ம. ந. கூட்டணி, வி.காந்த்துடன் ஏன் சேர்ந்தது…? இன்னுமொரு காரணம்….!!!

.

மநகூட்டணி, தேமுதிக வுடன் சேர்ந்தது பற்றி முன்னதாக,
பல காரணங்களைப்பற்றி இந்த தளத்தில் விவாதித்தோம்.

இதுவரை நாம் விவாதிக்காத, ஒரு வித்தியாசமான
கோணத்தைக் காட்டுகிறார் மூத்த பத்திரிகையாளரும்,
விமரிசகருமான திரு.மாலன் அவர்கள்.

அது குறித்து, நேற்று முன் தினம் (04/04/2016) அன்று
தினமணி நாளிதழில் அவர் எழுதியுள்ள ஒரு கட்டுரை கீழே –

————————————————-

ஏன் இந்த சரணாகதி?

ஊருக்கு நடுவே ஒரு நதி. பரந்து கிடக்கும் பசும் வயல்கள். சுற்றிலும் குளங்கள். தொலைவில் முகில்கள் உரசிச் செல்லும் மலை முகடுகள்.

ஊரில் ஒன்பது நிலைகளோடு நெடிதுயர்ந்து நிற்கும் ஒரு பழங்காலச் சிவன் கோயில். அதிலொரு மணி மண்டபம். கல்லெடுத்து அதன் தூண்களில் தட்டினால் இசை உதிரும் அழகான ஊர்தான் களக்காடு.

தீட்டிய திலகம் கலைந்ததைப் போல அதன் வரலாற்றில் சிறிது ரத்தக் கறையும் உண்டு.

அங்கு தலித்களின் குடிசைகளுக்கு அருகில் விரிந்து கிடந்த வயல்களில் பயிர் வேலை செய்து கொண்டிருந்தான் ஒரு கரிய இளைஞன்; 21 வயதிருக்கும். களை பறித்து நிமிர்ந்த போது கண் எதிரே காவல்துறை வந்து நின்றது. எதிர்பார்த்ததுதான்; எனவே, பதற்றமடையவில்லை.

தன்னுடைய தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு வருகிறது; அது இனிச் சிறை வாழ்க்கையாகத் தொடரும் என அந்தக் கம்யூனிஸ்ட்டுக்குத் தெரியும்.

ஆனால், எதிர்பாராதது சித்திரவதை. அள்ளிக் கொண்டு போன காவலர்கள், காவல் நிலையத்தில் அவரைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டார்கள். மீசை முடிகளை ஒவ்வொன்றாக ரத்தம் கசியக் கசியப் பிய்த்தெறிந்தார்கள்.

காரணம்? தேடப்பட்டு வந்த தனது சகாக்களைக் காட்டிக் கொடுக்க
மறுத்ததுதான்.

அந்த இளைஞன் அப்பழுக்கற்ற அரசியல்வாதி என்று இன்று
எல்லோராலும் கொண்டாடப்படும் ஆர்.நல்லக்கண்ணு. அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பியதற்காக சுதந்திர இந்தியாவில் (1952)
தண்டிக்கப்பட்டவர்களில் ஒருவர். அரசால் புனையப்பட்ட திருநெல்வேலி சதி வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்.

வசீகரமான சத்தியங்களோடு மக்கள் நலக் கூட்டணி உருவானபோது அதன் முதல்வர் வேட்பாளராக நல்லக்கண்ணு அறிவிக்கப்பட வேண்டும் என அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆவல் தொனிக்கும் முணுமுணுப்புகள் முளைத்தன. ஆனால், “முதல்வர் வேட்பாளர் என ஒருவரை அறிவிக்கும் நடைமுறையை நாங்கள் ஏற்கவில்லை. தேர்தல் முடிந்து சட்டப் பேரவை உறுப்பினர்கள் அதை முடிவு செய்வார்கள்’ எனக்
கூட்டணியின் தலைமை அறிவித்ததும், அதுவும் சரிதானே என்று அந்தக் குரல்கள் அடங்கிப் போயின.

makkal nala koottani

ஆனால் சில வாரங்களுக்குப் பிறகு, நடிகராகத் தொழில் செய்து, திரையில் பயங்கரவாதிகளைப் பந்தாடி, புள்ளிவிவரங்களால் தன் புலமையை வெளிப்படுத்திய விஜயகாந்த் எங்கள் முதல்வர் வேட்பாளர் என அந்தக் கூட்டணி பிரகடனப்படுத்தியது. தங்கள் கூட்டணியின் பெயரோடு அந்த நட்சத்திரத்தின் பெயரையும் பிணைத்துக் கொண்டது.

