கலைஞர் கருணாநிதி குறித்து திரு.பழ.நெடுமாறன் ……


nedumaran-2

கலைஞர் கருணாநிதியின் பழைய சரித்திரங்களையும்,
புதிய நாடகங்களையும் பற்றி மூத்த தலைவர் திரு.பழ.நெடுமாறன்
அவர்கள் 3 நாட்களுக்கு முன்னர், தினமணி நாளிதழில்
தனது கருத்துக்களை விவரமாகக் கூறி இருக்கிறார்.

அவற்றிலிருந்து சில பகுதிகள் –

“காங்கிரசும், தி.மு.க.வும் மதச் சார்பின்மைக் கொள்கையிலே ஆழ்ந்த
நம்பிக்கை கொண்டவை. ஜனநாயகத்திலும், சோசலிசத்திலும் உறுதி
பூண்டவை. அதனால்தான் கொள்கை- செயல் திட்டங்களின் அடிப்படையில்,
நீண்ட காலமாக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வருகின்றன.

காங்கிரசுக்கும், திமு.க.வுக்கும் இடையே நீண்ட காலமாக
நிலவி வரும் நட்பை – உறவைப் போன்றதொரு நேர்த்தியான அரசியல்
நிலையைக் கற்பனை செய்தும் பார்த்திட முடியாது’ என தி.மு.க. தலைவர்
மு. கருணாநிதி 05-05-2016 அன்று சென்னை தீவுத் திடலில்
முழங்கியிருக்கிறார். முரசொலி இதழிலும், உடன்பிறப்புக்கான கடிதத்திலும்
வெளியிட்டிருக்கிறார்.

ஏதோ சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து காங்கிரசு கட்சியும், தி.மு.க.வும்
தோளோடு தோள் நின்று இணைந்து போராடியதுபோல மாயத் தோற்றத்தை
உருவாக்க முயற்சிக்கிறார். 1955-ஆம் ஆண்டு ஆவடியில் காங்கிரசு மாநாடு
நடைபெற்றபோது சோசலிச மாதிரி சமுதாயத்தை அமைப்பதே தனது
இலட்சியம் என காங்கிரசு அறிவித்தது. அப்போது காங்கிரசு சோசலிசம்
இனிக்காது – காகிதப் பூ மணக்காது’ என சுவரொட்டி அடித்து நாடெங்கும்
ஒட்டியது தி.மு.க.

அதுமட்டுமல்ல, காகிதப் பூ என்ற தலைப்பில் காங்கிரஸ் சோசலிசத்தைக்
கிண்டல் செய்து நாடகம் ஒன்று எழுதிய கருணாநிதி, அதில் தானே
காங்கிரஸ்காரர் வேடத்தில் நடித்துக் கடுமையாகச் சாடினார். மதச் சார்பின்மை
மீது நம்பிக்கை இல்லாமல் அதற்கு எதிராகப் பல நடவடிக்கைகளில்
ஈடுபட்டு பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்த கட்சி என அ.தி.மு.க.வை
மறைமுகமாக கருணாநிதி சாடியுள்ளார்.

ஆனால், 1999-ஆம் ஆண்டில் அதே பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டு சேர்ந்து
மத்திய அமைச்சரவையிலும் அங்கம் வகித்ததை வசதியாக மறந்து போனார்
கருணாநிதி.

1980-ஆம் ஆண்டு தேர்தலில் இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ்
கட்சியும் தன்னுடைய தலைமையில் தி.மு.க.வும் கூட்டணி அமைத்துப்
போட்டியிட்டபோது, அந்தத் தேர்தல் பிரசாரத்திற்காக வருகை தந்த
இந்திரா காந்தி அம்மையாரைப் பார்த்து “நேருவின் மகளே வருக!
நிலையானஆட்சியைத் தருக!’ என்று கூறியதை நினைத்து நினைத்துப்
புளகாங்கிதம் அடைகிறார் கருணாநிதி.

