( பகுதி-3 ) – கடன்காரர்களாகவே போகலாமா ….?

flower -1

இரவு பூராவும் ஒரு உயிரற்ற உடலுடன்
உட்கார்ந்திருப்பது
அதுவே முதல் முறை…
நண்பர்களை போய் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு
வா என்றால், யார் போகிறார்கள்…?

முக்கால்வாசி பேர் அங்கேயே தரையில் உருண்டு
உறங்கி விட்டார்கள். 3-4 பேர் மட்டும் –
தொழிற்சாலை, அரசியல் பற்றிய கதைகளின்
துணையுடன் விழித்துக் கொண்டே மிச்ச இரவைக்
கழித்தோம்.

அடுத்த நாள் / அடுத்தடுத்த நேரங்கள் –
டென்ஷனை குறைத்தன… பழகி விட்டோம் –
உணர்வுகள் “மரத்து” விட்டன….
எந்திரம் போல் இயங்கினோம்

இரண்டு நீண்ட இரவுகள், மூன்று பகல்களுக்கு பிறகு
ஒருவழியாக இறந்தவரது குடும்பத்தினர் வந்து
சேர்ந்தனர். பின்னர் காரியங்கள் எல்லாம் முடிந்தன.
அவை பற்றிய விவரம் இங்கு தேவை இல்லை
என்று நினைக்கிறேன்.

26-27 வயதில் ஏற்பட்ட இந்த ஒரு அனுபவம் –
என் நிலையில், போக்கில் – மிகப்பெரும் தாக்கத்தை
உண்டு பண்ணியது.

என்னை தனித்து யோசிக்கத் தூண்டியது…
இது எப்படி நிகழ்ந்தது…? நான் இதில் எப்படி ஈடுபட்டேன்..?
அய்யோ பாவம் – வடக்கே வெகு தூரத்திலிருந்து
வந்தவருக்கு இப்படியாகி விட்டதே –
என்று யோசித்ததன் விளைவு…
நானும் பல காலம் தமிழ்நாட்டிற்கு வெளியே
இருந்தவன் என்பதால் ஏற்பட்ட ஒரு பரிவு உணர்வு….
மற்றவர்களுக்கெல்லாம் தான் அவர் ஒரு அந்நியர்..
ஆனால் நமக்கு பழக்கமான மொழி தானே –
நம்மால் முடிந்த உதவியை செய்வோமே என்று
நினைத்து தான் நான் இதில் இறங்கினேன்….

இந்த சிந்தனை, அதனைத் தொடர்ந்த காலகட்டத்தில்
என்னை பொதுவாகவே சமூகத்தைப் பற்றி கவலைப்படும்
ஒரு மனிதனாக உருவாக்குவதில் பெரும் இடம் வகித்தது.

இறப்புகளோடு நிற்காமல்,
மற்ற சமயங்களிலும், சமூகத்தில்
உதவி தேவைப்படுவோருக்கு கூப்பிடாமலே சென்று
உதவிட வேண்டும் என்கிற ஒரு மனோபாவத்தை,
பக்குவத்தை உண்டு பண்ணியது.

அதன் பிறகு, கிட்டத்தட்ட நான் பதவியிலிருந்து
ஓய்வு பெறும் காலம் வரும் வரையில்,

எந்த ஊரில் பணி புரிந்து வந்தாலும்,
அரசுப் பணியில் இருந்துகொண்டே –
அங்குள்ள சமுதாய அமைப்புகளில்
ஈடுபாட்டுடன் கலந்து கொண்டு என்னால் இயன்ற
வகைகளில் பணியாற்றி வந்தேன்…

ஒருவருடைய திடீர் மறைவு – “சாவு” என்பது
அவரது குடும்பத்தில் ஏற்படுத்தக்கூடிய அத்தனை
விளைவுகளையும் இந்த சம்பவம் புரிய வைத்தது…
அந்த எஸ்டேட் சமூகத்தில் பல சமயங்களில் எதிர்பாராமல்
ஏற்படும் இடர்களை சந்திக்க எந்தவித ஏற்பாடும் இல்லை
என்பதை உணர முடிந்தது.

