பழி(க்கு) அஞ்சின படலம்….

.

.

.

புராணங்கள் எல்லாம் கட்டுக்கதை –
என்று நினைப்போர் உண்டு.
பாதி நிஜம், பாதி கற்பனை – என்று சிலரும்,
மிகைப்படுத்தப்பட்ட நிஜம் –
அதாவது நிஜமே என்று நினைக்கும்
பக்தர்களும் உண்டு.

இந்த இடுகையில், நான் இந்த விவாதத்திற்குள்
செல்லவில்லை…

இவற்றில் – எந்த வடிவத்தில் எடுத்துக் கொண்டாலும் சரி –
இந்த புராணங்களின் இலக்கியச் சுவையும், அவை
கூற முற்படும் கருத்துக்களும் எல்லாராலும்
ஏற்றுக் கொள்ளப்படக்கூடியவையே என்கிற நோக்கில்
இந்த இடுகையை எடுத்துச் செல்கிறேன்….

சில நாட்களுக்கு முன் அரசியல் தொடர்பான இடுகையொன்று
இந்த தளத்தில் வெளிவந்த போது, நண்பர் செல்வராஜன்
அவர்கள் “பழி அஞ்சிய படலம்” குறித்து குறிப்பிட்டிருந்தார்…

சில நண்பர்கள் இது குறித்து விரிவாக சொல்லப்பட வேண்டும்
என்று விரும்பினார்கள். திருவிளையாடல் புராணத்தில்
வரும் நடையில் குறிப்பிட்ட பாடலைத் தந்தால் –
பலருக்கும் ( முதலில் எனக்கும்…) புரிவது கடினம் என்பதால்,
நண்பர் செல்வராஜனிடமே இதனை உரை நடையில்
கோரி இருந்தேன்…. கிடைத்தது..

கீழே முதலில்
உரை நடையிலும் ( உபயம் – நண்பர் செல்வராஜன் )
பின்னர் பாடல் வடிவிலும்,
(விரும்புபவர்கள், முடிந்தவர்கள் – படித்து ரசிக்க…!!!)
பதிப்பித்திருக்கிறேன்.

இதன் மூலம் சொல்ல வரும் செய்தி –

அரசியலில் செயல்படுபவர்கள் –
ஆட்சியாளர்களானாலும் சரி,
எதிர் வரிசையில் இருப்பவர்களே ஆனாலும் சரி –

” இன்று நாம் செயல்படும் முறையால் –
நாளை நம் மீது பழி வந்து விடக்கூடாதே” –

என்று அஞ்சி செயல்பட்டால் – நல்ல அரசியல் தழைக்கும்…

——————————————————

” பழி அஞ்சின படலம் ”

ரசிப்பதற்கு என்று தான் "ஆங்கில" விளக்கத்தை அப்படியே வைத்திருக்கிறேன்...!!!

ரசிப்பதற்கு என்று தான் “ஆங்கில”
விளக்கத்தை அப்படியே வைத்திருக்கிறேன்…!!!

பழி அஞ்சின படலம் அல்லது ” பழிக்கு ” அஞ்சிய படலம்
என்றும் கூறலாம் — இறைவனின் திருவிளையாடல்
ஒரு ” காரண — காரியத்திற்காவே ” நமக்காக நடத்தப்பட்டது.

பாண்டியன் குலோத்துங்கன் மதுரையை அரசு புரிந்து
வந்த போது — திருப்புத்தூரில் இருந்து ஒரு அந்தணன்
தன் மனைவி – குழந்தையோடு தன் மாமன் வீடு நோக்கி
மதுரைக்கு வரும் வழியில் – – மனைவியின் தாகம் தீர்க்க
நீர் கொண்டுவர செல்லும் முன் அவர்களை ஒரு
ஆலமரத்தடியில் இளைப்பாற விட்டு சென்றான் …

மரத்தின் இலைகளுக்கு நடுவே சிக்கியிருந்த
கூர்மையான ” அம்பு ” ஒன்று எப்போதோ — யாரோ ஒருவரால்
எய்யப்பட்டது — பலத்த காற்று வீசியதால் அங்கிருந்து அம்பு
கீழே விழுந்தது –விழுந்த அம்பு மல்லாந்து படுத்திருந்த

அந்தணனின் மனைவியின் வயிற்றில் பாய்ந்து
அவளது உயிரை ” விதிப்பயன் படி ” பறித்தது ….

