(பகுதி-2) – சஹாபுதீனை – சிறைச்சாலையால் என்ன செய்து விட முடியும் ….? (ஒரு அதி பயங்கர கிரிமினல் குற்றவாளி – அரசியல்வாதி ஆன கதை ….)

220px-mohammad_shahabuddin

முந்தைய பகுதியில் ஒரே வார்த்தையில் சஹாபுதீன்
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டானென்று
சொல்லி விட்டேன்…

அதன் பின்புலத்தில் ஒரு பெரிய கதையே இருக்கிறது.
சஹாபுதீன், லாலு கட்சியின் சார்பாக
இரண்டு முறை – 1990 மற்றும் 1995-ஆம் வருடங்களில்
பீகார் சட்டமன்றத்திற்கு எம்.எல்.ஏ.வாக
தேர்ந்தெடுக்கப்பட்டான். இதன் பிறகு இவனது
ரவுடித்தனம் பெரிய அளவில்விரிவடைய ஆரம்பித்தது.
பின்னர் 1996 -லிருந்து 2008 -க்குள்ளாக 4 தடவை
பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டான்.

யாரை வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும்
அடிப்பது அவனுக்கு சகஜமாகி விட்டது…. ஆளும்கட்சி
எம்.எல்.ஏ., அங்கீகரிக்கப்பட்ட ரவுடி …. முதலமைச்சர்
லாலுவின் வலது கரம் – இந்த தகுதிகள் போதாதா…?

மார்ச் 2001-ல் லாலு கட்சியின் உள்ளூர் யுனிட் தலைவன்
மனோஜ் என்கிற பப்புவை ஏதோ ஒரு பிரச்சினையில்
கைது செய்ய போலீஸ் அரெஸ்ட் வாரண்டுடன் வந்தது.
கைது செய்ய முனைந்த போலீஸ் அதிகாரி சஞ்சீவ் குமாரை
சஹாபுதீன் அடித்து, உதைத்து விரட்டினான்.
கூட வந்த மற்ற போலீஸ்காரர்களை அவனுடைய
ஆட்கள்உதைத்து விரட்டினர்.

அங்கிருந்து போன போலீஸ், மீண்டும் சஹாபுதீனை
கைது செய்யும் உத்தேசத்துடன் ஒரு பெரிய
படையுடன் வந்தது. சஹாபுதீனின் வீட்டை சூழ்ந்து கொண்ட
போலீஸ் மீது சஹாபுதீனும் அவனது ஆட்களும்
ஏ.கே.47 துப்பாக்கியால் சுட, ஓட்டை துப்பாக்கியால் போலீஸ்
பதிலுக்கு சுட – அங்கே குண்டுவெடிப்புகளால், ஒரு பெரிய
போர்க்களமே உருவானது.

அங்கு நடந்த சண்டையில், போலீஸ்காரர்கள் 2 பேரும்,
சஹாபுதீனின் ஆட்கள் 8 பேரும் கொல்லப்பட்டனர்.
சண்டையின் முடிவில், 3 போலீஸ் வாகனங்களுக்கு
தீ வைத்து விட்டு, ஏ.கே.47 துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே
சஹாபுதீனும் அவனது எஞ்சிய ஆட்களும் அங்கிருந்து
தப்பிச்சென்றார்கள்.

பின்னர், சண்டை நடந்த இடத்தில், கிடந்த
பிணங்களின் அருகேயிருந்து 3 ஏ.கே.47 துப்பாக்கிகளும்
மற்றும் பல ஆயுதங்களும் போலீசால் கைப்பற்றப்பட்டன.
அதன் பிறகு சஹாபுதீன் மீது பல வழக்குகள்
தொடுக்கப்பட்டன. ஆனால், அவனை யாராலும் பிடிக்க
முடியவில்லை.

அடுத்த சில ஆண்டுகளுக்கு சிவான் ஊரைச்சுற்றியுள்ள
பகுதிகளில் அவன் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறந்தது.
நிலத்தகராறுகளில் தீர்ப்பு, விவாக ரத்துகளில் தலையீடு,
வீடுகளை, கடைகளை – காலி செய்ய வைப்பது இப்படி
பல விஷயங்களில் அவனது கட்டைப்பஞ்சாயத்து
தொடர்ந்தது.

