வக்கீல்கள் என்ன விசேஷ பிறவிகளா ….?

09TH_COURT_PHOTO_1203067f

நீண்ட நாட்களாக நிலவி வந்த ஒரு அசிங்கமான கலாச்சாரத்திற்கு,
கடந்த மே, 20-ந்தேதி வெளியிட்ட உத்திரவுகளின் மூலம்
ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

Advocates Act, 1961-ன், பிரிவு 34-ல் உயர்நீதிமன்றங்களுக்கு
அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழ்நாட்டின்
நீதிமன்றங்களில் பணியாற்றும் வக்கீல்களின் ஒழுங்குமுறை
நடத்தை விதிகள் சம்பந்தமாக சில முக்கிய சீர்திருத்தங்களை உருவாக்கி,

நீதிமன்றங்களின் கண்ணியத்தை காப்பாற்றவும், வழக்கறிஞர்களின்
செயல்முறைகளை ஒழுங்குபடுத்தவும் வழிவகை செய்திருக்கிறது.

(Advocates Act, 1961
————————-

Rule 34 – Power of High Courts to make rules –
(1) The High Court may make rules laying down the
conditions subject to which an advocate shall be
permitted to practice in the High Court and
the Courts subordinate thereto – )

இந்த புதிய விதிமுறைகளின் கீழ் –

நீதிபதியின் பெயரைச் சொல்லி பணம் பெறுவது,
நீதிமன்ற உத்திரவுகள், ஆவணங்களை மாற்றுவது,
நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு எதிராக
தகாத வார்த்தைகளை பயன்படுத்துவது,
நீதிபதிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது,
நீதிமன்றத்துக்குள் ஊர்வலங்கள் போவது,
முழக்கங்களை எழுப்புவது,
வழக்காடுபவர்கள் தாக்கப்படுவது,
நீதிபதிகளின் சாதியைக் கூறி வழக்கு மாற்றம் கேட்பது –

– என்பது போன்ற அசிங்கங்களை சில ரவுடி வக்கீல்கள்
அரங்கேற்றுவது இனி நடக்காது.

இந்த விதிமுறைகளை மீறும் வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்றம்
மற்றும் கீழமை நீதிமன்றங்களில் ஆஜராவதற்கு –
நிரந்தரமாகவோ, அல்லது நீதிமன்றம் முடிவு செய்யும் காலம்
வரையிலோ – தடை விதிக்க புதிய சட்டவிதிகள்
வழிவகை ஏற்படுத்தியுள்ளன.

இந்த சட்ட விதிகளை மீறும் வழக்கறிஞர்கள் மீது, நீதிமன்றம்
தாமாகவே முன்வந்து, வழக்கை பதிவு செய்து, விசாரித்து
தண்டனை அளிக்க புதிய விதிகள் வழி செய்கின்றன.

இதற்கு முன்னர் இருந்த நடைமுறைகளின்படி –
வழக்கறிஞர்கள் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடும்போது,
உயர்நீதிமன்றம் அவர்கள் மீது எத்தகைய நடவடிக்கையையும்
எடுக்க முடியாது. அதிக பட்சம், பார் கவுன்சிலுக்கு புகார் தான்
அனுப்ப முடியும். பார் கவுன்சில் தான் அதை விசாரித்து
நடவடிக்கை எடுக்கும். ( எந்த காலத்தில்….இது நடந்திருக்கிறது…? )

———–

இந்த புதிய சட்ட விதிகளை எதிர்த்து, சென்னை பார் கவுன்சில்,
மற்றும் வழக்கறிஞர் சங்கங்கள் தீவிரமாக போராடப்போவதாக
அறிவித்துள்ளன.

இந்த விதிகள் அவர்களுக்கு எந்த விதத்தில் அநீதி இழைக்கின்றன
என்பது பொது மக்களுக்கு புரியவில்லை.

பல சமயங்களில் நீதிமன்ற வளாகங்களில்,
சில ரவுடி வழக்கறிஞர்களால், அரங்கேற்றப்படும் ரவுடித்தனங்களை
கண்டு மக்கள் நொந்து போயிருக்கிறார்கள். இவர்களை கட்டுப்படுத்த
யாராலும் முடியாதா என்று பத்திரிகைகள் பலமுறை கேள்வி
எழுப்பியுள்ளன….

சுதந்திர போராட்ட காலத்தில், நாட்டிற்காக தங்கள் வாழ்க்கையையே
அர்ப்பணித்த பல தலைவர்களும், இயல்பில் வழக்கறிஞர்களாகவே
இருந்தனர். தங்கள் தொழிலையோ, வருமானத்தையோ பற்றி
சிறிதும் கவலை கொள்ளாமல் – நாட்டிற்காக உழைத்த உத்தமர்கள்
அவர்கள்.

அப்படிப்பட்ட, மிகவும் மதிக்கப்படும் ஒரு புனித தொழிலாக
வழக்கறிஞர் தொழில் இருந்தது போய் – இன்று வேறு எந்த படிப்பிற்கும்
தகுதி இல்லாதவர்கள் தான் சட்டக்கல்லூரிகளில் சேர்ந்து,
வக்கீல் ஆகிறார்கள் என்கிற அவல நிலை உருவாகி இருக்கிறது.

தானாகத் திருந்த வாய்ப்பில்லாத இந்த சமூகத்தை,
கடுமையான சட்டங்களின் மூலம் தான் திருத்த வேண்டும்
என்கிற நிலை நீதிமன்றங்களுக்கே உருவாகியுள்ளது.

பொதுமக்களின் முழு அங்கீகாரமும், ஒத்துழைப்பும்
இந்த விவகாரத்தில், நீதிமன்றங்களுக்கு உண்டு. ஒரு கௌரவமான
சூழல், நீதிமன்றங்களில் இனியாவது ஏற்பட வேண்டுவோம்.

———————————————————————-

பின் குறிப்பு –

பொதுவாக வழக்கறிஞர்கள் மீது எனக்கெதுவும்
வெறுப்பு கிடையாது. மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய
எத்தனையோ பேர் இந்தத் துறையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அவர்கள் மீது என்றும் எனக்கு மரியாதை உண்டு.

வழக்கறிஞர் தொழிலை மேற்கொள்ளாவிடினும்,
ஆசைப்பட்டும், ஆர்வமாகவும் – சட்டம் படித்தவன்
என்கிற முறையில் இன்றைய சூழலைக்கண்டு
நொந்துபோய் தான் இந்த இடுகையை எழுதுகிறேன்….