திரும்பி வந்து பார்த்தபோது மனைவின் வயிற்றில்
ஓர்அம்பு தைத்து — படுத்திருந்த நிலையிலேயே அவளது
உயிர் பிரிந்து இருப்பதையும் — பக்கத்தில் குழந்தை
விளையாடிக் கொண்டு இருப்பதையும் கண்டு — பதறிப்போய் —

அழுது புலம்பி யார்செய்தது இந்த செயலை என்று
சுற்றுப்புறத்தை ஆராய்ந்த போது — மரத்தின் அடுத்த பக்கம்
கையில் ” வில்-அம்போடு ” ஒரு வேடுவனை பார்த்து —
அவன் மீது சந்தேகம் கொண்டு அவனை பலவாறாக திட்டி
ஏன் என் மனைவியை கொன்றாய் என்று கேட்டு —
நீதிக்காக அரசனிடம் போக அழைத்த போது ….

அந்த வேடுவன் : அய்யா நான்
கொலைசெய்யவில்லை — நான் இளைப்பாறவே நிழலில்
நின்றிருந்தேன் என்று எவ்வளவோ சொல்லியும் கேளாத
அந்தணன் — இறந்த மனைவி — குழந்தையோடு அரண்மனை

நோக்கி வேடுவனோடும் சென்று — வாயிலில் சடலத்தை
வைத்து பலவாறாக அழுது புலம்பினான் …

இதை பார்த்த காவலர்கள் அரசனிடம் சென்று
கூறியவுடன் — அரசன் சபைக்கு அழைத்து நடந்தவற்றை
கேட்டறிந்தான் — வேடுவன் நான் கொல்லவில்லை என்று
கூறியதால் மந்திரிகளோடு ஆலோசித்தும் ஒரு முடிவுக்கு
வரமுடியவில்லை — எனவே வேடுவனை சிறையிலிட்டு
விசாரிக்க உத்திரவு இட்டான் … அந்தணரிடம் தாங்கள்
சென்று மனைவின் மற்ற சடங்குகளை செய்த்துவிட்டு
வாருங்கள் என்று கூறி பொருளுதவி செயது அனுப்பிவிட்டு …

வேடுவனை பலவாறாக விசாரித்தும் ஒரே
பதிலையே சொல்லிக் கொண்டிருந்தான் — எனவே இது
மனித ஆராய்ச்சிக்கு உட்பட்டதன்று — தெய்வம்தான்
தெளிவாக்க வேண்டும் என்று முடிவு செய்து …

ஈமக்கடன் முடித்துவந்த அந்தணனை அரண்மனை
வாயிலில் இருத்திவிட்டு — மன்னன் திருக்கோயில் சென்று —
சோமசுந்தர பெருமானை பலவாறாக தொழுது — அய்யனே –
தெளியாத மனதுடன் வந்துள்ளேன் — அந்தணன் மனைவியை
கொன்றது வேடனா .? அல்லது வேறு யாரோ .? என்று
தெரியவில்லை — நீதி சாஸ்த்திரங்கள் இது விஷயத்தில்
துணை செய்யவில்லை …எம்பெருமானே அருள் புரிந்து
எனது குறை தீர தெளிவாக்கி அருள வேண்டும்
விண்ணப்பித்தவுடன் …

அதுசமயம் ஒரு ஆகாசத்திலிருந்து
” பாண்டியா கேள் – வெளியே செட்டித் தெருவில் ஒரு
வீட்டில் இன்றிரவு ஒரு விவாகம் நடக்கும் . அந்தணனையும்
அழைத்துக் கொண்டு மாறு வேடத்தில் அங்கே செல் .
அங்கே உன் மனம் தெளிவடையுமாறு யாம் செய்வோம் –
என்று அசீரிரி எழுந்தது — மன்னன் அமைதி அடைந்த
உள்ளத்தோடு திரும்பினான் ….