2004 பொது தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பாக
மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர் ஒருவரை கடத்திச் சென்ற
வழக்கில் ஒரு வழியாக சஹாபுதீன் கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டான். அதற்குப் பிறகு நடந்த கூத்து
தான் கடந்த பகுதியில் எழுதியது போல் அவன்
ஜெயில்-மருத்துவமனையில் இருந்துகொண்டு
ஆட்சி செய்தது.

2004 தேர்தலில் பாராளுமன்றத்திற்கு சிவான் தொகுதியில்
போட்டியிட்டபோது அவன் ஜெயிலில் இருந்து
கொண்டே தான், பிரச்சார திட்டங்களை தன் ஆட்களுக்கு
வகுத்துக் கொடுத்தான். அவனை எதிர்த்து துணிந்து
போட்டியிட்ட, நிதிஷ்குமாரின் கட்சி வேட்பாளரான
ஓம் பிரகாஷ் யாதவ், இரண்டு லட்சம் ஓட்டுக்கள்
வாங்கினாலும், இறுதியில் ஜெயித்தது சஹாபுதீன் தான்.

ஆனால், தேர்தல் முடிவடைந்த பிறகு –
அவனை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரின்
சார்பாக வேலை செய்தவர்கள் மிகப்பெரிய விலையை
கொடுக்க வேண்டி இருந்தது… எதிர் வேட்பாளருக்காக
தேர்தலில் வேலை செய்த, நிதிஷ் குமாரின் கட்சியை
சேர்ந்த 9 பேர் கொல்லப்பட்டனர்…. பலர் படுகாயப்படுத்தப்
பட்டனர்…

ஹரேந்திர குஷாவாகா என்கிற பஞ்சாயத்து
தலைவர் அவரது அலுவலகத்திலேயே பலர் முன்னிலையில்
சுட்டுக் கொல்லப்பட்டார்…. மிகுந்த சிரமங்களுக்கிடையே
எதிர் வேட்பாளர் ஓம் பிரகாஷ் யாதவ் தப்பி ஓடினார்.

சஹாபுதீன் வீட்டை ரெய்டு செய்த போலீஸ் டீம்
அங்கிருந்து – பல ஏ.கே.47 துப்பாக்கிகள், lazor guided
weapons மற்றும் பல வெடிபொருட்களை கைப்பற்றியது.
அந்த சமயத்தில் சஹாபுதீன் மீது 34 கிரிமினல் வழக்குகள்
நிலுவையில் இருந்தன….!!! ( அதனாலென்ன – ஆட்சி
லாலுவுடையது ஆயிற்றே…!).

shahabudin-with-lalu

இத்தனை வழக்குகள் இருந்தாலும், டெல்லியில்
எம்.பி.க்களுக்கான வீட்டில் தான் அவன் இருந்தான்.
அவனை கைது செய்ய யாராலும் இயலவில்லை…
அதாவது- யாருக்கும் துணிவில்லை….

இறுதியாக, பீகாரிலிருந்து ரகசியமாக டெல்லி சென்ற
ஒரு போலீஸ் டீம், நவம்பர் 2005-ல் அவனது டெல்லி
வீட்டில் வைத்து கைது செய்தது.
ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த அவனிடம் சுப்ரீம் கோர்ட்
கடுமையாக கடிந்து கொண்டு, அவனை சிறையில் தள்ள
உத்திரவிட்டது.

2006-ல் நிதிஷ்குமார், பாஜக கூட்டணி அரசு பீகாரின்
பல முக்கிய கிரிமினல்கள் மீதான வழக்குகளை விசாரிக்க
சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்கியது. ஆனாலும்,
விசாரணையை தவிர்க்க, சஹாபுதீன் தனக்கு முதுகெலும்பு
தட்டு நழுவியதால் நடக்க இயலாது என்று நாடகமாடினான்.

