“இருவர்” – இரண்டு பதிப்புகள்….!!!

iruvar_mohanlal_prakashraj

தலைப்பை பார்த்தவுடன், நீண்ட நாட்களுக்கு
முன்னதாக இயக்குநர் மணிரத்னம் அவர்கள் எடுத்த படம்
நினைவிற்கு வரக்கூடும்…!

“இருவர்” என்கிற தலைப்பில் இரண்டு இடுகைப் பகுதிகள்
வெளிவருகின்றன. இது முதலாவது –

இரண்டு முன்னாள் முதல்வர்கள் பற்றியது –
(அவர்களின் positive side பற்றியது மட்டும்….)

அடுத்த சில மணி நேரங்களில் இதே “இருவர்” தலைப்பில்
இன்னொரு இடுகை வருகை வருகிறது –
அது – “நிகழ்கால -நல்லதும், கெட்டதும் ” பற்றியது….

——————
நண்பர் ஒருவர், அந்த காலத்தில், தமிழக அரசில்,
பொதுப்பணித்துறையில் சில வருடங்கள் பணி புரிந்தவர்.
நீங்கள் பணி நேரத்தில் சந்தித்த அரசியல்வாதிகளைப் பற்றி
சொல்லுங்களேன் என்று கேட்டேன்.

——————-

இது அவரது சொந்த வார்த்தைகளில் –

என் பணிக்காலத்தில் –
துறை ரீதியான விழாக்களில் இரண்டு முதல்வர்களை
சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது ….

ஒருவர் ஞாபக சக்திக்கு எடுத்துக்காட்டு —
இன்னொருவர் ” மனித நேயத்திற்கு ” உரித்தானவர் …

முதலாமவரை பற்றி : ஒரு அரசுக் கல்லூரிக்கு
கட்டப்பட்ட ” பரிசோதனைக்கூட ” திறப்புவிழா —
முதல்வர் கையால் திறக்க தேதி குறித்து அவர்
திறந்துவிட்டு ஒரு சிறு உரையாற்றி முடித்த பின் —

அப்போதெல்லாம் எங்கள் துறையின் மூலம்
ஒரு சின்ன தேநீர் விருந்து அளிப்பது சம்பிரதாயமாக
இருந்தது — அதில் முதல்வர் –தொகுதி எம்.பி. — எம்.எல்.ஏ . -ஒப்பந்தக்காரர் — துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் எங்கள்
துறையில் அந்த குறிப்பிட்ட வேலையில் ஈடுபட்ட உதவிப்
பொறியாளர் — தலைமை — மேற்பார்வை — நிர்வாகப்
பொறியாளர்கள் எல்லோரும் கலந்து கொள்வது வழக்கம் ….

அவ்வாறு நடக்கும் விருந்தில் தலைமைப் பொறியாளர்
மற்றவர்களை முதல்வருக்கு அறிமுகம் செய்வார்.
பின் முதல்வர் குறிப்பிட்டக் காலத்திற்குள் வேலையை
பூர்த்தி செய்த அனைவரையும் பாராட்டி சில வார்த்தைகள்
பேசியபின் விருந்து முடிவுக்கு வரும்.

மேலே சொன்ன விழா முடிந்து — பின்னர் நான் வேறு
ஒரு ஊரில் கூட்டுறவு துறைக்காக ஒரு பெரிய கட்டடம்
கட்டுவதில் பணியில் இருந்தேன் — அப்போதும்
அதே முதல்வர் தான் ஆட்சியில் இருந்தார் …
திறப்புவிழாவும் வந்தது — கூட்டுறவு துறையின் ” சேர்மன் ”
ஆளும் கட்சியை சேர்ந்தவர் — யானையை விட்டு
மாலையிட்டு முதல்வரை வரவேற்று அவர் கையால்
திறப்புவிழா நடந்து முடிந்த பிறகு — தேநீர் விருந்து நடந்தது.

பின் சேர்மன் என்னை காண்பித்து முதல்வரிடம் எதேயோ
கூறிக்கொண்டு இருந்தார் ….