மாலை நேரம் சென்றதும் அந்தணனோடு
மாறு வேடத்தில் அங்கே சென்று ஓரிடத்தில் அமர்ந்து
இருந்தான் . அவர்கள் பக்கத்தில் இரண்டு பேர் பேசிக்கொண்டு
இருந்தனர் அவர்கள் இருவரும் ” எம தூதர்கள் . கடவுள்
கிருபையால் அவர்கள் பேசியது இவர்கள் இருவருக்கும்
மட்டும் கேட்டது …

இப்போது இங்கே மணமகன் உயிரை வாங்கி
வரும்படி நமது எம தர்ம ராஜா ஆணையிட்டு இருப்பதால்
எப்படி நிறைவேற்றுவது — மணமகன் நல்ல ஆரோக்கியமாக
உள்ளானே என்ன செய்வது ?என்று ஒரு தூதன் வினவ …

அதற்கு மற்றவன் ” அம்பை காற்றினால் விழ – செய்து
அந்தணனின் மனைவியின் உயிரை வாங்கியதைப் போல —
வெளியே கட்டியுள்ள மாட்டை கெட்டி மேளம் கொட்டி
ஆரவாரம் செய்யும் பொது – மருண்டு ஓட விட்டு —
மாட்டின் மூலமாக மணமகனின் உயிரை வாங்குவோம்
என்று யுக்தி ஒன்றை சொன்னான் …

வேந்தன் – வேதியனை பார்த்தான் .
” விவரம் தெளிந்த வேதியனும் — வேந்தனும் மேற்கொண்டு
நடப்பதை அறிய காத்திருந்தனர் . எம தூதர்கள் கூறியபடி —
மாடு வெருண்டு கயிற்றை அறுத்துக் கொண்டு பாந்தோடி
வந்து மணமகனை தனது கொம்புகளால் முட்டிக் கொன்று
விட்டது — மணப்பறையே – பிணைப்பறையாக ஆயிற்று …

குற்றமற்ற வேடனை வேதனைக்கு உள்ளாக்கி
விட்டோமே என்று இருவருமே மனம் புழுங்கினர் . பின்னர்
வேடனை விடுதலை செய்து — வேதியனுக்கு மறுமணம்
புரிந்துக் கொள்ள பொருள் கொடுத்து அனுப்பினான் – மன்னன் —

உடனே கோயிலுக்கு சென்று
சுந்தரேசப் பெருமானை தொழுது — ஈசனே என்னை பெரும்
பழியில் இருந்து காப்பாற்ற ” பழியஞ்சு ” நாதராய் இருந்தீர்
என்று கூறி துதித்தான் …

இது தான் ” பழி அஞ்சிய படலத்தின்
திரு விளையாடல் ” …. இதில் பழிக்கு அஞ்சியவர்கள் யார் ..
யார் .? என்று சிந்தித்தால் —

முதலில் வேடன் – அவன் தான் செய்யாத கொலைக்கு
தன் மீது பழி வந்து விட்டதே என்றும் —

அடுத்து மன்னன் – திருமண வீட்டில் உண்மை
தெரிந்தவுடன் — ஒரு அப்பாவியை { வேடனை } சிறையில்
அடைத்து — பல விதங்களில் விசாரித்த பழி தன் மீது
ஏற்பட்டு விட்டதே என்றும் —

தொடர்ந்து, அந்தணன் – வேடன் எவ்வளவோ சொல்லியும்
நம்பாமல் அவனை மன்னனிடம் கொண்டு சென்று புகார்
அளித்து தீரா பழியை சுமக்க வேண்டியதாகி விட்டதே
என்றும் —

இறைவன் – தான் அரசாண்ட மதுரையம்பதியில்
இவ்வாறான ஒரு சம்பவம் நடக்கும் படியும் — மன்னன்
அவசரப்பட்டு வேடனுக்கு ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தால் —
தான் அந்த பழிக்கு ஆளாகியிருப்போமே என்றும் — நினைத்து ”

” பழிக்கு அஞ்சிய ” மாண்பை
அனைவரும் உற்று நோக்க வேண்டும் —
என்று சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்.

——————————————————————-

இனி பரஞ்சோதியாரின் பாடல் வடிவத்தில் –
( புரிந்து கொண்டு படிப்பது அவரவர் சாமர்த்தியம்… !!! )

25. பழி அஞ்சின படலம்

1490. ஈறு இலான் செழியன் அன்புக்கு எளியவன் ஆகி மன்றுள்
மாறி ஆடிய கூத்து என்சொல் வரம்பினது ஆமே கங்கை
ஆறுசேர் சடையான் தான் ஓர் அரும் பழிக்கு அஞ்சித் தென்னன்
தேறலா மனத்தைத் தேற்றும் திருவிளை ஆடல் சொல்வாம்.

