வசை பாடும் இசை – இதற்கு பதில் சொல்ல வேண்டும்… 3 மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணத்தை ஏற்றுவது மக்கள்நல திட்டமா ?

92ttps (1)

மத்திய மந்திரிக்கு வக்காலத்து வாங்கி நேற்று
திருமதி இசை ” வசை மாரி ” பொழிந்தார்.

தான் எதற்கு வக்காலத்து வாங்குகிறோம் என்பதை
தெரிந்து கொண்டு தான் அவர் பேசினாரா ?
மத்திய மந்திரி அறிவித்திருக்கும் “உதய்” திட்டத்தை
எப்போதாவது முழுவதுமாக படித்துப் பார்த்திருப்பாரா ?
புரிந்து கொண்டிருப்பாரா ?

தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த
அறிக்கை மத்திய மந்திரியின் “உதய்” திட்டத்தைப்பற்றி
முழுவதுமாக விளக்குகிறது.

இந்த திட்டத்தை அப்படியே ஏற்பது தமிழ்நாட்டின் நலனுக்கு,
தமிழக மக்களின் நலனுக்கு உகந்ததா ?
இதை அப்படியே ஏற்க வேண்டும் என்று இப்போதும்
திருமதி வசை சொல்வாரா …?
அதை அவர்களது தேர்தல் கூட்டங்களிலும் சொல்வாரா …?

நண்பர்கள் பார்வைக்காக –

நான் முந்தைய இடுகையிலேயே, உதய் திட்டத்தைப்பற்றி
சுருக்கமாகச் சொல்லி, தேவைப்பட்டால் அது குறித்து
பின்னர் விவரமாக விவாதிக்கலாம் என்று எழுதி இருந்தேன்.

தமிழக அரசின் சார்பாக மின் துறை அமைச்சர் இன்று
வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து சில பகுதிகள் கீழே –

மத்திய அமைச்சர் பியூஸ் கோயலின் குற்றச்சாட்டும்,
அதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர்,
மற்றும் தமிழக மத்திய பாஜக அமைச்சர் ஆகியோர்
தமிழக அரசை திடீரென்று வசை பாடத்துவங்கி இருப்பதும் –

முழுக்க முழுக்க தேர்தல் அரசியலே என்பது
வெட்ட வெளிச்சமாகவே விளங்குகிறது…….

கேவலமான மனிதர்கள் – மத்திய அரசு நிர்வாகத்தை,
தங்களது சுயநலத்திற்காக –
தமிழக தேர்தலுக்கு –
பயன்படுத்திக்கொள்ள முயற்சி செய்கிறார்கள்…!

———————————————

மத்திய மின்சாரம், நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க
எரிசக்தி துறை அமைச்சர் பியுஷ் கோயல் டெல்லியில்
நடைபெற்ற ஒரு மாநாட்டில் காற்றாலை மின்சாரம்
தொடர்பான ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில்
தன்னிலை மறந்து, தனது பதவியின் மதிப்பையும் துறந்து,
அரசியல் காரணங்களுக்காக தமிழக முதல்வர்
ஜெயலலிதாவை சந்திக்க இயலவில்லை என ஒரு பொய்யான
குற்றச்சாட்டை தெரிவித்ததோடு

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ‘உதய்’ திட்டத்திற்கான
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு இன்னமும்
கையொப்பம் இடவில்லை என தமிழக அரசை சாடியுள்ளார்.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த உதய் திட்டம்
தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் உண்மையிலேயே
நன்மை பயக்கக்கூடிய திட்டம் தானா என்றால்,
இல்லை என்பதே அதற்கு ஆணித்தரமான பதிலாக அமையும்.

‘மக்களுக்காகவே திட்டங்கள்;
திட்டங்களுக்காக மக்கள் இல்லை’ என்பதே தமிழக முதல்வர்
ஜெயலலிதாவின் ஆணித்தரமான கருத்தாகும். உதய் திட்டம் எந்த அடிப்படையிலே வகுக்கப்பட்டது என்பதை தெரிந்து
கொண்டால் இந்த திட்டம் ஏன் தமிழ்நாட்டிற்கு
பயன் அளிக்காது என்பது எவருக்கும் எளிதில் புரிந்து விடும்.

அனைத்திந்திய அளவில் ஒரு புறம் மிக அதிக அளவிலான
மின் உற்பத்தித் திறன் உள்ளது. ஆனால், அதே நேரத்தில்
மின் பற்றாக்குறையும், மின்வெட்டும் பல மாநிலங்களில்
உள்ளன. சுமார் 75,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன்
பயன்படுத்தப்படாமலேயே உள்ளது. இதற்குக் காரணம்
பல்வேறு மாநிலங்களின் மின்பகிர்மானக் கழகங்களால்
மின்சாரத்தை வாங்க இயலவில்லை.

ஏனெனில், பெரும்பாலான மின் பகிர்மான கழகங்கள் பெரும்
நஷ்டத்திலேயே இயங்கி வருவதால் அவைகளால் மின்சாரம்
வாங்க இயலவில்லை. மேலும், வாங்கிய கடனுக்கான
வட்டி மற்றும் தவணைத் தொகை ஆகியவற்றையும்
செலுத்த இயலவில்லை.

தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் வங்கிகளில் இருந்து
பெற்ற கடன்களை அவர்களால் திரும்ப செலுத்த
இயலவில்லை. ஏனெனில் அவர்களின் மின்நிலையங்கள்
குறைந்த செயல் திறனிலேயே செயல்படுகின்றன.
எனவே வங்கிகள் கடனாக வழங்கிய தொகை செயல்படாத
சொத்தாக, அதாவது என்பிஏ என்று வகைபாடு செய்யப்படும்
நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மின்பகிர்மான கழகங்களின் கடன்களை மாநில அரசு
எடுத்துக் கொண்டால், அதிக கடன் பெறும் தகுதியினை
மின்பகிர்மான கழகங்கள் பெற்று, அதன் காரணமாக
தனியாரிடமிருந்து மின்கொள்முதல் செய்ய இயலும்;
அவ்வாறு செய்யும்போது தனியார் மின் நிலையங்களின்
பிஎல்எஃப் உயர்கின்ற காரணத்தினால் அவர்கள்
லாபம் ஈட்டி வங்கிக் கடன்களை திரும்ப செலுத்த
இயலும் என்பதே இந்த திட்டத்தின் அடிப்படை.

இதன் காரணமாக இந்த திட்டத்தின் மூலம் உண்மையான
பயன் பெறுபவர்கள் தனியார் மின் நிறுவனங்கள்
மற்றும் அவர்களுக்கு கடன் வழங்கிய வங்கிகள்
ஆகியவைகள் தான்.

மாநில அரசுக்கோ, நுகர்வோருக்கோ இதில் எந்த வித பயனும்
ஏற்படப் போவதில்லை. இந்த திட்டம், “நீ அவலைக்
கொண்டு வா, நான் உமியைக் கொண்டு வருகிறேன்.
இருவரும் சேர்ந்து ஊதி ஊதி அவலை சாப்பிடலாம்”
என மத்திய அரசு, மாநில அரசுக்கு தெரிவிப்பது
போலத் தான் உள்ளது.

இந்த உதய் திட்டம் ஒரு தலைபட்சமாக அமையாமல்,
தனியாருக்கும் வங்கிகளுக்கும் லாபம், மாநில அரசுக்கும்,
மாநில மக்களுக்கும் நஷ்டம் என்ற அடிப்படையில் இல்லாமல்,

அனைவரும் பயன்பெறக்கூடிய வகையில் எவ்வாறு
மாற்றியமைக்கப்பட வேண்டும் என தமிழக முதல்வர்
ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை 23.10.2015
அன்றே எழுதியுள்ளார். இந்த கடிதத்திற்கு எந்த வித பதில்
கடிதம் அனுப்ப இயலாத மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்
அநாகரிகமான முறையில் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

மின்பகிர்மான கழகங்களின் நிதி சீரமைப்பு தொடர்பாக
மத்திய மின் துறையின் கூடுதல் செயலாளரின் 9.9.2015
நாளிட்ட கடிதத்தின் அடிப்படையிலும், மத்திய அமைச்சர்
பியுஷ் கோயல் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை
தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதன்
அடிப்படையிலும்,

இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியுஷ் கோயலை
சந்தித்து விவாதிக்க எனது தலைமையில் ஒரு குழு அமைத்து
ஜெயலலிதா உத்தரவிட்டார்.

அந்த குழுவில் தலைமைச் செயலர் மு.ஞானதேசிகன்,
கூடுதல் தலைமைச் செயலர்/நிதி மு. சண்முகம்,
அப்போதைய மின்துறை செயலர் ராஜேஷ் லக்கோனி மற்றும்
தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்,
தமிழ்நாடு மின்சார வாரியம், முனைவர் ஆ. சாய்குமார்
ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்தக் குழு 9.10.2015 அன்று இந்த உதய் திட்டம் தொடர்பாக
மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுடன் விவாதித்தது.
உதய் திட்டத்தின்படி

அ) மின் பகிர்மான கழகத்தில் 30.9.2015 நிலவரப்படி
உள்ள கடனில் 75 விழுக்காட்டை மாநில அரசு இரண்டு
ஆண்டுகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். முதல் ஆண்டில்
50 சதவீதக் கடன், இரண்டாம் ஆண்டில் 25 சதவீதக் கடன்
மாநில அரசால் எடுத்துக் கொள்ளப்படவேண்டும்.

ஆ) மேற்கண்ட கடன் தொகை மாநில அரசின் நிதி
பத்திரங்களாக வெளியிடப்பட்டு மாநில அரசின் கடனாக
மாற்றப்படும். இந்த நிதிப் பத்திரங்களை வங்கிகள் வாங்கும்.
அதாவது, இதன் பொருள் என்னவென்றால், வங்கிகள் மாநில
அரசுக்கு கடன் வழங்கி தங்களுடைய என்பிஏ கணக்குகளை
நேர் செய்து விடும்.

இ) இந்த கடன்கள் மின் பகிர்மான கழகத்திற்கு மானியமாக
5 ஆண்டுகளில் மாநில அரசுகளால் வழங்கப்பட வேண்டும்.

ஈ) நிதிபற்றாக்குறை தொடர்பான நிதி பொறுப்பு மற்றும்
வரவு செலவு மேலாண்மை வரையறைகளுக்கு இரண்டு
ஆண்டுகளுக்கு மட்டும் தளர்வு செய்யப்படும்.
அதாவது, 2016-17-ஆம் ஆண்டு முடிய மட்டுமே இந்த தளர்வு
நடைமுறைப்படுத்தப்படும்.

ஜெயலலிதா விரிவாக விவாதித்து, அதன் அடிப்படையில்
23.10.2015 அன்று பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், 2011 ஆம் ஆண்டு முதல் மின்வாரியத்திற்கு
பங்கு மூலதனம், கடன்கள், மின் மானியம், நிதி சீரமைப்பு
திட்டத்தின்படி நிதி பத்திரங்களை ஏற்றுக்கொள்ளுதல்
ஆகியவற்றின் கீழ் 53,328 கோடி ரூபாய் நிதி உதவி
வழங்கப்பட்டுள்ளது பற்றியும் மேலும் மின்வாரியம்
கடன் பெறுவதற்கு ஏதுவாக 46,000 கோடி ரூபாய் அளவில்
அரசு ஈட்டுறுதி வழங்கியுள்ளது பற்றியும் தெரிவித்துள்ளார்கள்.

