ஒரு அதி பயங்கர கிரிமினல் குற்றவாளி – அரசியல்வாதி ஆன கதை ….(பகுதி-1)

mohammad-shahabuddin

நாம் திரைப்படங்களில் பார்க்கும் கிரிமினல்
அரசியல்வாதிகள் யாருமே இந்த நிஜக்கதையில் வரும்
கிரிமினலின் கால் தூசுக்கு கூட சமமாக மாட்டார்கள்…

இந்த கிளைக்கதை துவங்குவது தங்களது மூன்று
மகன்களையும், கொலைகார ரவுடிகளின் வெறியாட்டத்திற்கு
பலி கொடுத்து விட்டு,

மன நலம் பாதிக்கப்பட்ட கடைசி மகனுடன்
வாழவும் முடியாமல், சாவும் வராமல்
தள்ளாத வயதில் தடுமாறிக் கொண்டிருக்கும் தம்பதிகளான

இரண்டு முதியவர்களுடன்.

victim-parents

சந்தா பாபு என்கிற அந்த 68 வயது முதியவர்,
கலாவதி தேவி என்கிற அவரது 65 வயது,
( இடுப்பு எலும்பு உடைந்ததால் ) நடமாட்டம் இல்லாமல்
கிடக்கும் அவரது மனைவி –

அவரது வருமானத்திலிருந்து சிறுகச் சிறுக சேர்த்து,
ஆறு சிறு கடைகளைக் கட்டி, வாடகைக்கு விட்டிருந்தார்.
அவற்றிலிருந்து வரும் மாத வருமானமான 9000 ரூபாய்
தான் இந்த செயலாற்ற முடியாத இறுதி நாட்களில்
அவர்களது வருமானம். இதை வைத்து தான் இந்த
தம்பதியினரும், மனநலம் குன்றிய கடைசி மகனும்
காலந்தள்ளி வருகின்றனர்.

அவர்களது இன்றைய நிலைக்கான பின்னணி –

சவாய் என்பது பீகாரிலுள்ள ஒரு நடுத்தரமான ஊர்…
லாலு பிரசாத் யாதவின் கட்சியை சேர்ந்த
மொஹம்மது சஹாபுதீன் என்கிற
ஊரையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த கொலைகார
ரவுடி தான் அந்த ஊரின் பாராளுமன்ற உறுப்பினர்….

நல்ல வியாபாரம் நடக்கக்கூடிய ஒரு மளிகைக்கடையை
நடத்திக் கொண்டிருந்தார் அந்த பெரியவர்.
அவருக்கு வியாபாரத்தில் உதவியாக இருந்தவர்கள்
அவரது மகன்களான ராஜீவ் ரோஷன், கிரிஷ் ராஜ்,
மற்றும் சதீஷ் ராஜ்.

அவர் வாடகைக்கு விட்டிருந்த கடைக்காரர்களில்
ஒருவர் சஹாபுதினுக்கு வேண்டப்பட்டவர்….
அவர் வாடகையை ஒழுங்காக தருவதில்லை என்பதால்,
அவரைக் காலி செய்து விடும்படி இந்த பெரியவர்
கூறியதிலிருந்து துவங்குகிறது பகைமை….

ஒரு நாள் ராஜீவ் ரோஷன், கிரிஷ் ராஜ் ஆகிய இருவரும்
கடையை கவனித்துக் கொண்டிருக்கும்போது அங்கு
வருகின்றனர் சஹாபுதீனின் அடியாட்கள்.
அந்த இரு மகன்களையும் சீண்டுகின்றனர்.
கடையிலிருந்த பணத்தை அபகரிக்கின்றனர். கோபமடைந்த
இரண்டு இளைஞர்களும், கடையில், தங்கள் பக்கத்தில்
இருந்த ஆசிட் பாட்டிலை காட்டி மிரட்டி விரட்டுகின்றனர்.

ரவுடிகள் பின்வாங்குகின்றனர்… பயந்து போய் அல்ல..
அரை மணிநேரத்தில் அரை டஜன் ஆட்களுடனும்,
ஜீப்,வேன்களுடனும் திரும்பி வருகின்றனர்.
சந்தா பாபுவின் மூன்று மகன்களையும் தூக்கிக் கொண்டு
போய், அவர்களின் boss சஹாபுதீன் முன்னர்
நிறுத்துகின்றனர்.

siwan_2

பிரதாப்பூர் – அருகிலுள்ள சஹாபுதீனின் கிராமம்.
ஒரு பெரிய பண்ணை வீடு. வீட்டு வாசலில்
அடியாட்கள் சூழ அமர்ந்து கொண்டிருக்கிறான்
சஹாபுதீன். தங்களை மிரட்டிய இரண்டு இளைஞர்களை
சஹாபுதீனின் முன் கிடத்துகின்றனர்.
( மூன்றாவது மகன் சதீஷ் ராஜ் மட்டும் சற்றுத்தள்ளி,
கரும்புத்தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறான்.)

இந்த இரண்டு இளைஞர்களையும் சஹாபுதீன் “ஆசிட்
ஊற்றுவேன் என்று என் ஆட்களையே மிரட்டுகிறீர்களா –
ஆசிட் எப்படி வேலை செய்யுமென்று தெரியுமா ..?”
என்று கேட்டு, தன் ஆட்களிடம் அவர்கள் மீது ஆசிடை
ஊற்றும்படி உத்திரவிடுகிறான். இரண்டு பிள்ளைகளும்
கை,கால்கள் கட்டப்பட்டு, அவர்கள் மீது துடிக்கத்துடிக்க
ஆசிட் ஊற்றப்படுகிறது. இரண்டு பேரும், பொசுங்கி,
சிதைந்து – கதறிக் கொண்டே செத்துப் போகிறார்கள்.

