‘மார்பிங்’ சிக்கல்களை தடுக்க – அரசு என்ன செய்ய முடியும் …?

salem-woman-facebook problem

‘மார்பிங்’ சிக்கல்களை தடுக்க –
அரசு என்ன செய்ய முடியும் …?

தமிழ்நாட்டில் பேஸ்புக் – பதிவுகளால் அண்மையில்
சில இளம் பெண்களுக்கு நிகழ்ந்த விபரீதங்கள்
அனைவரும் அறிந்தவையே…

இது குறித்து, சேலம் காவல்துறை கண்காணிப்பாளர்,
திரு அமித்குமார் சிங் ஒரு செய்தி அறிக்கை
வெளியிட்டிருக்கிறார்..

அதிலிருந்து –

—————————————————-

பேஸ்புக்’ சமூகதளத்தில், தன்னுடைய புகைப்படம்
ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டு, போலியான பெயரில்
இடம்பெற்றதால், சேலத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்
தற்கொலை செய்து கொண்ட சம்பவம்,
இந்திய சட்டங்கள் குறித்தும், குறிப்பாக பேஸ்புக் குறித்தும்
பல்வேறு பிரச்னைகளை, கேள்விகளை,சந்தேகங்களை
எழுப்பியுள்ளது.

இந்த போலியான பேஸ்புக் கணக்கை முடக்கவும்,
குற்றவாளியை கைது செய்யவும், காவல்துறை ஏன்
உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி
எழுந்தது.

இவ்வாறான பேஸ்புக் கணக்கை முடக்கவோ,
நீக்கவோ, காவல் துறையால் முடியாது; பேஸ்புக் நிறுவனம்
மட்டுமே அதை செய்ய முடியும்.

இதுபோன்று ஆபாச புகைப்படம் அல்லது
வேறொருவருடைய தகவல்களை திருடியதாக புகார்
கொடுத்த பின்பும், குறிப்பிட்ட பேஸ்புக் கணக்கை முடக்க,

காவல்துறைக்கு எந்த சிறப்பு அதிகாரத்தையும்
அந்நிறுவனம் அளிப்பதில்லை.

இந்திய சட்டங்களுக்கு எதிரானதாக இருந்தாலும்
இதுபோன்ற சம்பவங்களில், பேஸ்புக் கணக்கை
பார்ப்பதற்கோ, அதை தடுப்பதற்கோ, விசாரிக்கவோ,
இதுவரை பேஸ்புக்கில், காவல் துறைக்கு என தனியாக
எந்த வசதியும் இல்லை.

அவ்வாறு காவல்துறை புகார் கொடுத்தாலும், பேஸ்புக்
வரையறையின் அடிப்படையில் எந்த விதிமீறலும்
இல்லை என, பேஸ்புக் முடிவு செய்துவிட்டால்,

காவல்துறையால் எதுவும் செய்ய முடியாது.

அவசர காலத்தில், தொடர்பு கொண்டு நிலைமை குறித்து
விவரித்து தகவல்களை பெறுவதற்கு, பேஸ்புக் சார்பில்
எந்த அதிகாரியோ, தொலைபேசி எண்களோ கிடையாது.

போலியான பெயர்களில் கணக்கு அல்லது ஆபாச
படங்களை வெளியிடுவது போன்றவை, மிகப்பெரிய
விளைவுகளை ஏற்படுத்தும் இச்சூழ்நிலையில்,
காவல்துறையால் மிகத் தீவிரமாக செயல்பட முடியாத
நிலையே உள்ளது.

இதுபோன்ற பிரச்னைகளால் அதிகம் பாதிக்கப்படுவது
பெண்களாக இருந்தாலும், காவல் துறையால்
உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

அமெரிக்காவில் உள்ள இந்த நிறுவனத்தின் சட்ட
விவகாரங்கள், அயர்லாந்தில் கவனிக்கப்படுகிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டிய முழு அதிகாரமும்,
வாய்ப்புகளும், பேஸ்புக் நிறுவனத்திடம் உள்ள நிலையில்,
‘உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை’ என்ற அவப்பெயரே
காவல் துறைக்கு கிடைக்கிறது.

பேஸ்புக் பக்கத்தை முடக்குவதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு
உடனடியாக, சில நிவாரணம் கிடைக்கும். அதே நேரத்தில்,
இந்த மோசடியை செய்த குற்றவாளியை
கண்டுபிடிப்பது தான் முக்கிய பிரச்னையாக உள்ளது.