2011 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை மின் தொகுப்பில்
7485.50 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக சேர்க்கப்பட்டதன்
காரணமாக அனைவருக்கும் தடையில்லா மின்சாரம்
வழங்கப்படுகிறது. எனவே தான், முந்தைய திமுக ஆட்சியின் 2010-11 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின் வாரியத்தால்
வழங்கப்படும்

ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கும் 2 ரூபாய் 41 காசு
என்ற அளவில் ஏற்பட்ட இழப்பு தற்போது 1 ரூபாய் 9 காசாக
குறைக்கப்பட்டுள்ளது.

உதய் திட்டம் ஒரு பயனுள்ள திட்டமாக இல்லாவிட்டாலும்,
இதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று தெரிவிக்காமல்,
இதனை எவ்வாறு மாற்றியமைத்தால் பயனுள்ளதாக இருக்கும்
என்று தெரிவித்து அவ்வாறு மாற்றியமைக்கப்பட்டால்
இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு பயன்படுத்திக் கொள்ளும்
என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு மின்வாரியம் வங்கிகளிலிருந்து பெற்றுள்ள
17,500 கோடி ரூபாய் கடனை முதற்கட்டமாக மாநில அரசு
ஏற்றுக்கொள்ளும் என உறுதி அளித்து அதற்கு மத்திய அரசு
வழங்க வேண்டிய சில சலுகைகள் பற்றியும் மத்திய அரசுக்கு
தெரிவிக்கப்பட்டது. மாநில அரசு பின் வரும் சலுகைகளை வழங்க மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது:-

அ) மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் கடன்களின் அசல் மற்றும்
வட்டியை திருப்பி செலுத்தும் காலங்களில் (15 ஆண்டுகளுக்கு)
எஃப்ஆர்பிஎம் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும்.

ஆ) மாநில அரசு 15 ஆண்டுக்கால நிதி பத்திரங்களை
(விடுமுறை காலம் 5 ஆண்டுகள் உள்ளடக்கி) வெளியிடவும்
மற்றும் மாநில அரசு நிதி பத்திரத்தின் வட்டி தொகையை விட
20 அடிப்படை புள்ளிக்கு மிகாமல் வெளியிடவும் மாநில அரசுக்கு
அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

இ) முந்தைய மறு சீரமைப்புத் திட்டத்தைப் போலவே
இந்த திட்டத்திலும் மாநில அரசு எடுத்துக் கொள்ளும்
கடன் தொகையில் 25 சதவீதத்தை மத்திய அரசு மானியமாக
வழங்க வேண்டும்.

ஈ) எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு 50 சதவீத நட்டத்தை
சமாளிக்கும் பொருட்டு வங்கிகள் மூலம் கடன் வழங்க ஏற்பாடு
செய்யப்படவேண்டும்.

உ) எதிர்வரும் ஏழாவது ஊதிய குழுவின் நிதிச் சுமையையும்
கணக்கிடும் பொருட்டு இந்த புதிய நிதி சீரமைப்பு திட்டத்தை
மேற்கொள்வதற்கான கால அளவை ஒரு வருடம் என நிர்ணயிக்க
வேண்டும்.

இந்த கோரிக்கைகள் எதற்கும் மத்திய அரசு செவி
சாய்க்கவில்லை.
இவற்றை ஏற்றுக்கொள்ள இயலாது எனில்,
அதற்கான காரணம் என்ன என்பதையும் மத்திய அரசு
தெரிவிக்கவில்லை. மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்
ஒவ்வொரு மாநிலமாக சென்று அந்தந்த முதல்வர்களை சந்திக்க
வேண்டும். எனவே, தமிழ்நாடு அரசு தெரிவித்த கருத்துகளுக்கு
பதில் அளிக்க அவருக்கு நேரமில்லை! போகட்டும்!
அவரது துறை அதிகாரிகளாவது பதில் கடிதம் அனுப்ப
வேண்டுமா? வேண்டாமா?

கடந்த 20.11.2015 ஆம் நாளில் மத்திய மின்துறையினால்
வெளிடப்பட்ட ஆணையில் மாநில அரசுகளால் 2015-16
மற்றும் 2016-17 ஆகிய இரண்டு ஆண்டுகளில்
ஏற்றுக்கொள்ளப்படும் கடன்கள் மட்டும் மாநிலத்தின்
நிதி பற்றாக்குறை வரையறைக்கு கணக்கில்
கொள்ளப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக 4.12.2015 அன்று
மத்திய மின் அமைச்சகம் வெளியிட்ட வரைவு புரிந்துணர்வு
ஒப்பந்தத்தில்

மின் பகிர்மான நிறுவனங்கள் ஒவ்வொரு
காலாண்டும் எரிபொருள் விலை உயர்வை சமாளிக்கும்
வகையில் மின்கட்டண மாற்றம் செய்ய வேண்டும்
என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணங்களை
உயர்த்த வழிவகை செய்யும் இந்த உதய் திட்டம் –

தமிழக மக்களின் நன்மைக்கான திட்டமா?
அல்லது தமிழக மக்களை அவதிக்குள்ளாக்கும் திட்டமா?

இந்த உதய் திட்டம் மின் துறை சீரமைப்பு திட்டம் என்பது
மக்களை ஏமாற்றும் செயல் ஆகும். தமிழ் இலக்கணத்தில்
இடக்கரடக்கல் என ஒன்று உண்டு.
அதாவது வெளிப்படையாக தெரிவிக்க கூச்சப்படுவதற்கு
மாற்று மொழி தெரிவிப்பது என்பதே இதன் பொருள்.