ஆனால், 1978-ஆம் ஆண்டில் இந்திரா காந்தி மதுரைக்கு வந்தபோது
அவருக்குக் கருப்புக்கொடி காட்டுவது என்ற பேரில் கொலைவெறித்
தாக்குதலை தி.மு.க.வினர் நடத்தியதை மறைத்துவிட்டார்.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த பிரதமரோ, அமைச்சர்களோ வரும்போது
குறிப்பிட்ட பிரச்னைகளில் தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்வதற்காக
எதிர்க்கட்சிகள் கறுப்புக்கொடி காட்டுவது ஏற்றுக்கொள்ளப்பட்ட
சனநாயக மரபாகும்.

ஆனால், இந்திரா காந்தி எந்தப் பதவியிலும் இல்லாத வேளையில்
மதுரைக்கு வந்தபோது, கறுப்புக் கொடி என்ற பெயரில் கொலைவெறித்
தாக்குதலை தி.மு.க. நடத்தியது எத்தகைய சனநாயக
நெறிமுறைகளுக்குள்பட்டது என்பதை அவர் தான் விளக்க வேண்டும்.
காங்கிரசுக்கும், தி.மு.க.வுக்கும் இடையே நிலவிவரும் நட்பை –
உறவைப் போன்ற நேர்த்தியான அரசியல் நிலைப்பாடு என கருணாநிதி
கூறியிருப்பது இந்த நிகழ்ச்சியைத்தான் போலும்.

“அ.தி.மு.க. ஆட்சியில் சோசலிசம் கேலிப் பொருளாக்கப்பட்டுவிட்டது.
அமைச்சர்களும், அ.தி.மு.க.வினரும் மக்கள் நலனுக்கு சென்று
சேரவேண்டிய பொது நிதியைக் கொள்ளையடித்துக் கோடிகோடியாகக்
குவித்துக் கொண்டார்கள். அவர்களுக்கும் அவர்களின் தலைவிக்கும் சோசலிசச்
சிந்தனை துளியளவுக் கூட கிடையாது’ என கருணாநிதி கூறியிருக்கிறார்.
ஏதோ இவரும், இவரது அமைச்சர்களும் கட்சி நிர்வாகிகளும் ஊழலே
செய்யாத உத்தமர்கள் போல சித்திரிக்கிறார்.

இந்தியாவிலேயே, ஏன் உலகத்திலேயே மிகப் பெரிய ஊழலான 2ஜி ஊழலில்
சிக்கி இவரது மகளும், மனைவியும், அமைச்சராக இருந்த ராசாவும்
மற்றவர்களும் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டிருப்பதையும், இவரது
அமைச்சர்கள் பலர் தங்கள் மீது போடப்பட்ட ஊழல் வழக்குகளுக்காக
நீதிமன்றங்களின் படிகளில் ஏறிஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும்
நாடறிந்த உண்மையாகும்.

உயர்குழுவில் தான் கோரிக்கை வைத்ததும், வங்கிகளைத் தேசியமயமாக்கும்
சோசலிச நடவடிக்கையை மேற்கொண்டவர் இந்திரா காந்தி என
கூசாமல் கூறியிருக்கிறார் கருணாநிதி.

காங்கிரசோடு தி.மு.க. கூட்டுசேருவதற்குப் பல ஆண்டுகளுக்கு
முன்னாலேயே 1967-ஆம் ஆண்டில் காங்கிரசு செயற்குழுவில் காங்கிரசு
தலைவராக இருந்த காமராசர் கொண்டுவந்து நிறைவேற்றிய
பத்து அம்சத் திட்டத்தில் ஒன்றுதான் வங்கிகளைத் தேசியமயமாக்குதல்
என்பதாகும்.

1969-ஆம் ஆண்டில் 14 வங்கிகளை இந்திரா காந்தி தேசியமயமாக்கினார்
என்பது வரலாற்றுப்பூர்வமான உண்மையாகும்.