1491. இனைய நாள் சிறிது செல்ல இராச சேகரன் காதல்
தனையன் ஆம் குலோத்துங்கற்குத் தன் அரசு இருக்கை நல்கி
வினை எலாம் வென்று ஞான வெள்ளி அம்பலத்துள் ஆடும்
கனை கழல் நிழலில் பின்னிக் கலந்து பேரின்பம் உற்றான்.

1492. குரவன் செம்கோல் கைக் கொண்ட குலோத்துங்க வழுதி செம்கண்
அரவு அங்கம் பூண்ட கூடல் ஆதி நாயகனை நித்தம்
பரவு அன்பின் வழிபாடு ஆனாப் பத்திமை நியமம் பூண்டான்
இரவு அஞ்சும் கதுப்பின் நல்லார் ஈர் ஐயா இரவர் உள்ளான்.

1493. அப்பதின் ஆயிரவர்க்கு ஒவ் வொருத்திக்கு அவ் ஆறாய்
ஒப்பரிய அறுபதினாயிரம் குமரர் உளர் அவருள்
செப்ப அரிய வல் ஆண்மைச் சிங்க இள ஏறு அனையான்
வைப்பு அனையான் முதல் பிறந்த மைந்தன் பேர் அனந்த குணன்.

1494. கலை பயின்று பரி நெடும் தேர் கரி பயின்று பல கைவாள்
சிலை பயின்று வருகுமரர் திறல் நோக்கி மகிழ் வேந்தன்
அலை பயின்ற கடலாடை நில மகளை அடல் அணி தோள்
மலை பயின்று குளிர் தூங்க மகிழ்வித்து வாழும் நாள்.

1495. செய் ஏந்து திருப்புத்தூர் நின்று ஒரு செழு மறை யோன்
பை ஏந்தும் அரவு அல்குல் மனைவி யொடும் பால் நல் வாய்
கை ஏந்தும் குழவி யொடும் கடம் புகுந்து மாதுலன் பால்
மை ஏந்தும் பொழில் மதுரை நகர் நோக்கி வருகின்றான்.

1496. வருவான் உண்ணு நீர் வேட்டு வருவாளை வழி நிற்கும்
பெரு வானம் தடவும் ஒரு பேர் ஆலின் நீழலின் கீழ்
ஒருவாத பசுங் குழவி உடன் இருத்தி நீர் தேடித்
தருவான் போய் மீண்டு மனை இருக்கும் இடம் தலைப் படுமுன்.

1497. இலைத்தலைய பழு மரத்தின் மிசை முன் நான் எய்த ஒரு
கொலைத் தலைய கூர் வாளி கோப்புண்டு கிடந்தது கால்
அலைத்து அலைய வீழ்ந்து உம்மை வினை உலப்ப ஆங்கிருந்த
வலைத் தலைய மான் நோக்கி வயிறு உருவத் தைத்தது என்றால்.

1498. அவ்வாறு அவ் அணங்கு அனையாள் உயிர் இழந்தாள் உவ் வேலைச்
செவ் வாளி ஏறிட்ட சிலை உடையான் ஒரு வேடன்
வெவ் வாளி ஏறு அனையான் வெயிற்கு ஒதுங்கும் நிழல் தேடி
அவ் ஆல நிழல் எய்தி அயல் நின்றன் இளைப் பாற.

1499. தண்ணீருக்குப் போய் ஆவி தலைப் பட்ட மறையவனும்
உண் நீர்க் கைக் கொண்டு மீண்டு ஒருங்கு இருந்த குழவி யோடும்
புண் நீர் வெள்ளத்துக்கா தாழ்ந்து உயிரைப் புறம் கொடுத்த
பண் நீர மழலை மொழிப் பார்ப்பனியைக் கண் உற்றான்.

1500. அயில் போலும் கணை ஏறுண்டு அவ்வழிப் புண் நீர் சோர
மயில் போல உயிர் போகிக் கிடக்கின்றாள் மருங்கு அணைந்து என்
உயிர் போல்வாய் உனக்கு இது என் உற்றது என மத்து எறி தண்
தயிர் போலக் கலங்கி அறிவு அழுந்து மனம் சாம் பினான்.

1501. இனையது ஒர் பெண் பழியை யார் ஏற்றார் எனத் தேர்வான்
அனையது ஒர் பழு மரத்தின் புறத்து ஒரு சால் அழல் காலும்
முனையது ஒர் கணையோடு முடக்கி அகைச் சிலை ஏந்தி
வினையது ஓர்ந்து எதிர் நின்ற விறல் வேடன் தனைக் கண்டான்.