இறுதியில், விசாரணை நீதிமன்றம் – அவன் சம்பந்தப்பட்ட
வழக்குகளை விசாரிக்க சிறைக்குள்ளேயே செயல்பட்டது.

அப்போதைக்கு அவன் மீது 8 கொலை வழக்குகள்,
22 கொலைமுயற்சி மற்றும் ஆள்கடத்தல் என்று மொத்தம்
30 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தன.

இதைத்தவிர நூற்றுக்கணக்கான நபர்கள் காணாமல் போன
விவகாரம் போலீசால் ஏற்றுக்கொள்ளப்படாமலே
கைவிடப்பட்டன. அவனது பண்ணை வீட்டில்
நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக
செய்திகள் உலவின.

அவனது வழக்கை விசாரித்த செஷன்ஸ் நீதிபதி வி.பி.குப்தா
என்பவரை முதலில் பணம் கொடுத்து விலைக்கு வாங்க
சஹாபுதீனின் வக்கீல் மஹதாப் ஆலம் என்பவன் முயன்றான்.
அவர் இணங்கவில்லை என்றபோது, சஹாபுதீன்

நேரடியாகவே நீதிபதியைப் பார்த்து –

“உங்கள் குடும்பம் பனியாபுரில் தானே வசிக்கிறது.
அதில் யாரும் மிஞ்ச மாட்டார்கள்….
உங்களை எல்லாம் உதைத்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன –
நான் ஜாமீனில் வெளிவந்த பிறகு இருக்கிறது உங்களுக்கு
சரியான பாடம் ” – என்றும்

பின்னர் அவனது சிறை ஜெயிலர் சஞ்சீவ்கபூர் என்பவரிடம்
“உன்னை அடித்தே சாகடிக்கிறேன் பார்” – என்றும்
பயமுருத்தி இருக்கிறான்.

இந்த இரண்டு புகார்களும், அரசு ஊழியர்களை
பயமுருத்தியதாக F.I.R. ஆக பதிவு செய்யப்பட்டுள்ளன.

இறுதியாக, மார்ச் 2007-ல் – பிப்ரவரி 1999-ல் மார்க்சிஸ்ட்
கட்சி ஊழியர் ஒருவரை ஆள்கடத்தல் (கடத்தல் –
கொலையில் முடிந்தது… ஆனால் கொலைக்கான
தடயங்கள் கிடைக்கவில்லை ) செய்தது தொடர்பான
வழக்கில், நீதிபதி ஞானேஸ்வர் ஸ்ரீவத்சவா என்பவரால்,
சஹாபுதீனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

2009-ல் அவன் மீண்டும் தேர்தலில் போட்டியிட தடை
விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவன் மீது
தொடரப்பட்ட மேலும் சில வழக்குகளில், பத்தாண்டு
கடுங்காவல் சிறைத்தண்டனை உள்பட,
பல தண்டனைகள் விதிக்கப்பட்டன.

ஜெயிலில் இருந்தாலும், சகலவித வசதிகளோடு
வாழ்ந்தான் சஹாபுதீன். மூன்று முறைகள் ஜெயிலிலிருந்த
அவனிடமிருந்து செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.
சிறையில் அவனுக்கு காவலர்களாக இருந்தவர்கள்
அவனது அடியாட்களாக மாறிப்போனார்கள். இரண்டு பேர்,
இதற்காகவே டிஸ்மிஸ் செய்யப்பட்டார்கள்…!!!

சிறையில் இருக்கும்போதே அவன் நிகழ்த்திய அடுத்த
படுபாதகச் செயல் தான் –

பீகார் மாநில சிவான் (சஹாபுதீனின் சொந்த ஊர்) வட்டத்தில்
நிகழ்ந்த பல கிரிமினல் நடவடிக்கைகளை செய்தி
ஊடகங்களின் முன் துணிச்சலுடன் கொண்டு வந்த
இளைஞர் – “ஹிந்துஸ்தான்” என்கிற செய்தித்தாளின்
உள்ளூர் நிர்வாகி ராஜ்தேவ் ரஞ்சனை சுட்டுக்கொன்றது….

(தொடர்கிறது – பகுதி-3-ல் )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.