சட்டம், நீதி, அரசியல் – தர்மம் எது ஜெயிக்கும்….?

shahabuddinnitish-and-lalu

எட்டு கொலைகள், 32 ஆட்கடத்தல் உட்பட 50 கிரிமினல்
வழக்குகள் நிலுவையில் இருக்கும் ஒரு நபர் –

இரண்டு கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு,
சிறையில் இருக்கும் ஒரு கிரிமினல் –

பீகார் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு, பெற்று, சுதந்திரமாக
வெளியே நடந்தபோது, வெளியே வந்தவன் 350 கார்கள்/வேன்கள் சூழ
400 கி.மீ.தொலைவில் உள்ள தன் ஊருக்கு ஊர்வலம் வந்தபோது –

வேடிக்கை பார்த்திருந்து விட்டு, நிதானமாக இப்போது சுப்ரீம் கோர்ட்டில்
நிதிஷ் குமார் அரசு ஜாமீனுக்கு எதிராக அப்பீல் செய்திருப்பது
யாரை திருப்தி செய்ய …?

அரசியல்வாதிகளும், கிரிமினல்களும் கைகோர்த்துக் கொண்டு
கூட்டு சேர்ந்து அதிகாரத்தை கைப்பற்றினால், என்ன ஆகும் என்பதை
பீகார் சம்பவங்கள் நமக்கு இப்போது நிதரிசனமாக நிரூபித்துக்
கொண்டிருக்கின்றன.

முன்பு போன தடவை -ஆட்சியைக் கைப்பற்ற பாஜக வுடன் கூட்டு –
ஜெயித்த தைரியத்தில் அப்போதைய எதிரியான லாலுவை பலவீனப்படுத்த,
அவரது வலது கை சஹாபுதீனை சிறையில் அடைத்தது நிதிஷ் அரசு.

அடுத்து வந்த தேர்தலில் – பாஜகவை எதிர்க்க, அதே எதிரி லாலுவுடன் கூட்டு
சேர்ந்து ஆட்சியை கைப்பிடித்தார் நிதிஷ்குமார். அந்த அதிகாரத்தை
பெற அவர் லாலுவுக்கு கொடுத்த விலை தான், அவரது மகனுக்கு
துணை முதல்வர் பதவியும், சஹாபுதீன் ரிலீசும்.

இங்கே சட்டம் யாருக்கு துணை போனது …?
நீதி எங்கே போய் பதுங்கிக் கொண்டது ….?
நியாயம் எங்கே போய் ஒளிந்து கொண்டது…?

உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் இந்த ஜாமீன் / அப்பீல் மீதான
விசாரணையை ஒத்தி வைத்திருக்கிறது.

ஆனால், சஹாபுதீனால் மூன்று பிள்ளைகளை இழந்த
வயதான பெற்றோரும், சாட்சி சொன்ன மற்றவர்களும்
உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு – தினம் தினம் செத்துப்பிழைத்து
வருகிறார்கள்.

பீகாரின் இந்த இன்றைய நிலையைப் பார்க்கும்போது, பல வருடங்கள்
முன்பு அலுவலக வாழ்வில் நான் சந்திக்க நேர்ந்த ஒரு சம்பவம் –
ஏற்கெனவே இங்கே சொல்லி இருக்கிறேன் – நினைவிற்கு வருகிறது…

அதை மீண்டும் இங்கே பதிவு செய்வது அவசியம் என்று தோன்றுகிறது –

——————————————–

கொலைகாரனோடு ஒரு சிநேகிதம் …..!

மனம் ஒரு விசித்திரமான பிரதேசம். அங்கு யாருக்கு இடம்
கொடுக்கலாம், யாருக்குக் கூடாது என்பதை நாம் தீர்மானிக்க
முடிவதில்லை.

அது தானாகவே முடிவெடுத்து விடுகிறது ! சட்டம்,
சம்பிரதாயம், சூழ்நிலை, உத்தியோகம் – இவை
எல்லாவற்றையும் தாண்டியது மனசாட்சி. மனசாட்சி சொல்கிற
வழியில் வாழ முடிந்தால் – அதை விடப் பெரிய கொடுப்பினை
வாழ்க்கையில் வேறு எதுவுமில்லை.

அரசாங்க ஊழியராக வேலை செய்யும்போது, ஒருவரால்
எவ்வளவு தூரம் மனசாட்சிக்கு இடம் கொடுத்து வேலை
செய்ய முடியும் ? நான் சில வித்தியாசமான சம்பவங்களை
என் உத்தியோக வாழ்வில் எதிர்கொள்ள வேண்டி
இருந்திருக்கிறது. அவற்றில் ஒன்றினை இங்கு சொல்ல
விரும்புகிறேன். (இந்த சம்பவத்தில், சம்பந்தப்பட்டவர்களின்
பெயர்களை மாற்றி இருக்கிறேன்.)

p>உத்திரப் பிரதேசத்தில், மீரட் நகருக்கும் – காஜியாபாத்
நகருக்கும் இடைப்பட்ட ஒரு ஊர். அங்கிருக்கும் பாதுகாப்புத்
துறையைச் சேர்ந்த தொழிற்சாலை ஒன்றில், நிர்வாகப்
பிரிவில் ஒரு முக்கியப் பொறுப்பில் பணி புரிந்து வந்தேன்
நான். நான் வேறு ஒரு ஊரிலிருந்து அப்போது தான் அங்கு
மாற்றலாகி வந்திருந்தேன். முற்றிலும் புதிய சூழ்நிலை !

எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான் – பொதுவாகவே
உ.பி.யில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் தான்
இருக்கும். கொலை, கொள்ளைகள் சர்வ சகஜம்.

நான் பணி புரிந்த தொழிற்சாலையிலேயே பல
தொழிலாளர்கள் பல்வேறு கிரிமினல் வழக்குகளில் சிக்கி
இருந்தார்கள்.கோர்ட்டில் வழக்கு நடக்கும் அதே நேரத்தில்,
இலாகா ரீதியாகவும் அந்த வழக்குகளை கையாள வேண்டி
இருந்தது. பொதுவாக, அரசு ஊழியர்கள் ஏதேனும் கிரிமினல்
வழக்குகளில் சிக்கி இருந்தால், அவர்கள் உடனடியாக
தற்காலிக பணி நீக்கம் (suspend) செய்யப்படுவார்கள். வழக்கு
முடிந்த பிறகு, தண்டனை பெற்றால் -அவர்கள் டிஸ்மிஸ்
செய்யப்படுவார்கள். ஒரு வேளை வழக்கிலிருந்து
விடுவிக்கப்பட்டால் – மீண்டும் வேலைக்கு சேர்த்துக்
கொள்ளப்படுவார்கள்.

நிர்வாகத்தில் – இந்த பொறுப்பை கையாளும் அதிகாரி –
அடிக்கடி கிரிமினல் கோர்ட்டுகளுக்கு போக வேண்டி இருக்கும்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களை -கோர்ட்டில்,
நேரில் சந்திக்க நேரிடும். பொதுவாக இந்த தொழிலாளர்கள் –
நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை விரோத நோக்கிலேயே
பார்ப்பார்கள். எனவே – சங்கடமான இந்த வேலையை, புதிதாக
அங்கு போய்ச்சேர்ந்த என் தலையில் கட்டி விட்டார்கள்
உள்ளூர் அதிகாரிகள். எனக்கு சட்டப் படிப்பு பின்னணியாக
இருந்தது அவர்களுக்கு காரணம் காட்ட சுலபமாகி விட்டது.

அதில் ஒரு வழக்கு –

தொழிற்சாலையில், மெயின்டெனன்ஸ் பிரிவில்,
வெல்டராகப் பணிபுரிந்து வந்த பிஜெந்தர் சிங் சம்பந்தப்பட்டது.
அவன், அங்கீகாரம் பெறாத ஒரு முரட்டு யூனியனின்
செயலாளரும் கூட. பக்கத்து கிராமம் ஒன்றைச் சேர்ந்த
ராஜ்குமார் சிங் என்பவரைக் கொலை செய்து விட்டதாக
அவன் மீது கொலைக் குற்றச்சாட்டு. நான் அந்த ஊருக்கு
போவதற்கு முன்னரே,வழக்கு, காஜியாபாத் கிரிமினல்
கோர்ட்டில் நடந்து வந்தது. துவக்கத்தில்,
கொலைக்குற்றத்திற்காக, போலீசாரால், அவன் கைது
செய்யப்பட்டவுடன், வேலையிலிருந்து தற்காலிக பணி நீக்கம்
செய்யப்பட்டிருக்கிறான். பின்னர், சில மாதங்கள் கழித்து
ஜாமீன் பெற்று, வெளியே வந்து விட்டான். ஆனால் வழக்கு
முடியும் வரை பணி நீக்க உத்தரவு அப்படியே தான் இருக்கும்.
ஒவ்வொரு ஹியரிங்குக்கும் அவன் கோர்ட்டுக்கு வர
வேண்டும்.

தொழிற்சாலை நிர்வாகமும் இந்த வழக்கில் ஒரு
சாட்சியாகப் பதிவு செய்யப்பட்டு இருந்ததால், ஒவ்வொரு
ஹியரிங்குக்கும் நானும் செல்ல வேண்டி இருந்தது. எனக்கு
முன் இதை கையாண்டு வந்த அதிகாரியுடன், பிஜெந்தர் சிங்
விரோதமாகவே பழகி இருக்கிறான்.

