மாதொரு பாகன் தீர்ப்பு குறித்து எஸ்.குருமூர்த்தி அவர்களின் கருத்துக்கள் …..

one part woman

mathoru baagan-f

மாதொருபாகன் நாவல் மீதான சென்னை
உயர்நீதிமன்றத் தீர்ப்பைப் பற்றி தனது கருத்துக்களை,
தினமணியிலும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டிலும்
திரு.எஸ்.குருமூர்த்தி அவர்கள் –

” கருத்துச் சுதந்திரம் கட்டற்றது அல்ல ”

என்கிற தலைப்பிலான ஒரு கட்டுரையின் மூலம்
வெளியிட்டிருக்கிறார். ஒரு அழகான, ஆழமான
புரிதலோடு இருக்கும் அந்த கட்டுரையை படிக்க
வாய்ப்பில்லாத நமது வலைத்தள நண்பர்களுக்காக –
கீழே பதிப்பிட்டிருக்கிறேன்…

( http://www.dinamani.com/tamilnadu/2016/07/08 )
————————————————————————————–

கருத்துச் சுதந்திரம் கட்டற்றது அல்ல!
By எஸ். குருமூர்த்தி
First Published : 08 July 2016 12:44 AM IST

ஒருபுறம், பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன்
நாவல் மீதான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை,
ஊடகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள
முற்போக்குவாதிகள் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்னொருபுறம், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில்,
அதாவது, கொங்கு மண்டலத்தில், இந்த நாவலின்
கருத்துகளால் மனம் புண்பட்ட கொங்கு வேளாளச்
சமுதாயத்தைப் பொருத்தவரை, வெந்த புண்ணில்
வேலைப் பாய்ச்சுவதாக அமைந்திருக்கிறது இந்தத் தீர்ப்பு.

கொங்கு வேளாளர் சமூகத்தினரின் பெரும் எதிர்ப்பைப்
பெற்றிருந்தது இந்த நாவல். சென்னை நீதிமன்றம்
தனது விரிவான, ஆழமான உரையில் இந்திய
அரசமைப்புச் சட்டம் எவ்வாறு முற்போக்கானது என்றும்
அது உறுதியளிக்கும் சுதந்திரம் எத்தகையது என்றும்
குறிப்பிட்டுள்ளது.

தேசத்தின் அரசியல் மற்றும் அரசமைப்புச் சட்ட
இயங்குசூழலின் பின்னணியில், பெருமாள் முருகன்
வழக்கின் தீர்ப்பானது அந்தச் சமுதாயத்தின் உணர்வுகளைக்
கருத்தில் கொள்ளாமல், “கருத்துச் சுதந்திரம்’ என்கிற
கோணத்தில் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது என்பது
தான் விமர்சனத்துக்கு இடமளிக்கிறது.

மாதொருபாகன் வழக்கு

முதலில், பெருமாள் முருகன் வழக்கு தொடர்பான
உண்மைகளைச் சற்று ஆராய்வோம். இந்த புத்தகத்தின்
பொருண்மை மற்றும் ஆட்சேபணை பற்றி பத்தி 27
முதல் 62 வரை தீர்ப்பில் விவரிக்கப்படும் பகுதி மிகவும்
முக்கியமானது.

மாதொருபாகன் என்ற பெயர், பெருமாள் முருகன்
வசித்துவந்த திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில்
மூலவரின் பெயர்.
இக்கோயிலின் வைகாசி விசாகத் திருநாளில்
நடைபெறும் தேரோட்டத்தின்போது, மலை உச்சியில் உள்ள
வரடிக்கல்லை சுற்றி வந்தால் குழந்தையில்லாத தம்பதிக்கு
குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. அந்தக் குழந்தை
“சாமி கொடுத்த பிள்ளை’ என்று அழைக்கப்படும்.