அன்று தொடங்கிய ஒரு பழக்கம் –

எங்கள் குழுவினர் அனைவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட
ஒரு முடிவு… இனி இந்த எஸ்டேட்டில் எந்த வீட்டில்
சாவு நிகழ்ந்தாலும், சம்பந்தப்பட்ட ஊழியர்களோ, அவர்களது
குடும்பத்தினர் யாருமோ – உதவிக்கு அழைத்தாலும் –
அழைக்கா விட்டாலும் –

நாமாக முன்சென்று, அவர்களுக்கு வேண்டிய அனைத்து
உதவிகளையும் செய்வது என்று முடிவு செய்தோம்.

அதற்குப் பின்னர் –

எஸ்டேட்டில் எந்த வீட்டில், யார் இறந்தாலும் சரி –
எங்களுக்கு முதல் தகவல் கிடைத்து விடும்.
இருப்பவர்கள் உடனடியாக சேர்ந்து கொள்வோம்.
துவக்க காலங்களில், ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு,
ஆயிரம் ரூபாய் வரை சேர்த்து – அவசர செலவுகளை
சந்திக்க – இருப்பில் வைத்துக் கொண்டோம்.
பின்னர், அது செலவழியும்போது, திரும்பவும் ஆளுக்கு
கொஞ்சம் போட்டு முழுமையாக்கி விடுவோம்.

( ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தொழிற்சாலை
நிர்வாகத்துடன் கலந்து பேசி, இவ்வாறு இறப்புகள்
நிகழும்போது, தொழிலாளர் நல நிதியிலிருந்து –
தொழிற்சாலை நிர்வாகம், சம்பந்தப்பட்ட குடும்பத்துக்கு
இறுதிச் சடங்குகளை எதிர்கொள்ள, ஆயிரம் ரூபாய்
உதவிப்பணம் கொடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டது…)

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றுவது,
சொல்லி அனுப்ப வேண்டிய உறவினர்களின்
பெயர் விலாசங்களைப் பெற்று, உரிய நபர்கள் மூலம்
தகவல் தெரிவிப்பது, எப்போது இறுதிக்கிரியை
செய்ய முடியும் என்பதை அறிந்துகொண்டு,
அதற்கான வேலைகளைப் பார்ப்பது….

சுடுகாட்டிற்கு தகவல் தெரிவிப்பது முதற்கொண்டு,
உடலை எடுத்துச் செல்ல வண்டி ஏற்பாடு செய்வது,
பாடைகட்ட /சவப்பெட்டி தயாரிக்க ஏற்பாடு,
அவரவர் ஜாதி / மத சம்பிரதாயப்படி,
இறுதிச் சடங்குகளை நிகழ்த்த தேவைப்படும்
அய்யர் / மதபோதகர்களை வரவழைப்பது,
மலர் மாலைகள், ஊதுவத்தி, செண்ட்..,
வகையறா ஏற்பாடு செய்வது…
இவையெல்லாம் எந்தவித குழப்பங்களுமின்றி
-வரிசையாக நடத்தப்படுவது பழக்கமாகி விட்டது…

சவங்களை – தூக்குவது, கையாள்வது,
இறுதிச் சடங்குகளில் உதவி செய்வது ஆகியவற்றில்
எந்தவித தயக்கமும் எனக்கு ஏற்படுவதில்லை…
ஆண், பெண், ஜாதி, மதம் போன்ற எந்தவித
வேறுபாடுகளையும் நான் உணர்வதில்லை.
( அகால மரணங்கள் மட்டும்
நீண்ட நாட்கள் – மனதை வதைக்கும்…)

இறுதிச் சடங்கு என்பது என்ன …?
பஞ்சபூதங்களால் உருவான உடம்பு …
ஆன்மா இருக்கும் வரை உயிர்ப்புள்ள மனித உடம்பு….
ஆன்மா விட்டுவிலகிச் சென்ற பிறகு –
வெறும் கூடு மட்டுமே அங்கே மிஞ்சுகிறது…

இந்த கூட்டை, அதற்குரிய மரியாதைகளுடன்,
மீண்டும் அந்த பஞ்ச பூதங்களுடன்
இணைக்கும் வேலையைத்தான்
நாம் சடங்குகளுடன் செய்கிறோம்.