1502. காப்பு அணி தானன் வாளடு வீக்கிய கச்சாளன்
கூர்ப் பகழிக் கோல் ஏறிடு வில்லன் கொலை செய்வான்
ஏற்பன கைக் கொண்டு இவ் இடை நின்றான் இவனே என்
பார்ப் பனியைக் கொன்று இன் உயிர் உண்டு பழி பூண்டான்.

1503. என்ன மதித்தே ஏடா வேடா என் ஏழை
தன்னை வதைத்தாய் நீயே என்னா அழல் கால் கண்
மின்னல் எயிற்றுக் குற்று என வல் வாய் விட்டு ஆர்த்து
மன்னவன் ஆணைப் பாசம் எறிந்து வலித்து ஏகும்.

1504. மாண்டவளைத் தன் வெந் இடை இட்டான் மகவு ஒக்கல்
தாண்ட அணைத்தான் தாய் முலை வேட்டு அழும தன் சேயைக்
காண் தொறும் விம்மாக் கண் புனல் சோரக் கடிது ஏகா
ஆண் தகை மாறன் கூடல் அணைந்தான் அளி அன்றான்.

1505. மட்டு அவிழ் தாரான் வாயின் மருங்கே வந்து எய்தா
உள் துகள் இல்லா வேடனை முன் விட்டு உயிர் அன்னாள்
சட்டக நேரே இட்டு எதிர் மாறன் தமர் கேட்பக்
கண்துளி சிந்தா முறை யிடு கின்றன் கை ஓச்சா.

1506. கோமுறை கோடாக் கொற்றவர் ஏறே முறையே யோ
தாமரையாள் வாழ் தண் கடி மார்பா முறையேயோ
மா மதி வானோன் வழிவரு மைந்தா முறையே யோ
தீமை செய்தாய் போல் செங்கை குறைத்தாய் முறையே யோ.

1507. பிறங்கும் கோலான் மாறடு கொற்றம் பெறு வேந்தன்
உறங்கும் போதும் தன் அருள் ஆணை உலகு எங்கும்
அறம் குன்றாவாக் காப்பதை என்ப அ•தி யாதி இம்
மறம் குன்றாதான் செய் கொலை காவா வழி என்றான்.

1508. வாயில் உளார் தம் மன்னவன் முன் போய் மன்னா நம்
கோயிலின் மாடு ஓர் வேதியன் மாதைக் கொலை செய்தான்
ஆயினன் என்று ஓர் வேடனை முன் விட்டு அவிந்தாளைத்
ஆயினன் வந்து இங்கு இட்டு அயர் கின்றான் தமியன என்றார்.

1509. இறை மகன் அஞ்சா என் குடை நன்று ஆல் என் காவல்
அறம் மலி செம்கோல் அஞ்சு பயம் தீர்த்து அரசு ஆளும்
முறைமையும் நன்றன் மண் கலி மூழ்கா முயன்று ஏந்தும்
பொறைமையும் நன்றல் என்று புலந்து புறம் போந்தான்.

1510. வேதியன் நிற்கும் தன்மை தெரிந்தான் மெலிவு உற்றான்
சாதியின் மிக்காய் வந்தது உனக்கு என் தளர் கின்றாய்
ஓதுதி என்னக் காவலனைப் பார்த்து உரை சான்ற
நீதி உளாய் கேள் என்று உரை செய்வான் நிகழ் செய்தி.

1511. இன்று இவளைக் கொண்டு ஓர் வட நீழல் இடை விட்டுச்
சென்று தணீர் கொண்டு யான் வருமுன் இச் சிலை வேடன்
கொன்று அயல் நின்றான் என்று உலை ஊட்டும் கொலை வேல்போல்
வன்திறல் மாறன் செவி நுழைவித்தான் மறையோன் ஆல்.

1512. அந்தணன் மாற்றம் தன்னையும் உட் கொண்டு அற நோக்கும்
சந்தன வெற்பன் மறவனை நோக்கத் தாழ்ந்து அன்னான்
எந்தை பிரானே நாய் அடியேன் நின்று எய்ப்பாற
வந்து புகுந்தேன் அந்த மரத்தின் மருங்கே ஓர் சார்.

1513. ஐயே நானும் கொன்றவன் அல்லேன் கொன்றாரைக்
கையேன் வேறும் கண்டிலன் என்றான் இவள் ஆகத்து
எய்யேறு உண்ட வாறு என் என்றார் எதிர் நின்றார்
மெய்யே ஐயா யான் அறியேன் இவ் விளைவு என்றான்.

