எத்தனை பேருக்கு கிடைத்திருக்கும் இத்தகைய அனுபவம்….?

( புகைப்படத்திற்கு நன்றி - வீரம்வெளஞ்சமதுரை முகநூல் )

( புகைப்படத்திற்கு நன்றி – வீரம்வெளஞ்சமதுரை முகநூல் )

இளமையில் நிகழும் பல அனுபவங்கள் பசுமரத்தாணி போல்
நெஞ்சில் பதிந்து விடுகின்றன. அத்தகைய அனுபவங்கள்
சிலருக்கே சிறப்பானவையாக இருந்திருக்கின்றன.

நண்பர் செல்வராஜனை – நான் உங்களுக்கு தனியாக
அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. விமரிசனம் இடுகைகளை
தொடர்ந்து படித்து வரும் அனைவருமே அவரை அறிவர்.

எக்கச்சக்கமான செய்திகளை தன்னிடத்தே அடக்கிக்கொண்டு
( பதுக்கி வைத்துக்கொண்டு….? ), சரியான சமயத்தில், சரியான
விஷயங்களை பின்னூட்டங்கள் மூலமாக வெளியிடுபவர்
செல்வராஜன். பல சமயங்களில், நான் எப்போதோ எழுதி
மறந்து போன இடுகைகளையும், பின்னூட்டங்களையும் கூட
எனக்கே நினைவுபடுத்துவார்….!!!

நல்லவேளையாக, (கிட்டத்தட்ட..!! ) நிஜமான விஷயங்களையும்,
அந்தந்த சமயத்திற்கு தோன்றும் நியாயங்களையுமே
நான் எழுதி வருவதால் – மாட்டிக்கொள்ளாமல், சங்கடப்படாமல்
தப்பிக்கிறேன்.

இந்த இடுகை குறித்து –

சில நாட்கள் முன்னர், மதுரை அருகே ஒரு துவக்கப்பள்ளி
எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறது என்பதைப்பற்றி
சிலாகித்து நாம் இந்த தளத்தில் எழுதினோம். அதன்
தொடர்ச்சியாக, செல்வராஜன் அவர்கள் தன்னுடைய
இளமைக்கால கல்வி அனுபவங்களைப்பற்றி எனக்கு தனியே
ஒரு மடலில் தெரிவித்திருந்தார்.

மிகவும் சுவையாக அமைந்திருந்த அதை, இந்த தளத்தில்
பிரசுரித்து மற்ற நண்பர்களும் பார்க்கச்செய்ய வேண்டுமென்று
நினைத்தேன்…. அவரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு,
அந்த அனுபவ மடலை கீழே தந்திருக்கிறேன்….

———————————————–

அய்யா …. !

ஆரம்பக்கல்வி கடலூர் முது நகரிலும் பின் மங்கலம்பேட்டை
என்கிற சிற்றூரிலும் தொடர்ந்து பள்ளி இறுதி வகுப்பு
போர்டு ஹை ஸ்கூலில் முடிந்தது —
முதல் எஸ்.எஸ்.எல்.சி . செண்டர் நான் எழுதும் போது தான்

பள்ளிக்கு கிடைத்தது — ஆரம்பபள்ளியில் படிக்கும் போது
தான் ” திரு .காமராஜரின் மதிய உணவு திட்டம் ” அமலுக்கு
வந்தது — அதற்கு மறுபெயர் ” பிடி அரிசி திட்டம் ”
ஊரில் உள்ள வீடுகளில் இருந்து ஒவ்வொரு பிடி
அரிசி பெற்று — அதை கஞ்சியாக காய்ச்சி — பொட்டுக்கடலை

துவையலுடன் மாணவர்களுக்கு மதியத்தில் ஊற்றுவார்கள் —

தட்டுகளை வீடுகளில் இருந்து கொண்டு செல்ல வேண்டும் —

அப்போதைய ஐந்தாம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு
மட்டும் தான் இந்த உணவு — மாணவர்களின் பைகளில்
புத்தகம் — சிலேட்டு இருக்கிறதோ — இல்லையோ
கண்டிப்பாக ஒரு தட்டு இருக்கும் —