என்னைப் பொருத்த வரையில், எனக்கு இத்தகைய
அணுகுமுறைகளில் நம்பிக்கை இல்லை. எதையும்
வெளிப்படையாக, மனசாட்சியுடன் அணுக வேண்டும் என்று
நினைப்பவன் நான். என் பார்வையில் – எனக்கு இதில்
தனிப்பட்ட முறையில் பிஜெந்தர் சிங்கோடு எந்த விரோதமும்
இல்லை. காவல் துறை அவர் மீது வழக்கு தொடுத்திருக்கிறது.
தொழிற்சாலை நிர்வாகத்திடமிருந்து, பிஜெந்தர் சிங் பற்றிய
சில தகவல்களை அதிகாரபூர்வமாக பெறுவதற்காக,
தொழிற்சாலை நிர்வாகம்- இந்த வழக்கில் ஒரு சாட்சியாக
மட்டுமே அழைக்கப்பட்டிருக்கிறது. நிர்வாகத்தின் பிரதிநிதியாக
நான் போகிறேன்.

வழக்கு பற்றிய விவரங்களை எல்லாம் படித்து விட்டு,
நான் முதல் நாள் கோர்ட் போனவுடன், பிஜெந்தர் சிங யார்
என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவனுடன் என்னை
அறிமுகம் செய்து கொண்டு விட்டு, சகஜமாக இந்தியில் பேச
ஆரம்பித்தேன். பிஜெந்தர் சிங்கிற்கு இது ஒரு வித்தியாசமான
அனுபவம். தொழிற்சாலை நிர்வாகம் சார்பாக வந்திருக்கும்
அதிகாரி, கொலைக்குற்றம் சாட்டப்பட்டு தற்காலிக பணி நீக்கம்
செய்யப்பட்டிருக்கும் அவனுடன் சகஜமாக அறிமுகம் செய்து
கொண்டு பேசுவது -அவனுக்கு அதிசயமாக இருந்திருக்கிறது !

இது போன்ற வழக்குகள் எல்லாம் அவ்வளவு சுலபமாக
எடுத்துக் கொள்ளப்படாது. இழுத்தடித்துக் கொண்டே இருக்கும்.
ஐந்து- ஆறு ஹியரிங்குகள் கடந்த நிலையில் – பிஜெந்தர் சிங்
எனக்கு மிகவும் பழக்கமாகி விட்டான். கோர்ட்
இடைவேளையில், ஒன்றாகவே டீ, பஜ்ஜியா சாப்பிடும்
அளவிற்கு நெருங்கி விட்டோம். என் சுபாவத்தை நன்கு புரிந்து
கொண்ட அவன், மதராசிகள் (தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள்)
மிகவும் நல்லவர்கள். இந்த ஊர்க்காரர்கள் போல் அல்ல என்று
என்னிடமே கூற ஆரம்பித்து விட்டான் !

ஒரு நாள், கோர்ட் இடைவேளையில், வெளியே
மரத்தடியில் நின்று சும்மா பேசிக்கொண்டிருந்தபோது,
என்னிடம், விளைவுகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல்,
தானாகவே மனம் திறந்து அந்த கொலை  சம்பவம் பற்றிய
உண்மை விவரங்களை கூறினான். அந்த சம்பவம் இப்படிப்
போகிறது –

(- நாளை தொடர்கிறேனே…)

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல். Bookmark the permalink.

6 Responses to சட்டம், நீதி, அரசியல் – தர்மம் எது ஜெயிக்கும்….?

 1. KALAKARTHIK சொல்கிறார்:

  anna,
  please write about Indus river treaty and special status details of J=K
  ANBUDAN,
  KARTHIK AMMA

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கார்த்திக் அம்மா,

   அவசியம் முயற்சிக்கிறேன் –
   ஆனால், கொஞ்சம் அவகாசம் ……..

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. Lakshmi Mohan சொல்கிறார்:

  அன்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,

  மிகவும் சுவாரசியமாக உள்ளது …
  ஆவலுடன் அடுத்த கட்டத்தை எதிர்பார்க்கிறேன் !

  என்றும் அன்புடன்,
  இலக்குமி மோகன்

 3. selvarajan சொல்கிறார்:

  அய்யா .. ! அரசியல்வாதிகளையும் — கிரிமினல்களையும் பிரிக்க முடியுமா … ? இன்று உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் 34% பேர் கிரிமினல் பின்னணி உள்ளவர்கள் என்றும் –அரசியலும் – கிரிமினல் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து இந்திய ஜனநாயகத்தை சிதைத்து வருகிறார்கள் என்பதே உண்மை …
  // கொலைகாரனுக்கு “டோஸ்ட்” கொடுக்கும் உள்துறை அமைச்சர் (புகைப்படம்) !
  Posted on ஜூன் 18, 2010 by vimarisanam – kavirimainthan // என்று முன்பு ஒரு இடுக்கை போட்டிருந்திர்கள் — இதைவிட ஒரு ” பாசப்பிணைப்பை ” வேறு யாராலும் காட்ட முடியாது அல்லவா … ? விருந்தோம்பல் என்பது இது தானோ … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   நீங்கள் “கொக்கி” போட்டு வெளியே இழுக்கும் ஒவ்வொரு இடுகையையும்
   பாரத்தால், பழைய இடுகைகள் பலவற்றை இப்போது மீண்டும்
   மறுபதிவு செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதே…..!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. gopalasamy சொல்கிறார்:

  please do it. I could not remember that .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.