மனதிற்கு பிடித்ததை – பகிர்ந்து கொள்கிறேன் -1

 

Ponniyin_selvan_volume_1

அரசியல் – தவிர்க்க முடியாதது. எனவே, நான் எவ்வளவு
தான் முயன்றாலும், அரசியல் குறித்த இடுகைகள்
எழுதுவதை என்னால் தவிர்க்க முடியாது என்றே தோன்றுகிறது.
எனவே, அது பாட்டுக்கு இந்த தளத்தில் தொடரும்.

என் மனதில் நிறைய விஷயங்கள் நிறைந்து கிடக்கின்றன.
இத்தனை வருட வாழ்க்கையில் நடந்தது, அனுபவித்தது,
பார்த்தது, கேட்டது, உணர்ந்தது – பிடித்தது என்று பல….

அவற்றில், நான் நினைத்து ரசிக்கும் சில விஷயங்களை,
அனுபவித்த சில நல்ல தருணங்களை, படித்த, பார்த்த,
கேட்ட – சில நல்ல ரசனையான புத்தகங்களை,
ஆன்மிக, சமூக நலன் குறித்த உரையாடல்களை பற்றிய
விஷயங்களையும் –

அவ்வப்போது இந்த தளத்தின் மூலம் நண்பர்களுடன்
பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரு பக்கம் இது எனது ஆத்ம திருப்திக்காக என்றாலும்,
மற்றவர்களுக்கும் நிச்சயமாக இவையெல்லாம் எதாவது
ஒரு விதத்தில் பிடித்தமானதாக, உபயோகமாக, இருக்கும்..!
பயனற்ற விஷயங்களை நிச்சயம் இதில் எழுத மாட்டேன்.

துவக்கத்தில் ஒரு விஷயம் –

நான் பிறந்து முதல் நான்கு வருடங்களை கழித்தது –
ஹைதராபாத் நகரத்தை ஒட்டிய ஒரு இடத்தில்
அதன் பின்னர் ஐந்து வயதிலிருந்து, 12 வயது வரை இருந்தது,
படித்தது மஹாராஷ்டிராவில், புனே என்கிற ஊரில்.

இந்த 12 வயது வரை நான் படித்தது, துவக்கத் தமிழும்,
ஆங்கிலமும். வெளியில் பேச, பழக தெரிந்து கொண்டது
இந்தியும், சிறிதளவு மராட்டியும்.

புனேயில் இருக்கும்போதே, எங்கள் வீட்டில் ஆனந்தவிகடன்,
கல்கி, கதிர் (தினமணி) ஆகிய வார இதழ்களை
வாங்குவோம்.

நான் பள்ளியில் கற்றுக்கொண்ட தமிழ் வெறும்
அறிமுகத்துக்கு, எழுத்துக்கூட்டி படிக்க மட்டுமே
உதவியது.

இந்த விகடன், கல்கி, கதிர் ஆகிய வார இதழ்கள் தான்
என் தமிழ் ஆர்வத்திற்கு தீனி போட்டன.
நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே, கல்கி இதழை
ஒரு மணி நேரத்தில் முழுவதுமாக
படித்து முடித்து விடுவேன்.

என் முதல் ஹீரோ – ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
அவர்கள் படைத்த “பொன்னியின் செல்வன்” தான்.
பொன்னியின் செல்வன் – தொடர்கதையாக கல்கி வார இதழில் வந்துகொண்டிருக்கும்போதே, என் மிகச்சிறிய வயதிலேயே
படிக்கத் துவங்கினேன். என் வாசிக்கும் ஆர்வத்தை
தூண்டியதில், வளர்த்ததில் பெரும் பங்கு –
பொன்னியின் செல்வனுக்கு உண்டு.

12-13 வது வயதில், எங்கள் குடும்பம் ஒரு சிறிய காலத்திற்கு
புனே யிலிருந்து, கோயம்புத்தூர் அருகே உள்ள ஒரு
மிகச்சிறிய (அப்போது …! ) கிராமமான “சூலூர்” -க்கு
குடிபெயர நேர்ந்தது. துவக்கத்தில் 3-4 மாதங்கள் என்று
சொல்லப்பட்டு, கிட்டத்தட்ட 10 மாதங்கள் அங்கேயே
இருக்க நேர்ந்தது.

பயிற்சி மொழியில் மாறுதல், அரைகுறை கல்வியாண்டு
போன்ற காரணங்களால், நான் சூலூரில் இருந்த காலம் முழுவதும்,
பள்ளி செல்ல முடியவில்லை. புதிய இடம், பள்ளிப்படிப்பு
கிடையாது, சிநேகிதர்களும் இல்லை – வயதோ பன்னிரெண்டு.

