கதியற்ற அப்பாவி மக்களிடம் – சுரண்டிப் பிடுங்கும் பாஜக அரசு….

duronto-express-trains-690x377

தேனும் பாலும் ஆறாக ஓடா விட்டாலும், காங்கிரஸ்
அரசை விட ஒரு நல்ல மக்கள் நல அரசாக
மோடிஜியின் பாஜக அரசு அமையும் என்று தான்
மக்கள் நம்பினார்கள் – பாராளுமன்ற தேர்தலுக்கு முன்…!

அந்த நம்பிக்கை நிறைவேறும் என்கிற எண்ணம்
கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டிருக்கிறது.
தொழில் அதிபர்களுக்கும், பெரும் பணக்காரர்களுக்கும்
மட்டுமே சலுகைகள் அள்ளி வீசப்படுகின்றன.

சாதாரண மக்களுக்கு ஏற்கெனவே இருந்த வசதிகளும்,
சலுகைகளும் பறிக்கப்படுவதோடு விடாமல்,
புதிது புதிதாக, விதம் விதமாக, அடிப்பதே தெரியாதபடி
அடிகள் விழும் புதுவித அனுபவங்களையும் சந்தித்துக்
கொண்டிருக்கிறோம்…

முன்பெல்லாம் எப்போதாவது –
புதிய வரிகள் போடுவதாக இருந்தால்,
விலையேற்றம் குறித்து முடிவு எடுப்பதாக இருந்தால்,
வெளிப்படையாக பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும்….

இப்போதோ வரி விதிக்கப்படுவதே
நமக்குத்தெரிவதில்லை.
கட்டும்போது – மன்னிக்கவும், பிடுங்கப்படும்போது – தான்
நமக்கே தெரிய வருகிறது…. இப்படி ஒரு வரி
இருக்கிறது என்பது.

மாதா மாதம் டெலிபோன் பில் கட்டும்போது,
சர்வீஸ் டேக்சுடன் சேர்த்து இன்னொரு சதவீதம்
ஒரு தண்ட வரி (சர்சார்ஜ்) பிடிக்கப்படுவது
எத்தனை பேருக்குத் தெரியும் ….?

ஒவ்வொரு முறையும் உலகச் சந்தையில்
பெட்ரோலியம் பொருட்களின் விலை குறையும்போது –
மீண்டும் மீண்டும் எக்சைஸ் வரி உயர்த்தப்பட்டு,
அந்த விலைக் குறைவின் பயன்
பொது மக்களுக்கு கிடைக்காமல் திருடப்படுகிறது.

பட்ஜெட்டில் அறிவிக்காமலே,
தகுந்த கால அவகாசம் கொடுக்கப்படாமலே,
ஏற்கெனவே உள்ள சலுகைகள் திரும்பப்பெறப்படுகின்றன.
வரி என்று சொல்லாமல்-
புதிது புதிதாக, காலவரம்பு நிர்ணயிக்கப்படாமலே –
சர்சார்ஜ் என்கிற பெயரில் பணம் பிடுங்கப்படுகிறது.

மஹாகனம் பொருந்திய மாண்புமிகு சுரேஷ் பிரபு
அவர்கள் ரெயில்வே அமைச்சர் ஆகிறார் என்று
தெரிந்தபோது மகிழ்ச்சியுற்றோம்…
ஏதோ ஒரு நல்ல எதிர்காலம்
கண்ணுக்குத் தெரிவது போல் இருந்தது ….

அது கானல் நீரென்று புரியாமல் –
முட்டாள்தனமாக நிஜமென்று நம்பிய ஒவ்வொருவருக்கும்
இப்போது செருப்பால் அடிவாங்கிய ஒரு feeling.

அவர் chamber of commerce-ன் தலைவராகவே
தன்னை நினைத்துக் கொண்டு எந்தெந்த
வழிகளில் எல்லாம் மோடிஜி சர்க்காருக்கு காசு
பண்ணித்தரலாம் என்றே 24 மணிநேரமும் யோசித்துக்
கொண்டிருப்பதாகத் தெரிகிறது …

– தத்கால் என்கிற பெயரில் பெரும்பாலான
இருக்கைகள்/படுக்கைகளை ஆக்கிரமித்துக் கொண்டு,
உயர்ந்த விலைக்கு விற்பது….

cancellation charges – வகையில் மண்டையில் அடித்து
காசை பிடுங்கிக் கொள்வது….

