இன்னொரு ” இருவர் ” – புதிய பதிப்பு….!!!

iruvar-2

இன்றைய தமிழக அரசியலில் ” இரண்டு துருவங்கள் ”
இது இன்றைய ” இருவர் ”

Jayalalitha-

karunanithi

கடந்த 15-20 நாட்களாக பட்ஜெட் – மான்ய கோரிக்கைகள்
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தினமும் விவாதங்கள் … தினமும் ரகளை, அமளிகள்…!

ஆளும் கட்சி பொதுவாக அமைதியாக இருக்கிறது…
ஆனால், அவ்வப்போது எதிர்க்கட்சியை தூண்டிவிடும்
வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டிருக்கிறது….

“அடிக்கடி வெளிநடப்பு செய்து கொண்டே இருக்கிறார்கள்”
என்று எங்கள் மீது புகார் சொல்லப்பட்டது. எனவே,
இந்த தடவை எக்காரணத்தை முன்னிட்டும் திமுக
வெளிநடப்பு செய்யாது. உள்ளேயே இருந்து போராடும்….”

– தானாகவே அறிவித்துக் கொண்ட இந்த கட்டுப்பாட்டு
கொள்கையுடன் உள்ளே நுழைந்த தளபதியால் அதை
காப்பாற்ற முடிகிறதா…?

அவரே காரணம் சொல்கிறார் – ” நாங்கள் வெளியேற
வேண்டும் என்று திட்டம் போட்டு வேண்டுமென்றே
எங்களைத் தூண்டி விடுகிறார்கள்…”

ஆக – இவர்களை வெளியேற்ற அதிமுக போடும்
திட்டம் என்று தெரிந்தும் இவர்கள் அவர்களது விருப்பத்தை
நிறைவேற்றுகிறார்கள்…!!!

இந்த சட்டமன்ற கூட்டத்தொடரை ஒரு பாக்சிங்
மேடையாகத்தான் இரண்டு தரப்பும் பார்க்கின்றன…
எனவே அவர்களின் கோணத்திலேயே பார்ப்போம்….

மாறி மாறி குத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன..

முதல் ரவுண்டு –

அதிமுக தரப்பிலிருந்து – ” நமக்கு நாமே என்று
கூறிக்கொண்டு ஊர் ஊராக சென்றவர்களால் கோட்டையை
பிடிக்க முடியவில்லை…”

இதற்கு பதிலாக தளபதி கூறியவற்றை அவைத்தலைவர்
குறிப்பிலிருந்து நீக்குகிறார்… அதை எதிர்த்து திமுக
தரப்பிலிருந்து அவைத்தலைவரை நோக்கி கிண்டல்,கேலி,
தொடர்ந்து கோஷங்கள், சைகைகள் – 30 நிமிடங்களுக்கும்
மேலாக…

-அமைதி காக்கும்படியும், மன்றத்தை தொடர்ந்து நடத்த
உதவும்படியும் அவைத்தலைவர் பலமுறை வேண்டுகோள்
விடுத்தும், திமுகவினர் ஒத்துழைக்காததால் –

திமுகவினர் அனைவரையும் அவையை விட்டு வெளியேறுமாறு
அவைத்தலைவர் உத்திரவு இடுகிறார். நகரமறுத்து,
கெட்டியாக நாற்காலியைப் பிடித்து அமர்ந்து கொண்ட
தளபதியையும், உபதளபதி( ! )யையும், காவலர்கள்
“குண்டு கட் ( ? )”டாக தூக்கி வெளியே கொண்டு போய்
இறக்குகின்றனர்…

அமளியில் ஈடுபட்ட திமுகவினர் அனைவரையும் ஒரு வார
காலத்திற்கு சஸ்பெண்ட் செய்து அவைத்தலைவர்
உத்தரவு போடுகிறார்..

வெளியே வந்த தளபதி கூறுகிறார் –

” 22- ந்தேதி காவல்துறை மான்யக் கோரிக்கை பற்றி விவாதம்
நடக்கவிருக்கிறது. அன்றைய தினத்தில் –
எங்களை எதிர்நோக்க, எங்கள் கேள்விகளை எதிர்நோக்க
முதல்வருக்கு துணிச்சல் இல்லாததால், அன்றைய தினம்
நாங்கள் உள்ளே வர முடியாதபடி திட்டம் போட்டு
வெளியேற்றி விட்டார்கள்..
விவாதமே இல்லாமல், எதிர்ப்பே இல்லாமல் காவல் துறை
மான்ய கோரிக்கையை நிறைவேற்ற போட்ட திட்டம் இது…!!!”

சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில்
தளபதி வழக்கு போடுகிறார்…..

அதே 22-ந்தேதி, வடசென்னையில் மாபெரும் கூட்டம்
ஏற்பாடு செய்து, இந்த சதித்திட்டத்தை மக்களுக்கு
அம்பலப்படுத்தி, காவல்துறையின் தோல்வியைப்பற்றி
விவரமாக எடுத்துரைப்பது என்றும் தீர்மானம்.

———————————————–
ரவுண்டு -2

மறுநாள் – வலுக்கட்டாயமாக சட்டமன்ற வளாகத்தினுள்
நுழைய சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுகவினர்
முயற்சிக்கின்றனர். காவலர்களால் தடுக்கப்படுகின்றனர்.

உடனே, வளாக ஏரியாவிலேயே –
ஒரு போட்டி சட்டமன்ற கூட்டம் நடத்துகின்றனர்…
50-60 நாற்காலிகள், போர்டபிள் மைக் செட்,
சபாநாயகருக்கான மணி உட்பட அனைத்தும்
காவலர்களுக்கு தெரியாமல் எம்.எல்.ஏ.க்களின்
வாகனங்களில் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.
இதை ஏற்கெனவே திட்டமிட்டிருந்தோம் என்று
தளபதியே கூறுகிறார்…

இது யாரையும் கிண்டலோ, கேலியோ செய்வதற்காக
நடத்தப்படும் கூட்டம் அல்ல என்று தளபதி கூறுகிறார்..
ஆனால் அங்கு நடத்தப்படும் நிகழ்வுகள் அனைத்தும்,
அவைத்தலைவரை குறிவைத்து, கேலி செய்து,
அசிங்கப்படுத்தி நடத்தப்படுகின்றன.

அவர்களை போலீஸ் சூழ்ந்து கொள்கிறது.
அனைத்து செய்தி தொலைக்காட்சி சேனல்களும்
நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கின்றன.
தாங்கள் கைது செய்யப்படுவதை அவர்கள்
விரும்பி, வரவேற்பது, எதிர்பார்ப்பது – தெரிகிறது.
கலைஞர் தொலைக்காட்சியில் breaking news போடுகிறார்கள்.
தளபதி எந்த நேரமும் கைது செய்யப்படக்கூடும் என்று….!!!

ஆனால் – சூழ்ந்து கொண்ட போலீஸ் வெறுமனே
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது…
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு “போர்” அடித்துப் போய்
கூட்டம் கலைந்து செல்கிறது…
கைது செய்யப்பட வேண்டும் –
பரபரப்பை உண்டு பண்ண வேண்டும் என்கிற
நோக்கம் நிறைவேறவில்லை…!!!

———————–
ரவுண்டு -3

22-ந்தேதி. காவல்துறை மான்யக் கோரிக்கைகள் மீது
விவாதம் துவங்குகிறது. திமுக தலைவர் கலைஞர்
அவைக்கு வரவில்லை. சஸ்பெண்ட் செய்யப்படாத
மீதி 9 திமுக உறுப்பினர்களும், அவர்களது தோழமை
கட்சியினரும் கோரிக்கை மீது விவாதம் செய்யாமல்
வெளிநடப்பு செய்கின்றனர்.

முதல்வர் பேசுகிறார்….
எதிர்க்கட்சியினர் இல்லாமலே மான்ய கோரிக்கையை
நிறைவேற்ற நான் சதி செய்வதாக திமுக தலைவர்
கூறுகிறார்….

அவர் தான் சஸ்பெண்ட் செய்யப்படவில்லையே…
அவருடன் இன்னும் சஸ்பெண்ட் செய்யப்படாத
9 திமுக உறுப்பினர்கள் இருக்கிறார்களே.
அவர்கள் விவாதித்திருக்கலாமே…
திமுக தலைவர் இங்கு வந்திருக்கலாமே –
விவாதித்திருக்கலாமே –
அதைத்தான் நான் எதிர்பார்த்தேன்…
அவர் வந்தால், திமுக ஆட்சியில் நிகழ்ந்த அவலங்களை
பற்றியெல்லாம் பேச வேண்டும் என்று ஆதாரங்களோடு
தயாராக வந்திருக்கிறேன்…
அவைத்தலைவரிடமும் ஆதாரங்களை தந்திருக்கிறேன்.
முன்பு திமுக ஆட்சியின்போது 60-க்கும் மேற்பட்ட
அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டபோது,
நான் தன்னந்தனியாக இங்கே வந்து விவாதத்தில்
கலந்து கொண்டு பேசினேனே…
திமுக தலைவருக்கு அந்த துணிச்சல் ஏன் இல்லை…?