மங்கலம்பேட்டையில் பெரும் கம்பத்துக்காரர்களும் —
நில உரிமையாளர்களும் — வியாபாரிகளும் —
ரைஸ்மில் முதலாளிகளும் அவ்வப்போது அரிசி கொடுத்து
உதவி வந்தார்கள் …

நான் ஆரம்பகல்வி படிக்கும் போது — உயர்நிலை பள்ளி
கிடையாது — பக்கத்தில் நான்கு மைல் தொலைவில் உள்ள
உளுந்தூர்பேட்டை — பத்து மைல் தொலைவில் உள்ள
விருத்தாசலம் தான் செல்லவேண்டி இருந்தது —

அதன் பின் ஊரார் கொடுத்த நிலம் — அரசு நிலம்
ஒதுக்கி உயர்நிலை பள்ளி ஆரம்பம் ஆனது —
ஒரு கூரைக்கட்டிடம் மட்டுமே தான். அனைத்து
ஆறு முதல் பதினொன்றாம் வகுப்புவரை நடத்த
பயன் பெற்றது — தரையில் தான் அமரவேண்டும் —

அப்போது சனிக்கிழமை ” ஒன் சிட்டிங் ” என்று கூறி
மதியத்திற்கு பின் விடுமுறை — அன்று பெரும்பாலும்
பொது அறிவு — நீதி போதனை வகுப்புகள்
ஒரு பீரியட் நடக்கும் … அதன் பிறகு மாணவர்கள்
அனைவரும் சென்று சாணம் கொண்டுவந்து தரையை
மெழுகி விட்டு செல்ல வேண்டும் —

திங்கள் கிழமை வகுப்புக்கு வந்து சுத்தமான —
சுகாதாரமான மெழுகிய தரையில் அமர்ந்து படிக்க வேண்டும் —
நான் ஆறாம் வகுப்பு சேரும் போது திரு நடராசன் என்பவரும்
அதன் பின் திரு சேதுராமன் என்பவரும் தலைமை
ஆசிரியர்களாக இருந்து மாற்றலாகி சென்றபின் —
என்னுடைய எட்டாம் வகுப்பு ஆரம்பத்தில் ”
திரு . வே . சபாநாயகம் ” என்பவர் தலைமை ஆசிரியராக
வந்தது அப்போதைய மாணவர்களுக்கும் — பள்ளிக்கும் —
ஏன் அந்த ஊருக்கே ஒரு ” பொற்காலம் ” என்றுதான்
சொல்ல வேண்டும் ..

ஏனென்றால் அவரது கோட்டு – சூட்டு — டை போன்ற
உடைகளும் கண்டிப்பான — கனிவான தோற்றமும் —
நிர்வாகத் திறமையும் மாணவர்களை வெகுவாக கவர்ந்தது —

ஒழுங்கு — ஒழுக்கம் — நேரம் தவறாமை போன்றவற்றை
நடைமுறை படுத்திவர் — அப்போது இருந்த
” ஆசிரிய பெருமக்கள் ” அனைவருக்கும் கோயில் கட்டிக்
கும்பிட வேண்டும் — பொறுப்புணர்ந்து ஒவ்வொரு
மாணவரையும் அனைத்திலும் திறமைசாலிகளாக
உருவாக்கினார்கள் —

ஒவ்வொரு வகுப்பறைக்கும் இடம் ஒதுக்கி தோட்டம்
போடவும் — அதில் கீரை — காய் — பூ போன்றவைகளை
விளைவிக்கவும் –ஏற்பாடுகள் செய்தார் தலைமை ஆசிரியர் ..
அதில் விளையும் அனைத்தையும் ” ஏலம் விட்டு ”
அதனால் கிடைக்கும் தொகையை முத்தமிழையும் வளர்க்க
செலவு செய்தார் … எவ்வாறு எனில் –

மாதம் ஒரு இயல் — இசை — நாடக விழா போட்டி என்று
மாணவர்களை கொண்டு நடத்தி பரிசுகள் அளித்து
ஊக்குவித்தது — அந்த காலக் கட்டத்தில் இருந்த சிறந்த
” தமிழறிஞர் பெருமக்களை ” வரவழைத்து சொற்பொழிவு —
பேச்சு போட்டி என்று நடத்தியது — எங்களது பள்ளிக்கு
திரு தவத்திரு குன்றக்குடி அடிகளார் முதல் திருக்குறள்
முனுசாமி வரை மாமேதைகளின் பேச்சுக்களை கேட்கும்
பாக்கியத்தை தந்தது —