முதியோர்களுக்கான சலுகைகள் சிலவற்றை
மறைமுக கண்டிஷன்களின் மூலம் பிடுங்கிக்கொண்டது…

ப்ளாட்பாரம் டிக்கெட் விலையை உயர்த்தியது …

இந்தியாவையே “ஸ்வச்ச பாரத்” ஆக்கப்போவதாக
கூறிக்கொண்டு, அதற்கான சர்சார்ஜையும் கடந்த
இரண்டு ஆண்டுகளாக நம்மிடமிருந்து வாங்கிக்கொண்டு,
இன்னமும் ரெயில் நிலையங்களை நாற விடுவது….

( சென்னை உயர்நீதிமன்றத்தில் யாரோ ஒரு சமூகஊழியர்
போட்ட பொதுநல வழக்கின் விளைவாக, சென்னையை
சுற்றிலும் உள்ள (suburban) ஸ்டேஷன்களில், உடனடியாக

தண்ணீருடன் கூடிய டாய்லெட்கள் வசதிகள் செய்து தரப்பட
வேண்டுமென்று 6 மாதங்களுக்கு முன்பே உத்திரவு
பிறப்பிக்கப்பட்டும் – இன்னமும் இந்தப்பணி
நிறைவேற்றப்படவில்லை…. )

வசதி ஏற்படுத்தப்பட்ட சில நிலையங்களிலும் அதிர்ச்சி –
ஒன்றுக்குப் போக மூன்று ரூபாய் தர வேண்டுமாம்…!!
சினிமா தியேட்டருக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு
உள்ளே போகிறோம். உள்ளே போனபிறகு டாய்லெட் போக
தனியே காசு கேட்டால் எப்படி இருக்கும்…?

அதே நிலை தானே இங்கேயும்…
காசு கொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டு
தானே ஸ்டேஷன் உள்ளே போகிறோம். உள்ளே போன
பிறகு டாய்லெட்டிற்கு தனியே காசு கேட்டால் எப்படி…?

இப்போது கடைசியாக நேற்று வந்து
இறங்கியிருக்கிறது –

மற்றோர் பலத்த இடி….
இன்று முதல் அமலுக்கு வரும் ஒரு விலைஉயர்வு
just இரண்டு நாட்கள் முன்னதாக, அதாவது முந்தாநாள்
தான் முதன்முறையாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.

அந்த உத்தரவின்படி, முதல்படியாக சில அதிவிரைவு
ரெயில்களுக்கு ( ராஜதானி, சதாப்தி மற்றும் துரந்தோ –
போன்ற 81 ரெயில்களில் …) கிராக்கிக்கு ஏற்ப
ரயில் கட்டணம் உயர்த்தப்படும்.

ஒவ்வொரு ரயிலிலும், முதல் 10 சதவிகித படுக்கைகள்,
வழக்கமான கட்டணத்தில் ஒதுக்கப்படும்.

அடுத்து, ஒவ்வொரு 10 சதவிகித படுக்கைகளுக்கும்
10 சதவிகிதம் கட்டணம் உயர்த்தப்படும்.
இப்படியே, உயர்த்திக்கொண்டே போய், கிராக்கிக்கு ஏற்ப

அதிகபட்சமாக 50 சதவிகிதம் வரை கட்டணம் உயர்த்தப்படும்.

இரண்டு அடுக்கு ஏ.சி. பெட்டிகள், சேர் கார் எனப்படும்
இருக்கை வசதி கொண்ட பெட்டிகள்
ஆகியவற்றுக்கு கட்டண உயர்வு அதிகபட்சம்
50 சதவிகிதமாகவும், மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகளுக்கு
கட்டண உயர்வு அதிகபட்சம் 40 சதவிகிதமாகவும் இருக்கும்.

( ஆனால், முதல் வகுப்பு ஏ.சி. பெட்டிகள்,
எக்சிகியூட்டிவ் வகுப்பு ஆகியவற்றுக்கு தற்போதைய
கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை………
ஏன் தெரிகிறதா…? )

தத்காலுக்கு ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகளின் கட்டணம்,
அடிப்படை கட்டணத்தை விட ஒன்றரை மடங்கு
அதிகமாக இருக்கும்.

பெரும்பாலான நேரங்களில் தொடர்வண்டி படுக்கைகள்
முன்பதிவு தொடங்கி ஒரு சில நிமிடங்களிலேயே
முழுவதுமாக முன்பதிவு செய்யப்பட்டு விடுகின்றன.
இப்போது அதற்காக ஒதுக்கப்படுபவை வெறும் 10%
இருக்கைகள் மட்டுமே.