அந்தக் கூட்டணி ஏற்கெனவே ஒரு வரைவுச் செயல்திட்டத்தை அறிவித்திருந்தது. அதை நட்சத்திரத் தலைவர் ஏற்றுக் கொண்டதாக ஏதும் அறிவிப்பு வரவில்லை. அவர் ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தார். அது பல துறைகளில் தனியார்மயத்தை வரவேற்றிருந்தது. அதை இடதுசாரிகள் ஆட்சேபித்ததாகத் தகவல் ஏதும் இல்லை.

தனது வரலாற்றுப் பெருமை, தத்துவம் சார்ந்த எளிமையான அரசியல் நடைமுறை, லட்சியங்கள், கொள்கைகள் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு இடதுசாரிகள் விஜயகாந்த் கட்சியோடு கூட்டணி அமைத்துக் கொள்ள ஆர்வம் கொண்டதன் பின்னுள்ள ரகசியம் என்ன? திராவிடக் கடசிகளுக்கான மாற்று அரசியல் என்று அவர்கள் சொன்ன போதிலும் இப்படி ஒரு கூட்டணி உருவானதற்கான அடிப்படைக் காரணம் என்ன?

உண்மையான நோக்கம் ஆட்சியைப் பிடிப்பதல்ல, கட்சியைக் காப்பாற்றுவது. அரசியல் கட்சிகளைப் பதிவு செய்து கொள்வதற்கும், தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் என அங்கீகரிப்பதற்கும் அவற்றுக்குச் சின்னங்களை ஒதுக்குவதற்கும் சில விதிமுறைகளை வகுத்து தேர்தல் ஆணையம் 1968-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி ஓர் ஆணை
வெளியிட்டது.

1997-ஆம் ஆண்டு அந்த ஆணையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. தற்போதுள்ள ஆணை கட்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்க, அளிக்கப்பட்ட அங்கீகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள, சில விதிகளை வகுத்துள்ளது.

ஒரு கட்சி தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்பட குறைந்தது நான்கு
மாநிலங்களில் ஆறு சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன், மக்களவையில் குறைந்தது நான்கு இடங்களையாவது
பெற்றிருக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாவிட்டால், தேசியக்
கட்சியாக அங்கீகரிக்கப்பட இன்னொரு வழியும் உண்டு. மக்களவையில் 11 இடங்களைப் பெற்ற கட்சி (மக்களவையில் உள்ள மொத்த இடங்களில் 2%) தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்படும். ஆனால், அந்தப் 11 இடங்கள்
குறைந்தது மூன்று மாநிலங்களிலிருந்தாவது பெறப்பட்டிருக்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்களவையில் 9 எம்.பி.கள்
இருக்கிறார்கள் (கேரளத்திலிருந்து 5, திரிபுராவிலிருந்து 2, மேற்கு
வங்கத்திலிருந்து 2) அதாவது மூன்று மாநிலங்களிலிருந்து அது
எம்.பி.களைப் பெற்றிருந்தாலும் 11 எம்.பி.களைப் பெறவில்லை. சரி, நான்கு மாநிலங்களில் 6 சதவீத வாக்குகளையாவது அது பெற்றிருக்கிறதா?

2011 சட்டப் பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு வங்கத்தில் பெற்ற வாக்குகள் 30.08%, கேரளத்தில் 28.18%. சரி, இரண்டு மாநிலங்கள் ஆயிற்று. இன்னும் இரண்டு? அங்குதான் சிக்கல். 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் அது தமிழ்நாட்டில் பெற்ற வாக்குகள் 2.4% (அதாவது 6 சதவீதத்திற்கும் கீழ்).