—————————-
ரவுண்டு -4

உயர்நீதிமன்றம் சஸ்பெண்ட் உத்திரவுக்கு தற்காலிக தடை
விதித்து விடும் என்று எதிர்பார்த்து எம்.எல்.ஏ.விடுதியிலிருந்து
அனைத்து திமுக எம்.எல்.ஏ.க்களுடன் ஊர்வலமாக வந்து
சட்டமன்றத்திற்குள் நுழைய காத்திருக்கும் வேளையில் –

தளபதிக்கு, உயர்நீதிமன்றம் – உடனடி நிவாரணம் எதுவும்
தரத் தயாரில்லை என்கிற விஷயம் சொல்லப்படுகிறது…
அங்கேயே கூட்டம் கலைகிறது….

————————–

ரவுண்டு -5

மாலையில் வடசென்னையில் திமுக கூட்டம்…
கலைஞர் பேசுகிறார்…
காலையில் சட்டமன்றத்தில் முதல்வர் பேசியதற்கு
பதில் கொடுப்பார் என்று எல்லாரும் எதிர்பார்த்திருக்கும்போது –

அவர் பேசியதன் போக்கு –

சிலரின் சூழ்ச்சி வேலைகளால் தான் திமுக ஆட்சியை
பிடிக்க முடியவில்லை…
டெல்லியிலிருந்து (பிரதமரின்
வாழ்த்துச் செய்தி …! ) உத்திரவு வந்தது…
எண்ணிக்கை திசை மாறியது….
எங்கள் தோல்வி தற்காலிகமானது…
சூழ்ச்சியை வென்று காட்டுவோம்…
இறுதியில் தமிழன் தன் தமிழ்நாட்டை ஆள்வான்…..

-என்கிற ரீதியில் இருந்தது……!

——————————

கிட்டத்தட்ட நடந்தவற்றை ஓரளவு
சுருக்கமாக /விளக்கமாக (?)
மேலே விவரித்திருக்கிறேன்.

என் விமரிசனங்களை –
நான் இன்னும் முன்வைக்கவில்லை.

அதற்கு முன்னதாக,
பல ரவுண்டுகள் நடந்த இந்த நிகழ்வுகள் குறித்து –
ஒவ்வொரு ரவுண்டிலும்,
எங்கே, யார் தவறுகிறார்கள்…? என்பது குறித்து
நண்பர்களின் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to இன்னொரு ” இருவர் ” – புதிய பதிப்பு….!!!

 1. jagannathan chellappa சொல்கிறார்:

  மிகவும் குறைவான வாக்கு எண்ணிக்கைகளில்
  ஆட்சியைப் பிடிக்ககூடிய வாய்ப்பை இழந்து விட்டோம்
  என்கிற எரிச்சலும், ஏமாற்றமும் திமுகவினரிடம்
  இருக்கிறது. இது அவர்களின் செயலில் பிரதிபலிக்கிறது.

  உள்ளே இருந்தால் கேலியும், கிண்டலும், கூச்சலுமாக
  திமுகவினர் அராஜகம் பண்ணுகிறார்கள். எனவே
  இவர்கள் வெளியேறக் கூடிய situation ஐ உண்டு பண்ணினால்
  தானாகவே பிரச்சினை தீர்ந்து விடும் என்று அதிமுகவினர்
  நினைக்கிறார்கள்.

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இது குறித்த என் கருத்தை பதிவு செய்து விடுகிறேன் –

  திரு.ஸ்டாலினைப் பொருத்த வரையில், தேர்தல்
  தோல்வியை அவர் ஜீரணித்துக் கொண்டு விட்டதாகவே
  தெரிகிறது. அடுத்த தேர்தலில் திமுகவால் ஆட்சியை
  பிடிக்க முடியும் என்கிற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது.
  ஒருவேளை அது தான் நல்லது என்று கூட அவர்
  நினைக்கக்கூடும் (கலைஞரின் ஆதிக்கத்திலிருந்து
  அதற்குள் முற்றிலுமாக விடுபட்டு விடலாமே…! )

  ஆனால், 6-வது முறை சி.எம். என்று மிகுந்த நம்பிக்கையில்
  இருந்த கலைஞரால் இந்த தோல்வியை தாங்கிக் கொள்ள
  இயலவில்லை. தனக்கு கிடைக்கவிருந்த அரிய வாய்ப்பை
  ஜெ.அவர்கள் தட்டிப் பறித்து கொண்டதாகவே
  இன்னும் பொருமுகிறார்… எப்படியாவது, எதாவது நிகழ்ந்து
  ஆட்சி கவிழ்ந்து விடாதா என்கிற எதிர்பார்ப்பிலேயே
  இன்னமும் இருக்கிறார்…

  திருவாளர் துரைமுருகனையும் மற்றவர்களையும்
  தூண்டி விட்டு, சட்டமன்றத்தில் சேட்டைகளை அவிழ்த்து
  விடுவது அவர் தான்.