அது முடிந்தவுடன், அடுத்த 10 % பதிவுகளுக்கு
10 % கூடுதல் விலை…
அதாவது காலை 10.00 மணிக்கு முன்பதிவு
செய்பவர்களுக்கு ஒரு கட்டணமும், 5 நிமிடம் கழித்து,
காலை 10.05 மணிக்கு முன்பதிவு செய்பவர்களுக்கு
கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படும்.

டிக்கெட் புக் செய்து முடிக்கும் வரை
நீங்கள் கொடுக்கப்போகும்
விலை என்னவென்பது தெரிய வராது – சஸ்பென்ஸ்….!!!

கடைசியாக – ஒரு extra அறிவிப்பு…
அதாவது இந்த விலைஉயர்வு ஒரு பரீஷார்த்தமான
முயற்சியாம்… சில காலத்திற்கு பிறகு ( ..? ) –
இது எப்படி வேலை செய்கிறது என்று பரிசீலிக்கப்படுமாம்…

( பரிசீலித்து… ?
அதன் பிறகு என்ன செய்வார்கள் என்று
ஏதும் சொல்லப்படவில்லை
அநேகமாக – மற்ற ரெயில்களுக்கும்
இதை விரிவாக்கம் செய்யலாம்…..? )

காங்கிரஸ் அட்ரஸ் இல்லாமல் போய் விட்டது…
எதிர்க்கட்சிகளும் சிதறிக்கிடக்கின்றன…
பாராளுமன்றத்தில் தனி மெஜாரிட்டி இருக்கிறது…
அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்…
சாதாரண பொதுமக்களாகிய
நம்மால் என்ன செய்து விட முடியும்….?

( இந்த தைரியம் தானே இதையெல்லாம்
செய்யும்படி அவர்களை தூண்டுகிறது….???)

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to கதியற்ற அப்பாவி மக்களிடம் – சுரண்டிப் பிடுங்கும் பாஜக அரசு….

 1. ravi சொல்கிறார்:

  ஆனால், முதல் வகுப்பு ஏ.சி. பெட்டிகள்,
  எக்சிகியூட்டிவ் வகுப்பு ஆகியவற்றுக்கு தற்போதைய
  கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை………
  ஏன் தெரிகிறதா…?

  அதில் போக போவது அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மட்டும் தான்

 2. ravi சொல்கிறார்:

  // அதன் பிறகு என்ன செய்வார்கள் என்று ஏதும் சொல்லப்படவில்லை
  அநேகமாக – மற்ற ரெயில்களுக்கும் இதை விரிவாக்கம் செய்யலாம்…..?///
  சாதாரண இருக்கை கட்டணங்கள்(குறிப்பாக முன்பதிவு செய்யப்படாத இருக்கை) ஏற்றாத வரை நல்லது , ஏற்றினால் கண்டிப்பாக போராட்டம் செய்ய வேண்டும்..
  சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேகமான வழி டுரோண்டோ மட்டுமே.. டுராண்டோவில் சாதாரண படுக்கை வசதி இருக்கை கட்டணமும் ஏறி இருக்கிறது ..இது ஆபத்து ..
  மற்றபடி இரண்டு அடுக்கு , மூன்று அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டியில் .. போகிறவர்கள் பெரும்பாலும் வசதியான ஆட்கள் தான்.. கண்டு கொள்ளமாட்டார்கள்

 3. ravi சொல்கிறார்:

  ஆனால், நம் ஆட்கள் ஓலா , உபேர் விலை ஏறியபோது , நீதிமன்றம் வரை சென்று போராடினார்கள்.. இப்போது ரயில்வே செய்தால் சரி என்கிறார்கள் ..
  எனக்கு வந்தா ரத்தம் , அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி

 4. நெல்லைத்தமிழன் சொல்கிறார்:

  அரசின் நடவடிக்கையில் தவறு தெரியவில்லை. தவறு என்று நான் நினைப்பது கட்டண உயர்வை முதல், ஏசி வகுப்புகளுக்கும் சிறிது அதிகமாகவே அமல்படுத்த வேண்டும். இரயில்வே பணியாளர்களின் உறவினர்களுக்குக் கொடுக்கும் சலுகை அனைத்தும் ரத்து செய்ய வேண்டும். பிளாட்பார்ம் கட்டணத்தைக் கடுமையாக அமல்படுத்த வேண்டும். இது நடந்தால் பயணிகளுக்கு ஆட்டமேட்டிக்காக சௌகரியங்கள் சுலபமாகச் செய்துகொடுக்கமுடியும்

  • Tamilian சொல்கிறார்:

   கட்டண உயர்வு செய்யட்டும் . தவறு இல்லை. அவர்கள் 7வது ஊதிய கமிசனபடி செலவு அதிகம் . ஆனால் இப்படி தனிப்பட்ட உயர்த்தல் சரியல்ல. நாமும் அதே கட்டணத்தில் ஆண்டுக்கணக்கில பயணிப்பதை எதிர் பார்த்தல் சரியா?