எனக்கு கை கொடுத்தது என் வாசிக்கும் வழக்கம் தான்.
சூலூரில் ஒரு அரசு நூலகம் இருந்தது. நிறைய புத்தகங்கள்
இருந்தன… அது போதுமே எனக்கு….
நூலகத்திலேயே குடியிருக்க ஆரம்பித்தேன்.

ஒரு வாரம் … ஒரே வாரம் தான்.
அந்த நூலகர் எனக்கு மிகவும் சிநேகமாகி விட்டார்.
என் வாழ்வில் மறக்கவே முடியாத ஒரு சிநேகிதர்.
12 வயது பையனுக்கும் 35 வயது மனிதருக்கும் அப்படி ஒரு
சிநேகிதம் – பரஸ்பர புரிதல்.

காலை எட்டரை முதல் பன்னிரெண்டரை வரை.
மாலை நாலு முதல் ஏழு மணி வரை தான் நூலகம்
திறந்திருக்கும்.

மற்ற நேரங்களில் இந்த சிநேகிதம் கை கொடுத்தது.
எந்த புத்தகத்தை வேண்டுமானாலும், நான் வீட்டிற்கு
கொண்டு செல்ல அவர் உதவினார். பன்னிரெண்டரை
மணிக்கு வீட்டிற்கு கிளம்பும்போது கையில் ஒரு
புத்தகத்தோடு கிளம்பி விடுவேன்.
மாலை ஐந்தரை மணிக்கு புத்தகத்தை முடித்து,
கையோடு எடுத்துக் கொண்டு நூலகத்திற்கு போய் விடுவேன்.

jaganmohini front cover

அவர் செய்யும் இந்த உதவிக்கு பதிலாக –
என்னால் முடிந்தது – நூலகத்தில் புத்தகங்களை ஒழுங்காக
அடுக்கி வைப்பது, லேபிள்கள் போடுவது, சமயத்தில்,
வரும் உறுப்பினர்களுக்கு புத்தகங்கள் கொடுத்து, வாங்கி,
ரெஜிஸ்டரில் எண்ட்ரீ போட்டு கையெழுத்து வாங்குவது –
இப்படியாக.

சில சமயங்களில், நூலகருக்கு அவசர சொந்த
வேலைகள் வந்தால், நூலகத்தை என் பொறுப்பில்
விட்டு விட்டு போய் விடுவார். எனவே, எந்தவித
குற்ற உணர்ச்சியும் இல்லாமல், நான் உரிமையோடு
புத்தகங்களை வீட்டிற்கு எடுத்து வர முடிந்தது.

அப்போதைய புகழ்பெற்ற நாவலாசிரியர்களை –
இன்றைய தலைமுறை நண்பர்களுக்கு தெரிந்திருக்காது….

வடுவூர் துரைசாமி அய்யங்கார் –
நகைச்சுவை ததும்ப துப்பறியும் நாவல்களை எழுதுவதில்
கில்லாடி இவர்.
அவரது நாவல்களுக்கு பெயர் வைக்கும் முறையே
மிகவும் வித்தியாசமாக இருக்கும்….அநேகமாக,
ஒவ்வொன்றும் இரண்டு தலைப்புகளை கொண்டிருக்கும்….
திகம்பர சாமியார் அல்லது
கும்பகோணம் வக்கீல் – என்கிற மாதிரி ….

Mayavinodhaparadesi

SoundaraKokilam

மற்றொருவர் ஆரணி குப்புசாமி முதலியார் –
இவரது ஒவ்வொரு நாவலும் 600 பக்கங்களுக்கு குறையாது.

அந்த காலத்தில், ஆங்கிலத்தில் புகழ்பெற்ற துப்பறியும்
நாவல்களை, பெயர்களை மட்டும் தமிழ்ப்படுத்தி,
எழுதி விடுவார்…..

குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர் –
திருமதி வை.மு.கோதைநாயகி …
அந்த காலத்திலேயே “ஜகன்மோகினி” என்கிற பெயரில்
மாத இதழ் ஒன்றின் ஆசிரியராக இருந்து
சொந்தமாக வெளியிட்டு வந்தார்.
இவரது நாவல்கள் குடும்பக்கதைகளாக இருக்கும்.
அட்டையிலேயே – வைமுகோ வின் ……வது நாவல்
என்று அச்சடித்திருப்பார்கள். நூறு நாவல்களுக்கும் மேல்
அவர் எழுதி இருக்கிறார்.

vai.mu.ko

திருமதி வை.மு.கோதைநாயகி அம்மாள்

இவர்களைத்தவிர, சிரஞ்சீவி, மேதாவி, ஆர்வி என்று
சில குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் – பெரும்பாலும்
துப்பறியும் கதைகள் எழுதினார்கள்.

