மனதிற்கு பிடித்ததை….(2) ( திரு.சுகி சிவம் …..)

.

.

“சூலூர்” அனுபவம் தொடர்வதற்கு முன்பாக ஒரு நல்ல
அறிமுகத்துடன் இந்த பதிவை தொடரலாம் என்று
நினைக்கிறேன்…

நல்ல சொற்பொழிவுகள் சுற்று வட்டாரத்தில்
எங்கு நடந்தாலும், நேரில் சென்று கலந்து கொள்வது
என் வழக்கம். இதில் “நல்ல சொற்பொழிவுகள்”
என்கிற வகையில், பல விஷயங்கள் அடங்கும்.

இப்போதெல்லாம் அரசியல் கூட்டங்களுக்கு போவதை
அநேகமாக நிறுத்தியாகி விட்டது…..காரணம் உங்களுக்கெல்லாம்
சொல்லாமலே புரியும்….!

மற்றபடி “இலக்கிய” சொற்பொழிவுகள், “ஆன்மிக” உரைகள்,
இவற்றில் நிச்சயம் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிற
கூட்டங்களுக்கு மட்டும் செல்வது வழக்கம்.

இவை எல்லாவற்றையும் தாண்டி, அந்த காலத்தில்
முக்கியமான சிலரது சொற்பொழிவுகள் எங்கு நடந்தாலும்
தேடிச்செல்வது வழக்கம். திருமுருக கிருபானந்தவாரியார்
சுவாமிகள், புலவர் கீரன், சுவாமி சின்மயானந்தா,
கம்பன் கழக உரையாளர்கள் ( முக்கியமாக சா.கணேசன்,
நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் ஆகியோர் இதில் அடக்கம்.)

இப்போதெல்லாம் பொதுவாக பட்டிமன்றங்கள்,
நகைச்சுவையையே பிரதான நோக்கமாக கொண்டிருக்கின்றன.
இத்தகைய கூட்டங்கள் நல்ல பொழுதுபோக்காக அமைவது
உண்மை. ஆனால், அவற்றில் பயனுள்ள செய்திகள் கிடைப்பது
அபூர்வமாகவே இருக்கும்.

இன்றைய பேச்சாளர்களிலேயே மிகவும் வித்தியாசமானவர்
திரு.சுகி சிவம் அவர்கள். மற்றவர்கள் ஒரு மணி நேரம்
பேசினால், நமக்கு தேவையான விஷயம் அதில்,
அதிகம் போனால், 10 நிமிடங்களுக்குத் தான் இருக்கும்.

ஆனால் சுகி.சிவம் அவர்கள் ஒரு மணி நேரம் பேசினால்,
அதில் குறைந்த பட்சம் 55 நிமிடங்களுக்காவது பலனுள்ள
நல்லபல செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைக்கு
அவசியம் தேவைப்படும் பல கருத்துக்களை,
தகவல்களை, சற்றும் சுவை குன்றாமல்
நல்ல தமிழில் பேசக்கூடியவர் சுகி சிவம். அவரது நிகழ்ச்சி
சுற்று வட்டாரத்தில் எங்கு நடந்தாலும் தவறாமல் செல்வது
என் வழக்கம். ஆன்மிக சொற்பொழிவாளர் என்று அவரை
வகைப்படுத்தி விட முடியாது. சமூக நலம், மன வளம்
சம்பந்தப்பட்ட பல அருமையான உரைகளை ஆற்றி
இருக்கிறார் சுகி சிவம்.

அவரது பல புத்தகங்கள், ஆடியோ, மற்றும் வீடியோக்கள்
விற்பனைக்கு கிடைக்கின்றன. ஆனால், எந்தவித செலவோ,
முயற்சியோ இன்றி உட்கார்ந்த இடத்தில் பார்க்க
பல வீடியோக்கள் யூட்யூபில் கிடைக்கின்றன.

