IAS அதிகாரிகள் சஸ்பென்ஷன் – சில தகவல்கள்…

vaaimaiye vellum

சில மூத்த IAS அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் (suspension)
செய்யப்பட்டது குறித்து சில விவரங்கள் –

முதலாவதாக – காரணம் எதையும் தெரிவிக்காமலே
அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டார்கள் என்று
சிலரால் குறை கூறப்படுகிறது. இது குறித்து விவரம்
தெரியாதவர்கள் சொன்னால் பரவாயில்லை. சில மூத்த
அரசியல்வாதிகளும், ஓய்வு பெற்ற அதிகாரிகளும் கூட
இதைச் சொல்வது தான் ஆச்சரியம்… அவர்களின்
கூற்றுக்கு அறியாமை காரணமாக இருக்க முடியாது.
அரசியலே காரணமாக இருக்க முடியும்…!!!

காரணம் – சஸ்பெண்ட் செய்யப்படுகின்ற நிலையில்
காரணத்தை சொல்ல வேண்டும் என்பது விதியல்ல.
அரசு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு, 48 மணி
நேரங்களுக்கும் மேலாக சிறையில் இருந்தால் மட்டுமே
அவர் automatic ஆக சஸ்பெண்ட் செய்யப்பட்டவராக
கருதப்பட்டு, அப்படியே அறிவிக்கப்படுவார்.

மற்றபடி, இலாகா ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை
எடுக்கின்ற நேரத்தில், பெரிய அளவில் முறைகேடுகளில்
ஈடுபட்டதாக கருதி நடவடிக்கை எடுக்க நேரிடுகையில்,
உங்கள் மீது எடுக்கப்படுகின்ற ஒழுங்கு நடவடிக்கை
காரணமாக, நீங்கள் தற்காலிகமாக பணியிடை நீக்கம்
செய்யப்படுகிறீர்கள் என்கிற உத்திரவு தான் பிறப்பிக்கப்படும்.

சாதாரணமாக, இது நிர்வாக ரீதியாக – அரசு, தனது
ஊழியர் மீது எடுக்கும் இலாகா ரீதியான ஒழுங்கு
நடவடிக்கை என்பதால், இதை பத்திரிகைகளுக்கோ,
பொது மக்களுக்கோ – தெரிவிக்க வேண்டும் என்பது
அவசியமில்லை.

பொதுவாக அரசு அதிகாரிகளின் பணி வரன் முறைகள்
Central Civil Services ( Classification, Control and Appeal)
Rules 1965 மற்றும் Conduct Rules களின் கீழ் வரும்.
அவர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க
வேண்டுமென்றால் இந்த விதிகளின் கீழ் தான் எடுக்க
வேண்டும்.

சஸ்பென்ஷன் உத்திரவை கொடுத்த பிறகு, அதனைத்
தொடர்ந்து சார்ஜ் ஷீட் என்னும் மெமோ கொடுக்கப்படும்.
அதில், அவர் மீது, எத்தகைய முறைகேடுகளுக்காக,
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது விவரமாக
தெரிவிக்கப்பட்டு, ஊழியரிடமிருந்து விளக்கம் கோரப்படும்.

சம்பந்தப்பட்ட ஊழியரிடமிருந்து பதில் வந்த பிறகு,
இலாகா ரீதியாக, ஒரு விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு,
அவரால் விசாரணை நடத்தப்படும். (Court of Inquiry)…
இதனைத் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகள் எல்லாம்

கிட்டத்தட்ட நீதிமன்ற விசாரணைகளை – ஒத்தே இருக்கும்.

குற்றச்சாட்டு, ஆவணங்கள் பரிசோதனை,
சாட்சிகள் விசாரணை, குறுக்கு விசாரணை எல்லாம்
நடத்தப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு தன் மீதான
குற்றச்சாட்டுகளை மறுக்க தகுந்த வாய்ப்புகள் அளிக்கப்படும்.
விசாரணை முடிந்த பிறகு, விசாரணை அதிகாரியின்
பரிந்துரைகள், குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளிக்கப்பட்டு,
அவரது விளக்கங்கள் கேட்கப்படும்….