2011-க்குப் பிறகு 2014-ஆம் ஆண்டு தெலங்கானா, மகாராஷ்ட்டிரம், ஒடிஸா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றன. அந்த மாநிலங்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளையே அது பெற்றது. எனவே, வாக்கு சதவீதத்தின் படியும் மார்க்சிஸ்ட் கட்சி தேசியக் கட்சி என அங்கீகரிக்கப்படத் தகுதி பெறவில்லை.

இந்தத் தேர்தலில் அது கேரளத்திலோ, மேற்கு வங்கத்திலோ எத்தனை சதவீத வாக்குகள் பெற்றாலும் மேலும் இரு மாநிலங்களில் 6 சதவீத வாக்குகளைப் பெற்றால்தான் அது தேசியக் கட்சி என்ற அங்கீகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். அந்த வகையில், இந்தத் தேர்தல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முக்கியமானது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை இதைவிட மோசம். அது 2011 தேர்தலில் கேரளத்தில் 8.72% வாக்குகளையும், மேற்கு வங்கத்தில் 1.84%, தமிழ்நாட்டில் 1.97% வாக்குகளையும் பெற்றது. மக்களவையில் கேரளத்திலிருந்து ஒரே ஒருவர் எம்.பி.யாக உள்ளார்.

ஒரு கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமானால் அந்த மாநிலத்திற்கு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலிலோ, மக்களவைத் தேர்தலிலோ 6 சதவீத வாக்குகளையும், குறைந்தது 2 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஒருவேளை, 6 சதவீத வாக்குகளைப் பெறவில்லை என்றாலும், குறைந்தது 3 சதவீத வாக்குகளையும் 3 இடங்களையும் பெற்றிருந்தால் மாநிலக் கட்சி என்ற அங்கீகாரம் கிடைக்கும்.

2011 தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடவில்லை. எனவே, சட்டப் பேரவையில் உறுப்பினர்கள் இல்லை. வாக்கு சதவீதம் பற்றிய பேச்சே இல்லை. 2014 மக்களவைத் தேர்தலிலும் அது போதுமான வாக்கு சதவீதத்தைப் பெறவில்லை. எனவே அங்கீகாரம் என்ற நோக்கில், அதற்கும் இந்தத் தேர்தல் முக்கியமானது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலையும் இதைப் போன்றதுதான். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. 1.5% வாக்குகளைப் பெற்றது. 2014 மக்களவைத் தேர்தலிலும் எந்த இடத்திலும்
வெற்றி பெறவில்லை.

இடதுசாரிகளுக்கும், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய
கட்சிகளுக்கும் அங்கீகாரம் என்ற கோணத்தில் இந்தத் தேர்தல்
முக்கியமானது. பெரிய கட்சிகளோடு கூட்டணி வைத்துக் கொண்டால், அந்தக் கட்சிகள் ஒற்றை இலக்கத்தில், அதிகம் போனால் 20, 25 இடங்கள் மட்டுமே இந்தக் கட்சிகளுக்கு ஒதுக்குகின்றன. அவற்றைக் கொண்டு அங்கீகாரத்திற்குத் தேவையான வாக்கு சதவீதத்தைப் பெற முடியவில்லை.

தனித்துப் போட்டியிட்டால் அதிக இடங்களில் போட்டியிட முடியும்.

வெற்றி பெறாவிட்டாலும் வாக்கு சதவீதங்களை உயர்த்திக் கொள்ளலாம். போட்டியிட அதிகம் பேருக்கு வாக்களிப்பதன் மூலம் கட்சியிலும் பலரை திருப்திப்படுத்தலாம். இந்த நோக்கில்தான் மக்கள் நலக் கூட்டணி உருவாகியிருக்க வேண்டும்.

