ஆடு நனைகிறதே – கவலைப்படும் ஓநாய் – கலைஞருக்கு தோழர் ஜி.ஆர். சூடான பதில்….

.

.

நேற்று காலை முரசொலியில் – தன் வழக்கப்படி,
தனக்குத்தானே கேள்வியும் எழுப்பிக் கொண்டு, பதிலையும்
கூறும் கலைஞர், கம்யூனிஸ்ட் தலைமையை வம்புக்கு
இழுத்தார்….

““பொதுவுடமைவாதிகள் ஒரு சிலரின் சுயநலம் காரணமாக
தமிழக சட்டமன்றத்தில் எத்தனையோ ஆண்டு காலமாக
ஒலித்து வந்த கம்யூனிசக் கொள்கைகளின் வாய்
மூடப்பட்டுவிட்டதே” என்று அவரே ஒரு கேள்வியெழுப்பி,

அதற்கு அவரே பதிலாக, “அதைப்பற்றி நாம் கூறினால்
நம்மை கடுமையான வார்த்தைகளால் தாக்குவதில் தான்
அந்த ஒரு சிலர் கவனம் செலுத்துகிறார்கள். கம்யூனிசக்
கொள்கைகள் சட்டமன்றத்தில் எதிரொலிக்கப்படாமல்
இருக்கிறதே என்று நாம் தான் வருத்தப்படுகிறோமே தவிர –

அக்கட்சியின் தலைவர்கள் வருத்தப்படுவதாக
தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

கம்யூனிசக் கொள்கைகள் சட்டமன்றத்தில்
ஒலிக்கவில்லையே என்று கலைஞருக்கு கவலையாம்….!!!
என்ன முயன்றும் இடதுசாரி கட்சிகளை தம் கூட்டணிக்குள்
கொண்டு வரும் முயற்சி பலிக்கவில்லையே என்கிற
எரிச்சலில், கம்யூனிஸ்ட் தலைவர்களை தாக்கியதற்கு
உடனடியாக, நேற்று மதியமே சுடச்சுட பதிலடி
கொடுத்திருக்கிறார், சிபிஎம் மாநிலச் செயலாளர்,
தோழர் ஜி.ராமகிருஷ்ணன்.

நான் எதிர்பார்த்த மாதிரியே ஜி.ஆர்.-ன் பதிலை எந்த
தமிழ் நாளேடும் ஒழுங்காக பிரசுரிக்கவில்லை.
எனவே, தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களது
அறிக்கையை முழுவதுமாக கீழே பதிப்பிக்கிறேன்….

——————————————————————-

g-r-karunanidhi

திமுக தலைவர் கலைஞர் அவர்கள் 27.7.2016 முரசொலி
ஏட்டில் “பொதுவுடமைவாதிகள் ஒரு சிலரின் சுயநலம்
காரணமாக தமிழக சட்டமன்றத்தில் எத்தனையோ
ஆண்டு காலமாக ஒலித்து வந்த கம்யூனிசக் கொள்கைகளின்
வாய் மூடப்பட்டுவிட்டதே” என்று கேள்வியெழுப்பி, அதற்கு
பதிலாக, “அதைப்பற்றி நாம் கூறினால் நம்மை கடுமையான
வார்த்தைகளால் தாக்குவதில் தான் அந்த ஒரு சிலர் கவனம்
செலுத்துகிறார்கள். கம்யூனிசக் கொள்கைகள் சட்டமன்றத்தில்
எதிரொலிக்கப்படாமல் இருக்கிறதே என்று நாம் தான் வருத்தப்படுகிறோமே தவிர அக்கட்சியின் தலைவர்கள்
வருத்தப்படுவதாக தெரியவில்லை” என்றும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் –
” கம்யூனிஸ்ட்டுகள் வளராமல் பார்த்துக் கொண்டேன் ”
என்று கடந்த காலத்தில் குறிப்பிட்ட கலைஞர் தற்போது
சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட்டுகள் இல்லையே என்று
வருத்தப்பட்டிருக்கிறார்.

ஆனால், சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள்
இல்லாமல் போனதற்காக கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள்
வருத்தப்படவில்லையே என்றும் அவர் மட்டும் தான்
வருத்தப்படுவதாகவும்,

அவர் அப்படி வருத்தப்படுவதற்காக அவரை தாக்குவதில்
தான் ஒரு சிலர் கவனம் செலுத்துவதாகவும், அந்த ஒரு
சிலரின் சுயநலம் காரணமாகத் தான் கம்யூனிஸ்ட்டுகள்
சட்டமன்றத்தில் இல்லை என்றும் அவர் கூறியிருப்பது
வியப்பளிக்கிறது.