ஆனால், அதற்கு இரண்டு ஆண்டுகள் கழித்துதான் அதாவது
1971-ஆம் ஆண்டில் காங்கிரசுடன் தி.மு.க. தேர்தல் உறவு கொள்கிறது.
1969-ஆம் ஆண்டில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதற்கு தனது
கோரிக்கைதான் காரணம் என்று பச்சை பொய்யை கூசாது கூறும் துணிவு
கருணாநிதிக்கு மட்டுமே உண்டு.

சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் தமிழகத்திற்கு
அளித்துள்ள திட்டங்கள் இதுவரை தமிழகம் பெற்றிராத மகத்தான திட்டங்களாகும்.
நான் கோரிக்கை வைத்தவுடன் தமிழ்மொழியைச் செம்மொழியாகப் பிரகடனப்படுத்த
நடவடிக்கை எடுத்தவர் சோனியா. நான் கேட்டதும் சேது சமுத்திரத் திட்டத்திற்கு
ஒப்புதல் தந்தது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாகும் என்று கூறி நீண்டதொரு
பட்டியலை வெளியிட்டு காங்கிரசு கட்சிக்கும், தி.மு.க.வுக்கும் உள்ள உறவுக்குச்
சான்றாகக் காட்டியிருக்கிறார் கருணாநிதி.

அதேவேளையில், அவருடைய வாரிசு ஸ்டாலின் மதுரையில் ராகுல்
காந்தியுடன் ஒரே மேடையில் பேசும்போது, ஒட்டிப் பிறந்தப் பிள்ளைகளைப்
பிரிப்பது என்பது கடினமானது. அதைப்போல இணைப்பிரியாத தோழர்களைப்
பிரிப்பதும் கடினமானது.

அதனால்தான் நாங்கள் இருவரும் இன்று இணைந்து இந்த மேடையில்
சந்திக்கக் கூடிய வாய்ப்பினைப் பெற்றிருக்கிறோம். தி.மு.க.வும்,
காங்கிரசும் ஒன்றுசேர்ந்து நாட்டிற்கு எத்தனையோ திட்டங்களை,
எத்தனையோ பணிகளை, எத்தனையோ சாதனைகளை
நிறைவேற்றியிருக்கின்றன என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால், யாராலும் பிரிக்க முடியாத இந்த நட்புறவு சென்ற
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக படக்கென முறிந்துபோனது ஏன்?
“கூடா நட்பு கேடு தரும்’ என்று கூறி காங்கிரசு கூட்டணியிலிருந்து
தி.மு.க. விலகியது.

2009-ஆம் ஆண்டு நடைபெற்ற ஈழத் தமிழர்கள் படுகொலைக்கும் மற்றும்
அனைத்துக் கொடுமைகளுக்கும் காங்கிரஸ் மீது பழியைச் சுமத்திவிட்டு
தன்னைக் காப்பாற்றிக்கொள்ள திமுக முயற்சி செய்தது.

ஆனால், தமிழக மக்கள் காங்கிரசையும், தி.மு.க.வையும் தண்டித்தார்கள்.
காங்கிரசுக் கட்சி ஒரேயொரு தொகுதியைத் தவிர தான் போட்டியிட்ட மற்ற
இடங்கள் அனைத்திலும் பொறுப்புத் தொகையைப் பறிகொடுத்தது.
தி.மு.க. அத்தனை இடங்களிலும் படுதோல்வியைச் சந்தித்தது.

ஈழத் தமிழர் படுகொலைக்கு காங்கிரசும் அதற்குத் தோள் கொடுத்துத்
துணைநின்ற தி.மு.க.வுமே காரணம் என்பதை நன்குணர்ந்த தமிழ் மக்கள்
இரு கட்சிகளையும் தண்டித்தார்கள்.