ஆனால், கடந்த காலத் தேர்தல் அனுபவங்களின் அடிப்படையில், இந்த நான்கு கட்சிகளோடு இன்னொரு வாக்கு வளம் கொண்ட கட்சியும் தேவை என்பதை அவர்கள் உணர்ந்திருக்கக் கூடும். அந்தப் பதற்றத்தின் காரணமாகவே அவை தங்கள் லட்சியங்களையும், பெருமைகளையும் தாற்காலிகமாக மூட்டை கட்டி வைத்து விட்டு நட்சத்திரத் தலைவரைத்
தங்கள் அணித் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

உயிராசை எல்லோருக்கும் இயல்பே அல்லவா?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

22 Responses to ம. ந. கூட்டணி, வி.காந்த்துடன் ஏன் சேர்ந்தது…? இன்னுமொரு காரணம்….!!!

 1. nparamasivam1951 சொல்கிறார்:

  உயிராசை எல்லோருக்கும் இயல்பு தான்!

 2. balumahendran சொல்கிறார்:

  காவிரி மைந்தன் அவர்களே, கடந்த சில மாதங்களாக நீங்கள் திமுக வையும் ம.ந.கூ + விஜயகாந்தையுமே விமர்சித்து வருகிறீர்கள். அதிமுக விற்கு ஒரு அளவுகோலையும் மற்ற கட்சிகளுக்கு ஒரு அளவுகோலையும் வைத்துள்ளீர்கள். It’s just my humble observation.
  அது கிடக்கட்டும். மற்றவர்கள் சொல்வதை எடுத்துப் போடுவது இருக்கட்டும். இந்த தேர்தலில் நீங்கள் எந்த கட்சிய ஆதரிப்பீர்கள்? அதிமுக (அ) திமுக (அ) ம.நே.கூ.+தே.மு.தி.க (அ) நாம் தமிழர் (அ) பா.ஜ.க. (அ) புதிய தமிழகம். ஏன் ஆதரிப்பீர்கள்? கருத்தியல் ரீதியாகவா அல்லது பிராக்டிகல் ரீதியாகவா? Also, You can put a separate post instead of reply.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப பாலுமகேந்திரன்,

   // காவிரி மைந்தன் அவர்களே, கடந்த சில மாதங்களாக
   நீங்கள் திமுக வையும் ம.ந.கூ + விஜயகாந்தையுமே விமர்சித்து
   வருகிறீர்கள். அதிமுக விற்கு ஒரு அளவுகோலையும் மற்ற
   கட்சிகளுக்கு ஒரு அளவுகோலையும் வைத்துள்ளீர்கள்.
   It’s just my humble observation.//

   தனித் தனி அளவுகோல் என்றெல்லாம் ஒன்றுமில்லை.
   எனக்கு மறைப்பதற்கு ஒன்றும் இல்லை….
   வெளிப்படையாகவே சொல்கிறேன் –
   அதிமுக வை நான் விமரிசனத்திற்கே
   எடுத்துக் கொள்வதில்லை என்று சொல்வது
   தான் சரியாக இருக்கும்….!

   // இந்த தேர்தலில் நீங்கள் எந்த கட்சியை ஆதரிப்பீர்கள்? //

   நிச்சயம் என் கருத்தை சொல்வேன்.
   ஆனால், இப்போது என்ன அவசரம் …?

   களத்தில் ஏகப்பட்ட பேர் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்…
   யார் யாரோ கூடுகிறார்கள்…
   யார் யாரோ பிரிகிறார்கள்…
   ஒருவழியாக எல்லாரும் கூடி, ஆடி முடிக்கட்டுமே…
   எல்லார் ஆட்டத்தையும் பார்த்து விட்டு பிறகு
   எழுதினால் போச்சு….!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Antony சொல்கிறார்:

    /எனக்கு மறைப்பதற்கு ஒன்றும் இல்லை….
    வெளிப்படையாகவே சொல்கிறேன் –
    அதிமுக வை நான் விமரிசனத்திற்கே
    எடுத்துக் கொள்வதில்லை என்று சொல்வது
    தான் சரியாக இருக்கும்….!/

    Really???