அதுமட்டுமல்ல படிப்பில் சிறக்க ” வாரம் — மாதம் ”
தேர்வுகளை நடைமுறை படுத்தியது — மதிப்பெண்
குறைந்தவர்களை தனிக் கவனத்துடன் படிப்பில்
சுட்டியாக்கியது

பொது அறிவுக்கு : மாணவர்கள் தினமும் தினசரிகளில்
வரும் முக்கிய செய்திகளை கட்டாயமாக எழுதி எடுத்துவர
தூண்டியது — ஆங்கில புலமைக்கு மாணவர்களுக்குள்
ஒரு வார்த்தை சொல்லி அதுக்கு எழுத்துக்களை
[ ஸ்பெல்லிங் ] — மற்றும் உச்சரிப்பு சரியாக கூற வைப்பதும்
போன்ற போட்டிகளும் — மாணவர்களின் உள்மனதில்
இருக்கும் ” கதை — கவிதை — நகைச்சுவை — துணுக்கு ”

போன்றவற்றை வெளிக்கொணர ” கையெழுத்து பிரதி ”
ஒன்று உருவாக்கி — அதற்கு ” கலைச்சுடர் ” என்று பெயரிட்டு
மாதமொரு முறை வெளியிட்டது —

என்னுடைய கையெழுத்து மிக நன்றாக இருந்ததால் அதில்
எழுதுவது என்னுடைய பணியாக இருந்தது — உடற் கல்வி —
விளையாட்டு என்று அனைத்திலும் பள்ளி தலை சிறந்து

விளங்கியதற்கு முக்கிய காரணம் தலைமை ஆசிரியரும் —
மற்ற ஆசிரியர்களும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க
முடியாது — அதுமட்டுமின்றி அன்று படித்த மாணவர்களில்
பலர் சிறந்த மருத்துவர் — பொறியாளர் போன்றவர்களாக
உருவாக அடித்தளம் அமைத்தவர் எங்களின்
தலைமை ஆசிரியர் — எப்படியெனில் ….

அவர்தான் முதன் முதலாக ” கலப்பு கணிதம் ” [ காம்போசிட்
மேத்ஸ் ] பிரிவு என்பதை பள்ளிக்கு கொண்டுவந்து —
கணிதத்தில் இரண்டு பிரிவுகள் ஒன்று பொது கணிதம் —
மற்றொன்று கலப்பு கணிதம் என்று இருப்பதையே
மாணவர்கள் அறிய செய்தவர் — கலப்பு கணிதத்தில்
அல்ஜிப்ரா என்பது உண்டு — அதற்கு பயந்தே பல மாணவர்கள்
அப்பிரிவை தேர்வு செய்ய வில்லை — ஆனால் நான்
அதைத்தான் படித்தேன் — அதனால் தான் ” பொறியாளராக ”
முடிந்தது …

இன்று இதுபோன்ற ஆசிரிய பெருமக்களையும் — அரசு
பள்ளிகளையும் காண்பது அரிதாகி போனது — யாரால் —
எதனால் — எப்படி … என்பதும் — ஆங்கில மோகம்
அதிகமாகி போனதற்கு யார் காரணம் என்பதும் கேள்விக்
குறியே .. எனது உயர்நிலைப் பள்ளி வாழ்க்கையின்
காலக்கட்டம் 1961முதல் 1966 வரை —

நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போதெல்லாம் ” இந்தி ”
வகுப்பு உண்டு — அதன் பின் வந்த இந்தி எதிர்ப்பு
போராட்டத்தினால் தடைப் பட்டது என்பது தான் உண்மை —

அதுமட்டுமல்ல நான் படிக்கும் போது நெசவு வகுப்பு
[ வீவிங் கிளாஸ் ] என்று ஒன்று இருந்தது —
அதில் மாணவர்களே ராட்டை — தக்களி போன்றவற்றில்
நூல் நூற்று — பின் சிறு தறியில் ” கைக்குட்டை — ரிப்பன் ”
போன்றவற்றை நெய்யும் பயிற்சியும் ஆசிரியரால்
கொடுக்கப் பட்டது — தற்போது அதுவும் படிப்பில்
இருந்து காணாமல் போனது — வேதனையானது —