பெருமாள் முருகனின் “மாதொருபாகன்’ என்கிற நூல்,
1940-களில், காளி, பொன்னா என்கிற குழந்தையில்லா
தம்பதியை மையமாகக் கொண்டது. வைகாசி விசாகத்
திருவிழாவில் இடம்பெறும் காமக்கூத்துக்கு பொன்னா
போக அனுமதிக்குமாறு தனது மகனிடம் ஆலோசனை
கூறுகிறாள் காளியின் தாய்.

அதனால் அவள் கருத்தரிப்பாள் என்கிறாள். காளி
மறுக்கும்போது, பொன்னாவின் சகோதரன்,
“சாமி தந்த பிள்ளை என்பது குழந்தை இல்லாத
பெண்களுக்கு வைகாசி விசாக விழாவில் வேற்றாள்
மூலம் கிடைப்பதுதான்’ என்கிறான்.

அதாவது, “சாமி தந்த பிள்ளை’ என்று பெற்றோரால் பெருமிதத்துடன் போற்றப்படும் குழந்தைகள்,
கணவர் அல்லாத மாற்றார் ஒருவருக்குப் பிறந்தது
என்றாகிறது இந்தக் கூற்று.

விசாக விழாவில் திருச்செங்கோடு பகுதியிலுள்ள
கொங்கு வேளாளப் பெண்கள் காமக்கூத்தில்
பங்குகொள்கிறார்கள் என்பதும், குழந்தையில்லாதவர்கள்
ஒரே இரவுக் களியாட்டத்தில் கருவுறுகிறார்கள்
என்பதும்தான் கதையின் மூலம் பெருமாள் முருகன்
சொல்லவரும் சேதி. அதை நம்பிக்கையின்பாற் பட்டது
என்று காரணப்படுத்துகிறார்.

அத்துடன் விட்டுவிடவில்லை அவர்.

இந்தத் திருவிழா, பெருமாள் முருகனைப் பொருத்தவரை,
தீண்டப்படாத சமூகத்தின் இளைஞர்கள், 30 வயதுக்கு
மேற்பட்ட கொங்குவேளாளர் பெண்கள் மீது தங்கள்
இச்சைகளை ஆண்டுக்கு ஒரு முறை நிறைவேற்றிக்
கொள்ளும் விழா.

இளைஞர்கள் அந்த இரவில் தாங்கள் எத்தனை
பெண்களுடன் உறவு கொண்டார்கள் என்று பெருமை
பேசுவார்கள் என்றும் பெருமாள் முருகன் எழுதுகிறார்.

மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு, ஒரு சமூகம்
இந்த எழுத்தால் புண்பட்டதில் வியப்பென்ன இருக்கிறது?

உண்மைகள் மறுக்கப்படவில்லை

சமூகம் வெளிப்படுத்தும் உண்மைகள் தவறானவை
என்று நீதிமன்றம் உணர்த்தவில்லை. விவாதிக்கப்பட்ட
ஒரே விஷயம், நாவலாசிரியர் எழுதியிருந்த நோக்கம்
வரலாற்று விவரிப்பா அல்லது புனைவா என்பதுதான்.

இது புனைவு என்று சொல்லிப் பெருமாள் முருகன் தப்பித்துக்
கொள்ள முடியாது.
ஏனென்றால், பெருமாள் முருகன் தனது முன்னுரையில்,
திருச்செங்கோடு காமக்கூத்து குறித்துத் தான் ஆய்வு
செய்து ஆவணப்படுத்தியிருப்பதாக சொல்லியிருக்கிறார்.

அரசு அதிகாரிகளால் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு
அழைக்கப்பட்டபோது, சமுதாயத் தலைவர்கள் அந்த
ஆவணங்களைக் கேட்டனர். அவரால் எதையும் காட்ட
இயலவில்லை. மௌனம்தான் அவரது பதிலாக இருந்தது.
ஆசிரியரே முரண்பாடுகளைத் தானே ஏற்றுக்கொண்டது
ஒருபுறமிருக்க, (தான் கூறியதை அவர் பிறகு திரும்பப்
பெற்றிருந்தாலும்) இந்தத் தீர்ப்பில் இந்த புத்தகம்
புனைவாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் கருத்துச் சுதந்திரம் என்பது
கட்டற்றது அல்ல.