காங்கிரசும், தி.மு.க.வும் ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிறவிகள் என
தந்தையும் மகனும் நாடகமாடுகிறார்கள். 1949-ஆம் ஆண்டில் தி.மு.க.வை
அண்ணா அவர்கள் தொடங்கியதிலிருந்து 1967-ஆம் ஆண்டில் ஆட்சிபீடம்
ஏறிய காலகட்டம் வரை காங்கிரசு கட்சியை எதிர்த்தே அண்ணா அரசியல்
நடத்தினார். ஒருபோதும் காங்கிரசுடன் நட்புறவு கொண்டாடவில்லை.

ஆனால், அண்ணா அவர்களின் மறைவிற்குப் பின்னால் 1971-ஆம் ஆண்டு
காங்கிரசு கட்சியோடு கருணாநிதி உறவு வைத்துக்கொண்டார்.
காங்கிரசு எதிர்ப்புணர்வோடு வளர்ந்த கட்சியான தி.மு.க.வை
காங்கிரசிடமும் பிறகு பா.ஜ.க.விடமும் அடகு வைத்து தனது ஊழல்
ஆட்சிக்கு எந்தவிதமான ஆபத்தும் வராமல் காப்பாற்றிக் கொள்ளலாம்
என கனவு கண்டவர் கருணாநிதி.

ஆனால், 1975-ஆம் ஆண்டில் அவசர நிலை காலத்தில் அவரது ஆட்சி
பிரதமர் இந்திரா காந்தியால் பதவி நீக்கம் செய்யப்பட்டது. கருணாநிதி
மற்றும் அவரது அமைச்சர்கள் செய்த ஊழல் குறித்து விசாரணை நடத்த
சர்க்காரியா விசாரணை ஆணையத்தை மத்திய காங்கிரசு ஆட்சி நியமித்தது.
தி.மு.க. தோழர்கள் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு
பல கொடுமைகளுக்கு ஆளானார்கள்.

ஆனாலும் அதையெல்லாம் மறந்து
1980-ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரசோடு உறவு வைத்துக்கொள்ள
கருணாநிதி தயங்கவுமில்லை, வெட்கப்படவுமில்லை. காங்கிரசு கட்சி
இனி தேறாது என அவர் நினைத்த போது பா.ஜ.க.வுடன் கூட்டுசேர
அவர் தயங்கியதே இல்லை.

காங்கிரசோடும், பா.ஜ.க.வோடும் மாறி மாறி கூட்டணி வைத்துக்கொண்டு
மத்திய ஆட்சியில் தனது அமைச்சர்களை இடம்பெறச் செய்த
கருணாநிதியினால் தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளுக்குப் பரிகாரம்
காண முடியவில்லை.

காவிரி, பெரியாறு ஆற்றுநீர்ப் பிரச்னைகள், ஈழத் தமிழர் பிரச்னை
போன்றவற்றில் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க இந்த நட்புறவை
பயன்படுத்துவதைவிட

தனது ஊழல்களை மூடி மறைக்கவும்,
அவற்றின் மீது நடவடிக்கை எடுக்காமல் தடுக்கவுமே இந்த நட்புறவை
கருணாநிதி பயன்படுத்திக் கொண்டார் என்பது நாடறிந்த உண்மை.

காங்கிரசும், தி.மு.க.வும் அவ்வப்போது கொண்டிருந்த உறவு “அற்ற குளத்து
அறுநீர்ப் பறவைஉறவு’ போன்றதாகும். குளத்தில் நீர் இருக்கும் வரை
நீர்ப்பறவைகள் இரைத்தேடி குளத்துக்கு வரும். குளம் வற்றிப்போனால்
பறவைகள் பறந்து போய்விடும். அதைப்போல இந்த இரு கட்சிகளும்
தேர்தலில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக நினைத்து கூட்டு சேர்ந்திருக்கின்றன.
தேர்தலுக்குப் பிறகு உண்மை புரியும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.