ஒரு அர்த்தமுள்ள நமக்கு நாமே…!!!

அபூர்வமாக வெளிவந்திருக்கும் ஒரு உருப்படியான
செய்தியை இங்கு பதிவு செய்வதில் மகிழ்வு கொள்கிறேன்.

வழக்கத்தில் இல்லாத அதிசயமாக விகடன் செய்திருக்கும்
ஒரு நல்ல காரியம் இந்த செய்தியை பிரசுரித்தது …..!!!

————————

அரசுப் பள்ளியில் அட்மிஷனுக்காக அலைமோதும் கூட்டம்!

madurai village govt. primary school

காலை ஐந்து மணியிலிருந்து வரிசையில் குடும்பத்தோட
வந்து காத்து நின்னாலும், பியூனிலிருந்து பிரின்சிபல் வரை
சரிக்கட்டி வச்சாலும், பல லட்சங்களை அப்டி..யே
அள்ளிக்கொடுக்கத் தயாரா இருந்தாலும், ‘ரெக்கமண்டேஷன்
எதும் இருக்கா…?’ னு கேட்பாங்க. எதுக்கு…?மூணு வயசு
குழந்தைய ‘இன்டெர்நேஷனல்’ ஸ்கூலில் எல்.கே.ஜி சேர்க்க.
ஆனா எங்கேயாவது அரசு ஊராட்சி ஒன்றியத்
தொடக்கப்பள்ளியில் அட்மிஷனுக்கு அடிதடி நடந்து
யாராவது பாத்திருக்கீங்களா?

ஒரு கிராமத்தின் அரசுப் பள்ளியில் அட்மிஷனுக்கு மக்கள்
அலைமோதிய கண்கொள்ளாக் காட்சி நடந்தேறிய இடம்,
மதுரை யானைமலை ஒத்தக்கடையில் உள்ள ஊராட்சி
ஒன்றியத் தொடக்கப்பள்ளி.

1933 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஊராட்சி பள்ளிதான்,
மதுரை மாவட்டத்தின் முதல் பெரிய தொடக்கப்பள்ளி.
நகர வாடை வீசாத கிராமப் பகுதி. சுற்றுவட்டாரத்திலுள்ள
பதினெட்டுப் பட்டிக்கும் இதாங்க ஒரே பள்ளி.
இங்கதான் 2016-2017 கல்வியாண்டிற்கான மாணவர்
சேர்க்கைக்கு அலைமோதிய கூட்டத்தால் அந்த பகுதியே
திணறிப்போனது. இந்த ஒரு அரசுப் பள்ளியால்,
அப்பகுதியிலுள்ள எட்டு தனியார் மெட்ரிகுலேஷன்
பள்ளிகளில் வெகுவாக மாணவர் சேர்க்கை குறைந்து,
ஒரு பள்ளியையும் இழுத்து மூடிவிட்டனராம்.
இப்படி போட்டிப்போட்டு இன்றைய தேதி வரை கூட
தொடர்ந்து அட்மிஷன் நடைபெற்று வரும் அந்த ஊராட்சிப்
பள்ளியின் சிறப்பு என்ன என விசாரித்தோம்.

ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரையுள்ள
இப்பள்ளியில், 500 மாணவ-மாணவியர் பயில்கின்றனர்.
தலைசிறந்த ஆசிரியர்கள், சிறந்த உட்கட்டமைப்பு வசதி,
கணினி மயமாக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறை,
ஃபேவர் ப்ளாக் அமைக்கப்பட்ட வளாகம் மற்றும்
சிறந்த சுகாதாரம் நிறைந்ததாகக் காணப்படும் இப்பள்ளியின்
பெரிய பலமே, அங்கு பயிலும் மாணவர்களும் அவர்களது

பெற்றோர்களுமே எனக் கூறுகிறார் இப்பள்ளியின்
தலைமையாசிரியர் தென்னவன்.

மேலும் அவர், ” 2010ம் ஆண்டு இந்த ஊராட்சி பள்ளியில்
நான் வந்து சேர்ந்த சமயம் இப்பள்ளியின் மாணவர்
எண்ணிக்கை வெகு குறைவாக இருந்தது.’எவ்வித அடிப்படை
வசதியும் இல்லாமல் இருப்பது பெரும்குறை’ என ஆசிரியர்கள்

அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒவ்வொன்றாகச் சரிசெய்வது என
முடிவெடுத்தோம்.

முதற்கட்டமாக சுகாதாரத்தை ஏற்படுத்த’ பள்ளி வளாகத்தில்
10 லட்சம் ரூபாய் செலவில் ஃபேவர் ப்ளாக் அமைக்கப்பட்டது.
பின்னர் சிறந்த கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தினோம்.

