சு.சுவாமியின் அடுத்த அட்டாக் – குறி யார் – கலைஞர்..?, ப.சி..?, ஷக்திகாந்த தாஸ் ….?

ss

தற்போது திரு.சுப்ரமணியன் சுவாமி குறி வைப்பது
பொருளாதார துறைச் செயலாளர் திரு.ஷக்திகாந்த தாஸ்
அவர்களுக்கு….

ஆனால், அதில் கூடவே சிக்கிச்சுழன்று வருவது –
2007-ல் தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர்
கருணாநிதியும், மத்திய நிதியமைச்சராக இருந்த
திரு.ப.சி.அவர்களும் …!!!

டாக்டர் சுப்ரமணியன் சுவாமி – தனது
அரசியல் எதிரியான திரு.அருண் ஜெட்லியை சுற்றி உள்ள
ஒவ்வொருவராக குறி பார்க்கிறார்.

ரிசர்வ் வங்கி கவர்னர் திரு ரகுராம் ராஜன் கதை முடிந்து
விட்டது. அடுத்து பொருளாதார ஆலோசகர் திரு.அர்விந்த்
சுப்ரமணியன் மீது திரு.சு.சுவாமியால் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

மோடிஜி குறுக்கே வந்து டைம்ஸ் நவ்
பேட்டி மூலமாக எச்சரித்ததன் மூலம் அது கொஞ்சம்
அடங்கி இருக்கிறது.

திரு.சு.சுவாமி குறி வைத்திருக்கும் இன்னொரு நபர்,
நிதியமைச்சர் திரு.ஜெட்லி அவர்களுக்கு துணையாக
இருக்கும் பொருளாதாரத்துறை அமைச்சகத்தை
சேர்ந்த செயலாளர் திரு.ஷக்திகாந்த தாஸ்.

தமிழக IAS cadre-ல் இருக்கும், ஒடிஷாவை சேர்ந்த
இந்த அதிகாரி பல ஆண்டுகள் தமிழகத்தில் பல
பொறுப்பான பதவிகளில் இருந்தவர். கடைசியாக,
2006-ல் கலைஞர் முதலமைச்சராக பதவியில் அமர்ந்தபோது,
Industries secretary -யாக பொறுப்பு வகித்தார்.

சரி – திரு.சு.சுவாமி என்ன சொல்கிறார்….?

சன்மினா – மின் நுண்கருவிகளை உற்பத்தி செய்யும்
ஒரு அமெரிக்க நிறுவனம். 2007-ல் அது சென்னையில்
ஒரு உற்பத்தி மையத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது.
சென்னை உற்பத்தி மையத்தின் உண்மையான
பங்குதாரர்கள் யார், யார்…
அரசியல்வாதிகள் யாருக்காவது,
குறிப்பாக திரு.ப.சி., கலைஞர் ஆகியோருக்கு இதில்
தொடர்பு எதாவது இருக்கிறதா என்பது குறித்து எந்த
விவரமும் இல்லை….

எல்லாம் கேள்விக்குறியாகவே உள்ளது.
ஆனால், முழு செய்தியையும் விவரமாகப் படித்தால்
ஓரளவு விவகாரம் புரிகிறது….!!!

2007-ல், சன்மினா நிறுவனத்தின் சார்பாக, சென்னையை
அடுத்த ஒரகடத்தில் ஒரு உற்பத்திக் கூடம் ( Electronic Accessories manufacturing centre ) நிறுவ முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
அந்த நிறுவனத்திற்கு தமிழக அரசு 100 ஏக்கர்
அளவு நிலத்தை 1970-ஆம்
ஆண்டின் விலை மதிப்பீட்டின்படி கொடுக்கிறது.
இங்கு தான் சிக்கல் எழுகிறது….