இன்றைய தினம் சுகி சிவம் அவர்களின் இரண்டு
தேர்ந்தெடுக்கப்பட்ட – சிறிய வீடியோக்களை இங்கு
பதிப்பிக்கிறேன். நீளம் அதிகம் இருந்தால், பலர் பிறகு
பார்ப்போம் என்று கடந்து சென்று விடுவர் என்பதால்
நான் இயன்ற வரையில் சிறிய வீடியோக்களையே தருகிறேன்.

முதல் வீடியோ – தன்னம்பிக்கை பற்றியது.

அடுத்தது குடும்ப உறுப்பினர்களிடையே,
முக்கியமாக கணவன்-மனைவி இடையே நல்லுறவை
பேணிக்காப்பது குறித்தது.

இந்த இரண்டின் முக்கியத்துவத்தையும், ஒவ்வொருவரும்
அவசியம் உணற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

மீண்டும் – அடுத்த பகுதியில் சந்திப்போமே……!

பின் குறிப்பு –

இடுகையின் இந்த பகுதியைப் படிக்கும்போது,
நண்பர்கள் சிலருக்கு தங்களுக்கு நேர்ந்த அனுபவங்கள்,
கருத்துக்களைக் கூட – சொல்லத் தோன்றக்கூடும்.

அப்படி தங்கள் அனுபவங்கள், கருத்துக்கள்
எதையாவது பகிர்ந்து கொள்ள விரும்பினால்,
பின்னூட்டத்தில் தாராளமாக பகிர்ந்து கொள்ளலாம்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

One Response to மனதிற்கு பிடித்ததை….(2) ( திரு.சுகி சிவம் …..)

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  ஐயா
  எனக்கும் மிகவும் பிடித்த பேச்சாளர் சுகி சிவம்தான்.
  ஒரு முறை கிரிக்கெட்டையும் மனுஷ வாழ்க்கையையும் கம்பேர் செய்து இருப்பார். ஒருத்தன் விளையாட வருவான். அவனுக்கு பால் ஒருத்தன் போடுவான். ஆனால் அதை தடுக்க ஆடுறவன சுத்தி பத்து பேர் நிப்பானுங்க. விளையாடுபவர்களில் (பேட் செஞ்சவன் பால் போட்டவன்) ஜெயிச்சது யாரென்று மூன்றாவதா ஒருத்தன் (அம்பெயர்) முடிவெடுப்பான். சுத்தி ஆயிரக்கணக்கில் மக்கள் உட்கார்த்துக்கொண்டு அவுட் ஆனாலும் கை தட்டுவான் ஃபோர்/ஸிக்ஸர் அடிச்சாலும் கை தட்டுவான். பல சமயத்தில் பக்கத்துல இருக்கிறவன் கத்துனா இவனும் கத்துவான், காரணமே தெரியாமல். இப்படித்தான் வாழ்க்கையும் என்று முடிப்பார்.

  அதேபோல இன்னொரு நிகழ்ச்சியில், ஒரு பொண்ணும் பையனும் நடந்து செல்வதை பார்த்தே அவர்களின் திருமண பந்தத்தை பற்றி நகைச்சுவையாக சொல்லியிருப்பார்.
  பொண்ணு முன்னால் நடந்து பையன் பின்னால் போனால் இன்னும் திருமணமாகவில்லை…
  கொண்டும் பையனும் ஒண்ணா கைகோர்த்துக்கொண்டு போன ஜஸ்ட் மாரீய்டு.
  பையன் முன்னால போக பொண்ணு பின்னால நடந்தா கல்யாணமாகி அஞ்சு வருஷத்துக்கு மேலே இருக்கும்பார்.
  (எப்போதோ கேட்டது, இப்போதைக்கு ஞாபகத்தில் வந்ததை பகிர்ந்துள்ளேன். இதில் ஏதேனும் மிகைத்தோ குகுறைத்தோ இருந்தால் தவறு என்னுடையதே. சுகி சிவத்துக்கும் இதறகும் சம்பந்தமில்லை)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.