1514. இக் கொலை செய்தான் யான் அலன் என்னா துள என்னத்
தக்கவ னேயோ தறுகண் மறவன் உரை மெய்யோ
சிக்க ஒறுத்தால் அல்லதை உண்மை செப்பான் என்று
ஒக்க உரைத்தார் மந்திரர் உள்ளார் பிறர் எல்லாம்.

1515. மன்னன் தானும் மற்று அது செய்மின் என மள்ளர்
பின்னம் தண்டம் செய்தனர் கேட்கப் பிழை இல்லான்
முன்னம் சொன்ன சொல் பெயரானாய் மொழியா நின்று
இன்னல் தீரத் தேருமின் என்றான் என்செய்வான்.

1516. ஆற்ற ஒறுக்கும் தண்டமும் அஞ்சான் அறைகின்ற
கூற்றமும் ஒன்றெ கொன்ற குறிப்பு முகம் தோற்றான்
மாற்றவரேயோ மாவோ புள்ளோ வழி வந்த
கோல் தொடியைக் கொன்று என் பெற வல்லான் கொலை செய்வான்.

1517. கைதவன் ஆம் இக் கானவனேயோ பிறரேயோ
செய்தவர் யாரே இக் கொலை வேட்டம் செய்தோர் மா
எய்த இலக்கில் தப்பிய கோல் தான் ஏறு உண்டு இம்
மை தவழ் கண்ணான் மாய்ந்தன ளேயோ அறியேன் ஆல்.

1518. என்னா உன்னித் தென்னவன் இன்னம் இது முன்னூல்
தன்னால் ஆயத்தக்கது அதை என்றன் தகவிற்று தன்
அன்னார் அந்நூல் ஆய்ந்து இது நூலால் அமையாது ஆல்
மன்னா தெய்வத் தாலே தேறும் வழி என்றார்.

1519. வேந்தர்கள் சிங்கம் வேதியனைப் பார்த்து இது தீர
ஆய்ந்து உனது உள்ளக் கவலை ஒழிப் பேன் அஞ்சேன் இந்
ஏந்திழை ஈமக்கடன் நிறுவிப்போது என்றேஇத்
தேந்து உணர் வேங்கைத் தார் மறவோனைச் சிறை செய்தான்.

1520. மின் அனையாள் செய்கடன் முற்றா மீண்டோனைத்
தன்னமர் கோயில் கடை வயின் வைத்துத் தான் ஏகிக்
கொன்னவில் வேலான் தங்கள் குடிக்கு ஓர் குல தெய்வம்
என்ன இருந்தார் அடிகள் பணிந்தான் இது கூறும்.

1521. மன்று ஆடும் மணியே இம் மறவன் தான் பார்ப்பனியைக்
கொன்றானோ பிறர் பிறிதால் கொன்றதோ இது அறநூல்
ஒன்றலும் அளப்பரிது ஆக் கிடந்தது ஆல் உன் அருளால்
என் தாழ்வு கெடத் தேற்றாய் என்று இரந்தான் அவ் வேலை.

1522. திரு நகரின் புறம்பு ஒரு சார் குலவணிகத் தெருவின் கண்
ஒரு மனையின் மணம் உளது அங்கு அந்தணனோடு ஒருங்கு நீ
வருதி உனது உளம் தேறா மாற்றம் எலாம் தேற்றுதும் என்று
இரு விசும்பின் அகடு கிழித்து எழுந்தது ஆல் ஒருவாக்கு.

1523. திரு வாக்குச் செவி மடுத்துச் செழியன் தன் புறம் கடையில்
பெருவாக்கு மறையவனோடு ஒருங்கு எய்தி பெரும் பகல் போய்க்
கருவாக்கும் மருள் மாலைக் கங்குல் வாய்த் தன்னை வேற்று
உருவாக்கிக் கடிமனைபோய் ஒரு சிறை புக்கு இனிது இருந்தான்.

1524. அன்று இறைவன் அருளால் அங்கவர் கேட்க அம் மனையின்
மன்றல் மகன் தனக்கு அளந்த நாள் உலப்ப மறலி இருள்
குன்றம் இரண்டு என விடுத்த கொடும் பாசக் கையினர் வாய்
மென்று வரும் சினத்தவரில் ஒருவன் இது வினவும் ஆல்.