ஒருசில சீட்டுக்களுக்காக கொள்கையை அடகு வைக்க
தயாராக இருப்பதுதான் சுயநலம். ஆனால் வெற்றி
தோல்வியைப் பற்றி மட்டும் கவலைப்படாமல்
ஒரு கொள்கை அடிப்படையில், மாற்று அரசியலை
முன்வைத்து தேர்தலை சந்திப்பது பொதுநல நோக்கத்தின்
அடிப்படையில்தான் இருக்க முடியும்.

1998ம் ஆண்டு அதுவரை பாஜக அரசாங்கத்தை
கடுமையாக விமர்சித்துவிட்டு ஒரே நாள் நள்ளிரவில்
வாஜ்பாய் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்தது போன்று –

கம்யூனிஸ்ட் கட்சியில் எந்தவொரு தலைவரும் தனது
சுயநலத்தின் காரணமாக எந்தவொரு முடிவையும்
எடுத்து விட முடியாது. கம்யூனிஸ்ட் கட்சியில்
சுயநலவாதிகள் இருக்க முடியாது; அதிலும் குறிப்பாக
அரசியல் முடிவை ஒருவரின் சுயநலத்திற்காக எடுத்துவிட
முடியாது என்பதை கலைஞர் அறிவார்.

உயர்ந்தபட்ச உட்கட்சி ஜனநாயகம் கொண்ட கம்யூனிஸ்ட்
கட்சியில் சுயநலமிக்க ஒரு சிலர் முடிவெடுத்துவிட்டார்கள்
என்று கூறுவது, கம்யூனிஸ்ட்டுகள் சட்டமன்றத்திற்குள்
இல்லையே என்ற ஆதங்கத்தை சொல்லுவது போன்று
போக்கு காட்டி இந்த கட்சியில் ஒரு சிலர்தான்
முடிவெடுக்கிறார்கள்; அவர்கள் சுயநலத்தால்
முடிவெடுக்கிறார்கள் என்று அவதூறு பொழிய
பயன்படுத்தியிருக்கிறார்.

2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு
அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக இவற்றிற்கு மாற்றாக
ஒரு அணியை உருவாக்குவது என்று முடிவெடுத்தது.

மாநில மாநாடு சம்பந்தப்பட்ட மாநிலத்தில் அரசியல்
முடிவெடுப்பதற்கு அதிகாரம் படைத்த உயர்ந்த
அமைப்பாகும். அதில் எடுத்த முடிவை சில தலைவர்களின்
முடிவாக கலைஞர் அவர்கள் சித்தரிப்பதன் நோக்கமென்ன?.

ஒரு சில தலைவர்களின் அல்லது குடும்பத்தின் நலன்
அடிப்படையில் மட்டும் முடிவு எடுப்பது என்பது கம்யூனிஸ்டு
கட்சிகளின் வழக்கம் அல்ல.

ஒரு பிரச்சனையில் விமர்சித்து விட்டதாலேயே, தீக்கதிர்
நாளிதழுக்கு கொடுத்து வந்த அரசு விளம்பரம்
கடந்த கால திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது உண்டு.

இது முதல்வராக இருந்த கலைஞருக்கு தெரியாமல்
நடந்திருக்க வாய்ப்பு இல்லை. அப்படி நிறுத்தப்பட்ட போதே
அவரிடமே முறையீடு செய்திருக்கிறோம்.

விமர்சனத்தை கூட தாங்கிக் கொள்ள முடியாமல்தான்
திமுக அரசு அந்த முடிவை எடுத்தது. அதிமுகவும் இதே
பாணியைத்தான் பின்பற்றுகிறது.

கம்யூனிஸ்ட்டுகளின் குரல் சட்டமன்றத்தில்
ஒலிக்கவில்லையே என்று ஆதங்கப்படுகிறார் கலைஞர்.
இது அக்கறையின் பாற்பட்ட ஆதங்கமாக தெரியவில்லை.

அவதூறு செய்ய ஒரு வாய்ப்பாக இதை பயன்படுத்திக்
கொண்டிருக்கிறார் கலைஞர்.

சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் இல்லை
யென்பதில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முதல்,
தொண்டர்கள், ஆதரவாளர்கள், நடுநிலையாளர்கள் வரை
அனைவருக்கும் வருத்தமிருக்கிறது.

ஆனால் அந்த வருத்தத்தை விட ஊழல் மலிந்த
கட்சிகளோடும், பொதுவுடமை இயக்கத்தினரும்,
பெரியாரும், அண்ணாவும் எந்த சமூக நீதிக்காக
போராடினார்களோ அந்த சமூக நீதியின் ஒரு அங்கமான
இட ஒதுக்கீட்டை சிதைக்கும் வகையில் நீர்த்துப் போகச்
செய்யும் வகையிலும் பொதுத்துறை நிறுவனங்களை
யெல்லாம் அடிமாட்டு விலைக்கு விற்ற போது அதற்கு
ஆதரவு தெரிவித்தவர்களோடும், தமிழகத்தில் இயற்கை
வளங்கள் முழுவதையும் தாது மணல், ஆற்று மணல்,
கிரானைட் ஆகியவற்றை சில தனிநபர்கள்
கொள்ளையடிப்பதற்கு ஆதரவு அளித்த கட்சிகளோடும்,

தலித்துகள் தாக்கப்படும் போது பாராமுகம் காட்டிய,
ஆணவக் கொலைகள் நடக்கும் போது அதுபற்றி
வாய் திறக்காத, சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படும் போது
அந்த குற்றவாளிகளை, குற்றத்திற்கு துணை போன
கட்சிகளை மயில் இறகால் அடித்து கடுமையாக தாக்கி
அறிக்கை விட்டது போல் பொதுமக்களிடம் தோற்றம்
காட்டும் கட்சிகளோடும்,

கூட்டணி வைத்து தான் சட்டமன்றத்திற்குள் எங்கள் குரல்
ஒலித்தே ஆக வேண்டும் என்ற நிலையிருந்தால்
அதை விட வீதியில் நின்று மக்களோடு இணைந்து
போராடி மக்கள் நலன் காக்க நிற்போம் என்கிற
சபதம் தான் 2015 பிப்ரவரியில் நடைபெற்ற மாநில
மாநாட்டில் மேற்கொண்ட அரசியல் தீர்மானமாகும்.

சட்டமன்றத்திற்குள் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் இல்லாமல்
போனது சில தலைவர்களின் சுயநலமென்றால், சமூக நீதிக்
கோட்பாடு சிதைக்கப்படும் போதும் அமைதியாய் இருப்பதற்கும்,
ஆற்று மணலோ, தாது மணலோ, கிரானைட் மலைகளோ
கொள்ளையடிக்கப்பட்ட போது அதை ஆட்சியிலிருந்த போது
அதை தடுக்காமல் விட்டதற்கும்,

எதிர்கட்சியாக இருக்கும் போது அதை எதிர்த்தும் பேசாமல்
இருந்ததற்கும் என்ன பெயர்?

நிச்சயமாக பொதுநலம் இல்லை.

-ஜி.ராமகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர், சிபிஎம்

———————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ஆடு நனைகிறதே – கவலைப்படும் ஓநாய் – கலைஞருக்கு தோழர் ஜி.ஆர். சூடான பதில்….

 1. Sundar Kannan சொல்கிறார்:

  Not related to this post.

  But found an interest news about Su.Sa.

  https://www.quora.com/What-are-some-incidents-where-people-took-revenge-in-a-mind-blowing-way

  Meet the badass of Indian Politics – Subramanian Swamy.

  After working in Harvard as an assistant professor of economics, Swamy returned to India and started teaching economics in IIT Delhi.

  But was sacked by the board of IIT for going against the establishment.

  Being the rebel he is, he filed a suit against IIT for wrongful termination and won the case.

  After being reinstated in IIT Delhi, he resigns after just 1 day!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப சுந்தர் கண்ணன்,

   அவர் மீண்டும் ஒரு நாளைக்காக வேலையில் சேர்ந்தது,
   அத்தனை வருடங்களுக்குமான – சம்பளத்தை கேட்டு,
   வழக்கு போடத்தான்.
   அதற்கான வேலையையும் ஏற்கெனவே துவங்கி விட்டார்…!