இந்த பத்துமாத காலத்தில் நான் வாசித்த புத்தகங்கள்
எண்ணில் அடங்கா. என் இளமைக்கால வாழ்க்கையின்
மிகச்சிறந்த பருவம் இது என்று என்றே சொல்லலாம்.

( பின்னர் வருகிறேன்……)

பின் குறிப்பு –

நான் எழுதுவது “போர்” அடித்தால் –
தயங்காமல் சொல்லி விடுங்கள்…!!!
எந்த விதத்தில் என்பதையும்
தயவுசெய்து குறிப்பிடுங்கள்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to மனதிற்கு பிடித்ததை – பகிர்ந்து கொள்கிறேன் -1

 1. ranjani135 சொல்கிறார்:

  என்னைப் போன்றவர்களுக்கு உங்களின் இதுமாதிரிக் கட்டுரைகள் ரொம்பவும் பிடிக்கும். உங்கள் விசிறிகளில் என் போன்றவர்களும் நிச்சயம் இருப்பார்கள். எங்களுக்காக இதுபோன்ற கட்டுரைகள் தொடர்ந்து எழுதுங்கள், ப்ளீஸ்.
  உங்களது பரந்த வாசிப்பு அனுபவம் உங்கள் எழுத்துக்களில் நன்றாக தெரிகிறது.
  தொடருங்கள்.

 2. thiruvengadam சொல்கிறார்:

  உங்களின் இடுகைகளின் சிறப்பின் அடிப்படை இப்பொழுதுதான் தெரிகிறது. வாசிப்பின் வலிமை இன்றைய இளைஞர்கள் தங்கள் அனுபவம் மூலம் உணரவேண்டும்.

 3. shaja சொல்கிறார்:

  I like this kind of articles from you… but I am differ from your political stand.

 4. அருமை அய்யா , எனது சிறு வயதில் கூட நான் நூலகத்தில் தான் குடியிருந்துள்ளேன்…உங்கள் பதிவுகளில் இது மிகவும் சிறப்பாக உள்ளது..தயவுசெய்து தொடரவும்

 5. KuMaR.S சொல்கிறார்:

  அருமையான ஆரம்பம்.
  தொடருங்கள் அண்ணா. . .

 6. gopalasamy சொல்கிறார்:

  Very Very interesting. Please continue. I also use to spend my whole free time in library. during my school days.

 7. Mohan சொல்கிறார்:

  அன்பு மிகு காவிரி மைந்தன் ஐயா அவர்களுக்கு,

  நான் தினமும் படிக்கும் தங்களின் வலைத் தளம் மிகவும் அருமை.
  நான் படித்த இரண்டு நூல்களில் ஒன்றை நீங்கள் குறிப்பிட்டு விட்டீர்கள்.
  கள்ளுண்ட வண்டைப் போல் மயங்கி கிடந்ததது நினைவுக்கு வருகின்றது.

  1) பொன்னியின் செல்வன்
  2) மோக முள்
  3) குறிஞ்சி மலர்

  நான் இன்று 35 வயதுக்கு மேல் உள்ளவன்.
  தங்களுடனான கருத்துக்கள் பெரும்பான்மை ஏற்கக் கூடியதே !

  தொடரட்டும் தங்களின் பணி!

  நல்லதோர் கருத்துக்களை நாளும் நல்கி
  சிந்தனை சேர் செய்திகள் பல சொல்லி
  எண்ணத்தில் என்றும் மேன்மை கூட்டும்
  எங்கள் காவிரி மைந்தன் ஐயா வாழ்க மகிழ்ந்து !

  என்றும் அன்புடன்,
  அம்பை மோகன் .

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதிய முயற்சியை வரவேற்றும்,
   நல்ல வார்த்தைகள் கூறியும் எழுதிய
   நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியை
   தெரிவித்துக் கொள்கிறேன்.

   கூடுமான வரை, இந்த பகுதி சுவை குன்றாமலும்,
   அதே சமயம் பயனுள்ளதாகவும் இருக்க
   என்னால் இயன்ற வரை முயற்சி செய்கிறேன்

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 8. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  welcome,i”m of ur age ,pls continue, Pazhamai(old ninaivugal) pasumaye!

 9. A.K. Srinivasan சொல்கிறார்:

  Thanks for flash-back, enjoying like chandramouly.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.