எரித்தால் – சுலபமாக, உடனடியாக இது சாத்தியமாகிறது.
புதைத்தால் – காலம் சிறிது கூடுகிறது… அவ்வளவே.
இறுதியில் அனைத்தும் கரைந்து, பஞ்சபூதங்களுடன்
மீண்டும் சங்கமம் ஆகி விடுகின்றன.

இறப்பு என்பது உறங்குவது போன்றது –
பிறப்பு என்பது – உறங்கி எழுவது போன்றது …
இதைத்தானே வள்ளுவரும் சொன்னார் – ?

” உறங்குவது போலுஞ் சாக்காடுறங்கி
விழி்ப்பது போலும் பிறப்பு ”

காலம் காலமாக நடந்து வருவது தானே இது…?
(வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் இந்த
பூமியில் நமக்கே இடம் ஏது….? )
இதில் பயம் எதற்கு…
தயக்கம் எதற்கு… ?

துவக்க காலங்களில் எங்களுக்கு திருச்சி காவிரிக்கரையில்
இருக்கும் “ஓயாமரி” சுடுகாட்டிற்கு தான் போக வேண்டி
இருந்தது. 25-30 கிலோமீட்டர் வரை எடுத்து செல்வதில்
சிரமங்கள் இருந்ததால் பிற்பாடு நாங்களாகவே ஒரு
ஏற்பாடு செய்து கொண்டோம்…

எஸ்டேட்டின் எல்லையிலேயே, ( அரசு -தரிசு நிலம் )
ஒரு குறிப்பிட்ட அளவு இடத்தை தேர்ந்தெடுத்து, ஓரளவு
செப்பனிட்டுக் கொண்டு, அதையே சுடுகாடு-இடுகாடாக
மாற்ற உறுதி செய்து கொண்டோம்.
மாநில அரசின் ஒப்புதல் பெற வேண்டும் என்றார்கள்…
கடிதம் எழுதினோம்…
ஆனால், அரசின் ஒப்புதல் வரும் வரை சாவுகள்
காத்திருக்குமா…? எனவே, ஒப்புதலுக்காக காத்திராமல்,
அடுத்து நிகழ்ந்த தொழிலாளி ஒருவரின்
குடும்ப இழப்பின்போது, நாங்களே
அந்த இடத்தில் துவக்க சடங்கை நிகழ்த்தி விட்டோம்.

வெட்டியான் எல்லாம் எதற்கு –
நாங்கள் இருக்கும்போது என்றார்கள் நண்பர்கள் …..?

அந்த சுடு/இடு காட்டில், முதல் குழியைத் தோண்ட
மண்வெட்டியை பிடித்தவர்களில்
நானும் ஒருவன். எங்கள் குழுவில் இரண்டு பேர்,
பின்னர் இதில் நிபுணர்களாகி விட்டார்கள்…

இதே போல், முதல் எரிப்பும் அங்கேயே நிகழ்ந்தது.
பின்னர் …. அதுவே வழக்கமாகி விட்டது…
சுடுகாட்டிற்கான அரசு அனுமதி …..?
கிடைத்தது – ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பிறகு….!!!!

அடுத்த சில ஆண்டுகளுக்கு பிறகு நான் மீண்டும்
வடக்கே மாற்றலாகிச் செல்லும் வரையில்
என்னைப் பொருத்தவரை இது பழக்கமாகிப் போனது.

நான் சென்ற பிறகும் பல வருடங்கள் இது தொடர்ந்தது…
பின்னர், கால மாற்றங்களாலும் விஞ்ஞான வளர்ச்சியாலும்
இந்த தேவைகள் படிப்படியாக குறைந்தன.

———————————

இந்த இடுகையை நான் இவ்வளவு விரிவாக எழுதியது
முக்கியமாக, இன்றைய இளைஞர்களுக்காகத் தான் –

அன்னையும், தந்தையும் உருவாக்கிய
உடம்பும், உயிரும் இது –
உண்மை தான்…
ஆனால், நாம் வளர்ந்து ஆளாகியதில் இந்த சமுதாயம்
எந்த அளவிற்கு நமக்கு உதவி இருக்கிறது…?
சமுதாயத்தின் துணையின்றி, உதவியின்றி –
உருவாவது, வளர்வது எந்த மனிதருக்காவது சாத்தியமா….?