ஐ.பி., அட்ரஸ் எனப்படும், குற்றவாளி பயன்படுத்தும்
கம்ப்யூட்டர் எங்குள்ளது என்பது குறித்த, ‘இன்டர்நெட்
புரோட்டோகால்’ முகவரி, எவ்வளவு விரைவாக
கிடைக்கிறதோ, அவ்வளவு விரைவாக காவல் துறையால்
நடவடிக்கை எடுக்க முடியும்.

இதுபோன்ற விபரங்களை, பேஸ்புக்கின் சட்டப் பிரிவை,
இணையதளம் மூலம் உடனடியாக கேட்கும் வசதி உள்ளது.

வழக்கு தொடர்பான விபரம் உள்ளிட்ட தகவல்களுடன்
இந்த கோரிக்கையை பேஸ்புக் நிறுவனத்திற்கு அனுப்ப
வேண்டும். ஆனால், கேட்கும் தகவல்கள் விரைவாக கிடைப்பதில்
தான் மிகப்பெரிய சிக்கல் உள்ளது.

அரசு மற்றும் காவல் துறையின் அதிகாரப்பூர்வமான,
இ-மெயிலில் இருந்து தான் இந்த கோரிக்கை வந்துள்ளதா
என்பதை உறுதி செய்து, சில நிமிடங்களிலேயே
இந்த தகவல்களை தர முடியும்.

ஆனால், இந்த கோரிக்கை வந்து சேர்ந்ததாக
ஒரு ஒப்புதல் மட்டுமே உடனடியாக கிடைக்கிறது.

காவல்துறை கேட்கும் தகவல்கள், ஒரு மாதத்துக்கு
பிறகே பேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கிறது.
அதுவும், அதன் வரையறைக்கு உட்பட்டதாக இருந்தால்
தான் தரப்படுகிறது.

இன்டர்நெட்மோசடிகள், பேஸ்புக் பயன்படுத்துவோர்
எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற
குற்றங்களின் எண்ணிக்கையும் உயரக்கூடிய அபாயம்
அதிகமாக உள்ளது; தற்போதுள்ள சூழ்நிலை,
திருப்திகரமாக இல்லை என்பதே உண்மை.

இந்த வகையில், இரண்டு ஆலோசனைகள் உள்ளன.

முதலாவது, காவல் துறையிடம் இருந்து புகார் வந்ததுமே,
குறிப்பிட்ட கணக்கை, பேஸ்புக் நிறுவனம்
முடக்க வேண்டும்; பின், தன் வரையறைக்கு
உட்பட்டதாக உள்ளதா என்பதை விசாரித்து, அதை
நீக்குவது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

இரண்டாவது, வழக்கின் விரைவான விசாரணைக்கு
தேவைப்படுவதால், ஐ.பி., அட்ரஸ் குறித்த தகவல்கள்,
காவல் துறைக்கு உடனடியாக தரப்பட வேண்டும்.

ஒரு நாட்டின் சட்டங்களை, பேஸ்புக் நிறுவனம்
மதிக்க வேண்டும். தனிநபருக்கான பாதுகாப்பை,
உரிமையை, இந்திய அரசியலமைப்பு சட்டமும்,
இந்திய சட்டங்களும், நீதிமன்றங்களும் முழுமையாக
பாதுகாக்கின்றன; அதில் பேஸ்புக் நிறுவனத்துக்கு
தனி அக்கறை தேவையில்லை.

மேற்கூறப்பட்ட இரண்டு ஆலோசனைகளை, பேஸ்புக்
நிறுவனம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இல்லாவிட்டால், சைபர் குற்றங்களில் இருந்து அப்பாவி
மக்களை காப்பாற்ற பார்லிமென்ட்டும், அரசும் உடனடியாக
தலையிட வேண்டியிருக்கும்.

மற்றொரு முக்கியமான விஷயம், ஒரு புகைப்படத்தில்
உள்ளவரின் தனிப்பட்ட சுதந்திரம் தொடர்பானது. ஒரு தனி
நபருடைய புகைப்படத்தை, அவருடைய
அனுமதி இல்லாமலேயே பேஸ்புக்கில் உள்ள எவர்
வேண்டுமானாலும் பயன்படுத்தும் நிலைமை உள்ளது.

