சாலை விபத்தில் அடிபட்டு கிடப்பவரை தூக்கினால் சட்டப்படி குற்றமாகுமா….? சாட்சி சொல்ல அழைப்பார்களா …?

motor accident

சாலையில் சென்று கொண்டிருக்கிறோம். ஒரு விபத்து
நிகழ்ந்து, அடிபட்டு விழுந்து கிடப்பவர்களைப் பார்க்கிறோம்.
லேசான காயமாக இருந்து, அடிபட்டவர் தானே எழுந்து உதவி
கோரக்கூடிய நிலையில் இருந்தால் உதவி செய்கிறோம்.

ஆனால், அடிபட்டவர் மோசமான காயங்களுடன்
சுயநினைவின்றி விழுந்து கிடந்தால், அநேகமாக நூற்றுக்கு
தொண்ணூற்று ஒன்பது விழுக்காடு, காயமடைந்தவருக்கு
முதல் உதவி செய்யவோ, உடனடியாக அருகிலுள்ள மருத்துவ
மனைக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதில்லை.

நெஞ்சில் இரக்கம் இல்லை என்பது காரணம் அல்ல.
பயம்…..விபத்தில் சிக்கியவர் உயிரிழந்து விட்டால்,
தனக்கு சிக்கல் வருமோ, போலீசில் விசாரணைக்கு
உட்படுத்தி தொந்திரவு செய்வார்களோ, கோர்ட் படி மிதிக்க
வேண்டியிருக்குமோ – என்றெல்லாம் நினைத்து பயப்படுகிறோம்.

போலீசுக்கோ, ஆம்புலன்சுக்கோ தகவல்
கொடுத்து விட்டு காத்திருக்கிறோம்….
சிலர் அதுவும் கூட செய்ய தயங்குகிறார்கள்….
இடத்தை விட்டு நகர்ந்து விடுகிறார்கள்.

நமது நடைமுறை சட்ட சிக்கல்கள் தான் இதற்கு காரணம்.
யார் முதலில் பார்த்தது…?
மோதி விட்டு சென்ற வாகனத்தை பார்த்தீர்களா …?
வாகனத்தின் அடையாளம் என்ன ?
கலர் என்ன ? வண்டி எண் என்ன …?
-என்று போலீசிலிருந்து எக்கச்சக்க கேள்விகளை சந்திக்க
வேண்டியிருக்கிறது.

தப்பித்தவறி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றாலோ –
அங்கே ஏகப்பட்ட விசாரணைகள்….
கொண்டு சென்றவரின் பெயர், விலாசம், ID card,
தொலைபேசி எண், அட்வான்ஸ் பணம், இது போலீஸ் கேஸ்,
போலீஸ் வரும் வரை வெயிட் பண்ணுங்கள் –
என்று உத்திரவுகள்…

இதனைத் தொடர்ந்து, அடுத்து சில நாட்களுக்கு
போலீஸ் விசாரணகள், அவசியப்படும் வழக்குகளில்
கோர்ட்டிலிருந்து சம்மன் – விசாரணை….!!!

இவற்றிற்கு அஞ்சி, மக்கள் தயங்குவதால் –
பல சமயங்களில், சாலைகளில் கோர விபத்துக்களில் சிக்கும்
அநேகர் – உடனடி மருத்துவ உதவி கிடைக்காத
காரணங்களினாலேயே உயிரை இழக்க நேரிடுகிறது.

“Golden Hour” எனப்படும் முதல் சில நிமிடங்களில்
மருத்துவ உதவி கிடைத்திருந்தால் அந்த உயிர்கள்
காப்பாற்றப்பட்டிருக்கலாம்.

————–

இத்தகைய பிரச்சினைகளிலிருந்து முற்றிலும்
விடுபடும் நேரம் வந்து விட்டது.

SaveLIFE, என்கிற தொண்டு நிறுவனம் ஒன்று 2012 -ல்
தொடர்ந்த ஒரு பொதுநல வழக்கின் ( PIL ) இறுதி கட்டமாக,
மத்திய அரசின் போக்குவரத்துத் துறை
ஜனவரி 21, 2016, அன்று –

” standard operating procedure (SOP),
for the protection and examination of
‘good Samaritans’ ”

-என்கிற ஒரு சட்ட முன்வடிவைத் தயாரித்து,
அதை உச்சநீதி மன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பித்திருந்தது.

