல்களுக்குப் பிறகு தீர்ப்பளித்திருக்கிறது. மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுவிட்டது.

  மனிதாபிமானம், இரக்கம் என்பதெல்லாம் சரிதான். இதை சஞ்சய்தத் கேசுடன் சம்பந்தப்படுத்துவது பொருந்தக்கூடியதல்ல. என் மகனை நான் அடிப்பதற்கும், வேற்று ஆள் அடிப்பதற்கும், செயல் ஒன்றென்றாலும், விளைவு வேறுதான்.

  இவர்கள் தவறு செய்யவில்லை என்பதை (அப்படி அது உண்மையாக இருக்கும்பட்சத்தில்), மீண்டும் நீதிமன்றத்தைதான் அவர்கள் அணுக வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், அவர்கள், ராஜீவ் குடும்பத்தைத்தான் அணுக வேண்டும். இதில் அரசு (தமிழக அரசோ அல்லது மத்திய அரசோ) தலையிடுவது சரியல்ல. அவர்களும், இந்த நான்’கு பேரும் குற்றமற்றவர்கள் என்று நிச்சயமாக நினைத்தால், நீதிமன்றத்தை அணுகலாம். இதில் அரசியல் செய்வது மிகவும் தவறு.

  நிறையப் பேர், ராஜீவ்காந்தியோடு, மற்றவர்களும் இறந்தார்கள் என்று சொல்கிறார்கள். நியாயமாக, அவர்கள் உயிரும் ராஜீவின் உயிரும் ஒன்றாகமுடியாது. அப்படி இருந்தால், சாதாரண மக்களுக்கும் அரசு சார்பில் துயிலிடங்களும், நினைவுத்தூண்களும் நிறுவப்பட்டிருக்க வேண்டும். ராஜீவ், இந்திய தேசத்தின் தலைவர்.. மக்களின் அன்புக்குகந்த தலைவர்.

  “இரக்கம் உள்ளவர்கள் பாக்கியவான்’கள்” என்பது, மரண தண்டனைக் குறைப்பிலேயே, ராஜீவ்காந்தி குடும்பம் காண்பித்துவிட்டது. அதுவும்தவிர, இறந்தவர், நம் முன்னாள் பிரதமர்.; இது நம் தேசத்துக்கு எதிரான போர்தான்.

  எந்தக் குற்றச் செயலுக்கும், இன்னொரு பக்கம் இருக்கும். காரணமின்றிக் காரியம் இல்லை. நாம், நம் தலைவர்கள், பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெற்றுச் செய்யும் செயல்கள் அனைத்தும், இந்தியாவின் நன்மைக்குத்தான் என்று நம்பவேண்டும். ராஜீவ்காந்தி செய்தது, இந்தியாவின் நன்மையைக் கருதி. அவருக்கு இலங்கை அரசுக்கு உதவவேண்டும் என்றோ, புலிகளுக்கு உதவ வேண்டும் என்றோ எந்தக் கட்டாயமும் இல்லை. பிரதமர் என்ற முறையில் அவர் இந்தியாவின் நன்மைக்குத்தான் இந்த முடிவு (ஒப்பந்தம், ஐ.பி.கே.எப்) எடுத்திருப்பார் என்று நம்ப வேண்டும். இதற்கு, இந்திய மக்களின் முழு ஆதரவும் உண்டு (அவர்கள் தேர்ந்தெடுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக). நாம், இந்தியர்கள், புலிகளின் கண்கொண்டோ, மற்ற நாட்டின் கண்கொண்டோ (ie from their point of view) எதையும் நியாயப்படுத்த முயலக்கூடாது. இப்படி நியாயப் படுத்த முயன்றால், எந்த விதமான குற்றங்களையும் (அனைத்தையும்) நியாயப்படுத்திவிட முடியும். இதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா? இவர்கள் செய்த குற்றத்திற்கு மேலான தண்டனை பெற்றுவிட்டனர் என்று எதைக் கொண்டு, யார் சொல்வது?

  சரியோ தவறோ, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும், சதியில் பங்கு பெற்றவர்கள். அவர்கள் நிச்சயமாக, சதிச் செயல் தெரியாமல் உதவி செய்தோம் என்றுதான் சொல்லுவார்கள். “பேட்டரி வாங்கிக்கொடுத்தோம்”, “சுவிட்சை ஆன் பண்ணினோம்” என்றெல்லாம் குற்றச் செயல்களைப் பார்க்கமுடியாது. இவர்கள் எல்லோருக்கும் சதிச் செயல் தெரியும். இன்னமும் இதில் மாட்டாமல் பலர் தப்பிவிட்டனர். (‘நம் அரசியல்வாதிகள் முதற்கொண்டு). நளினி போன்றோரெல்லாம் பெரும்புதூருக்குச் சென்று, நடந்த நிகழ்ச்சிகளுக்கு சாட்சியாக இருந்து பின்பு தப்பியவர்கள். நீங்கள் ரகோத்தமன், மற்றும் கார்த்திகேயன் அவர்கள் எழுதிய புத்தகங்களை வாசித்துப் பாருங்கள்.

  யாரையும் மன்னிப்பதும், மறப்பதும் பெரிய குணங்கள். நாட்டுக்கு அவை பொருந்தாது என்று நான் நினைக்கிறேன். ‘நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையாக யாரையாவது மன்னித்தால் அதில் தவறேதும் காண இயலாது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப நெல்லைத்தமிழன்,

   உங்கள் விளக்கத்தை இன்னுமொரு முறை படித்துப்
   பாருங்கள். நீங்களே அதில் உள்ள முரண்பாடுகளை
   உணர்வீர்கள்.