தன்னை உருவாக்கிய சமுதாயத்திற்கு ஒவ்வொருவரும்
தனிப்பட கடன் பட்டிருக்கின்றனர்.
இந்தக் கடனை அவர்கள்
திரும்பச் செலுத்தாமல் இருக்கலாமா…?

ஒவ்வொரு இளைஞரும் தன்னைச் சுற்றியுள்ள
சமுதாயத்தை உற்றுப் பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும்…
தன்னால் இந்த சமுதாயத்திற்கு எந்த விதத்தில்
உதவிட, பணியாற்ற முடியும் என்று யோசிக்க வேண்டும்…
எத்தனையோ விதங்களில் உதவலாம்….

அரசியல்வாதிகள் செய்வார்கள் என்றோ,
அரசாங்கம் செய்யும் என்று நம்பாதீர்கள்…
அவை கவுன்சிலர் ஆக, எம்.எல்.ஏ.ஆக,
மந்திரியாக – அவர்கள் போடும் சுயநல நாடகங்கள்.

பணமாகவோ,
பொருளாகவோ,
உழைப்பாகவோ,
தனிமனிதனாகவோ,
குழுவாகவோ,
அமைப்பு ரீதியாகவோ –
எப்படி வேண்டுமானாலும் செய்யுங்கள் –
என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் –
ஆனால், அவசியம் எதையாவது செய்யுங்கள்…

மறந்து விடாதீர்கள் இளைஞர்களே –
வயதும்,
இளமையும்,
சக்தியும்
இருக்கும்போதே,
இந்த சமூகத்திற்கு எதையும் செய்யாமல் –

மூப்பும் எய்தி, நீங்கள் மறைய நேரிட்டால் –
ஒரு கடன்காரராகவே மறைய நேரிடும்.

எனவே, என் அன்பார்ந்த இளைய நண்பர்களே,
இயன்றதைச் செய்யத் துவங்குங்கள் இன்றே…
காணும் இடமெல்லாம் மலர்ந்த முகங்களையே காண
முயற்சி எடுங்கள் – என்று வேண்டுகிறேன்.

இந்த இடுகையை வழக்கம் போல் கடந்து போகாமல்,
உங்கள் இதயத்தில் பதிந்து கொள்ளும்படி கேட்டுக்
கொள்கிறேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் மீண்டும்
மீண்டும் அசை போட்டுப் பாருங்கள்… உங்களுக்கே பல
யோசனைகள் தோன்றும்….!!!

-நம்பிக்கைகளுடன்,
காவிரிமைந்தன்

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to ( பகுதி-3 ) – கடன்காரர்களாகவே போகலாமா ….?

 1. KANDASWAMY சொல்கிறார்:

  sincere regards sir. VANANGUKIREN SIR.

 2. vijayan சொல்கிறார்:

  நல்ல இடுகை. மக்கள் தயாராகவே இருக்கிறார்கள் பெரும்பாலான நேரங்களில்!
  விஜயன்

 3. Sadagopan.S. சொல்கிறார்:

  திரு.கே.எம்.,

  நீண்ட காலமாக உங்கள் ப்ளாக்கை படித்துக்கொண்டிருக்கிறேன்.
  பல சமயங்களில் நீங்கள் எழுதும் விஷயங்கள் என் நினைவுகளோடு
  ஒத்துப் போகின்றன. இது ஒரு நல்ல தமிழ் ப்ளாக் என்கிற மதிப்பு
  எனக்கு எப்போதுமே உண்டு.
  ஆனால், இந்த பர்டிகுலர் கட்டுரை என்னை உருக்கி விட்டது. இந்த மாதிரி
  எல்லாம் சிந்திப்பவர்கள் இந்த காலத்தில் இருக்கிறார்களா என்று
  ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் அனுபவங்கள் வித்தியாசமானவை.
  நிறைய பேருக்கு இவ்வளவு சின்ன வயதில் இந்த மாதிரி
  அனுபவங்களும் கிடைத்திருக்காது. அதன் மூலம் இது போன்ற யோசனைகளும்
  தோன்றாது. பயனுள்ள வாழ்க்கை உங்களுடையது. அதை அழகாக
  எல்லாருக்கும் எடுத்துச் சொல்கிறீர்கள். இது பொழுது போக்குக்கான
  ப்ளாக் மட்டுமல்ல; நல்ல வழியில் யோசிக்க வைக்கவும் செய்கிறது.
  நான் உங்கள் வயதுக்கு அருகே இருப்பவன் தான். இளைஞர்கள் தான் என்று இல்லை ; உங்களின் இந்த ப்ளாக் என் போன்றவர்களுக்கும்
  மீதி வாழ்க்கையை இன்னமும் பயனுள்ளதாக அமைத்துக் கொள்ள
  உதவியாக இருக்கும்..மிகவும் நன்றி. இந்த மாதிரி விஷயங்கள்
  நிறைய எழுதுங்கள். நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும்.
  ஆண்டவன் உங்களுக்கு நல்ல தேக ஆரோக்கியத்தையும், நல்ல உடல் பலத்தையும் கொடுக்க பிரார்த்திக்கிறேன்.
  மீண்டும் நன்றி.