ஆபாச படத்தை வெளியிடுவது குற்றமாக கருதப்படும்
நிலையில் இது குற்றமாகபார்க்கப்படுவதில்லை.
இதனால் தான், ‘மார்பிங்’ செய்வது, போலிப் பெயரிலான
கணக்குகளுக்கு மற்றொருவரின் படத்தை பயன்படுத்துவது
அதிகரித்து வருகிறது.

இதை இந்நிறுவனம் செய்யாவிட்டால்,
இந்தியர்களின் பாதுகாப்புக்காக இதை பார்லிமென்ட்
அல்லது அரசு வலியுறுத்த வேண்டும்.
பேஸ்புக் என்பது பலருடைய வாழ்க்கையின் ஒரு
அங்கமாகிவிட்டது. ஆனால், ஒரு பாதுகாப்பான
அமைப்பாக அது தற்போது இல்லை. மற்றொரு உயிரை
பலி கொடுப்பதற்கு முன், இந்த நிலையை
மாற்றியமைக்க வேண்டும்.

—————————————————————–

இந்த செய்தி அறிக்கையின் மூலம் சில
விஷயங்கள் மீண்டும் உறுதிப்படுத்தப்படுகின்றன –

“பேஸ்புக்” பாதுகாப்பானது அல்ல….
“பேஸ்புக்” நிறுவனம் நமது காவல் துறை /
மற்றும் அரசு ஏஜென்சிக்கள்
விடும் வேண்டுகோளை ஏற்பதில்லை.
தேவைப்படும் விவரங்களையும் உடனடியாக
தருவதில்லை…

இந்தியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதிகளில்,
பேஸ்புக் செயல்படும் – ஆனால், இந்திய நாட்டின்
சட்டதிட்டங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காது….

கிரிமினல் வழக்குகள் சம்பந்தப்பட்ட – பிரச்சினைக்குரிய
பேஸ்புக் பதிவுகளை உடனடியாக முடக்க
காவல் துறைக்கு எந்தவித அனுமதியும் கொடுக்காது.

தன்னுடைய சொந்த சட்டதிட்டங்களின்படியே
செயல்படும்….

———————————–

இது எந்த விதத்தில் சரி….?

இத்தகைய ஒரு கேவலமான நிலை தொடர
இந்திய அரசு ஏன் அனுமதிக்க வேண்டும்…?

கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்கும் ஒரு வெளிநாட்டு
நிறுவனம், தனது விருப்பம் போல் இங்கு செயல்பட
ஏன் அனுமதிக்கப்பட வேண்டும்….?

இந்திய அரசு விதிக்கும் நிபந்தனைகளுக்கு
கட்டுப்படுவதாகவும், ஒத்துழைப்பு தருவதாகவும்
உறுதி அளித்தாலொழிய பேஸ்புக் இந்தியாவில்
செயல்பட அனுமதி அளிக்கப்படாது என்று
நிபந்தனை விதித்து –

மத்திய அரசு பேஸ்புக் இந்திய ஏஜென்சிக்களுடன்
ஒத்துழைக்கும் வழியை உருவாக்க வேண்டும்.

மிக அவசியமான தருணங்களில்,
உடனடியாக பேஸ்புக் கணக்கை தற்காலிகமாக

முடக்குவதற்காவது, மாநில காவல்துறைக்கு
அதிகாரங்கள் பெற்றுத்தரப்பட வேண்டும்.

இந்தியாவின் இறையாண்மைக்கு உடன்படுவதாக
இருந்தால் மட்டுமே, இந்திய எல்லைக்குள்
செயல்பட முடியும் என்பதை மத்திய அரசு
பேஸ்புக் நிறுவனத்திற்கு கடுமையான வழிகளில்
உணர்த்த வேண்டும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to ‘மார்பிங்’ சிக்கல்களை தடுக்க – அரசு என்ன செய்ய முடியும் …?

 1. Karthik சொல்கிறார்:

  We all need to write to I&B Minister and Law Minister.
  Ayya
  neengalae oru nandrana draft kudu uthavi seithal, athai kandippa nam RTI moolam allathu Grievance moolam arasangathirku annupalam..

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே,

   இது நம்மால் ஆகக்கூடிய காரியம் அல்ல.
   அரசு அமைப்புகளாலேயே மேலெடுத்துச் செல்லப்பட
   வேண்டிய விஷயம்.
   அதற்கான பின்னணி
   துவங்கி விட்டது என்று தெரிகிறது…
   பொறுத்திருந்து பார்ப்போம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. Antony சொல்கிறார்:

  100% agreed.

 3. R Karthik சொல்கிறார்:

  உண்மை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.