எது இவர்களை தடுக்கிறது….? (தினமணி தலையங்கம்….)

இன்றைய தினம் ( 10/08/2016 ) வெளியாகியுள்ள
தினமணி தலையங்கம் அவசியம் எல்லாராலும்
கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. முதலில்
தலையங்கத்தை படிப்போம் – பிறகு நமது கருத்துக்கள்….

————————–

பாவம் விவசாயி!
By ஆசிரியர்
First Published : 10 August 2016 12:46 AM IST

—-

லூதியானா நகரில் செயல்படும் “அறுவடைக்குப் பிந்தைய

பொறியியல் தொழில்நுட்ப நடுவண் நிறுவனம்’ (CIPHET)

வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில்
அறுவடைக்குப் பிறகு வீணாகும் தானியம், பருப்பு, காய்,
கனி ஆகியவற்றின் மதிப்பு ரூ.92,651 கோடி!.

காய், கனிகள் கெடுவதால் ஏற்படும் இழப்பு மட்டுமே
ரூ.40,811 கோடி. அடுத்ததாக அரிசி, கோதுமை. சேமிப்பு வசதி

இல்லாததால் ரூ.20,698 கோடி இழப்பு ஏற்படுகிறது.
பருப்பு வகையில் ரூ.3,877 கோடி இழப்பு ஏற்படுகிறது.

நாம் அரிசி, பருப்பு, கோதுமை, காய்கறி விலை உயர்கிறது
என்று அலுத்துக்கொண்டிருக்கும் அதே வேளையில்,
எங்கோ ஓரிடத்தில் யாருக்கும் பயன்படாமல் இந்த
உணவுப் பொருள்களும் காய், கனிகளும்

வீணாகிக்கொண்டிருக்கின்றன. வீணாகிப்போவது
ஒருபுறம் இருக்க, விவசாயிகளுக்கு
மிகப்பெரும் நஷ்டத்தையும் ஏற்படுத்துகின்றன.

உணவுப் பொருள் கெடாமல் இருக்க, போதுமான
குளிர்பதன கிடங்கு வசதிகள் இல்லை. 6.10 கோடி டன்
உணவுப் பொருள்களுக்கு குளிர்பதன சேமிப்புக்கிடங்குகள்
தேவை என்றாலும், நம்மிடம் 3 கோடி டன் அளவு உணவுப்
பொருள்களைச் சேமிக்கும் அளவுக்குத்தான் குளிர்பதன
சேமிப்புக் கிடங்கு வசதிகள் உள்ளன.
நம்மிடம் இப்போது இருக்கும் குளிர்பதன வசதிக் கிடங்குகள்
பலவும், உணவுப் பதப்படுத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ள
பெரு நிறுவனங்களுக்குச் சொந்தமானவை.

இந்த நிறுவனங்கள் விவசாயிகளிடம் உணவுப் பொருள்களை
வாங்கி, குளிர்பதனக் கிடங்கில் சேமித்து வைத்து,
தேவைக்கேற்ப தங்கள் உணவுப்பொருள் தயாரிப்பு
அலகுகளுக்கு அனுப்புகின்றன. இதனால் அந்த
பெரு நிறுவனங்கள் அதிக லாபம் அடைகின்றன.

பெரு நிறுவனங்கள் மட்டுமல்ல, தனியார் சிலரும்
இதுபோல குளிர்பதன சேமிப்புக் கிடங்குகள்
அமைத்திருக்கிறார்கள். அவற்றை இடைத்தரகர்கள்தான்
பயன்படுத்துகிறார்கள்.

பெரு நிறுவனங்களும்
இடைத்தரகர்களும் அறுவடைக் காலங்களில் மிகக் குறைந்த
விலையில் பொருள்களை வாங்கி, பல ஆயிரம் டன்
அளவுக்கு சேமிக்க முடிகிறது. அதனால், அவர்கள்தான்
விவசாய விளைபொருள்களின் விலையைத்
தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள்.

சிறு, பெரு நிறுவனங்களும் இடைத்தரகர்களும் விவசாய
உற்பத்தியை மொத்தமாக அறுவடைக்கு முன்பே
விலைபேசி விடுகின்றனர். அறுவடைக்குப் பின் குளிர்பதனக்
கிடங்குகளில் சேமித்து வைத்துக்கொள்கின்றனர்.
இதன்மூலம் அதிக லாபமும் அடைகின்றனர். ஆனால்,
இதனால் விவசாயிகள் அடையும் லாபம் எதுவும் இல்லை.

சொல்லப் போனால் நஷ்டப்படுவது விவசாயிகள்தான்.