   // நமது பாராளுமன்ற உறுப்பினர்கள்
   பெரும்பான்மையாக
   யாரையாவது மன்னித்தால் அதில்
   தவறேதும் காண இயலாது.//

   ( ஏன் – இதையே தமிழக சட்டமன்றம்
   ஒருமனதாகச் செய்தால், அதனை
   ஏற்க மாட்டீர்களா …? )

   குற்றம் செய்தார்களா – இல்லையா ?
   தெரிந்து செய்தார்களா – தெரியாமல் செய்தார்களா ?
   தண்டனை கொடுத்தது சரியா – இல்லையா ?
   தண்டனை கொஞ்சமா – அதிகமா ?

   -இந்த நிலைகளை எல்லாம் ஏகப்பட்ட தடவை
   ஏற்கெனவே விவாதித்தாகி விட்டது.

   இப்போது இந்த விஷயம் அதையெல்லாம் கடந்து
   வேறு நிலைக்கு வந்து விட்டது.

   குற்றங்களை விசாரிக்கவும், தண்டனை அளிக்கவும் –
   நீதிமன்றங்களுக்கு அதிகாரம் கொடுத்த –

   அதே அரசியல் சட்டம் தான் –

   மத்திய, மாநில அரசாங்கங்களுக்கு,
   அந்த தண்டனையை – குறைக்கவும், மாற்றவும்,
   ரத்து செய்யவும் – அதிகாரம் அளித்திருக்கிறது.

   நீதிமன்றங்கள் தண்டனை விதிப்பது எப்படி
   சட்டபூர்வமோ, அதே போல் மத்திய / மாநில அரசுகள்
   தண்டனைக் குறைப்பு செய்வதும் சட்டபூர்வம் தான்.

   மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக சட்ட மன்றம்
   ஒருமனதாக – இவர்களின் மீதி தண்டனைக்காலத்தை
   ரத்து செய்து விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி
   இருக்கிறது….
   இது சட்டபூர்வமான நடவடிக்கை.
   இதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை.
   (உச்சநீதிமன்றமே, மாநில அரசு, அரசியல் சட்ட
   விதி 161-படி செயல்படுவதை தங்கள் தீர்ப்பு
   கட்டுப்படுத்தாது என்று கூறி விட்டது…)

   எஞ்சி இருப்பது – இந்த விடுதலை யார் உத்தரவின்
   பேரில் நிகழப்போகிறது –
   மத்திய அரசா ? ( under section Cr.P.C. 435 ) அல்லது

   மாநில அரசா ? ( under article 161 of the
   Constitution of India ) என்பது மட்டுமே…

   அதை காலம் தான் தீர்மானிக்கும்…

   இதை புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும்..
   ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளட்டும்….
   மற்றவர்கள் – அவரவர் சிந்தனை போல் நடக்கட்டும்.

   இதற்கு மேல் இந்த விஷயம் குறித்து நான் விவாதிக்க
   விரும்பவில்லை. எனவே தயவுசெய்து மன்னிக்கவும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    நான் விவாதத்துக்காக எழுதவில்லை. மனிதாபிமானம் என்பது வேறு. சட்டம் என்பது வேறு. குற்றம் இந்திய அளவிலான குற்றம். இதில் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றுவது, சட்டப்படி வாய்ப்பு வேறு காரணங்களுக்காகக் கொடுக்கப் பட்டிருந்தாலும், தமிழக மன்றம் செய்யக்கூடாது. இதன் பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்று யோசியுங்கள். சஞ்சய்தத் விஷயத்தில் நடந்தது தவறு.

    உங்களின் மனிதாபிமான அடிப்படையிலான கருத்துக்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும் அது சரி என்ற எண்ணம் வரவில்லை. (ஒரு Referenceக்காக இஸ்லாமியச் சட்டம் – குற்றத்தை மன்னிக்கும் வாய்ப்பை, அதன் விளைவை அனுபவித்தவர்களுக்குத்தான் வழங்குகிறது. ஒருவன் இன்னொருவன் கையை வெட்டிவிட்டால், வெட்டுப்பட்டவன் மன்னித்தால்தான் வெட்டினவன் மன்னிக்கப்படுவான். இதைப் பணம் வாங்கிக்கொண்டு மன்னிக்கிறானா என்பதெல்லாம் சட்டத்திற்கு அப்பாற்பட்ட விஷயம். இது ஒரு நல்ல சட்டமாக எனக்குப்படுகிறது. ராஜீவின் இழப்பு, குறைந்தபட்சம் வெறும் மனித உயிர் என்று நினைத்தாலும் (அப்படி நினைப்பது மிகவும் தவறு), மன்னிக்கும் அதிகாரம் சோனியா அவர்களின் குடும்பத்துக்கு மட்டும்தான் உண்டு. இதில் அரசியல் செய்யக்கூடாது. நம் மனிதாபிமானம், நம்மைச் சார்ந்த செயலுக்கோ அல்லது பிறர் affect ஆகாத நிகழ்வுக்கோதான் செயல்படவேண்டும்).

    இதனை வெளியிடுவதோ அல்லது நீக்குவதோ, உங்கள் உரிமை.

 4. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  சட்டம் வாய்ப்பு கொடுத்தாலும், இந்த வழக்கில், மத்திய அரசும் (கேபினட்), பாராளுமன்றமும்தான் முடிவு எடுப்பது நாட்டுக்குச் சரியாக இருக்கும். இதில் விதிவிலக்கு எதிர்பார்த்தால், அது இந்தியாவின் எதிர்கால நன்மைக்கு நல்லதல்ல.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.