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to வக்கீல்கள் என்ன விசேஷ பிறவிகளா ….?

 1. vignaani சொல்கிறார்:

  ஒரு முறை நீதி மன்றதுக்குள்ளே , வழக்கு துவங்க இருக்கையில், நீதிபதி அமர்ந்திருக்கையிலே, சு. சுவாமி (ஏதோ ஒரு நாலணா கேசில், மனுதாரர்) மேல் முட்டையை எறிந்தார்கள். நீதிபதி இதற்கு சாட்சி. ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.(சு.சுவாமி என்னென்ன உளறினார், அவருக்கு ஒரு முட்டை இல்லை நூறு முட்டைகளை அடிக்கலாம் என்று பின்னூட்டப் புலிகள் சொல்லலாம் ; இது அவரைப் போற்றியோ, ஆதரித்தோ அல்ல:; நீதிமன்றத்துக்குள் ரௌடித்தனம் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்று சுட்ட)

 2. Tamilian சொல்கிறார்:

  It is a welcome post. I agree with it in full. Of late TN has become a den of rowdy advocates who practice goondaism in the garb of advocates. The pity was , the judges were simple witnesses to the hooliganism. In fact Mr. Chandrachud, who came after 2009 lathicharge in High court called the advocates as hooligans only. This new act gives power to judges and such hooligans could be stripped of their power to act as advocates and could be debarred. I welcome it and it should have been done much earlier.

 3. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  இந்த வக்கீல்கள்தானே நாளைய நீதி அரசர்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். வழக்கறிஞர்களை கட்டுப்படுத்த கொண்டுவந்த சட்டத்தைபோல நீதிபதிகளை கட்டுப்படுத்த ஏதேனும் வழியுள்ளதா?
  இன்று moral என்பது நம்மைவிட்டு மறைந்துவிட்டது என்பதே உண்மை. எனவேதான் எந்த professional-லிலும் நேர்மை இல்லாமலாகிவிட்டது.
  திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதற்கு வழக்குரைஞர் தொழிலுக்கும் பொருந்தும்.

 4. ANT சொல்கிறார்:

  ஒருதலைப்பட்டது.
  //நீதிபதியின் பெயரைச் சொல்லி பணம் பெறுவது,// அப்படி நீதிபதி பெற்றால் அதற்கு என்ன தீர்வு.
  //நீதிமன்ற உத்திரவுகள், ஆவணங்களை மாற்றுவது,// நீதிமன்ற உத்திரவுகள் ஆவணங்கள் உரிய பாதுகாப்பு இல்லாது வைக்கும் நீதிபதிகள் அல்லது நீதித்துறை அதிகாரிகளுக்கு என்ன நடிவடிக்கை எடுக்கப்படும்.
  //நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு எதிராக
  தகாத வார்த்தைகளை பயன்படுத்துவது,// விசாரனையின் போது வழக்கு தொடுத்தவர்களை கருத்து என்ற பெயரில் மிரட்டல் விடுவதை என்ன செய்வது.
  //நீதிபதிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது,
  நீதிமன்றத்துக்குள் ஊர்வலங்கள் போவது,
  முழக்கங்களை எழுப்புவது,
  வழக்காடுபவர்கள் தாக்கப்படுவது,// தீர்ப்புகளில் ஆதரங்கள் இல்லை என்று விடுதலை செய்யப்படும் நிலையில் வழக்கை சந்தித்தவர்களுடைய நிலையை ஏன் கவணிக்கப்படுவதில்லை நீதிபதிகளுக்கு மட்டும் ஆதாரம் தேவை என்றால் நீதிமன்றத்தில் நடக்கும் ஒவ்வொரு வழக்குக்கும் அது பொருந்துமே!
  //நீதிபதிகளின் சாதியைக் கூறி வழக்கு மாற்றம் கேட்பது// சாதி அடிப்படையில் வழக்குகள் தொடுக்கும் போது பாரபட்சமற்ற வகையில் வழக்கு விசாரனை நடக்க வேண்டும் என்று கேட்க கூடாது என்பது எந்த வகையில் நியாயம்.
  ஒரு அரசு ஊழியன் தவறு செய்தால் அதிகாரியிடம் புகார் செய்யலாம். அவர் தவறு செய்யதால் மேல்அதிகாரியிடம் புகார் செய்யலாம். அங்கும் தவறு செய்தால் அரசிடம் புகார் செய்யலாம். அவர்களும் தவறு செய்தால் நீதிமன்றத்தில் முறையிடலாம். குமாரசாமிகள் போல் தவறு செய்யதால் யாரிடம் புகார் செய்யமுடியும். வேறு யாரும் வழக்கில் தலையிடக் கூடாது என்று ”தனியாக” விசாரிக்கபடாதா? என்ன.
  ஊழலில் ”உயர், உச்ச” என்பதொல்லாம் மன்றங்களில் தான் …

 5. selvarajan சொல்கிறார்:

  // சரித்திரத்தையே மாற்றக்கூடிய தீர்ப்பு ….!!! வாழ்த்துக்களும், பாராட்டுகளும்….!
  Posted on ஒக்ரோபர் 7, 2015 by vimarisanam – kavirimainthan // அய்யா … ! இந்த இடுக்கையில் இந்த தீர்ப்பில் கூறியிருந்த அனைத்தும் தற்போது நடைமுறைக்கு வந்து விட்டதா … ? … அடுத்து ” தலீவரு ” எப்போது தன்னை கொஞ்சம் ஆசுவாசபடுத்திக் கொண்டு — ஆறுதல் அடைவார் … ? // தேர்தல் ஆணையத்திலும் அயோக்கியர்கள் இருக்கிறார்கள்: கருணாநிதி கடும் தாக்கு
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/ec-was-acting-at-behest-jayalalithaa-karunanidhi-255213.html // …. பல தேர்தல்களில் தி.மு.க. தோற்கும் போதெல்லாம் வழக்கமாக தேர்தல் ஆணையத்தை குறை சொல்லும் இவர் — இந்த முறை ” மிக அதிகமாக ” தேர்தல் முடிந்ததில் இருந்து இன்றுவரை விடாமல் தினமும் ஆணையத்தை — பகிரங்கமாக குற்றம் சாட்டிக் கொண்டே இருப்பதற்கு எந்த வித ” அவதூறு ” நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன் .. ? கலைஞர் அவர்களிடம் பயமா .. ? இந்த பொதுக் கூட்ட மேடையில் — மோடிஜி ஜெயாவுக்கு வாழ்த்து சொன்னதை மையப் படுத்தி // எவ்வளவு சூது டெல்லியில் இருந்து மோடியால் நடத்தப்பட்டு இருக்கிறது என்பதை நான் பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன்.// — என்று கூறியுள்ளது எத்தகையது … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   கவலை வேண்டாம்….