1970-ஆம் ஆண்டின் விலை மதிப்பீட்டின்படி இந்த இடத்தின்
விலை மதிப்பு – ஏக்கருக்கு 19.5 லட்சம் ரூபாய். இதிலும்
தமிழக அரசால் ஏக்கருக்கு 4 லட்சம் ரூபாய் மான்யம்
தரப்பட்டு, விலை ஏக்கருக்கு 15.5 லட்சம் ரூபாய் என்று
நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

ஒப்பந்தம் கையெழுத்தான ஜூலை 2007-ல்
இந்த இடத்தின் அப்போதைய விலைமதிப்பீடு ஏக்கருக்கு
சுமார் 4 கோடி ரூபாய்… ஏக்கருக்கு நான்கு கோடி ரூபாய்
மதிப்புடைய நிலம் வெறும் 15.5 லட்சம் என்கிற விகிதத்தில்,
மொத்தம் 100 ஏக்கர் நிலம் இந்த நிறுவனத்திற்கு
அளிக்கப்பட்டிருக்கிறது.

விலை வித்தியாசம் –
( ஒரு ஏக்கருக்கு 4 கோடி – 15.5 லட்சம் = 3.845 கோடிகள்;
100 ஏக்கருக்கு : 3.845 x 100 = 384.5 கோடிகள்….!!! )

அந்த நிறுவனம் ஒரகடத்தில் முதலீடு செய்யப்போவதாக
சொன்ன மொத்த தொகையே – 250 கோடிகள் தான்.
4000 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம் என்று
சொன்ன கம்பெனி அதிக பட்சமாக வைத்துக் கொண்டது
வெறும் 550 பேரைத்தான்.

இந்த கம்பெனியை இத்தகைய சலுகைகளுடன்
செயல்பட அனுமதித்த விதத்தில், தமிழகத்திற்கோ,
அரசுக்கோ – எந்த பலனும் கிட்டவில்லை.
அப்படியானால் இவற்றின்
பலனை அனுபவித்தவர்கள் யார்….?

இதற்கான மாநில மற்றும் மத்திய அரசின் அனுமதிகள்
மின்னல் வேகத்தில் கிடைக்கப்பெற்றன என்று
கூறும் திரு.சு.சுவாமி, இந்த ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்ட தமிழகத்தின் தொழில்துறை செயலாளர்
பொறுப்பிலிருந்த திரு.ஷக்திகாந்த தாஸ்,
அடுத்த வருடமே, அதாவது – 2008-ல்
திரு.ப.சி அவர்களால், மத்தியில் தமது பொறுப்பிலுள்ள
மத்திய நிதியமைச்சகத்திற்கு அழைத்துக் கொள்ளப்பட்டார்
என்றும் கூறுகிறார்…

தற்போது திரு.சு.சுவாமி திரு.தாஸ் மீது தனது
தாக்குதலை மேற்கொள்வதற்கு முக்கிய காரணம், ஏர்-செல்
மேக்சிஸ் வழக்கு சம்பந்தமாக, திரு.ப.சி. மீது தான் தொடர்ந்த
வழக்கில் ரெவினியூ செயலாளராக இருந்த / இருக்கும்,

திரு.தாஸ், திரு ப.சி.அவர்களுக்கு பதவியில் இல்லாதபோதும் தொடர்ந்து பாதுகாப்பு தந்தார்/ தருகிறார்
என்பதே…!!!

திரு.சு.சுவாமி தன் மீது தொடுத்திருக்கும் அம்பிலிருந்து
தப்பிக்க, தன்னை பாதுகாத்துக்கொள்ள,
ஒரு கேடயத்தைப் பிடித்திருக்கிறார் திரு.ஷ.கா.தாஸ்.

அதென்ன கேடயம்…?
தொழில் துறை செயலாளரான தான் ஒப்பந்தத்தில்
அரசு சார்பாக கையெழுத்திட்டிருந்தாலும்,
அதில் கூறப்பட்டிருக்கும் ஷரத்துக்களுக்கு தான்
பொறுப்பல்ல. அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை
செயல்படுத்துவது தான் தனது வேலை. எனவே
அப்போதைய தமிழக அமைச்சரவையின் முடிவையே
(அதாவது கலைஞரின் முடிவையே ) தான்
செயல்படுத்தியதாகக் கூறுகிறார் திரு.தாஸ்.