மனதைப் புண்படுத்தும் உண்மைகள் அனுமதிக்கப்படலாம்.
ஆனால் புண்படுத்தும் புனைவுகளை சட்டம் அத்தனை எளிதாக
அனுமதித்துவிடுவதில்லை.

சட்டம் தெளிவாக இருக்கிறது: கருத்துச் சுதந்திரம்
என்பது யாருடைய கண்ணியத்தையும் பாதிப்பதாக
இருக்கக் கூடாது. யாரையும் களங்கப்படுத்துதல் கூடாது,

வன்முறையைத் தூண்டுவதாக இருக்கக்கூடாது என்று
மிகத் தெளிவாகவே வரையறுத்திருக்கிறது.

பெருமாள் முருகன் செய்திருப்பதுபோன்று ஒரு
சமுதாயத்தின் ஒட்டுமொத்தப் பெண்களும்
ஒழுக்கமில்லாதவர்களாக சிறுமைப்படுத்தப்படுவதை
ஒருவரது அரசமைப்புச் சட்ட உரிமை, கருத்து சுதந்திரம்
என்று எப்படிச் சொல்லிவிட முடியும்?

எந்தவொரு நாகரிக சமூகத்திலும் பெண்களின் கண்ணியம் மிக
உயர்ந்ததாகக் கருதப்படும் நிலையில், பெண்கள் குறித்த
அத்தகைய கண்ணியமற்ற குற்றச்சாட்டு, கருத்துச் சுதந்திரத்தை
உயர்த்திப் பிடிக்கிறதா?

கொங்கு வேளாளர் பெண்களை விடுங்கள்,
வேறு எந்த ஜாதியை,
மதத்தைச் சேர்ந்த பெண்களாக இருந்தாலும்
இப்படி ஒட்டுமொத்த பெண்களையும் சிறுமைப்படுத்தும்
பதிவை, அது புனைவாகவே இருந்தாலும், ஏற்றுக்
கொள்வார்களா?

இந்தப் புத்தகத்துக்கு எதிராக போராடியவர்களைப் பற்றி
நீதிமன்றம் குறிப்பிடுகையில், “”ஒரு பிரிவினர்,
ஒரு நாட்டுக் கதை அல்லது நிகழ்விட குறிப்பின்
காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் இடத்தில்
தங்களையோ அல்லது தங்கள் மூதாதையரையோ
பொருத்திக்கொள்ள முயலுகிறார்கள்.

எழுத்தாளர் பெருமாள் முருகன் அது புனைவு என்று
நம்புவதால், மற்ற எங்கும் பொருத்திப்பார்க்க முடியாது
என்பதால் அந்த நிகழ்விட விவரிப்பும்கூட
விலக்கிக்கொள்ளப்படுகிறது” என்று பெருமாள் முருகனின்
பதிலை நியாயப்படுத்துகிறது.

ஒரு சாதாரண வாசகனிடம் இந்தப் புத்தகம் ஏற்படுத்தும்
பதிவின் நோக்கம் சிக்கலானது. நூலாசிரியர் பெருமாள்
முருகன் எதை நம்புகிறார் என்பதல்ல விவாதப் பொருள்.

நடந்துமுடிந்தவற்றின் மீதான முருகனின் நம்பிக்கை
என்பது தன் உருவாக்கம். ஏதோ ஒரு பிரிவினரைப் பற்றி
அவர் எழுதவில்லை. அவர் குறிப்பிட்ட சமூகத்துப்
பெண்களைப் பற்றித்தான் எழுதியிருக்கிறார்.

அந்தச் சமூகமும் அந்தச் சடங்கும் நிலவியல்
தொடர்புள்ளவை. வேறு இடத்திற்கோ வேறு சமூகத்தினருக்கோ
தொடர்பு படுத்த இயலாது.