சென்ற வாரம், உச்சநீதிமன்றம் ( சுப்ரீம் கோர்ட் ) அதனை
ஏற்றுக்கொண்டு, தனது ஒப்புதலை தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டமாக, மத்திய அரசு, இதை ஆணையாக வெளியிடும்.
இந்த ஆணை இந்தியா முழுவதற்கும், அனைத்து
மாநிலங்களுக்கும் செல்லுபடியாகக் கூடியதாக இருக்கும்.

இந்த புதிய ஆணையின்படி,
விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு
எடுத்துச்சென்று காப்பாற்ற முயலும், பொதுமக்கள்
யாராக இருந்தாலும் அவர்களுக்கு எந்தவித இன்னலும்
ஏற்படாமல் பாதுகாக்கப்படுவார்கள்….

அனைத்துவித சிவில் மற்றும் கிரிமினல் சட்ட
விதிகளிலிருந்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

அத்தகைய உதவியில் ஈடுபடும் பொதுமக்கள் –
(அவர்களுக்கு விருப்பமில்லை என்றால் ..)

தங்கள் பெயர் மற்றும் விலாசத்தை மருத்துவ மனையிலோ
போலீசிடமோ தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லை…!

அவர்கள் தங்கள் விவரங்களை தெரிவித்தாலும் கூட,
அது ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும்.

காவல்துறையிடமோ, நீதிமன்றங்களிலோ – அவர்கள்
நேரில் வந்து சாட்சி சொல்லும்படி கட்டாயப்படுத்தப்பட
மாட்டார்கள்.

தேவைப்படும்போது – காவல் துறை அவர்களுடன் வீடியோ
கான்பரன்ஸ் முறையில் தொடர்பு கொண்டு
விவரங்களை சேகரித்துக் கொள்ளவும்,

சம்பந்தப்பட்ட நபர் ஏற்றுக் கொண்டால் –
அவர்களது இல்லத்திற்கோ, அலுவலகத்திற்கோ சென்று
காவல் துறைக்கு தேவைப்படும் தகவல்களை பெற்றுக்
கொள்ளவும்,

இந்த சட்டம் வழி வகை செய்கிறது.

பாராட்டத்தகும் இன்னொரு அம்சமாக –
உயிர்காக்கும் உதவிகளுக்கு காரணமாக இருப்பவர்களுக்கு,
உரிய சந்தர்ப்பங்களில் –
“அரசின் சார்பில் பரிசுகள்” ( Rewards )
அளிக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

மிகவும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் இப்படி ஒரு சட்டம்
வரும் வேளையில் –

ஒரு விஷயத்தை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

இதை சட்டமாக போட்டால் போதுமா ?
இத்தகைய செய்திகளை எல்லாம்,
உடனுக்குடன் நாடு முழுவதும்
படித்தவர், படிக்காதவர்,
நகரத்தவர், கிராமத்தவர் என்று அனைத்து தரப்பினருக்கும்
இந்த கொண்டு சேர்த்தால் தானே
எதிர்பார்க்கும் நல்ல விளைவுகள் கிடைக்கும்.

இந்த செய்தியை இந்த நிமிடம் வரை எந்த தொலைகாட்சி
மீடியாவும் சொல்லவில்லை. வெட்டி விவாதங்களில்
பொழுதைக் கழிக்கும் தொலைகாட்சி சேனல்கள்
மக்களுக்கு நன்மை பயக்கும் செய்திகளை
பெரிய அளவில் சென்று சேர்க்க வேண்டாமா…?

எனக்குத் தெரிந்து எந்த தமிழ் நாளிதழிலும்
இந்த செய்தி இதுவரை வெளிவரவில்லை.

ஊடகங்கள் முதலில் தங்களுக்குள்ள சமூகக்கடமையை
உணர வேண்டாமா…?

ஆனால், சமூக வலைத்தளங்கள் இந்தப் பணியை
செவ்வனே செய்து வருகின்றன. இப்போதெல்லாம்
பல முக்கியமான விவரங்கள் எல்லாம் வலைத்தளங்கள்
மூலம் தான் வெளிவருகின்றன.