அதே போன்று தான் மக்கள் வயிற்றில் அடிக்கும் திட்டம்
என்று கூறாமல் மின் துறை சீரமைப்பு திட்டம் என
இந்த திட்டம் சொல்லப்படுகிறது. இது உண்மையிலேயே
அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய திட்டம் எனில்,
எதற்காக மத்திய அமைச்சர் ஒவ்வொரு மாநிலத்திற்கும்
சென்று இதற்கு ஆதரவு திரட்ட வேண்டும்?

இந்த திட்டம் தொடர்பாக மத்திய செய்தி தொடர்புத் துறை
வெளியிட்ட செய்தி குறிப்பில், ”வெளிநாட்டு நிதி
நிறுவனங்கள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனங்கள் அழுத்தம்
காரணமாகவே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது
என்பது தெளிவாகிறது.

மின் பகிர்மான கழகங்களுக்கும்,
மாநில அரசுகளுக்கும், சாதாரண மக்களுக்கும்
உண்மையிலேயே உதவ வேண்டுமென மத்திய அரசு
கருதினால், மாநில மின்சார வாரியங்களுக்கு வழங்கப்படும்
நிலக்கரியின் விலையை குறைத்திருக்க வேண்டும்.

நிலக்கரியை கொண்டு வருவதற்கான செலவினை
குறைத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல்
மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்த பிறகு
நிலக்கரிக்கான பசுமை வரியை டன் ஒன்றுக்கு
ரூபாய் 51.50 லிருந்து 400 ரூபாயாக உயர்த்தியுள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாடு மின்சார வாரியம் கூடுதலாக
செலவழிக்க வேண்டிய தொகை ஆண்டொன்றுக்கு 1,200 கோடி
ரூபாயாகும். மின்சார வாரியம் இறக்குமதி செய்யும்
நிலக்கரிக்கு 2.5 சதவீத சுங்க வரியும்,
2 சதவீத Counter Vailing Duty-ம் விதிக்கப்படுகிறது.

இதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் செலவிடும் தொகை
350 கோடி ரூபாய். நிலக்கரி கொண்டு வருவதற்கான
ரயில்வே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆண்டொன்றிற்கு 225 கோடி ரூபாய்
தமிழ்நாடு மின்சார வாரியம் கூடுதலாக செலவிடுகிறது.

இயற்கை எரிவாயுவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும்
மின் உற்பத்தி நிலையங்களுக்கு மத்திய அரசின் கெயில்
நிறுவனம் வழங்கி வரும் இயற்கை எரிவாயுவின் விலை
உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது, 1 MMBTU எரிவாயுவின் விலையை
4.2 U.S.Dollar என்ற விலையிலிருந்து 5.05 U.S.Dollar என
உயர்த்தியுள்ளது.

இவ்வாறு விலை உயர்த்துவதுதான் மின் துறை சீரமைப்பா?
தமிழ்நாடு மின்சார வாரியம் REC, PFC போன்ற மத்திய
அரசின் பொதுத் துறை நிறுவனங்களிலிருந்து கடன் பெறுகிறது.
இந்த மத்திய பொதுத் துறை நிறுவனங்கள்
வரி விலக்களிக்கப்பட்ட அதாவது, Tax Free Bond கடன்
பத்திரங்களை வெளியிடுகின்றன.

இவற்றுக்கு அவை வழங்கும் வட்டி வீதங்கள் 7.5 சதவீதத்திற்கும்
குறைவே ஆகும். இது போன்று திரட்டப்படும் நிதியை குறைந்த
வட்டி வீதத்திற்கு மின்சார வாரியங்களுக்கு வழங்கினாலே
இவை கடனிலிருந்து மீண்டுவிட முடியும்.

அல்லது இது போன்ற வரிவிலக்களிக்கப்பட்ட கடன் பத்திரங்களை
மாநில அரசு வெளியிட மத்திய அரசு அனுமதித்தால்,
குறைந்த வட்டி வீதத்திற்கு கடன் பெற இயலும்.
அவ்வாறெல்லாம் செய்யாமல் உதய் திட்டத்தின் மூலம்
மாநில அரசை நிதி நெருக்கடிக்கு உள்ளாக்குவதை எவ்வாறு
ஏற்றுக்கொள்ள இயலும்?

மத்திய அரசு செய்யூரில் அமைக்க உள்ள 4,000 மெகாவாட்
அதி உய்ய அனல் மின்நிலையத்திற்கான நிலத்தை
2013-ஆம் ஆண்டே தமிழக அரசு வழங்கியுள்ளதே!

இந்த திட்டம் இன்னமும் ஏன் துவங்கப்படவே இல்லை
என்பதற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
விளக்கம் அளிப்பாரா?

இது போன்று எழக்கூடிய பிரச்சனைகளை நன்கு உணர்ந்த தமிழக
முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசு அளிக்க வேண்டிய
சலுகைகள் பற்றி தனது கடிதத்தில் தெளிவாகக்
குறிப்பிட்டிருந்தார்கள். 19.3.2015 அன்று லோக்சபாவில்
கேள்வி நேரத்தின் போது மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்,
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தமிழக அரசுக்கும்
பாராட்டு தெரிவித்தார்.

இன்று எதிர்வரும் சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்து,
ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் தமிழ்நாட்டில் திட்டங்கள்
செயல்படுத்த முடியும் என்று சொல்லியிருப்பது அப்பட்டமான
நாலாந்தர அரசியல் தான் என்பது தெளிவாகும்.