   இது குறித்து, கலைஞரை
   திருமதி தமிழிசை ” உரிய ” முறையில்
   கவனித்துக் கொள்வார்….!!!

   நாம் தள்ளியிருந்து பார்த்தாலே போதுமானது…!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. செங்கொடி சொல்கிறார்:

  உண்மை நிலையை உணராத பதிவு.

  நீதிபதிகளுக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் என்ன? ஒரு நீதிபதி எப்படி வேண்டுமானாலும் தீர்ப்பு சொல்லலாம், அது காசுக்காகத்தான் என அப்பட்டமாக தெரிந்தாலும் அமைதியாக இருக்க வேண்டுமா? நீதிபதிகளுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றால் அதன் பொருள் என்ன? மதுரையில் நீதிபதிகளின் ஊழலுக்கு எதிராக வழக்குறைஞர்கள் பேரணி சென்றது தான். ஆதாரம் என்றால் என்ன? பணம் வாங்கும் போது வீடியோ எடுத்துக் காட்ட வேண்டுமா? குமாரசாமி வழங்கிய தீர்ப்பு பணத்துக்காக வழங்கிய தீர்ப்பு என்பதற்கு ஆதாரம் வேண்டுமா? அல்லது ஆதாரம் இல்லை என்றால் குமாரசாமி நேர்மையாக தீர்ப்பு கூறினார் என்றாகிவிடுமா?

  நீதிபதிகளின் வக்கிரங்களைப் பட்டியலிட்டால் ஏடு தாங்காது. வழக்குறைஞர்கள் அனைவருமே நேர்மையாளர்கள் என யாரும் சொல்ல வரவில்லை. யார் மீது தவறிருக்கிறதோ? எது தவறோ அதற்கு எதிராக விசாரணை செய்து தண்டனை கொடுக்கட்டும் யாரும் மறுக்க மாட்டார்கள். மாறாக யாரோ சிலர் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டி, நீதிபதிகளுக்கு எதிராக யாரும் பேசக் கூடாது, போராடக் கூடாது என்பது நீதி மன்றத்தின் மாண்பை காப்பதற்காகவோ, வழக்குறைஞர்களின் நன்னடத்தையை உறுதி செய்வதற்காகவோ அல்ல. மாறாக புழுத்து நாறிப் போயிருக்கும் நீதிபதிகளின் ஊழல்களை மறைப்பதற்காகவே.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   உண்மையை முற்றிலுமாக
   தெரிந்து வைத்திருக்கும் செங்கொடித் தோழரே –

   எனக்கு ஒன்றும் தெரியவில்லை என்று
   சான்றிதழ் கொடுத்ததற்கு நன்றி.

   ஆனால், போக்கிரி வக்கீல்களுக்கு ஆதரவாக
   செங்கொடி கிளம்பியிருக்கும்
   புதிய அதிசயத்தை இங்கே தான் காண்கிறேன்.

   வக்கீல்களை போராடக்கூடாது என்று நான் சொல்லவில்லை….
   அநீதிக்கு எதிராக போராட வக்கீல்களுக்கு வேறு இடமா இல்லை…?
   கோர்ட் வளாகம் தான் கிடைத்ததா …?

   கட்சிக்காரர்களின் செலவில் வக்கீல்கள் போராட்டம் நடத்துவதை
   செங்கொடி ஆதரிக்கிறதா…? கட்சிக்காரர்கள் அலைக்கழிக்கப்படுவது
   செங்கொடிக்கு சம்மதம் தானா…?

   நீங்கள் சொல்லி விட்டால் போதும் – ஆதாரமே
   தேவை இல்லையென்றால், யார் வேண்டுமானாலும்,
   யார் மீது வேண்டுமானாலும், எத்தகைய குற்றச்சாட்டை
   வேண்டுமானாலும் அள்ளி வீசலாமே……?
   ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை கூறலாம் என்பதை
   உங்கள் கட்சி கொள்கை முடிவாக ஏற்கிறதா ?

   கு…….சாமி பணம் வாங்கினார் என்று நீங்கள் சொன்னால் –
   கு…….ஹா பணம் வாங்கினார் என்று இன்னொரு தோழர் சொல்கிறார் –
   இதில் யார் சொல்வதை ஏற்பது ?
   செங்கொடி சொல்வது மட்டும் தான் சரியோ ..?

   செங்கொடித் தோழர்கள் இதுவரை சட்டமன்றத்திலோ,
   பாராளுமன்றத்திலோ, எந்த நீதிபதியின் மீதாவது
   ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறி இருக்கிறார்களா…?
   ஏன் கூறவில்லை ?

   எந்தவித நடைமுறைகளோடும் ஒத்துபோகாத,
   போக்கிரி வக்கீல்களை ( போக்கிரிகளை மட்டும் தான்
   சொல்கிறேன் – அத்தனை வக்கீல்களையும் சொல்லவில்லை…)
   கட்டுப்படுத்த உயர்நீதிமன்றங்கள் உரிய சட்டவிதிமுறைகளை
   ஏற்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்திரவிட்டதன்
   பேரில் தான் சென்னை உயர்நீதிமன்றம் இதைச் செய்திருக்கிறது
   என்கிற உண்மையாவது செங்கொடிக்கு தெரியுமா…?