அதாவது முடிவெடுத்தது கலைஞர் தான். எனவே,
நல்லதோ, கெட்டதோ அதன் பலன் போகட்டும் கலைஞருக்கே….
வெறுமனே கையெழுத்து போட்டதற்காக நான்
இதற்கெல்லாம் பொறுப்பாகி விட மாட்டேன்….!!!

இதில் வேடிக்கை என்னவென்றால் –
அப்போது எடுக்கப்பட்ட முடிவு சரியான முடிவு தான்
என்று கூறவோ, 2007-ல் விற்கப்பட்ட நிலத்திற்கு,
1970-ஆம் ஆண்டைய விலையை நிர்ணயித்தது ஏன்
என்று விளக்கம் கூறவோ, சற்றும் முயற்சி
எடுக்கவில்லை திருவாளர் தாஸ். எதுவானாலும்
கலைஞர் அரசே பொறுப்பு என்று கையை காட்டிவிட்டு
ஒதுங்குகிறார்….!!!

திரு.சு.சுவாமி இந்த பிரச்சினையை எழுப்பி சில நாட்கள்
ஆகி விட்டன என்றாலும், கலைஞர் இந்த விஷயத்தில்
மட்டும் வாயே திறக்காமல் பேசாமடந்தையாக இருக்கிறார்.

லேடஸ்ட்டாக, காஷ்மீரில், அமர்நாத் யாத்திரை
போயிருக்கும் தமிழக பக்தர்களின் நிலை பற்றி
கவலை தெரிவிக்கும் அளவிற்கு
மற்ற விஷயங்களில் சுருசுருப்பாக இருக்கும்
கலைஞர் இந்த விஷயம் குறித்து மட்டும் எதுவும்
பேசாதது வியப்பையே தருகிறது….

அநாவசியமாக வாயைக் கொடுத்து, சு.சுவாமியிடம்
சிக்கிக் கொள்ளப்போகிறோமே என்று பயமோ என்னவோ..!

திரு.ப.சி.அவர்களும் இது குறித்து, கருத்து எதுவும்
இதுவரை கூறியதாகத் தெரியவில்லை.

தமிழக அரசியல்வாதிகள், முதல்வர் வேட்பாளர்கள்
எல்லாரும் குறட்டை விடும் சப்தம் கேட்கிறது…!!!

எனவே, இந்த விஷயம் இதற்கு மேல் சூடு பிடிப்பதும்,
பிடிக்காமல் போவதும் திரு.சு.சுவாமி கையில் தான்
இருக்கிறது…..

யாரோ சொன்னார்கள் – திரு.சு.சுவாமியை
இந்தியாவின் பெஸ்ட் ப்ளாக் மெயிலர் என்று…..!!

சரியாகத்தானே சொல்லி இருக்கிறார்கள்…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

One Response to சு.சுவாமியின் அடுத்த அட்டாக் – குறி யார் – கலைஞர்..?, ப.சி..?, ஷக்திகாந்த தாஸ் ….?

  1. selvarajan சொல்கிறார்:

    தன்னுடைய சொந்த இடத்தில் ஒரு விரற்கடை கூட வீட்டுக் கொடுக்க மனம் வராத மனித ஜென்மம் — அரசியல்வாதியாக — கார்பொரேட் கொள்ளையர்களாக அவதாரம் எடுத்தவுடன் ஊரான் பொது இடத்தை அபகரிப்பதும் — அடிமாட்டு விலைக்கு வாங்கி குவிப்பதும் — அதுவே ஆட்சில் இருந்தால் ” தீவுகளையும் — பல நூறு சதுர கிலோமீட்டர் நிலப் பரப்பை விவசாய கேடுக்கு அடிக்கோல ” மீத்தேன் ” போன்ற திட்டங்களுக்கும் — சன்மீனா போன்ற நிறுவனங்களுக்கும் தாராளமாக கொடுப்பதையும் வாடிக்கையாக கொண்டு செயல்படுவது … ஏன் … ? திருந்த வேண்டியது யார் … ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.