மத்திய வேளாண் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில்
உள்ள –

தேசிய தோட்டக்கலை இயக்ககம்,
தோட்டக்கலை வாரியம்,
தேசிய கூட்டுறவு மேலாண்மைக் கழகம்,
பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள் ஏற்றுமதி ஆணையம்
போன்ற பல்வேறு அமைப்புகள், விளைபொருள் வீணாவதைத்
தடுக்கும் தொழில்நுட்பம்,
குளிர்பதனக் கிடங்கு அமைத்தல் ஆகியவற்றை
ஊக்கப்படுத்த மானியம் தருகின்றன. அதிகபட்சமாக
மானியத்தின் அளவு 75% வரை தரப்படுகிறது.

இவை தவிர இத்தகைய குளிர்பதன சேமிப்புக்
கிடங்குகளுக்கு சேவை வரியிலிருந்து விலக்கு
அளிக்கப்பட்டுள்ளது. உணவுப் பதப்படுத்தல், குளிர்பதன
கிடங்குகளுக்கான வங்கிக் கடன் பெறுவதை முன்னுரிமை
தருவதற்கு ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறையை
வெளியிட்டுள்ளது.

வேளாண் பொருள்களை பாதுகாக்கும் கிடங்குகள்,
குளிர்பதன கிடங்குகளுக்கு வருமான வரித்துறை சில
செலவினங்களை வரிக்கு அப்பாற்பட்டதாக அறிவித்துள்ளது.

ஆனால் இந்த பயன் முழுவதும் பெரு நிறுவனங்களின்
துணை நிறுவனங்களுக்குப் போய்சேருகின்றன. அல்லது
பெருமுதலாளிகள் பயன் அடைகிறார்கள்.

தக்காளி விலை மலிந்து போனது என்று பல லாரி
தக்காளியை சாலையில் கொட்டி தங்களது கோபத்தையும்
இயலாமையையும் காட்டுகிறார்கள் விவசாயிகள்.

vivasayi-1

ஆனால், தக்காளி உற்பத்தியாளர் சங்கம் அமைத்து
அவரவர் பகுதியில், வங்கிக் கடன் உதவியில் குளிர்பதனக்
கிடங்கை அமைத்து, தக்காளியின் விலையை தீர்மானிக்க
அவர்கள் முற்படுவதில்லை.

kopparai

கொப்பரைக்கு போதுமான விலை கிடைக்கவில்லை
என்பதால் 25 கிராமங்களில் கருப்புக்கொடி ஏற்றி தங்களது
கோபத்தை வெளிப்படுத்தின அரசியல் சார்புள்ள சில விவசாய
சங்கங்கள்.

இந்த கொப்பரைகளை பாதுகாத்து வைத்து, சந்தை
விலையைத் தீர்மானிக்க அவர்கள் முற்படுவதில்லை. இதற்குக்
காரணம் நமது விவசாயிகளுக்கு சரியான
ஆக்கப்பூர்வ சிந்தனை உள்ள தலைமை இல்லாததுதான்.

ஒவ்வோர் அரசியல் கட்சிக்கும் தொழிற்சங்கம் இருக்கிறது.
விவசாய அணி இருக்கிறது. அதற்கான சொந்தக் கட்டடம்
கட்டுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

அரசியல் கட்சியின் விவசாய அணியினர் உண்மையான
அக்கறையுடன் விவசாயிகளின் நலனை
தேட முற்பட்டால் மிகப்பெரிய மாற்றத்தை
ஏற்படுத்த முடியும்.

அரசியல் கட்சியின் விவசாய அணியினர் கட்சித்
தலைமையின் உதவியுடன் வேளாண் விளைபொருள்களை
வீணாகாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பக் கிடங்குகள்,
குளிர்பதனக் கிடங்குகள் ஆகியவற்றை உருவாக்க முடியும்.
அப்படிச் செய்தால் அதன்மூலம் அந்தக் கட்சியின் விவசாயிகள்
பலன் அடைவார்கள்.

தக்காளி, காய், கனி, கொப்பரை
உள்ளிட்ட வேளாண் விளைபொருள்கள் வீணாகாமல்
பாதுகாக்கப்படும். இடைத்தரகர்கள் லாபம் அடையாமல்
விவசாயிகள் லாபம் அடைவார்கள்.

அரசியல் கட்சிகளுக்கு விவசாயிகளின் வேளாண்
உற்பத்தியைவிட, ஊடகச் செய்திதான் முக்கியம்.
ஊடக விளம்பரம்தான் முக்கியம்,
விவசாயி நலன் முக்கியமல்ல!