அவர் கொங்கு வேளாளர் பெண்களைத்தான் குறிப்பிட்டு
இழிவுபடுத்துகிறார் என்பது, அவர் தனது கதைக்குத்
தேர்ந்தெடுத்திருக்கும் இடம், பின்னணி, சம்பிரதாயச்
சாட்சிகள் ஆகியவை சந்தேகத்துக்கு இடமில்லாமல்
உறுதிப்படுத்தப்படுகிறது.

முருகன் குறிப்பிடும் அந்தச் சமுதாயம் அல்லது அதன்
மூதாதையர் ஆக்ரோஷமானவர்களாக இருந்திருந்தால்
என்னவாகியிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். அங்கே
அமைதிப் பேச்சு நடந்திருக்காது.
மிகப்பெரும் வன்முறைதான் நிகழ்ந்திருக்கும்.

வன்முறைக்கான அச்சுறுத்தல், கருத்துச் சுதந்திரத்தின்
மீதான நீதியை மவுனமாக்குகிறது, கட்டுப்படுத்துகிறது
என்பது உலகறிந்த உண்மை. நடைமுறை அனுபவம்.

சல்மான் ருஷ்டி எழுதிய சாத்தானின் கவிதைகள்
நூலுக்கு தடை விதிக்கப்பட்டது. அது மிகவும் பிரபலமான
வழக்கு. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்லாமிய
மதத் தலைவர் அயூத்துல்லா கொமேனி, அந்த நூலை
எழுதிய சல்மான் ருஷ்டிக்கு பத்வா பிறப்பித்தார்.
அவர் இப்போதும் தன் உயிருக்குப் பயந்து
பாதுகாப்பில்தான் வாழ்கிறார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வந்த, கமல்ஹாசனின்
“விஸ்வரூபம்’ படத்தை நினைத்துப் பாருங்கள்.
தணிக்கைத் துறை அனுமதித்த அந்தத் திரைப்படத்தை,

முஸ்லிம்கள் சென்னையை செயலிழக்கச் செய்ததால்
சட்டம் – ஒழுங்கு பிரச்னையை முன்வைத்துத்
தடை செய்தது தமிழக அரசு.
அண்டை மாநிலங்களில் திரையிடப்படுவதைத் தடுக்கும்
அளவுக்கு இந்த தடையுத்தரவு அமைந்தது. ஏன் சில
வெளிநாடுகளிலும்கூட “விஸ்வரூபம்’ தடை செய்யப்பட்டது.

இதே கதைக்கருவை சற்று மாற்றி,
கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள்,
பெருமாள் முருகனுக்கு குறிப்பிடும்
இன்னொரு சமுதாயப் பெண்களைக் கருத்தரிக்கச் செய்வதாக
இருந்திருந்தால்,

இதே பிரச்னை மிகப்பெரிய வன்முறையைத்
தமிழகம் முழுவதும் கட்டவிழ்த்து விட்டிருக்கும்.
அப்போது, இதே முற்போக்கு வாதிகள் பெருமாள் முருகன்
ஆதரவுக் குரல் எழுப்பியிருப்பார்களா?
நீதிமன்றம் அதைக் குறித்து ஏன் சிந்திக்கவில்லை
என்று தெரியவில்லை.

அரசமைப்புச் சட்டத்தின் கருத்துச் சுதந்திரம் என்பது
கட்டற்றது அல்ல.

மனதைப் புண்படுத்தும் உண்மைகள்
அனுமதிக்கப்படலாம்.

ஆனால் புண்படுத்தும் புனைவுகளை
அத்தனை எளிதாக அனுமதித்து விடுவதில்லை.

சட்டம் தெளிவாக இருக்கிறது:
கருத்துச் சுதந்திரம் என்பது யாருடைய
கண்ணியத்தையும் பாதிப்பதாக இருக்கக் கூடாது.