1525. இன்றே இங்கு இவன் உயிரைத் தருதிர் எனும் இரும் பகட்டுக்
குன்று ஏறும் கோன் உரையால் கொள்வது எவன் பிணி உடம்பின்
ஒன்றேன் உமிலன் ஒரு காரணம் இன்றி உயிர் கொள்வது
அன்றே என் செய்தும் என மற்றவன் ஈது அறைகிற்பான்.

1526. ஆற்று ஆல் ஏறு உண்ட கணை அருகு ஒதுங்கும் பார்ப்பனியைக்
காற்றுஆல் வீழ்த்து எவ்வாறு கவர்ந்தோம் அப்படி இந்தச்
சாற்று ஆரவாரத்தில் தாம்பு அறுத்துப் புறம் நின்ற
ஈற்று ஆவை வெருள விடுத்து இவன் ஆவி கவர்க என்றான்.

1527. அந்த மொழி கேட்டு அரசன் அரு மறையோய் கேட்டனையோ
இந்த மொழி எனப் பனவன் இவன் இவ்வாறு சிறந்தால் என்
பைந்தொடியாள் இறந்ததும் அப்படியே என் மனக்கவலை
சிந்த இது காண்பேன் என்று ஒருங்கு இருந்தான் தென்னனோடும்.

1528. ஒட்டிய பல் கிளை துவன்றி ஒல் ஒலிமங்கலம் தொடங்கக்
கொட்டிய பல்லியம் முழங்கக் குழுமிய ஓசையின் வெருண்டு
கட்டிய தாம்பிறப் புனிற்றுக் கற்றா ஒன்று அதிர்ந்து ஓடி
முட்டிய தால் மண மகனை முடிந்தது ஆல் அவன் ஆவி.

1529. மண மகனே பிண மகனாய் மணப் பறையே பிணப்பறையாய்
அணி இழையார் வாழ்த்து ஒலிபோய் அழுகை ஒலியாய்க் கழியக்
கணம் அதனில் பிறந்து இறும் இக் காயத்தின் வரும் பயனை
உணர்வு உடையார் பெறுவர் உணர் ஒன்றும் இலார்க்கு ஒன்றும் இலை.

1530. கண்டான் அந்தணன் என்ன காரியம் செய்தேன் எனத்தன்
வண்டு ஆர் பூம் குழல் மனைவி மாட்சியினுங் கழி துன்பம்
கொண்டான் மற்று அவனொடும் தன் கோயில் புகுந்து அலர் வேப்பந்
தண் தாரான் அமைச்சர்க்கும் பிறர்க்கும் இது சாற்றினான்.

1531. மறையவனை இன்னும் ஒரு மண முடித்துக் கோடி என
நிறைய வரும் பொருள் ஈந்து நீ போதி என விடுத்துச்
சிறை அழுவத்து இடைக்கிடந்த செடித் தலையஇடிக் குரல
கறை உடல் வேடனைத் தொடுத்த கால் யாப்புக் கழல்வித்து.

1532. தௌ¤யாதே யாம் இழைத்த தீத்தண்டம் பொறுத்தி என
விளி ஆவின் அருள் சுரந்து வேண்டுவன நனி நல்கி
அளி ஆனாம் மனத்து அரசன் அவனை அவன் இடைச் செலுத்திக்
கனி யானை விழ எய்த கௌரியனைப் போய்ப் பணிவான்.

1533. ஆதரம் பெருகப் பாவியேன் பொருட்டு எம் மடி கணீர் அரும் பழி அஞ்சு
நாதராய் இருந்தீர் எந்தையர்க் குண்டோ நான் செயத் தக்கது ஒன்று என்னாக்
காதலில் புகழ்ந்து பன் முறை பழிச்சிச் கரையின் மா பூசனை சிறப் பித்து
ஏதம் அது அகற்றி உலகினுக்கு குயிராய் இருந்தனன் இறை குலோத்துங்கன்.

பழி அஞ்சின படலம் சுபம்

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to பழி(க்கு) அஞ்சின படலம்….