   போராட வேண்டுமென்றால் – தெம்பிருப்பவர்கள்,
   டெல்லிக்கு போய் உச்சநீதிமன்ற வளாகத்தில்
   போராடிப் பார்க்கட்டும்…. வருவதை அனுபவிக்கட்டும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 7. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! எந்த ஒரு நீதி குறித்தான செய்திக்கும் — பலரும் ” குமாரசாமியை ” மட்டுமே துணைக்கு அழைத்துக் கொள்வது ஏன் என்று புரியவில்லை — குன்ஹாவை குறிப்பிட ஏன் தயங்குகிறார்கள் — என்பது பிடிபடாத ஒரு விஷயம் — குன்ஹா கொடுத்த தீர்ப்பு ரொம்ப சரியோ … இவர்களின் கோணத்தில் ..? பல அடுக்கு நீதிமன்றங்கள் தேவையில்லை அல்லவா — ஒரு நீதிமன்றம் — ஒரு தீர்ப்பு என்னும் நடைமுறை சாத்தியமா ..? மேல் முறையீடு இல்லாமல் செய்து விடலாமா .. சட்டத்தில் .. ? ஒரு நீதிபதியின் தீர்ப்பில் நிரபராதி தண்டனை பெறுவது ஏற்புடையதா … ? ஏகப்பட்ட கேவிகள் — பதில் … ?

 8. ANT சொல்கிறார்:

  //எந்த ஒரு நீதி குறித்தான செய்திக்கும் — பலரும் ” குமாரசாமியை ” மட்டுமே துணைக்கு அழைத்துக் கொள்வது ஏன் என்று புரியவில்லை // குமாரசாமி ஊரந்தவர் என்பதால் எடுத்துக்காட்டு எளிதாகிறது.
  மதுரையில் ஊழல் நீதிபதி பட்டியல் வெளியிட்டதற்காக வக்கீல்கள் சங்க நிர்வாகியை சென்னைக்கு அழைத்து விசாரனை என்ற பெயரில் மிரட்டியது பின்னர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நீதிபதி மாவட்ட ஆட்சியர்மீதே நடவடிக்க எடுக்க உத்தரவிட்டபின் விசாரானை செய்து நடவடிக்கை எடுத்தது ஊழல் நீதிபதிகளுக்கு கிடைத்த சட்டபாதுகாப்பு அடிப்படையில்தானே. ஒரு நீதிபதி ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானபோது பாராளுமன்றத்தின் விசாரிக்கபட இருந்தநிலையில் பதவி விலகிபோனாரே எவ்வாறு? இவை அனைத்தும் பனிக்கட்டியின் முனையளவுதானே. காராணம் யாருக்கும் இல்லாத சட்டப்படியான ஊழலுக்கு பாதுகாப்பதுதானே!

 9. ANT சொல்கிறார்:

  ஒரு நீதிபதியின் தீர்ப்பில் நிரபராதி தண்டனை பெறுவது ஏற்புடையதா … ? நீதிபதிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்பது எந்தவகை நியாயம்.? அவர்கள் ஊரில் உள்ள அனைவரையும் அவர்கள் விசாரிப்பார்கள் அவர்கள் மீது மட்டும் ஒருவரும் குற்றம் சாட்டக்கூடாது என்பது எந்தவகை நியாயம்.? அவர்கள் மனிதர்கள் அல்லரா? தவறிழைக்காமல் இருக்க. பின்னர் ஏன் மதுரை நீதிபதி மீது நடவடிக்கை அவர்மீது குற்றம் சாட்டியவர்மீது நடவடிக்கை? அவர்களுக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு அது தக்காளி சட்னி…?

 10. ANT சொல்கிறார்:

  //பல அடுக்கு நீதிமன்றங்கள் தேவையில்லை அல்லவா — ஒரு நீதிமன்றம் — ஒரு தீர்ப்பு என்னும் நடைமுறை சாத்தியமா ..? மேல் முறையீடு இல்லாமல் செய்து விடலாமா .. சட்டத்தில் .. ?//
  இவர்கள் மீதான புகார்களை கையாள என்ன பொறிமுறை உள்ளது. இருப்பின் அது போதுமானதல்ல. ஏற்கனவே உள்ள ஓட்டையான சட்டத்தின்படிகூட ஊழல்செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது அவர்கள் மீது தைரியமாக குற்றம் சுமத்துவது வழக்கறிஞர்கள் மட்டும்தான் அவர்களையும் மிரட்ட முடிந்தால் இனி இவர்கள் ஆட்டத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அதிகாரத்தில் உள்ளவர்களுடன் கைகோர்த்து நடைபயில துவங்கிவிடுவர் அது ஆபத்திலும் ஆபாத்து.

  • B.Venkasubramanian சொல்கிறார்:

   வக்கீல்கள் செய்வது போராட்டம் அல்ல pure BLACK MAILING.
   பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து, பொய்களினாலேயே
   வாழ்ந்து கொண்டிருக்கும் வக்கீல்கள் – ஊருக்காக போராடுகிறார்கள்
   என்று சொன்னால் சிரிப்புத்தான் வருகிறது.
   பொதுமக்களுக்காக என்று போராடியிருக்கிறார்கள் இவர்கள் ?

   பழகுவதெல்லாம் பொறுக்கிகளுடன், திருடர்களுடன்,
   கொலை, கொள்ளக்க்காரர்களுடன்.
   செய்வதெல்லாம் திருட்டுத்தனம்,
   ரவுடித்தனம்.
   கட்சிக்காரர்களிடம் பிடுங்கித்திங்கிற / வாங்குகிற சம்பளத்திற்கு
   எந்த வக்கீலாவது ரசீது கொடுத்து பார்த்திருக்கிறீர்களா ?