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  கட்டண உயர்வைத்தவிர வருமானத்தைப் பெருக்க
  வேறு எத்தனையோ வழிகள் உள்ளன.

  1) ரெயில்வேக்களில், ஸ்டேஷன்களில்,
  பெட்டிகளில்( உள்ளே-வெளியே),
  நிறைய advertisement space இருக்கிறது.
  மூன்று மாதத்திற்கு ஒரு முறை காண்டிராக்ட் விட்டு –
  தனியார் விளம்பரங்களை அதிகரிக்கலாம்…
  (இந்தியாவில் கிட்டத்தட்ட 60,000
  ரெயில்வே ஸ்டேஷன்கள் இருக்கின்றன…)

  2) ரெயில்வே ஸ்டேஷன்கள் மற்றும் இருப்புப்பாதைகளை
  ஒட்டி நிறைய காலி நிலங்கள் இருக்கின்றன…
  அவற்றை தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  கமர்ஷியல் காம்ப்ளெக்ஸ் களை உருவாக்கலாம்….

  3) தனியார் goods service களை அனுமதிக்க பெட்டிகளையும்,
  இருப்புப்பாதைகளையும் வாடகைக்கு விடலாம்.

  யோசித்தால் -நூறு அல்ல ஆயிரம் வழிகள் கிடைக்கும்…
  இதையெல்லாம் தான் மாண்புமிகு சுரேஷ் பிரபு செய்வார் என்று
  நான் நினைத்தேன்…

  ஆனால் – அவர் புத்தி வேறு வழியில் போகவில்லை போலிருக்கிறது…
  அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் – ஒரே வழி –
  உபயோகிப்பாளர் தலையில் கையை வை.

  -காவிரிமைந்தன்

 6. LVISS சொல்கிறார்:

  The ministry has clarified that this is on an experimental basis –Hope they dont make it permanent — There is a proposal to allow advts in trains and stations —

 7. Lakshmi Mohan சொல்கிறார்:

  அன்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,

  மிகச் சரியாக மக்களின் மனதில் உள்ளதை படம் பிடித்துக் காட்டிவிட்டீர்கள் தங்கள் கட்டுரையில்.
  என்று ஆட்சியாளர்கள் மக்களின் நிலை அறியாது திட்டங்களைத் தீட்டுகிறார்களோ அவர்கள் மக்களின் இதயத்தில் இருந்து நெடுந் தூரம் விலகி செல்கின்றார்கள்.
  எனக்கு உள்ள ஆச்சரியம் என்னவென்றால் மக்களோடு மக்களாக பழகும் இல கணேசன் மற்றும் எஸ் குருமூர்த்தி போன்றோர் கூட இன்றைய அரசிடம் இருந்து விலகி உள்ளதுதான்.
  இது சற்றே அதிர்ச்சியாகக் கூட உள்ளது,,
  இன்றைய குடியரசு தலைவரும் அந்நாளைய நிதி அமைச்சருமான பிரணாப் முகர்ஜீ அவர்கள் எந்த ஒரு முக்கிய நிதிக்கொள்கை முடிவையும் குருமூர்த்தியிடம் கலந்து கொண்டுதான் எடுப்பார்..
  திறமையானவர்கள் ஒதுங்கி இருப்பதும், மக்களின் நிலை அறியாது திட்டங்கள் தீட்டுவதும் தங்களின் வீழ்ச்சியை நோக்கித் தாங்களே செல்ல தலைப்பட்டு உள்ளார்கள்.

  பாரதி வார்த்தைகளில் சொல்வது என்றால்
  ” வேடிக்கை மனிதன் என்று நினைத்தாயோ” இந்தியக் குடிமகனை !!

  இலக்குமி மோகன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் மோகன்,

   திரு.எஸ்.குருமூர்த்தி அவர்களின் சுதேசி இயக்கத்தின்
   (swadeshi jagran manch ) லட்சியங்களுக்கு நேர்மாறான
   பல கொள்கைகளை பாஜக அரசு
   தொடர்ந்து நடைமுறைப்படுத்திக் கொண்டே
   இருக்கிறது. ஏனோ தெரியவில்லை… திரு குருமூர்த்தியும்
   இவை குறித்து வாயே திறப்பதில்லை….