————————————————————————–

தலையங்கம் ஒரு பக்கம் –
தவறு எங்கே நடக்கிறது,
ஏன் நடக்கிறது என்பதை
சுட்டிக்காட்டினாலும் –
அது கொடுக்கும் தீர்வு சரியானது தானா….?

அரசியல் கட்சிகள் செய்ய வேண்டிய வேலையா இது…?
முக்கியமாக ஒரு வார்த்தை திடுக்கிட வைக்கிறது –

//அரசியல் கட்சியின் விவசாய அணியினர் கட்சித்
தலைமையின் உதவியுடன் வேளாண் விளைபொருள்களை

வீணாகாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பக் கிடங்குகள்,
குளிர்பதனக் கிடங்குகள் ஆகியவற்றை உருவாக்க முடியும்.

அப்படிச் செய்தால் அதன்மூலம் அந்தக் கட்சியின்
விவசாயிகள் பலன் அடைவார்கள். //

விவசாயிகளை கட்சிவாரியாகப் பிரித்து,
அந்த அந்த கட்சிகளைச் சேர்ந்த விவசாயிகள்
மட்டும் பலன் அனுபவிக்கச் செய்ய வேண்டும்
என்கிற விபரீத யோசனை அடிப்படையிலேயே தவறாகத்
தெரியவில்லை….?

// தேசிய தோட்டக்கலை இயக்ககம்,
தோட்டக்கலை வாரியம்,
தேசிய கூட்டுறவு மேலாண்மைக் கழகம்,
பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள் ஏற்றுமதி ஆணையம்
போன்ற பல்வேறு அமைப்புகள், விளைபொருள் வீணாவதைத்
தடுக்கும் தொழில்நுட்பம்,
குளிர்பதனக் கிடங்கு அமைத்தல் ஆகியவற்றை
ஊக்கப்படுத்த மானியம் தருகின்றன. அதிகபட்சமாக
மானியத்தின் அளவு 75% வரை தரப்படுகிறது.//

இவ்வளவு வாரியங்கள் எதற்காக இருக்கின்றன…?
இத்தனை மானியங்கள் – ( 75% வரை ) யாருக்கு
தரப்படுகின்றன….?

விவசாயிகளை குழுவாகச் சேர்த்து,
கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி,

இத்தனை தண்ட இலாகாக்கள் இருக்கின்றனவே –
இவற்றில் எதாவது ஒன்று பொறுப்பேற்றுக் கொண்டு,
தேவைப்படும் அந்த மீதி 25 % முதலை (investment)
அந்த கூட்டுறவு அமைப்புகளின் மூலம்
விவசாயிகளிடமிருந்து பெற்று, தாங்களே, தங்கள்
பொறுப்பிலேயே குளிர்பதனக் கிடங்குகளை அமைத்து,
விவசாயிகளுக்கு நாள் கணக்கில், வாரக்கணக்கில் –
நியாயமான வாடகைக்கு விடக்கூடாதா …?

இந்த மாதிரி நிறைய யோசனைகள் தோன்றுகின்றன…
ஒரு விதத்தில் தினமணி தலையங்கம் ஒரு தூண்டுதலை
கொடுத்தாலும்,

இதில் முனைப்பு காட்ட வேண்டியது
அரசியல் கட்சிகள் அல்ல….

அரசு அமைப்புகள் தான்
என்பதே சரி என்று தோன்றுகிறது…

என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to எது இவர்களை தடுக்கிறது….? (தினமணி தலையங்கம்….)

 1. srinivasanmurugesan சொல்கிறார்:

  அய்யா!!!
  காஷ்மீர விவகாரம் ஒன்றும் புரியவில்லை .திரு்அப்துல் கலாம் அவர்கள் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவிற்கு எதிராக போர் தொடுத்தாலும் அதனை எதிர் கொண்டு இந்தாவினால் ஒரு வாரம் போரிடும் வல்லமை உள்ளதாக கூறியுள்ளார்.அவ்வளவு வலிமையான நம்மால் பாக்கிஸ்தானை போரிட்டு வழிக்கு கொண்டு அவர் முடியாதா?இன்னும் எத்தனை காலம் தான் பொறுப்பது.இதே அமெரிக்காவாக இருந்தால் எப்பொழதோ இப் பிரச்சனை மடிந்திருக்குமே…தயவு செய்து விளக்க கோருகிறேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   srinivasanmurugesan,

   இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுப்போமே…!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. CHANDRAA சொல்கிறார்:

  JI it is a known fact that many INDIAN FRIENDLY countries throughout the world
  still firmly believe that pakistans claim of kasmir areas are reasonable………
  india cannot afford to incur the wrath of such countries
  Besides a war with pakistan >> will definetely weaken india
  ECONOMICALLY
  And your america will never relish this idea
  of fighting with pakistan in kashmir issue
  modi and manmohan know this