 11. ANT சொல்கிறார்:

  //வக்கீல்கள் செய்வது போராட்டம் அல்ல pure BLACK MAILING.
  பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து, பொய்களினாலேயே
  வாழ்ந்து கொண்டிருக்கும் வக்கீல்கள் – ஊருக்காக போராடுகிறார்கள்// அப்படியானால் மேலும் நீதிபதி மீது நடிவடிக்கை எடுத்தது எவ்வாறு?
  //பழகுவதெல்லாம் பொறுக்கிகளுடன், திருடர்களுடன்,
  கொலை, கொள்ளக்க்காரர்களுடன்.
  செய்வதெல்லாம் திருட்டுத்தனம்,
  ரவுடித்தனம்.// வழக்கு தொடுக்கப்படுவது யார் மீதோ அவர்கள் தங்களுக்காக வாதாடி வழக்கறிஞர்கனை துணையாக கொள்கின்றனர். அது அவர்கள் தொழில் ஒரு நடிகை பல ஆண்களை கட்டிபிடித்து தோன்றுவதால் அவர் நடத்தை கெட்டவர் என முடிவு செய்வது தவறானது.
  //கட்சிக்காரர்களிடம் பிடுங்கித்திங்கிற / வாங்குகிற சம்பளத்திற்கு
  எந்த வக்கீலாவது ரசீது கொடுத்து பார்த்திருக்கிறீர்களா ?// கட்சிகாரர்களிடம் எதையும் பிடுங்க முடியாது. கட்சிகாரர்கள் கொடுத்தால் மட்டுமே வருமானம். அவர்கள் தொழிலுக்கு கட்சிகாரரே எவ்வளவு தகும் என்பதை முடிவு செய்கிறார். கட்டுப்படியாகவில்லை எனில் வேறு வழக்கறிஞரை அவர் நாட எந்த தடையும் இல்லை. வழக்குகளை ஒப்படைக்கும் போது ரசீது தரவேண்டும் என்பதை ஒப்பந்தத்தில் கட்சிக்காரர்கள் சேர்க்க எந்த தடையும் இல்லை. இது இருவர் ஒப்புக் கொள்ளப்படுவதன் அடிப்படையில் எழும் உறவு.

 12. selvarajan சொல்கிறார்:

  குன்ஹா ஊர் அறிந்தவர் இல்லையா.. ? பத்தாம் பசலி தனமான கருத்துக்கள் — ஒருதலை பட்சமான எண்ணங்கள் — இன்றும் ” சர்க்காரியா ” நினைவில் நிற்பவர்தானே … அவர் அவர் போக்கில் ” தங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி தான் ” பஞ்ச பூத ஊழல் செய்தவனே — காலில் விழுந்து – வழக்கை வாபஸ் பெற்ற சரித்திரமும் உண்டு — முடிவு எப்படி இருந்தாலும் கவலைக் கொள்ளாமல் இறுதி வரை போராடும் குணம் உள்ளவர்களும் உண்டு .. கிடைத்தால் விடுதலை — இல்லை சிறை இரண்டுக்குமே தயாராக இருப்பவர்களும் உண்டு — சும்மா சாதாரண கைதுக்கே சிறைவாசலில் தர்ணா செய்கிற சுயசார்பு பேர்வழிகளும் உண்டு — செம்மண் திருட்டுக்கே ஐந்து ஆண்டுகளாக நீதிமன்ற வளாகத்திற்கு ஒழுங்காக செல்லாமல் வாய்தா வாங்கி காலம் கடத்துபர்களும் உண்டு — நீண்ட ஜாமீனில் வெளிவந்து கும்மாளம் கொட்டுபவர்களும் உண்டு — எவன் யோக்கியன் என்பது பரந்த சிந்தனை உள்ளவர்களுக்கு புரியும் … !!!

 13. செங்கொடி சொல்கிறார்:

  இங்கு உணர்ச்சி வேகத்தில் எழுந்த பின்னூட்டங்களே காணக் கிடைக்கின்றன. என்ன நிலை? அதற்கு என்ன எதிர் வினை? என்பன குறித்தெல்லாம் எந்த அறிதலும் இல்லாமல் பொங்கி வழியும் உணர்ச்சிகள். அறிவுவயப்பட்டு அணுகுதலே நம்மை சரியான முடிவில் இருத்தி வைக்கும். வழக்குறைஞர்களின் மீதான இந்த புதிய தடைகள் ஏன் அவசியப்பட்டன? எந்த மாநிலத்திலும் இல்லாமல் தமிழகத்தில் மட்டும் ஏன்? ஏனென்றால், தமிழக வழக்குறைஞர்கள் மத்தியிலிருக்கும் போராட்ட குணம். இலங்கை இனப்படுகொலை, அகதிகள் பிரச்சனை, கல்விக் கட்டணக் கொள்ளை, கிரானைட், தாது மணல், ஆற்று மணல் கொள்ளைகளுக்கு எதிரான போராட்டங்கள் முயற்சிகள் என தமிழக வழக்குறைஞர்களின் முனைப்புகள் தமிழக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தின. எல்லாவற்றுக்கும் மேலாக ஊழல் நீதிபதிகளின் பட்டியலை வெளிப்படுத்தி நடத்திய பேரணி. இவை தான் இங்கு வழக்குறைஞர்களின் மீதான தடைகளுக்கு முதன்மையான காரணம்.

  ஹெல்மெட் பிரச்சனையில் மதுரை வழக்குறைஞர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு விசாரணை என்ற பெயரில் ஹெல்மெட் பிரச்சனை குறித்து ஒற்றை கேள்வி கூட கேட்காமல் ஊழல் நீதிபதிகளின் பட்டியல் வெளியிட்டது குறித்து விசாரணை நடத்தினார்களே நீதிபதிகள். இங்கே பொங்கிப் போய் பின்னூட்டமளிக்கும் யாராவது இதற்கு நேர்மையாய் பதில் கூறுவார்களா?

  ஒரு குமாரசாமி மட்டுமல்ல ஓராயிரம் குமாரசாமிகளை எடுத்துக் காட்ட முடியும். கார்ப்பரேட், தரகு முதலாளிகளுக்கு எதிரான வழக்குகளில் வழங்கப்பட்ட அனைத்து தீர்ப்புகளையும் எடுத்துப் பாருங்கள். எந்த சட்ட விதிகளுக்கும் பொருந்தாமல், எந்த அறவுணர்ச்சியும் துளியுமின்றி, பாதிக்கப்படும் மக்கள் குறித்த எந்த அக்கரையுமின்றி அம்மணமாய் முதலாளிகளுக்கு சாதகமாய் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்புகள். இங்கே பொங்கிப் போய் பின்னூட்டமளிக்கும் யாருக்காவது இவைகளை பரிசீலனை செய்யும் திராணியிருக்கிறதா?