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நான் ஏற்கெனவே சொல்லத்தவறிய
    இன்னும் சில விஷயங்கள் –

    ———————-
    – ரெயில்வேயின் சார்பில் விமான டிக்கெட்டுகளின் விலையேற்றத்தை உதாரணமாகச் சொல்கிறார்கள்….

    விமான டிக்கெட்டுகள் அடிப்படை விலையிலிருந்து
    30 % தள்ளுபடியுடன் தான் துவங்குகின்றன…
    பின்னர் தான், படிப்படியாக ஏற்றப்படுகின்றன…

    ரெயில் டிக்கெட்டுகளில் தள்ளுபடி துவக்கம் ஏது…?
    —————-

    – விமான சர்வீஸ்களில் போட்டியும் விலை
    நிர்ணயிப்பதில் ஒரு காரணியாக இருக்கிறது…

    ரெயில் விஷயத்தில் போட்டி ஏது…?
    போட்டியே இல்லாத ஒரு சாம்ராஜ்யத்தில், தானாகவே,
    முதல் 10% டிக்கெட்டுக்காக செயற்கையாக ஒரு
    போட்டியை உருவாக்கி விட்டு, விலையேற்றத்தை
    தனக்கு சாதகமாக துவங்கி விடுகிறது ரெயில்வே…..

    ——————

    ரத்து செய்யப்படும் ஒவ்வொரு ரிசர்வேஷனுக்கும்
    இப்போது குறைந்த பட்சம் 180 ரூபாய் பிடித்தம்…

    தத்கால் டிக்கெட்டுக்கு மொத்த பணமும் ‘அம்போ’
    ————-

    அண்மைய உத்திரவுகளின்படிஅரை டிக்கெட்
    சிறுவர்களுக்கு பெர்த் வசதி வேண்டுமானால்,
    முழு டிக்கெட் வாங்க வேண்டும்….

    —————–

    ரிசர்வேஷனை 4 மாதங்களுக்கு முன்னரே
    துவக்கி, போட்டியையும் உருவாக்குவதால்,
    டிக்கெட் விற்பனையின் மூலம்
    4 மாதங்களுக்கு ரெயில்வே நிர்வாகத்திற்கு
    வட்டியின்றி circulation money கிடைக்கிறது.
    ———————

    இந்த விலையேற்றங்கள் எதுவுமே முறையாக
    பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்படாமல்,
    தேர்ந்தெடுக்கப்பட்டமக்கள் பிரதிநிதிகளுக்கு
    இவை குறித்து கருத்து சொல்ல வாய்ப்பே
    கொடுக்காமல், நிர்வாக உத்திரவுகளின் மூலம்
    நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

    ———————–

    திருவாளர் சுரேஷ் பிரபு தன் ஆடிட்டர் மூளை
    அத்தனையையும் இந்த விஷயத்தில் தான்
    பயன்படுத்தி இருக்கிறார்…
    பயணிகளுக்கான வசதிகளை
    செய்து கொடுப்பதில் அல்ல….

    -காவிரிமைந்தன்

 8. Anbu சொல்கிறார்:

  உயர் வருமானத்தினர் மட்டுமே இனி இரயில்களில் பயணிக்க முடியும். சாமானியர்களுக்கு இனி கட்டை வண்டியும், காலாற நடப்பது மட்டுமே சாத்தியம்,

 9. புது வசந்தம் சொல்கிறார்:

  காசு இருந்தால் இனி வாழலாம் இல்லையேல் மரணித்து விடு, இனி இப்படியும் ஒரு திட்டம் ஒரு புதிய பெயரில் உண்டாகும்….

 10. selvarajan சொல்கிறார்:

  ஒவ்வொரு திட்டத்திற்கும் ” அருமையான பெயர்களை ” வைப்பதில் — கில்லாடிகள் …? இந்த ” சதவிகித ” கொள்ளைக்கு அவர்கள் வைத்துள்ள பெயர் — ” டைனமிக் ஃபேர் ” — நல்லாத்தான் இருக்கு … ? கதியற்ற அப்பாவி மக்களுக்கு — கட்டண சலுகை என்பது — தேர்தலுக்கு – தேர்தல் வாக்குக்காக கொடுக்கும் தொகையின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி கொடுப்பதே — ” பெரும் சலுகை ” — தானே … ?
  எத்தனைமுறை எந்த கட்டணத்தை உயர்த்தினாலும் — எந்தவித எதிர்ப்பும் காட்டாத நம் கதியற்ற மக்கள் — நல்லவர்கள் தானே — ஆட்சி செய்பவர்களுக்கு … ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.