இந்த இடுகையை படிக்கும் நண்பர்கள் அனைவரையும்,
twitter, facebook மற்றும் தங்கள் வசமுள்ள
வலைத்தளங்கள் மூலம் –
இந்த செய்திக்கு உரிய விளம்பரம் கிடைக்கச் செய்யும்படி
வேண்டுகிறேன்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to சாலை விபத்தில் அடிபட்டு கிடப்பவரை தூக்கினால் சட்டப்படி குற்றமாகுமா….? சாட்சி சொல்ல அழைப்பார்களா …?

 1. SENTHILNATHAN COIMBATORE சொல்கிறார்:

  Many Many Thanks KM Sir. Salute to you…..

 2. Thiruvengadam (@veluran) சொல்கிறார்:

  Equal propaganda need to be made to Police Personnel & Medical field on this revised procedure to attended the injured. This proposal have already dealt in social Media. This confirmation also to be made publicity

  • Natarajan.K. சொல்கிறார்:

   இது என்ன இங்கிலீஷு சார் ?
   இங்கிலீஷு சரியா எழுத தெரியல்லைன்னா
   புரியும்படி தமிழ்லயே எழுதலாமே.

 3. ravi சொல்கிறார்:

  highly important one… but problem is , the most of the police is ignorant of these things..

 4. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  Highly welcome,Thanks

 5. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  நன்றி, இந்த செய்திக்கு என்னால் முடிந்த அளவு உரிய விளம்பரம் கிடைக்கச் செய்து விட்டேன் ..

 6. Johan Paris சொல்கிறார்:

  //பாராட்டத்தகும் இன்னொரு அம்சமாக –
  உயிர்காக்கும் உதவிகளுக்கு காரணமாக இருப்பவர்களுக்கு,
  உரிய சந்தர்ப்பங்களில் –
  “அரசின் சார்பில் பரிசுகள்” ( Rewards )
  அளிக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது.//
  இலவசங்களுக்கும், நன்கொடைகளுக்கும் பழக்கப்பட்ட சமுதாயமாகிவிட்ட நாம் இதற்காகவாவது, மற்றவருக்கு உதவட்டும் என உணர்ந்து, பரிசு கொடுக்க முற்பட்டத்தைப் பாராட்டுகிறேன்.
  இதைப் பட்டி தொட்டியெங்கும் பரவ வழிசெய்ய வேண்டும். நாம் தானே சினிமா நடிகர்கள் சொன்னால் நம்புவோம், செய்வோம். சுப்பர் ஸ்டார், ஒலகநாயகன், தளபதி, தல முன்னெடுக்கலாமே!

 7. venkat lakshmi சொல்கிறார்:

  திருகாவிரி மைந்தன் அவர்களக்கு வணக்கம்
  நான் தங்களது வலைத் தளத்தை கடந்த இரண்டு வருடங்களாக
  வாசித்து வருகிறேன். தங்களது கருத்தகள் நன்றாகவும் சமுக அக்கிரை
  மிகுந்து உள்ளது. நேற்று தாங்கள் விபத்து பற்றி வரும் இடையூர்
  விளைவிக்கும் நடைமுறை சிக்கல்களை போக்கும் சட்டத்தை
  பற்றி எழுதியது சமுக அக்கரையின் வெளிப்பாடு.
  தொடரட்டும் உங்கள் சேவை வளருட்டும் உங்கள் பணி
  என்றும் நீங்கள் வளமுடன் நலமுடன் வாழ உங்கள்க்கு இறைவன்
  அருள் புரியட்டும்
  நன்றி

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சகோதரி வெங்கட்லக்ஷ்மி,

   வருக.
   முதல்முறையாக இங்கு பின்னூட்டம் எழுதுகிறீர்கள்.
   உங்கள் கருத்துக்களுக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 8. LVISS சொல்கிறார்:

  The sooner it becomes a law the better –
  Mr Gadkari has come up with another suggestion that the drivers cabin should be air conditioned –Probably he thinks that a cool atmosphere for the driver may bring down accidents –

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.