தூரத்தில் கரும்புத்தோட்டத்திலிருந்து இதைப்பார்த்த
மூன்றாவது மகனான சதீஷ்ராஜ் பயந்து நடுநடுங்கி,
யாரும் கவனிக்கும் முன்னர் அங்கிருந்து தப்பியோடி
விடுகிறான்.

பிறகு சந்தாபாபுவின் புகாரின் பேரில், வேண்டாவெறுப்பாக
(லாலு பிரசாத் ஆட்சி )போலீஸ் வழக்கு பதிவு செய்கிறது.
சஹாபுதீன் கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கிறான்.
வழக்கு விசாரணைக்கு வருகிறது….
நேரில் பார்த்த ஒரே சாட்சியான
மூன்றாவது மகன் சதீஷ்ராஜ் –
விசாரணக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக
சஹாபுதீனின் ஆட்களால் சுட்டுக் கொல்லப்படுகிறான்.

மூன்று மகன்களையும் சஹாபுதீனால் இழக்கிறார்
சந்தாபாபு. வழக்கு தொடரும்போது, அவரை
பயமுருத்தி, வழக்கிலிருந்து பின்வாங்கச்சொல்லி
சஹாபுதீனின் ஆட்கள் மிரட்டுகின்றனர். சந்தாபாபு

மசியவில்லை. இத்தனை இழப்புகளுக்குப் பிறகு எனக்கு
என்ன ஆனாலும் சரி பின் வாங்க மாட்டேன் என்கிறார்.

மூன்றாவது மகன் கொல்லப்பட்ட சமயத்தில்,
சஹாபுதீன் சிறையில் இருந்ததால், அவன் மீது நேரடியாக
கொலைக்குற்றம் சாட்டப்படவில்லை. கொலைக்கு
தூண்டுதலாக இருந்ததாக மட்டும் குற்றச்சாட்டு.

வழக்கு தொடர்ந்தது….
அவனது கட்சி ராஷ்டிரீய ஜனதா தளம்…
அதன் பாராளுமன்ற உறுப்பினர் அவன்.
அதன் தலைவர் லாலு பிரசாத் யாதவ் –
பீகாரின் முதல் அமைச்சர்…
வழக்கு எப்படி நடக்கும்…?

shahabuddin-with-lalu

சிறையில் அடைக்கப்பட்ட சஹாபுதீனுக்கு
உடல் நலம் சரி இல்லை என்று சொல்லப்பட்டது…!

ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு வசதியான கட்டிடம்
சிறைச்சாலை-மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
அந்த கட்டிடத்தின் முதல் தளம் முழுவதும் சஹாபுதீன்
மற்றும் அவனது சகாக்களுக்காக ஒதுக்கப்பட்டது.
ஏர்-கண்டிஷன் வசதிகள், டிவி, செல்-போன்,
சொன்ன வேலையைச் செய்ய (போலீஸ்) காவலர்கள்.
அவனை அவனது அடியாட்கள் யார் வேண்டுமானாலும்
அங்கு வந்து பார்க்கலாம். அங்கிருந்தபடியே அவனது
காட்டாட்சி தொடர்ந்தது.

பீகார் அரசில் வேலை பார்க்கும் அதிகாரிகள் –
பணி மாற்றம் வேண்டும் போலீஸ் உயர் அதிகாரிகள்,
பதவி உயர்வுக்காக காத்திருக்கும் அதிகாரிகள் –
என்று பலதரப்பட்ட அரசு பிரமுகர்களும் அங்கு வந்து
சஹாபுதீனின் தயவை வேண்டி காத்திருந்தனர்.

அவர்களிடமிருந்தே செல்போனை வாங்கி அவர்கள்
எதிரிலேயே அரசு நிர்வாகிகளுக்கு போன் போட்டு,
காரியத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் அளவுக்கு
இருந்தது அவனது சிறைவாசம்….!!!

இந்த சஹாபுதீனின் குற்ற பின்னணி
எப்போது துவங்கியது ..?

இவன் மீதான முதல் குற்றப்பதிவு நிகழ்ந்தது –
சிவானின், ஹுசென் கஞ்ச் போலீஸ் ஸ்டேஷனில்
1986-ல், இவனது 19-வது வயதில்…(அப்போது கல்லூரியில்
படித்துக் கொண்டிருந்தான் அவன்…! )

1990-ன் துவக்கத்தில், லாலு பிரசாத் யாதவின்
ராஷ்டிரீய ஜனதா தள் இளைஞர் அணியில்
இணைந்ததிலிருந்து – அவனது அரசியல் வாழ்க்கை
துவங்குகிறது…..

பிரிக்க முடியாத இரட்டையர்கள் ஆயினர் இருவரும்….!

(தொடர்கிறது -பகுதி-2-ல் )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to ஒரு அதி பயங்கர கிரிமினல் குற்றவாளி – அரசியல்வாதி ஆன கதை ….(பகுதி-1)

  1. gopalasamy சொல்கிறார்:

    Very sad story. But we should know.

  2. D. Chandramouli சொல்கிறார்:

    Shocking, to say the least !!

  3. nparamasivam1951 சொல்கிறார்:

    உங்கள் மூலம் முழு உண்மையும் தமிழகம் அறியட்டும். இது வரை இந்தி பத்திரிக்கைகளில் மட்டும் வந்ததால், தமிழ் மக்கள் அறிய வாய்ப்பு இல்லை. பீகார் அரசின் அவலட்சணம் அறியப்பட வேண்டிய ஒன்று. இக் கொலைகாரன் MP வேறு.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.