ஆக, இது ஒரு மிக நீண்ட நடைமுறை. மேலும்,
சம்பந்தப்பட்டவர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்
இருப்பவர்கள் என்பதால், ஒவ்வொரு நிலையிலும்,
மத்திய அரசின் அனுமதியும் தேவைப்படும். இப்போது
பிறப்பிக்கப்பட்டிருக்கும் சஸ்பென்ஷன் உத்திரவுக்கும்
3 மாதங்களுக்குள், மத்திய அரசின் ஒப்புதல் தரப்பட வேண்டும்.

இதுவரை சொன்னவை நடைமுறை குறித்த விவரங்கள்….
இனி இந்த குறிப்பிட்ட “விவகாரம்” குறித்து, பல தளங்களின்
மூலமாக எனக்கு தெரிய வந்த தகவல்களை நான் கீழே
பகிர்ந்து கொள்கிறேன்… இவை எந்த அளவிற்கு உண்மை
எந்த அளவிற்கு கற்பனை என்பது எனக்குத் தெரியாது…

———-
மிக முக்கியமான பதவியை அண்மைக்காலம் வரை
வகித்த மூத்த அதிகாரி – திருநெல்வேலிக்காரர்.
மற்றொரு மூத்த அதிகாரி- டெல்லிக்காரர்.
தமிழக எலெக்ட்ரானிக்ஸ் கார்பொரேஷன் சம்பந்தப்பட்டவர்….

அரசியல்வாதிகள் சாப்பிடுகிறார்கள் என்பது நம்மைப்
பொருத்த வரையில்ர அது ஒரு அதிசயமே இல்லை.
சாப்பிடாத, ஊழல் செய்யாத அரசியல்வாதிகளை
பார்த்தால் தான் நமக்கு ஆச்சரியம், அதிசயம் எல்லாம்…

அதே போல், அரசியல்வாதிகள், அமைச்சர்கள் செய்யும்
ஊழல்கள், அவரது கீழுள்ள அதிகாரிகளுக்கு தெரியாமல்
போகாது. அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல்
எந்த அமைச்சரும் ஊழலில் ஈடுபடவே முடியாது.

ஆனால், அமைச்சர்களையே ஏமாற்றி விட்டு,
அரசாங்க கட்டமைப்பையே ஏமாற்றி விட்டு,
தங்கள் உயர்மட்டம் எதற்கும் தெரியாமலே,

சில அதிகாரிகள், தங்களுக்குள் கூட்டு சேர்ந்துகொண்டு,
ஊழலில் ஈடுபடும் அதிபுத்திசாலித்தனம் இது….
இத்தகைய அதிகாரிகள் அபூர்வமாகவே சிக்குவார்கள்.
அத்தகைய “சிக்கல்” தான் இப்போது கிளம்பியிருப்பது.

தாது மணல் பிசினசை அரசு மேற்கொள்ளப் போவதாக
கொள்கை முடிவு அறிவிக்கப்பட்டு விட்டது. 2013 முதலே
தனியார் நிறுவனங்கள் தாதுமணல் ஏற்றுமதிக்கு
தமிழக அரசால் தடையும் விதிக்கப்பட்டு விட்டது.

2015 பிப்ரவரியில், விக்டர் மாணிக்கம் என்கிற
தனியார் ஒருவரால், சில நிறுவனங்களால், முறைகேடாக
தாது மணல் அள்ளிய வகையில் அரசுக்கு பெருத்த
இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும் அதை விசாரிக்க
சிபிஐ விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் என்றும்
கோரிக்கை விடுத்து, உயர்நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல்
செய்யப்பட்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து, மத்திய சுற்றுச்சூழல்
மற்றும் வனத்துறை ஒரு விசாரணைக்கு உத்திரவிடுகிறது.
வெறுமனே மத்திய அரசின் அதிகாரிகளை மட்டும்
வைத்துக்கொண்டு அந்தத் துறையே இந்த விசாரணையை
நடத்தி இருந்தால், விஷயம் வேறு திசையில் போயிருக்கும்.
ஆனால், மாநில அரசு அதிகாரிகளையும் உள்ளடக்கிய
ஒரு கூட்டு விசாரணையாக இருக்க வேண்டும் என்று
டெல்லியில் இருந்து உத்திரவு வருகிறது.