மத்திய அரசால் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள உதய் திட்டம்
குறுகிய நோக்கம் கொண்ட திட்டம்.

தனியார் மின் நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் மட்டுமே
பயன் அளிக்கக்கூடிய திட்டம்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை
மின் கட்டணம் மாற்றியமைக்கப்படவேண்டும்
என்பதால், சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள்
மிகுந்த துன்பதிற்கு உள்ளாவார்கள்.

எனவே இந்த திட்டத்தில் உள்ள குறைகளை எல்லாம்
களைந்தால் தான் தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தில்
பங்கேற்க இயலும் என்பதே தமிழக முதல்வர்
ஜெயலலிதாவின் கருத்தாகும்.

இந்த திட்டத்தில் பங்கு
பெறவில்லை என குறை கூறும் எதிர்கட்சியினர்
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணங்கள்
மாற்றியமைக்கப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கின்றனரா?
என்பதை தெளிவுபடுத்த வேண்டும்…….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to வசை பாடும் இசை – இதற்கு பதில் சொல்ல வேண்டும்… 3 மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணத்தை ஏற்றுவது மக்கள்நல திட்டமா ?

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இடுகை மிகவும் நீண்டு விட்டதால்,
  இதை தனியே பின்னூட்டத்தில் எழுதுகிறேன்.

  தமிழக மக்களின் நலனுக்கு விரோதமான
  இந்த உதய் திட்டத்தை ஏற்கும்படி மத்திய அமைச்சர்
  அழுத்தம் கொடுப்பது -பாஜக அரசின் எதேச்சாதிகார
  மனப்பான்மையையே வெளிப்படுத்துகிறது.

  மேலும், பாஜக இதை தேர்தலில் மாநில அரசுக்கு
  எதிராக பயன்படுத்தும் முயற்சியிலும் இறங்கி இருப்பதன்
  துவக்கமே அமைச்சரின் பேச்சு.

  தமிழக அரசிலிருந்து விளக்கமான கடிதமும்,
  மாற்று யோசனைகளும் மத்திய அரசுக்கு கடந்த
  அக்டோபரிலேயே போயிருக்கின்றன. அடுத்து,
  பதில் தர வேண்டியது அவர்கள் தான்.
  அதை முற்றிலுமாக மறைத்து விட்டார்கள்.

  அரைகுறை தகவலை வெளியில் விட்டு குற்றம்
  சாட்டுகிறார்கள்.

  தமிழக மக்களின் நலனைக்கருதி,
  இந்த விஷயத்தை கட்சிக் கண்ணோட்டத்தில் அணுகாமல்,
  தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் சேர்ந்து எதிர்க்க
  வேண்டியது அவசியம்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • today.and.me சொல்கிறார்:

   விரிவான விளக்கம்.

   மத்திய அமைச்சர்கள் எல்லாம் இந்தவிஷயத்தில் வாயில் கொழுக்கட்டை வைத்திருப்பார்கள். அவர்களுக்காக தமிழ்நாட்டில் ஒரு பிரிவினர் அவலை மென்றுகொண்டிருபபார்கள்.

 2. LVISS சொல்கிறார்:

  Since this scheme is optional I dont know why Piyush Goyal is persisting with it except for political reasons— 15 states that have joined the scheme must have weighed all the pros and cons of the scheme before agreeing to join it —-Even states that are doing well have joined the scheme –But the minister should leave it to T Nadu whether to join the scheme or not —

 3. CHANDRAA சொல்கிறார்:

  Thorough desperation of having not received any party in the ensuing election
  have resulted these outbursts from bjp………jaya ji had opposed many
  suggestions?schemes earlier recommended by the centre
  for example entrance exams for proffessional courses/////
  the tamilnadu ministers rejoinder now could have been effectively done
  on earlier occasions by jaya ji herself

 4. SELVADURAI MUTHUKANI சொல்கிறார்:

  தற்போதைய விவாதம் உதய் திட்டம் குறித்தது அல்ல. அ.தி.மு.க. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மத்திய அமைச்சர்களை சந்தித்து அவ்வப்போதைய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்குவது குறித்தே இந்த விவாதம். முதல்வர் விவாதிக்கும் அளவுக்கு இந்த பிரச்சினை முக்கியமில்லை என்றே வைத்துக்கொள்வோம். ஒரு சின்ன அமைச்சராவது தலையிட்டு மத்திய அமைச்சரை சந்தித்து விவாதித்திருக்கலாமே. அப்படிச்செய்தால் அந்த அமைச்சரின் பதவி பறிபோகும் என்பதே உண்மை நிலை. எந்தக் கருத்தும் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு அடிமைத்தனம்!!! யாரையும் சந்திக்க விரும்பாத முதல்வர், பதவியை காப்பாற்றிக்கொள்ள எந்த வேலையையும் செய்யாத அமைச்சர்கள், இவை எல்லாவற்றையும் சப்பைக்கட்டு கட்டும் கட்சித்தலைவர்கள் இவைகளைப்பெற நாம் என்ன தவம் செய்தோமோ!!! திட்டம் குறித்து எங்களுக்கு உடன் பாடு இல்லை எனவே நாங்கள் மத்திய அமைச்சரை சந்திக்க அவசியம் இல்லை என வெளிப்படையாகக் கூறவேண்டியதுதானே.

  • today.and.me சொல்கிறார்:

   நண்ப செல்வதுரை முத்துக்கனி,

   நீங்கள் கேட்டுள்ள கேள்விகள், சந்தேகங்கள் எல்லாவற்றும் பதில் மேலே இடுகையிலேயே இருக்கிறது.