  கடந்த ஆறுமாத காலமாய் 50 வழக்குறைஞர்கள் தொழில் செய்ய முடியாமல் தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களை தடை செய்ததில் எந்த வித நீதிமன்ற மரபுகளும் பின்பற்றப்படவில்லை. எதனால் எந்த அடிப்படையும் இல்லாமல் தொழில் நடத்த தடை செய்தார்கள் என்று யாராவது காரணம் கூற முடியுமா? ரவுடி, கட்டப்பஞ்சாயத்து, நீதிபதிகள் பெயரைச் சொல்லி பணம் வாங்குதல் என்பன போன்ற எந்தக் குற்றச்சாட்டுகளாவது அந்த வழக்குறைஞர்கள் மீது உண்டா? பின் எதனால் தடை செய்யப்பட்டார்கள்? பணம் வாங்குவது உள்ளிட்ட பல மனித விரோத செயல்களைச் செய்யும் வழங்குறைஞர்களின் பட்டியல் அளிக்கப்பட்டும் அவர்கள் மீது பார் கவுன்சில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன்? இங்கே பொங்கிப் போய் பின்னூட்டமளிக்கும் யாருக்காவது இது குறித்த அடிப்படை அறிதல் கூட இருக்கிறதா?

  குமாரசாமி தீர்ப்பு தவறு என்று சிலர் கூறுகிறார்கள். குன்ஹா தீர்ப்பு தவறு என்று சிலர் கூறுகிறார்கள் என மேலெழுந்தவாரியாக கூறுவது பாமரத்தனம். முழுமையாக ஆய்வு செய்து பாருங்கள். ஏன் ஜாமீன் வழங்கி தத்து வழங்கிய தீர்ப்பைக் கூட ஆய்வு செய்யுங்கள். எந்தத் தீர்ப்பில் சட்டத்தின் அடிப்படை இருக்கிறது, எந்தத் தீர்ப்புகளில் சந்து பொந்துகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அவ்வாறு பார்த்தால் சந்து பொந்துகள் கூட பயன் தராத இடங்களில் அப்பட்டமாக எல்ல விழுமியங்களையும் மீறி தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது புலப்படும். எங்கே, இங்கே பொங்கிப் போய் பின்னூட்டமளிக்கும் எவராவது இதற்கு தார்மீக விளக்கமளிக்க முடியுமா?

  நீதிமன்ற வழாகங்களுக்குள் போராட்டம் நடத்தினால் என்ன தவறு? ஜனநாயக நாடு இது என்று தானே பீற்றிக் கொள்கிறீர்கள். நீதிமன்ற வளாகங்கள் ஜனநாயகத்துக்கு அப்பாற்பட்ட இடங்களா? துண்டறிக்கை கூட கொடுக்கக் கூடாது என்றால் அவை என்ன வெள்ளை காலணி ஆதிக்க இடங்களா? கல்விக்கூட வளாகங்களில் போராட்டம் நடத்தலாம், சட்டமன்ற பாராளுமன்ற வளாகங்களில் போராட்டம் நடத்தலாம், காவல்துறை வளாகங்களில் போராட்டம் நடத்தலாம் இன்னும் எல்ல இடங்களிலும் போராட்டம் நடத்தலாம், நடத்தப்பட்டிருக்கிறது. நீதிமன்ற வளாகங்கள் என்ன வானத்திலிருந்து பொத்துக் கொண்டு விழுந்தவையா? இங்கே பொங்கிப் போய் பின்னூட்டமளிக்கும் யாராவது அறிவு நேர்மையுடன் இதை அங்கீகரிப்பார்களா?

  அப்பட்டமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் மீதே புகார் அளிக்கப்பட்ட பிறகும் அந்த முறையீடுகள் ஆண்டுக்கணக்காக விசாரணைக்கு எடுக்கப்படாமல் தூங்கிக் கொண்டிருக்கிறது என்பது இங்கே பொங்கிப் போய் பின்னூட்டமளிப்பவர்களுக்கோ அல்லது உணர்ச்சிவயப்பட்டு இந்த பதிவை எழுதியவருக்கோ தெரியுமா?

  எல்லாவற்றுக்கும் மேலாக தவறு செய்யும் வழக்குறைஞர்களின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு யாரும் மறுப்பளிக்கவில்லை. தாராளமாய் தண்டனை விதியுங்கள். ஆனால் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கும் அந்தனை வழக்குறைஞர்களும் இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு இடமில்லாதவர்கள். அவர்கள் போராடுகிறார்கள் என்பது மட்டுமே அவர்களை தடை செய்ததற்கான காரணம். அதன் தொடர்ச்சியாகவே வந்திருக்கிறது இந்த சட்ட திருத்தங்கள். எனவே, விதிக்கப்பட்டிருக்கும் இந்த சட்டத்திருத்தங்கள் போராடும் வழக்குறைஞர்களை ஒடுக்குவதற்காக மட்டுமேயன்றி தவறான வழக்குறைஞர்களை சீர்திருத்த அல்ல.

  மக்கள் நலனுக்கு எதிராக போராடுபவர்கள் மீது விதிக்கப்படும் அத்தனை தடைகளையும் உடைப்போம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செங்கொடியாருக்கு,

   உங்களது ஒரே ஒரு பின்னூட்டத்தில் –

   ” பொங்கிப் போய் பின்னூட்டம் இடுகிறவர்கள் ”

   என்கிற வார்த்தையை குறைந்த பட்சம் 7 தடவை
   பயன்படுத்தி இருக்கிறீர்கள். பொங்குவது யார்
   என்பது இதிலிருந்தே தெரியவில்லையா ?

   நீங்கள் கேட்டிருக்கிறீர்கள் –
   //இந்த புதிய தடைகள் ஏன் அவசியப்பட்டன?
   எந்த மாநிலத்திலும் இல்லாமல் தமிழகத்தில் மட்டும் ஏன்?//

   தவறான புரிதல் உங்களுக்கா …?
   இடுகையை எழுதியவருக்கா ..?
   அல்லது பின்னூட்டம் இடுபவர்களுக்கா…?

   இந்த சட்டங்கள் தமிழ் நாட்டிற்கு மட்டுமா ?
   சென்னை உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து
   தீர்மானித்ததா….?
   இங்கே மட்டும் “பொங்கி எழுந்து” போராடும் புனிதர்களை
   அடக்கியாள்வதற்காக இயற்றப்பட்டனவா ?

   சுப்ரீம் கோர்ட் அனைத்து உயர்நீதிமன்றங்களும்
   இத்தகைய ஒரு சட்டவிதியை ஏற்படுத்த வேண்டும் என்று
   அனுப்பிய தாக்கீதின் அடிப்படையில் தானே
   சென்னை உயர்நீதிமன்றத்தால்
   உருவாக்கப்பட்டுள்ளன இந்த சட்ட விதிகள்.