இந்த கடிதத்தின் அடிப்படையில், மூத்த பதவியில் இருந்த
அதிகாரி, தனது மேலிடத்தின் பார்வைக்கே இதனை
கொண்டு செல்லாமல் –

தனக்கு வேண்டப்பட்ட சில
அதிகாரிகளை கூட்டு விசாரணை குழுவிற்கு அனுப்புகிறார்.
அந்த விசாரணை அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து,
மோசடி ஏற்றுமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த
தாது மணல் விற்பனையாளருக்கு சாதகமாக,
எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது – முறைகேடுகள்
எதுவும் நடக்கவில்லை என்கிற ரீதியில் பரிந்துரை
செய்து ரிப்போர்ட்டும் டெல்லிக்கு சென்று விட்டது.
இவை எல்லாமே காதும் காதும் வைத்தாற்போல்
நிகழ்த்தி, ஊழல் ஏற்றுமதியாளர் மீது எந்த தவறும் இல்லை
என்பது போன்ற ஒரு முடிவு ஏற்பட வழிசெய்து விட்டது.

சில மாதங்களுக்குப் பிறகு, இப்போது தான் தற்செயலாக
இந்த விஷயம் வெளிவந்திருக்கிறது…. அதன் விளைவுகளை
தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

‘டை’யை கழுத்தில் கட்டிக் கொண்டு,
கையை முன்னால் கட்டிக்கொண்டு,
அப்பாவித் தோற்றத்துடன் வலம் வரும் அதிகாரிகள்
இந்த அளவிற்கா ……?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to IAS அதிகாரிகள் சஸ்பென்ஷன் – சில தகவல்கள்…

 1. ராகவேந்திரா சொல்கிறார்:

  நிறைய தகவல்களை உள்ளடக்கி இருக்கிறது.
  உங்கள் கட்டுரைகளிலிருந்து நிறைய விஷயங்களை
  தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி.

  “வாய்மையே – சில சமயம் – வெல்லும்”
  நல்ல quote. எப்படி உங்களுக்கு தோன்றியது ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே,

   இது “சுஜாதா” அவர்களின் ஒரு புத்தகத் தலைப்பு…!
   பாராட்டுகள் சேரட்டும் சுஜாதா அவர்களுக்கே…

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  It is only TIP OF THE ICEBERG

 3. selvarajan சொல்கிறார்:

  // மூத்த பதவியில் இருந்த
  அதிகாரி, தனது மேலிடத்தின் பார்வைக்கே இதனை
  கொண்டு செல்லாமல் –

  தனக்கு வேண்டப்பட்ட சில
  அதிகாரிகளை கூட்டு விசாரணை குழுவிற்கு அனுப்புகிறார்.// என்ன ஒரு பொறுப்பான செயல் … அவர்களுக்குள் ஒரு ” சிண்டிகேட் ” அமைத்துக்கொண்டு — காசுக்காக எப்படியெல்லாம் அனைவரையும் – மக்கள் உட்பட ஏமாற்றியிருக்கிறார்கள் …. ” நம்பிக்கை துரோகம்… ? ” — ஆனால் இதுபற்றி அரசல் புரசலாக தெரிந்திருந்தும் — தானைத்தலைவர் முதல் மற்ற கட்சி தலைவர்கள் அனைவரும் ” குய்யோ முறையோ ” என்று இவர்களுக்கு சப்போர்ட்டாக கூவியது தான் – வேதனை .. !!!

 4. ravi சொல்கிறார்:

  பிழைக்க தெரியாத ஆட்களாக இருக்கிறார்கள் அதிகாரிகள்.. குடுக்க வேண்டியதை (50 சி ) கொடுத்தால் எல்லாம் சரியாகி விடும்

  • Raghavendra சொல்கிறார்:

   பொருத்தமற்ற பின்னூட்டம்.

   • ravi சொல்கிறார்:

    இதில் என்ன பொருத்தமற்ற விஷயத்தை கண்டுவிட்டீர்கள் ..காலம் காலமாக நடப்பது தானே .. சத்துணவு அமைப்பாளர் விஷயத்தில் கூட கல்லா கட்டுபவர்கள் , கிரானைட் மற்றும் மணல் விஷயத்தில் ஒன்றும் தெரியாமல் இருப்பார்கள் என்று நீங்கள் நம்பினீர்கள் என்றால் நீங்கள் அப்பாவி தான்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.