அனைவரும் முதல்வரை தொடர்ந்து படிகளில் இறங்கி வந்து —
காரில் முதல்வர் ஏறும்போது என்னை ” பெயர் சொல்லி ”
அழைத்து, கல்லூரி விழாவில் சந்தித்தோம் –

மீண்டும் இங்கே சந்திக்கிறோம். உங்களைப்பற்றி சேர்மன்
கூறினார். — குறிப்பிட்ட காலத்தில் இரவு- பகல் பார்க்காமல்
என்னுடைய திறப்புவிழா தள்ளிவைக்காமல் இருக்க முக்கிய
காரணமாக இருந்த உங்களை பாராட்டுகிறேன் — இதுபோலவே
பணியாற்றுங்கள் என்று கூறியது இன்றும் என் நினைவில்
இருப்பது மட்டுமல்லாது என்னுடைய பெயரை
பல ஆண்டுகளுக்கு பின்னும் நினைவில் வைத்திருந்த
அவரின் ” ஞாபக சக்தி ” பிரமிப்பானது..!

அடுத்த முதல்வர் பற்றியது : அதாவது பொதுவாக
என்னைப்போன்ற உதவிப் பொறியாளர்கள் — முதல்வர்
போன்றோரை மிக அருகில் சந்திக்கும் வாய்ப்பு
என்பதே இது போன்ற விழாக்களில் தான் கிடைக்கும் ….

ஒரு தொழுநோய் சிகிச்சை மற்றும் அது சார்ந்த கல்விக்காக
ஒரு கட்டடம் கட்டும் ” பாக்கியம் ” எனக்கு கிடைத்தது —
அது ஒரு மிகப்பெரிய கட்டட வளாகம் — அதன் வேலைகள்
முடிவுறும் தருவாயில் முதல்வர் கையால் திறப்பது என்று
மருத்துவ துறையினர் முடிவு செய்து நாளும் குறிக்கப்பட்டது.

நானும் என்னுடைய மேலதிகாரிகளும் விழா ஏற்பாட்டில்
மும்முரமாக ஈடுப்பட்டு இருந்தபோது –
திறப்புவிழாவிற்கு முதல்நாள் — விரைவான சுற்றறிக்கை
ஒன்று முதல்வர் அலுவலகத்திலிருந்து — தலைமைப்
பொறியாளருக்கு கிடைத்து – ஒரு ஊழியர் மூலம் எங்கள்
கைக்கு வந்தது …

அதில் ” கட்டடம் கட்டிய தலைமை மேஸ்திரி ”
நாளைய விழாவில் கண்டிப்பாக இருந்தே ஆகவேண்டும்
என்று இருந்தது — எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
உடனே ஒப்பந்தக்காரரை அழைத்து செய்தியை கூறி
ஏற்பாடு செய்தோம். மறுநாள் விழா ஆரம்பிக்க முதல்வர்
வருகைக்காக காத்திருந்தோம். அந்த மேஸ்திரிக்கு
புத்தாடைகள் அணிவித்து அவரையும் தயார்படுத்தியிருந்தோம்.

முதல்வர், மருத்துவ துறை அமைச்சர், மருத்துவர்கள்,
ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என்று வளாகத்திற்குள்
கூட்டம் நிரம்பி வழிந்தது — வெளியே அதைவிட அதிகமாக
மக்கள் கூட்டம்.. கட்டட முகப்பில் வண்ண நாடா { ரிப்பன் }
கட்டப்பட்டு — பயிற்சி பெண் மருத்துவர் கையில்
கத்திரிக்கோலுடன் கூடிய தட்டுடன் நிறுத்தி வைக்கப்பட்டு
இருந்தார்…

முதல்வர் காரைவிட்டு இறங்கி — முகப்பிற்கு வந்து
” கட்டட மேஸ்திரி ” எங்கே என்று கேட்டார். நாங்கள்
அவரை முதல்வரிடம் அழைத்து சென்றோம்.
உடனே முதல்வர் தட்டிலிருந்து கத்திரியை எடுத்து
மேஸ்திரியிடம் கொடுத்து ரிப்பனை வெட்ட சொன்னார் …