   பிறகு அதென்ன –
   “ஏன் அவசியப்பட்டன ….?
   எந்த மாநிலத்திலும் இல்லாமல் தமிழகத்தில் மட்டும்…? ”

   பொதுமக்களுக்காக போராடுவதற்கு இங்கு எத்தனையோ
   அமைப்புகள் இருக்கின்றன… வக்கீல்களை விட்டால்
   வேறு நாதி இல்லாமலா இருக்கிறார்கள் தமிழ் மக்கள்…?
   வக்கீல்கள் தங்களை உருப்படியாக கவனித்துக் கொண்டாலே
   போதுமானது….

   // கடந்த ஆறுமாத காலமாய் 50 வழக்குறைஞர்கள்
   தொழில் செய்ய முடியாமல் தடை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
   இவர்களை தடை செய்ததில் எந்த வித நீதிமன்ற மரபுகளும் பின்பற்றப்படவில்லை. எதனால் எந்த அடிப்படையும்
   இல்லாமல் தொழில் நடத்த தடை செய்தார்கள் என்று
   யாராவது காரணம் கூற முடியுமா..? //

   உங்கள் கேள்வி உங்களுக்கே விசித்திரமாக இல்லை…?
   புதிய சட்டவிதிகள் கடந்த மே,20-ந்தேதி தான்
   வெளியிடப்பட்டு இருக்கின்றன… அதற்கு முன்னதாக
   ஏன், எதற்காக, யாரால், எந்த சட்டவிதிகளின்படி
   தடை செய்தார்கள் என்று நீங்கள் தான் விளக்க வேண்டும்..
   சம்பந்தப்பட்டவர்களிடம் தான், நீங்கள் தான் கேட்க வேண்டும்…

   // பணம் வாங்குவது உள்ளிட்ட பல மனித விரோத
   செயல்களைச் செய்யும் வழங்குறைஞர்களின் பட்டியல்
   அளிக்கப்பட்டும் அவர்கள் மீது பார் கவுன்சில் இதுவரை
   எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன்? //

   பார் கவுன்சில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று
   இங்கே வந்து “பொங்குவது” ஏன் நண்பரே…?

   நீதிமன்றம் அநீதி இழைப்பதாகத்தானே நீங்கள் இந்த
   இடுகைக்கு எதிராக எழுதி இருக்கிறீர்கள்…
   பார் கவுன்சில் கூடவா வக்கீல்களுக்கு விரோதமாக
   இருக்கிறது….?? !!!

   உங்களுக்கு பதிலுக்கு பதில் எழுதிக்கொண்டே இருப்பதில்
   எனக்கு விருப்பமில்லை.
   ஆனால், நீங்கள் இங்கு வழக்கமாக உற்சாகத்துடன் விவாதங்களில்
   கலந்து கொள்ளும் பின்னூட்ட நண்பர்களையும் சாடியதால்,
   நான் கொஞ்சம் விவரமாக எழுத முனைந்தேன்.

   உங்களுக்கு இது ஒன்று தான் பிரச்சினை போலும் …
   அதான் இவ்வளவு “பொங்கி” விட்டீர்கள்…
   இந்த வலைத்தளம் எத்தனையோ பிரச்சினைகளைப்பற்றி,
   தொடர்ந்து எழுதி, விவாதித்துக் கொண்டிருக்கிறது.

   இதற்கு மேல், இந்த பொருள் குறித்து விவாதிப்பதை
   நிறுத்தி விட்டு, நான் நகர்கிறேன்.

   நீங்கள் காட்டிய ஆர்வத்திற்கும்,
   தெரிவித்த கருத்துக்களுக்கும் நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 14. செங்கொடி சொல்கிறார்:

  காவிரி மைந்தன் அவர்களுக்கு,

  சொற்களை எண்ணி புள்ளிவிபரம் தந்திருக்கிறீர்கள். அந்தப் புள்ளிவிபரத்தின் அடிப்படையிலேயே பொங்கியிருப்பது யார் எனும் கேள்வியையும் எழுப்பியிருக்கிறீர்கள். ஆனால், அந்தச் சொல் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைக் கொண்டு பொங்கியிருப்பது யார் என்பதை தீர்மானிக்க முடியுமா? எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் கிடைத்திருக்கிறதா? கிடைத்திருக்கும் பதில்களின் தன்மை எவ்வாறு இருக்கிறது என்பதைக் கொண்டு தானே யார் பொங்கியிருப்பது என்பதை தீர்மானிக்க முடியும். அந்த அடிப்படையில் உங்களின் பதில்களைப் பார்க்கலாமா?

  யாருக்கு தவறான புரிதல்?
  உச்சநீதி மன்றம் வழங்கியிருப்பது ஒரு பரிந்துரை. சென்னை உயர்நீதி மன்றம் செய்திருப்பது சட்டவரைவு. இது தமிழ்நாட்டைத் தவிர வேறெந்த மாநிலத்திலும் செய்யப்படவில்லை. போராடும் வழக்குறைஞர்களை ஒடுக்குவதற்காகத் தான் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்பதை என்னுடைய பின்னூட்டத்தில் கேள்விகள் மூலம் விளக்கியிருக்கிறேன். உங்களுடைய பதிலில் தமிழ்நாட்டில் மட்டும் ஏன் என்பதற்கு விளக்கமிருக்கிறதா? இல்லை. மாறாக, பொதுமக்களுக்காக போராட வக்கில்களை விட்டால் வேறு நாதியில்லையா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறீர்கள். பொதுமக்களுக்காக வழக்குறைஞர்கள் போராடக்கூடாது என்று எந்த அடிப்படையில் நீங்கள் தீர்ப்பெழுதினீர்கள்? அல்லது வழக்குறைஞர்கள் என்பவர்கள் பொதுமக்கள் அல்ல என்று முடிவு செய்துவிட்டீர்களா? ஏன் நீதிபதிகளின் ஊழல்களை எதிர்த்து உங்களுக்கு உவப்பான எந்த அமைப்பாவது போராடியிருக்கிறதா? ஆக, தமிழ்நாட்டுக்கு மட்டும் இந்த மாதியான கட்டுப்பாடுகள் ஏன் அவசியப்படுகின்றன என்பதில் உங்களிடம் பதில் இல்லை. அதேநேரம் இந்தக் கட்டுப்படுகள் அவசியம் என்று முடிவு செய்து தான் பதிவை எழுதியிருக்கிறீர்கள். எந்த அடிப்படையில் இவை சரி என முடிவெடுத்தீர்கள்? விளக்க முடியுமா? விளக்குங்கள் பார்க்கலாம். யாருக்கு தவறான புரிதல் இருக்கிறது என்பது அப்போது தெரியும்.