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்ப அந்தோனி,

     உங்களது இந்த –

     // Really??? //

     எந்த கோணத்தில் எழுதப்பட்டது ? –
     அதற்கான அர்த்தம் என்ன ?
     என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

     நீங்கள் எத்தனை நாட்களாக விமரிசனம் வலைத்தளத்தை
     படித்து வருகிறீர்கள் என்றும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

     தயவுசெய்து தெரிவிப்பீர்களா …?

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

     • Antony சொல்கிறார்:

      I have been following your blog for around six months. Not sure exactly. Before the Chennai floods. I remembered some of your articles criticising ADMK also. You mentioned that you take ADMK out of your criticism. That’s why I put that comment. Sorry if there was any other possible interpretations.

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      Thank you Anthony.

      No problem at all.

      with all good wishes,
      Kavirimainthan

   • selvarajan சொல்கிறார்:

    திரு .கா.மை அவர்களுக்கு : 2009 — ஜூலையில் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை வெளிவந்த இடுகைகளை குறைந்தது ஐம்பது — ஐம்பது பதிவுகளை ” சிறு — சிறு ” மலிவு விலை புத்தகமாக வெளியிட்டால் — நடந்த பல செய்திகளும் — நாட்டின் நடப்புகளும் பலருக்கும் போய் சேரும் … தங்களை பற்றிய பல சந்தேகங்களும் தெளிவாகும் … அல்லவா …. !!!

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     “இசைச் சித்தர்”-ன் அற்புதமான குரலைக் கேட்க
     ஒரு சந்தர்ப்பம் கொடுத்தமைக்கு நன்றி.

     ஓளஷதம் ஒன்றே தான் – “நல் விவேகம்”

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

     • selvarajan சொல்கிறார்:

      அந்த ” ஓளஷதம் ” — உன்னையறிந்தால் — உன்னையறிந்தால் ….. என்பது தானே . !

   • Antony சொல்கிறார்:

    //கொஞ்ச நாள் நமது சட்டமன்றம்
    தொங்கட்டுமே .. யாருக்கும்
    அதிகாரம் இல்லாமல் !

    போகட்டும் …
    இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் ..
    மீண்டும் ஒரு தேர்தல் வரட்டும் ..
    நல்லவர்கள் வரும்போது பார்க்கலாம்.//
    It is from the post mentioned by Selvarajan. From this I have guessed to whom KM will vote. I think you already gave us the hint few days ago. Let me wait and see whether my guess is correct. 🙂
    Selvarajan,
    Thanks for the link.

  • selvarajan சொல்கிறார்:

   நண்பரே … ! தங்களுக்கு நேரம் இருந்தால் : // இந்த தேர்தலில் ……
   Posted on ஏப்ரல் 11, 2011 by vimarisanam – kavirimainthan // என்கிற இடுக்கையை படித்து பாருங்கள் — சென்ற 2011 — சட்டமன்ற தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன் பதிவிட்ட இதில் திரு கா .மை .அவர்கள் ஆணித்தரமாக தனது நிலைபாட்டை சுட்டிக்காட்டி இருப்பார்கள் — புதிதாகவும் — திடீரென்றும் இந்த தளத்திற்கு வரும் பெரும்பான்மையான நண்பர்கள் திரு . கா.மை. அவர்களை ஒரு சிறு வட்டத்திற்குள் திணிக்க படாத பாடு படுவது மாமூலான ஒரு விஷயம் என்பதும் — அவர் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்பதும் தொடர்ந்து வாசிக்கும் நண்பர்களுக்கு — நன்கு புரிந்த — தெரிந்த விஷயம் … படித்து பாருங்கள் … !!!