  22- ந்தேதி வடசென்னையில் நிகழ்ந்த கூட்டத்தில் அவர்
  பேசியுள்ளதே அதற்கு சான்று –

  ——————
  – நடந்து முடிந்த தேர்தலில் பலர் மேற்கொண்ட
  சூழ்ச்சிகளால் தான் திமுக தோற்கடிக்கப்பட்டது.

  கடைசி நேரத்தில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து
  வந்த செய்தியால், சூழ்ச்சி செய்யப் பட்டு தேர்தலில்
  திமுக தோற்கடிக்கப்பட்டது. இதனால்தான் ஆட்சிக்கு
  வரவேண்டிய திமுக, எதிர்க்கட்சியாக வேண்டிய நிலை
  ஏற்பட்டது. இதற்கு காரணமான வர்கள் யார் என்பதை
  அறிவேன். அவர்களுக்கு சரியான நேரத்தில் தகுந்த
  தண்டனையை பெற்றுத் தருவேன்.

  -தமிழ் ஹிந்து –
  ——————

  கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக அரசின் சாதனை அல்லது
  வேதனைகள் ஏற்கெனவே பொது தேர்தலின் போது
  போதுமான அளவு விவாதிக்கப்பட்டு, மக்கள் ஒரு தீர்ப்பும்
  கொடுத்து விட்டார்கள்.

  எனவே, இனி புதிய ஆட்சியைத் தான் கவனிக்க வேண்டும்.
  அது செயல்படும் முறைகளைத் தான் விமரிசிக்க வேண்டும்.
  இன்னும் நாலே முக்கால் ஆண்டுகள் இருக்கின்றன.
  இந்த ஆட்சியிலும் குறைகளை கண்டு – பேசிட
  திமுகவுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். எனவே,
  திமுகவை பொருத்த வரையில் தேவை – பொறுமை.

  அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் செயல்படும்
  முறையில் அவசியம் மாற்றம் தேவை. அவசியமின்றி,
  திமுகவினரை எரிச்சலூட்டி, தூண்டி விடுவதையும்,
  ஆத்திரப்படச் செய்வதையும் அவர்கள் கைவிட வேண்டும்.

  அதே போல், சட்டமன்றத்தில் அளவுக்கு மிஞ்சி,
  முதல்வரை புகழ்வதையும் அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
  இது முற்றிலும் செயற்கையானது என்பது பத்திரிக்கையாளர்கள்,
  பொதுமக்கள் எல்லாருக்குமே புரிவதால், சில சமயங்களில்
  மிகவும் அருவருப்பாக இருக்கிறது.

  புதிய செட் “இருவர்” -ல் –

  முதல்வர் ஜெ. தான் கலைஞரை விட துணிச்சலாக
  செயல்படக்கூடியவர், வெளிப்படையாகச்
  செயல்படக்கூடியவர் என்பதை மீண்டும் ஒரு முறை
  நிரூபித்திருக்கிறார்.

  கலைஞர், சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளாமல்
  தனது பழைய செயல்முறைகளிலேயே இன்னமும்
  உழன்று கொண்டிருக்கிறார்… தீவிர அரசியலிலிருந்து
  அவர் ஒதுங்கிக் கொண்டு, திரு.ஸ்டாலினிடம்
  முழு பொறுப்பையும் ஒப்படைப்பது கட்சிக்கும்,
  ஸ்டாலினுக்கும், ஏன் – கலைஞருக்குமே நல்லது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   திரு.செல்வராஜன் அவர்களிடமிருந்து வந்துள்ள பின்னூட்டம் –