எல்லோருக்கும் ஒரே ஆச்சர்யம் — மேஸ்திரிக்கு மயக்கமே
வரும் நிலைமை. முதல்வர், அவரை தட்டிக்கொடுத்து
” நான் திறப்பதைவிட — நீங்கள் திறப்பதுதான் ”
மிகவும் நல்லது. அதுதான் சரியானதும் கூட” என்று கூறி
அவரை உற்சாகமூட்டி, திறக்க வைத்த நிகழ்ச்சி
” தமிழக வரலாற்றில் ” முதன் முதலாக நடந்தது என்பதும்,

அந்த முதல்வர், மற்றும் அமைச்சர்கள் அனைவரும்,
பின்பு எந்த அரசு சார்ந்த கட்டடம் திறந்தாலும் —
இதையே பின்பற்றினார்கள் என்பதும் —
என்னுடைய அனுபவங்கள் …

——————————-

அந்த இரண்டு முதல்வர்கள் யார் என்பதை தனியே வேறு
விளக்க வேண்டுமா என்ன…?

—————–

அடுத்து, இன்னும் சில மணி நேரங்களில்
-இதே தளத்தில் வெளியாகிறது….

“இருவர்” – புதிய பதிப்பு….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to “இருவர்” – இரண்டு பதிப்புகள்….!!!

 1. Mohan சொல்கிறார்:

  மதிப்பிற்குரிய காவேரி மைந்தன் ஐயா அவர்களுக்கு,

  வணக்கங்கள் பல!
  மிக அருமையான பதிவு …
  எத்தனையோ அரசியல் தலைவர்களின் சில அல்லது பல நல்ல குணங்களைக் கண்டு நான் வியந்ததுண்டு …
  தற்கால ஊடகங்கள் இத்தகைய நல்ல செய்திகளை மக்களிடம்
  சேர்க்காததினால் பொதுவாக அரசியலைப் பற்றியும் அரசியல்வாதிகளை பற்றியும் விரக்தி ஏற்பட்டு வருகின்றது.
  மக்களாட்சிக்கு இத்தகைய மனப்போக்கு நல்லது அல்ல..
  எல்லா துறைகளிலும் நல்லவர்களும் உள்ளனர் …கெட்டவர்களும் உள்ளனர்..
  எனவே, தங்களின் இத்தகைய பதிவுகள் நல்ல மாற்றத்தை மக்களிடம் உண்டு பண்ணும்..
  தொடரட்டும் தங்களின் பணி!
  – இலக்குமி மோகன்

 2. B.Venkatasubramanian சொல்கிறார்:

  திரு.கருணாநிதியிடம் ஞாபக சக்தி, கற்பனை வளம்,
  பேச்சுத்திறமை, எழுத்துத் திறமை ஆகியவை நிறைய உண்டு.
  ஆனால், மனிதாபிமானம் சற்றும் கிடையாது.
  கிடைத்ததை எல்லாம் சுருட்டி, தன் குடும்பத்தினருக்கே கொடுத்தவர்.
  அவர் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அவர் குடும்பம் மட்டும் தான்
  பயன் பெறும்.

  திரு.எம்.ஜி.ஆர். மிக மிக வித்தியாசமான ஒரு மனிதர்.
  கொடை வள்ளல். மனதாற அள்ளிக் கொடுப்பவர்.
  கஷ்டப்படும் மக்களைக் கண்டு உண்மையிலேயெ
  வருத்தப்படுபவர், கண்ணீர் விடுபவர்.
  எம்.ஜி.ஆரை மக்கள் மனதாற நேசித்தார்கள்.
  தங்களில் ஒருவராக நினைத்தார்கள்.
  எம்ஜியார் இருக்கும் வரை அவரை ஜெயிக்க கருணாநிதியால்
  முடியவில்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.