 4. LVISS சொல்கிறார்:

  Mr K M this and the previous blog show as a person of great compassion and understanding –Salute you —

 5. selvarajan சொல்கிறார்:

  சிறந்த இடுக்கை …. ! — திருவள்ளுவரும் நிலையாமை என்ற அதிகாரத்தில் உயிருக்கும் உடம்புக்கும் உள்ள உறவை முட்டைக்கும் அதில் இருந்து வெளியேறிப் பறக்கும் பறவைக்கும் உவமானம் சொல்லி உள்ளார்.
  ” குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே
  உடம்போடு உயிரிடை நட்பு ” — (குறள் 338)

  மரணம் பலருக்கு பயத்தைக் கொடுக்கிறது. சிலருக்கு — ஞானத்தைக் கொடுக்கிறது. { அய்யா … அவர்களுக்கு புரிந்ததைப் போல } கவிஞர்க்கு அது தத்துவம்பற்றிப் பேச வழி வகுக்கிறது — அது :
  ” வாழ்க்கை என்பது வியாபாரம் – அதில்
  ஜனனம் என்பது வரவாகும்
  மரணம் என்பது செலவாகும்… என்று மற்றவர்களுக்கும் புரிய வைக்க முடிகிறது — எனவே … // காலம் காலமாக நடந்து வருவது தானே இது…?

  (வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் இந்த
  பூமியில் நமக்கே இடம் ஏது….? )
  இதில் பயம் எதற்கு…
  தயக்கம் எதற்கு… ? // — என்பதை உணர்ந்து — சக உயிர்கள் இருக்கும் போதும் – நம்மை விட்டு பிரிந்த பின்னும் — நம்மால் என்ன செய்ய முடியோ — அதை செய்ய துணியுங்கள் ….

  ” நாலு பேருக்கு நன்றி — அந்த நாலு பேருக்கு நன்றி .. ! — அனாதைக்கெல்லாம் தோள் கொடுத்து – தூக்கி செல்லும் நாலு பேருக்கு நன்றி “….!!!

 6. விவேக் காயாமொழி சொல்கிறார்:

  தேவயான சமயத்தில் தேவையான அறிவுரை…
  மனதைத்தொடுகிறது.
  மிகவும் நல்ல கட்டுரை.

 7. A.K. Srinivasan சொல்கிறார்:

  Heart-touching,with blessings of God Vazgha Valamudan.

 8. Srini சொல்கிறார்:

  Sir, our respects to you has increased multifold on you. God bless you sir. I pray for your good health.

  Pranams
  Srini

 9. Barathi சொல்கிறார்:

  மிகவும் அழகான ஆழமான கட்டுரை.

  ” நாம் வளர்ந்து ஆளாகியதில் இந்த சமுதாயம் எந்த அளவிற்கு உதவி இருக்கிறது .சமுதாயத்தின் துணையின்றி, உதவியின்றி , வளர்வது எந்த மனிதருக்காவது சாத்தியமா?”

  ஒவ்வொருவரும் இதயத்தில் பதிந்து, சிந்தித்து முடிந்தளவு நம்மை சுற்றியுள்ள மக்களுக்காக சமுதாயத்திற்காக செய்திட வேண்டும்.
  .

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கருத்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும்
   என் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.