நாட்டுப் பற்று — சுதந்திர போராட்ட தியாக வரலாறு —
நம் தாய் நாட்டின் இயற்கை வளம் — அன்றைய
தலைவர்கள் — தாய்மொழியில் ஈடுபாடு — நீதிக்கதைகள் —
போன்ற எண்ணற்ற நல்லவைகளை — ” கற்பிக்கும் இடமாக ”
எனது மங்கலம்பேட்டை [ மாடு வெட்டி மங்கலம் என்று
ஒரு பெயர் உண்டு ] பள்ளியையும் — போதித்து —
கற்றுக்கொடுத்த ஆசிரியர்களையும் — தன்னலம் கருதாத
அவர்களின் பணியையும் — தலைமை ஆசிரியர்
திரு . வே. சபாநாயகம் — அவர்களையும் என்றும் நினைத்து —
வணங்கி பெருமிதம் கொள்கிறேன் —

சுற்று வட்டார சிறு கிராமங்களை உள்ளடக்கிய ஒரு
நடுத்தர கிராமத்தில் தலை சிறந்த பள்ளியாக உருவாக்கிய

அனைவரையும் பாராட்டியே தீரவேண்டும் — பக்கத்து
கிராமங்களில் இருந்து சுமார் ஏழு — எட்டு கிலோ மீட்டர்
தூரம் நடந்தே வந்து பயின்று நல்ல நிலைமைக்கு உயர்ந்த
எனது பள்ளி — மற்றும் வகுப்பு தோழர்கள் கண்டிப்பாக
தங்கள் பிள்ளைகளை என்னைப்போலவே ” அரசு பள்ளிகளில் ”
படிக்க வைத்து இருப்பார்கள் என்கிற நம்பிக்கை
எனக்கு உண்டு —

கால மாற்றத்தினால் தற்போதைய அரசு பள்ளிகளின் நிலை
எப்படி உள்ளது என்பது நாம் அறிந்ததே — ஆனால்
” ஆசிரியர்கள் ” நினைத்தால் எதையும் செய்ய முடியும்
என்பது தான் எனது ” முடிவான கருத்து ” —

——————————————————–

என் குறிப்பு –

அது ஒரு கனாக்காலம்….!!!

இன்று படிப்பு ஒரு இனிய, பயனுள்ள அனுபவமாக
இல்லாததற்கு யார் காரணம்…? எது காரணம்….?

“டெக்னாலஜி” ( கவர்ச்சிகரமான, புதிய புதிய
பொழுதுபோக்கு சாதனங்கள் – gadgets.. ) பெருகி விட்டது…

” டைவர்ஷன்ஸ் ” ( கவனச்சிதறல் ) அதிகமாகி விட்டது.
மாணவர்களுக்கு சுயமான ஆர்வம் இல்லை…
ஆசிரியர்களுக்கு (பெரும்பாலான) அக்கரை இல்லை…
பெற்றோர்களுக்கு பொறுப்பு இல்லை….

எல்லாருமே, ஆர்வம் இன்றி –
கடமைக்காக, “கடனே” என்று இயங்குகிறார்கள்….!

வாழ்க்கை அதன் ” உண்மை “த்தன்மையை இழந்து விட்டது…!!!

இந்த நிலை மாற வேண்டுமென்று பிரார்த்திப்போம்…
முயற்சி செய்வோம்…
இன்றில்லா விட்டாலும் நாளையாவது –
மாறுகிறதா…. பார்ப்போம்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to எத்தனை பேருக்கு கிடைத்திருக்கும் இத்தகைய அனுபவம்….?