 3. selvarajan சொல்கிறார்:

  தமிழகத்தில் ஜெயலலில்தா முதல்வராகப் பதவி ஏற்றபின் பல இடங்களில் உணவுப் பொருள் கெடாமல் இருக்க, போதுமான
  குளிர்பதன கிடங்கு வசதிகள் தேவை என்பதை உணர்ந்து அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார் — அன்றைய ஹிந்து செய்தி ” TN to set up 50 grain storage godowns to help small farmers ” http://www.thehindu.com/news/national/tamil-nadu/tn-to-set-up-50-grain-storage-godowns-to-help-small-farmers/article2665532.ece மாவட்டங்கள் தோறும் பல இடங்களில் கட்டி முடிக்கப் பட்டுள்ளன — அரசு தன்னால் முடிந்த அளவு கிடைக்கும் வரி வருவாயை வைத்து விவசாயிகளுக்கு எவ்வளவு செய்ய முடியுமோ — அதை செய்துக்க கொண்டுதான் இருக்கிறது — அதைப் போலவே மீனவர்களுக்காக குளிர்பதன சேமிப்பு கிடங்குகளும் அமைக்கப் பட்டுள்ளன — இவ்வளவு பெருந்தொகை மானியமாக கொடுக்கும் போது அதைப் பயன்படுத்திக் கொள்ள விவசாயிகள் முன் வர வேண்டும் — அரசே செய்யும் என்று காத்திருப்பதாலும் — அறுவடையானவுடன் காசாக்க வேண்டும் என்கிற அவாவினாலும் தான் இடைத்தரகர்களிடம் சிக்கிக் கொள்கிறார்கள் …

  அரசு சார்ந்த ” ஒழுங்கு முறை விற்பனைக்கு கூடங்களில் ” தங்களின் பொருட்களை விற்க வரும் கூட்டத்தைவிட — தனியாரிடம் விற்கவே அலை மோதுவதும் ஒரு வேடிக்கை தான் …. தற்போது ” கொப்பரை ” க்கு அரசே கொள்முதல் நிலையங்களை ஏற்படுத்தி நல்ல விலைக்கு விவசாயிகளிடம் இருந்து வாங்கி கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதையும் — நோக்க வேண்டும் … தற்போது நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யும் நெல்லை வெட்ட வெளியில் தார்பாலின் போட்டு மூடி வைப்பதே — மாபெரும் வீணாக்கும் செயல் என்பது தான் நீண்ட நாளையக் குறை — அதை முறையாக சேமிக்க தற்காலிக கிடங்குகள் அமைத்தால் — நிறைய வீணாவதை தடுக்கலாம் …

  சேமிப்பு கிடங்குகளில் வீணாவதை ” அடித்தட்டு மக்களுக்கு ” விநியோகம் செய்ய சொல்லி உச்ச நீதி மன்றம் போட்ட உத்திரவு — ? என்னவாயிற்று என்று தெரியவில்லை — உத்திரவு வந்தவுடன் கொஞ்சம் பேருக்கு முந்தைய காங்கிரஸ் அரசு கொடுத்தவுடன் — கலைஞர் சோனியா காந்திக்கு ” மணிமேகலை ” என்று ஒரு அருமையான பட்டம் கொடுத்தது மட்டும் தான் நினைவில் நிற்கிறது — விநியோகம் எங்கே போனது என்பதைப் பற்றியும் — இப்போதும் அதனால் அந்த அடித்தட்டு மக்கள் பயன் அடைகிறார்களா என்பதும் — ஆண்டவனுக்கே வெளிச்சம் — இதைப் பற்றியெல்லாம் யோசிக்க நேரமில்லாத நமது ஊடகங்கள் — வாழ்க … ???

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   சொல்லப்போனால், தினமணி கட்டுரையில் உள்ளவை
   தமிழகத்திற்கு பொருந்தாது என்று தான் நினைக்கிறேன்.

   மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, நம் நிலை
   எவ்வளவோ மேல்…. எப்போதாவது அறுவடைக்காலங்களில்
   எதிர்பாராத நேரத்தில் மழை வந்து விடும்போது மட்டும் தான்
   இங்கு பிரச்சினை ஏற்படுகிறது.

   ஆமாம் – அண்மையில், முதல்வர் அறிவித்துள்ள
   கொள்முதல் – கணிணி மயமாக்கம் பற்றி
   யாருமே வாயைத்திறக்கவே இல்லையே –
   என்ன காரணம் புரிகிறதா…?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.