பள்ளியின் கட்டமைப்பை சரி செய்த பின்னர், ஊர் ஊராக,
தெருத் தெருவாக சென்று மாணவர்களை பள்ளியில்
சேர்ப்பதன் அவசியத்தை எடுத்துக்கூறி, நாங்கள் ஆசிரியர்கள்
அனைவரும் பிரசாரம் செய்தோம்.
துளி அளவும் பயனில்லை.

மனம் தளராமல் எங்கள் பள்ளியில் பயின்றுகொண்டிருந்த
மாணவர்களின் ஆற்றல்களைக் கண்டறிந்து வெளிக்கொணர
ஆரம்பித்தோம். வகுப்பறை செயல்பாடுகளில் மாற்றங்கள்
ஏற்படுத்தப்பட்டன. மாணவர்களின் சிறந்த ஒத்துழைப்பால்
மதுரை ஊராட்சிப் பள்ளிகளிலே முதன்முறையாக
“திறமை திருவிழா” (வழக்கமான ஆண்டுவிழா போல்
இல்லாமல்) என்றதொரு விழா நடத்தி, ஒட்டுமொத்த
கிராமத்தையும் அசரடித்துவிட்டனர் எங்கள் மாணவர்கள்.

அதுதான் எங்கள் முதலும் பெரிய வெற்றியுமாக அமைந்தது.
வெறும் பிரச்சார வார்த்தைகளால் சாதிக்க முடியாததை
செயலால் சாதித்துக் காட்டினோம். ‘நம்ம வீட்டுப் பிள்ளையும்

இப்படித்தானே படிச்சா திறமையா வருவான்’ என்ற
கிராமத்துப் பெற்றோர்களின் நம்பிக்கைதான் எங்கள்
பள்ளிக்குக் கிடைத்த பெரிய விருது. அதன் பலன் மாணவர்
சேர்க்கையில் வெளிப்பட்டது. கிராமப்பகுதி மாணவர்களுக்கு
சிறந்த கல்வி கிடைக்கணும் என்பது மட்டுமே குறிக்கோள்”
என்றார்.

இப்பள்ளியினர் அரசாங்கத்தின் எவ்வித உதவியும் இன்றி,
கணினிகள் நிறைந்த ஒரு ஸ்மார்ட் க்ளாஸ் ரூமை
பொதுமக்கள் உதவியுடன் அமைத்திருக்கிறார்கள்.
அரசுப்பள்ளிகளுக்கான திட்டங்களை எல்லாம் முழுமையாகப்
பயன்படுத்தி, மாணவர்களுக்கான நாற்காலி, மேசைகள்
வாங்கிப்போட்டுள்ளனர். ஆசிரியர்களே ஒன்று சேர்ந்து
பள்ளிக்கு துப்புரவு தொழிலாளர்களை அமைத்திருக்கிறார்கள்.

கிராமத்து மக்களில் 100 பேர் தன்னார்வத்துடன் இணைந்து,
தலைக்கு 1000 ரூபாய் வசூலித்து ஒரு லட்ச ரூபாயை
பள்ளியின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறார்கள்.
இதன்மூலம் வரும் வட்டியிலிருந்துதான் பள்ளியின்
மின்கட்டணம், துப்புரவு தொழிலாளருக்கான சம்பளம்
எல்லாம் அடங்கும்.

இவை தவிர, மாணவர்களின் தலைமைப்பண்பினை வளர்க்க
ஸ்கூல் பார்லிமெண்ட்,
லீடர்ஷிப் கேம்ப்,
கற்பனைத் திறன்களை வளர்க்க
தமிழ்நாட்டின் சிறந்த கதைச் சொல்லிகளை
எல்லாம் வரவழைத்து நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளனர்.

ஐந்தாம் வகுப்புவரையுள்ள தொடக்கப்பள்ளிதான். ஆனால்
இங்குள்ள மாணவ-மாணவியருக்கு கைத்தொழில்
கற்றுத்தரப்படுகிறது. இப்பள்ளியின் மாணவர் ஒருவர்
சன் சிங்கரில் பாடகராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

மேலும் இப்பள்ளி மாணவர்கள் போட்டோ ஷாப்,
ஃப்ளெக்ஸ் டிசைனிங், போட்டோ ஆல்பம், மேக்கிங்
என ட்ரெண்டிங்கில் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இப்பள்ளியின் சிறப்பை அறிந்து
பல்வேறு சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள், தனியார்
தொழிற் நிறுவனங்கள் என பலரும் தற்போது உதவ
முன்வந்துள்ளனர். தமிழக அரசுப் பள்ளிகளிலேயே
அதிக மாணவர் சேர்க்கை நடைப்பெற்ற ஊராட்சிப்
பள்ளியாக விளங்கும் இந்தத் தொடக்கப்பள்ளி,
தமிழகத்தின் தலைச்சிறந்த அரசுப் பள்ளியாக உயர வேண்டும்
என்ற முயற்சியில் செயல்பட்டு வருகின்றனர்.