 1. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  இன்றைக்கு கவனச்சிதறல் அதிகமாகிவிட்டது. இது மாணவர்களுக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும்தான். நான் என்னுடைய ஹாஸ்டல் வார்டனாகவும், பள்ளியின் துணைத் தலைமைஆசிரியராகவும் இருந்த பாதிரியாரை அவருடைய 60+ வயதில் 7-8 வருடங்களுக்கு முன்பு சந்தித்தேன். அவர் சொன்னார். “முன்ன மாதிரி பசங்களை இப்போதெல்லாம் கண்டிப்பது நடக்காது. படிக்காவிட்டால் கடிந்துகொள்ள முடியாது. மீறி, அவர்கள்மீது அக்கறை கொண்டு சொல்ல முயற்சித்தால், தூக்கிலிட்டுக்கொண்டு விடுவேன் என்றெல்லாம் பேசுகிறார்கள். இல்லாட்டா, இந்த பாதிரியாருக்கும், அந்த சிஸ்டருக்கும் கனெக்ஷன் என்றெல்லாம் புரளி எழுதிவிடுவார்கள் என்று பயப்பட வேண்டியிருக்கிறது”. சில இடங்களில், தளிர்களைக் கண்டிக்கிறோம் என்ற பேரில், அவர்கள் கால்களில் சூடம் கொளுத்தும் அறிவில்லாத ஆசிரியர்கள் (இந்தத் தளிர்களெல்லாம், மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வெகு கஷ்ட நிலையில் அவர்கள் பெற்றோர்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். உயர் நிலைப் பள்ளிக்கு பிற்காலத்தில் அனுப்புவதற்கு அவர்களுக்கு வசதி இருக்குமா என்று கூடத் தெரியவில்லை). பல இடங்களில், நமக்கு ஏன் வம்பு என்று கண்டுகொள்ளாமல் இருக்கும் ஆசிரியர்கள்/நம்ம கிட்ட புகார் சொல்லாமல் இருந்தால் போதும் என்று நினைத்து பெற்றோர்/ஆசிரியர் சந்திப்புக்குக் கூடச் செல்லாத பெற்றோர்கள். இந்தத் தற்காலச் சூழலிலும், கொஞ்சம் நட்புடனும், கொஞ்சம் கண்டிப்புடனும் நன்றாகத் தன் பணியைச் செய்யும் சில ஆசிரியர்கள்.. காலம் இப்படி மாறிவிட்டது.

  செல்வராஜன் அவர்களைவிட வயதில் மிகவும் சிறியவனாக இருந்தபோதும், நாங்களும் தக்களி உபயோகப்படுத்தியவர்கள்தான். (தக்களி என்றால் என்ன என்பதே பலருக்குத் தெரியாது). நான் ஆறாவது படித்த பள்ளியில், கிராஃப்ட் டீச்சர் அல்லது மாணவர்கள் நெய்ததை, வருடத்துக்கு ஒரு முறை ஏலம் விடுவார்கள் (மாணவர்களுக்குத் தான்). என் அப்பாதான் தலைமை ஆசிரியராக இருந்தார். என்னையும் ஏலத்தில் கலந்துகொள்ளச் சொன்னார். ஏலத்தில் பங்கு பெறுதல் என்ன என்பதையே அப்போதுதான் தெரிந்துகொண்டேன்.

  “ஆசிரியர் நினைத்தால் எதையும் செய்ய முடியும்” – இது சரிதான். இருந்தாலும், காலத்துக்கு ஏற்றபடி, நல்லாசிரியர்களின், அர்ப்பணிப்பு உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவு என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனாலும் இப்படிச் சொல்வதற்கு எனக்கு எந்த குவாலிபிகிஷேனும் இல்லை. இப்போது ஆசிரியராக இருப்பவர்தான் இதனைச் சரியாக உணர்ந்து சொல்ல முடியும். Our duty is also to appreciate such great souls who dedicate their life to raise future citizens.

 2. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Yes. I also studied in (Madras)a city high school in late 50s. In those days we had a seperate
  period for wood work, drawing, basic electricity (during last but previous period) 2 or 3 days in
  a week. Two periods for PT (last period), One period for Moral or Religious Instructions MI or RI
  as per the student’s choice). Since the school was a Christian one, Bible was taught during RI.
  Composite Maths as well Genl.Maths. I studied in Genl.Maths because of my fears as told by Sh.Selvarajan. But, when I studied my part time BE I had no choice but to learn C.Maths seperately. During school days Powder milk was supplied to every student during recess period.