   இதிலெல்லாம் குறைச்சல் ஏதுமில்லை அறிஞர் சு.சுவாமியிடம்…!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. selvarajan சொல்கிறார்:

  ஓநாய் அழுகிறது என்றால் — பல காரணங்கள் தொக்கி நிற்கின்றன — ம.தி.மு.க. வின் மா.செ.– க்களை விலைகொடுத்து வாங்கியது — பாவம் … கேப்டன் கட்சியை ஒன்று இல்லாமல் ஆக்கியது — தா.ம.க. கொஞ்சம் – கொஞ்சமாக கரைவதைப் பார்த்து புளகாங்கிதம் அடைவது என்று — தன்னுடன் கூட்டணிக்கு வராதவர்களை நினைத்து அக்கறையோடு அழுகிறார் …
  இதில் எதிலேயும் சிக்காமல் ” கழுவுன மீனில் நழுவுன மீனைப் போல ” இருக்கும் பொதுவுடைமை தோழர்களை சீண்டி பார்ப்பதை போல ” பாவ்லா ” காட்டி எதிர் வரும் உள்ளாட்சி தேர்தல்களில் தன்னோடு கூட்டணிக்கு வர வைக்க — ” நைசா தூண்டில் போட்டு ” பார்க்கிறார் …..
  சட்டசபையை தவற விட்டவர்கள் — உள்ளாட்சி மன்றங்களிலாவது தலையை காட்ட வேண்டாமா என்று கூட ” அறிக்கையே ” விட்டாலும் — விடுவார் … அப்படித்தானே … ?
  தோழர் ஜி .ஆர் . பதில் அறிக்கை கூட — கொஞ்சம் பட்டும் படாமலும் தான் இருக்கிறது — பொதுவா குடும்ப நலன் — மணல் – தாது மணல் — கிரானைட் என்று தற்போதைய ” ஆளும் கட்சி — எதிர்க்கட்சி இரண்டையுமே சேர்த்துதான் பொதுவா கூறியிருக்கிறார் … கலைஞர் அவர்களை தனித்து மாபெரும் ஊழல்களை பற்றி கடுமையாக கூற ஒரு தயக்கம் தெரிகிறது என்பதே … உண்மைதானே … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   பஞ்சாயத்து தேர்தல்களுக்கு நிச்சயம் சேர மாட்டார்கள்…
   இப்போதைக்கு அவ்வளவு தான் சொல்லலாம் – சரி தானே…?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  இதெல்லாம் வரப்போகும் பாராளுமன்றத்திற்கான சமிக்ஞைகள். எப்படியும் 2021ல், காங்கிரஸ், திமுக, விசி, கம்யூனிஸ்டுகள் ஒன்றாகச் சேர்ந்து நிற்கலாம். பாஜக, பாமக ஒன்று சேரலாம். தேமுதிக திமுகவோடு கூட்டணி சேர நினைக்கலாம். அல்லது ம.ந.கூ மைனஸ் வாசன் தமாக, கூண்டோடு திமுக, காங்கிரஸோடு சேரலாம். கருணானிதி, அவரது சொந்த நலனை அல்லாது வேறு எதைப்பற்றியும் யோசிக்கமாட்டார். தன்னுடன் கூட்டுச்சேரவில்லை என்றால், நல்ல வெயிலில், மணல் சட்டியில் போட்டு வறுத்தெடுக்கவும் தயங்கமாட்டார்.

  அதுவும் தவிர, கருணானிதிக்கு இப்போது தன்னுடைய இருப்பைக் காட்டியாகவேண்டிய நிர்ப்பந்தம். அதனால்தான் நாளொரு அறிக்கை, பொழுதொரு சுய கேள்வி பதில். அதையும் எப்போது ஸ்டாலின் வெளியிடகூடாது என்று கொக்கி போடுகிறாரோ அப்போது கருணானிதியின் புலம்பல்கள் முழுவதுமாக நிற்கும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நெல்லத்தமிழன்,

   காவல்துறை மான்யக்கோரிக்கை விவாதிக்கப்படும்
   நாளன்று, கலைஞர் தானே நேரில் ஆஜராகி
   விவாதத்தில் கலந்து கொள்ளப்போவதாக
   ஒரு வதந்தி அல்லது செய்தி கிளம்பி இருக்கிறது.

   இன்னொரு ரகளை அல்லது பரபரப்பு .. ???

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. Antony சொல்கிறார்:

  TN has been filled with wolves…
  MK is the wolf at its best crying like this always. Another wolf who cries for a goat in another state while throwing acid at the faces of goats at its state.. Another set of wolves started to cry for communists.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.