முன்மாதிரிப் பள்ளிக்கு வாழ்த்துகள்.

( http://www.vikatan.com/news/tamilnadu/64912-
parents-throng-government-school-for-admission.art?
artfrm=editor_choice )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to ஒரு அர்த்தமுள்ள நமக்கு நாமே…!!!

 1. selvarajan சொல்கிறார்:

  பல அரசு பள்ளிகளில் — மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விடிய — விடிய காத்திருக்கும் பெற்றோர்கள் என்று செய்திகள் வந்துள்ளன குறிப்பாக திருநெல்வேலி மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ், கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சேர்க்க அலைமோதுகிறது கூட்டம் — // அரசு பள்ளிக்கூடங்களில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம்http://www.dailythanthi.com/News/Districts/Thirunelveli/2016/05/24013231/Interested-parents-can-include-children-in-government.vpf // — தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை — கெடுபிடிகள் — மற்றும் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் — பள்ளி படிப்பு முடிந்து ” கல்லூரியில் ” சேரும்போது அனைத்து பள்ளிகளில் பயின்றவர்களும் ஒன்று தான் என்கிற காலம் கடந்த யதார்த்தம் போன்றவற்றினால் — இனி அரசு பள்ளிகள் கோலோச்சும் என்பதில் சந்தேகம் இல்லை … !!!

 2. nparamasivam1951 சொல்கிறார்:

  வாழ்த்துக்கள். ஆசிரியர்களுக்கும், அந்த ஊர் மக்களுக்கும் மற்றும் பள்ளியை பெருமை அடைய செய்த அந்த மாணவர்களுக்கும்.

 3. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  காசுக்கு வேலை பார்க்கும் (?) பல/சில ஆசிரியர்கள் இருக்கும் காலத்தில், இதனைப் போன்ற பள்ளிகளில் dedicatedஆக முயற்சி செய்து எளிய மாணவர்களின் வருங்காலத்தை வளமாக்க நினைக்கும் ஆசிரியர் குலமே.. நீவிர் வாழ்க. உங்களுக்குத்தான், “ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்” என்பது பொருந்தும். உங்கள் உழைப்பினால், ஒரு காசு கூட, மற்ற பள்ளி ஆசிரியர்களைவிட உங்களுக்குக் கிடைக்காது. உண்மையில், நீங்கள் டியூஷன் போன்ற மேற்படி வருமானங்களையெல்லாம் அனுபவித்திருக்க மாட்டீர்கள். ஆனால், நிச்சயம் நீங்கள் மன நிறைவைப் பெற்றிருப்பீர்கள்.

  பணிமூப்பு அடைந்தபின்பு, உங்களுக்கு நிறைவாக நினைந்து மகிழ நல்ல நினைவுகள் உங்களுக்கு இருக்கும். நிச்சயம், உங்கள் நினைவில் இருந்து மறைந்திருந்தாலும் (மூப்பினால்), யாராவது ஒருவர் (அல்லது பலர்) உங்களைப் பார்த்து, ஒரு பழத்தை உங்கள் காலடியில் வைத்து, உங்களால்தான் சார் நான் இந்த நிலைமைக்கு வந்தேன், “டேய்.. பாருடா.. இவர்தான் எங்கள் சார். இவரால்தான்டா அப்பா நல்லாப் படித்து இந்த நிலைமைக்கு வந்தேன்.. கும்பிட்டுக்கோடா” என்ற நற் சொற்களைக் கேட்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள்.

  ஆசிரியர் பணி என்ற வாய்ப்பு கிடைப்பது பெரிதல்ல. அதனை உபயோகித்து அதன்மூலம் சமூகத்தை, எளிய ஏழை மாணவர்களை வளர்த்தெடுப்பது அளப்பரிய பணி. நான் வேண்டுவதெல்லாம், இந்தச் சமூகம் அத்தகைய ஆழ்ந்து பணியாற்றும் ஆசிரியர்களை உள்ளன்போடு போற்றவேண்டும் என்பதுதான்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நான் இந்த செய்தியை இங்கு பதிவாகப் போட்டதன்
   காரணமே, உங்களைப் போல் பல நண்பர்கள்
   இந்த ஆசிரியர்களையும், பள்ளியின் சிறப்புக்கு
   காரணமான மற்றவர்களையும் பாராட்டுவார்கள்.
   அது மற்றும் பல பள்ளி ஆசிரியர்களுக்கு
   தூண்டுதலாக அமையும் என்பதால் தான்.