 1. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  ” மணப்பறையே – பிணைப்பறையாக ” – இதைப் படித்தவுடன், பள்ளிக்காலங்களில் படித்த பாடல் நினைவுக்கு வந்துவிட்டது. சிலப்பதிகாரமா அல்லது வேறு ஏதானுமா என்பது நினைவில் இல்லை. பாடல், “மணமகனே பிணமகனாய், மணப்பறையே பிணப்பறையாய், அணியிழையார் வாழ்த்தொலி போய், அழுகையொலியாய்க் கழிய.. கணம்தனில் பிறந்து இறக் காலத்தின் வரும் பயனை” என்று வரும். (கடைசி வரி தவறாக இருக்கலாம்)

  பழிக்கு அஞ்சினாலே போதும். சமூகம் நன்றாகிவிடும்.

  பாடல்கள் சரியாக பதியப்படவில்லை. எழுத்துரு காரணமாக இருக்கவேண்டும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி நெல்லைத்தமிழன்.

   சரியான எழுத்துரு கிடைக்கவில்லை.
   தேடிக்கொண்டே இருந்தேன்…
   அவசரத்திற்கு கிடைத்ததை போட்டேன்.
   இப்போது சரிசெய்து விட்டேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. NS RAMAN சொல்கிறார்:

  நல்ல பதிவு நன்றி

 3. selvarajan சொல்கிறார்:

  அய்யா … இந்த ” தமிழச்சி … ? ” என்கிற பிறவி — சுவாதி படுகொலையைப் பற்றி பல தகவல்களை மனம் போன போக்கில் பிரான்சில் இருந்து ” பேஸ் புக்கில் ” அவ்வப்போது வெளியிட்டு — வீணாப்போன பத்திரிக்கைகளும் தங்கள் வியாபாரம் நடக்க — அதை செய்தியாக போட்டு குழப்பிக் கொண்டு இருப்பதை — பற்றி நீதிமன்றம் கண்டனம் தெரிவிக்க முடியுமா … முடியாதா … ? ஒரு ” சென்சிட்டிவ்வான ” வழக்கில் இவ்வாறு செய்திகள் வருவது ஏற்புடையதா … ? இன்றைய செய்தி : — // படுகொலை செய்யப்படும் போது சுவாதி “கர்ப்பம்”… புதிய பரபரப்பு தகவல்களை வெளியிட்ட தமிழச்சி //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/swathi-was-pregnant-while-murdered-tamizachi-261403.html …. ” பழிக்கு அஞ்ச ” இவர்கள் யாரும் தயாராக இல்லையா … ? —– ஆனால் சுவாதியின் ஆவி ” பழி ” வாங்கப் போவதாக ஒரு ஸ்பெசலிஸ்ட் கூறுவது மேலும் ஒரு தமாஷ் — // “ஆவி”யாக அலைகிறார் சுவாதி… அமாவாசையில் பழிவாங்கப் போகிறார்.. சொல்வது ஆவி “ஸ்பெஷலிஸ்ட்” அமுதன்! //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/swathi-ghost-going-revenge-culprits/slider-pf208667-261395.html — எல்லாமே ….?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,
   மற்ற நண்பர்களுக்கும் சேர்த்தே –

   இந்த tamil.oneindia.com மிக மிக மோசமான முறையில்,
   மிகவும் தரம் தாழ்ந்து –
   செய்திகளைப் பதிப்பிக்கிறது.

   இது யார் கட்டுப்பாட்டில் ( any party or public personality ..?)
   இருக்கிறது என்பது தெரியுமா…?

   யாருக்காவது இந்த தகவல் தெரிந்தால் எழுதுங்களேன்…

   அவர்கள் இப்படி எல்லாம் செய்தி போடுவதை
   நம்மால் தடுக்க முடியாது என்றாலும்,
   குறைந்த பட்சம் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்றாவது
   தெரிந்து கொள்வோமே.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப அழகர்,

   “விதி உலகெங்கும் நம்பப்படுகிறது ”

   இப்போது தான் பார்த்தேன்.
   நன்றாகவே இருக்கிறது…

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. Barathi சொல்கிறார்:

  மிக்க நன்றி ,அண்ணா.
  பெரும்பாலான நம் அரசியல்வாதிகளின் போக்கைக் கண்டு தம்மைப்போலவே வேதனைப்பட்டு இன்று இல்லாவிட்டாலும் நாளையாவது மாற்றம் வராதா என ஏங்குபவர்களின் மத்தியில் இப்படி ஒரு கட்டுரை.
  விதி வலியது.ஊழ்வினை உறுத்தும் .
  பழிக்கு அஞ்சி மனசாட்சியோடு ஆட்சி செய்தார்களேயானால் நம் தமிழ்நாடு சிறக்கும்.
  மாறுவார்களாக.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.