 3. nparamasivam1951 சொல்கிறார்:

  அந்த தன்னலமற்ற தலை சிறந்த ஆசிரியர்களுக்கு தலை வணங்குவோம். இப்போதும் அது போன்ற ஆசிரியர்கள் இருக்கலாம். ஆயினும் அவர்களால் அரசியல்வாதிகளின் உதவியால் பதவி பெற்ற ஆசிரியர்களை மீறி எதுவும் செய்ய இயலாது. ஆகவே, ஆசிரியர் தேர்வு, பாட திட்ட மாற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் ஒரு மறுமலர்ச்சி காண இயலும் என்பது என் நம்பிக்கை.

 4. gopalasamy சொல்கிறார்:

  Thanks to Sri Selvarajan for bringing back my memories. I also studied in Govt high school in same period. 1960 to 1966. I studied engineering course in 10th and 11th standard. Up to 9th standard , Nesavu (weavingi) , drawing, music, Neethi podhanai (moral class ) , Drill and Hindi were compulsory. So many dedicated teachers were in Government school. If I remember correctly, there was only one matriculation school (convent) in Thanjavoor district.

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்களே,

  பலரின் மனதிலும் –
  ” மலரும் நினைவுகள் “…
  ஏக்கங்கள்…
  உண்மை தான்…
  அந்த சின்சியாரிடி இப்போது
  காணாமல் போய் விட்டது.

  நெல்லைத்தமிழன் மிக அழகாக, நம் எல்லாருடைய
  மன உணர்வுகளையும் சேர்த்து வெளிப்படுத்தி இருக்கிறார்.

  இன்னமும், இப்போதும் அர்ப்பணிப்பு உணர்வுடன்
  பணியாற்றும் ஆசிரியப்பெருமக்களுக்கு
  நம் பாராட்டுதல்களையும்
  வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வோம்.

  மற்ற ஆசிரியர்களை, தங்களையும் இத்தகைய
  லட்சியப்பயணத்திற்கு, மாற்றிக்கொள்ள,
  அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று
  வேண்டிக் கொள்வோம்.

  பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு கொடுக்கும் ஊக்கமும்
  உற்சாகமும் கூட இதற்கு உதவும்.

  ஒரு உருப்படியான இடுகையை பதிப்பித்தோம்
  என்கிற மனத்திருப்தி எனக்கு ஏற்படுகிறது….

  நண்பர் செல்வராஜனுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 6. D. Chandramouli சொல்கிறார்:

  Isn’t it “Pidi Arisi Thittam” that of Mahaperiava’s initiative? Kamaraj implemented Midday Meals Scheme for school kids (to which Sivaji Ganesan contributed Rs. 1 lakh those days). I too can recall the wonderful teachers I had, while studying in Vallaba Agraharam Elementary School, First and Fourth Form in Hindu High School, Triplicane, 2 years in Town High School, Kumbakonam (Math genius Ramanujam also studied there earlier) and finally 2 years in Board High School, Tiruvarur (where DMK leader MK studied earlier). Even in First Form, we had one period per week of Moral Instruction in Hindu High School. I also remember supply of milk to students in Vallaba Agraharam School, Thiruvatteeswaranpet. I was also a recipient of merit scholarship (50% school fees) during my High School years, the eligibility being that one should not be from an affluent family and that the student should pass a qualifying examinatio. Btw, when I studied, 6th to 11th Standards were called I to VI Form. Hindi was an optional subject, and gloriously, I scored 7 in SSLC just by copying the questions on to the answer sheet. Later, in life, I missed out on many a potential friends from the North. That was a pity!

 7. D. Chandramouli சொல்கிறார்:

  Correction: the student should pass a qualifying examination.

 8. selvarajan சொல்கிறார்:

  அய்யா …! இந்த எளியாேனின் இளமைக்கால பள்ளி அனுபவங்களை.. தங்களுக்கே உரித்தான பாணியில் புகைப்படத்துடன் சிறப்பாக பதிவிட்டு இருப்பதற்கு … நன்றியை தெரிவித்துக் காெள்கிறேன்…படித்து பின்னூட்டம் இட்ட நம் தளத்து நண்பர்கள் மற்றும் எப்போதாவது படிக்க போகிற நண்பர்கள் அவர்களின் –பள்ளிக்கால நினைவுகளில் சிறிது நேரமாவது திளைப்பார்கள் என்பது நிஜம் … நன்றியுடன்… செல்வராஜன்….!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.