யாரையும் களங்கப்படுத்துதல் கூடாது, வன்முறையைத்
தூண்டுவதாக இருக்கக்கூடாது –

என்று மிகத் தெளிவாகவே வரையறுத்திருக்கிறது.

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

மாதொரு பாகன் தீர்ப்பு குறித்து எஸ்.குருமூர்த்தி அவர்களின் கருத்துக்கள் ….. க்கு 8 பதில்கள்

 1. Karthik சொல்கிறார்:

  Nalla Pathivu. Nandraka anukapattu irrukirathu….Gurumoorthy ku nandri.

 2. விவேக் காயாமொழி சொல்கிறார்:

  சாத்தானின் கவிதைகள், இன்னொசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்,டாவின்சி கோட், தஸ்லிமா இவர்களுக்கு ஒரு நியாயம்,பெருமாள் முருகனுக்கு ஒரு நியாயம்.
  நல்ல தீர்ப்பு, நல்ல சட்டம்.. இதுபோன்ற நிகழ்வுகளால் தான் பெரும்பான்மை சமுதாயம் தன் மென்மையை அழித்து இறுக்கமாக மாறுகின்றது.
  விளைவுகள் மிக மோசமாக அமைந்து விடுகின்றது.
  ஒருவேளை இந்த நடுநிலை, முற்போக்கு ஆட்களுக்கு இதுவே நோக்கம் ஆக இருக்குமோ?

 3. drkgp சொல்கிறார்:

  Mr Gurumurthy’s concern for the society is as good as his concern
  for the economy. Superb analysis.
  Since there was no anarchy in the region after the publication of
  the book, the court has taken a lenient view of the sensation seeking novel.

 4. செந்தில் - கோவை. சொல்கிறார்:

  இந்த பிரச்சினை சம்பந்தமாக அனைவருக்கும் புரியும்படி மிக எளிதாக விளக்கிவிட்டார்…..
  எழுத்தாளர்கள் அனைவரும் தனது சமுதாய பொருப்புகளை உணர்ந்து தனது படைப்புகளை படைக்க வேண்டும்….
  உணர்வுகள் அனைவருக்கும் சமம்……

 5. johan paris சொல்கிறார்:

  குருமூர்த்தி, துக்ளக் உருவாக்கம், எதற்கும் அவரால் நியாயம் கற்பிக்க முடியும்.சங்கரராமன் கொலைத் தீர்பிலும் பூரித்தவர். அவரளவு எனக்கு அறிவில்லை. அதனால் அது ஒரு பக்கமிருக்க, எளியேன் என் கேள்வி! இப்புத்தகத்துக்குப் பிரச்சனை “களவு நடந்த ஆறாம் மாதம், நாய் குலைத்ததாக, வெளிவந்து இவ்வளவு காலத்தின் பின் பிரச்சனை ஏன்? வந்தது. குருமூர்த்தி – இதைச் சற்று அவரறிவாற்றலால் கண்டு பிடித்தெழுதினால் பலருக்கு உதவும்.

  • Tamilian சொல்கிறார்:

   சங்கர்ராமன் கொலையில் தவறாக கைது செய்து களங்க படுத்தினர் , இந்து மத விரோத நோக்கு உள்ள காவல் அதிகாரி ஊடகங்களில் குறிப்பிட்ட நபர்களை மட்டும் நறபெயருக்கு களங்கம் வருமாறு பேட்டிகள் அளித்தார். சரியாக புலன் விசாரணை செய்து உண்மை வெளிப்பட வழி செய்யவில்லை.

 6. selvarajan சொல்கிறார்:

  ஏதோ ஒரு இடத்தில் வெறும் வாயால் பேசிவிட்டு செல்வதற்கும் — அதை ஆவணப் படுத்துவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன — முற்போக்கு என்று கூறிக் கொண்டே ” பிற்போக்குகளை “விதையூன்றி வளர்க்க நினைப்பது … சரியா என்பது தான் கேள்வி .. ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.