   நமது தலைமையை குறைகூறிவிட்டார்களே, மந்திரி சொன்னதை வைத்து உதய்-யை கிண்டிவிட்டார்களே என்றெல்லாம் பதட்டடத்தில் படிக்காமல் மீண்டும் ஒருமுறை நிதானமாகப் பதிவைப் படிக்கவும்.

   சப்பைக்கட்டு கட்டவேண்டி அவசியம் இந்த விவகாரத்தில் இல்லை.

   இது தமிழர்களுக்கு தேவையில்லாத, பாதகமான திட்டம். இந்தமாதிரியாக மாற்றியமைத்தால் தமிழகத்தில் அனுமதிக்கலாம் என்பது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

  • Bagawan சொல்கிறார்:

   Please read the blog once again and try to understand. Don’t pretend every one in the blog are fools.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப செல்வதுரை முத்துக்கனி,

   //ஒரு சின்ன அமைச்சராவது தலையிட்டு மத்திய
   அமைச்சரை சந்தித்து விவாதித்திருக்கலாமே. //

   //திட்டம் குறித்து எங்களுக்கு உடன் பாடு இல்லை
   எனவே நாங்கள் மத்திய அமைச்சரை சந்திக்க அவசியம்
   இல்லை என வெளிப்படையாகக் கூறவேண்டியதுதானே.//

   —-

   பின்னூட்டம் போடுவதற்கு முன்னர் இடுகையையும்,
   மற்ற பின்னூட்டங்களையும் ஒருமுறைக்கு இருமுறை
   படித்து விட்டு கருத்து சொல்வது நல்லது.

   இல்லையேல் உங்களின் அறியாமை தான் வெளிப்படும்.

   ஏற்கெனவே விஷயம் புரியும்படி
   தெளிவு படுத்தப்பட்டு விட்டது. ஒருவேளை பாஜக
   பக்தர்களுக்கு மட்டும் இந்த மாதிரி விளக்கங்கள்
   புரியாதோ…?

   தமிழக மின் துறை அமைச்சர் தலைமையில் ஒரு
   உயர்மட்ட அதிகாரிகள் குழு, செப்டம்பரிலேயே டெல்லி
   சென்று மந்திரி ப்யூஸ் கோயலுடன் விவரமாக விவாதித்து
   விட்டு வந்து விட்டனர்.

   அதன் அடிப்படையில், தமிழக முதலமைச்சரும் விரிவான
   கடிதம் மூலம், தமிழ்நாட்டின் கொள்கை நிலைப்பாட்டை
   பிரதமருக்கும், மத்திய மந்திரிக்கும் தெரிவித்து விட்டார்.

   இந்த நிலையில் பதிலளிக்க வேண்டியது மத்திய அரசு தான்.

   இந்த தகவல்களை முற்றிலுமாக மூடி மறைத்து விட்டு,
   முதலமைச்சரை சந்திக்க இயலவில்லை என்று மத்திய மந்திரி
   ஏன் கூறுகிறார்…?

   தனது யோசனைகளுக்கு மத்திய அரசிடமிருந்து
   பதில் வரும் வரை மத்திய மந்திரியை சந்திப்பதால்
   எந்த விளைவும் ஏற்படப்போவதில்லை. எனவே,
   முதலில் பதில் வரட்டும் என்று என்று தமிழக முதல்வர்
   கருதி இருக்கலாம்.

   முதலில், தமிழக முதலமைச்சரின் யோசனைகளைப்பற்றி
   மத்திய அரசின் நிலை என்ன என்பதை தெளிவுபடுத்த
   வேண்டும் என்பது தான் அடுத்த நிலையாக இருக்க முடியும்.

   ஆமாம் – 3 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம்
   ஏற்றப்படுவதை, நீங்களும், உங்கள் தலைவர் “வசை”யும்
   ஏற்கத்தயாரா.. ?

   விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுப்பதை
   நிறுத்த வேண்டும் என்கிற நிலையை நீங்கள்
   ஏற்கத்தயாரா ?

   தற்போது, 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும்
   ஏழை, மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு
   subsidy விலையில் மின் இணைப்பு கொடுக்கப்படுவது
   நிறுத்தப்பட வேண்டும் என்கிற நிலையையும் நீங்கள்
   ஏற்கத்தயாரா…?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • ravi சொல்கிறார்:

    மற்ற கருத்து எல்லாம் சரிதான் .. ஆனால்
    //
    விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்கிற நிலையை நீங்கள் ஏற்கத்தயாரா ?
    //
    சார், முதலில் அந்த இணைப்புக்குகளுக்கு மீட்டரே கிடையாது .. வருடா வருடம் விவசாய இணைப்பு அதிகமாகி கொண்டு வருகிறது .. அவ்வளவு பேர் நம் ஊரில் விவசாயம் செய்ய ஆரம்பித்துவிட்டார்களா என்ன ?? .. நான் இருப்பது ஒரு தமிழ் நாட்டில் ஒரு சிற்றுர். இங்கே விவசாய இணைப்பு என்பது வெளி பார்வைக்கு தான். உள்ளூர் ஆட்களை சரி கட்டி ,கடை போன்ற இடங்களுக்கு சர்வ சாதரணமாக கரண்டு இழுப்பார்கள் ..

    500 யூனிட் உபயோகம் என்றால், ஏசி , ஹீட்டர் கண்டிப்பாக இருக்கும் .. வாடகை வீட்டில் இருந்தால், வீட்டு ஓனர் தங்கள் இணைப்பில் கரண்டு கொடுத்து , அதிக விலை உங்களிடம் வாங்குவார். உண்மையான ஏழை வர்க்கம் 300 யூனிட் பயன்படுத்தினால் அதிகம் (இவர்களின் அதிக பட்ச சந்தோசம் டிவி மட்டுமே ).