  ஏன் அந்தக் கேள்வி உங்களுக்கு விசித்திரமாய் தெரிகிறது?
  கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக 50 வழக்குறைஞர்கள் (சரியாகச் சொன்னால் 43 வழக்குறைஞர்கள் கடந்த எட்டு மாதங்களாய்) தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். என்னுடைய பின்னூட்டத்தில் இதனுடைய தொடர்ச்சியாகத்தான் இந்தக் சட்டவரைக் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன என தெளிவாகவே எழுதியிருக்கிறேன். ஆனால் நீங்கள் மே 20 என்று காலண்டர் கணக்கு பார்த்திருக்கிறீர்கள். முன்னி தொடரிகளைக் கவனிக்கவில்லை என்றால் எந்த விசயத்திலும் சரியான முடிவுக்கு வரமுடியாது. அதனால் தான் தவறான முடிவெடுத்து இது உங்களுக்கே விசித்திரமாய் தெரியவில்லையா? என்று கேள்வி எழுப்பும் நிலை உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

  பார் கவுன்சில் கூடவா வக்கீல்களுக்கு விரோதமாக இருக்கிறது?
  இந்த விவகாரத்தில் உங்களுக்கு எந்த விபரமும் தெரியாது என்பதை நீங்கள் எழுதியிருப்பவை காட்டிக் கொடுக்கின்றன. பெயரளவில் தான் பார் கவுன்சில் என்பது வழக்குறைஞர்களுக்கான அமைப்பு. ஆனால் அதன் செயல்பாடுகள் அவ்வாறு இருக்காது என்பது மழைக்கு நீதிமன்றங்களின் பக்கம் ஒதுங்கியவர்களுக்குக் கூட தெரியும். சட்டவிரோதமாக மதுரை வழக்குறைஞர்களின் மீதான தடையை இந்திய பார்கவுன்சில் அறிவித்தது, வழக்குறைஞர்களின் மீதான கட்டுப்பாடுகளுக்கு பார் கவுல்சில் இதுவரை குரல் கொடுக்காதது இவைகளிலிருந்தே தெரியவில்லையா பார் கவுன்சில் எப்படி யாருக்காக செயல்படுகிறது என்பது. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேள்வி எழுப்பாமல் ஏன் உங்களிடம் பின்னூட்டத்தில் கேள்வி எழுப்பினேன்? நீங்கள் தானே ஆதரித்து பதிவு எழுதியிருக்கிறீர்கள். பின் உங்களிடம் கேள்வி எழுப்பாமல் வேறு யாரிடம் எழுப்ப முடியும்?

  நீங்கள் கூட \\\போக்கிரி வக்கீல்களுக்கு ஆதரவாக செங்கொடி கிளம்பியிருக்கும் புதிய அதிசயத்தை இங்கே தான் காண்கிறேன்/// என்று எழுதியிருந்தீர்கள். போக்கிரி வக்கீல்களி நான் ஆதரிக்கவில்லை. பார்கவுன்சில் ஆதரிக்கிறது என்று காட்டியிருக்கிறேன். அதன்பிறகும் கூட நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் பார்கவுன்சில் வக்கீல்களுக்கு விரோதமாகவா இருக்கிறது என்று.

  பதிலுக்கு பதில் எழுதிக் கொண்டிருப்பதில் விருப்பமில்லை என்று கூறியிருக்கிறீர்கள். உங்கள் நிலைப்பாடு குறித்து நீங்களே சிந்தித்துப் பாருங்கள். எந்த விபரமும் தெரியாமல், அதில் உள்ளடங்கியிருக்கும் அரசியலை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஒரு பதிவை நீங்கள் எழுதுயிருந்தீர்கள். அதுகுறித்த விபரங்களை தெரிவித்ததும், இந்த வலைத் தளம் எத்தையோ பிரச்சனைகளை பேசிக் கொண்டிருக்கிறது என்று கூறி நகர்ந்து விட விரும்புகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் தார்மீகம் என்ன? நீங்கள் எழுதிய ஒரு பதிவு குறித்து விவாதம் நடக்கும் போது அது குறித்த தேடலோ, எது சரியானது என்ற பரிசீலனையோ, சரியானதை ஏற்பதோ, தவறானதுக்கு எதிரான போராட்டமோ எதுவுமே இல்லாமல் சும்மா பொழுது போக்கிற்குத்தான் இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கிறீர்களா?

  உங்கள் பின்னூட்டத்தில் சிலதை நீங்கள் தவிர்த்திருக்கிறீர்கள். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு எதிராக கொடுக்கப்பட்ட முறையீடு ஆண்டுக்கணக்கில் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று எழுதியிருந்தேன். நீதிமன்ற வளாகத்தில் ஏன் போராடக் கூடாது என்று கேள்வி எழுப்பியிருந்தேன். கார்ப்பரேட், தரகு முதலாளிகளுக்கு ஆதரவாக நீதிபதிகள் எழுதும் தீர்ப்புகளைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். ஹெல்மெட் பிரச்சனையில் நீதிமன்ற அவமதிப்பு விசாரணையில் அதைப்பற்றி கேள்வி எழுப்பாமல் ஊழல் நீதிபதிகளின் பட்டியல் குறித்தே கேள்வி எழுப்பப்பட்டது குறித்து எழுப்பியிருந்தேன். இவைகளையெல்லாம் நீங்கள் அமைதியாக கடந்து விட்டீர்களே ஏன்? இதில் தான் உங்கள் அரசியல் வெளிப்படுகிறது.

  மேலெழுந்தவாரியாக, பசப்பலாக ஏதாவது எழுதி விட்டால் அதற்கு பிரச்சனைகளை அலசுவது என்று பெயராகாது நண்பரே. ஆழமாக உள்வாங்க வேண்டும், அதை மக்கள் நலனுடன் கலக்க வேண்டும். இங்கிருந்து கிளம்பி வர வேண்டும் எழுத்து. உங்கள் எழுத்துகள் அப்படியானவையா என்று நீங்களே மீளாய்வு செய்து கொள்ளுங்கள்.

  நன்றி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.