   இன்னும் பல பள்ளிகள் இது போல் சிறக்கட்டும்.
   சிறந்த ஆசிரியர்கள் பலர் இதுபோல் உருவாகட்டும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. சைதை அஜீஸ் சொல்கிறார்:


  நண்பர்கள் அனைவருக்கும்
  இந்த காணொளியை பாருங்கள்.
  நம்மால் முடியும், என்பதை உணரலாம்.
  மாற்றம் ஏற்பட வானம் பிளக்கவேண்டியதில்லை, நாம் முயன்றாலே இப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப அஜீஸ்,

   அற்புதமான ஒரு காணொலியை இணைத்திருக்கிறீர்கள்.
   பார்க்க பிரமிப்பாக இருக்கிறது…
   நம்மிடையே அருமையான மனிதர்கள் இருக்கிறார்கள்.
   அவர்கள் அமைதியாக, ஆரவாரமின்றி பணிபுரிகிறார்கள்…
   அவர்களை கண்டுபிடித்து ஊக்குவிக்க வேண்டும்.
   இத்தகைய ஆசிரியர்களுக்கு நம்மைப்போன்றவர்கள் தான்
   விளம்பரம் கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும்.

   இதைக் காணும்போது, மற்ற ஆசிரியர்களுக்கும்
   உற்சாகம் பிறக்கும்…
   அது அவர்களையும் செயலில் இறங்கத் தூண்டும்.

   மிக்க நன்றி அஜீஸ்.

   நண்பர் நெல்லத்தமிழன் சொல்வது போல் –

   இந்த எளிய குடும்பத்து குழந்தைகள்
   ஆர்வமாகப் பேசும்போது, படிக்கும்போது
   மனது நெகிழ்கிறது. இத்தகைய வாய்ப்புகள்
   நம் தமிழகத்து குழந்தைகள் அனைவருக்கும்
   கிடைக்க வேண்டும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  நான் நிறைய browse பண்ணுபவனல்ல. அதனால் நிறைய பாசிடிவ் செய்திகளையும், காணொளிகளையும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இந்தக் காணொளி simply amazing. கணிணித் துறையில் பல வருடங்களாக இருக்கிறேன். (வெளியூரில்). தமிழர்களிடம் திறமை இருந்தாலும், ஆங்கிலத்தில் பேசுபவர்கள் (சரியாக) மிகவும் குறைவு. (அதுதான் போகட்டும், இந்தியோ அல்லது மலையாளமோ தெரிந்திருந்தால் மத்தியக் கிழக்கு நாடுகளில் இன்னும் பெட்டராக வேலை பார்க்கலாம்) திறமைக்குக் குறைவில்லை ஆனால் மொழியறிவு (ஆங்கில) இல்லை. (இது தமிழர்களிடம் மட்டுமல்ல).

  ஆங்கிலம் நன்றாகப் பேசத் தெரிந்தால், இன்னும் நன்றாக நம்மவர்கள் முன்னேறலாம். (இதில் விதண்டாவாதத்துக்கு இடமில்லை. ஆங்கிலேயர்கள் எல்லோருக்கும் வேலை கிடைத்துவிட்டதா? இந்தி பேசுபவர்கள் எல்லோரும் வேலையில் இருக்கிறார்களா என்று. மொழியறிவு மிகுந்த பயனைத் தரும். அனுபவத்தில் சொல்கிறேன்).

  சரியான இடுகையில் இந்தக் காணொளியைக் கொடுத்திருக்கிறீர்கள். நல்ல ஆசிரியர்களை அடையாளம் கண்டு சமூகம் போற்றவேண்டும். இதனால்தான், வெகு காலம் முன்பு, குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும்போது, வாத்தியாரிடம், கண்ணையும், தலையையும் விட்டுவிட்டு எங்க வேணும்னாலும் அடிச்சுப் படிக்கவைங்க என்று பெற்றோர்கள் சொல்லுவார்கள். இந்த ஆசிரியரையும், இவர்களைப்போன்ற சக ஆசிரியர்களையும், அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் பள்ளி நிர்வாகம் மற்ற எல்லோரையும் பாராட்டுகிறேன். அவர்தம் சேவை வாழ்க வளர்க.

  இந்தக் குழந்தைகளும், மேற்படிப்பு போகும்போது, தானாகவே இன்னும் மொழியறிவில் முன்னேற வேண்டும். (எளிய குழந்தைகள் ஆர்வமாகப் பேசும்போது, படிக்கும்போது மனது நெகிழ்கிறது)

 6. palani சொல்கிறார்:

  காசுக்கு வேலை பார்க்கும் (?) பல/சில ஆசிரியர்கள் இருக்கும் காலத்தில், இதனைப் போன்ற பள்ளிகளில் dedicatedஆக முயற்சி செய்து எளிய மாணவர்களின் வருங்காலத்தை வளமாக்க நினைக்கும் ஆசிரியர் குலமே.. நீவிர் வாழ்க

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.