    //ஆமாம் – 3 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் ஏற்றப்படுவதை, நீங்களும், உங்கள் தலைவர் “வசை”யும் ஏற்கத்தயாரா.. ?
    //
    சார், நாடாளமன்ற தேர்தல் முடிந்த உடன் மின்சார கட்டணம் ஏற்றப்பட்டது .. சட்டசபை தேர்தல் முடிந்த உடன் அடுத்த 2 வருடத்திற்குள் கண்டிப்பாக கட்டணம் உயரும் .. அதுவும் மக்களை பாதிக்கும்..
    அதற்கு ,சிறு அளவில் கட்டணம் உயர்வு கொஞ்சம் கொஞ்சமாக ஏற்ரபட்டால் ,அழுத்தம் கொஞ்சம் குறையும்.. அவ்வளவே ,

    எலக்ட்ரானிக் மீட்டர்களை பொருத்தி , டிரான்ஸ்பார்மர் ஒழுங்காக போட்டு ,திருட்டுகளை குறைத்தால் , இந்த பிரச்னை வராது .. ஆனால் , அது அவ்வளவு சீக்கிரம் நடக்காது .. நடக்கவும் விடமாட்டார்கள் ..

 5. ravi சொல்கிறார்:

  நல்லா தான் பதில் கொடுக்கிறார் .. பல தகவல்களை விட்டு விட்டார்

  உடன்குடி , செயூர் – இரண்டும் டெண்டர் பிரச்னை , கோர்ட் கேஸ் என்று ஓடி கொண்டு இருக்கிறது .
  ATC loss , இதை பற்றி எல்லாம் கண்டுகொள்ளவில்லை போல (22 % நஷ்டம் நம் ஊரில் )
  கட்டண உயர்வை பற்றி எல்லாம் கவலைபடுகிறார்
  ஆனால், 2012, 2014(பாராளமன்ற தேர்தல் முடிந்த பிறகு) ,மின்சார கட்டணம் கிட்ட தட்ட 2 மடங்கு ஏற்றப்பட்டது .
  எப்படியும் 2017,18ல் கட்டணம் ஏற்ற படும் .. ஒரே அடியா ஏற்றுவதற்கு பதில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றிகொள்ளுங்கள்..

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ரவி,

   நீங்கள் தமிழ்நாட்டில்இருந்தால் இப்படி எழுத மாட்டீர்கள்.
   அல்லது வீண் விதண்டாவாதம் செய்கிறீர்கள் என்றே
   கொள்ள வேண்டும்.

   இணைப்பு இல்லாமல் விவசாயிகளுக்கு மின்சாரம்
   எப்படி கொடுப்பார்கள்…?
   நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்… ?
   எங்கேயாவது யாராவது தவறாக பயன்படுத்துகிறார்கள்
   என்பதற்காக, எந்த விவசாயிக்கும் இலவச மின்சாரம்
   கொடுக்கக்கூடாது என்கிறீர்களா ?

   500 யூனிட் என்பது இரண்டு மாதங்களுக்கு….
   ஒரு மாதத்திற்கு – 250 யூனிட்.
   4 பேர் உள்ள நடுத்தர குடும்பத்திற்கு, ஏசியோ, ஹீட்டரோ
   இல்லாமலே இது நிச்சயம் தேவைப்படும்.
   உங்கள் வீட்டில் யார் கரெண்ட் பில் கட்டுகிறார்கள்…?

   எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தும் வேலை எப்போதோ
   துவங்கி 60-70 சதவீதம் பயன்பாட்டாளர் வீடுகளில்
   ஏற்கெனவே வைக்கப்பட்டாகி விட்டது. விரைவில்
   அனைத்து வீடுகளிலும் வந்து விடும்.

   கொஞ்சம் கொஞ்சமாக 3 மாதத்திற்கு ஒரு தடவை
   ஏற்றுவதா அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒரு தடவை
   மொத்தமாக உயர்த்துவதா என்பது தமிழக மக்களால்
   தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசு தீர்மானிக்க வேண்டிய
   விஷயம்.

   எங்கேயோ உட்கார்ந்து கொண்டு,
   தனியார் வங்கிகளுக்கும்,
   பெரும் முதலாளிகளுக்கும் வசதி செய்து கொடுக்கும்
   ப்யூஸ் முடிவெடுக்க வேண்டிய விஷயம் அல்ல.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • ravi சொல்கிறார்:

    சார், என் வீட்டுக்கு நான் தான் பில் கட்டுகிறேன் ..
    1)நான் இருப்பது ஒரு சிறு நகரம் , தமிழ்நாட்டில் . கரண்ட் கட் தினமும் உண்டு ..
    300-400 யூனிட் வருகிறது .. கிணறு மோட்டார் தான் அதிக பிரச்னை,அதிகம் இழுக்கும் .. (எப்படியும் தினமும் 1-2 மணி நேரம் கரண்ட் இல்லை , அது வேறு பிரச்னை ). கணிபொறி பெரிய அளவில் இழுக்கவில்லை ..
    நான் அரசு துறை, it துறை பணக்காரன் கிடையாது .. நடுத்தர வர்க்கம் ,,
    2) விவசாய கனெக்சன் என்பது உங்கள் தோட்டத்தில் உள்ள பம்புசெட் அளவு பொறுத்து லைனில் இருந்து உங்கள் பம்பு செட்டு போர்டுக்கு வரும் .. நம் வீட்டில் உள்ளது போல வாசல் மீட்டர் எல்லாம் கிடையாது .. மீட்டர் வைக்க முயன்றால் தோட்டத்தில் பிரச்னை செய்வார்கள்..மீட்டர் வைத்தாலும் அதன்படி பணம் வசூல் கிடையாது ..
    3) இலவசம் எதற்கு கொடுத்தாலும் அதற்கான விலை உங்கள் தலையில் அல்லது என் தலையில் ஏற்றப்படும் ,வேறு வகையில் ,அவ்வளவே ..
    4) எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தும் வேலை -> சென்னையில், கோவையில்,திருச்சி பெரிய அளவில் நடந்து உள்ளது.. சிறு ஊர்களில் ,கிராமங்களில் இன்னமும் தொடங்கவில்லை,முழுதும் முடிந்தால் மிக நல்லது ..
    அவ்வளவே !! .
    சார், ஊழல் யார் செய்தாலும் தவறு தான். இதில் டெல்லி , சென்னை எந்த வித்தியாசம் கிடையாது .
    இந்த தனியார் முதலாளிகளுக்கு கம்பளம் விரித்து நாம் வரவேற்கிறோம் , தொழில் தொடங்க . இவர்களுக்கு சிறப்பு விலையில் மின்சாரம், அதே தனியார் துறை ஆலைகளில் இருந்து அதிக விலையில் நம் மாநில அரசு உட்பட மின்சாரம் வாங்குகிறார்கள்.இதை பற்றி யாரும் பேச மாட்டார்கள்!! .. (அந்த செலவும் உங்கள் மற்றும் என் தலையில் தான் )

    உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், தாரளமாக இந்த பதில்களை எடுத்து விடலாம் …

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்ப ரவி,

     // கரண்ட் கட் தினமும் உண்டு ..//

     முடிந்தால், இன்றைய ஹிந்து ஆங்கில பதிப்பை எடுத்துப்
     பாருங்கள்….. வலையில் கூட பார்க்கலாம். தமிழ்நாட்டில்
     தினமும் 2000 கி.வா. அதிகமாக மின்சக்தி கிடைக்கிறது.
     இந்த கோடைக்காலம் எந்தவித கரெண்ட் கட் பிரச்சினையும்
     இல்லாமல் கழியும் என்று வயிற்றெரிச்சலோடு
     எழுதி இருக்கிறார்கள்…
     (உங்களுக்கு மட்டும் தனியே கட் பண்ணுகிறார்களோ ..? )

     நீங்கள் சொன்னது –

     //500 யூனிட் உபயோகம் என்றால், ஏசி , ஹீட்டர்
     கண்டிப்பாக இருக்கும் .. //

     இதற்கு நான் எழுதியது –

     //500 யூனிட் என்பது இரண்டு மாதங்களுக்கு….
     ஒரு மாதத்திற்கு – 250 யூனிட்.
     4 பேர் உள்ள நடுத்தர குடும்பத்திற்கு, ஏசியோ, ஹீட்டரோ
     இல்லாமலே இது நிச்சயம் தேவைப்படும்.//

     இப்போது மீண்டும் நீங்கள் எழுதியிருப்பது –

     //300-400 யூனிட் வருகிறது .. //

     நான் சொன்னது உதய் திட்டம் வந்தால்,
     இரண்டு மாதங்களில் 500 யூனிட்டுக்கு குறைவாக
     பயன்படுத்துபவர்களுக்கு subsidy பிடுங்கப்பட்டு விடும்
     என்று. ஆனால், அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட்டதாக
     தெரியவில்லை. வெறுமனே வாதம் செய்கிறீர்கள்….

     நீங்கள் எழுதியது –

     //எலக்ட்ரானிக் மீட்டர்களை பொருத்தி , டிரான்ஸ்பார்மர்
     ஒழுங்காக போட்டு ,திருட்டுகளை குறைத்தால் ,
     இந்த பிரச்னை வராது .. ஆனால் , அது அவ்வளவு
     சீக்கிரம் நடக்காது .. நடக்கவும் விடமாட்டார்கள் ..//

     நான் எழுதியது –

     // எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தும் வேலை எப்போதோ
     துவங்கி 60-70 சதவீதம் பயன்பாட்டாளர் வீடுகளில்
     ஏற்கெனவே வைக்கப்பட்டாகி விட்டது. விரைவில்
     அனைத்து வீடுகளிலும் வந்து விடும்.//

     இதற்கு, மீண்டும் நீங்கள் எழுதியது –

     // எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தும் வேலை ->
     சென்னையில், கோவையில்,திருச்சி பெரிய அளவில்
     நடந்து உள்ளது.. சிறு ஊர்களில் ,கிராமங்களில்
     இன்னமும் தொடங்கவில்லை,//

     இப்படி, ஏட்டிக்குப் போட்டியாக மீண்டும் மீண்டும்
     எழுதிக்கொண்டு போகிறீர்களே தவிர,

     நல்ல கருத்துக்களோடு, இடுகையில் உள்ள பொருள்
     குறித்து சுவாரஸ்யம் குன்றாமல் விவாதம் செய்ய வேண்டும்
     என்பதில் உங்களுக்கு அக்கரை இருப்பதாகத் தெரியவில்லை.

     மீண்டும் மீண்டும் வேண்டாத விவாதத்திலேயே ஈடுபாடு
     காட்டுகிறீர்கள். இத்தகைய விவாதங்கள் இடுகை,
     பின்னூட்டங்களின் சுவாரஸ்யத்தை குறைப்பதாகவே
     இருக்கின்றன.

     //உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால்,
     தாரளமாக இந்த பதில்களை எடுத்து விடலாம் …//

     – என்று என்னிடம் சொல்வதற்கு பதிலாக,
     நீங்களே இப்படி எல்லாம் எழுதுவதை
     தயவுசெய்து தவிர்த்து விடுங்களேன்.

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.