   selvarajan singaram

   ” நமக்கு நாமே ” பற்றி கூறியதால் பிரச்சனை செய்வதை விடுத்து — தி.மு.க. உறுப்பினர்கள் அதையே பாசிட்டிவாக ” அந்த பயணத்தினால் தான் நாங்கள் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை சபைக்குள் கொண்டுவர முடிந்தது ” – என்று கூறியிருந்தால் இந்தநிகழ்வுகளை தவிர்த்து இருக்கலாம் — கலைஞர் அவர்களுக்கு முதல்வராக முடியவில்லையே என்கிற – ஆதங்கம் ஒருபக்கம் — வீண் விளம்பரங்களுக்கும் — வெட்டி கருத்துக் கணிப்புகளும் செலவிட்ட தொகையை நினைத்து மாபெரும் கவலை – மறுபக்கம் — அதனால் அவரது புலம்பல் ஒரு தொடர்கதை —
   போட்டி சட்டசபை — இரண்டு சபாநாயகர்கள் — முதல்வரை வானளாவ புகழ்வது — மேஜையை தட்டி – மேஜைக்கு வலியேற்படுத்துவது — ” குண்டு ” க்கட்டாக தூக்கி வெளியேற்றுவது — ஒட்டு மொத்த உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்வது — போன்ற சபை கேவலங்களை உருவாக்கி – நடைமுறை படுத்தியவர் கலைஞர் அவர்கள் தானே …..
   எல்லாவற்றையும் வீசி எறிந்து ஜோராக நடத்தியவர்கள் — ஒன்றை மட்டும் மறந்து விட்டார்கள் அது : ” செருப்பை வீசுவது ” { முன்பு திரு .எம்.ஜி .ஆரை . நோக்கி வீசியது போல ” } — அதையும் இவர்கள் செய்து இருந்தால் — முழுவதுமாக செய்து முடித்து விட்டார்கள் என்கிற திருப்தி ” மக்களுக்கு ” ஏற்பட்டு இருக்கும் —
   இவைஎல்லாற்றையும் விட ” போட்டி சட்டசபையை —- // திமுக எம்எல்ஏக்களின் போட்டி சட்டசபை கூட்டத்தில் சுவாரசியம்.. “சபாநாயகராகவே” நடித்த துரைமுருகன் //
   Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/suspended-dmk-mlas-hold-mock-assembly-session-260591.html என்றும் —- // திமுக எம்.எல்.ஏக்களின் காமெடி கலாட்டா… கலகலப்பாக நடந்த போட்டி சட்டசபை //
   Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/suspended-dmk-mlas-hold-mock-assembly-comedy-session-260657.html என்றும் தலைப்பு இட்டு எழுதி ” ரசிக்கின்ற ” கேடு கெட்ட பத்திரிக்கைகளும் — இங்கே அவர்கள் ஆற்றும் மக்கள் தொண்டும் போற்றதலுக்கு — உரித்தானவைகள் .. தானே — ? ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த உறுப்பினர்கள் சந்தி சிரிக்கும் செயலுக்கு — ஒரு கண்டனமும் தெரிவிக்காமல் நியாயப்படுத்தும் ஜென்மங்களை என்னவென்று — கூறுவது … ?
   திருவிளையாடல் புராணத்தில் ” பழி அஞ்சின படலம் ” என்று ஒன்று இருக்கிறது — அதை ஆளும் கட்சி — எதிர்க் கட்சிகளும் — ஊடகங்களும் — மக்களும் ஓரளவு தெரிந்துக் கொள்வது நல்லது .. தானே ..

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    செல்வராஜன்,

    பிரமாதமாக தொடர்பு படுத்தி இருக்கிறீர்கள்.

    அந்தந்த கால கட்டத்தில் இவையெல்லாம்
    நிகழ்ந்து கொண்டிருந்தபோது பெரும்பாலும்
    நான் தமிழகத்தில் இல்லை. இருந்த கொஞ்ச நாட்கள்
    நடந்ததும் இப்போது சரியாக நினைவிற்கு வர மாட்டேனென்கிறது.

    மீடியாக்கள் சரியாகச் செயல்படவில்லை என்பது உண்மையே…

    நியாயம், நெறிமுறை எல்லாம் யாருக்கு வேண்டியிருக்கிறது..?
    அவர்களுக்கு வேண்டியது சுடச்சுட லைவ் டெலிகாஸ்ட் பண்ண
    “சமாச்சாரங்கள்”…

    அந்த “சுந்தரா ட்ராவல்ஸ்” நாயகி ( ? ) கதையை காட்டுவதில்
    எவ்வளவு அக்கரை பாருங்கள்… கேவலம்…

    ——————–

    ஆமாம் – அந்த “” பழி அஞ்சின படல ”-த்தை அப்படியே
    விட்டு விட்டால் எப்படி …?
    எல்லாருக்கும் புரியும்படி உங்கள் வார்த்தைகளிலேயே
    சொல்லுங்களேன்…

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 3. gopalasamy சொல்கிறார்:

  பழி அஞ்சின படலம் சொல்லுங்களேன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.