 3. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  ஓ… உயிராசைதானா?!
  நான் ஏதோ தமிழ்நாட்டை காப்பாத்ததான் இவர்கள் ஒன்று சேர்ந்துட்டாங்களோன்னு நெனைச்சுட்டேன்

 4. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  ” தனது வரலாற்றுப் பெருமை, தத்துவம் சார்ந்த எளிமையான அரசியல் நடைமுறை, லட்சியங்கள், கொள்கைகள் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு இடதுசாரிகள் விஜயகாந்த் கட்சியோடு கூட்டணி அமைத்துக் கொள்ள ஆர்வம் கொண்டதன் பின்னுள்ள ரகசியம் என்ன? “, “ஏன் இந்த சரணாகதி” என்ற தலைப்பு – இது மாலனின் உள் நோக்கத்தைக் காட்டுகிறது. இதே இடது/வலது சாரிகள், கருணானிதியுடன் கூட்டு வைத்துக்கொண்டபோது மட்டும், லட்சியங்கள் கொள்கைகள் எல்லாம் உதறித்தள்ளப்பட வில்லையா? அல்லது திமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டபோது கொள்கைகள் காற்றில் பறக்கவில்லையா? தேர்தல் அரசியலில் வாக்குகள், ஜெயிக்கும் இடங்கள் முக்கியம். இப்போதுள்ள நிலைமையில், திமுக 7+7 அல்லது 10+10 கொடுத்திருக்கும். தா.பா கட்சி திமுகாவுடன் சேர விரும்பவில்லை. அதிமுக இத்தனை இடங்கள் கொடுக்காது. 3+3 கொடுத்தாலே அதிகம். அதனால் அவர்கள் மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்துள்ளார்கள். வாசன் வந்து சேர்ந்தால், மதிமுக 30, வி.சிறுத்தைகள் 20, கம்யூனிஸ்டுகள் 15+15, தமாகா 30 என்று பிரித்துக்கொள்வார்கள்.

  கூட்டணிக்குக் காரணம் தேடுவதும், பிரிவதற்குக் கூறும் காரணத்தைப் பற்றி விவாதிப்பதும் வெட்டிவேலை.

  நடுனிலைப் பத்திரிக்கையாளர்கள், விமர்சகர்கள் என்ற போர்வையில் எழுதும் மாலன், அந்தக்கால மனுஷ்யபுத்திரன், இந்த வார ஆனந்தவிகடனில் கருணானிதியையும் ஜெயலலிதாவையும் ஒப்பிட்டு எழுதியிருக்கும் so called முக்கியஸ்தர்களும் தன் சொந்த விருப்பத்தை, வெறுப்பைப் பிரதிபலிக்கும் வகையில் எழுதக்கூடியவர்கள்.

 5. Tamilian சொல்கிறார்:

  This alliance is for survival. Whether Malan wrote an article on that or not it remains a fact.

 6. Antony சொல்கிறார்:

  Hi KM,
  I know it is not related to the post. Which party or alliance will give a tough competition to ADMK according to your view in current situation.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப அந்தோனி,

   // களத்தில் ஏகப்பட்ட பேர் விளையாடிக்
   கொண்டிருக்கிறார்கள்…
   யார் யாரோ கூடுகிறார்கள்…
   யார் யாரோ பிரிகிறார்கள்…
   ஒருவழியாக எல்லாரும் கூடி, ஆடி முடிக்கட்டுமே…
   பிறகு எழுதினால் போச்சு….! //

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 7. R.Gopalakrishnan சொல்கிறார்:

  A very good analysis

 8. ravi சொல்கிறார்:

  A critical analysis, which many of the people would have missed..

 9. LVISS சொல்கிறார்:

  It is a distant possibility , a hung assembly– But if it does happen it would be interesting to see who will go to whom for forming the ministry — To avoid another elections parties will l”sink” their differences put the blame on the people saying ” people need a government ” and form a govt —

 10. Sella சொல்கிறார்:

  விஜயகாந்த் மக்கள் நல கூட்டணியில் சேர்ந்த போது, இவரால் ம.ந.கூ பாதிக்கும் என்றே நான் நினைத்தேன். அனால் இப்போது வைகோ தான் வி.காந்தை காலி செய்வார் போல தெரிகிறது. என்னுடைய கணிப்பு தோல்விக்கு காரணம் என்று ஒன்று வேண்டுமல்லவா. தேர்தலுக்கு பிறகு இது தெரியும். காமை சொன்னது போல் ஆட்டம் எப்படி போகிறது என்று பார்க்க வேண்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.